-எஸ்.குருமூர்த்தி
பிரபல பத்திரிகையாளர் திரு. எஸ். குருமூர்த்தி ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதிய கட்டுரையின் இறுதிப் பகுதி இது…

இந்தத் தேர்தலில் நான்கு முக்கிய விஷயங்கள் நம் முன்பு உள்ளன.
ஒன்று, நிலையான ஆட்சி; அதாவது கடந்த பத்தாண்டுகளைப் போலவே அடுத்த ஐந்தாண்டுகளும் நிலையான ஆட்சி.
இரண்டு, தேச வளர்ச்சியும் தேச பாதுகாப்பையும் உறுதி செய்யும் தலைவர். அதாவது, பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் தலைவரல்ல; மாறாக, மோடியைப் போல கடந்த பத்து ஆண்டுகளாக, வளர்ச்சியும் தேச பாதுகாப்பையும் உறுதி செய்த தலைவர்.
மூன்று, உலகிற்கு வழிகாட்டக் கூடிய இந்தியத் தலைவர். அதாவது, மோடியைப் போல தேசநலனைப் பாதுகாப்பதுடன் உலகத்திற்கே வழிகாட்டக்கூடிய இந்தியத் தலைவர். மோடிக்கு மாற்றாக இருப்பது இண்டி கூட்டணி. அது கூட்டணிக் கட்சிக்குள்ளேயே சண்டையிட்டு அழியக் கூடியது. இண்டி கூட்டணி நிலையான ஆட்சியைத் தரும் என்று அரசியல் விவரம் தெரிந்த எவராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. மோடிக்கு மாற்று இல்லை; அவரைவிடச் சிறந்தவர்கள் எவரும் இல்லை.
இறுதியாக, மக்கள் முன்புள்ள விஷயம், மோடியின் பத்தாண்டு கால ஆட்சி மீண்டும் வேண்டுமா, அல்லது 1989-98 வரையிலான பத்தாண்டு கால, நிலையற்ற, குழப்பமான ஆட்சி வேண்டுமா என்பது. பத்தாண்டுகளுக்கு முன்- மோடி வருவதற்கு முன்- நிலையான ஆட்சி, உறுதியான தலைமை என்பதை நாடே மறந்து போயிருந்தது. அவரது இரண்டு ஆட்சிக் காலங்களில் நிலையான அரசும் உறுதியான தலைமையும் நாட்டிற்கு எந்த விதத்தில் நல்லது, உலகத்திற்கு நன்மையானது என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.
மோடி 1.0
முதல்முறை மோடி பிரதமரானதும் அவருக்கு முன் பத்தாண்டு கால காங்கிரஸின் கேடுகெட்ட ஆட்சியினால் விழுந்து போயிருந்த பொருளாதாரத்துக்கு புத்துயிர் ஊட்டினார். அதற்காக அவர் எடுத்த ஒவ்வொரு முடிவும் மிகவும் வலி மிகுந்தது.
அவர் முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட, மிகப் பெரும் ஊழலுக்குக் காரணமான, 2ஜி உரிம ஏலத்தை ரத்து செய்தார். அந்த உரிமங்களை மீண்டும் ஏலமிட்டு அதன்மூலம் பெரும் வருமானத்தை அரசுக்குச் சேர்த்தார். சலுகை சார் முதலாளித்துவத்தை (Chrony Capitalism) வேருடன் அழிக்க துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதனால் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்றார்.
வங்கிகளின் வாராக் கடன் என்ற பெரும் பிரச்னையைத் தீர்க்க முடிவெடுத்தார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வேண்டியவர்களுக்கு வழங்கப்பட்ட முறையற்ற கடன்களினால் வாராக்கடன் பிரச்னை விஸ்வரூப வடிவெடுத்தது என்பதை ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் ஒப்புக் கொண்டுள்ளார். வாராக்கடன் பிரச்னையினால் யாருக்குமே கடன் வழங்க முடியாமல் வங்கிகள் இருந்தன. அதனால் எல்லா வர்த்தகமும் பாதிக்கப்பட்டிருந்தது.
மோடி வங்கிகளுக்கு முதலீட்டை அளித்தார். அதனால் திவாலாகும் நிலையில் இருந்த வங்கித் தொழில் மீண்டும் உயிர் பெற்றது. அவை மீண்டும் கடன் கொடுக்கும் தொழிலில் ஈடுபடும் வரை காத்திராமல் அரசே உத்தரவாதம் கொடுக்கும் ‘முத்ரா’ கடன் திட்டத்தின் மூலம் 130 மில்லியன் (13 கோடி) சிறு, குறு வியாபாரிகளுக்கு கடன் வழங்க ஏற்பாடு செய்தார். அது சுயதொழில் செய்வோரைக் காப்பாற்றியதுடன், அந்தத் துறைக்கே மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. தனது முதல் ஆட்சிக் காலத்தின்போது, முந்தைய ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆழமான பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்த்தார்.
பயங்கரவாதத்தை மோடி எதிர்கொண்ட விதம், இதுவரை இந்தியா அறியாதது. இந்தியாவைப் போலல்லாமல் நாங்கள் அணு ஆயுதம் வைத்திருப்பது பயன்படுத்தத் தான் என்று அறிவித்துள்ள பாகிஸ்தானின் எல்லைக்குள்ளேயே சென்று துல்லியத் தாக்குதலை நடத்தினார். பாகிஸ்தான் அதிர்ச்சியில் உறைந்து போனது. எல்லை தாண்டிச் சென்று பயங்கரவாதத்தை ஒடுக்கும் இந்தியாவின் செயலை உலகம் ஏற்றுக் கொண்டது.
எல்லையில் சீனாவின் அத்துமீறல்களுக்கு பதில் தராமல் அமைதியாக இருந்துவந்த இந்தியாவின் தோல்வி மனநிலையை மாற்றி, சீன எல்லைக்குள் புகுந்து, டோக்லாமில், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் படைத்தளத்தை அழிக்க இந்திய ராணுவத்திற்கு மோடி உத்தரவிட்டார். இந்தச் செயலால் சீனா திகைத்து நின்றது; மேற்கத்திய நாடுகள் பாராட்டின. அதேவேளையில், உள்நாட்டில் இருந்த இடதுசாரி நக்சல் பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார்.
மோடியின் சாணக்கியத்தனம் வேறு ஒருவகையிலும் வெளிப்பட்டது. மென்மையான பிரிவினைவாதியான மெஹ்பூபா முப்தியுடன் பாஜக அரசியல் கூட்டணி வைத்தபோது பலரும் அதிர்ச்சி அடைந்தனர். மெஹ்பூபாவின் பதவியாசையைப் பயன்படுத்திக்கொண்டு மோடி அதுவரை ஜம்மு-காஷ்மீர் மாநில நிர்வாகத்தில் நுழையவே முடியாமல் இருந்த மத்திய அரசை நுழைத்து விட்டார்.
பின்னர் அந்த மாநில அரசைக் கலைத்துவிட்டு மத்திய அரசின் ஆளுகைக்குக் கீழ் அம்மாநிலத்தைக் கொண்டு வந்தார். அதன் விளைவாக, அவர் இரண்டாவது முறை பிரதமரான போது அந்த மாநிலத்துக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது.
மோடி பாஜகவின் அரசியல் அடையாளத்தை மாற்றி அதை மாபெரும் தேசிய சக்தியாக்கினார். விளைவாக, பல்லாண்டு காலமாக ஊடுருவலாலும் பிரிவினைவாதத்தாலும் பாதிக்கப்பட்டிருந்த வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜக வளர்ச்சி அடைந்தது. பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வந்த வடகிழக்குப் பகுதி மக்களின் பிரச்னையை தனது வளர்ச்சித் திட்டங்கள் மூலமாகத் தீர்க்க முனைந்தார்.
தனது அமைச்சரவை சகாக்களை அம்மாநிலங்களுக்கு அடிக்கடி செல்லவும், அங்கு தங்கி இருக்கவும் செய்தார். அதன்படி வடகிழக்கு மாநிலங்களுக்கு ஏறத்தாழ எல்லா அமைச்சர்களும் போனார்கள்; சுமார் 250க்கு மேற்பட்ட பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவரும் பலமுறை அங்கு சென்றதுடன் அந்தப் பகுதிகளில் கற்பனைக்கு எட்டாத அளவில் வளர்ச்சியை ஏற்படுத்தினார். இதன் விளைவாக வடகிழக்கு மாநிலங்கள் மைய பாரதத்துடன் நன்கு இணைந்தன. பாஜகவும் அங்கு முக்கியமான அரசியல் சக்தியாக வடிவெடுத்தது.
மோடி 2.0
மோடி இரண்டாம் முறை பிரதமரான போது அது முதல் முறையை விடவும் சவாலாக இருந்தது. கரோனா தீநுண்மீ உலகைத் தாக்கியது. அது இந்தியாவை வெகுவாக பாதித்தது. கடந்த காலங்களில் மேற்கத்திய நாடுகள் தடுப்பூசி தயாரிக்கும் வரை இந்தியா காத்திருக்கும். அவர்கள் ஏற்றுமதி செய்ய முடிவெடுத்ததும் இந்தியா அதை இறக்குமதி செய்யும்; அதுவரை இந்தியர்கள் துன்பப்படுவார்கள்.
இந்தியா தடுப்பூசியைத் தயாரிக்கும் என்று மோடி அறிவித்த போது உலகம் அவரை எள்ளி நகையாடியது. உள்நாட்டிலும் எதிர்ப்பாளர்கள் கேலி செய்தனர். ஆனாலும், மோடி தடுப்பூசியை இறக்குமதி செய்ய மறுத்துவிட்டார். உள்ளூர் தடுப்பூசி தயாராகும் வரையில் காத்திருக்க முடிவெடுத்தார். அதுபோலவே, இந்தியா ஒன்றல்ல, இரண்டு தடுப்பூசிகளைத் தயாரித்தது.
நம் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதி இருக்கும் அமெரிக்காவை விடவும் சிறப்பாக, நாட்டிலுள்ள 110 கோடி மக்களுக்கும் இரண்டு முறை தடுப்பூசியைப் போட்டார். அந்த நோயால் அமெரிக்காவில் இறந்தவர்கள் 12.2 மில்லியன் (12.02 கோடி) மக்கள். இந்தியாவிலோ, மிகக் குறைவாக, 5.3 லட்சம் பேர்கள் மட்டுமே பலியாகினர். அமெரிக்காவின் நோய்த் தொற்று மற்றும் இறப்பு விகிதத்துடன் ஒப்பிட்டால், இந்தியாவில் 4.5 கோடி பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும்; 45 லட்சம் பேர்கள் இறந்திருக்கக் கூடும்.ஆனால் இறந்தது 5.3 லட்சம் பேர்.
அது மட்டுமல்ல, இந்தியா மிகக் குறைந்த விலையில் இந்தத் தடுப்பூசியை பல நாடுகளுக்கு வழங்கியது. இந்தச் செயல் உலகின் பாராட்டைப் பெற்றது. பொருளாதாரத்தில் முன்னணி நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் தீநுண்மி தாக்கத்தில் இருந்து இன்னமும் மீண்டுவர முடியாமல் திணறும்போது இந்தியா அந்த பாதிப்பிலிருந்து மீண்டு விட்டது மட்டுமின்றி, வேகமாக வளரும் பொருளாதாரமாகவும் பிரகாசித்து வருகிறது. உலக விவகாரங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை ஏற்படுத்தும் நிலைக்கு இந்தியா வந்துள்ள நிலையில் அதன் தேசநலன்களைப் பாதுகாக்கும் திறனும் வளர்ந்துள்ளது.
ரஷ்ய – உக்ரைன் போர் வெடித்த போது மோடி துணிச்சலாக நடுநிலை என்ற- உண்மையில் அது ரஷ்ய ஆதரவு- நிலைப்பாட்டை மேற்கொண்டார். ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்வது என மோடி எடுத்த ராஜதந்திரம் மிக்க துணிச்சலான முடிவினால், அமெரிக்கா ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியாமல் போனது. அப்போது இந்தியாவின் மீது அமெரிக்கா அதிருப்தி அடைந்தது.
மோடி தனது செல்வாக்கினாலும், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள இஸ்லாமிய நாடுகளி தலைவர்களுடன் தனக்கிருந்த நெருக்கமான நட்புறவினாலும், அமெரிக்காவின் கோபத்தை, அதிருப்தியை வெகுவாகத் தணித்து விட்டார்.
மோடி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணையை வாங்காமல் இருந்திருந்தால், உலகில் எண்ணெய் விலை விண்ணைத் தொட்டிருக்கும்; ஏற்கனவே தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ள உலகப் பொருளாதாரம் எழ முடியாதபடி மேலும் வீழ்ச்சி அடைந்திருக்கும்.
உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டினால் ஆதிக்க சக்திகளை ஓரம் கட்டிவிட்டு நடுத்தர சக்தி கொண்ட நாடுகள் எழுச்சி பெற்றன. உக்ரைன் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, மோடி ஜி20 நாடுகளின் தலைமையை ஏற்றார். அந்த அமைப்பின் செயல்பாடுகள் அதுவரை ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடந்து வந்ததை மாற்றி, மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளாக 250 கூட்டங்களை இந்தியாவெங்கும் நடத்தினார். இது ஜி20இன் தோற்றத்தையே மாற்றி அமைத்தது. அடுத்து தலைமை ஏற்ற பிரேசில் நாட்டை, இந்தியா போலச் செயல்பட முடியுமா என்று, வியக்க வைத்துள்ளது.
உலக அளவில் சாதித்தை விட மிக அதிகம், அவர் நம் நாட்டில் செய்தது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370ஐ ரத்து செய்தார். அந்தப் பிரிவின் விளைவாகத்தான் பாகிஸ்தான் காஷ்மீரில் உரிமை கோரியது. அந்த 370வது பிரிவினால்தான் காஷ்மீர் விவகாரம் சர்வதேசப் பிரச்னை ஆனது. ஒரே ஒரு தோட்டா கூட சுடப்படாமல் நாடாளுமன்றத்தின் பேனா முனையினால் குத்தி, காஷ்மீர் விவகாரத்திலிருந்து பாகிஸ்தானை தூக்கி மோடி வெளியே போட்டார்.
காஷ்மீரை அமைதிப் பூங்காவாக்கினார்; வளர்ச்சியை ற்படுத்தினார். கடந்த ஆண்டு மட்டுமே 3.5 கோடி சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்துள்ளனர். இது எப்போதும் இல்லாத உச்சமாகும். இந்திய விவகாரங்களில் பாகிஸ்தானை வெறும் அடிக்குறிப்பாக மோடி ஆக்கிவிட்டார்.
மிக தைரியமாக குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்தார். அதன்மூலமாக இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த, சமண மதத்தைச் சார்ந்தவர்கள், பார்சிகளுக்கு இந்தியக் குடியுரிமையைப் பெறுவது சுலபமானது. காந்தி, நேரு, படேல் ஆகியோர் கொடுத்த வாக்குறுதி இது. மார்க்சிஸ்ட்களும் மன்மோகன் சிங்கும் நிறைவேற்ற நினைத்தாலும் முடியாமல் போனதை மோடி நிறைவேற்றினார்.
பல நூற்றாண்டுகளாக தீர்க்கப்படாமல், ஹிந்து- முஸ்லிம் உறவில் பெரும் பிளவை ஏற்படுத்திய, ராமஜன்மபூமி பிரச்னையை மோடி ஜனநாயக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தீர்த்து வரலாற்றுப் பிரச்னையைச் சரி செய்தார். உச்ச நீதிமன்றத்தின் ஒருமித்த ஆணையைக் கொண்டு, ராமர் கோயிலைக் கட்டினார். கோயிலை எதிர்த்த முஸ்லிம்கள்கூட அதை வரவேற்றனர்.
வேற்றுமைகளைக் கொண்ட இந்தியாவில் தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளமாக ஸ்ரீ ராமபிரானின் மூர்த்தியை மோடி நிறுவினர். இதன்மூலம் ஔவுரங்கசீப் காலத்திலிருந்து தொடர்ந்து வந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார். 72 ஆண்டு காலமாக இந்திய அரசியல் சாசனம் நடைமுறைப்படுத்தச் சொல்லுகிற விஷயம் இது. உச்ச நீதிமன்றம் பல முறை நடைமுறைப்படுத்த அறிவுறுத்திய பின்னரும் எந்த அரசாங்கமும் தொட தைரியமற்றுக் கிடந்த விஷயமிது. இப்படி அவரது சாதனைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
2047க்கான தொலைநோக்கு
2047இல் வளர்ச்சியடைந்த பாரதம் (விக்ஷித் பாரதம்) என்ற தொலைநோக்குத் திட்டத்தை உலகத்தின் முன்பும், நாட்டு மக்கள் முன்பும் வைத்த ஒரே தலைவர் நரேந்திர மோடிதான். அது அவரது வெற்று ஆசையை வெளிப்படுத்தும் திட்டமல்ல. அதற்கு அடித்தளமாக, உறுதியான தரவுகளும் தர்க்கங்களும், கூரிய திட்டமிடலும் உள்ளன.
2027க்குள் இந்தியப் பொருளாதாரம் ஜெர்மனி மற்றும் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் மூன்றாவது வலுவான பொருளாதாரமாக உருவாகும். இந்தியாவைத் தவிர்த்துவிட்டு சீனாவுடன் கூட்டுச் சேர்ந்த மேற்கத்திய நாடுகள் தங்கள் சீனப் பிணைப்பை இப்பொழுது வேகமாக முறித்துக்கொண்டு வருகின்றன.
சீனாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்களை அமெரிக்கா நிறுத்திக் கொள்வதாக சட்டம் இயற்றியுள்ளது. இதுவரை சீனாவுடன் (சீனா பிளஸ்) என்ற அதன் வெளியுறவுக் கொள்கை சீனாவைத் தவிர்த்து (சீனா மைனஸ்) என்பதாக மாறி உள்ளது. இதனால் உலக அரங்கில் இதுவரை சீனா இருந்த இடத்தை இந்தியா நிரப்பும் வாய்ப்பு வந்துள்ளது.
எல்லோரும் எதிர்பார்ப்பதைப் போல போரில் உக்ரைன் வென்றால், அமெரிக்க- மேற்கத்திய நாடுகளை ஒரு கையாலும், அவர்களுக்கு எதிரான ரஷ்யாவை மறு கையாலும் அரவணைத்துச் செல்லும் ஜனநாயக நாடாக இந்தியா விளங்கும். 1950, 60களில் உலகைப் பிளவுபடுத்தி இருந்த பனிப்போர் காலகட்டம் மீண்டும் வராமல் தவிர்த்து, உலகைக் காக்க இந்தியாவால் மட்டுமே முடியும்.
இதுதான் மோடி மக்களுக்குக் கொடுப்பது. இண்டி கூட்டணி எதைக் கொடுக்கும்?
மீண்டும் 1989 – 98ஆ?
இண்டி கூட்டணியின் ஒரே குறிக்கோள் மோடியைத் தோற்கடிப்பது. அவரை எதிரியாக்கி ராகுல் காந்தி தொடங்கிய ‘பாரத் ஜோடோ’ யாத்திரையும், கடந் மே மாதம் பாஜகவுக்கு கர்நாடகாவில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததால் ஏற்பட்ட ஆரவாரக் கூச்சலும் கடந்த டிசம்பரில் வடமாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்வியினால் பிசுபிசுத்துப் போயுள்ளன.
இண்டி கூட்டணியை ஆரம்பித்த நிதீஷ்குமார் பின்னர் வெறுப்புற்று எதிரணியில் இருந்த மோடியுடன் சேர்ந்து விட்டார். காங்கிரசை மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற்றி விட்டார் மம்தா பானர்ஜி. கம்யூனிஸ்டுகள் கேரளா உட்பட பல இடங்களிலும் (தமிழகம் தவிர்த்து!) காங்கிரசை எதிர்க்கிறார்கள். தெலுங்கானாவில் கம்யூனிஸ்டுகளைப் பந்தாடுகிறது காங்கிரஸ். இந்நிலையில் 2004 -14 வரை இருந்த நிலையை இண்டி கூட்டணி மீண்டும் ஏற்படுத்தாது என்பதையும், 1989 – 98 நிலை மீண்டும் வராது என்பதையும் அனைவரும் அறிவார்கள்.
மக்கள் முன்பு வாய்ப்புகள் தெளிவாக உள்ளன. இந்தியாவை மூன்றாவது வலிமையான பொருளாதார சக்தியாக மாற்றுவதாகவும், 2047க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கிக் காட்டுவதாகவும் கூறும் மோடியை மீண்டும் தேர்ந்தெடுப்பதா, அல்லது மக்கள் மறந்துவிட்ட, பத்தாண்டுகளில் அரை டஜன் பிரதமர்களையும் நான்கு பொதுத் தேர்தல்களையும் திணித்த இண்டி கூட்டணியைத் தேர்ந்தெடுப்பதா?
நன்றி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 14-4-2024 ஆங்கில மூலம்: The coice- the repeat of 2014-24 or throwback to- 1989-98? தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
$$$