-பத்மன்
மகாகவி பாரதி குறித்த தரிசனமாக கவிதை, சிறுகதை, கட்டுரை ஆகிய மூன்று வடிவங்களில் எழுத்தாளர் திரு. பத்மன் எழுதியவை இங்கே பதிவாகின்றன. இவை விஜயபாரதம் பிரசுரத்தின் 2024 ஆண்டுவிழா மலரில் இடம் பெற்றுள்ளன...

1. பாரதி என் தெய்வம்
(கவிதை)
தேடித் தமிழ்தினம் வளர்த்து – பலர்
போற்றக் கவிதைகள் யாத்து – தேகம்
வாடினும் தேசத்துக் குழைத்து – பிறர்
வாழப் பலசெயல்கள் புரிந்து – யாவரும்
கூடி விடுதலை எய்திட – எய்தபின்
வாழும் முறைகளும் மொழிந்து – பல
வேடிக்கை மனிதரை மாற்றிட – புவியில்
தோன்றிய பாரதி தெய்வம் தானே?
$$$
2. மாகாளி கண்ணுற்றாள்
(சிறுகதை)
செல்லத்துக்குத் தன் கணவன் சுப்பையா ஓர் அசாதாரண மனுஷன் என்பது தெரியும். கல்யாணத்தின்போதே யாராவது, நாலுபேர் முன்னிலையில் பெஞ்சாதியின் கையைப் பிடித்து, கன்னத்தை இழுத்துக் கொஞ்சுவார்களா? இந்த மனுஷர் அதையும் செய்தார், அதற்கு மேலேயும் செய்தார். ‘கட்டியணைத்தொரு முத்தமே தந்தால் கைதொழுவேன் உனைநித்தமே’ என்று பாடியபடி இதழ்பதிக்கப் பாய்ந்து வந்த மனுஷன் அல்லவோ? இத்தனைக்கும் சுப்பையாவுக்கு அப்போது வயசு பதினாலுதான், செல்லத்துக்கு அதில் பாதி ஏழுதான். (கல்யாண வருஷம் 1897) ‘சுப்பையாவுக்கு ஆனாலும் காதல் மயக்கம் ஜாஸ்திதான்’ என்று அவனது சிநேகிதப் பிள்ளைகளும் வேறு பெரியவர்களும் கேலி பேசியதன் அர்த்தம்கூட அப்போது செல்லத்துக்குச் சரியாகப் புரியவில்லை.
ஆனால் சுப்பையாவின் இப்போதைய செய்கை, செல்லத்துக்குத் தூக்கிவாரிப் போட்டது. மற்ற மனுஷாளைப் போல் படுக்கும்போது மட்டும், பாயும் தலையணையும்போல் இருந்துவிட்டு மத்த நேரங்களில் வீட்டு வாசப்படி செருப்பைப்போல பாவிக்கும் மனுஷன் அல்ல சுப்பையா. செல்லத்தின் உடல் வெடவெடக்க, ‘பிரிய சகி’ என்றும் ‘ஆருயிர்த் தோழியே’ என்றும் ‘என் செல்லமே’ என்றும் ஏதேனும் காதல் மொழிகள் பேசிக்கொண்டு எப்போதும் சுற்றிவந்து இன்பத் தொல்லை கொடுக்கும் பேர்வழிதான். தங்கம் பிறந்த பிறகும் சுப்பையாவின் போக்கில் எவ்வித மாற்றமும் இல்லை.ஆனால்… ஆனால்…. சுப்பையாவின் இந்தச் செய்கையை செல்லம் துளிகூட நினைத்துப் பார்க்கவில்லை.
அப்படி என்ன செய்துவிட்டான் சுப்பையா? செல்லத்தால் சொல்ல முடியாது. அவளுக்கு நடுக்கம் இன்னமும் தீரவில்லை. தனது காதல் கண்ணம்மாவான செல்லத்தை அடித்துவிட்டானா சுப்பையா? சீ… சீ… அவன் மனசில் அப்படி ஓர் எண்ணத்தின் துளிகூட அரும்புமா?அப்படியானால், என்னதான் செய்து விட்டான்? தடாலடியாக செல்லத்தின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து விட்டான்.
கல்கத்தா காங்கிரஸ் கூட்டத்துக்குச் சென்று விட்டுத் திரும்பி வந்தவன், வீட்டுக்குள் நுழையும்போதே “என் சக்தியே, என் பிராணனே எங்கிருக்கிறாய்?” என்று அதிர முழங்கியபடி ஓட்டமும் நடையுமாய் வந்தவன், சமையல்கட்டுக்குள் இருந்த செல்லத்தைப் பார்த்ததும் வாரியணைத்து ஓர் தட்டாமலை சுற்றி கீழே இறக்கிவிட்டதும், அப்படியே கால்களில் விழுந்து நமஸ்கரித்தான்.
ஒருவழியாய் சுதாரித்துக்கொண்ட செல்லத்தின் வாயில் இருந்து கேள்வி பிறந்தது: “கல்கத்தாவில் புதிய லாகிரிப் பழக்கம் ஏதாவது பிடித்துக் கொண்டதா?, இல்லை மோகினிப் பேய் ஏதேனும் புகுந்து கொண்டதா?” இடி முழங்கியதுபோல் சிரித்துவிட்டுச் சொன்னான் சுப்பையா: “ஹாஹா ஹாஹா! என் சொன்னமே! என்னைப் பீடித்திருப்பது மயக்கம் தரும் லாஹிரி அல்ல, மயக்கத்தை அறுத்த மாமருந்து. எனக்குள் புகுந்து கொண்டிருப்பது மோகினிப் பேய் அல்ல, ஜகன்மோகினியாகிய பாரதத் தாய்”.
செல்லத்துக்குக் குழப்பம் அதிகரித்தது.முகக்குறியால் அவள் அகக்குறிப்பை அறிந்துகொண்ட சுப்பையா, “எனது கல்கத்தா விஜயத்தை உனக்குத் திருஷ்டாந்தமாகச் சொல்கிறேன். அப்போது உனக்குப் புரியும்” என்றான்.
திலகரின் கோஷ்டியைச் சேர்ந்த சுப்பையாவுக்கும் அவனது சிநேகிதர்களுக்கும் கல்கத்தா காங்கிரஸ் மாநாடு புதிய அனுபவத்தைத் தந்தது. இதற்கு முன்பு நடந்த 21 கூட்டங்களைப் போல பிரிட்டிஷ் கவர்ன்மென்டுக்கு விண்ணப்பங்களையும் கோரிக்கைகைளையும் அனுப்புகின்ற கூட்டமாக அது அமையவில்லை. நெஞ்சிலே சுதந்திரக் கனல் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த 24 வயது இளைஞன் சுப்பையா முதன்முறையாகப் பங்கேற்ற காங்கிரஸ் மாநாடு என்பதாலோ என்னவோ, அவனது மனவிசாரத்துக்குத் தகுந்தபடியே மாநாட்டின் முகவிலாசமும் மாறியிருந்தது.
பவானிபூர், ரஸ்லா ரோட்டுக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த பிரும்மாண்டமான பந்தலில் நடைபெற்ற அந்த காங்கிரஸ் மாநாடு, உண்மையிலேயே பிரும்மாண்டமாகத்தான் இருந்தது. இதுவரை இல்லாத அளவில் பல்வேறு மாகாணங்களில் இருந்து ஏறத்தாழ 2,500 பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். அதுமட்டுமா, மூன்று நாள் நடந்த கூட்டத்தை ஐயாயிரத்துக்கும் அதிகமான முக்கிய ஜனங்கள் பார்வையிட்டிருந்தனர். கர்ஸான் பிரபுவின் வங்காளப் பிரிவினையால் பொதுஜனங்களிடையே எழுந்திருந்த ஆவேசம், காங்கிரஸ் கூட்டத்திலும் பிரதிபலித்தது.
வழக்கமாக பிரிட்டீஷ் அரசாங்கத்துக்கு அடக்கி வாசிக்கும் காங்கிரஸ் காரியதரிசியும் மிதவாதியுமான ராஸவிகாரி கோஷுக்கே அந்த மாநாட்டில் ரோஷம் பிறந்துவிட்டது. தனது வந்தனையுரையில் பிரிட்டீஷ் அரசை ஒரு வழியாக தைரியம் பெற்று ஒரு பிடி பிடித்துவிட்டார். தாயிடம் அன்பு பாராட்டும் மனிதன் தந்தையின் மீதும் அன்பாகத்தானே இருப்பான், அதுபோல தாய்நாட்டின் மீது பாசமாக இருப்பவன் அரசாங்கத்தின் மீதும் பாசமாகவே இருப்பான் என்று வழக்கம்போல் தனது உரையை மிதமாகத் தொடங்கினாலும் போகப் போக உச்சம் பெற்று வீரியமாக முடித்தார் கோஷ்.
“குடிமக்களைத் தன்னைப்போல் எண்ணி நடத்தும் அரசன் மீது மக்களுக்கு ராஜபக்தி இருக்கும். அவ்வாறின்றி சர்வ ஜனங்களும் அரசனுடைய சௌக்கியம் ஒன்றிற்காகவே பிறந்து வாழ்கின்றதாய் எண்ணி அரசாள்பவன், ஜனங்களிடமிருந்து ராஜபக்தியின் வாசனையைக் கூட எதிர்பார்க்க முடியாது. இப்போது வங்காள பொது ஜனங்களின் மனது கலங்கி நிற்கிறது. இக்கலக்கத்தை அரசாட்சியார் தக்க விதமாய் சாந்தப்படுத்தினாலன்றி அது அடங்காது” என்று கோஷ் முழங்கியதை, “சபாஷ்” என்று ரசித்தான் சுப்பையா. இருப்பினும் “ஏன் அடங்க வேண்டும், பொங்கி எழுவோம் என்று சூளுரைக்க வேண்டியதுதானே?” என்று காட்டமாகக் கூறினான்.
சுப்பையாவின் ஆவேசத்துக்கு, காங்கிரஸ் அக்கிராஸனர் தாதாபாய் நௌரோஜியின் தலைமையுரை நல்ல தீனி போட்டது.“தம் தேசத்தைத் தாமே அரசு செய்தாலன்றி எந்தத் தேசத்தாருக்கும் சுகம் கிடையாது. ஆகையால் இந்தியாவை இந்தியரே ஆள வேண்டும். இந்தியாவின் குறைபாடுகளும் அவற்றை நிவர்த்திக்க வேண்டிய வழிகளும் இந்தியர்களுக்குத்தான் தெரியுமேயன்றி வேறோருவருக்குத் தெரியாது. பிரிட்டீஷாருக்கு சுயாட்சி கொடுத்திருப்பது போலவே இந்தியர்களுக்கும் சுயாட்சி கொடுப்பது அவர்களது கடமை. நாகரிகம் பெற்ற மனிதர்கள் தன்னைப்போல் பிறரையும் மதித்து நடக்க வேண்டும், ஆனால் பிரிட்டீஷ் கவர்மென்டார் தனக்கொரு பேச்சும் பிறர்க்கொரு பேச்சும் பேசுவது அநீதியல்லவா?” என்ற தனது வழக்கத்துக்கு மாறான கடுந்தொனி உரையில் ஸ்வராஜ்யத்தைத் தூக்கிப் பிடித்தார் நௌரோஜி.
பலே பலே என்று பாராட்டு மழை பொழிந்த சுப்பையா, “அடடா! நமது திலக முனியின் பூரண ஸ்வராஜ்யம்தான் நமக்கு கதிமோட்சம் என்பதை பழுத்த பழமாகிய தாதாபாயும் இப்போது உணர்ந்து அதனை ஓரளவு நெருங்கி வந்துவிட்டார். ஆனாலும் ‘மயிலே மயிலே இறகு போடு’ என்பதைப் போல பிரிட்டீஷ் அரசாங்கத்திடம் அல்லவோ சுயாட்சியை அவர் தானம் கேட்கிறார். ஆட்சி நமதென்றால் அதற்கான முயற்சியும் நமதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் இப்போது பிரிட்டனில் ஆட்சிக்கு வந்திருக்கும் லிபரல் கட்சியார் நமது கோரிக்கையை ஏற்பார்கள் என்று கருதி அவர்களிடம் ஸ்வராஜ்யக் கோரிக்கையை எழுப்புவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதுபோல் ஆகிவிடுமே! நாமிருக்கும் நாடு நமது, அது நமக்கே உரியதாக இருக்க வேண்டுமெனில், திலகர் வழிகாட்டியுள்ள ‘நமக்கு நாமே துணை’ என்ற கொள்கைப்படி நமது ஸ்வதந்திரத்தை நமது முயற்சிகளால் நாமே சம்பாதிக்க வேண்டும்” என்று தனது கருத்தை அருகில் இருந்த அரவிந்த கோஷிடம் பகிர்ந்து கொண்டான் சுப்பையா.
மூன்று நாள் மாநாட்டின் முடிவில், சுப்பையா மற்றும் அவரது சிநேகிதர்களிடையே காங்கிரஸின் போக்கிலும் நாட்டின் விடுதலைக்கான வழிமுறையிலும் புதிய மாற்றம் ஏற்பட்டிருப்பதற்கான நம்பிக்கை பிறந்தது. நாட்டு நடப்புகளையும் கலை, இலக்கிய விவகாரங்களையும் அளவளாவிய அவர்களது பேச்சில், கல்கத்தா நகரைச் சுற்றிப் பார்த்து வரலாமே என்ற கருத்தும் இடம்பெற்றது. அப்போது ஒருவர், சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையும் பாரத விடுதலையில் பிரியமுள்ளவருமான சகோதரி நிவேதிதையைச் சந்தித்து வரலாமே என்று கூறினார்.
“பிரபுத்த பாரத ஆங்கிலப் பத்திரிகையில் சுவாமி விவேகானந்தரைப் பற்றி ‘நான் கண்ட குருநாதர்’ என்ற தலைப்பில் அவர் எழுதிவந்த கட்டுரைத் தொடரைப் படித்திருக்கிறேன். அவற்றில் அவரது ஆன்மிக அறிவு பளிச்சிடுகிறது. கல்கத்தாவுக்கு அந்த மாதரசி வந்த புதிதில் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட மக்களோடு தங்கியிருந்து அவர் ஆற்றிய தொண்டு, சமூக சேவையிலும் அவர் சுவாமிஜியின் சிறந்த சீடர் என்பதைப் பறைசாற்றுகிறது. இந்திய விடுதலையிலும் அவருக்கு நாட்டம் இருப்பதை நான் அறிவேன். இருந்தாலும், தேசத்தின் சுதந்திரத்தை நாம் பாடுபட்டுப் பெற வேண்டுமேயன்றி, நிவேதிதை போன்ற வெள்ளைக்காரப் பெண்களின் ஆதரவை நாடுவது உசிதமல்ல என்பதே என் கருத்து” என்று தனது தரப்பைக் கூறினான் சுப்பையா. ஆகையால், பாக்பஜார் பகுதியில் வசித்து வந்த சகோதரி நிவேதிதையைப் போய்ச் சந்திக்கலாமா என்ற அந்தச் சிறுவிவாதம் முடிவு ஏற்படாமலேயே முடிந்துபோனது.
காங்கிரஸ் மாநாடு சிறப்பாக முடிவடைந்து சுப்பையாவும் அவனது சகாக்களும் மதராஸ் திரும்புவதற்கு முதல் நாள், அவர்களுக்கு ஓர் இனிய அதிர்ச்சி காத்திருந்தது. டம்டம் பகுதியில் அவர்கள் தங்கியிருந்த இல்லத்தின் உரிமையாளரான காங்கிரஸ் பிரமுகர் ஆனந்தமோகன் போஸ், அங்கே ஒரு சிறப்புச் சந்திப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கூட்டத்தில் சகோதரி நிவேதிதையும் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
வெள்ளைக்காரப் பெண்மணியைப் போய்ச் சந்திப்பதா என்று முன்பு கருதிய சுப்பையா, அந்தக் கூட்டம் முடிவடையும் தறுவாயில், தானே சென்று நிவேதிதையிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். சுதேசமித்திரன் தமிழ்ப் பத்திரிகையில் உப ஆசிரியராகப் பணியாற்றி வந்த சுப்பையா, தமிழகத்தில் அப்போது பிரசித்தி பெற்றுவந்த கவிஞனும்கூட. உணர்ச்சி ததும்பும் பாடல்களை எழுதுவது மட்டுமல்ல, அதனை உணர்ச்சி பொங்கப் பாடுவதிலும் வல்லவன். சகோதரி நிவேதிதையிடம் தனது தமிழ்ப் பாடல்களில் சிலவற்றைப் பாடியதோடு அதன் அர்த்தத்தையும் மொழிபெயர்த்துக் கூறினான் சுப்பையா. அவனது பாடல்களைக் கேட்ட சகோதரி நிவேதிதை உணர்ச்சிப் பிரவாகமானார். உற்சாகம் பொங்கும் முகத்துடன் அவனது கரங்களைப் பற்றி, பரபரவென இழுத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே தோட்டத்தில் இருந்த ஆலமரத்தை நோக்கிச் சென்றார்.
தனது கற்பனைகள் விரிவதைப் போல் விழுதுகளை விரித்து நிற்கும் அந்த ஆலமரம், சுப்பையாவின் மனத்தைக் கவர்ந்த இயற்கை ரம்மியங்களில் ஒன்று.அந்த ஆலமரத்தடியில் இருவரும் வந்து நின்றதும், “அதோ பார் பாரத மாதா” என்று ஒரு திக்கைக் காட்டினார் நிவேதிதை. அந்தத் திக்கை சுப்பையா நோக்கியபோது இரு கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தன. பாரத அன்னையின் சொரூபம் ஆகாயத்தை அளாவி நிற்பதைக் கண்ட சுப்பையாவின் மெய் சிலிர்த்தது. நா தழுதழுத்தது. அந்தத் திவ்ய தோற்றத்திலேயே மெய் மறந்து நின்றான் சுப்பையா. சிலையாக நின்று கொண்டிருந்த அவனை நிவேதிதையின் அன்பும் பரிவும் கலந்த இனிய குரல் மீண்டும் சுயநினைவுக்குக் கொண்டு வந்தது.
“பார்த்தாயா! உன் கவித் திறமையை பாரத மாதா, சுதேசி சேவைக்கே உபயோகிக்க வேண்டும் என்கிறாள். அன்னையின் விருப்பமும் கட்டளையும் அதுதான். உடனே நீ உன்னை அர்ப்பணம் செய்து, கிடைப்பதற்கரிய மாதாவின் வரப்பிரசாதத்தைப் பெற்றுக்கொள்” என்று உத்தரவிட்டார். சுப்பையா மீண்டும் மீண்டும் பலமுறை பாரதமாதாவின் தோற்றம் இருந்த திசையை நோக்கி வணங்கி நிமிர்ந்தான். அந்தத் தோற்றம் மறைந்தது. குருமணி தேவியாம் நிவேதிதை அதே அன்பும் அருளும் கலந்த பார்வையோடு சுப்பையாவைப் பார்த்து நின்றார். ஐந்து வயதிலேயே தான் இழந்துபோன அன்னை லக்ஷ்மியின் அன்பு முகம் சுப்பையாவுக்கு ஒரு நொடியில் தோன்றி மறைந்தது. ஆலமரத்தில் இருந்து ஓர் இலையைப் பறித்து சுப்பையாவுக்கு ஆசி கூறி, அதனை அருட்பிரசாதமாக வழங்கினார் நிவேதிதை.
சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பிய சுப்பையாவிடம், “உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?” என்று கேட்டார் நிவேதிதை. “ஆகிவிட்டது. செல்லமான என் மனைவியோடு தங்கமான என் மகளும் இருக்கிறாள்” என்று சிரித்தபடியே கூறினான் சுப்பையா. “அப்படியானால், மாநாட்டுக்கு ஏன் உன் மனைவியை அழைத்து வரவில்லை?” எதிர்பாராத இந்தக் கேள்வியால் சற்று திகைத்துப்போன சுப்பையா, உடனே சுதாரித்துக்கொண்டு, “பொது இடங்களுக்கு மனைவியை அழைத்துச் செல்லும் வழக்கம் எங்கள் சமூகத்தில் இல்லை” என்று பதிலளித்தான்.
நிவேதிதையின் அன்பு முகத்தில் சட்டென ஒரு ரௌத்திரம் பளிச்சிட்டு நிதானமடைந்தது. “உனக்கு மிகவும் பிடித்த கடவுள் வடிவம் எது?” என்ற கேள்விக்கு, கிருஷ்ணனைச் சொல்லலாமா என்று ஒரு கணம் கருதிய சுப்பையா, ‘சிவசக்தி’ என்று பதிலளித்தான். “பார்த்தாயா? சிவசக்தியை நீ வணங்குவாய், ஆனால் அந்த தெய்வ வடிவம் உணர்த்தும் கோட்பாட்டை நீ பின்பற்ற மாட்டாயா? ஆணுக்குப் பெண் சமமல்லவா? சமுதாயம் ஒரு பறவை என்றால் அது பறப்பதற்கு இரு இறக்கைகளும் தேவையன்றோ? இதுதான் நீ விரும்பும் விடுதலையின் லட்சணமா? சமூகத்தில் ஒரு பாதி அடிமைப்பட்டுக் கிடக்கும்போது, மறுபாதி மட்டும் எப்படி விடுதலை பெற முடியும்? மனைவிக்கே உங்களால் சுதந்திரம் பெற்றுத் தர முடியவில்லை. நாட்டுக்கு நீங்கள் எப்படி சுதந்திரம் பெற்றுத் தர முடியும்? இனிமேலாவது பெண்குலத்தை தனி எனக் கருதாது, உங்களிடமிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியாக, தேவியாகப் போற்றுங்கள். அப்போதுதான் நீங்கள் விரும்பும் மேலான நிலைமை உங்களுக்குக் கைகூடும்” என்று மொழிந்த நிவேதிதையின் வார்த்தைகளில் பரிகாசம், பரிவு, கண்டிப்பு, கருணை ஆகிய பாவனைகள் கலந்து வெளிப்பட்டன.
சுப்பையாவின் அகக்கண் விழித்துக் கொண்டது, இயல்பான ஞானம் மெருகேறியது. உடனே ஆசுகவியாகப் பொழிந்தான்:
“பெண்ணுக்கு விடுதலை என்றிங்கோர் நீதி பிறப்பித்தேன், அதற்குரிய பெற்றி கேளீர்! மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வம் என்றால் மனையாளும் தெய்வமன் றோ!மதி கெட்டீரே! விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர் விடுதலை யென்பீர், கருணைவெள் ளமென்பீர், பெண்ணுக்கு விடுதலை நீரில்லை யென்றால் பின்னிந்த உலகிலே வாழ்க்கை யில்லை”.
கல்கத்தாவில் நடந்த விஷயங்களை மூச்சுவிடாமல் சொல்லி முடித்தான் சுப்பையா. “கரிய நிற காளி வசிக்கும் கல்கத்தாவில் நான் ஒரு வெள்ளை நிற கௌரியைக் கண்டேன். எனது நெஞ்சில் இருளுக்கு ஞாயிறாய், எமதுயர் நாடாம் பயிர்க்கு மழையாய், அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர் கோயிலாய் விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நின்றேன். அவரது உபதேசங்களை நெஞ்சில் பதித்ததால், மனையாளும் தெய்வமென்று நின் பாதங்களில் விழுந்தேன்” என்றான்.
செல்லத்தின் நெஞ்சில் ஏற்கெனவே புதிராய் நிற்கும் அவள் கணவன் சுப்பையா, இப்போது புனிதமாயும் உயர்ந்து நின்றான்.
“அன்னை கொடுத்த அருட்பிரசாதமாகிய ஆலிலையை என்பொருட்டு நீ பத்திரமாக பக்தியோடு பாதுகாத்து வா. நான் அவரது உபதேசப்படி தேச விடுதலையோடு பெண் விடுதலைக்கான தொண்டை, நூலிலைகளில் வடித்துப் பாதுகாக்கும் பணியைச் செய்கிறேன்” என்று தனக்கே உரிய இடிச் சிரிப்புடன் கூறினான் சுப்பையா. ஊருக்கு உபதேசம் என்று நூல்களில் பிறருக்குப் போதிப்பதோடு நின்றுவிடாமல், தன் வாழ்விலும் பெண்ணுக்குச் சரிசமான அந்தஸ்து கொடுத்து வாழ்ந்து காட்டினான் – மாகாளி கண்ணுற்றதால் மகாகவி ஆன, சுப்பையா எனப்படும் அந்த சுப்ரமண்ய பாரதி.
- (குறிப்பு: இது, உண்மைச் சம்பவங்களைத் தழுவி எழுதப்பட்ட கற்பனைக் கதை)
$$$
3. பாரதி வாக்கில் சனாதனம்
(கட்டுரை)
‘சனாதனம்’- இன்று பலர் வாயில் விழுந்து சங்கடப்படுகின்ற சொல்லாக மாறிவிட்டது. இதில் தெளிவு கிடைக்க, மகாகவி பாரதியின் வாக்கினிலே சனாதனம் பற்றிக் கூறப்பட்டுள்ள கருத்துகளைக் காண்போம்.
“மாகாளி கண்ணுற்றாள் ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி!” என்று ரஷ்யப் புரட்சியை வாழ்த்தியதன் மூலம், தமிழுக்குப் புரட்சி என்ற புதுச் சொல்லைத் தந்த புதுமையாளர் பாரதி. அதேநேரத்தில் பழம்பெருமையையும் போற்றுபவர். அதனால்தான் “பாரத நாடு பழம்பெரும் நாடு; நீரதன் புதல்வர், இந்நினைவு அகற்றாதீர்”என்று நமக்கு அன்புக் கட்டளையிட்டார். ஆனால், அந்த நினைவை அகற்றத் தான் பல தீய சக்திகள் இன்று போர் தொடுக்கின்றன.
சனாதனம் என்ற சொல்லுக்கு, தொன்றுதொட்டு வருகின்ற நன்மரபு என்று பொருள். அது நமக்கு வழிகாட்டும் வெளிச்சம். சனாதனத்தில் தவறில்லை. ஆயினும், அதைப் பின்பற்றும் சிலரிடம் தவறு இருக்கிறது, அதனைத் திருத்த வேண்டுமே தவிர, சனாதனத்தையே ஒழிக்க நினைப்பது, வேர்களை வெட்டத் துடிக்கும் மூடத்தனத்தின் மணிமகுடம். உடலிலே ஓர் நோவு ஏற்பட்டுவிட்டது என்பதற்காக உடலையே வெட்டி எறிந்துவிட முடியுமா? நோயைத்தானே விரட்ட வேண்டும்? எலி புகுந்துவிட்டது என்பதற்காக வீட்டைக் கொளுத்துவார்களா?
எது சனாதனம்?
“ஆயிரம் உண்டிங்கு சாதி - எனில்
அன்னியர் வந்து புகலென்ன நீதி? ஒரு
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?”
என்றார் மகாகவி பாரதியார்.
“உயர் ஜென்மம் இத்தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே, அன்றி
வேறு குலத்தினர் ஆயினும் ஒன்றே”
-என்றும் பாடினார் அவர்.
இந்த சகோதர மனப்பான்மையைக் கொடுத்திருப்பது சனாதனம்.
“ஹிமாலயம் சமாரப்ய யாவதிந்து சரோவரம்!
யம் தேவம் நிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே”
-என்கிறது ரிக் வேதம். இதனையே “வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்” என்று புறநானூற்றின் வரிகள், பாரத நாட்டின் வடக்குத் தெற்கு எல்லைகளாக வகுத்துக் கூறுகின்றன.
இவற்றை அடியொற்றி காலச்சூழலுக்குத் தகுந்த வண்ணம் “சேதமில்லாத ஹிந்துஸ்தானம் இதை தெய்வம் என்று கும்பிடடி பாப்பா” என்றும்,. “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்றும் பாடினார் மகாகவி.
இவ்விதம் தாய்நாட்டைத் தெய்வமாகப் போற்றுதல் சனாதனம். நாட்டைப் போற்றுவதையே மதத்தின் முதல் அடையாளமாகக் கொண்டிருப்பது நம் சனாதனம். ஆகையால்தான் ‘பாரத மாதா’ என்கிறோம். ‘தமிழ்த்தாய்’ என்று மொழியைத் தாய்க் கடவுளாகக் காண்பதும் இந்தச் சனாதனக் கண்ணோட்டமே.
சாதியை நம் சனாதனம் போதிக்கவில்லை. அனைவரும், அனைத்துமே ஆண்டவனின் அம்சம் என்பதே நம் சனாதனம். இதைத்தான்
“காக்கை குருவி எங்கள் சாதி,
நீள்கடலும் வானும் எங்கள் கூட்டம்!
நோக்குமிடமெல்லாம் நாமின்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்!”
என்றும்,
“யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்!
தீது நன்மையெல்லாம் உன் தெய்வ லீலையன்றோ”
-என்றும் மகாகவி பாடினார். காக்கை சிறகினில்கூட நந்தலாலாவின் கரிய நிறத்தைக் கண்டார். “காண்பதெல்லாம் கடவுள்” என்ற சனாதனக் கருத்தை உள்வாங்கியதன் வெளிப்பாடே இந்த வைர வரிகள்.
நந்தனாரை சாதி பார்த்து பிரித்தது சமூகக் கொடுமை. அவரையே நாயன்மாராக உயர்த்தி வணங்குவதே நம் சனாதனம்.
பிராமணர் என்பது பிறப்பின் அடிப்படையில் அமைந்த சாதி அல்ல, அடையக்கூடிய தகுதி நிலை என்பதுதான் சனாதனம். இதை நாற்குலம், பிராமணன், ஜாதிபேத வினோதங்கள் ஆகிய கட்டுரைகளில் விவரித்துள்ளார் மகாகவி பாரதியார். பிராமணன் யார் என்ற கட்டுரையில் ‘வஜ்ர ஸூசி’ என்ற உபநிஷதத்தில் பிராமணன் யார் என்று விளக்கப்பட்டிருப்பதை இவ்விதம் விண்டுரைக்கிறார்:
“உயிராலோ, உடம்பாலோ, பிறப்பாலோ, அறிவாலோ, செய்கையாலோ, தர்ம குணத்தினாலோ ஒருவன் பிராமணன் ஆகிவிட மாட்டான். இரண்டற்றதும், உள்ளும் புறமுமாய் நிறைந்திருப்பதும் அனுபவத்தால் உணரக் கூடியதுமான இறுதிப் பொருளை நேருக்கு நேராக அறிந்து, காம, குரோத, லோப குற்றங்கள் நீங்கியவனாக வாழ்கிறோனோ அவனே பிராமணன். பிராமணன் ஆக நினைப்போர் மேற்சொன்ன தகுதிகளை அடைய முயற்சி செய்க”
-என்று கூறியுள்ளார் பாரதியார். இதை நடைமுறையிலும் சாதிக்கத்தான் கனகலிங்கத்துக்குப் பூணூல் போட்டு வேத உபதேசம் செய்தார்.
‘தத்வமஸி’ என்பது வேத மகா வாக்கியம், இதன் உட்பொருளை, தனது ‘புதிய ஆத்திசூடி’யில் “தெய்வம் நீ என்று உணர்” என எளிமையாகவும் தெளிவாகவும் பாரதியார் எடுத்துரைத்துள்ளார். “அறிவே தெய்வம்” என்ற கவிதையிலே,
“சுத்த அறிவே சிவமென்று கூறும்
சுருதிகள் கேளீரோ- பல
பித்த மதங்களிலே தடுமாறி
பெருமை அழிவீரோ?’
-என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதே கவிதையில்,
“வேடம் பல்கோடி ஓர் உண்மைக்கு உளவென்று
வேதம் புகன்றிடுமே ஆங்கோர்
வேடத்தை உண்மையென நீர் கொள்வீரென
வேதம் அறிகிலதே”
என்றும் பாடியிருப்பார். “ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி” என்கிறது ரிக் வேதக் கருத்தின் விளக்கம் தான் இந்தக் கவிதை வரிகள்.
என் கடவுளைத்தான் நீ வணங்க வேண்டும் என்று சனாதனம் சொல்வதில்லை, வழிபாட்டுச் சுதந்திரம் உனக்கு உண்டு, ஆனால் அதற்காகப் பிறர் நம்பிக்கையைப் பழிக்காதே என்பதுதான் சனாதனம் காட்டுகின்ற வழி. இதை, ‘யாரைத் தொழுவது?’ என்ற தலைப்பிலான கட்டுரையில் பாரதியார் விளக்கியுள்ளார்.
“பல தேவராக வணங்காமல் ஒரே மூர்த்தியாய் உபாசனை செய்ய ஹிந்து மதம் இடம் கொடுக்கிறது. சித்தத்தை ஒருமுகப்படுத்த இந்த பக்தி எளிய வழி- ஆனால் இதர தெய்வங்களை விஷயம் தெரியாமல் பழித்தால் வேத விரோதம்” என்கிறார். ஆனால், இதர தெய்வங்களைப் பழிக்கத்தான் அன்னிய மதங்கள் பெரும்பாலும் வலியுறுத்துகின்றன. அதற்கு அடிவருடிகளாக இருப்பவர்கள் கூறுவதுதான் சனாதன ஒழிப்பு.
“இனி” என்ற தலைப்பிலான கட்டுரையில் கோயில் எதற்காக என்பதற்கும் பாரதியார் விளக்கம் கொடுத்துள்ளார்:
“கடவுள் எங்கும் இருக்கிறாரே அவரை ஏன் ஓரிடத்தில் கூடித் தொழ வேண்டும் என்றால் ஜனங்களிடம் ஒற்றுமை ஏற்படுவதற்காக. கவனி! அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது (இயங்குகிறது). இதுதான் வேதத்தின் கடைசியான கருத்து –‘தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்’ என்பது முன்னோர் கொள்கை. எல்லாம் ஓர் உயிர். ஒன்றுகூடிக் கடவுளை வணங்கப் போகுமிடத்து, மனிதரின் மனங்கள் ஒருமைப்பட்டு, தமக்குள் இருக்கும் ஆத்ம ஒருமையை அவர்கள் தெரிந்துகொள்ள இடம் உண்டாகுமென்று கருதி முன்னோர் கோவில் வகுத்தார்கள். ஆயினும், கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறது என்று நம்பி நம்மைச் சூழ்ந்திருக்கும் ஜனங்களிடம் தெய்வம் இல்லை என்று நம்பலாமா?
“கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்கிறேன். ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம் உன் தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய பெண்களிடத்தே வெளிப்படாமல் (வெளியே தெரியாமல்) இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளிவீச நாம் பார்க்க வேண்டும் என்பது குறிப்பு.
“ஆண் தெய்வமெல்லாம் நீ, உன் பிதா, உன் சகோதரர், உன் மகன், உன்னைச் சேர்ந்த ஆண் மக்கள் அடைய வேண்டிய நிலைமையைக் குறிப்பிடுகின்றன. சிவன் நீ, சக்தி உன் மனைவி; விஷ்ணு நீ, லக்ஷ்மி உன் மனைவி; பிரம்மா நீ, ஸரஸ்வதி உன் மனைவி. இதைக் காட்டி மிருக நிலையில் இருந்து மனிதரைத் தேவ நிலையில் கொண்டுசேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப் பள்ளிக்கூடங்களே கோவில்களாம்”
-என்கிறார். இதுதான் கோவிலை உருவாக்கிய நம் முன்னோர்களின் சனாதன தர்மம். ஆயினும் சனாதன எதிர்ப்பாளர்களைப் போலவே அதன் ஆதரவாளர்களும் இந்த உட்கருத்தை உணர்ந்துகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது!
‘பாரத ஜாதி’ என்ற கட்டுரையில் “கிறிஸ்தவர்களோ, முகமதியர்களோ, பார்ஸிக்களோ எங்கிருந்து வந்து எந்த இஷ்ட தெய்வத்தைக் கொண்டாடினாலும் பாரத பூமியிலே பிறந்து வளர்ந்து இதையே சரணாகக் கொண்ட மனிதர்களை பாரத ஜாதி என்று கணக்கிட வேண்டும். இது பிரிக்க முடியாதது, அழிவில்லாதது, இதற்கு ஆதாரமும் மூலபலமும் யாதெனில் ஆரிய சம்பத்து. அதாவது நமது மூதாதையரின் அறிவும் அந்த அறிவின் பலன்களும்” என்கிறார் மகாகவி பாரதியார். இவ்வாறு இந்த நாட்டைப் போற்றுகின்ற அனைவரையும் அரவணைக்கச் சொல்கிறது நமது சனாதனம்.
எவை எல்லாம் ஆரிய சம்பத்து? “நமது வேதம், நமது சாஸ்திரம், நமது ஜனக்கட்டு (மக்கள் சமுதாயம்), நமது பாஷைகள், நமது சிற்பம், கவிதை, சங்கீதம், நாட்டியம், நமது தொழில் முறைகள், நமது கோபுரங்கள், நமது மண்டபங்கள், இராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குள், ஆண்டாள் திருமொழி ஆகிய அனைத்தின் பொதுப் பெயர் ஆரிய சம்பத்து” என்றும் விளக்கம் அளித்துள்ளார். இதே கட்டுரையில், “ஆரிய சம்பத்திலே துருப்பிடிக்க இடம் கொடுத்தால் பாரத ஜாதியை செல் அரித்துவிடும்” என்றும் எச்சரித்துள்ளார். அவ்வாறு செல் அரிக்க வேண்டும் என்று எண்ணும் நச்சுக் கருத்தாளர்கள் நடத்துவதுதான் சனாதன எதிர்ப்பு மாநாடு.
‘ஆர்ய’ என்பது இனத்தைக் குறிப்பதல்ல. உயர்ந்த, மேலான என்ற பொருள் கொண்டது என்பதைத் தெளிவாக அறிந்தவர் பாரதி. ஆகையால்தான் ‘அச்சம் கொண்டவன் ஆரியனல்லன்’, ‘ஆரிய நாட்டில் நாரியரும் நரசூரியரும் சொல்லும் வீரிய மந்திரம் வந்தே மாதரம்’ என்றெல்லாம் பாடியுள்ளார். பாரதி கூறும் ஆரிய சம்பத்தில் ஒன்று பகவத் கீதை. அதை வன்முறை நூல் என்கிறார்கள் சனாதன எதிர்ப்பாளர்கள். பகவத் கீதைக்கு பாரதி எளிய விளக்கம் அளித்துள்ளார். அதன் முன்னுரையில்,
“துரியோதனாதிகள் பாவச் சிந்தனைகள், அர்ஜுனன் ஜீவாத்மா, கிருஷ்ணர் பரமாத்மா- பாவச் சிந்தனைகளைக் கொன்றொழிக்குமாறு ஜீவாத்மாவுக்குப் பரமாத்மா போதிப்பதே கீதை. துறவு மாத்திரமே மோக்ஷத்துக்கு வழியில்லை, இல்லறமும் ஏற்றதே என்பதே கீதையின் சாராம்சம். வீட்டில் இருந்தபடியே உறவினர்களுக்கும் பிறருக்கும் உபகாரம் செய்தபடி, மனுஷ்ய இன்பங்களை நேர்மையாக அனுபவித்துக்கொண்டு, கடவுளை உபாசனை செய்து ஜீவன் முக்தராய் வாழ்வதை கீதை போதிக்கிறது. ஸர்வமிதம் பிரஹ்ம – உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற வேதத்தின் கொள்கையை நிறுவுவதே கீதை”
-என்று பகவத் கீதையின் நோக்கத்தை பாரதியார் விவரித்துள்ளார். எல்லாம் கடவுள்மயம் என்ற இந்தக் கோட்பாடுதான் சனாதனம்.
‘தத்துவம்’ என்ற கட்டுரையில் கணபதி என்ற துணைத்தலைப்பின் கீழ் பாரதி கூறியிருப்பதை ஒவ்வொரு சனாதனியும் நினைவில் நிறுத்த வேண்டும்:
“ஒன்றே மெய்ப்பொருள்; அதனை ரிஷிகள் பலவிதமாகச் சொல்லினர் என்று வேதமே சொல்லுகிறது. கடவுளின் பல குணங்களையும் சக்திகளையும் பல மூர்த்திகளாக்கி வேதம் உபாஸனை செய்கிறது. வேதகாலம் முதல் இன்றுவரை ஹிந்துக்கள் தம் தெய்வங்களை மாற்றவில்லை. வேதம் எப்போது தொடங்கிற்றோ, யாருக்கும் தெரியாது. கிரேக்க, எகிப்திய, பாபிலோனிய தெய்வங்களெல்லாம் காலத்தில் மறைந்து போயின. ஹிந்துக்களுடைய தெய்வங்கள் அழிய மாட்டா. இவை எப்போதும் உள்ளன”
– என்று கூறியுள்ளார் தீர்க்கதரிசியான மகாகவி பாரதியார். ஆகையால் சனாதனத்தை ஒழிக்க நினைப்பவர்கள் தான் ஒழிந்து போவார்கள் என்பதை திடப்படுத்திக் கொள்வோம்.
‘பரோபகார்த்தம் இதம் சரீரம்’ (பிறருக்கு உதவவே இவ்வுடல்) என்ற வேத வாக்கை “ஊருக்கு உழைத்திடல் யோகம்” என்று மொழிந்தவர் பாரதி.
“யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா” (எங்கே பெண்கள் போற்றப்படுகிறார்களோ அங்கே தெய்வங்கள் மகிழ்ச்சியுடன் விளங்கும்) என்ற மனுஸ்மிருதியின் அடியொற்றி, “பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா” என்று ஆனந்தக் கூத்தாடியவர் பாரதி.
சனாதனத்தின் அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை அதாவது ஆண்- பெண் சமத்துவத்தை, “ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே” என்று வாழ்த்தியவர் பாரதி.
“சர்வம் இதம் பிரஹ்ம” என்ற வேதவாக்கை, “எல்லோரும் ஓர் நிறை”என்று ஓங்கி உரைத்தவர் பாரதி.
இதுபோன்ற உயர்ந்த கருத்துகளைக் கூறுகின்ற நாடு பாரதம் என்பதால்தான் “பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம்; நீரதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்” என்றும் கட்டளையிட்டுள்ளார்.
பாரத நாட்டின் உன்னதப் பாரம்பரியமான சனாதனத்தை மகாகவி பாரதி, தமது பல்வேறு கவிதைகளாலும், கட்டுரைகளாலும் விவரித்துள்ளார். அனைவருக்குள்ளும் தெய்வத்தைக் காணுதல், சாதி பேதம், வர்க்க பேதம், பாலினப் பாகுபாடு இவற்றைக் கடந்து அன்பு செலுத்துதல், இயற்கையைப் போற்றுதல், அனைத்து மனிதர்களையும் தெய்வ நிலைக்கு உயர்த்துதல் -இதுதான் சனாதனம்.
இந்த சனாதனத்தைப் போற்றுவோம்.
இத்தகைய சனாதனத்தை வேரறுப்பதாக ஊளையிடும் சூளுரைகளைச் சுட்டெரிப்போம்.
அதுமட்டுமல்ல, “எல்லோரும் அமரநிலை எய்தும் வழிமுறையை இந்தியா உலகுக்கு அளிக்கும்” என்ற பாரதியின் வாக்கை நனவாக்கும் வகையில் நமது சனாதனத்தின் மாண்பை உலக நாடுகளிலும் மலரச் செய்வோம்.
ஜெய் ஹிந்த்! வந்தே மாதரம்! பாரத அன்னை வெல்க!
$$$