ஸ்ரீமத் ஸ்வாமி விவேகாநந்த பரமஹம்சர்-1

-மகாகவி பாரதி

சுவாமி விவேகானந்தரின் திவ்ய சரிதத்தை, தான் ஆசிரியராகப் பணியாற்றிய  ‘சக்ரவர்த்தினி’ என்ற மகளிருக்கான மாத இதழில் தொடராக எழுத முற்பட்டார் மகாகவி பாரதி.  அந்த மகத்தான சரிதம் முற்றுப் பெறாமல் இரு அத்தியாயங்களுடன் நின்றுவிட்டது. எனினும், இந்த இரு அத்தியாயங்களில் சுவாமிஜி குறித்த மகாகவியின் துல்லியமான பார்வையும் தெளிவான கண்ணோட்டமும் புலப்படுகின்றன. அந்தப் பகுதிகள் இங்கே, அவரது நடையிலேயே….

பவுதிக சூரியோதயம் எந்த திசையிலே உண்டாகிறதோ அதே திசையிலேயே அடிக்கடி ஞான சூரியர்களும் உதித்து வருகிறார்கள்.  ஐரோப்பா, அமெரிக்கா முதலிய மேற்கு தேசங்களில் இடைக்கிடையே சிற்சில ஞானிகள் உதித்திருக்கின்றார்களெனினும், சர்வ சம்மதர்களாகி தெய்வாமிசம் பெற்றோரென மதிக்கப்படும் மஹாஞான மணிகள் மேற்கே பிறந்தது கிடையாது.

ஆசியா கண்டமே சர்வ மதங்களுக்கும் பிறப்பிடம்.  ஆசியா கண்டமே ஞானத்திற்கும், நாகரிகத்திற்கும் தாய் வீடு.

ஐரோபா கண்டத்திலும் அமெரிகா கண்டத்திலும் தற்காலத்து நாகரிக ஜாதியாரிலே பெரும்பாலரின் வாழ்க்கைக்குப் பேரமுதாகித் திகழ்ந்து வரும் கிறிஸ்து மார்க்கத்தை ஆரம்பத்தில் பிரதிஷ்டை  புரிந்த ஞான சிகாமணி எங்கே உதயமாயினர்? ஆசியா கண்டத்திலேயே அரபி நாட்டுப் பாலைவனங்களினிடையே எந்நாளும் வற்றாத ஞானவூற்றாகத் தோன்றி, முன்னமிருந்த விஷப்பூண்டுகளை யெல்லாம் அழித்தொழித்துவிட்டு, எத்தனையோ கோடி ஜனங்களின் ஞான தாகத்தை ஆற்றி வருகின்ற மகம்மது (அலைகிலஸல்லம்)  மேற்கு தேசங்களையா சார்ந்தவர்?

பொதுவாக சுடர்களும், மற்றும் கண்பூஷியஸ் (Cofucias)  முதலிய ஞானதாரகைகளும் தோன்றினவென்றாலும், நமது பரத கண்டத்தை மட்டும் தனியாக எடுத்துப் பார்க்குமிடத்து இதன் பெருமை அளவிடற்கரியது.  அதனை நினைக்கும் போதே எனக்கு ரோமாங்கித முண்டாகிறது.  தெய்வ பூமி என்று எமது தாய்நாட்டைச் சொல்வோமானால், அது சிறிதேனும் உபசார வசனமாக மாட்டாது.

சாதாரணமான ஜனங்களை மனிதரென்ற பெயரால் அழைப்போமானால், கம்பன், காளிதாஸன், ஷெல்லி  (Shelly),  டாண்டே (Dant ) முதலிய கவிரத்தினங்களைச் சிறிது உயர்வான பெயர் கொண்டுதானே அழைக்க வேண்டும்? இவர்களையே இப்படியானால், ஸ்ரீ புத்தர், சங்கரர் முதலிய அற்புத ஆத்மாக்களை என்ன பெயர் கொண்டழைப்பது?

கொற்றன், சாத்தன், தேவதத்தன், சுப்பன், சேஷன் முதலியவர்களையும் மனிதர்களென்று சொல்லி, கிறிஸ்து, புத்தர், சங்கரர் முதலானவர்களையும் மனிதர்களென்றே சொல்வது பாஷைக்குப் பெருமையாகுமா? பிற்கூறிய மகான்களையெல்லாம் தேவர்களென்று தானே சொல்ல வேண்டும்?

தேவர் என்ற மொழி ‘திவ்’ என்னும் பகுதியிலிருந்து தோன்றியது.  ‘திவ்’ என்றால் ‘ஒளிவீசு ‘ என்பது பொருள்.  எந்த திசையிலும் காணப்படாத ஞானவொளியும், அது பற்றிய  புகழொளியும் கொண்ட மகான்களைக் கோடிக் கணக்காகப் பெற்றிருக்கும் பாரதபூமியைத் தேவபூமி என்று சொல்வது முற்றிலும் பொருத்தமேயன்றோ?

தேவ கணங்கள்:

அம்மம்ம!  ஆரிய  பூமியிலே  பிறந்து விளங்கிய தெய்விக புருஷர்கள் இத்தனை பேரென்று யாவரால் எண்ண முடியும்? கடலிலேயுள்ள முத்துக்களின் தொகையை யாரறிவார்?  வானிலேயுள்ள நட்சத்திரங்களை யாவரே எண்ணி முடித்தோர்?  ருக் வேதத்து மந்திரத்ரஷ்டாக்கள் (Seers)  காலம் முதல் நேற்று விவேகாநந்தர் காலம் வரை நமது தேச மாதாவின் வயிற்றிலே தோன்றிய  ஞானிகள் எத்தனை ஆயிரம்?  எத்தனை லட்சம்?

ஒன்றை நூறாக விதந்து கூறுகிறோமென்று எவரும் நினைக்க வேண்டாம்.  பாரத பூமியின் வேதங்கள், உபநிஷத்துக்கள், சாஸ்திரங்கள், காவியங்கள் என்பவற்றை ஒருவன் மனக்கோலினால் அளந்து பார்ப்பானாயின் நாம் சொல்வது கலப்பற்ற உண்மையென்பது அவனுக்கு மிகத் தெளிவாக விளங்கும். இப்பெரிய கூட்டத்திலிருந்து அதிக முக்கியமான சிலரின் பெயர்களை மட்டும் எடுத்துக் கூற வேண்டுமெனினும்  இடம் போத மாட்டாது.  எனினும் சென்ற ஒரு நூற்றாண்டிற்குள்ளே தோன்றிய முக்கிய தேவர்களின் பெயாகள் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஹிந்து மார்க்கத்தின் புராதன நெறிக்கு விரோதிகள் போல வெளிக்குத் தோன்றிய போதிலும், உண்மையிலே நமது நாட்டைப் பற்றிய நோய்களை நிவாரணஞ் செய்யப் பிறந்த ஆயுர்வேதியராகிய ராம மோஹனராயர், கேசவ சந்திரஸேனர், தயாநந்த ஸரஸ்வதி, விவேகாநந்தரின் சற்குருவாகிய ராமகிருஷ்ண பரமஹம்சர்,  ஸ்ரீ விவேகாநந்தர் ஆகிய இவர்களே அதிசமீபத்திலே தோன்றி மறைந்த மஹான்கள்.

இவர் அனைவரும் தனித்தனியே சிற்சில விஷயங்களில் தெய்விகமான திறமை படைத்திருந்தனர்.  இவர்களில் நிறுத்துப் பார்த்து இவர்களிலே யாவர் மேற்பட்டோர், யாவர்  தணிந்தோர் என்று வகுத்துக் கூறுதற்கு இது சமயமில்லை.  அதற்கு நான் அருகனுமில்லை.  சுக்கிர கிரகத்திற்கும், புத கிரகத்திற்கும் உள்ள தாரதம்மியத்தைப் பற்றிப் பேசுவதற்கு, பாறைக்குள்ளிருக்கும் தேரைக்கு என்ன அதிகாரமிருக்கின்றது?  தன்னலம் பாராட்டல், ஆசை, அச்சம் என்னும் குணங்கள் செறிந்த உலக மாயை என்ற பாறைக்குட்பட்டிருக்கும் தேரையாகிய நான் ஞானாகாசத்திலே சர்வ ஸ்வயாதீனமாக ஒளி வீசிக் கொண்டிருக்கும் ஜ்யோதி நட்சத்திரங்களாகிய விவேகாநந்தர், ராமகிருஷ்ணர், கேசவ சந்திரர் முதலானோர்களின் தாரதம்மியத்தைப்பற்றி  எவ்வாறு வகுத்துக் கூற மாட்டுவன்?

ஆனால்,  அந்தப் பாறையிலிருக்கும் ஓர் பிளவின் மூலமாக யாதானும் ஓர் தாரகையின் தாரகையின்  ஒளியைக் கண்டு மகிழும் தன்மை தேரைக்கு மிருக்கலாமல்லவா? அதுபோல எனக்குத் தெரிந்தமட்டிலே விவேகாநந்தச் சுடரின் பெருமையைச் சிறிது பேசத் தொடங்குகின்றேன்.

பிறப்பு:

ஸீமூலியா என்பது சென்னையிலே சௌகார் பேட்டையிருப்பது போல கல்கத்தாவிலே ஓர் தனிப் பேட்டையின் பெயர்.  அந்தப் பேட்டையில் 1862-ம் வருஷம் ஜனவரி மாதம் 12-ம் தேதி, திங்கட்கிழமையன்று சூரியோதயத்திற்கு ஆறு நிமிஷங்களுக்கு முன்பாக பிரம முகூர்த்தத்திலே ஸ்வாமி விவேகாநந்தர் அவதாரம் புரிந்தார்.

ஒவ்வொரு மஹானுடைய பிறப்பையும் பற்றி இந்தியாவில் மட்டுமன்றி அன்னிய தேசங்களிலும் ஜனங்களால் அற்புதமான கதைகள் சொல்லப்படுவது போலவே, விவேகாநந்தர் பிறப்பின் சம்பந்தமாகவும் ஓர் கதை சொல்லப்படுகிறது.

அதாவது இவருடைய தாயார் நெடுங்காலமாக ஆண் குழந்தையில்லாமலிருந்தனராம்.  அதனால் மிகவும் மன வருத்தமடைந்து இவர் காசி நகரத்தையடைந்து அங்கே ஸ்ரீ விசுவேசுரரிடம் தவங் கிடந்தனராம்.  அதற்கு விசுவேசர் மனமிரங்கி இந்த அம்மையின் கனவிலே தோன்றி,  “குழந்தாய், நீ வருந்தாதே, நானே வந்து உன் வயிற்றிலே ஜனிக்கிறேன்” என்று  அருள் புரிந்தனராம்.

இந்தக் கதை பிற்காலத்திலே விவேகாநந்த ஸ்வாமிகள்  புகழ் பெற்று ஓங்கியதற்கப்பால் கற்பனை செய்யப்பட்டதோ அல்லது உண்மையாகவே அந்த அம்மை அங்ஙனம் கனாக் கண்டாரோ என்பது ஊகித்துக் கூற முடியாத விஷயம்.  இது நிற்க.

விவேகாநந்த ஸ்வாமிக்குப் பிள்ளைத் திருநாமம் நரேந்திர தத்தன் என்பது.  தத்த குடும்பமானது ஸிமோலியா பேட்டையிலே மிகவும் புராதனமான குடும்பம்.  இந்தக் குடும்பத்தார் பழைய காலத்திலே மிகவும் செல்வ மிகுந்து வாழ்ந்தவர்கள்.  பிற்காலங்களில், இச்செல்வம் குறைந்துபோய் சாதாரண குடும்பமாய்விட்டது.  இக் குடும்பத்திலே நமது நரேந்திரனுடைய பிதாமகர் உலகத்தை வெறுத்து சன்யாசியாகிவிட்டார்,  இவர் பார்வைக்கு நரேந்திரனைப் போலவேயிருந்தாரென்று சொல்வதுண்டு.

நரேந்திரனுடைய பிதாவுக்கு விசுவநாத தத்தர் என்று பெயர்.  இவர் வங்காள ஹைகோர்ட்டிலே உயர்ந்த பதவியுள்ள அட்டர்னியாக வேலை பார்த்தவர்,  அவருக்கு நிறைய வரவிருந்த போதிலும் தர்மத்திலே மிகுந்த பிரியமுள்ளவராதலால் அந்த வரவு அவர் செலவுக்கே போதாமலிருந்தது.  ஆதலின்,  அவர் மரணத்திற்கப்பால் பிள்ளைகளுக்கு அவர் அதிகமாக நிதி வைத்திருக்கவில்லை.

நரேந்திரனுடைய தாயாரும் சாமானியமான ஸ்திரீயில்லை.  அந்த அம்மைக்கு ஞாபகசக்தி மிகவும் அதிகமெனப்படுகிறது.  ஒரு தரம் யாரேனும் ஓர் பாட்டுப் பாடினால் அதைக் கேட்டவுடனே இந்த அம்மை அந்தப் பாட்டு முழுவதையும் ராகம், மெட்டு, வசனம் ஒன்றும் தப்பாமல் திரும்பிச் சொல்லக்கூடிய சக்தி கொண்டவளாம்.

உலகத் துறவுச் சிந்தனை இவருடைய பிதாமகரிடத்திலிருந்தும், இவருடைய சிறந்த அறிவு தந்தையிடத்திலிருந்தும், ஞாபகசக்தி தாயாரிடத்திலிருந்தும் நமது ஸ்வாமிக்குக் கிடைத்ததென்று கூறலாம்.

குழந்தைப் பருவம்:

விவேகாநந்த ஸ்வாமிக்கு நரேந்திரனென்று திருநாமம் கொடுக்கப்பட்ட போதிலும், குழந்தைப் பருவத்திலே இவரை இவர்களுடைய குலதெய்வத்தின் பெயரையொட்டி வீரேசுரன் என்று அழைத்து வந்தார்கள்.  உண்மையான புருஷத் தன்மையும் வீர நெறியும் மனித வடிவெடுத்தாற்போல அவதரித்திருந்த ஸ்வாமிகளுக்கு அவருடைய தாய்- தந்தைகள்  ‘வீரேசுரன்’, ‘நரேந்திரன்’ என்ற பெயர்கள் கொடுத்திருந்தமை மிகப் பொருத்தமுடையதல்லவா? நிற்க.

குழந்தையாக இருக்கும்போது நமது நரேந்திரன் தனது வீட்டிலே விருத்தாப்பியரான ஓர் பந்துவுடன் படுத்துக்கொள்வது வழக்கம்.  அந்தக் கிழவர் சம்ஸ்கிருத பாஷையில் மிக்க தேர்ச்சி பெற்றவர்.  அவர் ஒவ்வொரு நாள் இரவும் நித்திரை வரும் வரையும் நரேந்திரனை அமரகோச சுலோகங்களைப் பாராமல் சொல்லும்படி செய்வதுண்டு. ஞாபக சக்தியிலே இணையற்றவராகிய நரேந்திரர் வெகு சீக்கிரமாக அவற்றை மனனம் செய்துவிடுவார்.  இவ்வாறு 5 வயதிற்குள்ளாகவே நரேந்திரருக்கு அமரகோசத்திலே பாதி பாடமாய் போய்விட்டது.

இதுவுமன்றி குழந்தைப் பருவத்திலே இந்த ராஜ சன்யாசிக்குத் துறவிகளைக் கண்டவுடனே மிகுந்த பிரியமுண்டாகிவிடும்.  வீட்டிற்கு வந்த துறவிகளுக்கெல்லாம் பிச்சையிடுவதுடன் தன் மேலே போட்டிருக்கும் துணியை எடுத்துக் கொடுத்து விடுவார்.

இளமை:

பிறகு நரேந்திரப் பெருமான் இங்கிலீஷ் பாடசாலையிலே சேர்ந்து படித்தனர்.  இவர் விளையாடும் போதே எல்லாப் பிள்ளைகளையும் போல இல்லாமல் தான் யோகியாக நடித்து ‘மவுன ஸமாதி’ விளையாட்டு விளையாடுவார்.  பாடசாலைப் பாடங்களை நமது நரேந்திரர் கருத்துடன் படிப்பது கிடையாது.  ஆனால், ஞாபகசக்தி மிகுதியாக உடையாராதலின் வருடாந்தரப் பரீட்சைக்கு ஓரிரு நாட்களின் முன்பாகத் தமது பாடங்களை படிக்கத் தொடங்கிப் பரீட்சையிலே தேறிவிடுவார்.

வேதாந்தம் முதலிய தத்துவ சாஸ்திர விவாதங்களிலே இவருக்கு குழந்தைப் பருவ முதலாகவே அதிக ஆவலுண்டு.  இவர் 8 வயதாயிருக்கும் போதே காம்ப்டே (Compte) என்ற ஐரோப்பிய மகானுடைய தத்துவ சித்தாந்தத்தை இவருக்கு ஓர் பந்து எடுத்துப் போதனை புரிந்தார்.  அப்போதே நமது ஸ்வாமிக்கு இந்த சாஸ்திர வன்மை நன்கு தெளிவாயிற்று.

12 வயதாயிருந்த காலத்தில் ஸ்வாமி மேல்நாட்டு ஞானிகளுக்குள்ளே தலைமை வகுப்பைச் சேர்ந்தவராகிய ஹெர்பர்ட் ஸ்பென்ஸருடைய நூல்களை அறிந்துகொள்ளும் வன்மை பெற்றிருந்தார்.  மேற்படி ஞானியின் கோட்பாடுகள் சிலவற்றைக் கண்டனை புரிந்து நரேந்திரர் இவர்க்கோர் கடிதமெழுதினார். ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் (Herbert Spencer) அப்போது ஸ்வாமிக்கெழுதிய மறுமொழியிலே, “தமக்குத் தத்துவ ஞானப் பயிற்சி மிகவும் எளிதாக வரும், கைவிடாமல் மேன்மேலும் படித்து வர வேண்டும் ” என்று கூறியுள்ளார்.

வாலிபத்திலே நரேந்திரர் அதி சுந்தர புருஷராக விளங்கினர்,  மேலும் அவரது கண்டம் வெகு நேர்த்தியானது.  நரேந்திரன் பாடுங்காலத்தில் யெல்லோரும் பேராவலுடன் கேட்பார்கள்,  18-ம் வயதிலே நரேந்திரர் பி.ஏ (B.A.) பரீஷை தேறினர்.

வாலிபத்திலே கூட விவேகாநந்தரின் சிந்தை நிஷ்களங்கமாகத் திகழ்ந்து நின்றது. தீயவஸ்துக்களிடையே அகப்பட்ட காலத்திலெல்லாம் இவர் ஈசுர பஜனம் செய்வதுண்டு மத  விஷயங்களைப் பற்றியே எப்போதும் பேசிக்கொண்டிருப்பார்.

12 வயதானவுடனே நநேந்திரன் கடவுளர் அனேகருளர் என்ற கொள்கையை நம்பாமல் நிறுத்திவிட்டார்.  பிரம ஸமாஜத்தார் ஈசனைப் பற்றிக் கொண்டிருக்கும் கோட்பாடே தகுதியானதென்று நம்பத் தொடங்கினார். கடைசியாக பிரம ஸமாஜத்திலே சேர்ந்தார்.  சங்கீதப் பிரியராகையால் பிரம ஸமாஜத்தாரின் பஜனைகளிலே ஸ்வாமியே முக்கியப் பாடகராக விளங்கினர்.

ஆனால் சிறிது காலத்திற்கப்பால் இவருக்கு பிரம ஸமாஜத்திலே யிருந்த பற்று நீங்கிவிட்டது.  ஸர்வாந்தர்யாமியாகிய பிரமத்தை பிரத்தியட்சமாக அனுபவிக்க வேண்டுமென்ற  ஆவல் நரேந்திரருக்கு ஏற்பட்டது.  பிரம ஸமாஜத்தார் ஏதோ சில ஐதிகங்களை வைத்துக்கொண்டு பழைய பிரார்த்தனைகளையும்,  ஜபங்களையும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது ஸ்வாமிக்கு இசையவில்லை.

‘நேரே பிரத்தியட்சமாக அனுபவிக்கப்படாத பிரமத்தினிடத்திலே பக்தி வைப்பதெங்ஙனம்?  எனக்குத் தெரியாத ஒரு பொருளின்மீது நான் எவ்வாறு அன்புசெலுத்த வல்லேன்? ‘ என்று ஸ்வாமிக்குச் சந்தேகங்கள் உண்டாயின.  இந்தச் சமயத்தில் ஸ்வாமிகள் நிரீசுரவாதியாகிவிட்டனர்.

இந்த ஜகத்திலே பிரமத்தை யொழிய வேறொன்றுமில்லையென்ற பெருங் கொள்கையை உலகத்தாருக்கு எடுத்துப் போதனை செய்ய வந்த இம்மஹான், இந்த ஜகத்திலே தெய்வமே கிடையாதென்ற கொள்கையைச் சிறிது காலம் வைத்திருந்தார்.  ஆனால், இக்கொள்கை சொற்ப காலத்திற்கப்பால் நீங்கிப் போய்விட்டது.

குரு தரிசனம்:   

இவ்வாறிருக்கும்போது ஸ்வாமி தமது பந்துக்களில் ஒருவராகிய ராமசந்திர தத்தரென்பவருடன் அடிக்கடி சமய விவகாரங்கள் செய்து வருவதுண்டு.  இந்த ராம சந்திர தத் கல்கத்தா வைத்திய கலாசாலையிலே வேலை பார்த்துக்கொண்டு வந்தவர்.  நரேந்திரருடைய கேள்விகளுக்குத் தக்கபடி மறுமொழி கூற ராம சந்திரரால் முடியவில்லை.

அதன் பேரில் ராமசந்திரர் சொன்னார்: “அப்பா உனது கேள்விகளுக்குச் சமாதானங் கூற என்னால் முடியாது.  தட்சிணேசுர  கிராமத்திலே ஓர் ஞானியிருக்கிறார். அவரிடம் வா, அவர் உனக்குத் திருப்தியானபடி விவகாரம்  புரிவார்” என்றனர்.

தட்சிணேசுர  கிராமம் கல்கத்தாவுக்கு வடக்கே 4 மைல்  தூரத்திலேயுள்ளது.  மேற்படி கிராமத்திற்கு ஸ்வாமி  ராமசந்திரருடன் ஒருநாள் போய் அந்த மஹாஞானியைத் தரிசனம்  புரிந்தார்.  அந்த ஞானிதான் புகழ்பெற்ற ராமகிருஷ்ண பரமஹம்ஸரென்று கூற வேண்டுவதில்லை.

நரேந்திரரைக் கண்டவுடனேயே ராமகிருஷ்ண பரம ஹம்ஸருக்கு ஆனந்தமுண்டாய்விட்டது.  உலகத்திற்கெல்லாம் ஓர் புதிய ஒளி கொடுக்கப் பிறந்த மஹான் இவர் என்பது அந்த ஞானியின் திருவுளத்தில் தோன்றிவிட்டது.  ‘குழந்தாய், நீ மட்டிலும் தனியாக நம்மை ஒருநாள் பார்க்க வா’ என்று ராம கிருஷ்ண பரம ஹம்ஸர் கட்டளையிட்டருளினார்.

நரேந்திரர் சம்மதி கொண்டு மற்றொரு தினம் பரம ஹம்ஸரைப் பார்க்க வந்தார்.  அப்போது பரம ஹம்ஸர் நரேந்திரருக்கு ஞானநெறியுணர்த்தினர். பிரமத் தேனை  நரேந்திரருக்கு முற்றிலும் அருந்தி வெறி கொள்ளும்படி செய்துவிட்டார். அந்த மஹா ஞான நெறி நரேந்திரரை விட்டு ஒருபோதும்  நீங்கவில்லை,  பிரமக் கள்ளுண்டு,  இந்த நரேந்திரப் பரதேசி பிதற்றிய வசனங்களே, இனி எந்நாளும் அழிவில்லாத தெய்வ வசனங்களாகப் பெருஞ் ஞானிகளால் போற்றப்பட்டு வருகின்றன.

ஞானோபதேசம் பெற்ற காலமுதல் நரேந்திரர் தமது பழைய இயற்கையெல்லாம் மாறிப் புதிய மனிதராகி விட்டார்.  தாய்க்கு மகவின் மீதுள்ள அன்பைக் காட்டிலும்,  நரேந்திரர்மீது பரம ஹம்ஸர் அதிக அன்பைச் செலுத்தினர்.  6 வருஷ காலம் நரேந்திரர் தமது குருவுடன் செலவிட்டார்.  இந்த ஆறு வருஷங்களிலேதான் உலக முழுதையும் கலக்கத் தோன்றியனவாகிய அற்புதப் பேரெண்ணங்கள் இவரது மனதிலே உதித்து நிலைபெற்றன.

1886-ம் வருஷத்திலே பரமஹம்ஸர் மரணமெய்தனர்.  இவர் மரிப்பதன் முன்பு நோய் கொண்டிருந்த காலத்திலேயே தமது சீடர்களாயிருந்த 20 வாலிபர்களுக்கு இவர் சன்னியாஸாசிரமம் அருளிச் செய்தார்.  அந்த இருபதின்மருள்ளே எமது நரேந்திரரே தலைவர்.  இவருக்கு சந்நியாசம் பெற்ற சமயத்தில் ‘விவேகாநந்தர்’ என்ற திருநாமம் அளிக்கப்பட்டது

சற்குருவின் மரணத்திற்கப்பால் விவேகாநந்தர் செய்த பெருந் தொழில்கள் அடுத்த முறை விரிவாக வரையப்படும்.

.

  • சக்ரவர்த்தினி  (மார்ச் 1906) இதழில் வெளியான பகுதி.

(தொடர்ச்சி)

$$$

One thought on “ஸ்ரீமத் ஸ்வாமி விவேகாநந்த பரமஹம்சர்-1

Leave a comment