-அவ்வை டி.கே.சண்முகம்
இசைக் கலைஞன் ஒருவன் இல்லத்தில் தனித்திருந்து இசைபாடி இன்புறுவான். மெய்மறந்து இசைச்சுவையோடு அவன் ஒன்றிவிடவும் முடியும். ஓவியக் கலைஞன் இதற்கு விலக்கன்று. தனது சுவைக்காகவே, தனது உள்ளுணர்ச்சியின் அமைதிக்காகவே கூட ஓவியம் தீட்டத் தொடங்கி விடுவான்; உணர்விழந்து நிற்பான். சிற்பக் கலைஞனும் இப்படித்தான். ஆனால் நடிப்புக் கலை தனித்தன்மை வாய்ந்தது. நடிகன் தனித்திருந்து நடித்து இன்புற இயலாது. எதிரே வீற்றிருக்கும் ரசிகர் கூட்டம் அவ்வப்போது காட்டும் மெய்ப்பாட்டுணர்ச்சிகள் மேடையில் நடிக்கும் நடிகனின் உணர்ச்சிகளோடு ஒருமைப்படும் போது தான் நடிப்புக்கலை அதன் உச்சநிலைக்கு வருகிறது. இது அனுபவத்தின் வாயிலாக நான் கண்ட உண்மை.

2. நடிப்புக் கலை (ஆ)
மறந்தும் மறவாத நிலை
நடிகன் தனக்கு எதிரே வீற்றிருக்கும் சபையின் சுவை உணர்ச்சியைத் தெரிந்துகொள்ள வேண்டும்; மேடையிலுள்ள இதர அமைப்புகளையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பாத்திரத்தோடு ஒன்றி நடிக்கும் அதே நேரத்தில் தானாகவும் விலகி நின்று பாத்திரத்தைக் கண்காணிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். மறந்தும் மறவாத நிலையில் நின்று நடிப்பவன் தான் சிறந்த நடிகனாகக் கருதப் பெறுவான்.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளை உங்களுக்கு எடுத்துக் காட்டினேன். இவை இரண்டும் என்னுடைய கற்பனை அல்ல; உண்மைச் சம்பவங்கள். இன்னும் இவைபோல எத்தனையோ நிகழ்ச்சிகள் நாடக மேடையில் நடைபெற்றிருக்கின்றன.
நாடகத்திலே உணர்ச்சியான ஒரு கட்டம். பாண்டியனுக்கும் சோழனுக்கும் வாட்போர் நிகழ்கிறது. கத்திகளை ஒத்திகைப்படி இருவரும் வீச வேண்டும்; இல்லாவிட்டால் என்னதான் மழுங்கிய கத்தியாயிருந்தாலும் ரத்தக் காயங்களுடன் நிற்க வேண்டியதுதான். பாண்டியனாகவும் சோழனாகவும் வேடம் புனைந்த நடிகர்கள் நான் முன்பு சொன்ன நரசிம்ம நடிகரைப் போல உணர்ச்சி மேலீட்டால் மெய்மறந்து பாத்திரங்களாகவே மாறி வாள் வீசத் தொடங்கிவிட்டால் விபரீதமல்லவா விளையும்!… அதை நடிப்பென்று எப்படிச் சொல்லுவது?
பாத்திரமாகவும்- தானாகவும் நிற்றல்
மேடையில் நடிகன் மட்டும் நடிக்கவில்லை. சட்டம், துணி, சாயம், பலகை, ஒளிவிளக்கு எல்லாமே நடிக்கின்றன. மலையாகவும், கடலாகவும், மலர்ப் பூங்காவாகவும்; மணி மண்டபமாகவும் காட்சி அளிப்பவை இவைதாம். இவற்றில் எதுவும் உண்மை இல்லை. பாத்திரமாக நின்று இவற்றை எல்லாம் மலையாகவும் கடலாகவும், மலர்ப் பூங்காவாகவும், மணிமண்டபமாகவும் எண்ணிக் கொள்ளும் அதே நேரத்தில் நடிகன் தானாகவும் நின்று இவையனைத்தும் பலகை, சட்டம், அட்டை, துணி இவற்றால் செய்யப்பட்டவை என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தவறினால் எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிடும். அரண்மனை, பூங்கா எல்லாம் ஆட்டம் கண்டுவிடும்.
நடிகன் தன்னை மறந்த நிலையில் கொஞ்சம் விலகி திரை விழும் இடத்தில் நின்றுவிட்டால் அவன் கதி என்ன ஆவது?
உணர்ச்சி வசப்பட்ட ஒரு நடிகன் ‘ஐயோ, தலைவிதியே’ என்று தலையில் அடித்துக் கொள்ளும்போது தலையிலிருப்பது ‘பொய்ச் சிகை’ என்பதை மறந்து ஓங்கியடித்துவிட்டால் அடுத்த விநாடி அந்தத் தலையின் நிலை- ‘டோபா’வின் நிலை என்னவாகும்?
வீரச்சுவை ததும்ப நடிக்கும் வேகத்தில் நடிகன் மீசையில் கை வைத்து ஒட்டு மீசையை முரட்டுத்தனமாய் முறுக்கத் தொடங்கி விட்டால், மீசை கையோடு வந்துவிடுமல்லவா? இப்படித்தான் ஒவ்வொன்றும். இவை மட்டுமல்ல; அரங்கில் ஒத்திகைப்படி நிற்க வேண்டிய இடங்கள் எப்போதும் நடிகனின் கவனத்தில் இருக்க வேண்டும். பல்லாயிரக் கணக்கான மக்கள் கண்டுகளிக்கும் இன்றைய திறந்தவெளி அரங்குகளில் ‘ஒலிபெருக்கி’யின் உதவியை நடிகன் கவனத்தில் வைத்துக்கொண்டு அதற்கேற்பக் குரலை அடக்கியும் உயர்த்தியும் பேசவேண்டும். மின்சார விளக்குகள் எங்கெங்கே பொருத்தப் பட்டிருக்கின்றன; எங்கே நின்றால் முழு வெளிச்சமும் தன் மேல் விழும்; மற்ற நடிகர்களை மறைக்காமல் எப்படி நிற்பது; என்பனவற்றை யெல்லாம் நடிகன் நினைவில் வைக்க வேண்டும்.
பக்கத்திலே நிற்கும் நடிகன் பாடத்தை மறந்துவிட்டுத் தவிக்க நேரலாம். நினைவாற்றலுள்ள பண்பட்ட நடிகன் அதையும் சபையோர் அறியாதபடி சமாளிக்க வேண்டும்.
ஒரு சமுதாய நாடகத்தில் நடிகன் சொல்லும் ஒரு வார்த்தை, ஒரு அசைவு, கதைப் போக்கிற்கு இன்றியமையாததாக இருக்கலாம். அந்த நேரத்தில் சபையில் ஒரு குழந்தையில் அழுகையாலோ, அல்லது ஒரு பெரிய மனிதர் எழுந்து போனதைலோ,வேறு காரணங்களாலோ சலசலப்பு ஏற்படலாம். இதைப் போன்ற சந்தர்ப்பங்களில் நடிகன் தனது திறமையால் எப்படியாவது சமாளித்துக் குழப்பம் அடங்கிய பின்பே அந்த வார்த்தைகளைச் சொல்ல முயல வேண்டும். இல்லாவிட்டால் கதைP போக்கை சபையோர் புரிந்துகொள்ள முடியாமற் போகும்.
பண்பட்ட நடிப்பின் தன்மை
ஒரு சிறிய யானைப் பொம்மை; மரத்தால் செய்யப்பட்டது. ஆனால், இப்போது மரம் மறைந்து விட்டது; யானைதான் நமக்குத் தெரியும். அன்பர் ஒருவர் வருகிறார். கொஞ்சம் ஆராயும் தன்மை கொண்டவர். ‘இந்த யானை மிகவும் நன்றாயிருக்கிறதே!… இது எந்த மரத்தால் செய்யப்பட்டது?’ என்று கேட்கிறார். இப்போது அவரது கேள்வியால் யானை மீண்டும் மரமாகிவிட்டது. யானையில் மறைந்திருந்த மரம் வெளிவந்துவிட்டது.
மரம் யானையாகவும், பூனையாகவும், மேசையாகவும், கட்டிலாகவும், நாற்காலியாகவும் பல்வேறு உருவங்களில் காட்சியளித்தாலும் அவற்றிலெல்லாம் மரம் என்ற மூலப்பொருள் மறைந்து கிடப்பதை நாம் அறிவோம். அதைப் போலவே கண்ணனாகவும், கருப்பனாகவும், அரசனாகவும், ஆண்டியாகவும் எத்தனை எத்தனை வேறுபட்ட பாத்திரங்களில் நடிகன் தோன்றினாலும் எந்தச் சமயத்திலும் அவன் அப்பாத்திரத்தினுள்ளே மறைந்து நிற்கிறான் என்பது உண்மை.
உலகில் பற்றில்லாமல் உலகிலே வாழும் யோகிகளை, முனிவர்களைக் குறிப்பிடும்போது ‘தாமரையிலை நீர்போல் பற்றற்று வாழ்கிறார்’ என்று சொல்லுகிறார்களல்லவா? அதைப் போல பாத்திரத்துடன் ஒன்றுபட்டு நிற்கும் நடிகனையும், ‘தாமரையிலை நீர்த்துளி போல் பாத்திரத்தோடு ஒட்டியும் ஒட்டாமலும் நிற்பவன்’ என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ஆம்; ஆதாரமாக இருக்கும் தாமரை இலையிலிருந்து கீழே உருண்டு விழுந்தால் நீர்த்துளி உருக்குலைந்து போகுமல்லவா? நடிகனை ஆதாரமாகக் கொண்டு நடமாடும் பாத்திரமும் அப்படித்தான். நடிகனை விட்டு விலகினால் அதாவது நினைவிழந்து நின்றால் பாத்திரம் உடைந்து சிதறுண்டு போகும்.
நடிப்பின் தத்துவ விளக்கம்
மனித உடலில் ஆத்மா எவ்வாறு ஊடுருவி நிற்கிறதோ, அவ்வாறே பாத்திரத்தோடு நடிகன் ஊடுருவி நிற்க வேண்டும். நடிப்புக்கலைக்குரிய தத்துவ விளக்கம் இதுதான். மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவனது ஆத்மா கண்காணித்துக் கொண்டிருக்கிறது. எந்தச் சமயத்திலும் மனிதனுடைய உள்ளுணர்வு அவனுக்கு நன்மை, தீமைகளை எடுத்துக் கூறத் தயங்குவதில்லை. எப்போதும் அந்தராத்மா அவனுக்கு அறிவுரை கூறி உடனிருந்து திருத்திக் கொண்டேயிருப்பதால்தான் மனிதன் மனிதனாக வளர்கிறான்.
நடிகன் நல்ல நடிகனாக வளர்ச்சி பெறுவதற்கும் இந்த உள்ளுணர்வு – அந்தராத்மா – துணை செய்ய வேண்டும். வெளிப்புற உணர்ச்சிகள் பாத்திரத்தோடு ஒன்றிக் கிடந்தாலும், அந்தப் பாத்திரத்தைக் கண்காணிக்கும் கருவியாக நடிகனின் உள்ளுணர்வு இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு பாத்திரத்திற்கு உணர்ச்சிகளை அடிமைப்படுத்தி விடாமல் தனது உள்ளுணர்வைத் தெளிவாக வைத்துக் கொள்பவனால்தான் நடிப்பில் வெற்றி காண முடியும்.
அவ்வைக்கு அபாயம்
நான் சென்ற பதினேழு ஆண்டுகளாக அவ்வையாராக நடித்து வருகிறேன். என் நடிப்பிலே அவ்வை நடிப்புச் சிறந்தது எனப் பெரும் புலவர்களும் ரசிகர்களும் பாராட்டுகிறார்கள். 1944-Iல் ஈரோட்டில் முதலாவது நாடகக் கலை மாநாடு நடந்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக இருந்து பணிபுரிந்த உயர்திரு ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்கள். அன்றிரவு அவ்வையார் நாடகம் நடைபெற்றது. அந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு ஆர்.கே.சண்முகனார் அவர்கள் எனக்கு ‘அவ்வை’ என்று சிறப்புப் பட்டம் அளித்தார்கள்.
அந்தச் சிறப்புக்குரிய அவ்வையார் நாடகத்தில் நான் அவ்வையாராக அரங்கில் நடிக்கும்போது ஒவ்வொரு விநாடியும் சண்முகமாகவே இருந்து அவ்வையின் பாத்திரத்தைக் கண்காணித்து வருகிறேன். கூன் முதுகு, பொக்கை வாய்,கை நடுக்கம், தாடை அசைவு, முகத்தின் சுருக்கம், தளர் நடை, பெண் குரல் எல்லாவற்றையும் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கும். இவற்றில் எதை மறந்தாலும் அவ்வையாரின் வேஷம் கலைந்துவிடுமல்லவா? இவை மட்டுமா? அதே நேரத்தில் மேடையிலே திரை விழும் இடங்கள், ஒளி அமைத்திருக்கும் இடங்கள், ஒலிக்கருவி வைத்திருக்கும் இடங்கள், இன்னும் எத்தனையோ விஷயங்களை அவ்வையார் நினைவில் வைத்திருந்தால் அல்லவா சபையோர் நாடகத்தைக் கண்டு ரசிக்கலாம்!
எனக்கே ஒரு சமயத்தில் பெரிய அபாயம் ஏற்பட்டது. கடவுட் செயலால் தப்பினேன். 1948இல் சென்னை, ஒற்றைவாடையில் அவ்வையார் நாடகம் தொடர்ந்து பல மாதங்கள் நடைபெற்றது; ஒரு நாள் காலஞ்சென்ற தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்கள் தலைமை; அன்று பெருங் கூட்டம்; மேடையில் உழவனும், மனைவியும் அவ்வையாரோடு உரையாடும் காட்சி நடந்து கொண்டிருந்தது. நல்ல நகைச்சுவையோடு கருத்தும் நிறைந்த காட்சி அது.
அவ்வையார் கடைசியாக அந்த உழவர் தம்பதிகளை வாழ்த்திவிட்டு உள்ளே போகிறார். நான் போகும் போது பெரியார் திரு.வி.க. அவர்கள் எப்படி ரசிக்கிறாரென்று கொஞ்சம் ஜாடையாகப் பார்த்துவிட்டுப் போனேன். அவ்வளவுதான். வழக்கம் போல விளக்கணைக்கப்பட்டது. அடுத்த காட்சிக்குரிய வீதித் திரை கீழே விடப்பட்டது. கனமான மர உருளையோடு கூடிய அந்தத் திரை நேராக என் தலையைப் பதம் பார்த்தது. தவறு என்னுடையதுதான். திரு.வி.க. அவர்களைப் பார்க்கும் ஆவலில் கொஞ்சம் வழிதவறி திரைக்கு நேராக வந்துவிட்டேன். எப்போதும் வேகமாகத் திரைவிடும் காட்சி அமைப்பாளர் அன்று கடவுள் செயலாகக் கொஞ்சம் மெதுவாக விட்டார். வழக்கமான வேகத்தில் திரை விழுந்திருந்தால் என் மண்டை சிதறியிருக்கும். தலையில் டோப்பாவும் இருந்ததால் ஒருவாறு பிழைத்தேன். ஒரு நிமிஷம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மயக்கமாயிருந்தது. அப்புறம் ஒரு வாரம் வரை அந்த வலி யிருந்தது. அந்த சம்பவத்திற்குப் பிறகு நான் மேலும் கவனம் எடுத்துக் கொண்டேன் என்று சொல்ல வேண்டியதில்லை.
அஷ்டாவதானம், தசாவதானம், சதாவதானம் என்று பெரும் புலவர்கள் அவதானம் செய்து பல விஷயங்களை நினைவில் வைத்துக் கொண்டு அற்புதமாக விடை தருகிறார்களல்லவா? நடிகனும் ஏறக்குறைய ஒரு அவதானியாகவே தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும். ஆனால், அவதானிகளைப் போல ஒன்றுக்கொன்று சமபந்தமில்லாத விஷயங்களை மூளையில் போட்டுக் கொண்டு குழப்ப வேண்டிய நெருக்கடி நடிகனுக்கு இல்லை. ஒவ்வொரு முறையும் புதிய புதிய விஷயங்களை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலையும் நடிகனுக்கு இல்லை. மேடையில் நடிப்பின் வெற்றிக்குத் தேவையான ஒன்றோடொன்று சம்பந்தப்பட்ட முக்கியமான சில அம்சங்களை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டால் போதும்.
ஒருமுகப்பட்ட சிந்தனை
மேடையைத் தவிர வேறு சிந்தனைகள் எதுவும் நடிகனின் உள்ளத்தில் இடம் பெறக் கூடாது. எப்போதும் சபையைப் பொது நோக்காகவே பார்க்க வேண்டும். குறிப்பிட்ட எவரையும் பார்ப்பது கவனத்தை வேறு வழியில் திருப்பக் கூடும். நடிப்பிலே கோளாறு ஏற்பட்டுவிடும். நாடகம், பாத்திரம், நடிப்பு, மேடை, சபை, இந்தச் சூழலை விட்டு வேறிடத்துக்குப் போகாமல் நடிகன் தன் சிநதனையைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தன்னை மறந்து பாத்திரமாகவே மாறி உணர்ச்சி வசப்படுவது நடிப்பின் வெற்றியல்ல என்பதை விளக்கினேன். ஆனால், அவ்வாற்று சிறிது உணர்ச்சி வசப்படும் நடிகர்கள் நாளடைவில் திருந்திப் பண்பட்டு விட முடியும். பாத்திரத்தையே மறந்து தானாகவே நிற்கும் நடிகர்களும் உண்டு. இவர்களால் பாத்திரம் கொலை செய்யப்படுகிறது என்றே சொல்ல வேண்டும். மறந்தும் மறவாத வழியே வெற்றிக்குரிய வழி. இது மேடையேறுபவர்கள் எல்லாருக்கும் எளிதில் வந்து விடாது. நன்கு பயிற்சி பெற்றுப் பல ஆண்டுகள் நடித்து அனுபவ முத்திரை பெற்ற நடிகர்களிடமே இந்த உயர்ந்த நடிப்பைக் காணலாம். நடிப்பு என்றும் நடிப்பாகவே இருக்க வேண்டும். அது உண்மையாகி விடக் கூடாது. நான் பல ஆண்டுகளாகப் பெற்ற நாடகமேடை அனுபவம் இந்த அறிவுரையைத்தான் கூறுகிறது.
தோற்றப் பொலிவு
அடுத்தது தோற்றப் பொலிவு. நடிப்புத் திறமை, குரல் வளம், பேச்சுத் தெளிவு எல்லாம் இருக்கலாம். ஆனால், தோற்றம் அந்தப் பாத்திரத்திற்குப் பொருத்தமாக இல்லாவிட்டால் வெற்றி பெற இயலாது.
ஒப்பனையின் மூலம், அதாவது மேக்கப்பின் மூலம் ஓரளவுக்குத்தான் தோற்ற மாறுபாடு செய்ய முடியும். கூடிய வரையில் பாத்திரத்திற்கேற்ற தோற்றமிருக்கிறதா என்று பார்த்து தேர்வு செய்வது நல்லது.
என் தம்பி பகவதி இராஜராஜ சோழனாக நடிக்கிறார். நான் அவருடைய மகன் இராஜேந்திர சோழனாக நடிக்கிறேன். அவரைவிட நான் ஐந்து வயது மூத்தவன். ஆனால், அவரது தோற்றம் எடுப்பாக இருக்கிறது; குரலும் கம்பீரமாக இருக்கிறது; உயரமும் என்னைவிட அதிகம். ‘இரத்த பாசம்’ நாடகத்திலே தம்பி பகவதி எனக்கு அண்ணன், நான் தம்பி. என்ன செய்வது? அவரவருக்கு ஆண்டவன் கொடுத்த சொத்து, இந்தச் சரீரமும் சாரீரமும்.
காப்பியடிப்பது தவறு
உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முறையும் சரீரத்திற்கு தக்கவாறு அமைகிறது. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைகிறது.
அதனால் எந்த உயர்ந்த நடிகரையும் பார்த்து யாரும் காப்பியடித்து நடிக்கக் கூடாது என்பது என் கருத்து. காப்பியடிப்பது ஒரு தனிக் கலை. அந்தக் கலையைப் பயில்பவர்கள் தமக்கென்று வேறு ஒரு தனித்தன்மையை அமைத்துக் கொள்வது கஷ்டம்.
இந்தச் சமயத்தில் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 1935-இல் ‘மேனகா’ படப்பிடிப்புக்காகப் பம்பாய் சென்றிருந்தோம். அந்தப் படத்தின் டைரக்டர் திரு. பி.கே.ராஜா சாண்டோ அவர்கள் மிகச் சிறந்த நடிகர். நான் மேனகாவில் நைனா முகம்மதுவாக நடித்தேன். முதல் நாள் ஒத்திகை நடைபெற்றபோது அவர் நடித்துக் காட்டியபடி அப்படியே நடித்தேன். உடனே அவர் சிரித்துவிட்டார். ‘என்னைப்போல் காப்பியடித்து நடிக்காதே, விஷயத்தை மட்டும் புரிந்துகொண்டு உனக்கு வருவதுபோல் நடி; அப்போதுதான் நீ தேர்ச்சி பெற முடியும்’ என்றார். அந்தச் சொல் என் நடிப்பை வளர்ப்பதற்கு மிகவும் பயன்பட்டது என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்ளுகிறேன்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைப் போல இப்போது திரைப்படங்களிலேயும் நாடகங்களிலேயும் சிலர் நடிக்க முயன்று வருகிறார்கள். அது தவறு. அவர்கள் எவ்வளவுதான் நடித்தாலும் ‘சிவாஜி கணேசனைப் போல் நடிக்கிறார்’ என்றுதானே சொல்லுவார்கள்? அதில் என்ன புகழிருக்கிறது?
நல்ல நடிகர்களின் நடிப்பைப் பார்க்க வேண்டும். அவர்கள் ஒவ்வொரு சுவையையும் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் அப்படியே காப்பியடிக்கக் கூடாது. ஒவ்வொரு நடிகனும் பயிலும் போதே தனக்கென்று ஒரு தனித் தன்மை – ஒரு பாணி ஏற்படுத்திக் கொள்ளுவது நல்லது. காப்பியடிக்கும் இந்தக் கலை நடிப்பில் மட்டுமன்று; பேச்சு, பாட்டு, எல்லாவற்றிலும் இருக்கிறது; பேச முயல்பவர்களெல்லாம் ஒரு சில நல்ல பேச்சாளர்களைப் போலவே பேச முயல்வதைப் பார்க்கிறேன். இதுவும் நல்லதன்று. எப்போதும் எதிலும் தனக்கென்று ஒரு தனித்தன்மையை ஏற்படுத்திக் கொள்ளுவது சிறந்தது.
தோற்றம் ஒன்று; மாறுதல்கள் கோடி
பல கோடி மனிதர்கள் உலகத்தில் வாழுகிறார்கள். ஆனால், ஒருவரைப் போல மற்றொருவர் இருப்பதில்லை. எல்லோர்க்கும், கால், கை, உடல், தலை, கண், காது, மூக்கு, வாய், எல்லாம் இருக்கின்றன. பொதுவாகப் பார்த்தால் ஒரே தோற்றம்!
ஆராயப் புகுந்தால் எத்தனை எத்தனையோ மாறுபாடுகள்! மனிதனுடைய புறத்தோற்றத்தில் மட்டுமா, அகத் தோற்றத்திலும் ஆயிரம் மாறுதல்கள்!
எல்லோருடைய உருவத்தையும் நாம் பார்க்கலாம். உள்ளே இருக்கும் உள்ளம் நமக்குத் தெரிவதில்லை. அதைத் தெரிந்கொள்ள அறிவுக்கண் வேண்டும். அந்தக் கண்ணைப் பெற்றவர்தான் நாடகாசிரியன். உங்கள் மனத்தையும் என் மனத்தையும் அவன் அறிவுக் கண்களால் ஊடுறுவிப் பார்த்து விடுகிறான்.
சாதாரண மனிதனா அவன்? இல்லை. இல்லை!
‘ஐயப்படா அது அகத்த துணர்வானைத்
தெய்வத் தோடு ஒப்பக் கொளல்’
திருவள்ளுவரே கூறிவிட்டார், அவன் தெய்வத்திற்கு ஒப்பானவன் என்று. அதற்கு மேல் தீர்ப்பேது?
நாடகாசிரியன் யார்?
நல்லவனும் கெட்டவனும் சேர்ந்து வாழும் உலகம் இது. நல்லவன் யார், கெட்டவன் யார் என்பதை நீங்களும் நானும் தெரிந்து கொள்வது எப்படி? அந்தப் புண்ணியத்தைத் தான் செய்கிறான் நாடகாசிரியன். நல்லவன்- கெட்டவன் எல்லோருடைய அகத்தையும் திறந்து காட்டி அவர்கள் பொய் வேடத்தைக் கிழித்து, சந்தி சிரிக்க வைக்கிறான்.
எனவே, நாடகாசிரியனுக்கு நடிகர்கள் பெரு மதிப்புத் தர வேண்டும். நடிக்கும்போது சந்தேகங்கள் தோன்றினால் நாடகாசிரியனைக் கேட்டுக் கொள்ள வேண்டும். நாடகாசிரியனுடைய எண்ணப்படிதான் நடிக்க வேண்டும். நடிகனுக்குப் புதிய கற்பனைகள் ஏதாவது தோன்றக்கூடும். அதை நாடகாசிரியனிடம் கூறி ‘இந்தக் காட்சியில் இப்படி நடிக்கலாமா? இந்தக் கட்டத்தில் இப்படிப் பேசலாமா?’ என்று கேட்டுக்கொண்டு செய்ய வேண்டும். நடிகனுக்கு இந்தக் கட்டுப்பாட்டுணர்ச்சி மிகவும் அவசியம்; எவ்வளவு சிறந்த நடிகனாக இருந்தாலும் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி நடிக்கும் போதுதான் அவன் நடிப்பிலே மெருகு – கலையழகு இருக்கும்.
நுண்ணிய நோக்கு
நடிப்புக்கலை பயிலும்போது வாழ்க்கையை உற்று நோக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். பல்வேறு வகைப்பட்ட குணப்பண்புடைய மக்களைப் பார்த்துப் பழக வேண்டும்.
ஒரு டாக்டராக நடிக்க வேண்டுமென்றால் பல டாக்டர்கள் தொழில் செய்வதை அணுகிப் பார்க்க வேண்டும். அவர் ஸ்டெதெஸ்கோப்பை எப்படியெடுக்கிறார்? நோயாளிகளை ஆராயும்போது அவருடைய முகம் எப்படியிருக்கிறது? என்றெல்லாம் நுணுக்கமாகப் பார்க்க வேண்டும்.
கற்பனைத் திறன் – உண்மையின் உணர்வு
கற்பனாசக்தி நடிகனுக்கு மிகவும் அவசியம். சில நேரங்களில் பால் குடிக்க வேண்டிய காட்சியில் தண்ணீர்தான் எங்களுக்குக் கிடைக்கும். என்ன செய்வது! தண்ணீரைப் பாலாக நினைத்துக் குடிப்போம். சமுதாய நாடகங்களில் தேநீர் குடிக்கும் காட்சிகள் வரும். நாங்கள் ஆவலோடு தேநீரையே எதிர்பார்த்திருப்போம். அந்தப் பொறுப்புக்குரியவர் சில நேரங்களில் தமது கடமையைச் செய்யத் தவறிவிடுவார். உள்ளேயிருந்து அழகாக வெறும் டம்ளர்கள் வந்து சேரும். அந்த சமயத்தில் நாங்கள் சூடான தேநீர் அருந்துவது போல சாமர்த்தியமாக நடித்து விடுவோம்.
நம்ப முடியாத பொய்யும் நடிகனுக்கு உண்மையாகப்பட வேண்டும். அங்கேதான் அற்புதமான கலை பிறக்கிறது; நடிகனின் கற்பனை விரிவடைகிறது. இந்நிலையை உண்மையின் உணர்வு என்று கூறலாம்.
பேசாத நடிப்பு
‘நாடகமேடையில் பல சிறந்த கட்டங்கள் நடிகர்கள் யாருமே பேசாதபோதுதான் ஏற்படுகின்றன் என்று ஒரு அறிஞர் கூறுகிறார். இது நூற்றுக்கு நூறு உண்மை. மனோகரன் நாடகத்தில் ஆவேசம்கொண்ட மனோகரன் தன்னைப் பிணைத்திருந்த சங்கிலிகளை அறுத்துக்கொண்டு தந்தையை வெட்ட முயல்கிறான்; எல்லோரும் தடுக்கிறார்கள்; பயனில்லை, அமைச்சர் சத்தியசீலர், தாய் பத்மாவதி தேவிக்கு மனோகரன் அளித்த வாக்கை நினைவுபடுத்துகிறார். கதையில் முன்பு நடைபெற்ற இரண்டு காட்சிகளில் இதே போன்று வசந்த சேனையை வெட்ட முயன்றபோது சத்தியசீலர் மனோகரன் அளித்த வாக்குறுதியை நினைவுபடுத்தித்தான் தடுத்தார். அப்போது மனோகரன் அந்த வாக்குறுதிக்குக் கட்டுப்பட்டுப் பேசாது போய்விட்டான். இப்போது மனோகரன், அந்த வாக்கை நினைவுபடுத்திய பிறகும் கட்டுப்படவில்லை. சத்தியசீலரையும் உதறித் தள்ளிவிட்ட தந்தையையும் அவரது காதற்கிழத்தி வசந்த சேனையையும் வெட்டப் பாய்கிறான்.
அந்த நேரத்தில் ஒரு கை மனோகரனின் கையைப் பிடித்து நிறுத்துகிறது. வேகமாய்ப் பாய்ந்த மனோகரன் திகைப்புடன் நின்று பார்க்கிறான். முக்காடிட்ட ஒரு பெண் எதிரே நிற்கிறாள். அவள் முக்காடு நழுவி விழுகிறது. யார் அந்தப் பெண்?
தன்னைப் பெற்ற தாய் ‘பத்மாவதி தேவி. பத்மாவதி தேவி’ என்று சபையிலுள்ள அமைச்சர்களும் மற்றவர்களும் வியப்பே வடிவாக நிற்கிறார்கள்.
ஆம்; தன் தாய்தான், பத்மாவதி தேவிதான்; ‘மனோகரா, நில்; விடு வாளை!’ என்றாள் பத்மாவதி.
இந்தக் காட்சியில் மனோகரன் ஆவேசங்கொண்டு பாய்வதும், கையைப் பிடித்து நிறுத்துவதும், ‘அவள் யார்?’ என்று பார்ப்பதும், தன் தாய் என்று உணர்ந்ததும், அவன் ஆவேசமெல்லாம் அடங்கிப்போய் தாய்க்குப் பணிந்த மகனாக நிற்பதும், சில விநாடிகள் பேச்சு எதுவுமில்லாத பகுதிதான். முழுதும் நடிப்புக்குரிய அந்தக் கட்டம் மனோகரன் நாடகத்திலேயே ஒரு சிறந்த பகுதியென்று சொல்லலாம்.
இப்படி, பேசாத பகுதிகள் எத்தனையோ நாடகங்களில் வருகின்றன. இவைபோன்ற கட்டங்களில் நடிகன் மிகத் திறமையாக நடிக்க வேண்டும்.
காட்சியில் கவனம் வேண்டும்
மற்றொரு முக்கியமான குறிப்பு, அரங்கில் பல நடிகர்கள் இருக்கலாம். அவர்களில் ஒரு சிலருக்குத்தான் வார்த்தைகள் இருக்கும். மற்றவர்கள் எல்லாம் என்ன செய்வது? ‘நமக்குத்தான் ஒன்றுமில்லையே’ என்று சும்மா நின்று கொண்டிருப்பதா?
மனோகரன் நாடகத்தில் சங்கிலியறுக்கும் காட்சி; புருஷோத்தமன், பத்மாவதி, வசந்தசேனை, ராஜப் பிரியன், சத்தியசீலர், மனோகரன் ஆகியோரைத் தவிர மற்றும் அமைச்சர்கள், காவலர்கள், எடுபிடிகள் முதலிய பலர் மேடையில் நிறைந்திருப்பது வழக்கம். மனோகரனும் பத்மாவதியும் உரையாடிக் கொண்டிருக்கும்போது இவர்களெல்லாம் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தால் காட்சியில் கவர்ச்சியிராது. அவரவர் பாத்திரப் பண்புக்கேற்றபடி ஒவ்வொருவரும் முகத்தில் உணர்ச்சியைக் காட்ட வேண்டும்.
குறும்பு நடிகர்
ஏதாவது மிகையாக நடித்து சபையோரின் கவனத்தைத் தன் பக்கம் இழுத்துவிடக் கூடாது; எப்போதும் சபையோரின் கண்கள் முக்கியமான பாத்திரங்களுடன் ஒன்றி நிற்கும்போது, தனியே ஒருபுறம் நிற்கும் நடிகர் வேறு தனிக் குறும்புகள் எதுவும் செய்யக் கூடாது. அப்படிச் செய்வது காட்சியின் உணர்ச்சியையே கெடுத்துவிடும்.
நடிகன் தனக்குக் கொடுக்கப்பட்ட பாடத்தை எப்படியும் நெட்டுருப் போட்டுவிட வேண்டும். பாடம் சரியில்லையானால் நடிப்பே வராது. இது என் சொந்த அனுபவம். சரியாகப் பாடம் செய்யாத நடிகன் எவ்வளவு சிறந்த நடிகனாயிருந்தாலும் பயனில்லை. அவன் மேடையில் வெற்றி பெறமுடியாது.
நாடக ஒத்திகை
நாடக ஒத்திகை நேரங்களில் குறித்தபடி தவறாது வந்து ஒத்திகையில் கலந்து கொள்ள வேண்டும். நடிகன் பாடத்தை நெட்டுருப் போடுவதற்கும் நன்றாகப் பயிற்சி பெறுவதற்கும் ஒத்திகை மிகவும் அவசியம். மேடையில் எப்படி நடிக்க வேண்டுமென்று நடிகன் எண்ணுகிறானோ அப்படியே ஒத்திகையில் நடித்துப் பழக வேண்டும். சில நடிகர்கள் ஒத்திகையில் சரியாக நடிக்க மாட்டார்கள். எல்லாம் மேடையில் நடித்து விடலாம் என்று அலட்சியமாக இருப்பார்கள். பெரும்பாலும், இப்படி அலட்சியமாக இருப்பவர்கள்தான் மேடையில் வந்து குளறி விடுவது வழக்கம். நாடகத்தை உருவாக்குமிடம் ஒத்திகை. இந்த இடத்தில் நடிகன் சிரத்தையோடு பூரணமாக ஒத்துழைத்து வெற்றி பெற வேண்டும்.
கம்ப நாடகம்
இறுதியாக நடிகனுக்கு நூலறிவு வேண்டும்; நடிப்பு வளரப் படிப்பு வேண்டும். புராண, இதிகாசங்கள், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் எல்லாவற்றையும் நடிகன் படிக்க வேண்டும். அப்போதுதான் பல்வேறு பாத்திரங்களின் பண்புகள் பழக்க வழக்கங்கள் இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள முடியும்.
கம்ப ராமாயணத்தில் நடிப்புக் குறிப்புள்ள செய்யுட்கள் பல இருக்கின்றன. ஒன்று சொல்லுகிறேன்.
இந்திரஜித்து மாயாசீதையை அனுமார் முதலிய வானரங்களின் முன்கொணர்ந்து வெட்டிவிடுகிறான். இந்தத் துக்ககரமான செய்தியை அனுமான் இராம பிரானிடம் சொல்லுகிறார். உடனே இராமனின் நிலை எவ்வாறிருந்தது என்பதை கம்பர் எவ்வளவு அற்புதமாகச் சொல்லுகிறார் பாருங்கள்.
‘துடித்திலன்; உயிர்ப்பு மில்லன் இமைக்கிலன்;
துள்ளிக் கண்ணீர்
பொடித்திலன்; யாது மொன்றும் புகன்றிலன்;
பொருமியுள்ளம்
வெடித்திலன்; விம்மிப்பாரின் வீழ்ந்திலன்;
வியர்த்தானல்லன்;
அடுத்துள துன்பம்யாவும் அறிந்திலர் அமரரேயும்’
சாதாரணமாகத் துன்பத்தைக் காட்டும் எந்த மெய்ப்பாட்டுணர்ச்சியும் இராமனுக்கு ஏற்படவில்லை. சீதை வெட்டப்பட்டாளென்ற செய்தியைக் கேட்டதும் இராமன் துடித்திலன் – உடம்பை அசைக்கவில்லை; உயிர்ப்பு மில்லன் – உயிர் இருப்பதாகவும் தெரியவில்லை; துள்ளிக் கண்ணீர் பொடித்திலன் – கண்ணீர் விடவுமில்லை; யாது மொன்றும் புகன்றிலன் – எதுவும் பேசவில்லை; பொருமி உள்ளம் வெடித்திலன் – துயரத்தால் மனம் பொருமி வெடித்து விடவுமில்லை; விம்மிப் பாரின் வீழ்ந்திலன் – அழுது புலம்பி அடியற்ற மரம் போல் வீழ்ந்து விடவுமில்லை; வியர்த்தானல்லன் – அவனது உடம்பில் வியர்வைத் துளிகளும் தோன்றவில்லை ஆனால், இராமனுக்கு அப்போது ஏற்பட்டுள்ள துன்பத்தையெல்லாம் அமரர்களும் அறிய மாட்டார்கள்….என்கிறார் கம்பர். ‘பேச்சு மூச்சற்றுத் திகைத்துச் சித்திரம் போல நின்றான் இராமன்’ என்பது இங்குள்ள நடிப்புக் குறிப்பு. பிரமை பிடித்தவன் போல் சில விநாடிகள் நின்றான் இராமன் என்பதை நாம் இதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறதல்லவா?
குறள் தரும் நாடகம்
திருக்குறள் காமத்துப்பால் முழுவதையும் வள்ளுவர் பெருமான் நமக்கு நாடகமாகவே தந்துள்ளார். அவை நடிகருக்கு மிகவும் பயனளிக்கும். ஒன்று சொலலுகிறேன்.
காதலியும் காதலனும் சந்திக்கிறார்கள்; காதலன் காதலியைப் பார்க்கிறான். காதலி நிலத்தைப் பார்த்தபடி நிற்கிறாள். காதலன் பார்க்காத சமயம் காதலி அவனை ஏறிட்டுப் பார்த்து மெல்லச் சிரிக்கிறாளாம். குறள் எவ்வளவு அழகாக இருக்கிறது:
‘யானோக்கும் காலை நிலநோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்’
இவ்வாறு எவ்வளவோ நடிப்புச் செல்வங்கள் நம் இலக்கியங்களில் இருக்கின்றன. இவற்றையெல்லாம் நீங்கள் நன்கு கற்றறிந்து சிறந்த நடிகமணிகளாகத் திகழ வேண்டும்.
ஒரு நல்ல நடிகன் தன் நடிப்பில் எப்போதும் நிறைவு காண மாட்டான். எவ்வளவு சிறப்பாக நடித்தாலும் அப்போதும் ஏதேனும் குறைகள் அவனுக்குத் தோன்றிக் கொண்டேயிருக்கும். அவன் ஒரு போதும் அகந்தை கொள்ளுவதில்லை.
நடிப்புக்கலை, நடிகன் தானே ரசிக்கும் கலையல்ல, மற்றவர்களால் ரசிக்கப்படும் கலை. ஆகையால் நடிப்புக் கலையின் வளர்ச்சிக்கு ரசிகப் பெருமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்.
நடிப்புக் கலையின் சிறப்பு
இசைக் கலைஞன் ஒருவன் இல்லத்தில் தனித்திருந்து இசைபாடி இன்புறுவான். மெய்மறந்து இசைச்சுவையோடு அவன் ஒன்றிவிடவும் முடியும். ஓவியக் கலைஞன் இதற்கு விலக்கன்று. தனது சுவைக்காகவே, தனது உள்ளுணர்ச்சியின் அமைதிக்காகவே கூட ஓவியம் தீட்டத் தொடங்கி விடுவான்; உணர்விழந்து நிற்பான். சிற்பக் கலைஞனும் இப்படித்தான். ஆனால் நடிப்புக் கலை தனித்தன்மை வாய்ந்தது. நடிகன் தனித்திருந்து நடித்து இன்புற இயலாது. எதிரே வீற்றிருக்கும் ரசிகர் கூட்டம் அவ்வப்போது காட்டும் மெய்ப்பாட்டுணர்ச்சிகள் மேடையில் நடிக்கும் நடிகனின் உணர்ச்சிகளோடு ஒருமைப்படும் போது தான் நடிப்புக்கலை அதன் உச்சநிலைக்கு வருகிறது. இது அனுபவத்தின் வாயிலாக நான் கண்ட உண்மை.
நடிப்பும் படைப்பும் ஒன்றே
நடிப்புக்கலைக்கும் வேறு கலைகளுக்கும் மற்றொரு குறிப்பான மாறுபாடு இருக்கிறது. ஓர் ஓவியன் தன் கலையைச் செய்து முடித்தவுடன் அந்தக் கலை வேறாகவும் ஓவியம் வேறாகவும் காட்சியளிக்க முடிகிறது. அதேபோன்று சிற்பக் கலைஞனும் தான் செய்த சிற்பத்தையும் தன்னையும் வெவ்வேறாகப் பிரித்துக் கொள்ள முடிகிறது. காவியம் புனையும் கலைஞனும் தன்னையும் தான் படைத்த காவியத்தையும் பிரித்துக் கொள்ள முடிகிறது. நடிகனின் நிலை இவற்றிற்கு முற்றிலும் மாறுபட்டது. நடிகன் வேறாகவும், அவன் படைப்பு வேறாகவும் இருக்க முடிவதில்லை. நடிகன் படைக்கும் பாத்திரம் நடிகனிடத்திலேயே அடங்கிக் கிடக்கிறது. நடிகனும் அவனே. பாத்திரமும் அவனே. இந்தச் சிறப்பை ஒவ்வொருவரும் உய்த்துணர வேண்டும். அது நடிப்புக் கலைக்கே உரிய தனிச் சிறப்பாகும்.
ரசிகரின் ஆதரவு
மக்களின் ரசிப்பு ஒன்றுதான் நடிகனுக்கு உற்சாகத்தைத் தரக் கூடியது. தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பு முதலிய மகிழ்ச்சி தரும் நாட்களிலே கூட நடிகன் தன் மனைவி மக்களோடு இன்புறுவதில்லை. அவன் இன்பம் அனுபவிக்கத் தெரியாதவன் அல்லன். அவனுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. அந்த நல்ல நாட்களிலே நடிகன் மக்களை மகிழ்விக்க வந்துவிடுகிறான்.
வாழ்வின் துன்பங்களையெல்லாம் மறந்துவிட்டு மக்களை மகிழ்விக்க வரும் நடிகனுக்கு மக்களின் ரசிப்பும் ஆதரவும் இல்லாவிட்டால் இன்பத்திற்கு இடமேது? அவன் நடிப்பில்தானே இன்பம் காணுகிறான்?
உடல் நலம்
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் எப்பொழுதோ சில வேளைகளில் ஏற்படக்கூடிய கோபம், சோகம், வீரம் முதலிய உணர்ச்சிகளையெல்லாம் சில மணி நேரங்களில் செய்து காட்டுகிறான் நடிகன். அந்த உணர்ச்சிகள் நடிகனுக்கு எவ்வளவோ நலிவை உண்டாக்கும். அந்த நலிவு ஏற்படாமலிருக்க வேண்டுமானால் நடிகன் நல்ல உடல் நலம் பெற்றவனாக இருக்க வேண்டும்.
நடிப்புக்கலைக்குரிய தகுதிகளில் உடல் நலத்தையும் ஒன்றாக, அதிலும் முதலாவதாக, முன்னரே குறிப்பிட்டேன். ஒவ்வொரு நடிகனும் ஒரு குறைந்த அளவுக்காவது உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும்.
உடற்பயிற்சியின் மூலம் மாணவர்களாகிய நீங்கள் எல்லோரும் நல்ல உடல்நலம் பெற்று, நடிப்புக்கலை பயின்று நடிக நட்சத்திரங்களாகி, நமது நாட்டிற்கும், மொழிக்கும் பல்லாண்டு காலம் பணிபுரிந்து எல்லா நலன்களும் பெற்று இனிது வாழ வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்க! வளர்க நடிப்புக்கலை.
(தொடர்கிறது)
$$$
One thought on “நாடகக் கலை – 2 – ஆ”