-பி.ஆர்.மகாதேவன்
“ஆரம்பத்தில் மாமிசமும் மதுவும் எதனால் சாப்பிட்டோம் என்பது தெரியாது. ஒரு உயிரைக் கொல்வது பாவம் என்ற எண்ணம், ஒரு தாயின் மனதில் என்றைக்கோ உருவாகியிருக்க வேண்டும். அன்றிலிருந்து அந்தக் குற்ற உணர்ச்சி அரிக்க ஆரம்பித்திருக்கும். கடவுளுக்குப் படைக்கிறேன் என்று சொல்லிப் படைக்க ஆரம்பித்து, அந்தப் பிரசாதம் சாப்பிடுகிறேன் என்று குற்ற உணர்ச்சியைப் போக்கிக் கொண்டுவிட்டீர்கள். நமக்குப் பிடிப்பவைதானே நம் தெய்வத்துக்கும் பிடிக்கும் என்று நம்பினீர்கள். அதன் பின் அதுவே பழக்கமாகியும்விட்டது. ஆனால், அவ்வப்போது குற்ற உணர்ச்சி வாட்டுகிறது. ஆக, மாமிசம் சாப்பிடாமல் இருக்கவும் முடியவில்லை. சாப்பிட்டுவிட்டு நிம்மதியாக இருக்கவும் முடியவில்லை. அப்படித்தானே?”

-4-
ஏழ் பிறப்பெனும் அக்கினி
ஆதனூருக்கு அருகில் புத்த பிக்குகள் ஒரு விஹாரில் தங்கியிருக்கிறார்கள். மாலை நேர பிரார்த்தனைகள் முடிந்த பின்னர் மறுநாள் பயணம் குறித்து திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெளர்ணமி நிலவொளி உலகை மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது. மடாலய அறைகளின் ஜன்னல் கதவுகளை மூடச் சொல்லும் தலைமை பிக்கு லாந்தர் விளக்குகளை ஏற்றச் சொல்கிறார். பொன்னிற ஒளியில் மின்னும் அறையில் பிக்குகளின் நிழல்கள் பெரிதாக அச்சமூட்டுவதுபோல விழுகின்றன. தலைமை பிக்குவின் அறைக்குள் ஒருவர் செல்கிறார்.
“தர்ம கீர்த்தியரே சரணம்…”
“சொல் வஜ்ரபோதி…”
“உங்களைப் பார்க்க சிலர் வந்திருக்கிறார்கள்.”
“என்னவாம்?
“பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்க வேண்டுமாம்.”
“என்ன பாவம் செய்தனராம்?”
“உங்களிடம் தான் சொல்வேன் என்கிறார்கள்.”
“சரி… வரச் சொல்.”
நந்தனின் ஊரைச் சேர்ந்தவர்கள் தோளில் இருந்த துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, தர்ம கீர்த்தியாரின் முன்னால் வந்து காலில் விழுந்து வணங்கப் போகிறார்கள். வஜ்ரபோதி அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார்.
“இங்கு இது அவசியமில்லை மானிடரே. சொல்லுங்கள், என்ன வேண்டும் உமக்கு?”
“நாங்கள் செய்யும் பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கவேண்டும் ஐயனே!”
“என்ன பாவங்கள் செய்கிறீர் மானுடரே?”
“மாமிசம் உண்கிறோம்.”
“கள்ளும் அருந்துகிறோம்.”
தர்ம கீர்த்தி சற்று திடுக்கிடுகிறார்.
“வியாபாரத்தில் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறேன்.”
தர்மகீர்த்தி தன் சீடனைப் பார்க்கிறார்.
“ஸ்த்ரீ போகம் எல்லையற்றுச் செய்கிறேன்.”
(தர்ம கீர்த்தி பெருமூச்செறிந்தபடியே) “சாவி கையிலேயே இருக்கிறதே மானிடரே?”
“தர்ம கீர்த்தியே!”
“என்ன?”
“பிரச்னையே அதில்தான் இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் இல்லை. எப்படிச் செய்ய என்பதுதான் தெரியவில்லை. இவற்றை நிறுத்த முடியவில்லை…”
“ஏன் முடியவில்லை?”
“இந்த இன்பங்கள் எம்மை மயக்குகின்றன. இம்மை மட்டுமே நிஜம் என்று மனம் சொல்கிறது.”
“அப்படியானால் பாவக்கணக்கு கூடிக்கொண்டேதான் போகும்.”
“என்ன செய்ய…? உடம்பும் மனமும் சொல் பேச்சு கேட்பதில்லை. அதோடு மறுமைக்காக இக உலக இன்பங்களைத் துய்ப்பதை நிறுத்த மனம் ஒப்பவில்லை. மறுமை என்ற ஒன்று இல்லையென்றால், எதையுமே அனுபவிக்காத வெற்றுப் பிறப்பாகிவிடுமே. கிடைத்த ஒரு பிறவியையும் வீணடித்த மூடர்களாகி விடுவோமே?”
“அலைகள் எழுவதை நிறுத்தவேண்டுமென்றால் கல் எறிவதை நிறுத்த வேண்டும். இது புரிகிறதா?”
“ஆமாம்.”
“அப்பறம் என்ன… கல் எறிந்து கொண்டே இருப்பேன், குளத்தில் அலைகள் எழக் கூடாதென்றால், எப்படியப்பா?”
“வழியில் ஒரு பிராமணரைக் கண்டோம். அவரிடம் இதையே கேட்டேன். அவர் ஒரு வழி சொன்னார்…”
“என்ன வழி?”
“அவருக்கு தானம் கொடுத்தால் எங்கள் பாவங்களை அவர் தாங்கிக் கொள்வாராம்…”
“அந்தப் பாவங்களை அவர் எப்படி போக்கிக் கொள்வாராம்?”
“அவர் யாகம் செய்து போக்கிக்கொள்வாராம்.”
“அந்த யாகத்துக்கு அவ்வளவு மகிமையா?”
“ஆமாம் என்கிறார்.”
“அப்படியானால், அந்த யாகத்தை எல்லாரும் செய்து பாவங்களில் இருந்து தப்பிவிடலாமே?”
“இதைத்தான் நானும் கேட்டேன். கூடாதென்கிறார். அவர்தான் யாகம் செய்வாராம். அவருக்குத் தான் நாங்கள் தானம் கொடுக்க வேண்டுமாம். நாங்கள் பாவம் செய்துகொண்டே இருக்க வேண்டுமாம்.”
“அவர் எங்கிருக்கிறார் என்று தெரியுமா…?”
“தெரியும் தர்ம கீர்த்தியாரே…”
“வாருங்கள்… வந்து எனக்கு அவர் இருக்கும் இடத்தைக் காட்டுங்கள்.”
நந்தனின் ஊர்க்காரர்கள் முன்னால் செல்ல, தர்ம கீர்த்தியாரும் சீடர்களும் பின்தொடர்கிறார்கள்.
தில்லை வாழ் தீக்ஷிதர்கள் ஆற்றின் கரையில் ஒன்றாக சந்தியா வந்தனம் செய்துகொண்டிருக்கிறார்கள். முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடி நிற்கும் சொர்க்க லோகம் போல் அந்த ஆற்றின் கரை ஜொலிக்கிறது. மாலை நேரச் சூரியனின் செம்பொன் நிறம் அவர்களின் தேஜஸினால் மேலும் ஒளி பெற்று மிளிர்கிறது.
அவர்கள் சந்தியாவந்தனத்தை முடித்துவிட்டு வரும்வரை தர்மகீர்த்தியாரும் சீடர்களும் ஆலமரத்தடியில் அமர்ந்துகொள்கிறார்கள். மேய்ச்சலுக்குச் சென்ற ஆநிரைகள் செம்பொன் ஒளியினூடே மென் புழுதி எழுப்பியபடி மந்தையாக ஊர் திரும்புகின்றன.
தர்ம கீர்த்தி வாஞ்சையுடன் ஒரு பசுவைக் கட்டி அணைக்கிறார். சீடர்கள் அனைவரும் ஒவ்வொரு பசுவைக் கட்டி அணைக்கிறார்கள். பசுக்கள் அன்று வீடுகளுக்குச் செல்லாமல் அவர்களைச் சுற்றி அமர்கின்றன. ஆலமரத்து மணல் மேட்டில் தர்ம கீர்த்தி அமர்ந்திருக்க, கீழே சீடர்களும் ஆவினங்களும் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும்போது அந்த இடமே கோகுலமா கிவிட்டது போல ஒரு தோற்றம்.
காலையில் காணாமலும் மதியம் மயிலைப் போல கோணாமலும் செய்த வந்தனத்தை மாலையில் கண்டு முடித்துவிட்டு பிராமணர்கள் வருகிறார்கள். ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் தர்ம கீர்த்தியைக் கை கூப்பித் தொழுகிறார்கள்.
தர்ம கீர்த்தி புன்முறுவலுடன் அங்கீகரிக்கிறார்.
தன்னிடம் தானம் கொடுத்து பாவங்களைப் போக்கிக்கொள்ளச் சொன்ன பிராமணரை வஜ்ரபோதிக்கு அடையாளம் காட்டுகிறார் அந்த நபர். சென்று அவரிடம் மெதுவாக விஷயத்தைச் சொல்கிறார். ’அப்படியா சங்கதி’ என்று சொன்னபடியே தர்ம கீர்த்தியை நெருங்குகிறார் அந்த பிராமணர்.
“சாமி, நீங்க சொன்னதை இந்த சாமி கிட்ட சொன்னேன். உங்களிடம் அது பற்றி சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று சொன்னார்கள். அதுதான் அழைத்து வந்தேன்.”
“நல்லது… சொல்லுங்கள் புத்த பிக்குவே!”
“யாகம் செய்தால் உங்கள் பாவங்கள் போய்விடும் என்றீர்களாமே… அதோடு உங்களுக்கு தானம் கொடுத்தால் இவர்களுடைய பாவமெல்லாம் நீங்கிவிடும் என்றும் சொன்னீர்களாமே?”
“ஏனப்பா அப்படியா சொன்னேன்?”
“அது வந்து…”
“என்ன சொன்னேன் என்பதைத் தெளிவாகச் சொல்லப்பா…”
“நாங்கள் யாகம் செய்யவா என்று கேட்டபோது கூடாதென்றீர்கள் அல்லவா?”
“அதற்கு முன் என்ன சொன்னேன்?”
“தானம் கொடுக்கச் சொன்னீர்கள்!”
“அதற்கும் முன் என்ன சொன்னேன்?”
“அது வந்து…”
“முதலில் உன் பாவங்களைப் போக்கிக்கொள்ள உரிய தீக்ஷை பெற்றுக் கொள்… மது, மாமிசங்களை விட்டு விலகு; தர்ம சாஸ்திர விதிகளின்படி நடக்க ஆரம்பி என்று சொன்னேனா?”
“ஆமாம்.”
“நீ அது முடியாது என்று சொன்னாய். வழிபாடு நாட்களில் தெய்வ காரியங்களில் ஈடுபடும்போது மது, மாமிசம் வேண்டாம் என்று சொன்னேன். எங்கள் வழிபாட்டில் மதுவும் மாமிசமும் பிரதானம் என்று சொன்னாய். இல்லையா?”
“ஆமாம்.”
“ஆரம்பத்தில் மாமிசமும் மதுவும் எதனால் சாப்பிட்டோம் என்பது தெரியாது. ஒரு உயிரைக் கொல்வது பாவம் என்ற எண்ணம், ஒரு தாயின் மனதில் என்றைக்கோ உருவாகியிருக்க வேண்டும். அன்றிலிருந்து அந்தக் குற்ற உணர்ச்சி அரிக்க ஆரம்பித்திருக்கும். கடவுளுக்குப் படைக்கிறேன் என்று சொல்லிப் படைக்க ஆரம்பித்து, அந்தப் பிரசாதம் சாப்பிடுகிறேன் என்று குற்ற உணர்ச்சியைப் போக்கிக் கொண்டுவிட்டீர்கள். நமக்குப் பிடிப்பவைதானே நம் தெய்வத்துக்கும் பிடிக்கும் என்று நம்பினீர்கள். அதன் பின் அதுவே பழக்கமாகியும்விட்டது. ஆனால், அவ்வப்போது குற்ற உணர்ச்சி வாட்டுகிறது. ஆக, மாமிசம் சாப்பிடாமல் இருக்கவும் முடியவில்லை. சாப்பிட்டுவிட்டு நிம்மதியாக இருக்கவும் முடியவில்லை. அப்படித்தானே?”
“ஆமாம்.”
“அதனால்தான் கடைசி ஆலோசனையாக தானம் கொடு; பாவங்கள் போகும் என்று சொன்னேன்.”
“தானம் கொடுத்தால் அந்த பாவங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமா?” பிக்கு குறுக்கிட்டார்.
“நான் அப்படிச் சொல்லவில்லையே தவ சிரேஷ்டரே. மனிதர்களில் பல வகைப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் ஒரே ஆன்மிக நிலை, பலம் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவருக்கு ஏற்ற வழியைக் காட்ட வேண்டியிருக்கிறது.”
“மனிதர்கள் வேறுபடலாம். தர்மம் வேறுபடக் கூடாது.”
“இல்லை ஆர்யரே. மானின் தர்மம் வேறு. சிங்கத்தின் தர்மம் வேறு. மானை மாமிசம் சாப்பிடு என்றும் சொல்ல முடியாது. சிங்கத்தை மாமிசம் சாப்பிடாதே என்றும் சொல்ல முடியாது.”
“அப்படி இல்லை. மனிதர்கள் அனைவருக்கும் பசி, பிணி, மூப்பு, மரணம் எல்லாம் ஒன்றுதான். எனவே அதில் இருந்து விடுபடுவதற்கான வழியும் ஒன்றேதான்.”
“தவறு ஸ்ரேஷ்டரே. பிணி, மூப்பு, மரணத்தில் இருந்து யாரும் தப்பிக்கவே முடியாது.”
“இல்லை. தப்பித்தே ஆக வேண்டும். பிறப்பு – இறப்புச் சுழலில் இருந்து விடுபட்டே ஆக வேண்டும்!”
“ஒருவர் பிறந்துவிட்ட பின் பிறப்பில் இருந்து எப்படி தப்பிக்க முடியும்? இறப்பிலிருந்தும் எப்படித் தப்பிக்க முடியும்? தப்பிக்க வேண்டிய அவசியமும் இல்லை…”
“ததாகதர் பல வருட தவங்களின் மூலம் தப்பிக்க வேண்டும் என்ற உண்மையைப் புரிந்து கொண்டிருக்கிறார். தப்பிக்க வழியையும் கண்டுபிடித்திருக்கிறார். அதைத் தனக்கு மட்டுமே என்று வைத்துக்கொள்ளாமல் அனைவருக்கும் தரவும் முன்வந்திருக்கிறார்.”
“அனைவருக்குமானது என்றோ, பொதுவானது என்றோ, எதுவும் உலகில் கிடையாது தர்ம கீர்த்தியே!”
“பசி பொது.”
“ஆனால், உணவு வெவ்வேறு!”
“உடல் பொது.”
“ஆனால் உணர்வுகள், சிந்தனைகள் வேறு வேறு!”
“பிறப்பு பொது.”
“ஆனால் வாழ்க்கை வெவ்வேறு!”
“இலக்கு ஒன்று.”
“ஆனால் பாதைகள் வேறு. அவரவருக்கான தர்மம் மட்டும்தான் உண்டு. க்ஷத்ரியருக்கு தனி தர்மம். வைஸ்யருக்கு தனி தர்மம். நாலாம் வர்ணத்தாருக்கு தனி தர்மம். புத்தர் தவ ச்ரேஷ்டர்; அதி பிராமணர். ஆனால், அவரது நியதிகளை ஊருக்கெல்லாம் விதிப்பது குழப்பத்தையே கொண்டுவரும். அவர் ராஜ்யத்தைத் துறந்தார். அத்தனை ராஜாக்களும் அவரைப் போலத் துறந்துவிட்டு உங்கள் பின்னால் வந்தால் என்ன ஆகும்?”
“என்ன ஆகும். ஒன்றும் ஆகாது. போர்கள் குறையும். காயங்கள் குறையும். வலி குறையும். கண்ணீர் குறையும்.”
“அப்படி இல்லை பிக்குவே . சிறிது காலத்துக்கு வேண்டுமானால் போர்கள், அதுவும் ஒரு வேளை குறையலாம். அதுகூட நாளைக்கே அனைவரும் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு உங்கள் பின்னால் வந்து நின்றால் தான் போர் நிற்கும். உங்களைப் பற்றித் தெரியாத தேசத்தில் ஒரு மன்னர் இருக்கும் வரை, அவர் கையில் ஆயுதம் இருக்கும் வரை, போர் நிற்காது. நாளையே உங்கள் அஹிம்சையின் சாம்ராஜ்ஜியத்தை ஆயுதம் ஏந்திவரும் மிலேச்சர் கூட்டம் அழித்து ஒழித்துவிடும்.”
“அதற்குத்தான் தேசம் தேசமாக நாங்கள் பயணம் செய்கிறோம்; பிரசாரம் செய்கிறோம்.”
“உலகம் மிகப் பெரியது தர்மகீர்த்தியே. அதிலும் நீவிர் தென் பகுதியில் போரை நிறுத்திவிட்டு வடக்குக்குச் சென்றால், திரும்பி வருவதற்குள் தென் பகுதியில் வேறொரு மன்னன் முளைத்துவிடுவான். மனிதன் ஒரு விலங்கு புத்தரே. எந்தத் தீமையையும் முற்றாக அழிக்க முடியாது. கட்டுக்குள்தான் கொண்டுவர முடியும்.”
“ஆயுதங்கள் இல்லாத உலகம்… போர்களே இல்லாத வாழ்க்கை அதுவே எங்கள் கனவு.”
“அத்தனை பேர் கைகளிலும் ஆயுதம் இருந்தால் உலகம் தாங்காது. ஆனால், யார் கையிலும் ஆயுதம் இல்லாவிட்டாலும் எந்த தேசமும் தாங்காது. சிலர் கையில் ஆயுதம் இருக்க வேண்டும். சிலர் கையில் செல்வம் இருக்க வேண்டும். சிலர் கையில் தொழில்களிருக்க வேண்டும். அவரவர்கள் அதை பொறுப்புடன் பிரயோகிக்கவைக்க ஒரு வழிகாட்டி தேவை. அந்த வழிகாட்டிக்கு வழிகாட்ட ஒரு தர்மம் தேவை. அது பொது தர்மம் அல்ல. மன்னருக்கேயான தர்மம். ஆயுதம் ஏந்துபவனுக்கேயான தர்மம். வைஸ்யருக்கான தர்மம்; நாலாம் வர்ணத்தாருக்கான தர்மம். வேறுபாடுகள் இருக்கும். இருந்தே தீரும்.”
“நாம் பொது தர்மத்தைப் பேசியே உலகை நல்வழிப்படுத்த வேண்டும். நீங்களே பாவங்கள் செய்துகொள் என்று சொன்னால் எப்படி? பாவங்கள் செய்வதில் இருந்து தப்பிப்பதென்றால் அவற்றைச் செய்யாமல் இருப்பதுதான். செய்துவிட்டு பிராயச்சித்தம் செய்வது அல்ல.”
“நீங்கள் லட்சிய போதனைகளை போதித்துக் கொண்டே போவோம் என்று சொல்கிறீர்கள். நம் முன்னோர்கள் நடைமுறைக்கு இறங்கி வந்து பேசியிருக்கிறார்கள். நாட்டைக் காக்கும் மன்னனும் பொருளீட்டும் வணிகரும் உடல் உழைப்பில் ஈடுபடும் மக்களும் ஒவ்வொரு வேலைகள் செய்கிறார்கள். அவற்றைத் தவிர்க்க முடியாது. உலகமும் சமூகமும் இயங்க அவை தேவை. இன்னொன்று சொல்லட்டுமா…? நீங்களும் நானும் மாமிசம், மது வேண்டாம் என்று சொல்கிறோம். இதற்கு நேர் எதிராக ஒருவன், ‘கண் முன் தெரிவதே உலகம். வாழ்க்கையைக் கொண்டாடு. மறுபிறவி, முற்பிறவி என்று எதுவும் இல்லை. பாவ புண்ணியம் என்று எதுவும் இல்லை. கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ என்று சொல்கிறான். மக்கள் கூட்டம் கூட்டமாக அவன் பின்னால் செல்கிறார்கள். நினைத்துப் பாருங்கள், ஒரு பக்கம் நீங்கள் புலனடக்கம் என்று மிகக் கடுமையான விதிமுறைகளை விதிக்கிறீர்கள். இன்னொரு பக்கம் அவன் எந்த ஒழுங்கும் நியாயமும் தேவையில்லை. கேளிக்கையே பிரதானம் என்கிறான்…”
“அது பேரழிவையே கொண்டுவரும்.”
“முழு புலனடக்கமும் அதையேதான் செய்யும் தர்மகீர்த்தியே! நம் முன்னோர்கள் அதனால்தான் எதையும் எல்லாருக்குமானதாகச் சொல்லவில்லை. எதற்கும் ஒரு அளவு தேவை. அமுதமேயானாலும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதான். உயிர் கொடுக்கும் மழையேயானாலும் முடிவற்றுப் பெய்தால் பெருவெள்ளமே… பேரழிவே!”
“உயிர்க் கொலையில் ஈடுபட்டுக்கொள். தானம் மட்டும் கொடுத்துவிடு என்பது அதர்மம் ஆர்யரே. போரில் ஈடுபடு… சத்ரியனுக்கு அதுவே மோக்ஷத்துக்கான வழி…பொருளை ஈட்டி விற்றுப் பிழை, அதுவே வணிகனுக்கான தர்மம் என்றெல்லாம் பொய்யான, இல்லாத ஊருக்கு வழிகாட்டினால் அது எவ்வளவு பெரிய பாவம்? அநீதி. பிறப்பு- இறப்பு வலைக்குள் மீண்டும் மீண்டும் சிக்க வைப்பது எவ்வளவு பெரிய துரோகம்! இல்லாத தெய்வத்தின் பெயரில் இதையெல்லாம் செய்வது அதைவிடப் பாவம்!”
“ஆர்ய சிரேஷ்டரே… மோக்ஷம் என்று சொல்வது மறு உலகில் அடைய வேண்டியது மட்டுமே அல்ல. இந்த உலகில் இசைவான வாழ்க்கை வாழவும் அதுவே வழிகாட்டுகிறது. என்ன விதமான வாழ்க்கை வாழ்ந்தால் மோஷத்தை அடைய முடியும் என்று சொல்லப்படுகிறதோ, அதுவே இந்த உலகில் ஒத்திசைவான கூட்டுறவான வாழ்க்கை வாழவும் அவசியம். நீங்கள் மறு உலகை நம்ப வேண்டாம். தெய்வத்தின் இருப்பை நம்ப வேண்டாம். இந்த உலகில் உயிர்களிடையேயும் மக்களிடையேயும் ஒத்திசைவும் பரஸ்பர நல்லுறவும் வேண்டும் என்பதை ஏற்கிறீர்கள் அல்லவா?”
“அதற்குத்தான் துறவையும் புலனடக்கத்தையும் முன்வைக்கிறேன். உயிர்க் கருணையை அடிப்படை அறமாகச் சொன்னதும் அதனால்தான்.”
“துறவு எல்லாருக்குமானதல்ல. அதோடு நீவிர் உயிர்க் கொலை கூடாது என்று சொல்கிறீர். இன்னொருவர் விவசாயம் செய்வதே பெரும் கொலை என்கிறார்…”
“ஆமாம் எந்த உயிர்களையும் கொல்லாமல் பயிரிடமுடியுமா என்ன?”
“அப்படியானால் மனிதர் எதைத்தான் உண்பது?”
“ஆதி காலத்தில் காய்கனிகளில் உதிர்ந்ததைப் பொறுக்கி வாழ்வில்லையா… அதுவே மனிதருக்கான இயற்கையின் வழிகாட்டல். உலகில் இருக்கும் தாவர பக்ஷிணி விலங்குகள் விவசாயம் செய்கின்றனவா? வேட்டையாடுகின்றனவா? மனிதர்கள் ஏன் மாமிச உண்ணிகளைப் போல மாற வேண்டும்? இயற்கையோடு இயைந்து, இயற்கைவிட்ட வழியில் வாழ்ந்தாலே போதும்.”
“அதனால்தான் ஆடைகளே வேண்டாம் என்று கூடச் சொல்கிறார்கள் அவர்கள்.”
“ஆமாம். ஆடைகளுக்காகவும் உயிர்க் கொலை நடக்கத்தானே செய்கிறது? நீவிர் உடுத்தியிருக்கும் பட்டாடையும்கூட உயிர்களைக் கொன்று உருவாக்கியது தானே? எப்படித்தான் அதை அணிகிறீர். இதை உருவாக்குவதற்குக் கொன்ற ஓராயிரம் புழுக்களின் கதறல் உங்கள் காதில் விழவில்லையா? அத்தனை கால்கள் கொண்டும் அந்திமத் தருணங்களில் அவை எழுதிய கருணை மனுக்கள் உம் உடம்பில் இப்போதும் எழுதப்படவில்லையா…? ஓராயிரம் புழுக்களின் உதிரத்தால் நெய்யப்பட்ட பட்டு உம் உடம்பைத் தகிக்கச் செய்யவில்லையா…? வெந்நீர்த் தொட்டியில் போட்டுக் கொல்லப்பட்டவையெல்லாம் வண்ணத்துப் பூச்சிகளாகப் பறந்து திரிந்திருக்க வேண்டியவை அல்லவா…? பட்டாடை உடுத்திக் கொண்டு யாகம் செய்யும் உம்மால், உம் பாவங்களையே போக்க முடியாது. மற்றவர்களின் பாவங்களை எப்படிப் போக்க முடியும்?”
“மரவுரி தரிப்பதுதான் நம் முன்னோரின் வழக்கம். பல விஷயங்களில் விலகி வந்துவிட்டோம்தான். பெரும் தவறுதான். மாற்றிக் கொள்கிறோம். ஆனால், நம் முன்னோர் அவரவருக்கு ஒரு வழி என்று வகுத்ததில் அப்படி ஒன்றும் எந்தத் தவறும் இல்லை.”
“எப்படி இல்லை என்று சொல்ல முடியும்? அந்த வர்ணப் பகுப்புதான் இயற்கை வளங்களில் இருந்து சிலரை விலக்கி வைத்திருக்கிறது. சிலருக்குக் கூடுதல் சலுகை தந்திருக்கிறது. அதைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆன்மிகத்திலும் சிலரை ஈடுபடவிடாமல் தடுக்கிறது. துறவு கொள்ளக்கூட அனைவருக்கும் அனுமதி இல்லை என்பது எவ்வளவு பெரிய அநீதி. மனிதர்கள் சமமாக நடத்தப்படவேண்டும்.”
“உங்கள் மடாலயத்தில் மட்டுமே சமத்துவம் இருக்கிறது. அங்குமே ஆண்- பெண் பேதங்கள் உண்டு. அதை விடுங்கள். உங்கள் சமூகத்தில் எங்கே சமத்துவம் இருக்கிறது? அங்கு ஜாதியும் வர்ணமும் இருக்கத்தானே செய்கின்றன?”
“ஆனால், எல்லாருக்கும் மடாலயத்தின் கதவுகள் திறந்திருக்கின்றன. மீட்சியின் கயிறு அனைவருக்கும் வீசப்படுகிறது. பிடித்து மேலேறி வந்துவிடலாம்.”
“மீட்சி என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள். ஜாதிக் கொடுமைக்கும் வர்ண பேதத்துக்கும் நீங்கள் சொல்லும் தீர்வு என்பது பூரணப் புலனடக்கம். முழுத் துறவு. மனிதர்கள் இதை ஏற்கும் பக்குவம் பெறவில்லை. ஒருவகையில் அது அவசியமும் இல்லை. ஒவ்வொரு வர்ணத்தினரும் ஒவ்வொரு கடமைகளைச் செய்து வரலாம். அவற்றுக்கிடையே ஒருவித ஒத்திசைவும் பாசமும் பகிர்வும் இருந்தால் போதும்.”
“அதுதான் இருப்பதில்லையே. உச்சியில் இருப்பவர்கள் லெளகிகச் சுரண்டலைச் செய்துவிட்டு கோயிலுக்குள் தஞ்சமடைந்துவிடுகிறார்கள். தர்மத்தை நிலைநாட்டவேண்டியவர்களும், ஒருவன் என்ன சுரண்டலில் ஈடுபட்டாலும் கோயில் உண்டியலில் காசு போட்டால் போதும். நாலு குளம் வெட்டுகிறானா… ஆதுர சாலை அமைக்கிறானா… எவ்வளவு போர் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். எத்தனை மூட்டை நெல்லை வேண்டுமானாலும் பதுக்கிக் கொள்ளலாம் என்று அவர்களைக் காப்பாற்றி விடுகிறார்கள். ஆக லெளகிகச் சமநிலையும் போய்விடுகிறது; ஆன்மிகச் சமநிலையும் அழிந்துவிடுகிறது. இரண்டின் ஆதிக்க சக்திகள் பரஸ்பரம் கூட்டுக் கொள்ளையர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள்…”
“தவறு… கோயில்கள் கொடியவர்களுக்கு அடைக்கலம் தரவில்லை. கொடியவர்களின் கொடுமையை அது குறைத்துவிட்டிருக்கிறது. போர் செய்யும் மன்னர் அந்தப் பாவத்தைப் போக்க கோயிலில் புகலிடம் தேடி ஒளிந்து கொள்ளவில்லை. போருக்கு மேல் போர் என்ற அவருடைய போர்க்குணத்தை மட்டுப்படுத்தவே கோயில். ஐம்பது மூட்டை நெல் விளைந்தால் அதில் பாதியைப் பதுக்கும் பண்ணையாருக்கு உதவ வந்தது அல்ல கோயில். முழுவதையும் பதுக்காமல் காக்க வந்தது கோயில். மனிதர்கள் அடிப்படையில் சுயநலம் மிகுந்தவர்கள். சிலர் ராஜஸ குணம் மிகுந்தவர்கள். பலர் தாமஸ குணம் மிகுந்தவர்கள். அதாவது வேட்டை விலங்குகள் சில; வேட்டையாடப்படும் விலங்குகள் சில. இதுதானே இயற்கையிலும் இருக்கிறது? மனிதர்களிலும் அப்படியான இரு பிரிவே பிரதானமாக இருக்கிறது. சாத்விக குணம் என்ற ஒன்று விலங்குகளில் கிடையாது. மனிதர்களில் மட்டுமே உண்டு. அதுதான் ராஜஸ குணத்துக்குக் கடிவாளம் போடுகிறது. தாமச குணத்தைப் பேரழிவில் இருந்து பாதுகாக்கிறது. உத்வேகமூட்டிச் செயல்படவைக்கிறது. கோயில் இந்த மத்யஸ்தத்தின் பிரத்யக்ஷ ரூபம். கோயிலை மையமாகக் கொண்ட வாழ்வியல் என்பது அந்த இரு தரப்புகளை நடுநிலைப்படுத்தும் குணத்தின் விளைவாக உருவானது. கோயில் ஊரின் மையத்தில் இருக்கும்வரையில் அதன் வர்ணாஸ்ரம தர்மம் வலுவுடன் இருக்கும்வரையில், வேட்டை விலங்குகளும் வேட்டையாடப்படும் விலங்குகளுக்கும் இடையில் ஒரு சமநிலை நிலவும். அதிகாரத்தைப் பகிர்ந்துகொடுப்பதன் மூலம், இயற்கை வளங்களைப் பகிர்ந்துகொடுப்பதன் மூலம், வர்ண சமூகம் ஒரு சமநிலையை, பரஸ்பர ஒத்திசைவை உருவாக்கியிருக்கிறது…”
“ஆரம்ப இலக்கு அதுவாக இருந்திருக்கலாம். இன்று அது பிராமண வர்ணத்தின் ஆதிக்கமாக, க்ஷத்ரிய வர்ணத்தின் சர்வாதிகாரமாக, நாலாம் வர்ணத்தின் ஒடுக்குதலாக ஆகிவிட்டது. ஆசைகள் பெருகிப் போய் பாவங்கள் மலிந்த பூமியாகிவிட்டது. ஆசையை அழிக்காமல் பாவங்கள் மறையாது. பாவங்கள் செய்… பிராயச்சித்தம் செய்து காப்பாற்றுகிறேன் என்று சொல்வது தர்மமே அல்ல. அதர்மமே.”
“பாவம் செய் என்று சொல்லவில்லை. குறைவாகச் செய் என்று சொல்லியிருக்கிறார்கள். பாவம் செய்துவிட்டேனே என்று குற்ற உணர்ச்சியில் மன்னனும் வணிகனும் உடல் உழைப்பாளியும் முடங்கிவிட்டால், உலக இயக்கம் நின்றுவிடும். அதனால்தான் தான தர்மங்கள் செய்து பாவக் கணக்கை குறைத்துக்கொள் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த தானங்களைப் பெற்றுக் கொள்ளும்போது தருபவரின் பாவங்கள் பெற்றுக்கொள்பவரின் கணக்கில் சேர்க்கப்படுகிறது. அதைப் போக்கிக்கொள்ள யாக, யக்ஞம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். புலனடக்கம் விதித்திருக்கிறார்கள்…. அதிகாரத்தைப் பற்றிச் சொன்னீர்கள். எல்லா மன்னர்களும் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். ஆனால், பிராமணர் எந்த அதிகாரத்தையும் தனக்காகப் பயன்படுத்திக் கொள்ள மாட்டார். கூடாது. எல்லா வணிகர்களும் பிராமணருக்கு கட்டுப்பட்டவர்கள். ஆனால் பிராமணர் தேவைக்கு மேல் சேர்த்துவைத்துக் கொள்ளக் கூடாது. அவர் கஜானாவின் காவலர் போன்றவர். அவர் கட்டுப்பாட்டில்தான் பொக்கிஷங்கள் இருக்கும். ஆனால் அதில் ஒரு தங்கக்காசைக் கூட அவர் எடுத்துச் செல்லமுடியாது. கூடாது. தலையில் இருக்கும் மூளையின் கட்டுப்பாட்டில்தான் முழு உடம்பும் இருக்கும். ஆனால் அந்த மூளையோ, இதயம் சொல்வதை, ஆன்மா சொல்வதை, மனசாட்சி சொல்வதைக் கேட்டு நடக்கும். சமூகத்தின் அந்த மனசாட்சியாக தர்மமே இருக்கிறது. அதைக் கேட்டு தலை நடக்கும் வரையில் தலை சொல்வதைக் கேட்டு உடல் நடக்கும் வரையில் எந்தக் குழப்பமும் கஷ்டமும் வராது. வந்திருக்கவும் இல்லை.”
“நீங்கள் புனித நூல்களின் கோட்பாடுகளைப் பேசுகிறீர்கள். நடைமுறை அப்படி இல்லை என்பது உங்களுக்கே நன்கு தெரியும். நான்கு குதிரைகளும் நான்கு திசைகளில் இழுத்துச் செல்லும் தேர் போல் தறிகெட்டு ஓடுகிறது. இப்படித் தவறான திசையில் வேகமாக ஓடிச் செல்லும் தேரை நிறுத்தத்தான் போதிசத்துவர் துறவை அழுத்தமாக முன்வைத்தார். முதலில் பேயோட்டம் ஓடும் தேரை நிறுத்தியாக வேண்டும்.”
“இதிலும் தவறு செய்கிறீர்கள். வேகமாக ஓடும் தேரை நிறுத்துவதென்றால் மெள்ள மெள்ளத் தான் குதிரைகளை இறுக்கிப் பிடிக்க வேண்டும். ஒரேயடியாக நான்கு குதிரைகளையும் கழுத்தை நெரிப்பதுபோலப் பிடித்தால் குதிரைகள் மட்டுமல்ல, தேருமே குடைசாய்ந்து கவிழ்ந்துவிடும். புத்தர் முன்வைக்கும் அனைவருக்குமான துறவு என்பது அதைத்தான் செய்கிறது. அதனால்தான் அது மக்களிடையே செல்வாக்குப் பெறாமல் இயல்பாகவே அழிந்துவருகிறது…”
“புத்தனுக்கு அழிவில்லை. அவன் போதித்தவற்றுக்கும் அழிவில்லை.”
“கல்வெட்டில் செதுக்கப்பட்டவை காலத்தை வென்று நிற்கும் என்பது உண்மையே. கடைப்பிடிக்க யாரேனும் இருப்பார்களா என்று பார்த்தால்தான் உண்மை மதிப்பு புரியவரும். கைவிடப்பட்ட தேசத்திலும் கல்வெட்டுகள் அழியாமல்தான் இருக்கும். தோற்ற சாம்ராஜ்ஜியத்தின் சிதிலங்களாக எச்சங்களாக அது இருந்து கொள்ளட்டும். யாரும் அதை அழிக்கப் போவதில்லை; அழிக்கத் தேவையும் இல்லை.”
“சரி நாங்கள் சொல்லும் துறவறம் அதீத நிலை என்கிறீர்கள். வாதத்துக்காக ஒப்புக் கொள்கிறேன். நீவிர் காட்டும் வழி என்ன? லெளகீக சமநிலையும் ஆன்மிக சமநிலையும் உலகில் கொண்டுவருவது எப்படி? ஒரு கோயிலுக்குள் நுழையவே சிலருக்கு அனுமதி இல்லை என்று சொல்லும் நீங்கள் என்ன ஆன்மிகம் பற்றிப் பேசுகிறீர்கள்? நீங்கள் நம்பும் தெய்வத்தால் படைக்கப்பட்டவர்களை நீங்களே விலக்கி வைக்கிறீர்கள்.”
“விலக்கவெல்லாம் இல்லை. அவர்களுடைய தெய்வத்தை அவர்களுடைய முன்னோர்கள் கும்பிட்ட வழியில் கும்பிடுகிறார்கள். எங்கள் தெய்வத்தை எங்கள் முன்னோர்கள் கும்பிட்ட வழியில் கும்பிடுகிறோம். எல்லாரும் ஒரே புத்தரின் பின்னால் அணிவகுக்க வேண்டும் என்பது அல்ல ஆன்மிகச் சமநிலை. எல்லாரும் ஒரே கடவுளின் ஆலயத்துக்குள் வந்தாக வேண்டும் என்பது அல்ல சமத்துவம். சமநிலை என்பது ஒவ்வொரு குலத்தின் தெய்வ நம்பிக்கையை சமமாக மதிப்பது. ஒரு சிலர் தமது தெய்வத்துக்கு பூ, பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட விரும்பினால் அதையும் மதிக்க வேண்டும். ரத்த பலி கொடுத்துக் கும்பிட விரும்பினால் அதையும் அனுமதிக்க வேண்டும். மாமிசம் தவிர்க்க விரும்பினால் அதற்கும் இடம் தர வேண்டும். மாமிசம் புசிக்க விரும்பினால் அதற்கும் இடம் தர வேண்டும்.”
“அப்படியென்றால் பிற வழிமுறையை பாவம் என்று சொல்லிப் பழிப்பது தவறு தானே? எனக்கு தானம் கொடு… உன் பாவத்தைப் போக்குகிறேன் என்பது தவறு தானே? பொய் வாக்குறுதி தானே?”
“இல்லை. நாலு ஆட்டைக் கூடுதலாகச் சாப்பிட்டுக்கொள். எனக்கு தானம் கொடுத்துவிடு என்று யாரும் சொல்லவில்லை. பாவம் குறித்த சிந்தனையை ஊட்டத்தான் தானம் தரச் சொல்கிறோம். அதுதான் செய்வது பாவம் என்ற சிந்தனையை உருவாக்கும். பாவத்தைக் குறைக்க வழியை ஏற்படுத்தும். விரத நாட்களில் மாமிசம் சாப்பிடாதே என்று சொல்வதை, மீதி நாட்களில் சாப்பிடச் சொல்லும் போதனையாகப் புரிந்துகொள்வது தவறு. தினமும் தின்று கொண்டிருந்தவரை பாதி நாள் விரதம் என்று சொல்லித் தடுப்பதைத் தான் தர்ம சாஸ்திரங்கள் சொல்கின்றன. அரிச்சந்திரன் கதை எதற்காகச் சொல்லப்படுகிறது? என்ன கஷ்டம் வந்தாலும் சத்தியத்தையே பேச வேண்டும் என்பதை உணர்த்தத் தானே? உண்மையைப் பேசினால் கஷ்டம் வரும்; எனவே பொய் சொல்லிப் பிழைத்துக்கொள் என்று அந்த கதை சொல்வதாக யாரேனும் சொன்னால் வேடிக்கையாக இருக்காதா என்ன? நூறு தவறு செய்பவரை ஐம்பது தவறு செய்வராகத் திருத்துகின்றன தர்ம சாஸ்திரங்கள். அந்த ஐம்பதை அதுதான் செய்யவைக்கிறது என்று அதைப் பழித்தால், என்ன அர்த்தம்? புத்தர் துறவறத்தையும் புலனடக்கத்தையும் அனைவருக்கும் விதித்தார். உயரிய கொள்கைதான். ஆனால் நடைமுறை சாத்தியமில்லாதது. பின்பற்றப்படாத அதி உன்னத தெய்வக் கொள்கைகளைவிட, முடிந்த வரை குறைவாக மேற்கொள்ளப்படும் மனித குணங்கள் நல்லவைதான். இந்த அடிப்படையிலேயே வர்ண தர்மங்கள் ஒவ்வொரு வர்ணத்துக்கும் வகுக்கப்பட்டிருக்கின்றன. விதிவிலக்குகளுக்கு இடம் தரலாம். ஆனால் விதிகள் வலுவாக இறுக்கமாகவே இருந்தாக வேண்டும்.”
“ஐயா வைதிகரே… எங்கள் நந்தன் எந்த அளவுக்கு விதிகளுக்கு உட்பட்டு நடக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியுமே?” நந்தனின் ஊர்க்காரர்களின் கேள்வியில் அவர்களது பொறுமையிழப்பு புலப்பட்டது.
“ஆமாம். எம்மவர்களிடம் கூட இவ்வளவு பக்தி இருக்குமா என்று சந்தேகிக்கும் அளவுக்கான பக்தி இருக்கிறது. பக்தியை விடுங்கள்… பணிவும் தெளிவும் எவ்வளவு இருக்கிறது பாருங்கள்.”
தர்ம கீர்த்தி குறுக்கிடுகிறார்.
“எளியவர்களிடம் பக்தியும் பணிவும் என்றுமே குறைந்ததில்லை. நீங்கள் அதற்குப் பிரதியுபகாரமாகச் செய்பவைதான் சரியில்லை.”
“அப்படி என்ன குறை வைத்துவிட்டோம்?”
“சாமி…. அவர் பகவானைத் தரிசிக்கணும்னு ஆசைப்படறார். அதுக்கு அனுக்ரஹம் பண்ணலாம் இல்லையா..?”
“பண்ணலாம் தான். ஆனால் அதற்கு அந்த எம்பெருமான் சம்மதிக்க வேண்டுமே!”
“ஏதாவது வழி கேட்டால் அவர் சொல்ல மாட்டாரா? பக்தனுக்கு இறங்குவதைவிட அவருக்கு வேறு என்ன வேலை?”
“உலகைச் சுற்ற முடியவில்லையா… அம்மை அப்பனைச் சுற்றினால் போதும் என்பதுபோல ஏதேனும் குறுக்கு வழிகள் வைத்திருப்பீர்களே…?” தர்ம கீர்த்தி கிண்டலாகக் கேட்கிறார்.
“ஒரு வழி இருக்கிறது. குறுக்கு வழியல்ல… நேர்வழி.”
“என்னது அது?”
“இதே ஈஸ்வர சிந்தையுடன் ஏழு ஜென்மம் எடுத்து வந்தால் அது லபிக்கும்.”
“ஏழு ஜென்மமா?”
ஆமாம். நாலாம் வர்ண தம்பதிக்குப் பிறந்திருக்கிறான் நந்தன். இந்த ஜென்மாவில் கிடைத்த உடம்பை தூய்மைப்படுத்த வேண்டும். இந்த ஜென்மத்தில் ஈஸ்வர சிந்தையோடு இருந்தால் அடுத்ததாக நாலாம் வர்ணத் தாய்க்கும் வைஸ்ய தந்தைக்கும் மகனாகப் பிறப்பான். அந்தப் பிறவியிலும் இதே போல பக்தியுடன் இருந்தால், அதற்கு அடுத்த பிறவியில் வைஸ்யத் தாய்க்கும் வைஸ்யத் தந்தைக்கும் மகனாக ஜனிப்பான். அதிலும் தர்ம விதிகளைப் பின்பற்றினால் அதற்கு அடுத்ததாக வைஸ்யத் தாய்க்கும் க்ஷத்ரியத் தந்தைக்கும் மகனாகப் பிறப்பான். அந்த ஜென்மாவிலும் தர்ம வழியில் நடந்தால், க்ஷத்ரியத் தாய்க்கும் க்ஷத்ரியத் தந்தைக்கும் மகனாகப் பிறப்பான். அதன் பிறகு ஆறாம் ஜென்மாவில் க்ஷத்ரியத் தாய்க்கும் பிராமணத் தந்தைக்கும் ஜனித்து அதிலும் இதே கர்மங்களைச் செய்துவந்தால், கடைசியாக ஏழாம் ஜென்மாவில் பிராமணத் தாய்க்கும் பிராமணத் தந்தைக்கும் மகனாகப் பிறந்து வந்து எம் பெருமானை சேவிக்கலாம்…”
“நந்தன் இந்த ஜென்மத்திலேயே எம்பெருமானை சேவிக்க வழியே இல்லையா?”
“இருக்கிறது… ஏழு ஜென்மாவுக்கான அக்னிப் பிரவேசத்தை அவனுடைய தேகம் இந்த ஜென்மாவிலேயே செய்து தூய்மையாகிவிட்டால் எம்பெருமான் காட்சி தந்துடுவார்.”
“அது அவனால் முடியுமா?”
“அவனால் முடியாது. அவனுடைய பக்தியினால் முடியும்; உண்மை பக்தியாக இருந்தால்…!”
(தொடர்கிறது)
$$$
2 thoughts on “நந்தனார் சரிதம் – 4”