-பி.ஆர்.மகாதேவன்
“ஐயா… நீவிர் எத்தனைதான் குளம் வெட்டினாலும், அதில் நீவிர் குளிக்க முடியாது. என்னதான் கல் சுமந்து கோயில் கட்டினாலும் அதில் நீவிர் கால் பதிக்க முடியாது. குறுக்கே நிற்கும் நந்திகள் உம்மை எங்குமே கும்பிட விடாது.”
“ஆமாம்… இந்தப் பிறவியில் அது முடியாது. அதனாலென்ன?”

-2-
அவனருளாலே அவன் தாள் வணங்கி…
காய்ந்த புல்லால் வேயப்பட்ட வேளாண் குடிகளின் சிற்றில்கள் எந்தவொரு ஒழுங்குக்கும் கட்டுப்படாமல் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன. அக்ரஹாரத்தின் ஒழுங்கமைவுக்கு நேர் எதிர் வடிவமைப்பு. தனக்கானதொரு ஒழுங்குடன் தனித்தன்மையுடன் கட்டப்பட்ட இல்லங்கள்.
குஞ்சுகளைத் தாய்க்கோழி தன்னுடனே முற்றத்துள் சுழன்று கொண்டிருக்கும்படி பார்த்துக் கொண்டிருந்தது. உணவு தேடக் கற்றுக் கொடுப்பதோடு அவற்றைக் கழுகு முதலியவற்றினிடமிருந்து பாதுகாக்கவும் அதுதானே அதற்குத் தெரிந்த ஒரே வழி? தெரு மூலையில் ஆடு, மாடு முதலிய இறந்த பிராணிகளின் தோலினை வகிர்ந்து தோற்கருவிகளுக்கான வார்களாகக் கிழித்துப் பதமிட உலர வைத்திருந்தனர்.
புழுதியில் விழுந்து புரண்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இரும்பினால் செய்யப்பட்ட அணிகளை அணிந்து கொண்டிருந்தனர். காட்டேறிப் பேய்களை விரட்ட மந்திரித்துக் கட்டப்பட்டவை அவை. மருத மர நிழலில் வன் சிறுதோலின்மேல் உழத்தியர் தம் மகவைத் தூங்க வைத்திருந்தனர். மெல்லிய கொம்புகளையுடைய வஞ்சி மரங்களின் நிழலின் கீழ், பெட்டைக் கோழிகள் முட்டையிட ஒடுங்குதற்கு உதவும் பெரிய பானைகள் புதைக்கப்பட்டிருந்தன.
ஊரெல்லாம் சென்று நல்லது கெட்டதுகளைப் பறை சாற்ற உதவும் பறைகளை எலி, கறையான் அரிக்கா வண்ணம் தமது சிற்றில்களின் அருகில் உள்ள மாமரங்களின் கிளைகளில் தொங்க விட்டிருந்தனர்.
மிகுந்த வலிமையுடைய வேளாண் குலத்தினரை உழவுத் தொழிலைச் செய்யத் தொடங்கும்படி வைகறையில் கூவி எழுப்பும் கொண்டையினையுடைய சேவற்கோழிகள் அன்றைய கடமையைச் செய்து முடித்த நிம்மதியில் அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந்தன. அவை தங்கக்கூடிய, வாசனை பொருந்திய குளிர்ந்த கிளைகளையுடைய காஞ்சி மரத்தின் விரிந்த நிழலின் பக்கங்களில் எல்லாம், நெறித்த குழலினையுடைய மகளிர் நெல் குத்தியபடி பாடும் பாட்டுகேட்ட வண்ணம் இருந்தது.
பொய்கையினது பக்கங்களிலெல்லாம் பறவைகள் குளிர்ந்த நீரில் தம் குலத்தினருக்குக் குரல் எழுப்பியபடி ஆடிப் பறந்து கொண்டிருந்தன. நெற்கதிர்களைச் சூடிய புன்புலைச்சியர்கள், கள்ளினை உண்டு களியாட்டம் ஆடிக் கொண்டிருக்க, அதற்கிசைய பறைகளும் முழங்கிக் கொண்டிருந்தன. தமக்கு மானியமாகத் தரப்பட்ட வயல்களில் அன்றைய பணிகளைச் செய்து முடித்த நந்தன் ஊர் நடுவில் இருந்த ஆல மரத்தினடியில் வந்து அமர்ந்தான்.
இவ்வுலகில் வந்து பிறந்து தம்முடைய உணர்வு தெரியத் தொடங்கிய நாள் தொடங்கி, பிறையாகிய கண்ணிமாலையைச் சூடிய பெருந்தகையாம் சிவபெருமானிடத்து பெரும் பக்தி கொண்டு விளங்கினான். எனினும் பிறந்த குலத்துக்குரிய சிவதருமங்களைச் செய்யும் கொள்கையை உடையவராகியே சிவனடித் தொண்டின்வழியில் நிலைபெற்று நின்றபோதிலும் அவ்வப்போது அந்த எண்ணம் வந்து போகத்தான் செய்தது:
‘எம் பெருமானை எம் குலத்தால் ஏன் எட்டி நின்றே பார்க்க முடிகிறது? அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அண்மையில் இருந்து அருள் பாலிக்க வேண்டிய ஆடலரசனே எதற்கு இத்தனை தொலைவில் எம் குலத்தை நிறுத்திவைக்கிறார்?’
கூந்தலில் நெற்கதிரைச் சூடிக்கொண்டு, கள் அருந்திக் களித்திருந்த பெண்களில் சிலர் நந்தன் இருக்கும் இடத்துக்கு வருகிறார்கள்.
“ஐயா திருநாளைப் போவாரே… இந்தக் கள்ளில் புளிப்பு போதுமா என்று பார்த்துச் சொல்லுங்கள் கொஞ்சம்…”
“ஐயா… அங்கே ஒரு பாழடைந்த கோவில் இருக்கிறது… நாம் இருவரும் சேர்ந்து கொஞ்சம் உழவாரப் பணி செய்வோமா…?”
ஒருத்தி சொன்னதைக் கேட்டதும் மற்றவர்கள் சிரிக்கிறார்கள்.
“நாங்களும் வருகிறோமடி கள்ளி…”
நந்தன் அவர்களை அலட்சியமாகப் புன்னகைத்துப் புறமொதுக்குகிறான்.
“ஐயா… நீவிர் எத்தனைதான் குளம் வெட்டினாலும், அதில் நீவிர் குளிக்க முடியாது. என்னதான் கல் சுமந்து கோயில் கட்டினாலும் அதில் நீவிர் கால் பதிக்க முடியாது. குறுக்கே நிற்கும் நந்திகள் உம்மை எங்குமே கும்பிட விடாது.”
“ஆமாம்… இந்தப் பிறவியில் அது முடியாது. அதனாலென்ன?”
“அப்படியானால் ஏன் அதையே நினைத்து உழல்கிறீர்… ஊர் ஊராகச் சென்று ஆலயங்களில் உழவாரம் செய்து ஏன் வாழ்க்கையைத் தொலைக்கிறீர்?”
“நான் எங்கே தொலைக்கிறேன்? நீங்கள் தான் உண்டும், உறங்கியும் புணர்ந்தும், கள் அருந்தியும், மாமிசம் புசித்தும், அரிதினும் அரிதாகக் கிடைத்த வாழ்க்கையைத் தொலைத்து வருகிறீர்கள்.”
இதனிடையில் நந்தனின் கூட்டாளிகளும் வந்து சேர்கின்றனர். விறகுகள், சுள்ளிகளை அடுக்கி வைத்துப் பற்ற வைக்கின்றனர். அதைச் சுற்றிலும் அனைவரும் அமர்ந்து கொள்கின்றனர்.
நந்தன் இடுப்பில் இருந்து வெற்றிலையை எடுத்து காம்பு கிள்ளி எறிகிறான். கூட்டாளியிடம் பாக்கும் சுண்ணாம்பும் வாங்கி தடவிக் கொள்கிறான். அவர்கள் கலயங்களை நிரப்பிக் கொண்டு அமர்கிறார்கள்.
“நந்தனாரே… வாழ்க்கையை இப்படி வாழ்வாங்கு வாழ்வதற்குப் பெயரா தொலைப்பது? மோட்சம் என்றும் மறுபிறவி என்றும் இல்லாத கட்டுக் கதைகள் சொல்லிக் கொண்டிருந்தாலும் அதை நம்பிச் செயல்பட்டாலும்தான் வாழ்க்கை தொலைந்துபோகும். நம் குலம் வாழ்க்கையைக் கொண்டாட்டமாக வாழ்கிறது. நமக்கு இல்லாத குல தெய்வங்களா… நமக்கு இல்லாத கொண்டாட்டங்களா?”
“நான் இல்லை என்று சொல்லவில்லையே.”
“பின் எதற்காக நடனமாடும் ராசனை நினைத்து பித்துப் பிடித்தவர் போல அலைகிறீர். ஊர் ஊராகச் சென்று உழவாரப்பணி செய்கிறீர். கோபுர வாசலிலேயே நின்று கும்பிட்டுவிட்டுத் திரும்புகிறீர். மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம் நந்தா.”
“ஆடலரசன் என்னை மதிக்கத்தானே செய்கிறார்?”
“குறுக்கே நிற்கும் கோயில் மாடுகள் தடுக்கின்றனவே?”
“அவர்கள் தடுப்பதில் தவறொன்றும் இல்லையே. அவற்றை அங்கு அமரச் சொன்னதே அந்த எம்பெருமான் தானே. அது அவர்களுடைய கோயில். அங்கு அவர்கள் வைத்ததுதான் வேதம். அங்குமே கருவறைக்குள் ஒருவர் போகிறார். மற்றவர்கள் எல்லாம் வெளியில்தான் நிற்கிறார்கள். அவர்களில் யாருமே கருவறைக்குள் எம்மை விடவில்லை என்று கண்ணீர் மல்கவில்லையே. பிறைக்கண்ணிப் பெருந்தகைபாற் சிறந்தபெருங்காதல் மூண்டாலும் வருபிறப்பின் வழிவந்த அறம் புரிவதே அடியார்க்கு அழகு.”
“பெருந்தகைதான் எல்லாரையும் படைத்தான் என்கிறீர்கள். ஒருவரைத் தனக்கு அருகில் இருக்கும்படியாகப் படைத்துவிட்டு மற்றவரை விலகி நிற்கும்படியாகப் படைத்திருக்கிறாரா என்ன?”
“இல்லையே… நம் குல தெய்வங்கள் நமக்கு அருகில்தானே இருக்கின்றன. எந்தக் கடவுளையும் கும்பிடாதே என்று அவர்கள் தடுத்தால்தான் தவறு. என் கடவுளைக் கும்பிடாதே என்று அவர்கள் சொன்னால் எப்படித் தவறாகும்?”
“அந்தக் கடவுளும் எல்லாருக்குமாக இருந்தால் என்ன?”
“எதற்காக அப்படி இருக்க வேண்டும்? நம் குல தெய்வத்தை நாம் மட்டும் தானே கும்பிடுகிறோம். மற்றவருக்குமாக அது ஏன் இருக்க வேண்டும்?”
“ஏன் இருக்கக் கூடாது?அப்படியானால், சபாபதியைச் சென்று தரிசிக்க வேண்டும் என்று ஏன் துடிக்கிறீர்கள்? எப்போது கேட்டாலும் நாளைக்குப் போவேன் என்று சொல்கிறீர்கள். அவர்கள் உள்ளே விட மறுக்கிறார்கள். அதனால் போக முடியவில்லை. அவர்கள் தடுப்பது தவறுதானே என்று கேட்டால் இல்லை, அது சரிதான் என்கிறீர். உம்மைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.”
“இதில் புரிந்துகொள்ள என்ன குழப்பம்? என் சிந்தையெல்லாம் அந்த சிதம்பரனே நிறைந்திருக்கிறார். சின்னஞ்சிறு குழந்தை தன் கையில் இருக்கும் பொம்மையை யாரிடமும் தர மாட்டேன் என்று சொல்வதுபோல அவர்கள் அனுமதி தர மறுத்து அடம் பிடிக்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது? நானும் குழந்தைபோல அதைப் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறேன். அதிலும்தான் என்ன தவறு? இரு குழந்தைகள் ஒரு பொம்மைக்கு ஆசைப்பட்டால் இந்தச் சிக்கல் வரத் தானே செய்யும்?”
“நீவிர் என்ன உமக்கு சொந்தமாக்கிக் கொள்ளவா கேட்கிறீர்? சிறிது நேரம் கொஞ்சிவிட்டுத் தந்துவிடத்தானே போகிறீர்?”
“அதை நினைத்துத்தான் அஞ்சுகிறார்கள். இன்று ஒரு நொடி தரிசனம் செய்ய அனுமதி தாருங்கள் என்று கேட்கிறான். நாளை ஒரு மணிநேரம் கோயிலுக்குள் இருந்து கொள்கிறேன் என்பான். அதற்கு அடுத்த முறை, ஒரு நாள் என்பான்… நாள் வாரமாகும். வாரம் மாதமாகும். இப்படியே போய்க்கொண்டே இருக்கும். அது மட்டுமா, இன்று அருகில் நின்று ஆசை ஆசையாகக் கும்பிட்டுக் கொள்கிறேன் என்று சொல்பவன் நாளை அர்ச்சனை செய்கிறேன் என்பான், அபிஷேகம் செய்கிறேன் என்பான் என்ற அச்சம்தான் காரணம்.”
“இல்லை என்று எடுத்துச் சொல்லலாமே?”
“நான் ஒருவன் சொன்னால் போதுமா? நம் குலமே சென்று சொல்ல வேண்டும்.”
“எங்களுக்கு எதற்கு அந்த வீண் வேலை?”
“நல்லது. அதனால்தான் நானும் சொல்கிறேன். நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். நானும் எதையும் மாற்றிக் கொள்ளவும் வேண்டாம். என் பக்தியினால் நான் எம்பெருமானைப் பார்த்தே ஆக வேண்டும் என்று துடிக்கிறேன். அவர்களுடைய பக்தியினால் அவர்கள் அதைத் தடுக்கிறார்கள். யார் மீதும் எந்தத் தவறும் இல்லை. அந்த சித்திர சபை நாதன் சித்தம் எதுவோ, அதுவே நடக்கட்டும். என்றைக்கு என் பக்தி கண்டு மெச்சி அவர், என்னைத் தடுக்கும் நந்தியைத் தள்ளி நிற்கச் சொல்கிறாரோ அன்று தரிசனம் கிடைக்கட்டும். அதுவரை நான் என் உழவாரப் பணியை நிறுத்தப் போவதில்லை. அவர்கள் என்னை உள்ளே அனுமதிக்கவும் தேவையில்லை. அவனருளாலே அவன் தாள் வணங்குகிறேன். அவன் அருள் கிடைக்கும்போது அவன் அருகில் சென்று சேர்வேன்.”
“நீவிர் அப்படி அங்கு சென்று சென்று நிற்பதும், அவர்கள் தள்ளித் தள்ளிவிடுவதும் நம் குலத்துக்கு அவமானமாக இருக்கின்றன நந்தா!”
“எதற்காக அவமானப்பட வேண்டும்? நம் குலத்தில் ஒருவன் குல தெய்வத்தோடு குல தெய்வங்களுக்கெல்லாம் குல தெய்வமான கூத்தனையும் கும்பிடத் துடிக்கிறான் என்று பெருமை கொள்ளுங்கள். பக்தி போதை தலைக்கேறித் திரிகிறான் என்று பெருமிதப்படுங்கள். தர்ம சாஸ்திரங்கள் அனுமதிக்கும் எல்லையில் நின்று வழிபடுவதில் பெருமிதமே இருக்கிறது. விதிகளை மீறுவதில் அல்ல; உட்பட்டு நடப்பதிலேயே நிம்மதி இருக்கிறது. தடுக்கிறவர்களும் பக்தியினாலேயே தடுக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். இதில் எந்த வேதனையும் இல்லை. அவமானமும் இல்லை. என் எல்லை எனக்கு நன்கு தெரியும். அவர்கள் இடமும் தெரியும்.”
“இல்லை… உம்மை, நம்மை இழிவாகக் கருதுகிறார்கள். அதனால்தான் உள்ளே அனுமதிப்பதில்லை.”
“இழிவாகக் கருதுகிறார்களா? அப்படியானால் நம்மையும் கோயில் பணிக்குச் சேர்த்துக் கொள்கிறார்களே, அது எப்படி?”
“அதுதான் நாமெல்லாம் தீட்டு என்று சொல்லி நம் கை பட்ட அனைத்தையும் நீர் தெளித்து தூய்மைப்படுத்திய பின்னர்தானே எடுத்துக் கொள்கிறார்கள்? நம் கால் பட்ட இடங்களையும் பூர்ண கும்ப நீர் தெளித்து புனிதப்படுத்திக் கொள்கிறார்களே?”
“ஆமாம். அவர்களைப்போல நாம் தீட்டு, ஆசாரங்கள் பார்ப்பதில்லையே. அதுதான் காரணம். அதைப் போய் நம்மை இழிவாகப் பார்ப்பதாகவும் வெறுப்பதாகவும் சொல்வானேன்?”
“வெறுப்பு இருப்பது உண்மைதான்.… நாம் பசு மாமிசம் உண்கிறோம் அல்லவா?”
“அது ஒரு நியாயமான காரணம்தானே?”
எரியும் நெருப்பில் மேலும் சுள்ளிகளைப் போடுகிறான் நந்தன். தீ கொளுந்துவிட்டு எரிகிறது. அனைவர் முகமும் கனலில் ஜொலிக்கிறது.
“அதெப்படி… அப்படியே அது ஒரு காரணமென்றால் நம்மவர்களில் பசுவைச் சாப்பிடாதவர்களை அனுமதிக்கலாமே? நீவிர் அதற்கு தயாராக இல்லையா என்ன?”
“அதெப்படி… நான் ஒருவன் மட்டும் அப்படிச் சொன்னால் போதுமா? என் மனைவி, மகன், தாய் தந்தை எல்லாரும் சொல்ல வேண்டும். வீட்டில் அவர்கள் சாப்பிட்டு, நான் மட்டும் சாப்பிடாமல் இருக்கிறேன் என்று சொன்னால் யார் நம்புவார்கள்? என் குடும்பம் மட்டுமா, நம் குலம் முழுவதுமே அப்படிச் சொல்ல வேண்டும். அப்போதுதான் அது உண்மையானதென நம்ப முடியும். வருகிறீர்களா, சேர்ந்து போய்ச் சொல்வோம்!”
“நாங்கள் எந்த மாமிசத்தையும் விடத் தயாரில்லை. கொன்றால் பாவம் தின்றால் போச்சு.”
“நல்லது. உங்களுக்காக உண்மை புரிய வரும்போது விட்டுவிட்டு வாருங்கள். அதோடு நான் சிறு வயதில் பசு மாமிசம் சாப்பிட்டிருக்கக் கூடும். அப்படியென்றால் இந்தப் பிறவியில் இந்த உடம்பு அசுத்தப்பட்டு விட்டது. எனவே இந்தப் பிறவியில்தான் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்க வாய்ப்பு இல்லை. எவ்வளவுதான் பக்தியுடன் இருந்தாலும் இந்தப் பிறவியில் என் லட்சியத்தை அடையவும் முடியாது. இந்தப் பிறவியில் இப்படித்தான் என்று முயற்சியைக் கைவிடவும் முடியாது. இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிப்பதே என் இந்தப் பிறவிக்கான விதி.”
“விதி என்று எல்லாம் எதுவும் கிடையாது. எல்லாம் பொய் புரட்டு. இறைவன் எழுதினது இல்லை. இறைவன் பேரில் இவர்கள் எழுதியவை.”
“மனுஷன் உருவாக்கியதாக வைத்துக்கொண்டாலும் தெய்வத்துக்காக உருவாக்கியவை. தெய்வ நிலையை லட்சியமாக வைத்து உருவாக்கியவை. அதனால் தெய்வமே உருவாக்கிய மாதிரிதான்.”
“அப்படி இல்லை… தெய்வ நிலை என்றால் எல்லாரையும் சமமாகப் பார்க்க வேண்டும்.”
“இல்லை… தெய்வம் எல்லாரையும் சமமாகப் படைக்கவில்லை. பசுவுக்கு கனத்த மடி… குதிரைக்கு வலுவான கால்… யானைக்கு பருமனான உடல்… நாய்க்கு மோப்ப சக்தி… மயிலுக்குத் தோகை… எங்கே சமம் இருக்கிறது? ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக இருக்கிறதே தவிர, ஒவ்வொன்றும் உயர்வு தாழ்வாக இல்லை. இருப்பதை வைத்து என்ன செய்ய முடியுமோ அதைச் செய் என்பதுதான் இயற்கையாக இறைவன் வகுத்த விதி. யானைக்குத் தோகை இல்லாததால் எதை இழந்துவிட்டது? பூனைக்குத் தும்பிக்கை இல்லாததால் எதை இழந்துவிட்டது? எல்லாரிடம் இருப்பதும் எல்லாருக்கும் கிடைத்தால்தான் சமத்துவமா? எல்லாருக்கும் ஏதாவது ஒன்று இருந்தாலும் சமத்துவமே. யாரும் கைவிடப்படவும் இல்லை; யாரும் கட்டி அணைத்துக் கொள்ளப்படவும் இல்லை.”
“நமக்கு நிலம் இல்லை…”
“கூரையில் படர்கிறது சுரக்காய்… வேலியில் படர்ந்திருக்கிறது கோவைக்காய்… நிலத்தோடு பிணைக்கப்பட்டவனுக்கு அந்த நிலம் மட்டுமே சொந்தம். அல்லாதவனுக்கு இந்த அகிலமே சொந்தம். ஊரில் ஒரு காணி சொந்த நிலம் உள்ளவனுக்கு அது மட்டுமே வருமானம். இல்லாதவனுக்கு ஊர் நிலம் முழுவதிலிருந்தும் வருமானம்.”
“வெள்ளம், வறட்சி வந்தால் முதல் பலி நாம் தான்.”
“வீடுகளை சற்று மேடாகக் கட்டிக்கொள்வது நம்மிடம் தான் இருக்கிறது. வெள்ளம், வறட்சி என்றால் இந்த ஆலயக் குதிர்கள்தான் நமக்கும் திறந்துவிடப்படுகின்றன.”
“நாம் செய்யும் தொழில்கள் கடினமானவை.”
“எந்தத் தொழில்தான் எளிது?”
“பண்ணையார் கால் மேல் கால் போட்டபடி மர நிழலில் உட்கார்ந்திருக்கிறார். நம் ஜனங்கள் இடுப்பு ஒடிய வயலில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. செட்டியார் திண்ணையில் புரள்கிறார். நாம் புழுதியில் புரள வேண்டியிருக்கிறது. பார்ப்பான் பூ கிள்ளிப் போட்டு பூஜை செய்து மணியாட்டிப் பிழைக்கிறான். நாம் மண்ணில் புரண்டு மாரடிக்க வேண்டியிருக்கிறது. அரைப்படி நெல் அதிகம் கொடு என்று கேட்க முடியவில்லை. அதோடு நம்மைப்போல ஒதுக்கப்படுபவர்களின் தொழில்கள் இழிவானதாக இருக்கின்றன. தீட்டுத் துணிகள் அலசச் சொல்கிறார்கள். அக்குள் ரோமம் மழிக்கச் சொல்கிறார்கள். அறுவைச் சிகிச்சை செய்யச் சொல்கிறார்கள். பிரசவம் பார்க்கச் சொல்கிறார்கள். இறந்த உடலை எரியூட்டச் சொல்கிறார்கள். அழுகிய உடல்களை எடுத்துச் செல்லச் சொல்கிறார்கள். அக்ரஹாரத்துக்குள்ளும் பிற ஆண்டைகளின் தெருக்களுக்குள்ளும் நுழையவிட மாட்டேன் என்கிறார்கள்….”
“உங்கள் பிரச்னை என்ன..? கடின வேலை எதுவும் செய்யாமல் பண்ணையார்போல செளகரியமாக வாழ வேண்டுமா..? அரைப்படி நெல் கூடுதல் கிடைக்க வேண்டுமா? இழிவான வேலைகள் செய்யாமல் இருக்க வேண்டுமா? ஆலயத்துக்குள் நுழைய வேண்டுமா?”
“எல்லாம்தான் வேண்டும்.”
“நான் ஆலயத்துக்குள் போகாமல் வாசலிலேயே நின்று திரும்புவதும் அவர்கள் திருப்பி அனுப்புவதும்தான் உங்களுக்கு அவமானமாக இருப்பதாகச் சொன்னீர்களே… பண்ணையார்போல நாமும் காலாட்ட வேண்டும் என்று அவருக்கு அருகில் போய் என்றைக்கேனும் உட்கார்ந்திருக்கிறீர்களா?”
“தோலை உரித்துவிடுவார்.”
“அரைப்படி நெல் கூடுதலாகக் கொடு என்று சண்டை பிடித்திருக்கிறீர்களா?”
“எப்படி முடியும்?”
“தீட்டுத் துணி அலச மாட்டேன் என்று சொன்னீர்களா?”
“இல்லைதான்.”
“இறந்த விலங்கை அப்புறப்படுத்த மாட்டேன்; அதைத் தின்ன மாட்டேன் என்று சொன்னீர்களா?”
“இல்லை.”
“இவையெல்லாம் யாராலாவது செய்யப்பட வேண்டிய வேலைகள் தானே?”
“நாம் மட்டுமே ஏன் செய்ய வேண்டும்?”
“பின் யாரைச் செய்யச் சொல்ல வேண்டும்? மன்னர் பெருமானையா?”
“அவர் எப்படிச் செய்வார்?”
“தளபதி, மந்திரி பிரதானிகளையா?”
“அவர்கள் எப்படிச் செய்வார்கள்?”
“பெரு வணிகர்களையா?”
“அவர்கள் வியாபாரம் செய்ய வேண்டாமா?”
“பண்ணையார்களையா? தலையாரிகளையா?”
“ஊர் நிர்வாகம் செய்ய வேண்டாமா?”
“சிற்பிகளையா? ஆசாரிகளையா?”
“சிலைகள் செய்ய வேண்டாமா அவர்கள்?”
“கப்பல் கட்டுபவர்களையா… போர்க்கருவிகள் செய்பவர்களையா?”
“அந்தப் பணிகளை அப்படியானால் யார் செய்வார்கள்?”
“ நாவிதரின் வேலையை வெட்டியார் செய்வாரா?”
“மாட்டார்.”
“தீட்டுத்துணி அலச தோல் தொழிலாளர் முன்னால் வருவாரா?”
“மாட்டார்.”
“ஆக ஆளாளுக்கு ஒவ்வொரு வேலைகள் இருக்கின்றன. அவரவர் வேலைகளை அவரவர் பார்த்தாக வேண்டும். அப்படித்தானே?”
“ஆமாம்.”
“இப்போது சொல்லுங்கள்… நீங்கள் சொன்ன வேலைகளை நீங்கள் செய்யாமல் யார் செய்வது? யார் எதைச் செய்ய விடாமல் தடுக்கிறார்கள்? இந்த வேலைகளை அந்தந்த குலத்தின் முன்னோர்கள் ஏன் செய்ய முன்வந்தார்கள் என்று தெரியுமா?”
“இதை யார் விரும்பிச் செய்திருப்பார்கள்? மிரட்டித்தான் செய்ய வைத்திருப்பார்கள். அப்பறம் வேறு வழியில்லையென்று அதையே செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும்.”
“காடு திறந்தே கிடந்தது… கடல் விரிந்தே கிடந்தது… மலை உயர்ந்தே நின்றது.”
“வண்டியில் பூட்டப்பட்ட மாடுகள் தப்பிச் செல்வது சாத்தியமில்லை. சுமை ஏற்றப்பட்ட கழுதைகள் பொதியை இறக்கிவிட்டு ஓட முடிவதில்லை…”
“விஷயம் அது அல்ல; அப்படி இருந்திருந்தால் தனி மனிதருக்கு அல்லது குலத்துக்கு அல்லது நாலைந்து குலங்கள் ஒன்று சேர்ந்து தப்பித்திருக்கலாம். பொதி கழுதைக்கு வண்டி மாட்டுடன் கூட்டணி அமைக்க முடியாது. வண்ணாருக்கு நாவிதருடன் கூட்டு வைக்க முடியாதா என்ன?”
“அப்படியான ஒற்றுமை இல்லாதது தானே பிரச்னை? ஆவினங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்திருந்தால் சிங்கத்தை விரட்டியிருக்க முடியும்தான். ஆனால் நடக்கவில்லையே. அதற்கு ஆவினங்கள் மீதா பழி போடுவது?”
“யார் பழி போட்டார்கள்? சொல்ல வந்தது என்னவென்றால், தப்பி ஓட நினைத்தார்கள்; முடியவில்லை என்று சொல்கிறீர்கள். தப்பி ஓட வேண்டிய அவசியமோ சிந்தனையோ இருந்திருக்கவில்லை என்று சொல்கிறேன்.”
“அதெப்படி?”
“விவசாயக் கூலியாக இருந்தால் நாளொன்றுக்கு ஐந்தாறு மணி நேரம் வேலை செய்தாக வேண்டியிருக்கும். வெட்டியானென்றால் வாரத்துக்கு ஒரு நாள், மாதத்துக்கு ஒரு நாள் வேலை செய்தால் போதும். தூய்மையான வேலையை அதிக நேரம் செய்வதைவிட, தூய்மையற்ற வேலையை குறைந்த நேரம் செய்வது நல்லது என்று முடிவு செய்திருக்கலாம். கிடைத்த ஓய்வு நேரங்களை ஆடிப் பாடிக் கொண்டாட முடிவெடுத்திருக்கலாம்…”
“ஆக இழிவான வேலையை ஒருவர் விரும்பியே தேர்ந்தெடுத்திருக்கிறார் என்கிறீர்கள்.”
“அப்படியும் இருக்கலாம்; நம் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாகச் செய்துவந்திருப்பதால், வேறு என்ன காரணமாக இருக்கும் என்று யோசிக்கிறேன். நான் ஒன்று கேட்கிறேன் நம் புலைப்பாடியில் வளர்க்கப்படும் நாய்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
“ஏன் கேட்கிறீர்கள்?”
“சொல்லுங்கள்.”
“நன்றியுள்ளவை.”
“அப்பறம்…?”
“நம் மீது மிகுந்த பாசம் கொண்டவை. நம்மைக் கண்டால் குழைந்து வாலாட்டும்.”
“அப்பறம்…?”
“பணிவு கொண்டவை.”
“அப்பறம்…?”
“நாம் சொல்வதைக் கேட்டு நடக்கும்.”
“அப்பறம்…?”
“நம் வீட்டு வாசலில் கிடக்கும். வாசல் தாண்டி உள்ளே நுழையாது.”
“அப்பறம்…?”
“நம் தெருக்களை இரவில் கண் விழித்துக் காவல் காக்கும்.”
“அப்பறம்…?”
“புதிதாக யாரேனும் வந்தால் குரைத்துக் குரல் கொடுத்து நம்மை எச்சரிக்கும்.”
“அப்பறம்…?”
“நாம் கொடுப்பதை வாங்கிச் சாப்பிடும்.”
“ஆக அவை மிகவும் சந்தோஷமாக இருக்கின்றன. அப்படித்தானே?”
“ஆமாம் அதில் என்ன சந்தேகம். உண்டு உறங்கி, நம் குழந்தைகளுடன் விளையாடிப் பல்கிப் பெருகுகின்றன.”
“அவை ஒரு காலத்தில் காட்டில் சுதந்தரமாகத் திரிந்தவை தானே?”
“ஆனால், இப்போது வளர்ப்பு மிருகங்களாகிவிட்டன.”
“காட்டில் திரிந்த காலமா… வளர்ப்பு மிருகமான காலமா, எப்போது அவை அதிக சந்தோஷத்துடன் இருந்திருக்கும்?”
அந்தக் கேள்வியை நந்தன் கேட்டதும் பதிலற்றுப் போகிறது.
“சொல்லுங்கள்… நாம் வளர்க்கும் நாய்கள் சந்தோஷமாக இருக்கின்றனவா இல்லையா?”
“இந்த நாயைப் போலத்தான் நாமும் வாழ்கிறோம். அதனால் நாமும் சந்தோஷமாக இருப்பதாகச் சொல்கிறீர்களா? அவர்கள் நம்மை நாயைப் போல் நடத்துகிறார்கள் என்பது உண்மை. ஆனால் நாம் நிம்மதியாக இருப்பதாக அர்த்தமா என்ன..?”
நந்தன் அவர்கள் கையில் இருக்கும் கள் கலசங்களைப் பார்த்து மெள்ளப் புன்னகைக்கிறார்.
(தொடர்கிறது)
$$$
2 thoughts on “நந்தனார் சரிதம் – 2”