-பி.ஆர்.மகாதேவன்
திருநாளைப்போவார் புராணத்தை புதிய நடையில் வழங்கி இருக்கிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன். கற்பனை மிகுந்த இனிய வர்ணனைகளும், நீதி உணர்ச்சி மிகுந்த மனதின் தர்க்கங்களும் நிறைந்த இந்த குறும்புதினம், சமூக ஒருமைப்பாட்டுக்கான புதிய முயற்சி…

-1-
பேரிகையின் விம்மல்
யாக குண்டத்தில் சமித்தை பக்தியுடன் வைப்பதுபோல, பேரிகையின் முகத் தோலை விறைப்பு கொள்ளவைக்க எரிந்துகொண்டிருந்த நெருப்பில் இன்னொரு சுள்ளியை எடுத்துவைத்தான் நந்தன். செய்யும் தொழிலை தெய்வமெனத் துதித்துச் செய்ததால் அக்னியும் யாக குண்ட தேவனைப் போலவே கொளுந்துவிட்டு எரிந்தது. முகத்தோலும், வாரும் சூடேற்றப்பட்டு இறுக்கிக் கட்டப்பட்டன.
சற்றுத் தொலையில் நெல் குத்தும் களைப்பு தெரியாமலிருக்கவும் பாடல் மீதான ரசனையினாலும் சாம்பவ குலப் பெண்கள் பாடிக் கொண்டிருந்தனர். கூரைகளில் சுரைக்கொடி படர்ந்த குடிசைகளுக்குள் சிறு மென் குரைப்புடன் இருந்த நாய்க்குட்டிகளைச் சிறுவர்கள் விளையாட அள்ளி அணைத்து எடுத்துச் சென்றனர். குட்டிகளின் மெல்லிய குரைப்பொலியைக் கேட்க முடியாதபடி சிறுவர்களின் இடையில் கட்டிய மணிகளின் ஒலிகள் அழுத்தின. அரைத் தூக்கத்தில் இருந்த அம்மா நாய் தான் ஈன்ற குழந்தைகளுக்கு தான் ஈனாமல் கிடைத்த சகோதரர்களை கண்களில் தாய்மை மின்ன பாதிக் கண் திறந்து பார்த்துகொண்டு படுத்திருந்தது.
நந்தன் பேரிகையை வார் கட்டி முடித்து எழுந்தான். விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன் பேரிகையை ஆசையுடன் சென்று கொட்டிப் பார்க்கப் போனான்.
‘அம்பலத்தாடும் அரசனுக்கு முன்னால் அவனுடைய எல்லையில்லா பெரு நடனத்துக்காகவே முழங்க வேண்டிய பேரிகை இது. இதில் ஆதி முதல் அந்தம் வரை அந்தக் கூத்தனுக்கான தாளங்கள் மட்டுமே ஒலிக்க வேண்டும்’ என்று செல்லமாகக் கடிந்து கொண்டான் நந்தன்.
நந்தனின் மகன் அருகில் வந்து, “அப்பா… நீ அந்த ஆடலைப் பார்த்திருக்கியா அப்பா…?” என்றான்.
“இல்லையே ராசா…”
“ஏன்ப்பா… கோயிலுக்குள்ள உன்னையை உள்ள விட மாட்டாங்களா அப்பா..?”
அந்தக் கேள்வியைக் கேட்டதும் நந்தனின் கண்களில் சட்டென்று சோகம் கோர்த்து நின்றது.
“நீ பேரிகைப் பறை அடிச்சு அந்த தெய்வம் ஆடினதைப் பாத்ததில்லையா அப்பா…?”
நந்தன் தன் குழந்தையின் தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தபடியே பெருமூச்செறிந்து சொன்னான்: “பேரிகைகள் செய்து கொடுப்பதும் யாழுக்கும் வீணைக்கும் தந்திரி கட்டிக் கொடுப்பதும்தான் இந்தப் பிறவியில் நமக்கு அந்த ஈசன் தந்திருக்கும் வேலை மகனே…”
“அது எப்படிப்பா… நாம செஞ்ச பேரிகையையும் யாழையும் நாமளே கோயிலுக்குள்ள போய் இசைக்க முடியாதா… கூடாதா?” சிறுவன் கேள்வி கேட்டபடியே, பேரிகையில் தன் சிறு விரலால் தட்டுகிறான்.
அந்த ஒற்றைத் தட்டல் ஒலியைக் கேட்டதும், நந்தனின் உடல் முடிவற்று அதிரத் தொடங்குகிறது. அந்த அம்பலத்தரசனே அந்தப் பேரிகையாகவும் இருப்பதாக பாவித்து, பேரிகையை விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்கிறான்.
பையனை அப்பால் போகச் சொல்லிவிட்டு, சந்தனக் குழம்புடன் கரைத்து அபிஷேகம் செய்வதற்கான கோ ரோசனையையும் பேரிகையையும் யாழையும் எடுத்துக் கொண்டு விடுவிடுவென கோயிலை நோக்கி விரைகிறான்.
வழியில் கொள்ளிட நதி பாய்ந்து கொண்டிருக்கிறது. இரு மருங்கும் இருந்த தென்னை மரங்களின் உச்சியில் இருந்த குலைகள் மீது ஆற்று மீன்கள் குதித்து மோதுகின்றன. செல்லமாகக் கடிந்துகொள்ளும் விதமாக குலை தேங்காயில் ஒன்று வாளை மீனை அழுத்தியபடி அருகில் இருந்த வயலின் சேற்றுக்குள் புதைக்கிறது. தென்னை நெற்றுக்கள் அவ்வாறு வேகமாக விழும்போது பக்கத்திலிருந்த பலாவின் அடியில் பழுத்திருந்த முதிர்ந்த கனியின்மீது மோதி வீழ்ந்தன; பலாப்பழம் கிழிந்து சாறு பொழிந்தது; அதனால் இறுகியிருந்த சேறு சிறிது சிறிதாக இளக்கமடையவே, சேற்றினுள் புதைத்து மேலழுத்தி நின்ற நெற்று மிதக்கத் தொடங்கியது. புதைந்த வாளை அந்த நீத்தத்தின் உதவியால் எழுந்து மேற்கிளம்பிக் குதிக்கிறது.
நந்தன் மனதில் தில்லையம்பதியைச் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இந்த வாளை மீன்களைப் போல் மேலெழுந்து மேலெழுந்து துள்ளிப் பாய்ந்து கொண்டிருந்தது. ஜாதி சமூக வரையறைகள் தொடர்பான நந்தனின் சிந்தனைகள் தென்னங்குலைகள் போல் விழுந்து விழுந்து, அதை அந்த மீன் பிறந்து வளர்ந்து உழன்ற நீர்நிலைக்குள் தள்ளிக் கொண்டிருந்தன. நந்தன் மனதில் இருந்த பக்தியோ, பலாவின் தேன் சாறாகப் பொழிந்து சேற்றை இடைவிடாமல் இளகச் செய்த வண்ணமும் இருந்தது. மீண்டும் வாளை மீன்கள் தன் எல்லை தாண்டிக் குதிக்க ஆரம்பித்தன.
புறப்பட்ட கடல் நோக்கிப் பாய்ந்தோடிய நதியின் மேற்பரப்பு முடிவற்று வீசும் காற்றினால் மேலும் கீழும் அலையடித்து அடி ஆழத்தில் இருந்த பொன் மணிகளையெல்லாம் அள்ளிக்கொண்டு வந்தது. நதிக் கரையில் இரு மருங்கில் வளர்ந்து நின்ற சிவந்த தாமரை மலர்க்கரங்கள் அந்த மணிகளை ஏந்திக் கொள்வதுபோல் நீரலைகள் கொண்டு சேர்ந்தன. தன் பக்தியின் பொன் மணிகளை வேத முதல்வனின் மூவாயிர மலர்க் கரங்கள் இதுபோல் ஏந்திக் கொள்ளும் நாள் எந்நாளோ என்று ஏங்கியபடியே நந்தன் ஆலயம் நோக்கி விரைந்தான்.
தன் மக்கள் சேர்ந்து வாழும் சேரிப்பகுதியில் இருந்து புறப்பட்டு இந்த நதிக்கரை வழியான சிறு பயணத்தின் இலக்காக நிற்கும் ஆலயத்தைச் சென்று சேர்வது நந்தனுக்கு மிகவும் பிடித்த விஷயம். இந்தப் பாதையில் எத்தனையோ தடவை போனது போலவும் ஒவ்வொரு முறையும் புதிதாகப் போவது போலவும் அவனுக்குள் உணர்வுகள் அந்த நதியைவிட அதிகம் அலையடித்துக் கொண்டிருந்தன. இலக்கு மட்டுமல்ல; பயணமுமே பேரானந்தமாக இருந்தது.
கோபுரத்தைத் தொலைவில் கண்டதுமே கைகள் தானாகக் குவிந்து மேலெழுந்தன. கும்பிட்ட நிலையிலேயே ‘நந்தன் வந்திருக்கேன் சாமி’ என்று உரத்த குரலில் சொல்லியபடியே சென்றான்.
அவன் வரும் வேகத்தைப் பார்த்தால் அப்படியே ஆலயத்துக்குள் மட்டுமல்ல; சந்திர சூரியர் உள்ளவரையும் இவ்விடம் நின்று அருள் பாலிப்பேன் என்று அருள் வாக்கு தந்த ஆடவல்லான் அரு உருவமாக இருக்கும் கருவறைக்குள்ளேயே சென்றுவிடுவான் போலிருந்தது. ஆனால், தனது எல்லையை நன்கு உணர்ந்தவன் என்பதால் அதைத் தாண்டி ஓர் அடிகூட எடுத்துவைக்க மாட்டான் என்பது திடமாகத் தெரிந்திருந்த சிவாச்சார்யர், அவன் வந்தது தெரிந்த பின்னரும் தன் பணிகளை முடித்துவிட்டு மெதுவாக வந்து சேர்ந்தார்.
‘நந்தன் வந்திருக்கேன் சாமி’ என்று சொன்னவன் வாசலில் நின்றே நர்த்தனமாடவும் தொடங்கியிருந்தான். பேரிகையைக் கண்டாலே துடிக்கும் கால்கள் கொண்டவன். கோபுரம் கண்டால் கேட்கவும் வேண்டுமா? அந்த ஆடலுக்கு அரசனே அவருக்குள் வந்து ஆடுவதுபோல, அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, உடம்பிலும் உணர்விலும் அவனாகவே நிரம்பி ஆடிக் கொண்டிருந்தான்.
அவன் தன் ஆன்மாவைத் தோலாக்கி உருவாக்கிய பேரிகை, எலும்பை தந்திரியாக இழைத்துச் செய்த யாழ், அன்போடு உருகி அகம் குழைந்து எடுத்துக் கொண்டுவந்த கோரோசனை ஆகியவை அங்கு வைக்கப்பட்டிருந்தன. நந்தனின் ஆடலும் பாடலும் முடியும்வரை அருகில் நின்று ரசித்த அர்ச்சகர், அவன் கொண்டுவந்தவற்றின் மீது நீர் தெளித்து புனிதப்படுத்தி எடுத்துச் சென்றார். நந்தனுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது.
தான் செய்த பொருட்கள் நாளை முதல் அம்பலத்தரசனுக்கு அர்ப்பணிக்கப்படப் போகின்றன. அருகில் இருந்து அவனுடைய அருளைப் பெறப் போகின்றன. அவனுக்கு அருகில் செல்லப் போகின்றன. மிக அருகில்… மிக மிக அருகில்… தன்னால் செல்ல முடியாத அளவுக்கான அருகில்… தான் உருவாக்கியவை போகப் போகின்றன. தான் போக முடியாவிட்டால் என்ன… தன் ஆன்மாவும் உள்ளன்பும் ஆடலரசனுக்கு அருகில் செல்லப் போகின்றன.
மலர்ச் செடிகள் நந்தவனத்தில்தான் இருக்க வேண்டும்; இருக்க முடியும். அடி ஆழத்துக்குள் வேர் செலுத்தி ஆகாயம் முழுவதும் கிளை பரப்பி காற்றை உட்கொண்டு, நீரைப் பருகி, ஒளியை உள்வாங்கி உள்ளார்ந்த உயிர்மம் கொண்டு ஒவ்வொரு கிளையிலும் பூவாகப் பூத்து நின்றாலும், மலர் மட்டுமே மாலையாகி மன்னவன் தோள் சேரும். நறுமணமே நாயகியின் நாசியைச் சென்று சேரும். செடி நந்தவனத்திலேயே தான் இருக்கும். அதிலென்ன இருக்கிறது? செடி வேறு… மலர் வேறா என்ன..? செய்பவன் வேறு… செய்யப்படுவது வேறா என்ன..? என் பேரிகை நாளை முழங்கும்போது அது என் குரலில் அல்லவா முழங்கும்! என் யாழ் நாளை மீட்டப்படும்போது என் இதயத்தை அல்லவா அது இசைக்கும்…! கோ ரோசனை கலந்து செய்யப்படும் அபிஷேகத்தில் எழப்போவது என் ஆன்மாவின் நறுமணம் அல்லவா…?
ஆட வல்லானே… என் குலத்தினர் சிலர் சொல்கிறார்கள்… நீ எங்களைத் தள்ளி வைத்திருக்கிறாயாம். அறிவிலிகள்… பேரிகை ஒலியால் நீ எம் கால்களை நடனமாடச் செய்கிறாய்… வீணை ஒலியாக என் செவிகளை வருடுகிறாய்… கோ ரோசனையாக எம் நாசியில் நிறைகிறாய்… நீயா எமக்கு தொலைவில் இருக்கிறாய்… அதுமட்டுமா மயான ருத்ரனாக நீ எம் அருகிலேயே இருக்கிறாய். மறை ஓதுவார் சபாபதியாக சற்றுத் தள்ளி நிற்கிறாய்… அப்படிப் பார்த்தால் மயான ருத்ரனிடமிருந்து வெகு தொலையில் இருக்கிறார்கள் மறையோர். யார் உயர்ந்தவர்… எதனால் உயர்ந்தவர்…? மலைக்கு அருகில் மலையடிவாரம்… கடலுக்கு அருகில் கடற்கரை… கடற்கரையெல்லாம் மலைக்கு வெகு தொலைவில் இருப்பதாகச் சொல்வது உண்மைதான். ஆனால், அவை கடலுக்கு அருகில் இருப்பவையன்றோ? மயான ருத்ரனுக்கு அருகில் இருக்கும் எம்மை சபாபதிக்கு தொலைவில் என்று சொல்வானேன்?
ஊரின் முடிவில் இருக்கிறது சேரி என்று சொல்லலாம். ஊரின் தொடக்கம் சேரி என்றும் சொல்லலாம். விளைநிலங்களுக்கு அருகில் வெள்ளாமை செய்பவரின் குடில்கள் இருக்கின்றன. வேளாண் கருவி செய்யும் கலைஞர்களின் சேரிகள் இருக்கின்றன. இதில் முதல் எது… கடை எது…? மேல் எது… கீழ் எது…? சபாபதிக்கு மட்டுமே என அவன் ஆடலுக்கான தாளமும் லயமும் கூடுவதற்கே என இசைக்கருவி செய்துகொடுக்கும் அதி முக்கியமான பணி எமக்குத் தரப்பட்டுள்ளது. எம் பறையும் உடுக்கையும் இல்லையேல் அந்த ஆடலரசனின் ஆடல் ஏது? எம் யாழ் இல்லையேல் அந்த அம்பலவாணனின் ஆனந்தத் தாண்டவம் ஏது? யாமோ இழிந்தவர்… யாமோ ஓரங்கட்டப்பட்டவர்..?
ஆடலரசன் வீதி உலா வருகையில் பண்டாரங்கள் தொடுத்த மலர் மாலைகள் அணிந்துவருகிறான்… கன்று பருகியது போக எஞ்சிய பாலில் இருந்து இடைமகள் உருக்கிக் கொடுத்த நெய் தீபமாக ஒளிர்கிறது. குயவர் உருவாக்கிய கலங்களில் வேளாண் குலங்கள் விளைவித்த அன்னங்கள் நிவேதனம் செய்யப்படுகின்றன. வெடித்து விழுந்த பருத்தியை கோலால் சுத்தம் செய்து நூலாக்கி நெய்த ஆடையை உடுத்திக்கொண்டு வருகிறான். அப்படி அவன் ஊர் மக்களால் ஊர் மக்களுக்காக ஊர்வலம் வரும்போது வேத மந்திரங்கள் மட்டுமா ஒலிக்கின்றன…? இறந்த விலங்குகளின் தோலில் இருந்து யாம் உருவாக்கிய பேரிகைகளும் அவற்றின் எலும்புகளை இழைத்து உருவாக்கிய யாழும் வீணையும் தானே சேர்ந்து ஒலிக்கின்றன!
நந்தன் மனது கேள்விகளாலும் பதில்களாலும் இங்குமங்குமாக ஊசலாடியது. வீடு திரும்பினார். ஆனால், மகன் கேட்ட கேள்வி அங்கேயே அப்படியே நின்று கொண்டிருந்தது:
“உன்னையை உள்ள விடமாட்டாங்களா அப்பா..?”
(தொடர்கிறது)
$$$
One thought on “நந்தனார் சரிதம் – 1”