நாடகக் கலை – காணிக்கை

-அவ்வை டி.கே.சண்முகம்

சென்ற நூற்றாண்டில் தமிழகத்தில் நாடகக் கலையை வளர்த்த பெருமகன்களின் முதன்மையானவர் அவ்வை டி.கே.சண்முகம். அவரது ‘நாடக கலை’ நூல் நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது...

அன்புக் காணிக்கை

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தாரின் அழைப்பினை ஏற்று 1959 அக்டோபர் 27,28,29 தேதிகளில் மாணவர்களுக்காக, மூன்று சொற்பொழிவுகள் நிகழ்த்தினேன். அவற்றைப் பல்கலைக்கழகத்தாரே நூல் வடிவிலும் வெளியிட்டார்கள். இசைக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாகவும் வைத்தார்கள் இந்த அரிய வாய்ப்பினை நல்கிய முன்னாள் துணைவேந்தர் திரு. டி.எம்.நாராயணசாமிப் பிள்ளை அவர்களுக்கும், அன்று பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும், இன்று மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் இருக்கும் பன்மொழிப் புலவர்; திரு.தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்களுக்கும் நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்நூலின் இரண்டாவது பதிப்பை வெளியிட எனக்கு அனுமதியளித்த பல்கலைக்கழகத்தார்க்கு என் இதயம் கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடகப் பேராசான், தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றத்தின் இரண்டாவது வெளியீடாக, இந்நூல் வெளிவருவதை எனக்குக் கிடைத்த பெரும்பேறாகக் கருதுகிறேன். அதுவும் அப்பெருமானின் நூற்றாண்டு விழாவினை ஒட்டி இந் நூல் வெளியிடப் பெறுவது மேலும் சிறப்புக்குரியதாகும்.

1959 வரை தமிழகத்தில் நடைபெற்ற நாடகங்கள் தாம் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அதன்பின் நடந்தவற்றைப் பற்றி மற்றொரு சமயம் எழுதுவேன்.

எனக்கு சின்னஞ்சிறு பருவத்திலேயே நாடகக் கல்வி பயிற்றுவித்து என்னை ஒரு நடிகன் என்று தமிழகம் பாராட்டுவதற்கு வித்திட்ட பெருமதிப்புக்குரிய பேராசானுக்கு, இந்நூலை அன்புக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன்.

தி.க.சண்முகம்
‘அவ்வையகம்’, சென்னை – 6
(26-8-1967)

***

அறிஞரின் பாராட்டுக் கடிதம்

பல்கலைக் கழகத்தில் தாங்கள் ஆற்றியுள்ள சொற்பொழிவுகள், சரியான தரத்தில் தயாரிக்கப்பட்டவைதாம்.  ‘நடிப்புக்கலை’ என்ற தலைப்பின் கீழ் அழகாயும், ஆழ்ந்தவையாவும் உள்ள உண்மைகள் பலவற்றை வழங்கியிருப்பது பாராட்டத்தக்கது.  ‘கலை கலைக்காகவே’ என்பதன் பொருளற்ற தன்மையை விளக்கியிருப்பதும், போற்றத்தக்கதாய் அமைந்திருக்கின்றது. நாடகத்தில் பிரசாரம் என்பதில் புகுத்தியுள்ள அருமையான கருத்துக்களை நான் மிகவும் கொண்டாடுகிறேன். மனத்தை மென்மைப்படுத்தும் அளவில் நாடகத்தின் உட்கருத்தும், உபதேசமும் அமைவதை வற்புறுத்தியிருப்பது மெச்சத்தக்கது.

கேவலம் பொழுதுபோக்கிற்காகவே, நாடகத்தை ரசிக்கும் பழக்கம் வர வர அதிகமாகி வரும் நாட்களில், இவ்விதம் சொல்வதை நான் மனமார வரவேற்கிறேன்.  ‘The Play is the thing’ என்ற ஒரு ஆங்கிலச் சொல் உண்டு. அதன் கருத்தாவது, எவ்விதமான படைப்பாயினும், அதனுள் பொதிந்த உட்செல்வம் இதய வளர்ச்சிக்கு உகந்ததாக இருப்பதாம். இதனை மறக்காமல் பலவிதமாக நீங்கள் அழுத்தி அழுத்தி, உரைத்திருப்பதை மிகவும் நான் ரசித்தேன்.

-கி.சந்திரசேகரன். MA, BL,
‘ஸஹிருதயா’,  
டாக்டர் ரங்காச்சாரி வீதி, 
தாகூர்ப் பேராசிரியர்
சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை-4.  
(28-11-1964).

***

என்னுரை

தமிழ் நாடகக் கலைக்கு சரியான சரித்திரம் இல்லையென்ற நல்நோக்கத்துடன், தனது அனுபவத்தையும், தனக்குத் கிடைத்த விபரங்களையும் வைத்துக்கொண்டு ஒரு சிறந்த நாடக வரலாற்றை தமிழ் மக்களுக்குத் தருகிறார்; நாடக அனுபவம் நிறைந்த கலைஞர் அவ்வை திரு. டி.கே.சண்முகம் அவர்கள்.

அத்துடன், நடிப்புப் பயிற்சி பெற்று சிறந்த நடிகனாகத் திகழ்வதற்கு சிறுவர் நாடகக் குழுக்கள் (பாய்ஸ் கம்பெனிகள்) மறைந்துபோன இக்காலத்தில் நடிகர் பஞ்சம் தமிழ்நாட்டில் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சி நடிப்புக் கலையைப் பற்றியும் விரிவாக இந்நூலில் குறிப்பிட்டிருப்பதோடு, நாடகக் கலை பாமர மக்களுக்கும் பயன்படக்கூடிய முறையில் அமைய வேண்டும்; ஆனால், பக்குவமாகப் பயன்படுத்தவும் தெரிய வேண்டும் என்று தெளிவாகவும் எடுத்துக் கூறுகிறார்.

இது போன்ற அனுபவம் நிறைந்த பெரியார்களின் நூல்களையெல்லாம், வெளியிட வேண்டுமென்று எண்ணியபோது இந்த நூலின் உரிமையை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றத்திற்கே கொடுத்துதவிய அவ்வை டி.கே.சண்முகம் அவர்களுக்கு எங்கள் நன்றி உரித்தாகுக.

பல அலுவல்களுக்கிடையே இந்த நூலுக்கு முன்னுரை எழுதிக்கொடுத்த மதிப்பிற்குரிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி., எம்.எல்.ஏ. அவர்களுக்கும் இந்த நூலை சிறந்த முறையில் அச்சடித்துக் கொடுத்த மூவேந்தர் அச்சக நிர்வாகி திரு. முத்து அவர்களுக்கும் ஏனைய தொழிலாளிகளுக்கும் எமது நன்றி.

தமிழகக் கலை வளர்ச்சிக்கு தொண்டு செய்துவரும் தமிழ்நாடு சங்கீத நாடகச் சங்கத்தார் இந்நூல் வெளிவருவதற்கு வேண்டிய பொருளுதவி செய்து எங்களுக்கு ஊக்கமளித்தார்கள். அவர்களுக்கு என்றென்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். தொடர்ந்து பல நூல்கள் வெளியிட எண்ணியுள்ளோம். அதற்கு எல்லோருடைய நல் ஆதரவு கிடைக்குமென்று நம்புகிறேன்.

டி.என்.சிவதாணு,
மீனாட்சி கலா நிலையம், சென்னை-14. 
செயலாளர்,
சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம்.

***

பொருளடக்கம்

1. தமிழ் நாடக வரலாறு
2. நடிப்புக் கலை
3. நாடகத்தில் பிரசாரம்


(தொடர்கிறது)

$$$

One thought on “நாடகக் கலை – காணிக்கை

Leave a comment