நிர்வாக மேலாண்மைத் திறனும் செயலின்மையும்…

-பேரா. இளங்கோ ராமானுஜம்

பகவத் கீதை- நான்காம் அத்தியாயத்தின் (ஞான கர்ம சந்யாச யோகம்) அடிப்படையில் பேரா. இளங்கோ ராமானுஜம் அவர்கள் எழுதியுள்ள இக்கட்டுரை, செயலூக்கத்திலும் செயலின்மையிலும் ஒரே யோகநிலையின் அவசியத்தை சுட்டிக் காட்டுகிறது...

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்த ஓர் அற்புதமான சம்பவம். நியூயார்க் நகரத்தின் விமான நிலையத்தில் 230 பயணிகளைச் சுமந்தபடி ஒரு விமானம் தரையிறங்க முற்படுகிறது. விமானத்தின் மூக்குப் பகுதியில் அமைந்துள்ள சக்கரத்தால் விமானி எவ்வளவோ முயற்சித்தும் தானாக இறங்கி ஓடுகளத்தில் ஓட முடியவில்லை. சிக்கிக் கொண்டது சக்கரம்.  விமானம் தரையைத் தொட்டால், மோதி தீப்பிடித்து அனைவரும் இறப்பது உறுதியாகி விட்டது.

                கட்டுப்பாட்டு அறையிலுள்ள அதிகாரிகள் திகைத்துப்போய் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு ஆப்பிரிக்க- அமெரிக்க இளைஞன் தன் மனதில் உதித்ததை முன்வைத்தான். “நம்மிடம் உள்ள மிகப் பெரிய ட்ரக்கின் பின்பகுதியில் விமானத்தின் மூக்குப் பகுதியை விமானியை வைக்கச்செய்ய வேண்டும். அந்த விமானம் போகும் வேகத்திற்கு என்னால் இந்த ஓடுகளத்தில் டிரக்கை ஓட்ட முடியும். இது ஆபத்தானதுதான் என்றாலும் எனக்குச் செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றான். தன் உயிரைப் பணயம் வைத்து இந்த வெற்றிகரமான செயலைச் செய்து முடித்தான். 230 பயணிகள் காப்பாற்றப்பட்டனர். அவனுக்குப் பாராட்டும் குவிந்தது.

               இப்போதுதான் இந்தச் சம்பவத்தின் முக்கியமான பகுதி வருகிறது. அவன் அமைதியாக ஓர் இடத்திற்கு ஓர் அறையில் சென்று அமர்ந்தான். வெளியில் மிகப் பெரிய கூட்டமே அவனைப் பாராட்டக் காத்திருந்தது. “தயவு செய்து என்னை யாரும் பாராட்ட வேண்டாம். புரிந்து கொள்ளுங்கள். உங்கள் பாராட்டுக்காக இதை நான் செய்யவில்லை. 230 உயிர்களைக் காப்பாற்றியதில் எனக்கு ஆத்ம திருப்தி கிடைத்துவிட்டது. என்னிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. என் மனிதாபிமானக் கடமையைச் செய்தேன்” என்று கூறி அங்கிருந்து மறைந்தான்.

                இந்த அற்புதமான செயலில் தன்னைப் பிணைத்துக்கொண்டு பாராட்டு மழையில் நனைய அவன் விரும்பவில்லை. அந்தச் செயலில் இருந்து அவன் விடுதலை பெற்றுவிட்டான்.  பிணையை அறுத்துச் சுதந்திரக் காற்றை  சுவாசிக்கத் தொடங்கி விட்டான். அவனிடம் சுயநலம் இல்லை. மனதில் தியாக உணர்வே நிறைந்திருந்தது. சேவை மனப்பான்மையே முன்னணிக்கு வந்தது. தெய்வீக உணர்வில் மனது மலர்ந்தது. மனது லேசாகிவிட்டது. செயலில் செயலின்மையை உணர்ந்தான் அந்தக் கருப்பின இளைஞன்.  இது அரியதோர் யோகம் அல்லது வேள்விக்கலை.

            1930 களில் நடந்த மற்றொருசம்பவம். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பால்பிரண்டன் எனும் இளைஞனை பல ஆன்மிக சந்தேகங்கள் அலைக்கழித்தன.  கடவுள், மறுபிறப்பு, ஜீவாத்மன், பரமாத்மன், நல்ல மனிதர்களுக்கும் ஏற்படும் சொல்லவொண்ணாத் துயரங்கள்,  இப்படி ஆயிரத்தொரு கேள்விக்கணைகளைச் சுமந்தபடி பாரதத்தின் இமயமலையில் தவம்செய்யும் முனிவர்கள் முதல் தமிழகத்தில் அப்போது இருந்த காஞ்சிப் பெரியவர் வரை அனைவரையும் சந்தித்து விடை காண முற்பட்டபோது,  காஞ்சிப் பெரியவர் திருவண்ணாமலையில் தவம் செய்து கொண்டிருந்த ஸ்ரீ ரமண மகரிஷியே இதற்கெல்லாம் பதில் கூற இயலும் என்று வெளிப்படையாகச் சொன்னார். பால்பிரண்டன் திருவண்ணாமலையில் ரமண மகரிஷியைச் சந்திக்கச் சென்றபோது அவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.

            இவரா என் சந்தேகங்களைத் தீர்க்கப் போகிறார் என்று எண்ணியபடி தயக்கத்தோடு அவர் முன்பு அமர்ந்தார் பால்பிரண்டன். இனிமையான அமைதி அந்த அறையை நிறைத்திருந்தது. தியானம் கலைந்து கண்விழித்து பால்பிரண்டனை ஒரு முறை ரமணர் அன்பு கனியப் பார்த்தார். அந்தப் பார்வைக்கு ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. சற்று நேரத்தில் பால்பிரண்டன் மனதில் அற்புதமாற்றங்கள் நிகழ்வதை உணர்ந்தார்.  ஓர் இனம் புரியாத ஆன்மிக அமைதி அவரை வருடியது. அவரது கேள்விகள் அனைத்திற்கும் பதில்கள் கிடைத்துவிட்டன. ரமணரின் கனிந்த பார்வையே அவரின் சந்தேகங்களைத் தீர்த்துவிட்டது.

             உலகத்தவர் கண்களுக்கு ரமணரின் செயல் ஒன்றும் செய்யாதது போன்றே இருந்தது. ஆனால் ரமணரின் செயலின்மையில் அற்புத செயல்திறனை அனுபவத்தில் கண்டவர் பால்பிரண்டன். இதுவும் அரியதோர் யோகம் அல்லது வேள்விக்கலையே!

               இந்த வேள்விக் கலையை ராஜ்ஜியத்தை நிர்வகிக்கும் அரசர்களுக்கோ, நிறுவனங்களை வழிநடாத்திச் செல்லும்  தலைவர்களுக்கோ கற்பித்தால் அவர்கள் செயல்பாட்டில் சுயநலம் இருக்காது. மாறாக தியாக உணர்வும், சேவை மனப்பான்மையுமான நம் பாரதத்தின் இரு கண்களே கோலோச்சும். அவர்கள் அன்றாட அலுவல்களைத் திறம்படச் செய்பவர். எனவேதான் பகவான் இந்த அரிய கலையை ராஜரிஷிகளுக்குப்  போதித்தார். சுவாமி சித்பவானந்தர் தனது கீதை விளக்க உரையில் இதுபற்றிக் குறிப்பிடுகிறார்: “When the rulers of kingdoms come to know of this supreme wisdom they tackle the worldly problems more diligently.”  (‘The Bhagavad Gita’  Commentary by Swami Chidbhavananda – Page: 271)

அதன் அடிப்படையில் ஒரு கற்பனை உரையாடல்:

பகவான்:-  அர்ஜுனா! அமரத்துவம் வாய்ந்த இந்த யோகக்கலையை நான் விவாஸ்வானாகிய சூரியக் கடவுளுக்கு முதன்முதலிலும், பின்னர் அழியாத சநாதன தர்மத்தைச் செதுக்கித் தந்த மனுவிற்கும், பிறகு அவர்மூலம் அவர் புதல்வனாகிய சூரியகுலத்தின்  முதல்அரசனானஇஷ்வாகுவிற்கும் போதித்தேன். இந்த அரிய யோகக்கலையைப் பற்றி சுருக்கமாகக் கூறுகிறேன்.

மனிதன் தான் செய்யும் செயல்களை யோகமாக,  வேள்வியாகச் செய்ய வேண்டும். அப்படி அவன் செய்தால் அவன் அந்தச் செயல்களுக்குள் கட்டுப்பட மாட்டான். கர்மத் தளையினின்று விடுபட்டு சுதந்திரமாக இருப்பான். செயல்  செய்தும் செய்யாதவன் போல் இருப்பான். செயலில் செயலின்மையும், செயலின்மையில் செயலும் இந்த அரிய வேள்வியின் அம்சங்கள் அர்ஜுனா!

அர்ஜுனன்:-  இது எவ்வளவு அற்புதமான கலை கிருஷ்ணா! இதன் அடிப்படையில் மனிதன் செயல்களைப் புரிந்தால் செயல்கள் அவனைக் கட்டுப்படுத்தாது. அதன் தளையினின்று அவன் விடுபட்டு சுதந்திரப்பறவையாக அல்லவா இருப்பான்! அதுசரி, கிருஷ்ணா! நீ இதை ராஜரிஷிகளுக்கல்லவா கற்பித்திருக்கிறாய்!

பகவான்:- ஆமாம். இந்த அரிய பொக்கிஷமான யோகக்கலை ராஜரிஷிகளுக்குத் தெரியுமானால் அவர்கள் உலக வியவகாரங்களைத் திறம்பட நடத்துவர். செயலில் செயலின்மையை உணரும் மனிதனுக்கு சுயநலம் இருக்காது.  பாரபட்சம் இன்றி, நடுநிலைமையோடு நிர்வாகம் நடக்கும் அல்லவா!  சாமானிய மக்கள் அச்சமின்றி நலத்தோடு சமுதாயத்தில் வாழ்வார்கள் அல்லவா!  அரசனின் நிர்வாக மேலாண்மை சிறப்பாகிவிடும் அர்ஜுனா!

அர்ஜுனன்:- (கொஞ்சம் யோசித்தவாறு) என்ன சொன்னாய்?  ‘நிர்வாக மேலாண்மை!’ அது எனக்கு எதற்கு கிருஷ்ணா? இதுவரை  நன்னெறிகளைப் போதித்தாய்.  ‘கோழைத் தனத்திற்கு இடம் கொடுத்து விடாதே! அது உனக்குப் பொருந்தாது!  நீ அழிவற்ற ஆத்மன் என்பதை ஒருக்காலும் மறந்துவிடாதே’ என்று சொன்னது என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. இப்படி  நன்னெறிகளைக் கூறிவந்த நீ இப்போது திடீரென்று நிர்வாக மேலாண்மையைப் பற்றிக் கூற ஆரம்பித்து விட்டாயே கிருஷ்ணா !

பகவான்:-  அர்ஜுனா! வெகுவிரைவில் தர்மராஜன் என்னும் ராஜரிஷியின் அரசவையில் உனக்கு முக்கியமான பொறுப்பு இருக்கும். அப்போது இந்த நிர்வாக மேலாண்மை பயன்படும். அது இருக்கட்டும் … ம்ம் … நம்  இந்த அரிய யோகக்கலை வழிவழியாக  விவாஸ்வான் முதல் விஷ்வாகு வரை பயன்பாட்டில் இருந்தது.  பிறகு திடீரென்று அந்தத் தொடர்சங்கிலியில் தொய்வு ஏற்பட்டுவிட்டது. அரிய யோகக்கலையின் அழிவுகாலம் ஆரம்பித்தது.

அர்ஜுனன்:- ஏன், ஏன் கிருஷ்ணா?

பகவான்:-  நிர்வாகத்தில் அடுத்தடுத்து வரக்கூடிய தலைவர்கள் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் இருக்க வேண்டும். இல்லையெனில், அந்த அமைப்பு (System) அழியத் தொடங்கிவிடும்…ம்… ம்… பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. துரியோதனன் போன்ற துஷ்டர்கள்  நிர்வாகத்தைச் சீர்குலைக்க முயலும்போது உன்னைப் போன்ற திறமைசாலிகள் இந்த அரிய கலையைக் கற்று  சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டும். எனவேதான் நான் இதை உனக்கு போதிக்கப் போகிறேன்.

அர்ஜுனன்:-  இடையில் இதன் தொய்விற்கும்,  மறைவிற்கும் காரணம் என்ன கிருஷ்ணா?

பகவான்:- இதன் தொய்விற்குக் காரணம் இந்த வேள்வியைக் கையாளுவதற்கு திறமையானவர்கள் அரிதாகிவிட்டதே! உன்னைப்  போலத் தகுதியானவர்களுக்கு நான் இந்த வேள்வியைக் கற்றுத் தருவதுதான் தர்மம் அர்ஜுனா!

-என்று உரையாடலை முடிக்கிறார் பகவான்.

தொடர் ஓட்டப் பந்தயத்தில்  குறுந்தடியைப் (பேட்டன்) பெறும் அடுத்த வீரனும் ஓடுவதில் திறமையானவனாக இருக்க வேண்டும். இன்றேல் ஓட்டம் தொய்வில் விழுந்து தோல்வியில் முடியும். அப்படித் தகுதியானவர்கள் இல்லாமல் தோற்ற நிறுவனங்கள் ஏராளம். ரவீந்திரநாத் தாகூர் ஸ்தாபித்த சாந்தி நிகேதன் அவருக்குப் பின் பொறுப்பேற்றவர்களின் தகுதியின்மையால் ஒளி இழந்தது. 1940களில் (பின்னாளில் பிரபலமான திரைப்பட இயக்குநர்) சத்தியஜித் ரே  நுண்கலைகளைக் கற்க  சாந்தி நிகேதன் சென்றபோது அதன் வீழ்ச்சியைத் தான் அனுபவத்தில் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். தாகூர் சிந்தித்த பாரதப் பண்பாட்டின் அடிப்படையில், மதங்கள், கலாச்சார எல்லைகளைக்  கடந்த கல்வி அமைப்பு தன் மாட்சிமையை இழந்தது. இந்த உன்னதக் கல்வி அமைப்பை உருவாக்கிய தாகூர் தனக்குப் பின் தகுதி வாய்ந்தவரை  உருவாக்கி அவரிடம்  பொறுப்பைக் கொடுக்கத் தவறியதே இதற்குக் காரணம்.

ஒரு நிறுவனஅமைப்பைக் கட்டமைப்பு வழி நடாத்தும் நிறுவனத் தலைவர் (Founder President) ஏராளமான கனவுகளைச் சுமந்தபடி, முறையான திட்டமிடலைச் செய்து,  தலைமைத்துவத் திறன்களோடு , நிறுவன இலக்குகளை நோக்கி தானும், நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரோடும் சேர்ந்து பயணித்து,  சிந்தித்துச் செயலாற்றுகிறார். நிறுவனத் தலைவருக்கு இருக்கும் ஆர்வமும் துடிப்பும் மற்றவரிடம் இருக்காது.

எனவே தான் பகவான் கிருஷ்ணன் இந்த அரிய கலையை ராஜரிஷிகள் ஆன விவாஸ்வான் எனும் சூரியக் கடவுள்,  மனு, அவரின் புதல்வர் இஷ்வாகுவிற்குப் போதித்தார். காலவெள்ளத்தில்இந்தக் கலை கொஞ்சம் கொஞ்சமாகச்  சிதையத் தொடங்கியது. அதற்குக் காரணம் நிறுவனத் தலைவர்கள் திறமையான அடுத்த தலைமுறையினரைத் தேர்ந்தெடுத்தத் தவறியதே.  ஒருக்கால் திறமையானவர்கள் கிடைப்பது அரிதாகி இருக்கலாம். ஆனால் அர்ஜுனன் போன்ற தகுதி வாய்ந்தவர்கள் காலக்கிரமத்தில் தோன்றும்போது இந்த அரிய வேள்விக்கலை உயிர் பெறுகிறது. ஆங்கே கிருஷ்ணன் எனும் ஈஸ்வர அவதாரம் தோன்றி வெற்றிடத்தைப் பூர்த்தி செய்ய அர்ஜுனனுக்கு அதை போதிக்கிறது. இந்த நிர்வாக மேலாண்மையை பகவான் வெற்றிகரமாகச்  செய்து முடிக்கிறார்.

ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் ஒன்று மட்டும் நமக்கு நன்கு புரியும். மனிதன் சுதந்திரத்தை நோக்கியே பயணிக்கிறான். தளைகளில் கட்டுண்டு திக்குமுக்காடுவதை அவன் என்றுமே விரும்பியது இல்லை. அனுதினமும் அவனுக்கு சுதந்திரம் வேண்டும். அன்றாடம் அவனுக்கு தாகத்தில் இருந்து, பசியில் இருந்து விடுதலை வேண்டும். காமகுரோதாதிகளின் பிடியிலிருந்து விடுதலை வேண்டும். அதுமட்டுமல்ல! அவன் அன்றாடம் செய்யும் செயல்களுக்கும் அவன் பிணைக் கைதியாக இருக்க விரும்புவதில்லை. இந்த சுதந்திரப் பறவைக்கு செயலின் தளைகளை உடைத்தெறிந்து சுதந்திரமாக இருக்கவே ஆசை. இறுதியாக தான் புறப்பட்ட இடத்தையே அடைந்து, இறைவனோடு இணையும் வரை சுதந்திரவேட்கையே அவனிடத்தில் இருக்கிறது.

அவன் செய்யும் செயல்களின்  தளையை  உடைத்தெறிந்து, விடுதலை பெற்று,  அதை வேள்வி ஆக்கி , செயலில் செயலின்மையை  உணர்வதிலும், செயலின்மையில் செயலை உணர்வதிலும் உவகை கொள்கிறான்.

$$$


Leave a comment