குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்- 6

-சேக்கிழான்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்த சட்ட மசோதா-2019க்கு டிச. 12இல் ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். அதையடுத்து அன்றே இந்த சட்டம் (CAA) அமலாகி விட்டது. தற்போது, இந்தச் சட்டமானது, மக்களால் மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகிவிட்டது. இதை மீறுவதும், விமர்சிப்பதும் ஜனநாயகத்தையே அவமதிப்பதாகும்.

(பகுதி-5)

6. நாடாளுமன்றத்துக்கே அதிகாரம்!

அரசியல் சாசன சபையில் 10.8.1949இல் பேசிய டாக்டர் அம்பேத்கரின் பேச்சு இது…

இந்நாட்டின் குடியுரிமை தொடர்பாக தற்போது சட்டம் இயற்றப்படவில்லை. எதிர்காலத்தில் நாடாளுமன்றம் இது தொடர்பாக சட்டம் இயற்ற அரசியல் சாசனத்தின் பாகம் -2,  6வது ஷரத்து (தற்போது 11வது ஷரத்தாகிவிட்டது) அனுமதிக்கிறது. குடியுரிமை தொடர்பாக காலத்துக்குத் தக்கவாறு சட்டம் இயற்றிக்கொள்ள நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது…

எனினும் இந்த அரசியல் சாசனத்தில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ள குடியுரிமை தொடர்பான அம்சங்கள் மாற்ற இயலாதவையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் யாரேனும் விடுபட்டவர்கள் இருப்பது தெரியவந்தால், அவர்களுக்கும் குடியுரிமை வழங்குவதற்கான திருத்தங்களை நாடாளுமன்றம் செய்து கொள்ளலாம்.

– இந்த அடிப்படையில்தான் குடியுரிமை சட்டம் 1955இல் இயற்றப்பட்டது. அதேபோல, காலத்துக்கு ஏற்றவாறு, தேவைக்கு ஏற்றவாறு இதுவரை ஆறு முறை குடியுரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தால் திருத்தப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றம் என்பது மக்களாட்சியின் கோயில். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இணைந்து விவாதித்து, காலத்துக்கேற்ற சட்டங்களை உருவாக்குவதும் திருத்துவதும் அவசியம். மாற்றம் ஒன்றே மாறாதது என்ற அடிப்படையில்தான் சட்டம் செயல்படுகிறது.

இந்திய நாடாளுமன்றம், லோக்சபா- ராஜ்யசபா என இரு அவைகளால் வழிநடத்தப்படுகிறது. மக்களால் நேரடியாகத் தேர்வான எம்.பி.க்கள் லோக்சபாவிலும், மாநில சட்டசபை உறுப்பினர்களால் மறைமுகமாகத் தேர்வான எம்.பி.க்கள் ராஜ்யசபாவிலும் இருக்கின்றனர்.

மத்தியில் ஆளும் கட்சி லோக்சபாவில் பெரும்பான்மை பெறுவது கட்டாயம். சட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால், ராஜ்யசபாவிலும் ஆளும்கட்சிக்கு வலிமை இருப்பது அவசியம். விவாதம், கருத்தொற்றுமை, பிரதிநிதிகளின் வலிமை ஆகியவையே சட்ட மசோதா நிறைவேற்றங்களுக்கு அவசியம். அதாவது, மக்களின் பரிபூரண ஆதரவு இருந்தால் மட்டுமே இரு அவைகளிலும் பெரும்பான்மை வலுவுடன் மக்கள்நலனுக்கான சட்டங்களை இயற்ற ஆட்சியாளர்களால் இயலும்.

தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஜனநாயகத்தின் இந்த வழிமுறையைப் பின்பற்றியே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை (CAB) நிறைவேற்றியது.

லோக்சபாவின் 543 மொத்த உறுப்பினர்களில் பாரதீய ஜனதா கட்சிக்கு தனிப் பெரும்பான்மை (303) உள்ளது. தவிர, கூட்டணிக் கட்சிகளுக்கு 50 எம்.பி.க்கள் உள்ளனர். எனவே, குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா லோக்சபாவில் டிச. 9ஆம் தேதி, 293- 82 என்ற பெரும்பான்மையுடன் எளிதாக நிறைவேறியது.

ராஜ்யசபையின் 245 மொத்த உறுப்பினர்களில் பாஜகவுக்கு 83 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். ஆயினும் கூட்டணிக் கட்சிகளுக்கு 29 எம்.பி.க்கள் உள்ளனர். எனவே, பிஜு ஜனதாதளம் போன்ற நட்புக் கட்சிகளின் உதவியுடன் ராஜ்யசபாவில் 125- 105 என்ற பெரும்பான்மையுடன் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு டிச. 12இல் ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். அதையடுத்து அன்றே இந்த சட்டம் (CAA) அமலாகி விட்டது. தற்போது, இந்தச் சட்டமானது, மக்களால் மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகிவிட்டது. இதை மீறுவதும், விமர்சிப்பதும் ஜனநாயகத்தையே அவமதிப்பதாகும்.

மக்களாட்சி முறையில் நாடாளுமன்றமே இறுதி மையம். மக்களின் பேராதரவுடன் 2019 தேர்தலில் வென்று பெரும்பான்மை வலுவுடன் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, தனது தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. இதுவே ஜனநாயக தேர்தல் முறையின் உச்சகட்டப் பயன்பாடு.

பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்களித்தபடி, தற்போது குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்து, இந்திய வம்சாவளி அகதிகளின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி இருக்கிறது. இதனை விவரம் தெரியாமல் கண்டிப்பவர்கள் மக்களாட்சியின் வேரில் வெந்நீர் ஊற்றுவோராகவே இருக்க முடியும்.

(தொடர்கிறது)…

$$$

3 thoughts on “குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்- 6

Leave a comment