அயோத்தியாயணம்- 11

-ச.சண்முகநாதன்

ராமன் வந்துவிட்டான்.

11. நம் ராமன் வந்துவிட்டான்!

நம் மனதுக்குகந்த ராமன் வந்துவிட்டான்.

500 வருட ரணம், இன்று ஆறியிருக்கிறது. கோடி கோடி பக்தர்களின் மனங்களில் ஆட்சி செய்த ராமபிரான், தான் பிறந்த இடத்தில் ஒரு குடிசையில் இருந்து வந்தது விதியின் பிழையா? மனித மதியின் பிழையா? எது எப்படியிருப்பினும் நம் ராமன் திரும்பினான்.

14 வருட வனவாசம் முடிந்து ராமன் திரும்பி வருகிறான் என்றறிந்த மாத்திரத்தில், அயோத்தியில், அரற்றிக் கொண்டிருந்த வாயெல்லாம் ‘ஆஹா’ என்று துள்ளிக் குதித்தாம். கவலையில் கண்ணீர் சொரிந்து கொண்டிருந்த கண்கள் மகிழ்ச்சியில் விரிந்தனவாம், கவிழ்ந்த தலையெல்லாம் உயர்ந்து எழுந்தனவாம்.

“அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன;
விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின;
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன”

இவ்வளவு உணர்ச்சிகளையையெல்லாம் வெளிக்கொணரக் காரணமாயிருந்த அனுமனை நோக்கி அவர்கள் கைகளெல்லாம் தொழுதனவாம் நன்றிப் பெருக்கோடு- இன்று, மோடியை நோக்கி நமது கைகள் தொழுதது போல.

“தொழுகின்ற, கை எலாம், காலின் தோன்றலை”

உத்தமன், பெரிய மனிதன் என்பதன் வரையறையை வானளாவ மாற்றி வைத்திருக்கிறார், இந்த பெரிய மனிதர். இவரை உத்தமன் என்று சொன்ன வாயால் வேறு யாரையாவது உத்தமர் என்று சொல்ல முடியுமா!

போரில் எல்லோரும் மயக்குற்ற நிலையில் இருந்தபொழுது மருத்துமலையைக் கொண்டுவர அனுமன் விஸ்வரூபம் எடுத்தான்.   ‘தோளோடு தோள் அகலம் ஆயிரம் யோசனை’ உருவெடுத்தவன்  ‘வீங்கின ஆகாசத்தை விழுங்கினானேயென வளர்ந்தான் வேதம் போல்வான்’. இன்று மோடி அவர்களும் மயக்குற்ற நிலையில் இருக்கும் ஹிந்து மக்களின் துயர் துடைக்க  ‘வீங்கின ஆகாசத்தை விழுங்கினானேயென’ வளர்ந்து செயற்கரிய இந்த புண்ணியச் செயலை செய்து முடித்திருக்கிறார்.

கரசேவகர்களின் அனைத்து தியாகங்களும் இவர் இல்லையென்றால் என்னவாயிருக்கும்!

அந்த பாலராமன் முகத்தில்தான் எத்தனை தேஜஸ். இந்த பால முகத்தை வைத்துக்கொண்டுதான் தாடகையை வதம் செய்தான் ராமன்.  ‘கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுக’ என்று, தசரதனிடம் இருந்து அழைத்து வந்து தாடகையுடன் போர் செய்ய வைத்தார் விசுவாமித்திரர். இன்று இன்னொரு ராஜரிஷி அந்த கரிய செம்மலை நம்மிடையே அழைத்து வந்திருக்கிறார் நம்மிடையே இருக்கும் துரோகிகளெனும் தாடகைகளை அழிக்க.

வருவாய் கரிய செம்மலே!

தஞ்சை பிருஹதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தேறிய பொழுது பங்கெடுத்தவர்கள் கொடுத்துவைத்தவர்கள் என்று நம்பியிருந்தோம், இன்று நாமும் அந்த பாக்கியசாலிகளில் ஒருவர் என்று தெரியும் பொழுது,  ‘தொழுகின்ற, கை எலாம், ராஜா ராஜன் மோடியின் காலின் தோன்றலை’.

ராமன் வந்தான்!

நன்றி மோடி மஹான்.

(நிறைவு)

$$$

Leave a comment