-ச.சண்முகநாதன்

9. அயோத்தி ராமனைப் பாடிப் பற!
அடியார்கள் செல்ல முடியாத திவ்ய தேசமாக பரிதாப நிலையில் இருந்தது திருஅயோத்தியா.
கரசேவகர்களின் தியாகத்தாலும், இன்று தேசத்தை ஆள்பவரின் தவ வலிமையாலும், அயோத்தி சென்று அந்த திவ்ய தேசத்தில் நம் தலையை வைத்து வணங்கும் பாக்கியம் நாளைமுதல் கிடைக்கப் போகிறது.
ராம ஜன்மபூமியில் நுழைந்தவுடன் ஒவ்வொருவருக்கும் இருக்கப்போகும் உணர்ச்சி எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. நம் பாதம் படும் முன் நம் தலை பட வேண்டும்.
கூப்பிய கைகள், கண்ணீர் திரையிடும் கண்கள், உணர்ச்சியிழக்கும் கால்கள், இப்படித்தான் இருப்போமா? நம் தலை படும் சாதாரண இடம் அல்லவே.
ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து,
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை, அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை,
திறம் கொள் கோசலை திரு உறப் பயந்த…
ஸ்தலம் அல்லவா இது!
எல்லா திவ்ய தேசத்திலும் மூலவர், தாயார் தீர்த்தம் எல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கும். திருஅயோத்திக்கு குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தி புல்லரிக்க வைக்கிறது.
மூலவர்: ஸ்ரீ ராமன்
தாயார்: சீதா பிராட்டி.
தீர்த்தம்: சரயூ நதி
நினைக்கும் போதே மனம் ‘அயோத்தியர் கோமானைப் பாடிப் பற’ என்று சிறகடிக்கிறது.
“காரார் கடலை யடைத்திட்டு இலங்கைபுக்கு
ஓராதான் பொன்முடி ஒன்பதோ டொன்றையும்
நேரா அவன்தம்பிக் கேநீள் அரசீந்த
ஆரா வமுதனைப் பாடிப் பற!
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற!”
என்று அயோத்தி வேந்தனைப் பாடிப் பறக்க நினைத்தாலும், வருவது ராம் லல்லா எனும் பாலராமன்.
ராம் லல்லாவுக்கு, மன்னுபுகழ் கோசலைதன் மணி வயிறு வாய்த்தவனுக்கு, புண்டரிக மலரதன் மேல் புவனியெல்லாம் படைத்தவனுக்கு, தாலாட்டுப் பாட்டு பாடி வைத்திருக்கிறார் குலசேகர ஆழ்வார். “ஆலிநகர்க்கு அதிபதியே, அயோத்திமனே! தாலேலோ’ என்று பிரம்மனைப் படைத்தவனுக்கே தாலாட்டு பாடி வைத்திருக்கிறது குலசேகர ஆழ்வாரின் தமிழ்.
பரதனுக்கு அடிநிலை ஈந்தவன், விபீஷணனுக்கு அரசீந்தவன் அயோத்தி வேந்தன். அவன் அடி காண, ஒரு தேசம், ஒரு மாபெரும் இனம் குதூகலத்துடன், மனதில் பக்தியுடன், கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் காத்திருக்கிறது.
வா ராமா!
$$$