-சேக்கிழான்
அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியில் குழந்தை ராமர் விரைவில் (ஜன. 22) எழுந்தருள உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கம் குறித்த நூலை திரு. சேக்கிழான் எழுதியுள்ளார். சென்னை, விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் இந்த நூலின் சில பகுதிகள் தொடராக இங்கே இடம் பெறுகின்றன... இது நிறைவுப் பகுதி...

7. இது ஒரு பேராலயம்
அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்டமான ராமர் ஆலயம், நமது பண்பாட்டுப் புத்தெழுச்சியின் அடையாளமாகும். எனவேதான். இதன் ஒவ்வொரு நிலையும் மிகவும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு, மிகச் சிறந்த வல்லுநர்களால் மேற்கொள்ளப்படுகிறது.
ராமர் கோயில் இயக்கம் 1980களில் தொடங்கியபோது ரூ. 25 கோடி செலவில் ஆலயம் கட்டப்படும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்திருந்தது. ஆனால், தற்போதைய தேவைக்கேற்ப, ஆலய வடிவமைப்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டு, ரூ. 1,800 கோடி செலவில் ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை முழுவதும் நாட்டு மக்களிடம் பரிஷத் செய்த நிதி வசூலில் பெறப்பட்டதாகும்.
குஜராத்தில் சோமநாதர் ஆலயத்தை புனர் நிர்மாணம் செய்த சோமபுரா குடும்பத்தைச் சார்ந்த சந்திரகாந்த் சோமபுராவின் வடிவமைப்பை ஏற்கனவே விஸ்வ ஹிந்து பரிஷத் நாடு முழுவதும் பிரசாரம் செய்திருந்தது. அதன் மேம்பட்ட வடிவமைப்பில் ஆலயம் கட்டப்படும் என்றும், சந்திரகாந்த் சோமபுராவே தலைமை வடிவமைப்பாளராக இருப்பார் என்றும் தீர்மானிக்கப்பட்டது. தில்லி அக்ஷர்தாம் உள்ளிட்ட உலகம் முழுவதும் பிரபலமான நூற்றுக்கு மேற்பட்ட ஹிந்து ஆலயங்களை நிறுவியவர்கள் சோமபுரா குடும்பத்தினர் என்பது குறிப்பிடத் தக்கது.
உலக அளவில் கட்டுமானத் துறையில் புகழ் பெற்ற லார்சன் அண்ட் டூப்ரோ (எல் அண்ட் டி) கட்டுமானப் பணிக்கு பொறுப்பேற்றது. மற்றொரு முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ் (டிசிஎஸ்) கட்டுமானப் பணியைக் கண்காணிக்கும் பணிக்குப் பொறுப்பேற்றது. இந்தப் பணிகளுக்கு இவ்விரு நிறுவனங்களும் கட்டணம் ஏதும் பெறுவதில்லை என்று அறிவித்துவிட்டன.
உத்தரகண்டின் ரூர்கியில் உள்ள மத்திய கட்டட ஆராய்ச்சி நிலையம் (சி.பி.ஆர்.ஐ), மும்பையிலுள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் (என்.ஜி.ஆர்.ஐ.), சென்னையிலும் கௌஹாத்தியிலும் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.ஐ.டி.) ஆகிய உயர்கல்வி நிறுவனங்கள் கட்டுமானத் தளத்தின் மண் தர ஆய்வு, கற்கள் ஆய்வு, கட்டுமானப் பொருட்கள், தூண்களின் தாங்குதிறன் குறித்த ஆய்வை மேற்கொண்டன.
ஆலயக் கட்டுமானத் தளத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் 14 மீட்டர் ஆழத்திற்குத் தோண்டப்பட்டு, அந்த இடத்தில் விசேஷ கான்கிரீட் கலவையால் நிரப்பி மேடையை உருவாக்கிய பிறகே, அதன் மீது கற்களால் கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. இது நிலநடுக்கத்தை தாங்கும் வகையிலான அமைப்பாகும்.

நாகரா கட்டமைப்பு:
வட மாநிலங்களில் பெருமளவில் காணப்படும் கூர்ஜர- சாளுக்கிய கட்டுமான அமைப்பான ‘நாகரா’ பாணியில், மூன்று அடுக்குகளாக இந்த ஆலயம் அமைக்கப்படுகிறது.
இந்த ஆலயக் கட்டுமானத்தில் எந்த இடத்திலும் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. கற்களுக்கு இடையிலான பிணைப்புக்கு தாமிரத் தகடுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.
எண்கோண வடிவிலான கருவறையில் குழந்தை ராமர் (ஸ்ரீராம் லல்லா விரஜ்மான்) அருள்பாலிக்க உள்ளார். முதல் தளத்தில் ஸ்ரீராமரின் தர்பார் தரிசனம் இடம்பெறுகிறது. மேலும் சிவன், கணபதி, சூரியன், துர்கை, பிரம்மா, அனுமன், அன்னபூரணி ஆகிய கடவுள்களுக்கும் சன்னிதிகள் அமைக்கப்படுகின்றன. சீதையை அரக்கனிடமிருந்து மீட்கப் போரிட்டு உயிர்நீத்த பறவை அரசன் ஜடாயுவுக்கு பிரம்மாண்டமான உலோகச் சிலை ஒன்றும் கோயில் வளாகத்தில் அமைக்கப்படுகிறது.
வால்மீகி மகரிஷி, வசிஷ்ட மகரிஷி, விஸ்வாமித்திர மகரிஷி, கௌசல்யா மாதா, சபரி அன்னை, குகன் ஆகியோருக்கு தனி சன்னிதிகளும் அமைக்கப்படுகின்றன. ஊனமுற்றோர், முதியோருக்கு உதவும் வகையில் மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள், சாய்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அருங்காட்சியகம், உணவுக்கூடம், சொற்பொழிவுக்கூடம், தன்னிறைவு பெற்ற மின்கட்டமைப்பு, பிரார்த்தனைக் கூடம், கழிப்பறை வசதிகள், சமையலறை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், மருத்துவ நிலையம் உள்ளிட்டவை ஆலய வளாகத்தின் எஞ்சிய சுமார் 59 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகின்றன.
இக்கோயிலில் 44 கதவுகள் இருக்கும்; அவற்றில் 14 தங்கக் கதவுகளாகும். ராமாயணக் காட்சிகளை சித்தரிக்கும் 100 வண்ண ஓவியங்களும் 125 வெண்கலச் சிலைகளும் ஆலய வளாகத்தில் நிறுவப்பட உள்ளன.

ஆலய அளவீடுகள் – ஒரு பார்வை:
- ராமர் கோயில் வளாகத்தின் மொத்தப் பரப்பளவு சுமார் 70 ஏக்கர். இதில் சிற்ப ஆலயத்தின் பரப்பளவு மட்டும் 2.7 ஏக்கர். மொத்த ஆலயக் கட்டுமானத்தின் பரப்பு 10 ஏக்கராக இருக்கும்.
- சிற்ப ஆலயக் கட்டுமானத்தின் மொத்த பரப்பளவு: 57,400 சதுர அடி.
- கோயிலின் நீளம்: 360 அடி; அகலம்: 235 அடி; உயரம்: 161 அடி.
- கோயிலின் மொத்தத் தளங்கள்: 3. தளங்களின் உயரம்: 20 அடி.
- கோயிலில் அமைந்துள்ள பிரதான வாயில்கள்: 12.
- கோயிலில் அமைந்துள்ள மண்டபங்கள்: 5 (ரங்க மண்டபம், சபா மண்டபம், கீர்த்தனை மண்டபம், நிருத்ய மண்டபம், பிரார்த்தனை மண்டபம்,)
- தரைத் தளத்தில் உள்ள சிற்பத் தூண்களின் எண்ணிக்கை: 160.
- முதல் தளத்தில் உள்ள சிற்பத் தூண்களின் எண்ணிக்கை: 132
- இரண்டாம் தளத்தில் அமையவுள்ள தூண்களின் எண்ணிக்கை: 74.



ஆலயப் பணியிலும் தேசிய ஒருமைப்பாடு:
ராமர் ஆலய கட்டுமானப் பணியில் ராஜஸ்தான், மகாராஷ்டிரம், குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சார்ந்த 3,500 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.
ஆலயம் முழுவதிலும் சேர்த்து 390 சிற்பத் தூண்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு தூணிலும் 30 அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்களைச் செதுக்கும் பணியில் கேரளம், ராஜஸ்தான் சிற்பிகள் ஈடுபட்டுள்ளனர்.
கோயிலில் நிறுவுவதற்காக மூன்று ராம் லல்லா மூர்த்திகள் தயார் நிலையில் உள்ளன. இவற்றில் ஒன்று ராஜஸ்தான் பளிங்குக் கல்லாலும் (மார்பிள்), இரு மூர்த்திகள் கர்நாடகத்தில் கிடைத்த நீலக்கற்களாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நேபாளத்தின் கண்டகி நதிதீரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மிகப் பெரிய 15 டன் எடையுள்ள இரு சாலிகிராமக் கற்கள், ஸ்ரீராமர், ஜானகி சிலைகளைச் செய்யப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆலயத்தின் கதவுகள் உள்ளிட்ட தேவைகளுக்கு 1800 கன மீட்டர் தேக்கு மரம் தேவைப்பட்டது. மகாராஷ்டிரத்தின் சந்திரப்பூரில் இருந்து தேக்கு மரங்கள் அனுப்பப்பட்டன. மர தச்சுப் பணிகளை தமிழகத்தின் மாமல்லபுரம் கைவினைஞர்கள் மேற்கொண்டனர்.
இந்தக் கட்டுமானப் பணியில், 18 அங்குலம் நீளம், 30 மி.மீ. அகலம், 3 மிமீ. தடிமன் கொண்ட 10,000 தாமிரத் தகடுகள் பயன்படுத்தப்பட்டன. இவை நாடு முழுவதிலும் இருந்து பக்தர்களால் தானமாக அளிக்கப்பட்டன.
ஆலயத்தின் தள வேலைப்பாடுகளுக்கு 60 லட்சம் கன அடி தரமான மணற்கற்கள் தேவைப்பட்டன. அவை, ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்திலுள்ள பன்ஸி என்ற கிராமத்தில் இருந்து பெறப்பட்டன. ஆலயத்தின் தோரணங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள 4 லட்சம் கன அடி இளஞ்சிவப்புக் கற்கள் உத்தரப் பிரதேசத்தின் மிர்ஸாப்பூரில் இருந்து பெறப்பட்டன. தவிர தமிழகம், கர்நாடகத்திலிருந்து பெறப்பட்ட 18000, கிரானைட் கற்கள் கோயிலின் தள மேடையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆலயமணிகள் உ.பி.யின் எடாவில் இருந்தும் தமிழகத்தின் நாமக்கல்லில் இருந்தும் பெறப்பட்டுள்ளன.


மாநகர வளர்ச்சிப் பணிகள்:
அயோத்தி 5.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறு நகராட்சியாகும். இதனுடன் அருகில் உள்ள பைசாபாத் நகராட்சியும் இணைக்கப்பட்டு அயோத்தி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. மிக விரைவில் அயோத்தி மாநகராட்சியின் மக்கள் தொகை 20 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற வகையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த ஆண்டு சுமார் 2.5 கோடி பக்தர்கள் அயோத்தி வருகை தந்துள்ளனர். ஆலயத்தில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு ஆண்டுக்கு 20 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைக் கணக்கிட்டு, அயோத்தியில் வளர்ச்சிப் பணிகள் ஓராண்டாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.
2024 ஜனவரிக்குப் பிறகு தினசரி ஒரு லட்சம் பக்தர்கள் அயோத்தி வரக்கூடும் என்ற மதிப்பீட்டில் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன. இதற்காக மத்திய அரசு ரூ. 32,000 கோடியைச் செலவிடுகிறது. பல்வேறு துறைகளில் 260 கட்டுமானத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

விரிவாக்கம்

அயோத்தி- லக்னோ தேசிய நெடுஞ்சாலை
இதில் முதலாவது, மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம். ஆண்டுக்கு 6 லட்சம் பயணிகளைக் கையாளும் விதமாக, ரூ. 330 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது; விமான சேவையும் தொடங்கிவிட்டது.
லக்னோ- கோரக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரூ. 400 கோடி மதிப்பீட்டில் 9 ஏக்கர் பரப்பளவில் நவீனமான புதிய அயோத்தியா தாம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
அயோத்தி ஆலயத்திற்கு வரும் ராம பாதை, பக்தி பாதை, தர்ம பாதை, ராம ஜன்மபூமி பாதை ஆகிய நான்கு சாலைகள் அழகுற அகலப்படுத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில், நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள், உணவு அரங்குகள், பூஜைப் பொருள் கடைகள், ஓய்வறைகள், குழந்தைப் பராமரிப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அயோத்தி ரயில் நிலையம் ரூ. 260 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்டு, புதுப் பொலிவு பெற்றிருக்கிறது. இதனையும் விமான நிலையத்தையும் பிரதமர் மோடி கடந்த டிச. 30ஆம் தேதி திறந்து வைத்தார். அங்கிருந்து 8 புதிய ரயில் சேவைகளையும் அவர் தொடங்கி வைத்தார்.
அயோத்தியுடன் இணைந்த 84 கோஷி பரிக்கிரமா யாத்திரைத் திட்டத்தில், ரூ. 4,200 கோடி மதிப்பீட்டில், பஸ்டி, அயோத்தியா, அம்பேத்கர் நகர், பாராபங்கி, கோண்டா ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கியதாக நெடுஞ்சாலைத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

சரயூ நதியில் ரூ. 11 கோடி செலவில் குப்தர் காட் முதல் நயா காட் வரை, ஜடாயு என்ற ஆடம்பர படகு சவாரி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் ஒரு தடவைக்கு நூறு பயணிகள் பயணிக்கலாம். அயோத்தியை விண்ணில் பறந்தபடி ரசிக்கும் ஹெலிகாப்டர் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
சரயூ நதிக்கரை அழகிய சதுக்கங்களுடன் மிகவும் நவீனமாக பொலிவுபடுத்தப்பட்டுள்ளது. நதிக்கரையில் ரூ. 317 கோடி மதிப்பீட்டில் 40 மெகா வாட் திறனுடன் கூடிய சூரிய ஒளி மின்சார நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
இவை அல்லாது, அயோத்தி மாநகரின் எதிர்கால விரிவைக் கருத்தில் கொண்டு, சுமார் 1,200 ஏக்கர் பரப்பளவில், ரூ. 2,200 கோடி செலவில் ஒரு துணை நகரமொன்றும் அமைக்கப்படுகிறது.
வருங்காலத்தில் அயோத்தி வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு பெரிய விடுதிகளையும் உணவகங்களையும் அமைக்க பெரு நிறுவனங்கள் பல முன்வந்து பணியாற்றுகின்றன. தவிர, பல்வேறு மாநில அரசுகள் அயோத்தியில் விருந்தினர் இல்லங்களை அமைப்பதற்கு, உ.பி. அரசு இடங்களை வழங்குகிறது.
அயோத்தி ராமர் கோயில் என்பது வழிபாட்டிற்குரிய இடமாக மட்டுமல்லாது, நாட்டின் பொருளாதார கேந்திரமாகவும் இருக்கும் வகையில் அரசு திட்டமிட்டுப் பணியாற்றுகிறது. இவ்வாறாக, அயோத்தியின் உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
பாரதத்தின் முதன்மை சுற்றுலா மையமாக அயோத்தி மிக விரைவில் உருவெடுக்கும் என்று அரசு கருதுகிறது. அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆன்மிகமும் பொருளாதாரமும் இணைகோடுகளாக வளரும்போது, நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரமும் உயரும்.
நாட்டின் தன்மானச் சின்னமான அயோத்தி காணும் வளர்ச்சி, நாடு முழுவதும் பரவலாகும்போது, ராமராஜ்யம் என்ற கனவு தேசமும் நனவாகும்.
(நிறைவு)
$$$
முழுமையான நூலை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்க:
மொத்த பக்கங்கள்: 128+ 4; புத்தகத்தின் விலை: ரூ. 125-
விஜயபாரதம் பிரசுரம், சென்னை
போன்: +91 89391 49466
இணைய முகவரி: https://vijayabharathambooks.com/
மின்னஞ்சல்: contact@vijayabharathambooks.com