-சேக்கிழான்
அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியில் குழந்தை ராமர் விரைவில் (ஜன. 22) எழுந்தருள உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கம் குறித்த நூலை திரு. சேக்கிழான் எழுதியுள்ளார். சென்னை, விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் இந்த நூலின் சில பகுதிகள் தொடராக இங்கே இடம் பெறுகின்றன...இது நான்காம் பகுதி...

4. நீதி நிலைத்தது! தர்மம் வென்றது!
சுதந்திர இந்தியாவில் இதுவரை காணாத எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வழக்கு அயோத்தி ராம ஜன்மபூமி- பாபர் மசூதி நில உரிமை வழக்கு. இந்த வழக்கு 2019, நவம்பர் 9ஆம் தேதி முற்றுப்பெற்றது. அதன்மூலமாக, பலநூறு ஆண்டுகால ஹிந்துக்களின் கோயில் நில உரிமைப் போராட்டமும் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. தவிர, நாட்டில் அடாவடித்தனம் மூலம் பீதியைக் கிளப்பி அரசியல் அதிகார வர்க்கத்தையும் நீதித்துறையையும் கட்டுக்குள் வைத்திருந்த நேரடி நடவடிக்கைப் பேர்வழிகளின் அத்துமீறல்களுக்கும் இத்தீர்ப்பு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
தொடர்ந்த சட்டப் போராட்டம்:
அயோத்தி நில உரிமைக்கான சட்டப் போராட்டம் 1885ஆம் ஆண்டு தொடங்கியது. ராம ஜன்மஸ்தானில் உள்ள (அக்பரால் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும்) ராம் சாத்புராவில் ராமர் கோயில் கட்ட அனுமதி கோரி, மஹந்த் ரகுவர்தாஸ் பைசாபாத் துணை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது.
ஆயினும், அடுத்த ஆண்டு மஹந்த் ரகுவர்தாஸ் மீண்டும் மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்தார். சர்ச்சைக்குரிய கட்டடம், கோயிலை இடித்துக் கட்டப்பட்டது தான் என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. என்றபோதும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்று கூறி, கோயில் கட்ட தடை விதித்தது.
சுதந்திரம் அடைந்த சில ஆண்டுகளில் (1949) ராம ஜன்மபூமியில் (இஸ்லாமிய வழிபாடு இல்லாத, கும்மட்டம் கொண்ட கட்டடத்தில்) ராமர் சிலை பக்தர்களின் எழுச்சியால் நிறுவப்பட்டது. ஆயினும், அன்றைய மத்திய, மாநில அரசுகள் அந்தக் கட்டடத்தைப் பூட்டி வைத்தன.
அயோத்தி பிரமுகர் கோபால் சிங் விஷாரத், பூட்டப்பட்ட கட்டடத்தைத் திறந்துவிட்டு ராமரை வழிபட அரசு அனுமதிக்குமாறு கோரி 1950இல் வழக்குத் தொடர்ந்தார். இதில் எதிர் மனுதாரராக முத்தவல்லி ஹாசிம் அன்சாரி இருந்தார்.
திகம்பர் அகாரா மடத்தின் சார்பில் மஹந்த் ராமசந்திர தாஸ் பரமஹம்ஸரும், ராமரை வழிபட உரிமை கோரி, பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் இரண்டாவது மனுவை தாக்கல் செய்தார். அப்போது, “கட்டடத்தினுள் இருக்கும் ராமர் சிலையை அகற்றக் கூடாது; அங்கு அரசு ஏற்பாட்டில் தொடர்ந்து பூஜை நடைபெற வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அயோத்தியில் செல்வாக்கு மிகுந்த ராமானந்தி பைராகி குழுவைச் சார்ந்த நிர்மோகி அகாரா மடம், “சர்ச்சைக்குரிய அந்த இடம் முழுவதும் தங்களுக்கே சொந்தம்” என்று நில உரிமை கோரி 1959இல் வழக்குத் தொடர்ந்தது.
நீண்டநாட்கள்அமைதியாகஇருந்த சன்னி வக்ஃப் வாரியம், பாபர் மசூதிக்குள் உள்ள ராமர், சீதை சிலைகளை அகற்றக் கோரியும், சர்ச்சைக்குரிய கட்டடத்தின் (பாபர் மசூதி) மீதான உரிமையையும் கோரி, பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் 1961இல் வழக்கு தொடர்ந்தது. (நான்காவது வழக்கு). மேற்கண்ட வழக்குகள் அனைத்தும் எந்த முன்னேற்றமும் இன்றி தேங்கிக் கிடந்தன.
1980களில் ராம கோயில் மீட்பு இயக்கம் தீவிரமடைந்தது. ராமர் கோயிலில் வழிபட கதவுகளைத் திறந்து விடுமாறு பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞர் உமேஷ் சந்திர பாண்டே 1986 இல் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே, அயோத்தியில் ராமரை வழிபட சர்ச்சைக்குரிய இடத்தில் அனுமதி அளிக்குமாறு உத்தரவிட்டார் (1986 பிப். 1). அதை ஏற்று அன்றைய மத்திய அரசு, பூட்டப்பட்ட ஆலயத்தின் கதவுகளைத் திறக்க ஆணையிட்டது.
இதனிடையே, சர்ச்சைக்குரிய பகுதி குழந்தை ராமருக்கே சொந்தம் என்று கோரி, ‘ராம் லல்லா விரஜ்மான்’ என்ற பெயரில், ஸ்ரீராமரின் நெருங்கிய நண்பராக தன்னை முன்வைத்து, ஓய்வு பெற்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி தேவகி நந்தன் அகர்வால் பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் 1989 இல் வழக்கு தொடர்ந்தார்.
(2002 ஏப்ரலில் அகர்வால் மறைந்த பிறகு, அவர் சார்பாக டி.பி.வர்மா வழக்கை தொடர்ந்து நடத்தினார். 2008 பிப்ரவரியில் வர்மாவும் மறைந்தார். அவரையடுத்து, விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர் திரிலோக்நாத் பாண்டே இவ்வழக்கை நடத்தினார். இந்த வழக்கு, அயோத்தி நில உரிமை வழக்கில் திருப்புமுனையான வழக்காகும். கடவுள் ஸ்ரீராமரையும் ஒரு வாதியாக நீதிமன்றம் கருத்தில் கொண்டதற்கு இவ்வழக்கே காரணம்.)
இதனை அடுத்து அயோத்தி கரசேவை நிகழ்வுகளின்போது நீதிமன்றச் செயல்பாடுகள் வேகம் பெற்றன. பொதுவாக ஹிந்துக்களின் எழுச்சி மிகுந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த அரசே நீதித்துறையை நாடி வந்தது. 1992 டிச. 5ஆம் தேதி கரசேவைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டதே, கரசேவகர்களின் ஆவேசத்திற்குக் காரணமானது. இந்நிலையில் கல்யாண் சிங் அரசு கலைக்கப்பட்டதாகப் பரவிய வதந்தி, கரசேவகர்களை கோபம் கொள்ளச் செய்தது. அதையடுத்து பாபரின் தளபதியால் கட்டப்பட்ட அடிமைச் சின்னமான அந்த 3 கும்மட்டங்களும் கரசேவகர்களால் டிசம்பர் ஆறாம் நாள் தகர்க்கப்பட்டன.
இஸ்மாயில் ஃபரூக்கி வழக்கு:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டடத்தை ஒட்டிய நிலப்பரப்பை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து, டாக்டர் இஸ்மாயில் ஃபரூக்கி உச்சநீதிமன்றத்தில் 1994இல் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, “சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, அரசுக்கு நிலத்தை கையகப்படுத்த அதிகாரம் உண்டு” என்று தீர்ப்பளித்தது. தவிர, “இஸ்லாம் சமயத்தைப் பொருத்த வரை, முஸ்லிம்கள் எங்கு வேண்டுமானாலும் தொழுகை நடத்தலாம்; மசூதி என்ற கட்டடம் தொழுகைக்கு அத்தியாவசியமான ஒன்றல்ல’’ என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார் இஸ்மாயில் ஃபரூக்கி. ஆனால், இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்ற இயலாது என்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு 2018இல் உறுதிப்படுத்தியது.
இஸ்மாயில் ஃபரூக்கி வழக்கை ஒட்டி, இந்திய அரசியல் சாசனத்தின் 143 (1) பிரிவின் கீழ், “சர்ச்சைக்குரிய இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதற்கு முன்னர் அந்த இடத்தில் ஹிந்து ஆலயம் இருந்ததா?” என்று உச்ச நீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பினார், அன்றைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா.
ஆனால், 1994இல் ”மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பதால் இதற்கு பதில் அளிக்க முடியாது” என்று உச்ச நீதிமன்ற அமர்வு மறுப்பு தெரிவித்தது. என்றபோதும் “அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு இவ்விஷயத்தில் முடிவெடுக்கும்” என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதுவே பின்னாளில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தொல்லியல் துறை ஆய்வு நடத்துமாறு உத்தரவிட ஆதாரமானது.
இதனிடையே,அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கோயிலில் பக்தர்கள் வழிபட அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று கோரி, ஹிந்து வழக்கறிஞர்கள் சங்க தொடுத்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், தரிசனம் அனுமதிக்கப்பட வேண்டும்” என்று அரசு உத்தரவிட்டது.
தீர்ப்பு அளிக்கப்பட்ட முதல் நாளிலேயே 25,000 பக்தர்கள் ராமருக்கு அமைக்கப்பட்ட, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த தற்காலிகக் கோயிலில் வழிபட்டனர். இதற்கு எதிரான இஸ்லாமியர் தரப்பின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
வழக்குகள் ஒன்றிணைந்தன:
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னௌ சிறப்பு அமர்வில், அயோத்தி இடம் யாருக்கு சொந்தம் என்ற நில உரிமை வழக்கு விசாரணை 2002இல் தொடங்கியது. இதற்கு முந்தைய அனைத்து வழக்குகளும் ஒன்றாக சேர்க்கப்பட்டன.
2003இல், வழக்கு விசாரணைக்கு உதவியாக, “அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் முன்னர் கோயில் இருந்ததா?” என்பது குறித்து இந்திய தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆராய்ந்து அறிக்கை தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே ஆண்டு இந்திய தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனம் அளித்த ஆய்வறிக்கை, அங்கு அடித்தளத்தில் மிகப் பெரிய கோயில் இருப்பதை உறுதிப்படுத்தியது.
இந்த வழக்கில் 2010ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ்.வி.கான், சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. ‘கடவுள் பால ராமன் (ஸ்ரீராம் லல்லா), நிர்மோஹி அகாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்புக்கும் 2.77 ஏக்கர் நிலத்தை பங்கிட்டு அளிக்க வேண்டும்; தற்காலிக ராமர் கோயில் அமைந்துள்ள முந்தைய மசூதியின் மைய இடம் ராம் லல்லாவுக்குச் சொந்தமானது’ என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ஆனால் இந்தத் தீர்ப்பு எந்தத் தரப்புக்கும் திருப்தி அளிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் இதற்கு 2011இல் தடை விதித்தது.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பிறகு அயோத்தி வழக்குகளை விரைவாக விசாரிக்குமாறு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. அதை ஏற்று, 2017இல் ராமர் கோயில் நில உரிமை வழக்கு- உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான மூவர் அமர்வு விசாரணை தொடங்கியது.
அயோத்தி மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு 2019இல் அமைக்கப்பட்டது. அதில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்ஏ.நசீர் ஆகியோரும் இடம் பெற்றனர்.
முதலில், வழக்கை சுமுகமாகத் தீர்க்க விரும்பிய உச்ச நீதிமன்றம், முன்னாள் நீதிபதி எஃப்.எம்.ஐ.கலிஃபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய சமரசக் குழுவை அமைத்தது. ஆனால், சமரச முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
அதையடுத்து, அயோத்தி வழக்கு விசாரணை, தினசரி அடிப்படையில் தொடங்கியது. 40 நாட்கள் தொடர்ந்து விசாரிக்கப்பட்ட வழக்கின் இறுதியில் 2019 நவ. 9 அன்றுஉச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பளித்தது.
உண்மையில் இத்தீர்ப்பு 2010 செப். 30லேயே அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அலகாபாத் உயர் நீதிமன்ற அமர்வு, வழக்கின் இறுதிக்கட்டத்தை அப்போது ஓரளவு எட்டியது. ஆனால், அன்றைய ஆளும் அரசின் நிர்பந்தம், தவறான வழிகாட்டல் காரணமாகவே அப்போதைய நீதிபதிகள் தடுமாறினர். வழக்கில் தொடர்புடையை 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை ராம் லல்லா, நிர்மோஹி அகாரா, சன்னி வக்ஃப் வாரியம் ஆகியோர் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளுமாறு ‘பஞ்சாயத்து’ செய்து தனது தீர்க்கமான கடமையிலிருந்து வழுவியது நீதிமன்றம். அதன் விளைவாக அயோத்தி வழக்கு மேலும் சிக்கலானது.
யாருக்கும் திருப்தி அளிக்காத அந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்யப்பட்டன. பலதரப்பினரும் அந்த வழக்கில் இணைய மனு செய்தனர். இறுதியில் பல தடைகளைக் கடந்து, இஸ்லாமியத் தரப்புக்கு சாதகமான காங்கிரஸ் வழக்கறிஞர் அணியின் தாமதத் தந்திரங்களைப் புறந்தள்ளி, ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இறுதித் தீர்ப்பை அளித்திருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு:
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் சரத் அரவிந்த் போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக்பூஷண், அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, ஒருமித்த குரலில், நாட்டின் இறையாண்மையை மேலும் வலுப்படுத்தும் விதமாகத் தீர்ப்பளித்திருக்கிறது. ‘முந்தைய அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு தவறானது’ என்று அறிவித்த நீதிபதிகள், ஸ்ரீ ராமனுக்கே அந்த இடம் என்பதை தெள்ளத் தெளிவாக உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.
அடிப்படையில் இந்த வழக்கு நில உரிமை தொடர்பானது. அயோத்தியில் சர்ச்சைக்குரியதாகக் குறிப்பிடப்படும் ராமஜன்மபூமி- பாபர் மசூதி நில உரிமை விவகாரத்தில் தொடர்புடைய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதே கேள்வி. அங்கு ஏற்கனவே ஹிந்துக்கள் கொண்டிருந்த வழிபாட்டு உரிமையும் வழக்கில் விசாரிக்கப்பட்டது. அந்த இடத்தில் முன்னர் கோயில் இருந்ததற்கான ஆதாரங்களை தொல்லியல் துறையும் அளித்திருந்தது. அந்த இடத்தில் இருந்த சர்ச்சைக்குரிய கட்டடம் 1992 டிசம்பர் 6இல் இடிக்கப்பட்டு தற்காலிகக் கோயில் அமைக்கப்பட்டு வழிபடப்படும் நிலையில் ‘தற்போதைய நிலையே தொடரும்’ (Status Quo) என்ற நீதிமன்றத் தீர்ப்பும் முக்கியமான காரணியாக இருந்தது. அந்தக் கட்டடம் (1992 டிச. 6இல்) இடிக்கப்பட்டதன் நியாயம் இப்போது உணரப்பட்டிருக்கும்.
ஆயினும் உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப்பட்டதை இந்தத் தீர்ப்பில் கண்டித்திருக்கிறது. சட்டத்தின் பார்வையில் அதுவும் சரியானதே. அதேசமயம், வருங்காலத்தில் அயோத்தி விஷயத்தில் வேறு எந்த வகையிலும் தடைகள் வந்துவிடக் கூடாது என்பதில் நீதிபதிகள் ஐவருமே மிகவும் கவனமாகத் தீர்ப்பளித்துள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் நால்வர்: 1. ஸ்ரீ ராமஜன்மபூமி நியாஸ் (ராம் லல்லா தரப்பு), 2. கோயில் தங்களுக்கே பரம்பரையாகச் சொந்தம் என்று கூறும் நிர்மோஹி அகாரா, 3. பாபர் மசூதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சன்னி வக்ஃப் வாரியம், 4. அங்கு மசூதியைக் கட்டியதாகக் கூறப்படும் மீர்பாகி வழிவந்தவர்கள் தரப்பில் ஷியா வக்ஃப் வாரியம்.
இவர்களில், ஷியா தரப்பினரின் மனுவையும், நிர்மோஹி அகாரா தரப்பையும் நிராகரித்த நீதிபதிகள், சன்னி வக்ஃப் வாரியத்தின் வாதத்தையும் ஏற்கவில்லை. ஹிந்துக்களின் பலநூறு ஆண்டுகாலப் போராட்டம், ராமன் அங்கு பிறந்தார் என்ற ஹிந்துக்களின் நம்பிக்கை, அந்த இடத்தில் ஏற்கனவே ஒரு கட்டடம் கீழே உள்ளது என்ற தொல்லியல் ஆய்வறிக்கை, வெறும் கட்டுமானத்தை முஸ்லிம்கள் உரிமை கோர முடியாது என்ற வாதம் ஆகிய பல அம்சங்களின் அடிப்படையில், ஹிந்துக்களுக்கே அந்த நிலம் சொந்தம் என்று அறிவித்திருக்கிறது.
1949இல் சர்ச்சைக்குரிய வளாகத்தில் ராம் லல்லா சிலைகள் வைக்கப்பட்டதையும் நீதிபதிகள் தீர்ப்பில் பதிவு செய்துள்ளனர். 1992 டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு நிகழ்வையும் கண்டித்துள்ளனர். அதாவது சட்டத்தின் கண்களில் மட்டுமே இவ்வழக்கு பரிசீலிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், முஸ்லிம்கள் 2.77 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோர முடியாது என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், அவர்கள் சிலகாலம் அங்கு தொழுகை நடத்திய அனுபவ பாத்தியதைக்காக, டிசம்பர் 6 நிகழ்வுக்கு பிராயச்சித்தமாக, அவர்களுக்கு அரசே 5 ஏக்கர் நிலத்தை வேறொரு இடத்தில் வழங்குமாறு உத்தரவிட்டிருக்கிறது. இது நீதிபதிகளின் பாரபட்சமின்மையை வெளிப்படுத்துவதற்கான சான்று.
சொல்லப்போனால், முஸ்லிம்களுக்கு சரயூ நதிக்கரைக்கு மறுபுறம் பிரமாண்டமான மசூதியைக் கட்டித் தருவதாக ஏற்கனவே ஹிந்துக்கள் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதையேதான் நீதித் துறை உத்தரவின்மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.
அயோத்தி நில உரிமை வழக்கில் ஹிந்துக்களின் தரப்பை உச்ச நீதிமன்றத்தில் தெளிவாக முன்வைத்து திறம்பட வாதாடிய இரு வழக்கறிஞர்களும் போற்றுதலுக்குரியவர்கள். முதலாமவர் தமிழகத்தைச் சார்ந்த 92 வயதான முதுபெரும் வழக்கறிஞர் கேசவன் பராசரன். இதற்காக தனக்கு கட்டணமும் கூட அவர் வாங்கிக் கொள்ளவில்லை.
அதேபோல, ராம்லல்லா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதனின் வாதங்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளால் மிகவும் கவனத்துடன் குறிக்கப்பட்டன. நில உரிமை, தொல்லியல் ஆதாரங்கள், சமய நம்பிக்கைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இவ்வழக்கில் பிணைந்திருந்தன. இவ்வழக்கில் தொழில்நேர்த்தியுடன் போராடிய இவ்விருவரும் பாராட்டுக்குரியவர்கள்.
நீதிபதிகளின் தீர்ப்பு மிகத் தெளிவானது: அந்த இடம் ஹிந்துக்களுக்கே சொந்தம். குறிப்பாக ராம ஜன்மபூமி நியாஸ் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். அங்கு ராம கோயில் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. அதேசமயம், மத்திய அரசு அந்த இடத்தின் கட்டுப்பாட்டாளராக இருக்க வேண்டும். அங்கு ராமருக்குக் கோயில் கட்ட 3 மாதங்களுக்குள் புதிய அறக்கட்டளையை நிறுவி அவர்கள் வசம் நிலத்தை அரசு ஒப்படைக்க வேண்டும். இந்த அறக்கட்டளையில் நிர்மோஹி அகாராவை அரசு விரும்பினால் சேர்க்கலாம். (அதாவது ராமர் கோயில் கட்ட ஹிந்துக்கள் தரப்பிலேயே இடையூறாக இருந்த ஒரு வாதியும் தீர்ப்பால் இப்போது அகற்றப்பட்டுள்ளார்.)
அடுத்ததாக, தொல்லியல் துறையின் ஆதாரங்கள் இவ்வழக்கில் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தன. பாபர் மசூதி (இப்போது இல்லை) காலி இடத்தில் கட்டப்படவில்லை என்பதையும், அந்த இடத்தின் கீழே உள்ள கட்டுமானம் கோயிலாக இருக்கலாம் என்ற தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. 1857 வரை அங்கு ஹிந்துக்கள் தொடர்ந்து வழிபட்டதற்கான ஆதாரங்களும் ஏற்கப்பட்டுள்ளன. பூமிக்குக் கீழுள்ள கட்டடம் கோயிலா என்ற சர்ச்சைக்குள் நீதிமன்றம் இறங்கவில்லை.
(பின்னாளில் கோயில் கட்டுமானப் பணிகளின்போது இதுவும் தெளிவாகிவிட்டது. புதிய கோயில் கட்டுமானத்திற்காக நிலத்தைத் தோண்டியபோது ஒரு பெரும் கோயில் கட்டுமானத்தின் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை மாநில அரசால் அமைக்கப்படும் தனி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளன).
“அயோத்தியில் ராமர் பிறந்தார் என்கிற ஹிந்துக்களின் நம்பிக்கையை சந்தேகத்துக்கு உட்படுத்த முடியாது. நிலம் தொடர்பான தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையை நிராகரிக்க முடியாது” என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். ஆக, பலநூறு ஆண்டுகால ஹிந்துக்களின் தொடர் போராட்டம் வென்றுவிட்டது.

உச்சகட்டப் பாதுகாப்பு:
இவை அனைத்தையும் விட, மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், இந்தத் தீர்ப்புக்காக நாடே ஒருநாள் முற்றிலும் முடக்கப்பட்ட சூழலில் வைக்கப்பட்டிருந்தது தான். உளவுத்தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசு நாடு முழுவதும் அனைத்து மாநில அரசுகளையும் எச்சரித்திருந்தது. தலைமை நீதிபதியே தீர்ப்புக்கு முதல்நாள் உ.பி. மாநில தலைமைச் செயலாளரையும் காவல் துறைத் தலைவரையும் நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினார். இது நமது அரசியல் அமைப்பில் இதுவரை காணாத நிலை. ஆயினும் நாட்டுநலனை உத்தேசித்து மத்திய, மாநில அரசுகள் நீதித்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்கின.
நாடு முழுவதும் பாதுகாப்புப் படையினரும் காவல் துறையினரும் குவிக்கப்பட்டனர். ராணுவமும் விழிப்புடன் இருக்குமாறு பணிக்கப்பட்டது. அயோத்தித் தீர்ப்பை கொண்டாடவோ, கண்டிக்கவோ கூடாது என்று அரசுத் தரப்பிலும் பல்வேறு அமைப்புகளின் தரப்பிலும் அரசியல் கட்சிகள் சார்பிலும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. இவை அனைத்திற்கும், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மீதான அச்சமே காரணம் என்பதையும், அந்த சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம் என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
இத்தகைய அச்சமே தேசப் பிரிவினைக்கு 1947இல் வித்திட்டது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாருக்காக என்பதை சிறு குழந்தையும் அறியும் என்பதால்தான், அமைதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. அச்சமூட்டும் கும்பல் மனோபாவத்தால் அரசையோ, மக்களையோ, நீதித் துறையையோ இனியும் கட்டுப்படுத்த முடியாது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.
இன்று மத்தியிலும், உத்தரப்பிரதேச மாநிலத்திலும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் பாஜக அரசுகள் இருப்பது, நீதித்துறைக்கும் துணிவைத் தந்திருக்கிறது. மக்களாட்சியில் மக்களே எஜமானர்கள் என்பதை நீதித்துறையும் உணர்ந்திருக்கிறது.
நீதி நிலைக்க வேண்டுமானால், தீர்ப்பு மதிக்கப்பட வேண்டுமானால், அதை சாத்தியப்படுத்தும் வல்லமையுள்ள அரசு நிர்வாகமும், மக்களின் ஆதரவும் இருந்தாக வேண்டும்; தீர்ப்பளிக்கும் நீதிபதிகளின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இருந்தாக வேண்டும். அந்த வகையில், அனைத்தும் கூடி வந்த நல்ல தருணத்தில், பொருத்தமான, நியாயமான, சமரசத்துக்கும் வாய்ப்பளிக்கும் நல்ல தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.
‘சத்தியமேவ ஜயதே’ என்ற நமது அரசின் முத்திரை வாக்கியமும் மெய்ப்பட்டிருக்கிறது.
(தொடர்கிறது)
$$$
முழுமையான நூலை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்க:
மொத்த பக்கங்கள்: 128+ 4; புத்தகத்தின் விலை: ரூ. 125-
விஜயபாரதம் பிரசுரம், சென்னை
போன்: +91 89391 49466
இணைய முகவரி: https://vijayabharathambooks.com/
மின்னஞ்சல்: contact@vijayabharathambooks.com