அயோத்தியாயணம்- 6

-ச.சண்முகநாதன்

5. ஏன்? என்ன காரணம்?

100 கோடி மனிதர்கள் அவனுக்கு ஆலயம் அமைவதை ஆவலுடன் எதிர் நோக்குகின்றனர், ஒரு யுக புருஷன் தலைமையில். அந்த நிகழ்வை நினைத்து கண்களில் நீர் பெருகுகிறது எல்லோருக்கும்.

அப்படி என்ன இருக்கிறது இந்த ராமன் எனும் மந்திரத்தில்!

இன்று நேற்றல்ல, யுகம் யுகமாய் இந்த ராமநாமம் மீது மனித குலம் தீராக்காதல் கொண்டிருக்கிறது; அவனைக் கொண்டாடியிருக்கிறது.

200 ஆண்டுகளுக்கு முன்னர், ராமனுக்காக ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றியவர் தியாகராஜ ஸ்வாமிகள். வாழ்வெல்லாம் ராம நாமம் ஜெபித்து பின்வரும் சந்ததியினரையம் ராம நாமம் பாடச் செய்தவர். “ஓரக்கண்ணால் ஒரு பார்வை பாரேன் ராமா” என்று அன்பொழுக உருகியவர். “அன்று லக்ஷ்மணன் சேவை செய்து கொண்டிருக்கும் பொழுது நீ சீதையைப் பார்த்து உதட்டோரத்தில் ஒரு அங்கீகாரப் புன்னகை செய்தாயே, அதைப் பார்த்து லக்ஷ்மணன் பூரித்துப் போனானே, அதைப்போல என்னையும் ஒரு கடைக்கண் பார்வை பாரேன்” என்று வாசஸ்பதி ராகத்தில் உருகினாரே. ஏன்?

1000 ஆண்டுகளுக்கு முன்னர் கம்பன் என்றொரு மானுடன் ராமனை நினைத்து 10,000+ பாடல்கள் புனைந்தானே! எங்கிருந்து வந்தது அவனுக்கு அவ்வளவு சக்தி!

“ஆசை பற்றி அறையலுற்றேன் - மற்று
இக் காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ!”

-என்று ஆசையால், காலம் ஒழிந்தாலும் அழியாத காவியம் படைத்தானே ராமன் மீது! ஏன்?

யுகங்களுக்கு முன்னாலும், மனித குலம், இந்த ராமன் மீது மாளாக்காதல் கொண்டிருந்தது ஏன்?

தன்னுடைய வேள்வியைக் காப்பதற்கு ஒரு மாபெரும் வீரன் வேண்டும் என்று எண்ணிய விசுவாமித்திரர்  “ராமன் தான் வேண்டும்” என்று தசரதனிடம் கேட்டது ஏன்?  “நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி” என்று ராமனின் துணை வேண்டும் என்று விசுவாமித்திரர் வேண்டியது ஏன்?

எத்தனையோ வீரர்கள் கடந்து போயினும்

“மண் வழி நடந்து, அடி வருந்தப் போனவன்,
கண் வழி நுழையும் ஓர் கள்வனே கொலாம்?”

என்று ராமனின் மீது மாத்திரம் சீதையின் பார்வை விழுகிறது. ஏன்? கரிய செம்மல் அவன்.

வனத்தில் இருந்த குகன் முதல்முறை ராமனைப் பார்த்ததும்  “நான் உன்னுடனே தங்கி உனக்கு உறைவிடம் அமைத்துக் கொடுப்பது முதல் எல்லா பணிவிடையையும் செய்வேன், தயவுசெய்து எனக்கு அந்த பாக்கியத்தைக் கொடு” என்று சொன்னது ஏன்?

“உறைவிடம் அமைவிப்பேன்; ஒரு நொடி வரை உம்மைப்
பிறிகிலென், உடன் ஏகப் பெறுகுவென் எனின் நாயேன்”

ராமனும் அவன் அன்பில் கரைந்து, முதல்முறையாக, அரச குடும்பத்தில் இருந்து மற்றொருவனை சகோதரனாக ஏற்றுக்கொண்டது ஏன்?

ராமன் காட்டில் இருந்து துயருற நான் அங்கு அரசாள மாட்டேன் என்று அடம் பிடித்து, பின்னர்,  “குறைந்த பட்சம் உனது பாத ரக்ஷைகளையாவது கொடு,   ‘செம்மையின் திருவடித்தலம் தந்தீக’ சிம்மாசனத்தில் வைத்து அழகு பார்ப்பேன்” என்று சொல்லும் அளவு பரதன் அவனிடம் அன்பு வைத்தது ஏன்!

இவ்வளவு மரியாதையும் அன்பும் ராமன் மீது ஏன்!

அரக்கர் தேசத்து மன்னனின் தங்கை, சூர்ப்பணகை. எத்தனையோ வீரர்களைக் கண்டும்  “ராமன் மார்பு மீது சேர்வேன். அவனுடன் சேர முடியவில்லையென்றால், அமுதம் குடித்தாலும் விஷம் குடித்து போல ஆகிவிடும் வாழ்வு” என்று  ‘கரிய செம்மல்’ ராமன் மீது வேட்கை கொண்டது ஏன்?

$$$

Leave a comment