அயோத்தியாயணம்- 5

-ச.சண்முகநாதன்

5. பொருந்துறப் புல்லுக!

ராமன் திருமுடி சூட்டிக்கொண்ட பின், எல்லோருக்கும் வெகுமதி அளித்து தன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறான். ஹனுமனிடம் வரும் பொழுது, ராமன், உணர்ச்சி பெருக்கெடுத்து  “நீ செய்த உதவிக்கு நான் என்ன கைமாறு செய்வதென்று தெரியவில்லை. என்னை அணைத்துக்கொள். இதைத் தவிர வேறெதுவும் சொல்ல முடியவில்லை” என்று ஹனுமனின் அன்புக்கு தான் கடன்பட்டதாகச் சொல்கிறான்.

“திண் தோளாய்! பொருந்துறப் புல்லுக” –  இது ராமன் ஹனுமனைப் பார்த்துச் சொன்னது. பொதுவாக பெரியவர்கள் தான் சிறியவர்களை அணுகி அணைப்பது வழக்கம். இங்கே ராமன் பெரியவன். ஆனால் அனுமனைத் தான் சென்று அணைக்காமல்  “நீ என்னை வந்து அணைத்துக்கொள்” என்று சொல்லும்பொழுது  “நீ எனக்கு செய்த உதவியால், நீ எனக்கு பெரியவன். அன்பு செலுத்துவதில் உனைவிட நான் சிறியன்” என்று ராமன் நன்றி தெரிவிக்கிறான். செய்த உதவியால் பெரியவன் ஹனுமனா, இல்லை, சொன்ன வார்த்தையால் பெரியவன் ராமனா?

ஏன், ராமன் அவ்வளவு பெரிய வார்த்தை சொன்னான்?

சீதையைத் தேடி நாலாபக்கமும் சென்ற வீரர்கள் குறித்த காலம் கடந்தும் திரும்பி வரவில்லை. ராமன் கவலை கொள்கிறான்.  “சீதை இறந்துபட்டாள் என்ற வார்த்தையை ராமனுக்கு சொல்லுவதை விட இறப்பது மேல் என்றென்னி மாய்ந்தனரோ நம் வீரர்கள்?” என்று குழம்பிய, விரக்தி நிலையில் இருக்கிறான் ராமன்.

ஆனால் தேடிச் சென்ற மற்ற வீரர்கள் அனைவரும்  “சீதை கிடைக்கவில்லை” என்ற தீச்செய்தியுடன் திரும்பி வருகின்றனர். இன்னும் ஹனுமன் மட்டும் வர வேண்டும். அவன் சொல்லும்  “கண்டேன் சீதையை”/ “கண்டிலன் சீதையை” எனும் செய்தி ராமனுக்கு make or break வகை செய்தி.

அப்போது ஹனுமனை நினைக்கிறான்,  “அருந் துயர்க் கடலுள் ஆழ்பவனான” ராமன், அனுமன் நல்ல செய்தி கொண்டு தர வேண்டுமென்று.

அங்கே, இலங்கையில் அனுமன் சீதையைத் தன் கண்ணால் கண்டு, அவளுக்கு ராமன் பற்றிய செய்தி சொல்லி, அவளிடம் இருந்து ராமனுக்குச் சொல்ல வேண்டிய செய்தியையும் சேகரித்து விட்டு ராமன் இருப்பிடம் திரும்புகிறான்.

இந்த முயற்சியில், இலங்கையில், ராவணசேனை வேல் கொண்டு தாக்கியதால்  “தாள்களில், மார்பில், தோளில், தலையினில், தடக் கைதம்மில், வாள்களின், வேலின், வாளி மழையினின் வகிர்ந்த புண்கள்” அவன் உடம்பு முழுதும். ராமனுக்காக அத்தனையும் தாங்கி சண்டை செய்து வெற்றியோடு திரும்பியவன்.

எப்பேர்ப்பட்ட ஈடுபாடு, ஹனுமனுக்கு!

நல்ல செய்தியை மனதில் தாங்கிக்கொண்டு, இலங்கையிலிருந்து திரும்பிய ஹனுமனும் ராமனும் சந்தித்துக்கொண்ட தருணம் நெகிழ்ச்சியான ஒன்று.

ஹனுமன் ராமன் முன்பு வந்து நிற்கின்றான்.

நல்ல செய்தியை எதிர்பார்த்து, மௌனமாக கண்ணாலேயே  “என்ன செய்தி?” என்று கேட்கிறான் ராமன்.

“ஐயா! சீதையைக் கண்ணால் கண்டேன். அவள் சிறையில் வாடுகிறாள்” என்று வெடித்து அளவில்லா உணர்ச்சிகளுடன் அழவில்லை. மாறாக, அனுமன், எதுவும் பேசாமல், சீதை இருக்கும் தென் திசை நோக்கி பார்த்து, கண்ணால் சீதை இருக்கும் திசையை சொல்லிவிட்டு, நிலத்தில் விழுந்து வணங்குகிறான், கண்களில் கண்ணீரோடு.

“எய்தினன் அனுமனும்; எய்தி, ஏந்தல்தன்
மொய் கழல் தொழுகிலன், முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன், கையினன்,
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி, வாழ்த்தினான்”

ராமனைப் பார்த்தபடியே கண்ணில் நீர் சோர தென்திசையை நோக்கி கையெடுத்து கும்பிட்டுவிட்டு தரையில் விழுந்துஸ் வணங்கினான். அந்த அமைதி தான் ஹனுமன் சொன்ன செய்தி. அந்த அமைதியான செய்தியைக் கண்டதும் ராமன் தன் மனத்தினால் “இவன் கண்டதும் உண்டு; அவள் கற்பும் நன்று எனக் கொண்டனன்” என்று குறிப்பினால் உணர்ந்தான்.

“ஐயா! என் கண்ணால் கண்டேன் சீதையை” என்று சொன்ன செய்தி ஒலி வடிவம் கொண்டதல்ல, மாறாக அது ஒளி வடிவம் கொண்ட செய்தி அது.

ஹனுமன் தன் மனத்தால் நினைத்த செய்தியை கண்ணால் கடத்தி, ராமன் அதைக் கண்ணால் பார்த்து, தன் மனதில் சேர்த்த செய்தி.

ஹனுமன் எதுவும் சொல்லவில்லை, ராமனும் தன் செவியால் எதுவும் கேட்கவில்லை. ஆனால் ராமன் செய்தி உணர்ந்து நெஞ்சம் விம்மி கண்கள் நீர்கோர்த்து சீதையிடம் கொண்ட காதல் முற்றி,  “ஹனுமன் கண்டுகொண்டான், இனி கால தாமதம் செய்யலாகாது” என்றெண்ணி செயலில் இறங்குகிறான்.

“வீங்கின தோள்; மலர்க் கண்கள் விம்மின;
நீங்கியது அருந் துயர்; காதல் நீண்டதே”

இதன் பிறகு அனுமன் விலாவாரியாக நடந்ததை ராமனுக்கு விவரிக்கிறான்.

“கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்,
தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்.
அண்டர் நாயக! இனி, துறத்தி, ஐயமும்
பண்டு உள துயரும்”.

“சீதை உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்ற ஐயத்தையும், மனத்துயரையும் விட்டொழிக்க வேண்டும்” என்று வேண்டிக் கொள்கிறான்.

இப்படி வார்த்தைகளில் சொன்னதை விட, அந்த ஒற்றைப் பார்வையில் ராமனும் அனுமனும் எவ்வளவு அன்னியோன்யம் கொண்டிருந்தனர் என்பதை கம்பன், கவிதையால், சொல்லும்போது ஹனுமனை வணங்காமல் இருக்க முடியவில்லை.

பின் போரில் வென்று, திருமுடி சூட்டிய பின்னர் எல்லோருக்கும் விடை கொடுக்கும் நேரம் வந்த பொழுது, ராமன் ஹனுமனை நோக்கி, நெகிழ்ச்சியுடன்,  “உதவி செய்வதில் உனக்கு நிகர் யாருளர்? நீ எனக்குச் செய்த உதவிக்கு என்னால் எதுவும் ஈடு கொடுக்க முடியாது. என்னை ஆரத் தழுவிக்கொள்” என்று அந்த கருணைமாக் கடவுளும், தான் ஹனுமனுக்கு, கடன்பட்டதாய்ச் சொல்கிறான்.

“ஆர் உதவிடுதற்கு ஒத்தார்,
  நீ அலால்? அன்று செய்த
பேர் உதவிக்கு யான் செய் செயல்
  பிறிது இல்லை; பைம் பூண்
போர் உதவிய திண் தோளாய்!
 பொருந்துறப் புல்லுக! என்றான்”

கடவுளும் ஹனுமனின் அன்புக்கு கடன் பட்டிருக்கிறார். ஹனுமனின் பக்தியை வணங்குவோம்.

$$$

Leave a comment