-சேக்கிழான்
அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியில் குழந்தை ராமர் விரைவில் (ஜன. 22) எழுந்தருள உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கம் குறித்த நூலை திரு. சேக்கிழான் எழுதியுள்ளார். சென்னை, விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் இந்த நூலின் சில பகுதிகள் தொடராக இங்கே இடம் பெறுகின்றன... இது இரண்டாம் பகுதியின் தொடர்ச்சி...

2. அயோத்தி ராமர் கோயில் கடந்து வந்த பாதை! (ஆ)
1981 மார்ச் 16: தமிழகத்தின் வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தடையை மீறி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனால் மாபெரும் ஹிந்து எழுச்சி ஏற்பட்டது. இது தேசிய அளவில் ராமர்கோயில் இயக்கத்திற்குத் தூண்டுகோலானது.
1983 நவம்பர்: ஏகாத்மதா யாத்திரைகள் நாடு முழுவதும் நடைபெற்றன. அதில் கிடைத்த மக்களின் பேராதரவு, பின்னாளில் ராமர் கோயில் இயக்க யாத்திரைகளுக்கு தூண்டுதலாக இருந்தது.
1984 ஏப்ரல் 7-8: அலகாபாத்தில் (பிரயாகை) கூடிய தர்ம சன்சாத் (ஹிந்து துறவியர் பேரவை) ‘அயோத்தி, மதுரா, காசியில் உள்ள இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’ என்று கோரியது; அயோத்தியை மீட்போம் என்றும் பிரகடனம் செய்தது. கோரக்பூர் மடாதிபதி மஹந்த் அவைத்யநாத், ஸ்ரீராம ஜன்மபூமி முக்தி யக்ஞ சமிதியை நிறுவினார். ராமர் கோயிலை மீட்க, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கலும் ராம ஜன்மபூமி மீட்பு இயக்கத்தைத் தொடங்கினார்.
1984 செப்டம்பர்: பிகாரின் சீதாமார்ஹியில் இருந்து அயோத்தி நோக்கி ராம்-ஜானகி ரத யாத்திரையை பரிஷத் தொடங்கியது. பிரதமர் இந்திரா காந்தி (அக். 31) படுகொலையால், இந்த யாத்திரை இடையிலேயே நிறுத்தப்பட்டது.
1984, அக். 7: அயோத்தி ராமர் கோயிலை மீட்க நாடு முழுவதும் சங்கல்ப தினம் அனுசரிக்கப்பட்டது. லட்சக் கணக்கானோர் ராமர் கோயிலை விடுவிக்க சபதம் ஏற்றனர்.
1985 அக். 31: உடுப்பியில் கூடிய துறவியர் மாநாடு, அயோத்தியில் ஸ்ரீராமரைத் தரிசிக்க மசூதி வளாகத்தைத் திறக்க வேண்டும் என்று கோரியது; “சிவராத்திரிக்குள் ராமர் கோயிலைத் திறக்காவிட்டால் பூட்டை உடைக்கும் போராட்டம் நடத்துவோம்” என்று துறவிகள் அறிவித்தனர். கோரக்பூர் மடத்தின் தலைவர் மஹந்த் அவைத்யநாத் (உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் குரு) தலைமையில் போராட்டக் குழு அமைக்கப்பட்டது.
1986: பாபர் மசூதியைக் காக்க, இஸ்லாமியர்களால் பாபர் மசூதி நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது.
1986 ஜன. 25: ராமர் கோயிலில் வழிபட கதவுகளைத் திறந்து விடுமாறு பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞர் உமேஷ் சந்திர பாண்டே வழக்கு தொடர்ந்தார்.
1986 பிப். 1: அயோத்தியில் ராமரை வழிபட சர்ச்சைக்குரிய இடத்தில் (பாபர் மசூதி வளாகம்) அனுமதி அளிக்குமாறு மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே உத்தரவு. அதை ஏற்று அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு, பூட்டப்பட்ட கதவுகளைத் திறக்க ஆணையிட்டது.

1986 பிப். 3: இந்த நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைக்குமாறு இஸ்லாமியர்கள் தரப்பில் மனு செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை.
1986 பிப். 14: ராமர் கோயில் எதிர்ப்பு தினத்தை இஸ்லாமியர்கள் கடைப்பிடித்தனர். காஷ்மீரில் 51 ஹிந்துக் கோயில்களை முஸ்லிம் வெறியர்கள் இடித்தனர்.
1986 பிப். 23: சையத் ஷகாபுதீன் தலைமையில் கூடிய பாபரி மசூதி நடவடிக்கைக் குழு, ராமர்கோயிலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், 1987 ஆம் ஆண்டு குடியரசு தினத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தது. எனினும் இஸ்லாமிய மக்கள் அதனைக் கண்டுகொள்ளாததால் மதவெறியர்களின் திட்டம் தோல்வி அடைந்தது.
1987: ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பிரதிநிதிகள் சபை, முஸ்லிம் தலைவர்களின் மிரட்டல் போக்கையும், அதற்கு வளைந்துகொடுக்கும் அரசையும் கண்டித்தது. “ராமன் நமது தேசிய அடையாளம்; பாபர் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்” என்பதை இந்திய முஸ்லிம்கள் மறந்துவிட வேண்டாம் என்று அறிவுறுத்தியது.அயோத்தி ராமர் கோயிலுக்கு இந்திய முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தது.
1988 ஆக. 12: சர்ச்சைக்குரிய பகுதியில் தொழுகை நடத்துவோம் என்று பாபரி மசூதி நடவடிக்கைக் குழு அச்சுறுத்தியது. ஆனால், இஸ்லாமியர்கள் யாரும் முன்வரவில்லை.
1988 அக்.11-15: அயோத்தியில் ஸ்ரீராம மகா யக்ஞம். லட்சக் கணக்கான ஹிந்து பக்தர்கள் பங்கேற்பு.
1989 பிப். 1: அயோத்தியில் ரூ. 25 கோடி செலவில் பிரம்மாண்டமான ஆலயம் அமைப்பது என, அலகாபாத்தில் கூடிய துறவியர் பேரவை மாநாடு முடிவு செய்தது.
1989 ஜூன்: ‘அயோத்தியில் ராமர் கோயில் அமைப்போம்’ என்று பாஜக தனது மக்களவைத் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. முன்னதாக ‘ராமஜன்ம பூமியை ஹிந்துக்களிடம் அரசு ஒப்படைக்க வேண்டும்’ என்று பாஜக தேசிய செயற்குழு (ஹிமாசல்- பாலம்பூர்) தீர்மானம் நிறைவேற்றியது.
1989 ஜூன்: விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட, ஸ்ரீராமர் பெயர் பொறிக்கப்பட்ட செங்கற்களை அனுப்பும் வகையில், நாடு முழுவதும் ராம்சிலா யாத்திரைகள் நடத்தப்பட்டன.
1989 நவ. 7: சிலான்யாஸ் நடைபெறவுள்ள இடம் சர்ச்சைக்குள்ளானது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் மறுநாளே, அந்த இடம் சர்ச்சைக்குரியதல்ல என்று அரசு அறிவித்தது.
1989 நவ. 9: அயோத்தியில் பாபர் மசூதி வளாகத்துக்கு வெளியே ‘ராம் சிலான்யாஸ்’ எனப்படும் பூமிபூஜை நடைபெற்றது. பிகாரைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் காமேஸ்வர் சௌபால், ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.
1989 ஜூலை 1: சர்ச்சைக்குரிய பகுதி குழந்தை ராமருக்கே சொந்தம் என்று கோரி, ‘ராம் லல்லா விரஜ்மான்’ என்ற பெயரில், ஸ்ரீராமரின் நெருங்கிய நண்பராக தன்னை முன்வைத்து, ஓய்வு பெற்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி தேவகி நந்தன் அகர்வால் பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். (ஐந்தாவது வழக்கு) இது அயோத்தி நில உரிமை வழக்கில் திருப்புமுனையான வழக்காகும்.
1989 டிச. 2: பாஜக ஆதரவுடன், வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு மத்தியில் பொறுப்பேற்றது.
1990 ஜன. 27: ராமர் கோயில் கட்டுமானப் பணியை பிப். 14இல் தொடங்குவதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்தது.
1990 பிப். 9: பிரதமர் வி.பி.சிங்கின் வேண்டுகோளை ஏற்று, கோயில் கட்டுமானப் பணியை நான்கு மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக பரிஷத் அறிவித்தது.
1990 ஜூன் 23: ஹரித்வாரில் கூடிய விஸ்வ ஹிந்து பரிஷத் உயர்மட்டக் குழு, தேவோத்தன் ஏகாதசி நாளில் (அக். 30இல்) கோயில் நிர்மாணப் பணியை (கரசேவை) தொடங்குவது என முடிவெடுத்தது.
1990 செப்டம்பர்: பரிஷத் சார்பில் நாடு முழுவதும் ராமஜோதி யாத்திரைகள் நடத்தப்பட்டன; ராமஜோதி ரதங்கள் மூலமாக நாடு முழுவதும் பெறப்பட்ட தீபங்கள் கோடிக்கணக்கான வீடுகளில் ராமஜோதியாக ஏற்றப்பட்டன. அதேசமயம், லட்சக் கணக்கான கரசேவகர்கள் அயோத்தி நோக்கிச் சென்றனர்.
1990 செப். 25: ராமர் கோயிலுக்கு ஆதரவு தெரிவித்து, குஜராத்தின் சோமநாதபுரத்தில் இருந்து அயோத்தி நோக்கி ராம ரத யாத்திரையை பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி தொடங்கினார். அக்டோபர் 30ஆம் தேதி அயோத்தியை அடைவது அந்த ரத யாத்திரையின் திட்டம்.
1990 அக். 17: ராம ரத யாத்திரை தடுக்கப்பட்டால் தங்களது ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று தேசிய முன்னணி அரசுக்கு பாஜக எச்சரிக்கை விடுத்தது. நாடு முழுவதும் ராமபக்திப் பேரலை வீசியது.
1990 அக். 19: மூன்று அம்ச அமைதித் திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது. அதனை விஸ்வ ஹிந்து பரிஷத் நிராகரித்தது. கரசேவையைத் தடுக்க, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை ஜனாதிபதி பிறப்பித்தார். முஸ்லிம் தலைவர்களும் இதனை எதிர்த்ததால், அக். 21இல் அவசரச் சட்டத்தை அரசு வாபஸ் பெற்றது.
1990 அக். 23: பிகாரின் சமஸ்திபூரில் அத்வானி கைது. அன்றைய பிரதமர் வி.பி.சிங் உத்தரவுப்படி, அப்போது பிகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் அரசால் யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டது. அதையடுத்து, வி.பி.சிங் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றது.

1990 அக். 23 – நவ. 10: நாடு முழுவதும் லட்சக் கணக்கான ஹிந்து இயக்கத் தொண்டர்கள் பல்வேறு மாநில அரசுகளால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். புதிய பிரதமராக சந்திரசேகர் பொறுப்பேற்றவுடன் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
1990 அக். 30 – நவ. 2: அயோத்தியில் கூடிய கரசேவகர்கள் மீது முலாயம் சிங் அரசு துப்பாக்கிச் சூடு; கோத்தாரி சகோதரர்கள் உள்ளிட்ட கரசேவகர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் பலி. சரயூ நதி கரசேவகர்களின் ரத்தப் பெருக்கால் நனைந்தது. ராம ஜன்மபூமியை மீட்க நடந்த 77வது போர் இது.
1991 ஜூன் 24: அயோத்தியில் வெறியாட்டம் நடத்திய முலாயம் சிங் அரசு மீதான அதிருப்தி, அடுத்து வந்த உ.பி. சட்டசபைத் தேர்தலில் எதிரொலித்தது. பாஜக வென்று கல்யாண் சிங் தலைமையில் ஆட்சி அமைத்தது.
1992 செப்டம்பர்: விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ராமர் பாதுகை யாத்திரைகள் நாடு முழுவதும் நடந்தன; கரசேவகர்கள் மீண்டும் அயோத்தி நோக்கிச் சென்றனர்.
1992 டிச. 6: அயோத்தியில் இருந்த சர்ச்சைக்குரிய கட்டடம் (பாபர் மசூதி) கரசேவகர்களால் தரைமட்டமாக்கப்பட்டது; அதே இடத்தில் ராமருக்கு தற்காலிகக் கோயிலும் அமைக்கப்பட்டது; அடுத்த சில நாட்களில் நாட்டின் பல இடங்களில் மதக் கலவரம்; சுமார் 1,500 பேர் பலி. உ.பி. ம.பி, ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் இருந்த பாஜக ஆட்சிகள், அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் அரசால் கலைக்கப்பட்டன.

1992 டிச. 10: ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய ஹிந்து அமைப்புகள், மத்திய அரசால் தடை செய்யப்பட்டன. மேலும், கட்டடம் இடிப்பு தொடர்பாக அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீதும், அவர்களை வழிநடத்தியதாக பாஜக தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, பரிஷத் தலைவர் அசோக் சிங்கல் உள்ளிட்டோர் மீதும் இரு குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
1992 டிச. 16: பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரிக்க நீதிபதி எம்.எஸ்.லிபரான் ஆணையம் அமைப்பு. இந்த ஆணையம், 48 கால நீட்டிப்புகளுக்குப் பிறகு, 17 ஆண்டுகள் கழித்து, தனது அறிக்கையை 2009இல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்கியது.
1993 ஜன.1: அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கோயிலில் பக்தர்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கோரி, ஹிந்து வழக்கறிஞர்கள் சங்கம் தொடுத்த வழக்கை விசாரித்த லக்னோ அமர்வு உயர்நீதிமன்றம், ”தரிசனம் அனுமதிக்கப்பட வேண்டும்” என்று அரசுக்கு உத்தரவிட்டது.
1993 ஜன. 7: சர்ச்சைக்குரியதாக இருந்த பாபர் மசூதி வளாகத்தின் 2.77 ஏக்கர் நிலமும், அதன் அருகில் உ.பி. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 67.703 ஏக்கர் நிலமும் மத்திய அரசால், அயோத்தி நிலம் கையகப்படுத்தும் சட்டம்-1993இன் கீழ் கையகப்படுத்தப்பட்டன.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டடத்தை ஒட்டிய 67.703 ஏக்கர் நிலப்பரப்பை அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து, டாக்டர் இஸ்மாயில் ஃபரூக்கி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
1993 ஜன. 7: இந்திய அரசியல் சாசனத்தின் 143 (1) பிரிவின் கீழ், “சர்ச்சைக்குரிய இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதற்கு முன்னர் அந்த இடத்தில் ஹிந்து ஆலயம் இருந்ததா?” என்று உச்ச நீதிமன்றத்திடம் அன்றைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா கேள்வி எழுப்பினார்.
”மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பதால் இதற்கு பதில் அளிக்க முடியாது” என்று 1994இல் இதற்கு உச்ச நீதிமன்ற அமர்வு மறுப்பு தெரிவித்தது. ஆயினும் “அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு இவ்விஷயத்தில் முடிவெடுக்கும்” என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.
1993 ஜன. 25: ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக, ராம ஜன்மபூமி நியாஸ் அமைப்பு மஹந்த் ராமசந்திர தாஸ் பரமஹம்ஸர் தலைமையில் உருவாக்கப்பட்டது; இந்த அமைப்பின் பொறுப்பில் அயோத்தியில் 42 ஏக்கர் நிலம் இருந்தது. அங்கு கரசேவகபுரம் என்ற சிற்ப நகரை உருவாக்கி, கோயில் தூண்களின் சிற்ப வேலைப்பாடுகள் தொடக்கம்.
1993 ஜூன் 4: ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தளம் ஆகிய அமைப்புகள் மீதான மத்திய அரசின் தடை, நீதிபதி பாஹ்ரி தீர்ப்பாயத்தால் நீக்கப்பட்டது.
1993 அக். 5: மத்திய புலனாய்வு அமைப்பால் பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை தொடக்கம். இதில் பாஜக தலைவர்கள் அத்வானி, ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, பரிஷத் தலைவர்கள் அசோக் சிங்கல், வினய் கத்தியார் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு.
1994 ஏப். 3-4: ஹரித்வாரில் கூடிய துறவியர் மாநாடு, ராமர் கோயில் இயக்கத்தை தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்தது.
1994 அக். 24: இஸ்மாயில் ஃபரூக்கி வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, அரசுக்கு நிலத்தை கையகப்படுத்த அதிகாரம் உண்டு என்று தீர்ப்பளித்தது. தவிர, “இஸ்லாம் சமயத்தைப் பொருத்த வரை, முஸ்லிம்கள் எங்கு வேண்டுமானாலும் தொழுகை நடத்தலாம்; மசூதி என்ற கட்டடம் தொழுகைக்கு அத்தியாவசியமான ஒன்றல்ல’’ என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
1998 மார்ச் 19: அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்தது. ராமர் கோயிலுக்கான முயற்சிகள் மீண்டும் துவக்கம்.
2002- 2003: காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இரு தரப்பிலும் சமரசப் பேச்சு நடத்தினார்.
2002 பிப். 25: அயோத்தியில் ராமசேவகர்களின் பூர்ணாஹுதி மகா யக்ஞம். நாடு முழுவதில் இருந்து பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்பு.
2002 பிப். 27: அயோத்தியில் பூர்ணாஹுதி மகா யக்ஞத்தில் கலந்துகொண்டு குஜராத் திரும்பிய ராமசேவகர்கள் சென்ற ரயில் கோத்ரா ரயில் நிலையத்தில் எரிக்கப்பட்டதில் 59 பேர் பலி; 48 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து குஜராத்தில் பெரும் மதக் கலவரம்.
2002 மார்ச் 15: அயோத்தியில் சிலா தானம் (கல் தூண்களை ஒப்படைத்தல்) நிகழ்வு, மஹந்த் ராமசந்திர தாஸ் பரமஹம்ஸர் முன்னிலையில் நடைபெற்றது.
2002 ஏப்ரல்: அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னௌ சிறப்பு அமர்வில், அயோத்தி இடம் யாருக்கு சொந்தம் என்ற நில உரிமை வழக்கு விசாரணை தொடக்கம். அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் முன்னர் கோயில் இருந்ததா என்பது குறித்து இந்திய தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு.
2003 ஜனவரி: அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அயோத்தியில் இந்திய தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வைத் தொடங்கியது. 160 நாட்கள் அகழாய்வு நடைபெற்றது. அந்த இடத்தின் கீழே, 50 சிற்பத் தூண்களுடன் கூடிய, வடமாநில ஆலயக் கட்டுமானம் போன்ற கட்டடம் இருந்துள்ளதை தொல்லியல் துறை உறுதிப்படுத்தியது.
2003 ஜூலை 31: மஹந்த் ராமசந்திர பரமஹம்ஸர் காலமானார். மஹந்த் நிருத்ய கோபால்தாஸ், ராம ஜன்மபூமி நியாஸின் தலைவரானார்.
2003 ஆகஸ்ட் 25: இந்திய தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஆர்.ஆலம், பன்வர் சிங், கேம்கரன் ஆகியோரிடம் 504 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை அளித்தது. அந்த ஆய்வறிக்கை, அங்கு அடித்தளத்தில் மிகப் பெரிய கோயில் இருப்பதை உறுதிப்படுத்தியது.
2005 ஜூலை 5: அயோத்தி ராம ஜன்மபூமியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கோயிலைத் தகர்க்க இஸ்லாமிய பயங்கரவாதிகள் முயற்சி. சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மூவர் தங்கள் இன்னுயிரை ஈந்து பயங்கரவாதிகளை முறியடித்தனர். அந்த பயங்கரவாதிகள் ஐவரும் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வில் பக்தர் ஒருவரும் மரணம் அடைந்தார்.
2009 ஜூன் 30: அயோத்தி கட்டடம் இடிப்பு குறித்து விசாரித்த நீதிபதி லிபரான் ஆணையம் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அறிக்கை சமர்ப்பிப்பு. இதில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, அசோக் சிங்கல் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
2010 செப். 30: அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ்.வி.கான், சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, அயோத்தி நில உரிமை வழக்கில் தீர்ப்பு வழங்கியது. ‘கடவுள் பால ராமன் (ராம் லல்லா), நிர்மோஹி அகாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்புக்கும் 2.77 ஏக்கர் நிலத்தை பங்கிட்டு அளிக்க வேண்டும்; தற்காலிக ராமர் கோயில் அமைந்துள்ள முந்தைய மசூதியின் மைய இடம் ராம் லல்லாவுக்குச் சொந்தமானது’ என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
2011 மே 9: உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மூன்று தரப்பினரும் மனுச் செய்ததால், அத்தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
2014 மே 26: நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது.
2017 மார்ச்19: உத்தரப்பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் (பாஜக) பொறுப்பேற்பு.
2017 மார்ச் 21: ராமஜன்மபூமி- பாபர் மசூதி விவகாரத்தில் இணக்கமான தீர்வை எட்ட புதிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தெரிவித்தார்.
2017 ஆகஸ்ட் 11: ராமர் கோயில் நில உரிமை வழக்கு- உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான மூவர் அமர்வு விசாரணை தொடக்கம்.
2018 செப். 27: “1994ஆம் வருடத்திய இஸ்மாயில் ஃபரூக்கி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்ற இயலாது” என்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு உறுதிப்படுத்தியது. ‘இஸ்லாம் சமயத்தில் மசூதி அவசியமானதல்ல’ என்ற முந்தைய தீர்ப்பை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
2019 ஜன. 8: அயோத்தி மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, என்.வி.ரமணா, யு.யு.லலித், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்டதாக அமைக்கப்பட்டது.
2019, ஜன. 10: இந்த வழக்கில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகிக் கொள்வதாக அறிவித்ததையடுத்து, ஜனவரி 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
2019, ஜன. 25: அதன்பின் புதிய அரசியல் சாசன அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இதில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்ஏ.நசீர் ஆகியோர் இடம் பெற்றனர்.
2019, ஜன. 29: அயோத்தியில் உண்மையான உரிமையாளர்களிடம் (பரிஷத்) இருந்து கையகப்படுத்தப்பட்ட 67.703 ஏக்கர் நிலத்தை திரும்ப அளிக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அனுமதி கோரியது.

2019 மார்ச் 4 – ஏப். 14: விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பால் ராமேஸ்வரத்திலிருந்து அயோத்தி நோக்கி ராமராஜ்ய யாத்திரை நடத்தப்பட்டது.
2019, பிப். 26: அயோத்தி வழக்கில் சமரசப் பேச்சுக்குப் பரிந்துரைப்பது குறித்து மார்ச் 5ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
2019 மார்ச் 8: முன்னாள் நீதிபதி எஃப்.எம்.ஐ.கலிஃபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய சமரசக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
2019 ஆக. 2: சமரச முயற்சிகள் வெற்றி பெறவில்லை என, மூவர் குழு அறிக்கை தாக்கல் செய்தது.
2019 ஆக. 6: அயோத்தி நில உரிமை வழக்கு விசாரணை, தினசரி அடிப்படையில் தொடக்கம். ராம ஜன்மபூமி அறக்கட்டளை சார்பில், தமிழகத்தைச் சார்ந்த மூத்த வழக்குரைஞர் கே.பராசரன் வழக்காடினார்.
2019 அக். 15: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வால் 40 நாட்கள் தொடர்ந்து விசாரிக்கப்பட்ட வழக்கு விசாரணை நிறைவு; தீர்ப்பு ஒத்திவைப்பு.
2019 நவ. 9: உச்சநீதிமன்றம் அயோத்தி நில உரிமை வழக்கில் இறுதித் தீர்ப்பளித்தது. ‘சர்ச்சைக்கு உரியதாக இருந்த குறிப்பிட்ட 2.77 ஏக்கர் நிலமும் ராம் லல்லாவுக்கே சொந்தம்; அந்த இடத்தில் ராமர் கோயில் அமைக்க தனி அறக்கட்டளையை மத்திய அரசு அமைக்க வேண்டும்; இஸ்லாமியர்கள் மசூதி கட்ட வேறிடத்தில் 5 ஏக்கர் நிலம் மாநில அரசால் அளிக்கப்பட வேண்டும்’ என்று 1,045 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு அளிக்கப்பட்டது.
2019 டிச. 13: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 18 மறுசீராய்வு மனுக்களையும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தள்ளுபடி செய்தார்.
2020 பிப். 5: அயோத்தியில் ராமர் கோயில் அமைக்க, மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் தலைமையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்தஷேத்ர அறக்கட்டளையை அமைப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற மக்களவையில் அறிவித்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 2.77 ஏக்கர் நிலத்தையும், ஏற்கெனவே கையகப்படுத்தியுள்ள 67.7 ஏக்கர் நிலத்தையும் கோயில் கட்ட அளிப்பதாகவும் அவர் அறிவித்தார்.
2020 செப். 30: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது, லக்னோ நகரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

2020 ஆக. 5: அயோத்தியில் ஸ்ரீராமர் கோயில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட ஹிந்து இயக்கத் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
2021 ஜன. 15: ராமர் திருக்கோயிலை நாட்டு மக்கள் அனைவரது பங்களிப்புடன் மீண்டும் அமைப்பதற்காக ஸ்ரீ ராம ஜன்மபூமி ராமர் கோயில் நிதி சமர்ப்பண இயக்கம் தொடங்கியது. நாடு முழுவதும் 400 இடங்களில் பரிஷத் நிர்வாகிகள் இப்பணியைத் தொடங்கினர். சுமார் ரூ. 2,000 கோடி செலவில் திருக்கோயிலை கட்டத் திட்டமிடப்பட்டது.
2024 ஜன. 1- ஜன. 15: பிரம்மாண்டமாக நிர்மாணிக்கப்படும் அயோத்தி ராமர் கோயிலின் முதல் தளப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், கோயிலின் கர்ப்பகிருஹத்தில் குழந்தை ராமரை (ஸ்ரீராம் லல்லா) பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதற்காக, நாடு முழுவதும் ஸ்ரீராமரின் அட்சதைகள், அழைப்பிதழ்கள் மக்களிடம் விநியோகம் செய்யப்படுகின்றன.
2024 ஜன. 22: அயோத்தி ஸ்ரீராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வு நடைபெறுகிறது. அன்று நாடு முழுவதும் ஹிந்துக்கள் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றுமாறும், பொது வழிபாட்டு நிகழ்வுகளில் ஈடுபடுமாறும் ஆர்.எஸ்.எஸ். வேண்டுகோள் விடுத்துள்ளது.
(தொடர்கிறது)
$$$
முழுமையான நூலை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்க:
மொத்த பக்கங்கள்: 128+ 4; புத்தகத்தின் விலை: ரூ. 125-
விஜயபாரதம் பிரசுரம், சென்னை
போன்: +91 89391 49466
இணைய முகவரி: https://vijayabharathambooks.com/
மின்னஞ்சல்: contact@vijayabharathambooks.com