-ச.சண்முகநாதன்

4. போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது
வரலாறு படிப்பதற்கல்ல, படைப்பதற்கு.
500+ வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், சுதந்திரம் பெற்று 75+ ஆண்டுகள் கடந்த நிலையிலும் மகுடம் இழந்த அயோத்தியாவில் ஸ்ரீ ராமனுக்கு ஒரு கோயில் எழுப்ப முடியாத நிலை.
ஆனால் இன்று வரலாறு படைக்கப்படுகிறது.
கோயிலைக் காப்பதற்காக உயிரையும் கொடுத்த மன்னர்கள் பிறந்த நாடு பாரத நாடு. அதே வழியில், இன்று ஒரு கோயிலுக்கே உயிர் கொடுக்கும் மன்னன் ஆளுகின்ற நேரம் இது.
370 நீக்கமோ, ராம ஜன்மபூமி கோயிலோ, இப்படி கத்தியின்றி ரத்தமின்றி, ofcourse அரச உறுதியுடன் – செகுலரிஸ போதை மருந்து கொடுத்து தேசத்தை மயக்கத்தில் வைத்திருந்தவர்களிடம் இருந்து – மீட்டு வந்தவர். அவருக்கு முன் தியாகம் செய்தவர் நூறாயிரம்.
“எக் கோடியாராலும் வெலப்படாய்” என ‘கை’கொடுத்த வரத்தினால், ராமன் பிறந்த இடத்தில், அந்நியன் ஒருவன் கட்டிய கட்டடம் நம்மைப் பார்த்து எக்காளமிட்டுக் கொண்டிருந்தது எக்காலமும்.
இன்று அந்த பத்து தலை கொடூரம், இவர் செய்த செய்கையினால், தலை குப்புற விழுந்து இதோ ராமர் கோயில் தலைநிமிர்ந்து நிற்கிறது. இனி வரும் யுகங்களில் ராமன் பெருமை பேசும் இந்தக் கோயில் மீது எந்த அந்நிய சக்தியும் ‘கை’வைக்கத் துணியாது என்று நம்புவோம்.
இந்தச் சாதனை வெறுப்பினால் வந்தது அல்ல; பகை வளர்த்து வந்ததும் அல்ல. அன்பினால், மன உறுதியால் வந்தது; நேர்மையினால் வந்தது; அரசியல் சாமர்த்தியத்தால் சாத்தியப்பட்டது.
யாரோடும் பகை கொள்ளாமல் இந்த ராம ஜன்மபூமி மீட்பு சாத்தியமாகி இருக்கிறது,
“யாரொடும் பகை கொள்ளலன்” என்று வசிஷ்டன் ராமனுக்கு அறிவுரை தருகிறான், அதனால் விளையும் நன்மைகளை பட்டியல் இட்டபடியே. மோடி அப்படியே முழுவதும் அதை கடைப்பிடிக்கிறார்.
“யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்
போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்குல் செல்லாது; அது தந்தபின்,
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ?”
கம்பன் மொழி இது. எவ்வளவு உண்மை! போர் ஒடுங்கியிருக்கிறது. ராம ஜென்மபூமியை வைத்து அவர்கள் செய்த அணைத்து எதிர்மறை அரசியலும் ஒடுங்கியிருக்கிறது. ஆனால் இவரின் புகழ் ஒடுங்கவில்லை; தன் பக்கமும் சேதமில்லை; அதனால் யாரும் அழிய வேண்டியதில்லை.
உன்னத நிலையை உருவாக்கி ராம ஜன்மபூமியை உருவாக்கிக் காட்டியிருக்கிறது இந்த சேனை.
மக்களிடையே மகிழ்ச்சி கரை புரண்டோடுகிறது.
மகிழ்ச்சியில் ஆடுகின்றனர்; மனம் போன போக்கில் பாடுகின்றனர்; பார்த்தவர் கைகளைப் பிடித்துக்கொண்டு உணர்ச்சி மிகுகின்றனர். என்ன சொல்வதென்று அறியாமல் மகிழ்ச்சிப் பிதற்றம் பிதற்றுகின்றனர்.
“ஆடுகின்றனர் பண்ணடைவின்றியே
பாடுகின்றனர் பார்த்தவர்க்கே கரம்
சூடுகின்றனர் சொல்லுவதோர்கிலர்”
ராமனின் அறம், இந்தப் பொய்யர்களின் சூழ்ச்சிகளைத் தின்று, அந்தத் தீமையின் மார்பில் புக்கு ஓடி உயிர் பருகி, புறம் போகிறது இன்று.
$$$