ஆலயம் காணும் அயோத்தி நாயகன் – 1

-சேக்கிழான்

அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியில் குழந்தை ராமர் விரைவில் (ஜன. 22) எழுந்தருள உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கம் குறித்த நூலைதிரு. சேக்கிழான் எழுதியுள்ளார். (காண்க: கீழே உள்ள அறிவிப்பு). சென்னை,விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் இந்த நூலின் சில பகுதிகள் தொடராக இங்கே இடம் பெறுகின்றன...

1. மாபெரும் வரலாற்றுத் தருணம்!

“ஆயிரம் ஆண்டுகள் போராடி,
லட்சக் கணக்கில் பலியாகி,
அடிமை விலங்கை உடைத்திட்டோம்!
ஆனால் இன்னும் அயோத்தியில் 
ராமன் இருப்பது சிறையினிலே- நம்
ராமன் இருப்பது சிறையினிலே!
அடிமை விலங்கை உடைப்போம் நாம்!
அயோத்தி ராமனை மீட்போம் நாம்!”

-இது 1980-90களில் ஹிந்து இயக்க  ஊர்வலங்களில் பாடப்பட்ட முழக்கம்.

இன்று, அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கம் மாபெரும் வெற்றி பெற்று, குழந்தை ராமர் தனக்கான கோயிலில், 2024  ஜன. 22இல் குடிபுக இருக்கிறார். இந்தப் பொன்னான தருணத்திற்காக பலியான, தியாகம் செய்த, உழைத்த அனைவருக்கும் நமது வந்தனங்கள்!

சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மிக நீண்ட, மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் ராமர் கோயில் இயக்கம் தான். அதிலும் 1986 முதல் 1992 வரையிலான காலகட்டம், மிகவும் உணர்ச்சிகரமானது; இந்திய அரசியலையே புரட்டிப் போட்டது. அதன்பிறகு சட்டப் போராட்டங்களின் முடிவில் பலநூறு ஆண்டுகாலச் சமர் முடிவுக்கு வந்து, அயோத்தி ராமர் கோயிலின் இடம் மீட்கப்பட்டது.

1528ஆம் ஆண்டு மதவெறியர்களால் அயோத்தியில் இடித்து அகற்றப்பட்ட ஸ்ரீராமர் கோயில், ஹிந்துக்களின் ஒன்றுபட்ட சக்தியாலும், தொடர் போராட்டத்தாலும், சுமார் 500 ஆண்டுகள் கழிந்த நிலையில், மீண்டும் நிறுவப்படுகிறது. இது ஹிந்துக்களின் தன்மானச் சின்னமாக வரலாற்றில் பதிவாகிறது. இதற்காக  தங்கள் ஆருயிரை ஆஹுதி ஆக்கிய அனைத்து தியாகியருக்கும் நமது வீர வணக்கங்கள்!

விண்ணுலகை விஞ்சும் அயோத்தி:

  ‘அயோத்யா’ என்ற சொல்லுக்கு  ‘யுத்தம் இல்லாத பூமி’ என்று பொருள். இதனை தமிழ்க் கவி கம்பர் தனது அழகிய கவிதையில் இவ்வாறு கூறுகிறார்:

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.

   (கம்ப ராமாயணம்- பாலகாண்டம்- நாட்டுப்படலம்- 1:2:53)

இதன் பொருள்:  “கோசல நாட்டில் வறுமை சிறிதும் இல்லாதலால்  வண்மையின் சிறப்புத்  தெரிவதில்லை (வலியோர்- எளியோர் பேதம் இல்லை);  பகைகொண்டு போர்புரிபவர் இல்லாதலால் உடல்  வலிமையை  உணர வழியில்லை (எதிரிகள் இல்லாத நாடு);   பொய்  பேசுவோர் இல்லாமையால்  உண்மையின்  பெருமை தெரிய வழியில்லை (அனைவரும் நல்ல குடிமக்கள்);   கேள்வி ஞானம்  மிகுந்திருப்பதால்  அங்கு அறியாமை சிறிதுமில்லை (மக்கள் அனைவரும் எல்லாம் அறிந்தவர்கள்)” என்பதாகும்.

அயோத்யா, மதுரா, மாயா காசி, காஞ்சி, அவந்திகா/
புரி த்வாரகாவதீ சைவ ஸப்னத்த மோக்‌ஷ தாயிகா//

இது நாள்தோறும் ஹிந்துக்கள் போற்றி வழிபடும் தோத்திரம். இந்த ஏழு நகரங்களும் மோட்சபுரி என்றழைக்கப்படுகின்றன. இந்த ஏழு புனித நகரங்களில் முதன்மையானது ஸ்ரீராமனின் ஜன்மபூமியாகிய அயோத்தி. மற்றவை: மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சிபுரம், உஜ்ஜயினி, துவாரகை.

அயோத்தியை கம்பர் கீழ்க்கண்டவாறு பாடுகிறார்:

நிலமகள் முகமோ! திலகமோ கண்ணோ!
  நிறைநெடு மங்கல நாணோ!
இலகுபூண் முலைமேல் ஆரமோ! உயிரின்
  இருக்கையோ! திருமகட்கினிய
மலர்கொலோ! மாயோன் மார்பில் நன்மணிகள்
  வைத்த பொற்பெட்டியோ! வானோர்
உலகின்மேல் உலகோ! ஊழியின் இறுதி
  உறையுளோ! யாதென உரைப்போம்!

   (கம்ப ராமாயணம்- பால காண்டம்- நகரப்படலம்: 1:3:2)

நிலமகளின் அழகிய முகம்; மாலவன் மார்பில் அணிந்த பொன்னாபரணம், வானுலகை விஞ்சும் உலகம்; ஊழியையும் தாங்கும் உறையுள் என்றெல்லாம் கம்பரால் பாடப்பட்ட அயோத்தி, திரேதா யுகத்தில் ஸ்ரீராமன் அவதரித்த புண்ணிய பூமி.

நடையில் நின்றுயர் நாயகன், மரியாதா புருஷோத்தமன், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று தரணிக்கு எடுத்துச் சொன்ன தனயன், பகைவனுக்கும் அருளிய பண்பாளன், வேடுவனையும் குரங்கினையும் அரக்கனையும் சகோதரனாகத் தழுவிய உயர்மானுடன்; வீரத்தின் அடையாளமான வில்லின் விஜயன், ஒருவனுக்கு ஒருத்தி என்று உலகிற்கு உதாரணமாக வாழ்ந்த ஏகபத்தினி விரதன், மக்கள் விரும்பும் நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டான ராமராஜ்யத்தின் மன்னன் ஸ்ரீராமன். அவனது ஜன்மபூமி அயோத்தி.

அத்தகைய, எதிரியே இல்லாத, எங்கும் இன்பம் நிறைந்த நாடு ஸ்ரீராமனின் அயோத்தி. ஆனால், அவரது ஜன்மஸ்தானமே அந்நிய ஆக்கிரமிப்பாளர்களால் தகர்க்கப்பட்டு, அங்கு அடிமைச்சின்னம் அமைந்தது நமது நாட்டின் தீயூழ் என்றுதான் சொல்ல வேண்டும்.

விதியின் சதி:

நமது நாட்டில் ஹிந்து மன்னர்கள் ஒருவருடன் ஒருவர் போரிட்டு, ஒற்றுமைக் குறைவாக இருந்த காலத்தைப் பயன்படுத்தி, அந்நிய தேசத்திலிருந்து, நமக்கு முற்றிலும் அந்நியமான மதத்தைச் சார்ந்தவர்கள் பெரும் படையெடுத்து வந்த போது, அவர்களது அறமற்ற போர்முறைகளின் முன்பு நமது வீரர்கள் வீழ்ந்தனர்; குறிப்பாக பீரங்கிப் படை இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் முக்கியமான ஆயுதமாக இருந்தது. அதன் விளைவாகவே நமது ஹிந்து மன்னர்கள் பலர் வீழ்ச்சி அடைந்தனர்.

பொது யுகம் ஆயிரமாவது ஆண்டுகளில் பாரதத்தின் வடமேற்குப் பகுதியில் அந்நியர்களின் படையெடுப்பு தொடங்கியது. ஆரம்பத்தில் நமது செல்வத்தைக் கொள்ளையடிக்க வந்த மிலேச்சர்கள், பாரதத்தின் அதீத செல்வ வளத்தால் மீண்டும் மீண்டும் கொள்ளையிடத் துணிந்தனர். ஹிந்துப் பேரரசுகள் சரிவடைந்த காலகட்டம் அது. நமது மன்னர்களின் ஒற்றுமைக் குறைவு அந்நியர்களுக்கு வசதியாகிப் போனது.

இதுவரையிலான போர்களில் மன்னர்கள் யார் வென்றாலும் தோற்றாலும், ஆலயங்கள் சிதைக்கப்பட்டதில்லை. அந்த நிலையும், அந்நிய மத ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றியின்போது மாறியது. நமது புனிதத் தலங்களை சீரழிப்பதே ஆக்கிரமிப்பாளர்களின் பிரதான நோக்கமாக இருந்ததை நமது மக்கள் தாமதமாகவே உணர்ந்தனர். அப்படித்தான் நமது புனிதமான ஆலயங்கள் பலவும் தகர்க்கப்பட்டு, அந்த இடங்களில் அந்நிய மதத் தலங்கள் கட்டப்பட்டன.

குறிப்பாக, சோமநாதபுரம் (சோமநாதர் ஆலயம்), காசி (விஸ்வநாதர் ஆலயம்), மதுரா (கிருஷ்ண ஜன்மபூமி), அயோத்தி (ராம ஜன்மபூமி) ஆகிய இடங்களில் இருந்த மாபெரும் வழிபாட்டுத் தலங்கள் மிலேச்சர்களால் தகர்க்கப்பட்டன. இவற்றை மீட்க காலந்தோறும் வீரர்கள் போரிட்டு மாண்டனர்.

நாடு முழுவதும் இவ்வாறு தகர்க்கப்பட்ட ஹிந்து ஆலயங்களின் எண்ணிக்கை 3000க்கு மேல். ஆயினும், இவற்றில் காசி, அயோத்தி, மதுரா ஆகிய மூன்றையும் மீட்கும் போராட்டம் தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளது. ஹிந்து மன்னர்கள் எழுச்சி பெறுகையில் இந்த ஆலயங்கள் மீட்கப்படுவதும், இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மறுபடி வெல்லும்போது இவை தாக்கப்படுவதும்   சரித்திரத்தில் பதிவாகி இருக்கின்றன.

நாடு சுதந்திரம் பெற்றவுடன், தேசிய உணர்வு புத்தெழுச்சி பெற்றது போல பண்பாட்டுப் புத்தெழுச்சிக்கான முயற்சிகளும் தொடங்கின. குறிப்பாக, குஜராத்தின் சோமநாதபுரத்தில் அந்நிய ஆக்கிரமிப்பாளன் கஜினி முகமதுவால் அழிக்கப்பட்ட ஜோதிர்லிங்கத் தலமான சோமநாதர் ஆலயத்தை மீண்டும் எழுப்பும் முயற்சி தொடங்கியது. அதன் பின்புலத்தில் நாட்டின் முதல் துணைப் பிரதமரான சர்தார் வல்லபபாய் படேலும் அமைச்சர் கே.எம்.முன்ஷியும் இருந்தனர். பண்பாட்டுப் பெருமிதமே தேசிய உணர்வின் ஊற்று என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியில் அமையும் பிரமாண்டமான ஆலயம்.

ராமன் இல்லாத அயோத்தி:

அதையடுத்து, ஹிந்துக்கள் மிகவும் புனிதமாகக் கருதும் காசி, அயோத்தி, மதுரா ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிமிப்புகளையும் அகற்றி புதிய ஆலயங்களை கௌரவச் சின்னங்களாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், அதனை அன்றைய ஜவஹர்லால் நேருவின் அரசு செவிகொடுத்துக் கேட்கவில்லை. மதச்சார்பின்மை என்ற மாயையில் அவர் கட்டுண்டிருந்தார். இந்நிலையில் தான், சுதந்திரத்திற்கு முன்னரே தொடங்கி இருந்த அயோத்தி ராம ஜன்மபூமி இயக்கம் மீண்டும் வலுப்பெற்றது.

“அருந்திறல் இழந்த அயோத்தி போல
பெரும்பெயர் நகரம் பெரும் பேதுற்றது”

-என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிச் சென்றார் சேரநாட்டு இளவல் இளங்கோவடிகள். கோவலனும் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தைப் பிரிந்ததும் அது “ராமன் இல்லாத அயோத்தி போல” ஆயிற்று என்று உவமை கூறினார்.

சிலப்பதிகாரம் பின்னாளில் நடக்க இருந்த துயரத்தை முன்கூட்டியே அறிவித்ததோ? பல்லாயிரம் ஆண்டுகளாக நமது மாபெரும் புனிதத் தலமாக விளங்கிய அயோத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமியப் படையெடுப்பாளனால் சிதைக்கப்பட்டது. அங்கிருந்த எழில்மிகு  ராமர் ஆலயம் தகர்க்கப்பட்டு ஆக்கிரமிப்புச் சின்னமாக மசூதி எழுப்பப்பட்டது.

அப்போதும், அதைத் தொடர்ந்த பல நூற்றாண்டுகளிலும் ராம ஜன்மபூமியை மீட்க மன்னர்கள், படைவீரர்கள், சாதுக்கள், சாமானியர்கள், வனவாசிகள் என்று பலதரப்பட்ட ஹிந்துக்களும் தொடர்ந்து போராடி ரத்தம் சிந்தியுள்ளனர்.

1989 சிலான்யாஸுக்காக அயோத்தி அனுப்பப்பட்ட 3.5 லட்சம் புனித செங்கற்கள்.

சுயமரியாதை மீட்பு இயக்கம்:

உண்மையில் ராமர் கோயில் மீட்பு என்பது சமய வழிபாடு தொடர்பானது மட்டுமல்ல. இது இந்த நாட்டின் பாரம்பரியம் தொடர்பானது; இந்த நாட்டின் பண்பாட்டுச் செழுமைக்குக் காரணமான ஹிந்து தர்மத்தின் சுயமரியாதை தொடர்பானது; இந்த நாட்டின் எதிர்காலத் தலைமுறையினர்  பாரம்பரியப் பண்பாட்டு இழையுடன், தன்மானத்துடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்கான உயிர்ப் போராட்டம் இது.

அயோத்தி மீட்புக்காக அந்நியர் ஆட்சியில் ஆயுதமேந்தி நடைபெற்ற போராட்டம், சுதந்திர இந்தியாவில் சட்டப்படியும், மக்களை ஒருங்கிணைத்தும்  அமைதியான முறையில் நிகழ்ந்தது. ஆனால், ஹிந்துக்களின் சாதுவான மனநிலையை அரசியல்வாதிகள் ஏகடியம் செய்தனர். அதன் விளைவாக, இந்த மாபெரும் போராட்டத்தின் இறுதிக் கண்ணியாக, 1992  டிச. 6-இல், பக்தர்களின் ஆவேசத்தில் அடிமைச்சின்னம் தகர்க்கப்பட்டது; நமது பண்பாட்டின் மீதான ஆக்கிரமிப்புச் சின்னம் அகற்றப்பட்டது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை உலகம் அன்று உணர்ந்தது.

அதையடுத்து அரசியல் அரங்கிலும், நீதிமன்ற வழக்குகளிலும் ஹிந்துக்கள் தொடர்ந்து மேலும் பல ஆண்டுகள் போராடினர். போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரக்கனுக்கு உயிர்ப்பிச்சை அளித்த அந்த சீதாராமன் போலவே ஹிந்துக்களும் பல சமாதான வாய்ப்புகளை இஸ்லாமிய சகோதரர்களுக்கு அளித்தனர். ஆனால், வாக்குவங்கி வலிமை குறித்த கர்வத்திலும் கும்பல் மனோபாவத்திலும் அவற்றை நிராகரித்து, பிற அரசியல் கட்சிகளின் வலையில் வீழ்ந்த இஸ்லாமியர்களுக்கு, ஹிந்துக்களின் நல்லெண்ணம் புரியவில்லை.

இறுதியில் சட்டப் போரில் ஹிந்துக்கள் வென்றனர்.  சத்தியம் வென்றது. அயோத்தியில் மிகப் பிரமாண்டமான ஆலயம் ஸ்ரீராமனுக்கு அமைந்துவிட்டது.

ஸ்ரீ ராம ஜன்மபூமியில் எழுந்திருக்கும் இந்தப் பேராலயம் தர்மத்தின் வெற்றியை முரசறைகிறது; ஆபிரகாமிய அடிப்படையிலான புற மதங்களின் ஆக்கிரமிப்பும் அராஜகமும் இந்நாட்டில் தொடர இனியும் அனுமதிக்க மாட்டோம் என்று கட்டியம் கூறுகிறது. ஒருங்கிணைந்த ஹிந்து சக்தியின் ஆன்ம வல்லமையால் இன்று தேசம் புத்திளமை கொள்கிறது.

14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து அயோத்தி மீண்ட ராமரையும் சீதையையும் கண்டு மகிழ்ந்த நாட்டு மக்கள் போல, சுமார் 500 ஆண்டுகள் அடிமைப்பட்டிருந்த அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியில் அமைக்கப்பட்டிருக்கும் பேராலயத்தின் கர்ப்பகிருஹத்தில் குழந்தை ராமர் (ஸ்ரீராம் லல்லா) சிலை நிறுவப்படுவதைக் காண உலகமே ஆனந்தத்துடன் காத்திருக்கிறது.

 இந்த மகத்தான வரலாற்று நிகழ்வு நிகழும் தருணத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே நமது பாக்கியம். இத்தருணத்தை உள்ளன்புடன், மகிழ்வுடன் நாமும் கொண்டாடி மகிழ்வோம்.  இந்த நல்ல நேரத்தில், ராமர் ஆலயத்தை மீட்க நடத்திய போராட்டங்களை அறிவதும், அதனை நமது அடுத்த தலைமுறைக்குச் சொல்வதும் அவசியம்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில், அயோத்தி மீட்புக்கான மாபெரும் மக்கள் இயக்கத்தில் மூன்று அம்சங்கள் பெரும் பங்கு வகித்தன. முதலாவது மக்களின் தொடர் போராட்டம்; இரண்டாவது சட்டரீதியிலான யுத்தம்; மூன்றாவது தொல்லியல் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவுகள். இந்த மூன்று பிரதான அம்சங்களும் சுருக்கமான முறையில் வரக்கூடிய அத்தியாயங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த மாபெரும் வரலாற்றுத் தருணத்தை எட்ட, நாம் கடந்துவந்த பாதையையும், இவற்றுக்குக் காரணமான நாயகர்களையும் அறிவதும் கூட, இந்த வெற்றித் தருணத்தில் மிகவும் இன்றியமையாதது.

(தொடர்கிறது)

$$$

நூல் வெளியீட்டு விழா அறிவிப்பு

வரும் 2024 ஜன. 22ஆம் தேதி, அயோத்தி, ஸ்ரீ ராம ஜன்மபூமியில் குழந்தை ராமனின் சிலை ‘பிராணப் பிரதிஷ்டை’ செய்யப்படுகிறது. ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையால் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்டமான கோயிலின் கர்ப்பகிருஹத்தில் பாலராமன் பிரவேசிக்க இருக்கிறான். சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு ராமன் தனக்குரிய இடத்தை அடைந்திருக்கிறான்.

ஆனால், இந்த வெற்றி எளிதில் அடையப்படவில்லை. இதற்காக எண்ணற்ற ராம பக்தர்கள் போராடி இருக்கின்றனர். இந்த ராமகாரியத்தில் லட்சக் கணக்கானோர் தமது இன்னுயிர் ஈந்துள்ளனர்; கோடிக் கணக்கானோர் தங்கள் கடும் உழைப்பை நல்கி இருக்கின்றனர். இவை வருங்காலத் தலைமுறைக்குக் கூறப்படுவது அவசியம். இந்த வெற்றிச் சரித்திரத்தை முழுமையான ஆவணமாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்,  எழுத்தாளர் திரு. சேக்கிழான் இந்நூலை எழுதி இருக்கிறார்.

  • அயோத்தி ராமர் கோயில் கடந்து வந்த பாதையின் கால வரிசைப்  பட்டியல்,
  • மாபெரும் மக்கள் இயக்கத்தின் தொடர் போராட்டங்கள்,
  • நீதிமன்றங்களில் நடத்திய சட்டப் போராட்டங்கள்,
  • தொல்லியல் ஆராய்ச்சி முடிவுகள்,
  • இந்தப் போராட்டத்தின் கதாநாயகர்கள்,
  • சரித்திர நிகழ்வின் புகைப்படப் பதிவுகள்,
  • அயோத்தி ராமர் ஆலயத்தின் சிறப்புகள்

-போன்றவை இந்நூலில் தெளிவுபடத் தொகுக்கப்பட்டுள்ளன.

விஸ்வ ஹிந்து பரிஷத் மூத்த தலைவர் திரு. ஆர்.பி.வி.எஸ். மணியன் இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கி இருக்கிறார். ஓவியர் திரு. வே.ஜீவானந்தனின் அழகிய ஓவியம் முன் அட்டையை அலங்கரிக்கிறது. 128 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை: ரூ. 125-

அனுமன் ஜெயந்தியன்று (ஜன. 11, 2024) சென்னை புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் அரங்கில்  (எஃப். 64) இந்நூல் வெளியிடப்பட உள்ளது. ராம பக்தர்கள் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல் இது.

  • (விஜயபாரதம் பிரசுரம் முகநூலில் வெளியிட்டுள்ள அறிவிப்பு)

$$$

முழுமையான நூலை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்க:

மொத்த பக்கங்கள்: 128+ 4; புத்தகத்தின் விலை: ரூ. 125-

விஜயபாரதம் பிரசுரம், சென்னை
போன்: +91 89391 49466
இணைய முகவரி: https://vijayabharathambooks.com/
மின்னஞ்சல்: contact@vijayabharathambooks.com

Leave a comment