-பத்மன்

‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்றார் மகாகவி பாரதியார். தமிழ்த்தாயின் பொற்பாதங்களை அலங்கரிக்கும் சிலப்பதிகாரத்தில் தோய்ந்துள்ள சீர்மிகு இலக்கியச் சுவையில் ஒரு துளியேனும் நாவிலோ செவியிலோ பட்டால், அதற்காக இதயத்தையே காணிக்கையாக்கத் துணியாதவர்கள் யார் இருக்க முடியும்?
இருப்பினும், இப்பேர்ப்பட்ட சிறப்பு வாய்ந்த சிலப்பதிகாரத்தின் உட்கருத்தில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. பத்தினித் தெய்வம் கண்ணகியைப் போற்றிப் படைக்கப்பட்டதுதான் சிலப்பதிகாரம். அதில் எனக்குப் பிணக்கு இல்லை. ஆனால், தனது தவறை உணர்ந்ததும், அதற்குத் தண்டனையாக தனது உயிரை அக்கணமே உதறினானே பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், அவன் ஏன் பாராட்டப் படவில்லை?
‘ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்பது சிலப்பதிகாரம் வலியுறுத்தும் மூன்று கருத்துகள். இதில், கோவலன் முற்பிறவியில் செய்த தீமை காரணமாக, அடுத்த பிறவியில் அதே பாணியில், செய்யாத பிழைக்குக் கொலையுண்டு போகிறான். தனது கணவனுக்காக அறச்சீற்றத்துடன் நியாயம் கேட்டு நீதியை நிலைநாட்டிய கண்ணகி, பத்தினித் தெய்வமாகப் போற்றப்படுகிறாள். இரண்டும் சரி.
மூன்றாவது கருத்தாகிய அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்ற வகையில், ஆலோசிக்காமல் கோவலனுக்கு கொலைத் தண்டனை விதித்த, அறத்தில் இருந்து பிசகிய செயலுக்காக பாண்டியன் இறந்து போகிறான். ‘அவ்வளவுதான் இந்த விஷயம்’ என்ற வகையிலே சிலப்பதிகாரம் சுருங்கிக் கொள்கிறது. இதில்தான் எனது சிந்தனை உடன்பட மறுக்கிறது.
பிறர் செய்த பிழைக்காக வெகுண்டெழுந்து தட்டிக் கேட்பதும், போராடி நீதியை நிலைநாட்டுவதும், எதிரிகளின் ஊரை எரித்துத் தண்டிப்பதும் புரட்சி என்று போற்றப்படுவது காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனால், தனது குற்றத்தை உணர்ந்த அக்கணத்திலேயே அதற்குத் தண்டனையாக – அதிலும் உயர்ந்தபட்ச தண்டனையாக – தனது உயிரை விடுத்து, நீதியை நிலைநாட்டினானே மதுரைப் பாண்டியன், அவனது நீதி ஏன் போற்றுதலுக்கு உரியதன்றி புறக்கணிக்கப்படுகிறது?
கண்ணகியின் சிலம்பில் உள்ளவை மாணிக்கப் பரல்கள் என்று அறிந்ததும், “யானோ அரசன்? யானே கள்வன்” என்று தீர்ப்பு எழுதி, “மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதற் பிழைத்தது” (குடிமக்களை செவ்வனே காக்கின்ற தென்மதுரைப் பாண்டிய மன்னர்களின் நீதிநெறி என்னால் முதன்முறையாகத் தவறிவிட்டதே) என்று தனது பிழைக்காக உண்மையிலேயே வருந்தி உயிரைக் கொடுத்து, வளைந்த தனது செங்கோலை மீண்டும் நிமிர்த்திய நீதிமான் அல்லவோ நெடுஞ்செழியன்?
இதற்கு முன்னும் பின்னும் இத்தகு உதாரணம் உண்டோ? அத்தகு நீதிநெறி நின்ற அரசனை, அவனது உயிர்த் தியாகத்துக்காக அல்லாவிடினும், நீதியை நிலைநாட்டியதற்காகவாவது ஒருசில வரிகள் பாராட்டியிருக்கலாமே இளங்கோ அடிகள்! அவரும் பாராட்டவில்லை, வேறு எந்தப் புலவரும், தமிழறிஞர்களுமேகூட,‘தனக்கே தண்டனை தந்த தகையாளன்’ பாண்டியனைப் பாராட்டவில்லையே ஏன்?
அரசர்கள் நீதிநெறி தவறாமல் அரசாள வேண்டும் என்பது அக்காலத்தில் மிகவும் போற்றப்பட்ட அறம். இளங்கோ அடிகள், அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதால், பாண்டிய மன்னன் உயிரைக் கொடுத்தாலும், ஆராய்ந்தறியாமல் கோவலனுக்கு தண்டனை கொடுத்தது நீதிநெறி தவறிய செயல் என்று கருதியிருக்கலாம். அதனால் பாண்டியனைப் பாராட்டாமல் விட்டார் என்று கருத இடமுண்டு.
அதேபோல, அலசி ஆராய்ந்து பார்க்காமல் கோவலனுக்குத் தண்டனை வழங்கியதுபோன்ற குற்றம் செய்தால், பத்தினி சாபத்தால் ஊர் எரிந்து போகும், வெம்மை பாதிக்கும், வறட்சி தாண்டவமாடும் என்ற அச்சுறுத்தல்கள், நீதிநெறியை அரசர்கள் காப்பாற்றச் செய்வதற்கான உத்தியாகவும் இருக்கலாம். ஆயினும், அச்சுறுத்தலால் அறநெறியைக் கடைப்பிடிப்பதைவிட, அகமுவந்து அறநெறியில் ஒழுகுவதன்றோ சாலச் சிறந்தது! அதைச் செய்த பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் பண்பைப் போற்றுவதற்கு பாராமுகம் ஏன்?
தனது தோட்டத்தில் விளைந்த கனியைப் பறித்துத் தின்ற சிறுகுற்றத்துக்காக ஓர் இளம்பெண்ணின் கண்களைப் பிடுங்கிய கொடுங்கோலர்களாகிய இளம்கோசர்கள் வாழ்ந்ததும் சங்க காலத்தில்தானே? இந்தச் சூழ்நிலையோடு, நீதியை நிலைநாட்ட உயிரைக் கொடுத்த பாண்டியனின் நெஞ்சுரத்தைப் பொருத்திப் பாருங்கள். அப்போது புரியும் பாண்டியனின் பெருமை!
மேலும், அறிந்தே பல அரசியல் பிழைகளைச் செய்து, அவையெல்லாம் நியாயமே என்று சாதித்து, அதனை எதிர்த்துக் கேட்பவர்களின் உயிரைப் போக்கும் இன்றைய அரசியல்வாதிகள் மத்தியில், அறியாமல் செய்த அரசியல் பிழையை அறிந்ததுமே உயிர் துறந்த பாண்டியன் போற்றுதலுக்கு உரியவன் அல்லவா?
அரசியல் தலைவன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற முன்னுதாரணத்துக்காகவேனும், இனிமேலாவது “பாண்டியன் போற்றுதும், பாண்டியன் போற்றுதும்”.
முத்தாய்ப்பாக ஒரு கவிதை:
எது புரட்சி?
குற்றம் கண்டதும் குமுறி எழுந்து
ஊரை எரித்தாள் கண்ணகி, புரட்சியாம்.
தன் பிழைக்காக தானே வருந்தி
தன்னுயிர் ஈந்தானே மதுரை மன்னன்,
அதை விடவா?
$$$