பூந்தேனில் கலந்து… பொன் வண்டு எழுந்து…

-கவியரசு கண்ணதாசன்

இசையமைப்பாளர் திரு. கே.வி.மகாதேவன் அவர்களின் இறுதிக் காலத்தில் இசை அமைத்த பாடம் ‘ஏணிப்படிகள்’. அதில் இடம் பெறும், ஒரே மெட்டில் அமைந்த, ஒரே பல்லவியுடன், இரு வகையான சரணங்களுடன் கூடிய  இரு பாடல்கள் இங்கே…

துப்புரவுத் தொழிலாளியாக உள்ள கதாநாயகியை பிரபலப் பாடகி ஆக்குகிறான், மற்றொரு துப்புரவுத் தொழிலாளியான கதாநாயகன்; அவளது வாழ்வில் ‘ஏணிப்படிகள்’ ஆகிறான். அவன் தனது காதலியை நினைந்து பாடும் பாடல் முதலில் உள்ளது. அவனால் வாழ்வில் உயரும் நாயகி பாடும் பாடல் இரண்டாவதாக உள்ளது. அவர்கள் வாழ்வில் இணைந்தார்களா? கொடிய விதி வென்றதா? இதுவே திரைக்கதை.

திரைக்கதையின் போக்கிற்கு ஏற்பவும், கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையிலும், ஆண்- பெண் ஆகியோரின் இருவேறு மனக் கற்பனைகளில் கவியரசர் எழுதிய வண்ண வரிகள் இதோ…

1. நாயகன் பாடும் பாடல்

பூந்தேனில் கலந்து…
பொன் வண்டு எழுந்து…
சங்கீதம் படிப்பதென்ன?
தள்ளாடி நடப்பதென்ன?  (2)

ஏறாத ஏணிதனில் ஏறி நடப்பாள்…
நல்ல நேரம் வரும்!
என்றென்றும் நல்ல புகழ் தன்னை வளர்ப்பாள்….
அந்தக் காலம் வரும்!  – அவள்
ஆரம்ப நிலையிலும் மீனாக ஜொலிப்பாள்!
கலை வண்ணத் தாரகை என வருவாள்!

 அது நடக்கும்… என நினைக்கும்…
 மனம் நாள் பார்க்கத் தொடங்கிவிடும்!

பூந்தேனில் கலந்து…
பொன் வண்டு எழுந்து…
சங்கீதம் படிப்பதென்ன?
தள்ளாடி நடப்பதென்ன?

கட்டான மேனி உண்டு ஆடல் நடத்த…
வண்ணத் தோகையவள்!
சங்கீத ஞானமுண்டு பாடல் நடத்த…
வானம் பாடியவள்!  – அவள்
பூவிழிச் சிரிப்பினில் பூலோகம் மயங்கும்…
பொல்லாத புன்னகை கலங்க வைக்கும்!

 நல்ல புகழும், பெரும் பொருளும்
 அவள் அடைகின்ற காலம் வரும்!

பூந்தேனில் கலந்து…
பொன் வண்டு எழுந்து…
சங்கீதம் படிப்பதென்ன?
தள்ளாடி நடப்பதென்ன?

என்னைத் தன் நாதன் என்று சொல்லி மகிழ்வாள்…
அதில் தயக்கமில்லை!
எப்போதும் என் மடியில் துள்ளி விழுவாள்…
மறு விளக்கமில்லை! – அவள்
தான் கொண்ட புகழ் என்றும்
நான் கொண்ட புகழ் தான்…
என் நெஞ்சில் வேறெந்த நினைவுமில்லை!

 இதில் எனக்கும்… ஒரு மயக்கம்!
 இது எந்நாளும் குறைவதில்லை!

பூந்தேனில் கலந்து…
பொன் வண்டு எழுந்து…
சங்கீதம் படிப்பதென்ன?
தள்ளாடி நடப்பதென்ன?

ஆஹா ஹா ஹஹஹா ஆஆ …

திரைப்படம்: ஏணிப்படிகள் (1979)
இசை: கே.வி.மகாதேவன்
பாடகர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
நடிப்பு: சிவகுமார்

$$$

2. நாயகி பாடும் பாடல்

பூந்தேனில் கலந்து…
பொன் வண்டு எழுந்து…
சங்கீதம் படிப்பதென்ன?
தள்ளாடி நடப்பதென்ன? (2)

பொன்வண்ண ஏணி ஒன்று செய்து கொடுத்தான்…
எனை வளர்த்து விட்டான்!
போகாத மேல் படிக்குப் போக வைத்தான்…
கலை மலரச் செய்தான்! – அவன்
நான் வாழ வேண்டுமென்று நாள்தோறும் நினைத்தான்
நன்றாக ஓரிடம் தேடித் தந்தான்!

 அவன் எனைத்தான், தினம் நினைத்தான்…
 நெஞ்சில் என்னோடு கலந்து விட்டான்!

பூந்தேனில் கலந்து…
பொன் வண்டு எழுந்து…
சங்கீதம் படிப்பதென்ன?
தள்ளாடி நடப்பதென்ன?

மாணிக்க மூக்குத்தி சூட்டி விட்டான்…
நான் மயங்கி நின்றேன்!
மீனாட்சி போல என்னை ஜொலிக்க வைத்தான்…
மனம் மலர்ந்து நின்றேன்!  
தேர் கொண்ட காதலியை ஊர்கோலச் சிலையாய்
தீராத திருமகள் ஆக்கி வைத்தான்!

  அதில் எனக்கும், ஒரு மயக்கம்…
  அதை எப்போதும் நினைக்க வைத்தான்!

பூந்தேனில் கலந்து…
பொன் வண்டு எழுந்து…
சங்கீதம் படிப்பதென்ன?
தள்ளாடி நடப்பதென்ன?

கண் மீது மையெடுத்து தீட்டச் சொன்னான்…
நான் தீட்டிக் கொண்டேன்!
கணக்காகப் பாட்டொன்று பாடச் சொன்னான்…
நான் பாடி வைத்தேன்!
செந்தூர இதழ்தனில் ஏதேதோ எழுதி
சிங்காரம் செய்தது புரியவில்லை!

  அதில் எனக்கும், ஒரு மயக்கம்…
  அது ஏனென்று தெரியவில்லை!

பூந்தேனில் கலந்து…
பொன் வண்டு எழுந்து…
சங்கீதம் படிப்பதென்ன?
தள்ளாடி நடப்பதென்ன?

திரைப்படம்: ஏணிப்படிகள் (1979)
இசை: கே.வி.மகாதேவன்
பாடகி: பி.சுசீலா
நடிப்பு: ஷோபா

$$$

Leave a comment