மகாகவி பாரதி ‘கலைகள்’ எனும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையைக் கீழே கொடுத்திருக்கிறோம். நாம் பல யாகசாலைகளுக்குச் சென்றிருக்கிறோம். அங்கு நடக்கும் யாகங்களைக் கண்டிருக்கின்றோம். அங்கு தீயில் ஆஹூதியிட்டு மந்திரங்கள் சொல்லி, பூர்ணாஹூதி செய்து தீபாராதனை முடியும் வரை இருந்து கண்டு மனம் மகிழ்ந்து வருகின்றோம். இங்கு பாரதி ஒரு யாகத்தைச் செய்கிறார். கண்களை மூடி அவர் இங்கு செய்யும் யாகமொன்றை மனக்கண்ணால் காண்கிறீர்கள். யாக குண்டம் வைத்து, அதில் அக்னியை மூட்டி, கணபதியை வணங்கிப் பின்னர் பஞ்ச பூதங்களை வேண்டி, அந்தத் தீயில் தேன் முதலான பண்டங்களை இட்டு மந்திரங்களைச் சொல்லி நடைபெறும் அந்த யாகத்தில் என்ன வேண்டப்படுகிறது. அந்த மந்திரங்களின் பொருள் என்ன? சிந்தனையை ஓட்டுங்கள். பாரதியின் வாசகங்கள் மட்டும் காதில் விழுந்து கொண்டிருக்கட்டும். யாகத்தின் வேண்டுதல் என்ன? நமக்குப் புரியும் பைந்தமிழில்தான் அவனது வேண்டுதல்கள் இருக்கின்றன. அவற்றைப் படியுங்கள். இது குறித்து ஓர் அரிய செய்தி. பாரதி, மகான் அரவிந்தரிடம் ‘ரிக் வேதத்தில்’ பல ஸ்லோகங்களுக்கு விளக்கம் கேட்டுக்கொண்டவர் என்றும், ‘ரிக் வேதம்’ பழமையான வேதம் மட்டுமல்லாமல், இயற்கையை வணங்கும் பல ஸ்லோகங்களைக் கொண்டது என்றும் பெரியோர் சொல்வார்கள். ஆனால் கீழ்வரும் வசனங்கள் அந்த ரிக் வேத மந்திரங்களின் கருப்பொருளா என்பது நமக்குத் தெரியவில்லை. - இது பாரதி இலக்கிய பயிலரங்கின் நிறுவனர் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் அவர்களின் முன்னுரை....