கடமையைச் செய்வதே பிறவிப் பயன்!

-சேக்கிழான்

பொருள் புதிது தளத்தில் வெளியான, மகாகவி பாரதியின் பகவத் கீதை தமிழாக்க உரை, தற்போது விஜயபாரதம் பிரசுரத்தாரால் ‘கடமையைச் செய்!’ என்ற தலைப்பில் அழகிய நூலாக விரைவில் வெளியாக உள்ளது. இந்நூலின் தொகுப்பாசிரியர் சேக்கிழான் எழுதிய தொகுப்பாசிரியர் உரையே இங்கு பதிவாகிறது....

பாரதத்தின்  ஞானக் கருவூலங்களில் பகவத் கீதை தலையாயது. மகாபாரதக் காப்பியத்தின் இடையே ஞானப் பொக்கிஷமாக கீதை பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது. இதனை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது அன்பிற்குரிய சீடனும் நண்பனுமான அர்ஜுனனுக்கு உபதேசித்தார் என்பது நமது பாரம்பரிய நம்பிக்கை.

18 அத்தியாயங்கள் கொண்ட பகவத் கீதை, 700 சுலோகங்களைக் கொண்டது. இதில் சஞ்சயன் சொல்வதாக 41 சுலோகங்கள், திருதராஷ்டிரன் சொல்வதாக ஒரு சுலோகம், அர்ஜுனன் சொல்வதாக 84 சுலோகங்கள், கண்ணன் சொல்வதாக 574 சுலோகங்கள் இடம் பெற்றுள்ளன. மனம் தடுமாறி கடமையைச் செய்யத் தவறி புலம்பும் வீரன் விஜயனை நெறிப்படுத்துவதற்காக, பலவித உபாயங்களுடன், தத்துவ விளக்கங்களுடன் அறிவுரை கூறுகிறார் பார்த்தசாரதி.

குருஷேத்திரத்தில் போர்க்களத்தில், இரு படைகள் நடுவே போருக்கு அடையாளமான சங்கநாதம் முழங்கிய பிறகு இவ்வாறு 700 சுலோகங்களுடன் தனது ஆருயிர்த் தோழனுக்கு நீண்ட நேரம் கண்ணன் அறிவுரை கூறியிருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று மேதாவிகள் பலரும் கேள்வி எழுப்புவதுண்டு. இந்தக் கேள்விக்கு மகாகவி பாரதியின் முன்னுரையே சரியான பதிலாக இருக்கும்.

காலம் தந்த மகத்தான இலக்கியம்:

மகாபாரதப் போர் உண்மையில் நடந்த வரலாற்று நிகழ்வே என்பது அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் மூலமாகவும், வானியல் ஆய்வுகள் மூலமாகவும், நிரூபணமாகி இருக்கிறது. துவாபர யுகத்தின் முடிவாக அமைந்ததே பாரதப் பெரும் போர். அதையடுத்து கலியுகம் தொடங்கி 5,124 ஆண்டுகள் கழிந்து விட்டன. இந்த வானியல் கணக்கீடுகளின்படி பகவத் கீதையின் வயது, அதாவது குருஷேத்திர போர் நடந்த ஆண்டின் அடிப்படையில் 5,162 ஆகும். இது இதிகாச சங்கலன சமிதி அமைப்பின் ஆராய்ச்சி முடிவாகும்.

உன்மையில் ஒரு மாபெரும் போர்க்களத்தில் இவ்வளவு பெரிய உபதேசம் நிகழ்ந்திருக்க வாய்ப்புக் குறைவே. ஆனால், பகவான் கிருஷ்ணன் வில்விஜயனுக்கு அறிவுரை கூறி வழிநடத்தியது உண்மை. அந்த வழிகாட்டியின் உபதேசங்கள் பிற்பாடு  ‘பகவத் கீதை’ என்னும் ஞான நூலாக வடிவமைக்கப்பட்டன என்று கருதுதல் தவறாகாது. ஏனெனில் மகாபாரதமே அந்த சரித்திர நிகழ்வு நடைபெற்று நூறாண்டுகளுக்குப் பிறகு அர்ஜுனனின் கொள்ளுப்பேரன் ஜனமேஜயனின் அரசவையில் வியாசரின் சீடரான வைசம்பாயனாரால் தான் முன்னோர் கதையாக விவரிக்கப்படுகிறது. அதன் பிறகு மகாபாரதம் அதன் தற்போதைய இலக்கிய வடிவை அடைந்திருக்கலாம் என்ற ஆய்வாளர்களின் கூற்றுகளில் நியாயம் உள்ளது. அவ்வாறு ஒரு காப்பியம் உருவானபோது, மகாபாரத காப்பியத்தின் சிறந்த அங்கமாக, கோயிலின் கருவறை போல அமைக்கப்பட்டதே பகவத் கீதை என்று கொள்வது தவறில்லை.

பாரதத்தை முதன்முதலில் எழுதியவர் குருகுல மூத்தவராகிய வியாசரே. அவரது எழுத்தில் 8,800 சுலோகங்கள் அமைந்திருந்ததாக மகாபாரதம் ஆதிபர்வம் கூறுகிறது. பிற்காலத்தில் வைசம்பாயனர் காலத்தில் இது 24,000 சுலோகங்களாக வளர்ந்தது. நைமிசாரண்ய வனத்தில் இருந்த ரிஷிகளிடம் இதனை விவரித்த சூதரான உக்ரசிரவஸ் காலத்தில் பாரதம் லட்சம் சுலோகங்கள் கொண்டதாக வளர்ந்திருந்தது. இவ்வாறாக மகாபாரதம் காலந்தோறும் வளர்ந்துகொண்டே சென்றிருப்பதைக் காண்பவர்கள், அதன் ஓர் அங்கமான பகவத் கீதையும் அதேபோல வளர்ச்சியுற்றிருக்கலாம் என்பதை ஏற்பர். ஆயினும், எந்த வளர்ச்சியும் பகவத் கீதையையோ, அதன் மூல இலக்கியமான மகாபாரதத்தையோ, அடிப்படையில் சிதைப்பதாகவோ, கருவிலிருந்து பிறழ்வதாகவோ அமையவில்லை.

அதாவது, மனித வாழ்வில் நமக்கு நேரும் குழப்பங்கள் அனைத்திற்கும் தீர்வு அளிக்கும் வகையில் போர்க்களத்தே பரந்தாமன் அளித்த உபதேசத்தை அற்புதமான ஞானக் கருவூலமாக்கி இருக்கின்றனர் நமது முன்னோர். இது ஆன்மிக வாழ்க்கைக்கு மட்டுமல்ல, அன்றாட உலக வாழ்க்கைக்கும் உதவும் அற்புதமான நூல். மகாகவி பாரதியே கூறியிருப்பது போல, “கீதையைக் கேட்டவனும் சந்நியாசியல்லன், சொல்லியவனும் சந்நியாசியல்லன். இருவரும் பூமியாளும் மன்னர். குடும்ப வாழ்விலிருந்தோர்”.  

மூல நூலும் தமிழ் வடிவமும்:

மகாகவி பாரதி 1912ஆம் ஆண்டில் பகவத் கீதையை மொழிபெயர்த்ததாக  அறிகிறோம். ஆயினும் அவரது மறைவுக்குப் பிறகே இந்நூல் அச்சாக்கம் பெற்றது. 1924 -25 ஆண்டில் ‘பகவத் கீதை முன்னுரை,  பகவத்கீதை மூலமும் உரையும்’ ஆகிய நூல்களை பாரதி பிரசுராலயத்தார் முதன்முதலில் பதிப்பித்தனர்.  கீதை உரை நூலுக்கு எழுதிய மகாகவியின் முன்னுரையை அதன் சிறப்பு நோக்கித் தனி நூலாகவே பாரதி பிரசுராலயத்தார்   ‘பகவத் கீதை முன்னுரை’ என்ற பெயரில் பதிப்பித்தனர்.

சுதந்திரத்திற்குப் பிற்பாடு, மகாகவி பாரதியின் எழுத்துகள் நாட்டுடைமையாக்கப்பட்ட பிறகு, இந்நூலை வெளியிடாத பதிப்பகமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பலமுறை பதிப்பிக்கப்பட்டுவிட்டது; இன்றும் பதிப்பிக்கப்படுகிறது.

சமஸ்கிருத மூலத்தில் உள்ள பகவத் கீதையின் கவித்துவமான, தத்துவார்த்தமான சுலோகங்களை எளிய தமிழில் வழங்கி இருக்கிறார் மகாகவி பாரதி. தமிழி்ல் செய்யப்பட்டுள்ள பகவத்கீதை மொழிபெயர்ப்புகளில் மகாகவி பாரதியின் மொழிபெயர்ப்பே, மிகப் பரவலாக அறியப்பட்டதும்,  மிகச் சிறப்பானதும் ஆகும். மூலத்தில் உள்ளதை கருத்துச் சேதாரமின்றி மொழிபெயர்ப்பதில் பாரதிக்கு இணையாக இன்னொருவரைச் சொல்ல முடியாது. ஏனெனில் தமிழில் மட்டுமல்ல, சமஸ்கிருதத்திலும் பாண்டித்யம் வாய்ந்தவராக நமது மகாகவி விளங்கினார்.

உரையாசிரியர்களின் விளக்கம் இல்லாமல், மூலத்துக்கு நெருக்கமான பொருள்தரும் உரையாக்கத்தை இந்நூலில் அளித்திருப்பது மகாகவி பாரதியின் எழுத்துலக சாதனைகளின் சிகரம். பதஞ்சலி யோக சூத்திரம்- விளக்கவுரை, வேத ரிஷிகளின் கவிதை போன்றவற்றிலும் பாரதியின் இந்தப் பன்மொழி ஆளுமையைத் தரிசிக்க முடியும்.

மகாகவி பாரதி, பகவத் கீதையின் தமிழ் வடிவத்தை மட்டும் நமக்கு அருளவில்லை; கூடவே, இதனை எவ்வாறு படித்துப் புரிந்துகொள்வது என்பதற்கான வழிகாட்டுதல் குறிப்புகளுடன் கூடிய விரிவான முன்னுரையையும் 13 அத்தியாயங்களில் வழங்கி இருக்கிறார். அவர் எந்தக் கோணத்திலிருந்து கீதையை ஆராய்கிறார் என்பதையும், பகவத் கீதை முன்னுரை புலப்படுத்துகிறது.

இதுவரை எத்தனையோ மகான்கள் பகவத் கீதைக்கு விளக்க உரை அளித்திருக்கிறார்கள். சங்கரர், ராமானுஜர், மத்வர் போன்ற ஆச்சாரியார்கள் அளித்த விளக்கங்கள் நமது சமய இலக்கியங்களின் பட்டியலில் ஒளி வீசுபவை. அபிநவ குப்தர், நிம்பர்க்கர், வல்லபர், ஞானேசுவரர் போன்றவர்களின் விளக்கங்கள் கீதையை தத்துவார்த்த நிலைக்கு உயர்த்தின. அவர்களை அடுத்து சுவாமி விவேகானந்தர், சுவாமி தயானந்த சரஸ்வதி, சுவாமி சிவானந்தர், பரமஹம்ஸ யோகானந்தர், சுவாமி சித்பவானந்தர், சுவாமி பக்தி வேதாந்த பிரபுபாதா, சுவாமி சின்மயானந்தர், மகரிஷி மகேஷ் யோகி, ஓஷோ போன்ற பல துறவியர்களும் கூட இதே பணியில் ஈடுபட்டு நாட்டு மக்களுக்கு பகவத் கீதையைப் பரவலாக்கினார்கள்.

அவர்கள் சமய அறிஞர்கள். ஆனால், சுதந்திரப் போராட்டக் காலத்தில் நாட்டு விடுதலைக்குப் போராடிய தலைவர்களுக்கும் பகவத் கீதையே ஆதர்ஷமாக இருந்தது எப்படி என்ற கேள்வியை எழுப்பினால், மகாகவி பாரதியின் பகவத் கீதை விளக்கத்தின் பின்புலம் புரிய வரும்.

ஆன்ம விடுதலையே பிரதான நோக்கம்:

லோகமான்ய பாலகங்காதர திலகர், மகரிஷி அரவிந்தர், மகாத்மா காந்தி, மகாகவி பாரதி, வினோபா பாவே, அன்னிபெசன்ட் அம்மையார், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ராஜாஜி போன்ற தலைவர்களும் பகவத் கீதையை மொழி பெயர்த்தும், அதற்கு தங்கள் பாணியில் விளக்கவுரை அளித்தும் இருப்பது, கீதையின் லௌதீகத் தேவையை உணர்த்தும். புரட்சியாளர் பகத் சிங் கடவுள் நம்பிக்கை அற்றவராக இருந்தபோதிலும், இறுதி நாட்களில் சிறைக் கொட்டடியில் பகவத் கீதையைப் படித்ததும் அதன் வாழ்வியல் உபதேசம் காரணமாகத் தான்.

“கடமையைச் செய்; அதன் பலனைப் பற்றிய பிரக்ஞை இன்றி, அதனை இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு கடமையை செய்” என்பதே வில்விஜயனுக்கு தேரோட்டி கண்ணன் உபதேசித்த அறிவுரையின் சுருக்கமான செய்தி. இதுவே சுதந்திரப் போராட்டக் களத்தில் இருந்த தலைவர்களுக்கும் உந்துசக்தியானது. ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து நாட்டு மக்களைக் கட்டியெழுப்ப, ஆன்மிக சக்தியின் தேவையை உணர்ந்த தலைவர்கள் அனைவரும் பகவத் கீதை உபாசகர்களாகவே இருந்துள்ளனர். அக்காலத்தில் அனுசீலன் சமிதி, அபிநவ பாரதம் போன்ற புரட்சி அமைப்புகளில் உறுப்பினராகச் சேர்ந்தோர் கீதையை கரத்தில் ஏந்தி பிரதிக்ஞை ஏற்கும் சடங்கும் நிகழ்ந்திருக்கிறது.

எனவேதான், உள்ளம் முழுவதும் தேசபக்திக் கனல் பிரவாஹமாகப் பொங்கிய மகாகவி பாரதி பகவத் கீதையை தமிழாக்கம் செய்திருக்கிறார். அதில் அவர் கர்ம யோகத்தையே, அதாவது கடமையைச் செய்வதையே பிரதானமாக முன்வைத்திருக்கிறார்.

“பகவத் கீதை தர்ம சாஸ்திரமென்று மாத்திரமே பலர் நினைக்கின்றார்கள். அதாவது, மனிதனை நன்கு தொழில் புரியும்படி தூண்டி விடுவதே அதன் நோக்கமென்று பலர் கருதுகிறார்கள். இது சரியான கருத்தன்று. அது முக்கியமான மோக்ஷ சாஸ்திரம். மனிதன் சர்வ துக்கங்களிலிருந்தும் விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து. ஏனென்றால், தொழில் இன்றியமையாதது. அங்ஙனமிருக்க, அதனைச் செய்தல் மோக்ஷ மார்க்கத்துக்கு விரோதமென்று பல வாதிகள் கருதலாயினர். அவர்களைத் தெளிவிக்கும் பொருட்டாகவே, கண்ணபிரான் கீதையில், முக்கியமாக மூன்றாம் அத்தியாயத்திலும், பொதுப்படையாக எல்லா அத்தியாயங்களிலும், திரும்பத் திரும்பத்  ‘தொழில் செய்’, ‘தொழில் செய்’ என்று போதிக்கின்றார். இதனின்றும், அதனை வெறுமே, தொழில் நூல் என்று பலர் கணித்து விட்டார்கள்.

இங்கு தொழில் செய்யும்படி தூண்டியிருப்பது முக்கியமன்று. அதனை என்ன நிலையிலிருந்து, என்ன மாதிரிச் செய்ய வேண்டுமென்று பகவான் காட்டியிருப்பதே மிக மிக முக்கியமாகக் கொள்ளத் தக்கது….”

-என்று முன்னுரையில் கூறுகிறார் மகாகவி பாரதி.

‘மோக்ஷம்’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு விடுதலை என்றும் பொருள் உண்டு. பற்றுகளிலிருந்து விடுபட்டு வீடு பேறு அடைவதே மோக்ஷம்.  அதுபோலவே அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு பூரண சுதந்திரனாக வாழ்வதே பாரதியின் பார்வையில் மோக்ஷம். இதற்குத் தடையாக இருப்பது அச்சம். எனவேதான் புதிய ஆத்திசூடியில் ‘அச்சம் தவிர்’ என்று அறிவுறுத்துகிறார் பாரதி. ஆன்ம விடுதலை பெற்றவன் அடிமைத்தளையில் அகப்பட மாட்டான் என்பதே பாரதியின் தெளிவு.

‘சத்ரபதி சிவாஜி தனது சைனியத்திற்குக் கூறியது’ என்ற கவிதையிலும் (172, 173 வரிகள்) கூட, பகவத்கீதையின் சாராம்சத்தை உட்புகுத்தி விடுகிறார் மகாகவி பாரதி:

பேடிமை யகற்று! நின் பெருமையை மறந்திடேல்! 
ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக! 

அது மட்டுமல்ல, சமூக ஏற்றத் தாழ்வுகளை அகற்ற, ‘இறைவனே அனைத்துயிருமாக இருக்கிறான்’ என்ற கீதையின் தத்துவத்தையும் பயன்படுத்திக் கொள்கிறார் பாரதி:

“எல்லாம் கடவுள் மயம் அன்றோ? எவ்வுயிரினும் விஷ்ணு தானே நிரம்பியிருக்கிறான், ஸர்வமிதம் ப்ரஹ்ம! பாம்பும் நாராயணன், நரியும் நாராயணன். பார்ப்பானும் கடவுளின் ரூபம், பறையனும் கடவுளின் ரூபம்.

இப்படியிருக்க ஒரு ஜந்துவை எக்காரணம் பற்றியும் தாழ்வாக நினைத்தால் அஞ்ஞானத்திற்கு லட்சணம். அவ்விதமான ஏற்றத் தாழ்வு பற்றிய நினைப்புகள் உடையோர் எக்காலத்தும் துக்கங்களிலிருந்து நிவர்த்தியடைய மாட்டார்.

வேற்றுமையுள்ள இடத்தில் பயமுண்டு, ஆபத்துண்டு, மரணமுண்டு, எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே ஞானம். அதுவே முக்திக்கு வழி”

இதனையே ’பாரத சமுதாயம்’ கவிதையில்

“எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்”
என்றுரைத்தான் கண்ண பெருமான்;
எல்லாரும் அமர நிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற்களிக்கும் - ஆம்
இந்தியா உலகிற்களிக்கும்– ஆம் ஆம்
இந்தியா உலகிற்களிக்கும் வாழ்க!”

-என்று பெருமிதத்துடன் முழங்கவும் செய்கிறார் மகாகவி.

அமரத்துவ சாஸ்திரம்:

அதேசமயம், கீதையை வெறும் தத்துவ, சித்தாந்த விளக்க நூலாக மட்டும் மகாகவி பாரதி காணவில்லை. இதற்கு அவரது முன்னுரையில் குறிப்பிடும் கீழ்க்கண்ட வரிகளே ஆதாரம்:

“ஈசனைச் சரணாகதி அடைந்து இகலோகத்தில் மோக்ஷ சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக் களியில் மூழ்கி வாழும்படி வழிகாட்டுவதே, பகவத் கீதையின் முக்கிய நோக்கம். ஆதலால் இஃது கர்ம சாஸ்திரம், இஃது பக்தி சாஸ்திரம், இஃது யோக சாஸ்திரம், இஃது ஞான சாஸ்திரம், இஃது மோக்ஷ சாஸ்திரம், இஃது அமரத்துவ சாஸ்திரம்.

உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தை  கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது. பின் மாறுகிறதேயெனில், மாறுதல் இயற்கை. மாயை பொய்யில்லை. அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் வென்றொழித்தற்குரியன, நன்மைகள் செய்தற்கும் எய்தற்கும் உரியன. சரணாகதியால் -  கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள். எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள்.”

பகவத் கீதையின் சுலோகங்கள், மிகக் கச்சிதமான வாக்கிய அமைப்புகளில் பாரதியால் வழங்கப்பட்டிருக்கின்றன. அவரது இதழியல் உரைநடைகளில் வழக்கமாகக் காணப்படும் சமஸ்கிருத வார்த்தைகள் கூட மிக மிகக் குறைவாகவே, கீதை உரையில் காணப்படுகின்றன. தமிழில் பாரதியின் பகவத் கீதை அளவிற்கு முழுமையான, அதே நேரத்தில் ரத்தினச் சுருக்கமான மொழிபெயர்ப்பு வேறெதுவும் கிடையாது.

தனது மொழிபெயர்ப்பின் நடுவில் எந்த விளக்கவுரையையோ சுய ஆலாபனையையோ கொண்டு வராமல்,  மூலத்துக்கு நியாயமான, எளிய தெளிவுரையே பாரதி செய்திருக்கும் அற்புதமான பணி. மாறாக, தனது நெடிய முன்னுரையில் பட்டினத்தார், தாயுமானவர், திருநாவுக்கரசர் போன்றோரின் மேற்கோள்களோடு பகவத் கீதையின் சாராம்சம், அது முன்வைக்கும் தத்துவம், வேதம்- உபநிடதங்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகள், வேதங்கள் மிக மிகப் பழைய சமஸ்கிருத மொழியிலும், பிற்காலத்திய உபநிடதங்கள் பண்பட்ட சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டிருப்பது குறித்த விளக்கங்கள், கீதை குறித்த மேம்போக்கான தவறான அபிப்பிராயங்கள் போன்றவற்றை விளக்குகிறார்.

எதனையெதனை உயர்ந்தோன் செய்கிறானோ, அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள். அவன் எதை பிரமாணமாக்குகிறானோ அதையே உலகத்தார் தொடருகிறார்கள்.... பார்த்தா, மூன்றுலகத்தில் எனக்கு யாதொரு கடமையுமில்லை, நான் பெற்றிராத பேறுமில்லை. எனினும் நான் தொழிலிலே இயங்குகிறேன்... பார்த்தா, அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய் எப்படித் தொழில் செய்கிறார்களோ அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி உலக நன்மையை நாடித் தொழில் செய்ய வேண்டும்”

-என்று கீதைக்கு தமிழ் வடிவம் அளித்திருக்கும் பாரதியின் அடிநாதம், ‘கடமையைச் செய்’ என்பதே. அதனையே இந்நூலின் தலைப்பாகக் கொள்கிறோம்.

இந்நூலை முதன்முதலில் பதிப்பித்த பாரதி பிரசுராலயத்தார், தேவைப்பட்ட இடங்களில் அடிக்குறிப்புகளுடன் அளித்துள்ள விளக்கங்களும் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் முன்னதாக அந்த அத்தியாயம் குறித்த சுருக்கமான தொகுப்பாளரின் குறிப்புரை இந்நூலில் அளிக்கப்பட்டிருக்கிறது. தவிர பிற பதிப்பு நூல்களில் காணப்படும் எழுத்துப் பிழைகள் பலவும் இயன்ற வரை சரிபார்த்து நீக்கப்பட்டிருக்கின்றன.

போர்க்களத்தே பர ஞானமெய்க் கீதை
   புகன்றதெவருடைய வாய்? – பகை
தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத
   தேவி மலர்த்திரு வாய்.

-என்று பாடி மகிழ்வார் (தேசிய கீதங்கள் -8- பாரத மாதா கவிதை) மகாகவி பாரதி. அவரைப் பொருத்த வரை அரக்கனை அழித்த ராமனின் வில்லும் பாரத அன்னையின் வில்லே; பார்த்தனை வழிநடத்திய கண்ணனின் சொல்லும் பாரத அன்னையின் சொல்லே. பாரத அன்னையின் புகழோங்கிய நிலையே அவரது இலக்கு. அதற்காக அவர் படைத்து அளித்ததே பகவத் கீதையின் இந்தத் தமிழ் வடிவம்.

$$$

2 thoughts on “கடமையைச் செய்வதே பிறவிப் பயன்!

Leave a comment