பாரதி கருவூலத்தின் அரிய வைரம்

-சேக்கிழான்

39 ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த ஓர் அதியற்புத உயர் மானுடர் மகாகவி பாரதி. அதுவும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராளியாக இருந்ததால் அரசின் கண்காணிப்புக்கு உள்ளாகி, கடுமையான பொருளாதாரச் சிக்கல்களுக்கு ஆட்பட்டு, வாழ்க்கையுடன் போராடியே குறுகிய காலத்தில் அமரரானவர் அவர். அவரது போராட்ட வாழ்வுக்கு சான்று பகர்பவையாக அவரது கடிதங்கள் விளங்குகின்றன.  இந்நூலில் 23 கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. காசியில் இருந்து தனது இளம் மனைவி செல்லம்மாளுக்கு 1901இல் பாரதி எழுதிய கடிதம், ஒரு சாமானியனாக வாழத் துடித்த ஒரு சுதந்திரப் பறவையை இனம் காட்டுகிறது.

மகாகவி பாரதியின் எழுத்துகள் அனைத்தையும் தொகுக்கும் இமாலயப் பணி தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. சுமார் 17 ஆண்டுகள் பத்திரிகைத் துறையில் மிகவும் தீவிரமாக இயங்கிய இதழாளர் மகாகவி பாரதி. ஆனால், அவரது கவிதைகள் பெற்ற கவனத்தை அவரது பிற எழுத்துகள் பெறவில்லை என்பது, நமது அலட்சியத்தையும் அறியாமையையுமே காட்டுகிறது.

பாரதி மகாகவி மட்டுமல்ல, அவர் ஓர் அற்புதமான எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர் என்பதை, அவ்வப்போது வெளியாகும் பாரதி புதையல்கள் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

பாரதியின் படைப்புகளைத் தொகுக்கும் பணியில் அறிஞர்கள் சிலர் எந்தப் பயனும் கருதாமல் தொடர்ந்து உழைத்து வருவதால் தான், அவை நமக்கு கிடைத்து வருகின்றன. மகாகவி பங்களித்த பத்திரிகைகளிலும், பணிபுரிந்த பத்திரிகைகளிலும் வெளியான படைப்புகள், மொழிபெயர்த்த நூல்கள், எழுதிய கடிதங்கள் ஆகியவை பாரதி கருவூலமாக தற்போது தொகுக்கப்படுகின்றன. பாரதியியல் ஆய்வு ஒரு தனித் துறையாகவே வளர்ந்துள்ளது.

இந்த ஆய்வாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் திரு. ரா.அ.பத்மநாபன். அவரது அற்புதமான முயற்சியின் பயனே இந்த நூல். மகாகவி பாரதி தனது வாழ்நாளில் எத்தனையோ கடிதங்களை எழுதி இருக்கலாம். ஆனால், அவை அனைத்தும் நமக்குக் கிடைக்கவில்லை என்பது வருந்தக் கூடிய நிகழ்வே. எனினும், கிடைத்திருக்கும் அரிய கடிதங்களையேனும் பொக்கிஷமாகப் பாதுகாப்பது, தமிழ் ஆர்வலர்களின் கடமை. அந்தக் கடமையை செவ்வனே நிறைவேற்றி இருக்கிறார் திரு. ரா.அ.பத்மநாபன். தவிர, ஒவ்வொரு கடிதத்தின் பின்னணியையும், அந்தக் கடிதத்தின் சரித்திர முக்கியத்துவத்தையும் தொகுப்பாசிரியராக அவர் முன்வைத்திருப்பது சிறப்பு.

39 ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த ஓர் அதியற்புத உயர் மானுடர் மகாகவி பாரதி. அதுவும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராளியாக இருந்ததால் அரசின் கண்காணிப்புக்கு உள்ளாகி, கடுமையான பொருளாதாரச் சிக்கல்களுக்கு ஆட்பட்டு, வாழ்க்கையுடன் போராடியே குறுகிய காலத்தில் அமரரானவர் அவர். அவரது போராட்ட வாழ்வுக்கு சான்று பகர்பவையாக அவரது கடிதங்கள் விளங்குகின்றன. அதிலும் பரலி சு.நெல்லையப்பருக்கு பாரதி எழுதிய கடிதங்கள், அவரது தகிக்கும் சுதந்திரக் கனலையும், எழுத்தாவேசத்தையும் வெளிக்காட்டுகின்றன.

இந்நூலில் 23 கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. காசியில் இருந்து தனது இளம் மனைவி செல்லம்மாளுக்கு 1901இல் பாரதி எழுதிய கடிதம், ஒரு சாமானியனாக வாழத் துடித்த ஒரு சுதந்திரப் பறவையை இனம் காட்டுகிறது.

தமிழறிஞர் மு.ராகவையங்கார், தனது அரசியல் குரு லோகமானிய பாலகங்காதர திலகர், பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவர் ராம்ஸே மக்டானல்டு, இளைய சகோதரன் சி.விசுவநாதன், சுதேசமித்திரன் ஆசிரியர் ஏ.ரங்கஸ்வாமி ஐயங்கார், எட்டயபுரம் மன்னர், கானாடுகாத்தான் வயி.சு.சண்முகம் செட்டியார், ஈரோடு தங்கப்பெருமாள் பிள்ளை, ஸ்ரீநிவாச வரதன் உள்ளிட்டோருக்கு பாரதி எழுதிய கடிதங்களில், அவரைப் பற்றிய உணர்ச்சிகரமான சித்திரம் ஒன்று கிடைக்கிறது.

பாரதி ஆங்கிலத்தில் எழுதிய கடிதங்களும் தமிழாக்கம் செய்யப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ராம்ஸே மக்டான்ல்டுக்கு பாரதி எழுயிருக்கும் கடிதம், அவரது பரந்த உலக அரசியல் ஞானத்தையும், விவேகமுள்ள தர்க்கத் திறனையும் காட்டுகிறது. அதேபோல, பாரதியின் சில கடிதங்கள் மூல வடிவில் ஒளிப்பட நகல்களாக இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தனது நூல்களைப் பதிப்பிக்கவும், குறைந்த விலையில் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் நிதி வேண்டித் தவிக்கும், காற்றில் அலைபாயும் தீபச்சுடர் போலத் துடிக்கும் எழுத்தாளராக, நெல்லையப்பர், ஸ்ரீநிவாச வரதன், தங்கப் பெருமாள் பிள்ளை, எட்டயபுரம் மன்னர், வயி.சு.சண்முகம் செட்டியார் ஆகியோருக்கு எழுதிய கடிதங்களில் மகாகவி பாரதியைத் தரிசிக்கிறோம். அவரது தமிழ் வளர்ப்புப் பண்ணை வேண்டுகோளும் (1920) இந்நூலில் பொருத்தமுற இணைக்கப்பட்டுள்ளது.

எட்டயபுரம் மன்னர் வேங்கடேசு ரெட்டப்ப பூபதிக்கு கவிதை நடையில் 1919இல் பாரதி எழுதிய இரு கடிதங்களும் (ஓலைத்தூக்கு, சீட்டுக்கவிகள்) சாகாவரம் பெற்றவை. புவியரசரிடம் உதவி கோரும்போதும்கூட, தன்னை கவியரசராக முன்னிறுத்தி மன்னருக்கு இணையாக சமதளத்தில் நின்று பேசும் பாரதியின் புலமைச் செருக்கு நம் கண்களில் நீர் வழியச் செய்கிறது.

திலகருக்கு பாரதி எழுதிய கடிதம் (1908) சிறியது எனினும் அதில் பொதிந்துள்ள அரசியல் செய்தி மிகவும் பெரியது. சென்னையில் சென்னை ஜனசங்கம் ஆதரவில் ஹிந்தி வகுப்பு நடத்த முயன்ற பாரதியையும், காங்கிரஸ் மகாசபையில் திலகர் அணியில் அவரது தீவிர ஈடுபாட்டையும், இக்கடிதம் புலப்படுத்துகிறது. தங்கள் நெருங்கிய தோழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ராஜதுரோக வழக்கில் சிறையில் இருப்பதையும் இக்கடிதத்தில் சுட்டிக்காட்டுகிறார் பாரதி (எங்கள் செயலாளர் ஸ்ரீ சிதம்பரம் இப்போது எங்கே இருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள்). நமது நாட்டின் துரதிர்ஷ்டம், திலகரும் பின்னாளில் ராஜதுரோக வழக்கில் சிறைப்பட்டார். நாட்டிற்காக உழைக்கும் தீவிரக் கொள்கையாளர்களை ஆங்கிலேய அரசு வேட்டையாடியதால் தான், இந்திய சுதந்திரப் போராட்டம் மிதவாதிகளின் கைகளுக்குச் சென்றது என்ற உண்மையை இக்கடிதம் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

இச்சிறிய நூல், பாரதி கருவூலத்தின் அற்புதமான வைரம் எனில் மிகையல்ல. பாரதி ஆர்வலர்கள் ஒவ்வொருவரது இல்லத்திலும் இருக்க வேண்டிய இனிய நூல் இது.

நூல் குறித்த விவரங்கள்:

பாரதியின் கடிதங்கள்
தொ.ஆ.: ரா.அ.பத்மநாபன்
112 பக்கங்கள்; விலை: ரூ. 70-

வெளியீடு: 
காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி.சாலை,
நாகர்கோவில்-629 001,
தொலைபேசி: 04652- 278525

$$$

Leave a comment