தமிழ்நாட்டு நாகரீகம்

-மகாகவி பாரதி

...ஔவையின் நூலோ மிகத் தெளிந்த, மிக எளிய தமிழ்நடையில் எல்லா ஜனங்களுக்கும் பொருள் விளங்கும்படியாக எழுதப்பட்டிருக்கின்றது. ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ என்பது கவிதைத் தொழிலில் மிகவும் உயர்ந்த தொழில். இதில் ஔவை ஒப்பற்றவள். இத்துடன் மிகவும் அருமையான நுட்பமான விஷயங்களை யாவருக்கும் அர்த்தமாகும்படி மிகவும் எளிய நடையில் சொல்வதாகிய அற்புதத் தொழிலை உயர்ந்த கவியரசர்களே தெய்வீகத் தொழில் என்றும் தெய்வசக்தி பெறாத சாதாரணக் கவிகளுக்கு சாத்தியப்படாத தொழில் என்றும் கருதுகிறார்கள். இந்த அற்புதத் தொழிலிலும் ஔவை நிகரற்ற திறமை வாய்ந்தவள்....

தமிழ் நாகரீகத்தைக் குறித்து சென்ற வ்யாசத்திலே பொதுப்படையாக சில விஷயங்கள் சொன்னேன். இங்கு அவற்றைச் சற்று விஸ்தாரமாகத் தெரிவிக்கின்றேன். பண்டைத் தமிழ் நாகரீகத்தில் ஸ்திரீகளுக்கு அதிகமான ஸ்வதந்திரம் இருந்தது. இதற்குரிய காரணங்களில் முக்கியமானது யாதெனில், தமிழ்நாட்டுக்கு மூல அரண்போல் இயற்கையால் வகுப்புற்றிருக்கும் மலையாள நாட்டின் பயிற்சிக்கும் தமிழ் நாகரீகத்திற்கும் எப்பொழுதும் அதிகமான ஊடாட்டமிருந்து கொண்டு வந்தது. மலையாளத்து நாகரீகமோ ஸ்திரீகளை முன்னிட்டு விளங்குவது.

மிகப் பழைய தமிழ் பாஷையும் மிகவும் புராதனமான மலையாள பாஷையும் ஒரே வஸ்துதான். பிற்காலத்திலும் சேரநாடு தமிழகத்தில் ஒரு பகுதியாகவே கணக்கிடப்பட்டு வந்தது. சேரரனைவரும் தமிழரசரே; தமிழ்நாடு வேந்தருள்ளே சேர்த்தெண்ணப்பட்டு வந்தனர். பாஷையையொப்பவே நாகரீக விஷயத்திலும் மிகப் பெரிய தமிழ் நாகரீகமும் மிகப் பழைய மலையாள நாகரீகமும் ஒரே வஸ்துதான்.

பிற்காலத்தில் மலைக்கோட்டைக்கு உட்பட்ட மலையாள நாடு பழைய தமிழ் நாகரீகத்தை இயன்ற வரை சிதையாமல் காப்பாற்றிக் கொண்டு வந்தது. மலையடிக்குக் கிழக்கே மைதானத்தின் மீது வளர்ச்சி பெற்ற தமிழ் நாகரீகமோவெனில், தெலுங்கு முதலிய வடநாட்டுப் பயிற்சிகளின் ஊடாட்டத்தால் நாளுக்கு நாள் அதிக மாறுதல் பெற்று ஹிந்து தேசத்தின் பொது நாகரீகத்தை அனுசரித்து வருவதாயிற்று.

எனினும், மலையாளத்துப் பழக்கம் ஒருபோதும் நீங்கவேயில்லை. மலை நாட்டு ஆண் மக்கள், உலகமெங்கும் புலி, கரடி, ஓநாய் முதலிய மலை மிருகங்களுடன் போராடியும், மலை வெப்பத்துக்கும், மலை மழைக்கும், மலைப் பனிக்கும், மலைத் தீக்கும் தப்பியும், கஷ்டத்துடன் பிழைக்க வேண்டியவர்களாதலால், மைதானங்களில் வாழும் ஜனங்களைப்போல் ஸ்திரீகளின் விஷயத்தில் அதிக கடின சித்தமில்லாமல் அவர்களைத் தயவுடனும், மதிப்புடனும் நடத்துவது வழக்கம். ஐரோப்பாவுக்குள்ளே ஸ்விட்சர்லாண்டு தேசத்து மலைப்பெண்கள் மற்றப் பகுதியிலுள்ள மாதரைக் காட்டிலும் அதிக ஸ்வதந்திரமுடையோராக வாழ்ந்து வருகின்றனர்.

மலையாளத்திலோ, மாதர்கள் மிக உயர்ந்த சுதந்திர முடையோர்களாக யிருப்பது மட்டுமேயன்றி சொத்துடைமை அங்கு பெண் சந்ததியாருக்கு ஏற்பட்டிருக்கிறது. இவ்விதமான மலையாள நாகரீகத்துள் நெருங்கிப் பழகி ஊடாடிக்கொண்டு வந்திருப்பதினின்றும், தமிழ்நாட்டு நாகரீகமும் இங்குள்ள மாதர்களுக்கு – ஹிந்து தேசத்தின் மற்றப் பகுதிகளிலுள்ள மாதர்களைக் காட்டிலும்- அதிக ஸ்வதந்திரம் கொடுத்துக்கொண்டு வந்திருக்கிறது. முகம்மதிய நாகரீகத்தின் ஆதிக்கம் பலமடைந்ததினின்றும், வட இந்தியாவில், மேல்ஜாதி ஹிந்து ஸ்திரீகளை கோஷா என்ற முகம்மதிய வழக்கத்தைக் கைக்கொள்ளும்படி ஏற்பட்ட காலத்திலேகூட, தமிழ்நாட்டிலும் அதன் நாகரீகத்தைத் தழுவிய தெலுங்கு, கன்னடம் முதலிய நாடுகளிலும் அந்த வழக்கம் உண்டாகவில்லை.

மேலும் உலகத்திலுள்ள மாதர்களுக்கெல்லாம் நீதி ஆண்மக்களாலேயே விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டு மாதரும் ராஜநீதி சம்பந்தப்பட்ட சிறிதளவிலே பொதுவான ஆண் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தனரேயாயினும், ஜன ஸமூஹ நீதிகளின் விஷயத்தில் தமிழ்நாட்டில் எப்போதும் ப்ரமாணமாக இயன்று வருவது ஓளவையின் நீதி வாக்கியங்களும் நீதி நூல்களுமேயாம். ஆண்மக்களிலேகூட உயர்ந்த கல்வி பயின்றோர் மாத்திரமே ஜன ஸமூஹ விதாயங்களில் வள்ளுவர் குறள், நாலடியார் முதலியவற்றை ப்ரமாணமாகக் கூறுவர். அதிகப் படிப்பில்லாதவர்களும், படிப்பே தெரியாதவர்களுமாகிய ஜனங்கள், ஆண் பெண் அனைவருக்கும் ஒளவையாரின் நீதியே வழிகாட்டி. தமிழ் ஜனங்களில் பெரும்பான்மையோருக்கு சுமார் சென்ற இரண்டாயிரம் வருஷங்களாக ஓளவையாரின் நீதியே ப்ரமாணமாக நடைபெற்று வருகின்றது.

ஸாமான்ய ஜனங்கள் ஔவை நீதியைக் கொண்டாடி வருகிறார்களெனில், கற்றோரும் அரசரும் அதைப் புறக்கணித்து வந்தார்களென்று கருதுதல் வேண்டா. கற்றோருக்கும் அரசர்க்கும் தமிழ் மக்கள் எல்லோருக்கும் குறள், நாலடியார் முதலிய நூல்களைக் காட்டிலும் ஒளவையின் நூல்களில் அகப்பற்றுதலும் அபிமானமும் இருந்து வருகின்றன. ஆனால், இந்த நீதி நூல்கள் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னேயிருந்த முதல் ஔவையார் இயற்றப்பட்டன அல்லவென்றும் சுமார் ஆயிரம் வருஷங்களுக்கு முன்னேயிருந்த இரண்டாம் ஔவையால் செய்யப்பட்டன என்றும் ஒரு கட்சியார் சொல்லுகிறார்கள்.


ஔவையார் வெறுமே நூலாசிரியர் மட்டுமல்லர். அவர் காலத்திலேயே அவர் ராஜ நீதியில் மிகவும் வல்லவரென்று தமிழ்நாட்டு மன்னர்களால் நன்கு மதிக்கப்பெற்று ராஜாங்கத் தூதில் நியமனம் பெற்றிருக்கிறார். மேலும் அவர் சிறந்த ஆத்மஞானி; யோக சித்தியால், உடம்பை முதுமை, நோவு, சாவுகளுக்கு இரையாகாமல் நெடுங்காலம் காப்பாற்றி வந்தார்.

‘மாசற்ற கொள்கை மனத்தமைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு’

அதாவது, ஹிருதயத்தில் சுத்தமான, பயமற்ற, கபடமற்ற, குற்றமற்ற, பகைமையற்ற எண்ணங்களை நிறுத்திக் கொண்டால், உடம்பில் தெய்வத்தன்மை, அதாவது சாகாத்தன்மை (அமரத் தன்மை) விளங்கும் என்றும் பொருள் படுவது. இந்தக் குறள் பாடியவர் ஔவையார். இவர் தாமே நெடுந்தூரம் இக்கொள்கைப்படி ஒழுகியவரென்பது இவருடைய சரித்திரத்தில் விளங்குகிறது.

ஒரு தேசத்தின் நாகரீகத்துக்கு அந்த தேசத்தின் இலக்கியமே மேலான அடையாளமென்று முந்திய வியாசத்தில் சொன்னேன். திருஷ்டாந்தமாக ஆங்கிலேய நாகரீகத்துக்கு  ‘ஷேக்ஸ்பியர்’ முதலிய மஹா கவிகளின் நூல்களே அளவுக் கருவியாக கருதப்படுகின்றன.  “நாங்கள் இந்தியா தேசத்து ராஜ்யாதிகாரத்தை இழக்க ஒருப்பட்டாலும் ஒருப்படுவோமே யன்றி ஷேக்ஸ்பியரை இழக்க ஒருநாளும் ஒருப்பட மாட்டோம் என்று நாம் மறுமொழி சொல்வோம்” என்று ‘மெக்காலே’ என்னும் ஆங்கிலேய ஆசிரியர் சொல்லுகிறார்.

இந்த மாதிரியாகப் பெருமைப்படுத்தி நம்மவர் கம்பனைச் சொல்லலாம்; திருவள்ளுவரைச் சொல்லலாம்; சிலப்பதிகார மியற்றிய இளங்கோவடிகளைக் கூறலாம்; இன்னும் பல புலவர்களைக் காட்டலாம். எனினும், கம்பர், திருவள்ளுவர் முதலிய பெரும் புலவராலேயே தம்மனைவரிலும் மிகச் சிறந்தவராகக் கருதப்பட்ட ஔவைப் பிராட்டியையே மிகவும் விசேஷமாக எடுத்துச் சொல்லக்கூடும்.  ‘தமிழ்நாட்டின் மற்ற  செல்வங்களை யெல்லாம் இழந்துவிடப் பிரியமா? ஔவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா?’ என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின்,  ‘மற்ற செல்வங்களை யெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மீட்டும் சமைத்துக்கொள்ள வல்லது. ஔவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதப்பட மாட்டோம், அது மீட்டும் சமைத்துக்கொள்ள முடியாத தனிப் பெருஞ் செல்வம்’ என்று நாம் மறுமொழி உரைக்கக் கடமைப் பட்டிருக்கிறோம். தமிழ்நாட்டு நாகரீகத்துக்கு அத்தனை பெரும் செல்வமாகவும், இத்தனை ஒளி சான்ற வாடா விளக்காகவும் தனிப் பேரடையாளமாகவும் தமிழ் மாதொருத்தியின் நூல்கள் விளங்குவது நமது நாட்டுக்கு ஸ்திரீகளுக்குப் பெரு மகிழ்ச்சி தரத்தக்கதொரு செய்தியன்றோ?

இது தமிழ் ஸ்திரீகளுக்கு வெறுமே புகழ் விளைவிப்பது மாத்திரமன்று. அவர்களுக்கு கிரமமான காவலுமாகும். ஔவையார் பிறந்த நாட்டு மாதரை, ஔவையார் இனத்து மாதரை, ஆண் மக்களைக் காட்டிலும் அறிவிலே குறைந்த கூட்டத்தாரென்று வாய் கூசாமல் எவனும் சொல்லத் துணிய மாட்டான். மற்ற தேசங்களில், திருஷ்டாந்தமாக இங்கிலாந்து தேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே ஆண் மக்களுக்கு சமானமான உரிமைகளைப் பெண்களுக்குக் கொடுப்பது தகாதென்று வாதம் பண்ணுகிற கக்ஷியார், மாதர்கள் இயற்கையிலேயே ஆண்மக்களைக் காட்டிலும் அறிவில் குறைந்தவர்களென்றும், ஆதலால் வீட்டுக் காரியங்களுக்கே அவர்கள் தகுதியுடையோரா வாரல்லது அறிவு வன்மையால் நடத்த வேண்டிய நாட்டுப் பொதுக் காரியங்களை நிர்வகிக்க அவர்களுக்குத் திறமை கிடையாதென்றும் தர்க்கிக்குமிடத்தே, அதற்கு ஒரு ஸாக்ஷ்யமாக,  ‘ஆண் மக்களில் க்ஷேக்ஸ்பியர் என்னும் கவியரசர் எழுதியிருப்பது போன்ற கவிதை எழுதும் திறமை கொண்ட ஸ்திரீ ஒருத்தி நமது நாட்டில் எப்போதேனும் தோன்றியிருப்பதுண்டா? ஏன் தோன்றவில்லை? இதனால் இயற்கையிலே ஸ்திரீகள் ஆண் மக்களைக் காட்டிலும் புத்தியில் குறைந்த வாகளென்பது தெளிவாக விளங்குகிறதன்றோ?’ என்கிறார்கள்.

தமிழ்நாட்டிலோவெனில், இப்படிப்பட்ட வாதம் செல்லாது. அதற்கு நேர் எதிரிடையாக இந்நாட்டில் ஸ்திரீகள்:-  “ஓளவையாரைப் போல் கவிதையும் சாஸ்திரமும் செய்யக்கூடிய ஓர் ஆண் மகன் இங்கு பிறந்திருக்கிறானா? ஏன் பிறக்கவில்லை? இதினின்றும் ஆண் மக்கள் இயற்கையிலேயே பெண்களைக் காட்டிலும் அறிவுத்திறமையில் குறைந்தவர்களென்பது தெளிவாக விளங்குகிறதன்றோ?” என்று வாதிக்கக்கூடிய நிலைமையிலிருக்கிறார்கள்.

மகிமை பொருந்திய ஆத்ம ஞானியாகிய ஔவையார் இயற்றியிருக்கும்  ‘ஓளவை குறள்’ என்ற ஞானநூல் தமிழ்நாட்டு யோகிகளாலும் சித்தர்களாலும் உபநிஷத்துக்களுக்குச் சமானமாகப் போற்றப்பட்டு வந்திருக்கிறது. யோக சாஸ்திரத்துக்கும் மோக்ஷ சாஸ்திரத்துக்கும் இந்நூல் முக்கிய பாடங்களில் ஒன்றாகக் கருதத்தக்கது. மேலும் யோகாநுபூதி ஸம்பந்தமாகப் பிறர் எழுதுமிடத்தே மிகவும் கடினமும் அஸாதாரணமுமாகிய சொற்களையும் வாக்கியங்களையும் வழங்குதல் இன்றியமையாததென்ற கருத்துடன் வேலை செய்திருக்கிறார்கள். ஔவையின் நூலோ மிகத் தெளிந்த, மிக எளிய தமிழ்நடையில் எல்லா ஜனங்களுக்கும் பொருள் விளங்கும்படியாக எழுதப்பட்டிருக்கின்றது. ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ என்பது கவிதைத் தொழிலில் மிகவும் உயர்ந்த தொழில். இதில் ஔவை ஒப்பற்றவள். இத்துடன் மிகவும் அருமையான நுட்பமான விஷயங்களை யாவருக்கும் அர்த்தமாகும்படி மிகவும் எளிய நடையில் சொல்வதாகிய அற்புதத் தொழிலை உயர்ந்த கவியரசர்களே தெய்வீகத் தொழில் என்றும் தெய்வசக்தி பெறாத சாதாரணக் கவிகளுக்கு சாத்தியப்படாத தொழில் என்றும் கருதுகிறார்கள். இந்த அற்புதத் தொழிலிலும் ஔவை நிகரற்ற திறமை வாய்ந்தவள்.

புருஷார்த்தங்கள், அதாவது மானிட ஜன்மம் எடுத்ததினின்றும் ஒருவன் அடையக்கூடிய மிக உயர்ந்த பயன்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கில் வீடு என்று சொல்லப்படும் முக்தி வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதாகையால், அதனை விரித்துக் கூற முயலாமல், அதற்குச் சாதனமாகிய தெய்வபக்தியை மாத்திரம் முதல் அத்யாயத்தில் கூறி நிறுத்திவிட்டு, மற்ற மூன்று புருஷார்த்தங்களையும் விளக்கி, திருவள்ளுவ நாயனார்  ‘முப்பால்’ (மூன்று பகுதிகளுடையது) என்ற பெயருக்கு திருக்குறள் செய்தருளினார். ஆயிரத்து முன்னூற்று முப்பது சிறிய குறட்பாக்களில் நாயனார் அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலையும் அடக்கிப் பாடியது மிகவும் அபூர்வமான செய்கை என்று கருதப்பட்டது. இது கண்ட ஓளவைப்பிராட்டி வீட்டுப் பாலையும் கூட்டி நான்கு புருஷார்த்தங்களையும் ஒரே சிறிய வெண்பாவுக்குள் அடக்கிப் பாடினார். இந்த ஆச்சரியாமான வெண்பா பின்வருமாறு:

‘ஈதலறம்; தீவினை வீட்டீட்டல் பொருள்; எஞ்ஞான்றும்
காதலிருவர் கருத்தொருமித் - தாதரவு
பட்டதே இன்பம்; பரனை நினைந்திம் மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.’

இவ்வெண்பாவின் கருத்து யாதெனில், ஈதலாவது அருள் செய்தல் அல்லது கொடுத்தல் என்றும் பொருள்படும். அதாவது, உலகத்தாருக்குப் பயன்படும் வண்ணமாக நம் உடல்,பொருள், ஆவி மூன்றையும் தத்தம் பண்ணிவிடுதல்: நமது பொருளாலும், வாக்காலும், மனத்தாலும், உடற் செய்கையாலும், பிறருடைய கஷ்டங்களை நீக்கி அவர்களுக்கினியன செய்தல்; பொருள் கொடுப்பது மாத்திரமே ஈகையென்று பலர் தவறாகப் பொருள் கொள்ளுகிறார்கள். பிறர் பொருட்டாக நம் உயிரைக் கொடுத்தல் கொடையன்றோ? வைத்தியம் முதலிய சிகிச்சைகளால் பிறருக்கும் பிராணதானம் செய்தல் ஈகையன்றா? பொருள் முதலிய நலங்களை யெல்லாம் ஒருவன் தனக்குத்தானே சேகரித்துக் கொள்ளக் கூடிய திறமை அவனுக்கு ஏற்படும்படி அவனுக்குக் கல்வி பயிற்றுதல் தானமாகாதா?

எனவே, கைம்மாறு கருதாமல் பிறருக்கு எவ்விதத்திலேனும் செய்யப்படும் கஷ்ட நிவாரணங்களும் அனுகூலச் செயல்களும் ஈகை எனப்படும். இதுவே மனிதனுக்கு இவ்வுலகத்தில் அறம், அல்லது தர்மம், அல்லது கடமையாம்.

இனி, தீய செயல்கள் செய்யாதபடி, எவ்வகைப்பட்ட அறிவு முயற்சியாலேனும் சரீர முயற்சியாலேனும் சேகரிக்கப்படும் உணவு, துணி முதலிய அவசியப் பண்டங்களும், குதிரை வண்டிகள், ஆபரணங்கள், வாத்தியங்கள், பதுமைகள் முதலிய சௌக்கிய வஸ்துக்களும், இவற்றை அனுபவிப்பதற்குச் சாதனங்களாகிய வீடு, தோட்டம் முதலியனவும், இப்பண்டங்களுக்கெல்லாம் பொதுக் குறியீடும் பிரதியுமாக மனிதரால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கும் பொற்காசு, வெள்ளிக்காசு, காகிதப் பணம் முதலியனவும், செல்வம் அல்லது அர்த்தம் எனப்படும். நற்செயல்களாலே சேர்க்கப்படும் பொருளே இன்பத்தைத் தருவதாகையாலும், தீச் செயல்கள் செய்து சேர்க்கும் பொருள் பலவிதத் துன்பங்களுக்கு ஹேதுவாய் விடுமாகையாலும், தீவினைகள் விட்டுச் சேர்ப்பதே பொருள் என்னும் பெயர்க்குரியதென்றும் தீவினைகளாலே சேர்ப்பது துன்பக் களஞ்சியமே யாகுமென்றும் ஔவையார் குறிப்பிட்டருளினார்.

இனி, இன்பத்துக்கு ஔவையார் கூறும் இலக்கணமோ நிகரற்ற மாண்புடையது. காதலின்பத்தையே முன்னோர் இன்பமென்று சிறப்பித்துக் கணக்கிட்டனர். பொருளைச் சேர்ப்பதிலும் அறத்தைச் செய்வதிலும் தனித்தனியே பலவகையான சிறிய சிறிய இன்பங்கள் தோன்றும். ஆயினும் இவை காதலின்பத்துக்குத் துணைக் கருவிகளாவது பற்றியே ஒருவாறு இன்பங்களென்று கூறத் தக்கனவாம். உலகத்தில் மனிதர் ருசியான பதார்த்தங்களை உண்டல், நல்ல பாட்டுக் கேட்டல், நல்ல மலர்களை முகர்தல் முதலிய இந்திரிய இன்பங்களை விரும்பி அவற்றை அடையும் பொருட்டு மிகவும் பாடுபடுகிறார்கள். அதிகார இன்பம், புகழின்பம் முதலிய எண்ணற்ற வேறு பல இன்பங்களுக்காகவும் உழைக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் அற்பமான இன்பங்களென்று கருதி முன்னோர் இவற்றை இன்பப்பாலிலே சேர்க்கவில்லை. புகழ், அதிகாரம் முதலியவற்றை அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் சார்ந்தனவாகக் கணித்தார்கள். இந்திரிய இன்பங்களுக்குள்ளே இனிய பக்ஷணங்களையும் கனிகளையும் உண்டல், மலர்களை முகர்தல் முதலியன மிகவும் எளிதிலே தெவிட்டக் கூடியனவும், வெறுமே சரீர சுக மாத்திரமன்றி ஆத்ம சுகத்துக்கு அதிக உபகாரமில்லாதனவுமாதல் பற்றி அவற்றையும் இன்பப்பாலிலே சேர்க்கவில்லை.

‘கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்
ஒண்டொடிக் கண்ணேயுள’

என்று திருவள்ளுவர் பாடியிருக்கிறார்.

“காண்டல், கேட்டல், உண்டல், மோப்பு, தீண்டுதல் எனும் ஐவகை இந்திரியங்களையும் ஒருங்கே இன்புறுத்தும் இயல்பு ஒளி பொருந்திய வளையணிந்த இப்பெண்ணிடத்தே தானுள்ளது” என்பது அக்குறளின் பொருள். இதனுடன் உயிருக்கும் மனத்துக்கும் ஆத்மாவுக்கும் சேர இன்பமளிப்பதனால் காதலின்பம் இவ்வுலக இன்பங்களளைத்திலும் தலைமைப்பட்டதாயிற்று. ஆதலால், நான்கு புருஷார்த்தங்களுள், அதாவது மனிதப் பிறவி எடுத்ததனால் ஒருவன் எய்தக்கூடிய பெரும் பயன்களைக் கணக்கிடப் புகுந்த இடத்து நம் முன்னோர் காதலின்பத்தையே இன்பமென்னும் பொதுப் பெயரால் சொல்லி யிருக்கிறார்கள். இங்ஙனம் இன்பமொன்றை பொதுப்பெயரால் சிறப்பித்துக் கூறத்தக்க பெருஞ் சுவைத் தனியின்பம் மனிதனுக்குக் காதலின்பமே யாகுமென்பதையும், அவ்வின்பத்தை தவறுதலன்றி, நுகர்தற்குரிய வழியின்னதென்பதையும் ஔவைப் பிராட்டியார் சால இனிய தமிழ்ச் சொற்களிலே காட்டி அருள் புரிந்திருக்கிறார்.

ஒருவன் ஒருத்தியினிடத்திலும், ஒருத்தி ஒருவனிடத்திலும் மனத்தாலும், வாக்காலும் செய்கையாலும், கற்பு நெறி தவறாமல் நித்தியப் பற்றுதலுடையோரால் மன ஒருமையெய்தி தம்முள் ஆதரவுற்றுத் துய்க்கும் இன்பமே இன்பமெனத் தகும் என்று ஔவையார் கூறுகிறார்.

இனி, முக்தியாவது யாதெனில்:- கடவுளை உள்ளத்திலிருத்தித் தானென்ற கொள்கையை மாற்றி ஈசபோதத்தையெய்தி, மேற்கூறிய மூன்று புருஷார்த்தங்களிலும் எவ்விதமான ஸம்பந்தமுமில்லாமலே செய்கையற்று மடிந்து கிடப்பானென் றெண்ணுதல் பெருந் தவறு. உயிருள்ள வரை ஒருவன் தொழில் செய்யாதிருக்கக் கடவுளுடைய இயற்கை இடங்கொடாது.  ‘யாவனாயினும் (மனத்தாலேனும், வாக்காலேனும், உடம்பாலேனும்) யாதேனு மொருவிதமான செய்கை செய்துகொண்டிராமல் சும்மாயிருத்தல் ஒரு க்ஷணங்கூட ஸாத்தியப்படாது. இயற்கையிலேயே பிறக்கும் குணங்களால் ஒவ்வொருவனும் தன் வசமின்றியே எப்போதும் தொழில் செய்து கொண்டிருக்கும்படி வற்புறுத்தப் படுகிறான்’ என்று கண்ணபிரான் பகவத் கீதையில் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

இன்னும் ஔவைப் பிராட்டியின் நூல்களிலுள்ள வசனங்களை உதாரணங்காட்டி அவருடைய மகிமைகளையெல்லாம் விளக்கிக் கூற வேண்டுமாயின் அதற்கு எத்தனையோ சுவடிகள் எழுதியாக வேண்டும். நமது வியாசமோ ஏற்கெனவே மிகவும் நெடிதாய்விட்டது. ஆதலால் இந்தக் கவியரசியைக் குறித்துத் தற்காலத்தினர் தெரிந்துகொள்ள வேண்டிய அம்சங்களில் மிகவும் முக்கியமாக எனக்குத் தோன்றுவனவற்றை மற்றொரு வியாஸத்தில் சுருக்கமாகச் சொல்ல உத்தேசம் கொண்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டு மாதராகிய, என் அன்புக்கும் வணக்கத்துக்குமுரிய சகோதரிகளே, இத்தனை பெருமை வாய்ந்த தமிழ் நாகரீகத்தின் எதிர்கால வாழ்வு உங்களுடைய பயிற்சிகளையும் முயற்சிகளையும் பொறுத்திருக்கிறது. பூமண்டலத்தில் நிகரில்லாத அருஞ்செல்வமுடைய சேமநிதியொன்றுக்குக் கடவுள் உங்களைக் காவலாக நியமித்திருக்கிறான். மனித உலகமோ இந்த நேரத்தில் பிரமாண்டமான சண்ட மாருதங்களைப் போன்ற மாறுதல்களாலும், கிளர்ச்சிகளாலும், புரட்சிகளாலும், கொந்தளிப்புற்ற கடலிடைப்பட்டதொரு சிறுதோணிபோல் அலைப்புண்டும், புறளுண்டும், மோதுண்டும், எற்றுண்டும், சுழற்றுண்டும், தத்தளிக்கிறது. இந்த மஹா பிரளயகாலத்தில் தமிழ் நாகரீகம் சிதறிப் போகாதிருக்கும்படி கடவுள் அருள் புரிவாராகுக. அஃது அங்ஙனம் சிதறாமலிருக்குமாறு தகுந்த கல்விப் பெருமையாலும், ஒழுக்க மேன்மையாலும் விடுதலையின் சக்திகளாலும். அதைக் காப்பாற்றக் கூடிய திறமையை உங்களுக்கு பரப்ரம்மம் அருள் செய்க.

$$$

Leave a comment