நமது பெண்களுக்கு ஆரம்பப்படிகள் காட்டினோமானால், பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரண விடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றுவார்கள். அப்போதுதான் நமது தேசத்துப் பூர்வீக ரிஷி பத்தினிகள் இருந்த ஸ்திதிக்கு நமது ஸ்திரீகள் வர இடமுண்டாகும். ஸ்திரீகளை மிருகங்களாக வைத்து நாம் மாத்திரம் மஹரிஷிகளாக முயலுதல் மூடத்தனம். பெண் உயராவிட்டால் ஆண் உயராது.