புத்தொளியில் நீதிமன்றங்கள்

-திருநின்றவூர் ரவிகுமார்

2014  முதல் மத்தியில் ஆட்சியில் இருந்துவரும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நீதித்துறை அத்துமீறிச் செயல்பட்டாலும் எவ்வாறு பொறுமையுடன் செயல்படுகிறது என்பதை முந்தைய அனுபவங்களுடன் ஒப்பிடுகிறார் கட்டுரையாளர்....

மனுஸ்மிருதியை நடைமுறைப்படுத்த விரும்புகிறது ஆர்எஸ்எஸ். இந்த  ‘அஜண்டா’வை பாஜகவின் மோடி அரசு நடைமுறைப்படுத்த முனைகிறது -இது எதிர்க்கட்சிகளின் கூப்பாடு.

நரேந்திர மோடி தன்னுடைய அரசை வழிநடத்துவது டாக்டர் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனமேயன்றி மனுஸ்மிருதி அல்ல என்று பலமுறை சொல்லி உள்ளார். இந்த நாட்டில் சர்வ அதிகாரம் பிரதமருக்கு இல்லை. பிரதமர் உட்பட இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் அதிகாரம் அளிப்பது அரசியல் சாசனமே.

நமது அரசியல் சாசனம், மத்திய, மாநில அரசுகளுக்கு கட்டுப்படாத தன்னாட்சி கொண்ட அமைப்புகளாக நீதித்துறை, தேர்தல் ஆணையம், சட்ட ஆணையம், நிதித்துறை ஆணையம், மனித உரிமை ஆணையம், மகளிர் ஆணையம், சிறுபான்மையினர் நல ஆணையம், பட்டியலின நல ஆணையம், பழங்குடியினர் நல ஆணையம் என சுமார் 21 அமைப்புகளை உருவாக்கி உள்ளது.

இதில் அரசியல் அதிகாரம் தன் கை வேலையைக் காட்ட முடியாதா என்றால், அப்படி அல்ல என்று கூறுகின்றன கடந்த கால அனுபவங்கள். ஆனால் மோடி அரசு இதில் வித்தியாசப்படுகிறது.  ‘கான்ஸ்டிட்யூஷனல் பாடிஸ்’ என்று சொல்லப்படுகின்ற தன்னாட்சி கொண்ட அரசியல் சாசன அமைப்புகளை உண்மையிலே தன்னாட்சி கொண்டதாக, அரசின் கைப்பாவையாக இல்லாமல் செயல்பட வைத்துள்ளது இந்த அரசு. இது புதிய அனுபவமாக உள்ளது.

நீதித் துறை:

‘தேர்தலின் போது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்பதால் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது’ என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் (ஜூன் 12, 1975, நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா) தீர்ப்பளித்தது. தனது பிரதமர் பதவிக்கு ஆபத்து என்றவுடன் தேசத்தின் மீது நெருக்கடி நிலையைத் திணித்து ஜனநாயகத்தை மிதித்தார் இந்திரா காந்தி. தீர்ப்பளித்த நீதிபதி ஜக்மோகன்லால் சின்காவுக்குத் தகுதி இருந்தும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகாமல் அவரை இந்திரா காந்தி தடுத்து விட்டார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் மார்க்கண்டேய கட்ஜூ. அவர் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தபோது நடந்த சம்பவம் ஒன்றை பின்னாளில் ஒரு ஆங்கில நாளேட்டுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். அப்பொழுது திமுக தலைவராக இருந்தவரின் பிரேமத்துக்கு உரியவராக இருந்த குமரன் ஒருவரை உயர் நீதிமன்ற நீதிபதியாக்கும்படி கேட்டுக் கொண்டாராம். அவர் லஞ்ச லாவண்யத்தில் பிரபலமானவர் என்பதால் அவர் பெயரை பரிந்துரைக்க கட்ஜூ மறுத்துவிட்டார். விடுவாரா திமுக தலைவர்? பிரதமருக்கு அழுத்தம் தரப்பட்டது. பிறகு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கட்ஜூவைக் கூப்பிட்டு,  ‘அவர் பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இங்கு ஏகப்பட்ட அரசியல் அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கிறது’ என்றாராம். வேறு வழியில்லை கட்ஜூவுக்கு. பிறகு அந்த நபர் கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது தனிக்கதை!

இப்போதெல்லாம் அரசு நிர்வாகத்தில் நீதிமன்றத்தின் தலையீடு அதிகமாக,   இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது ஒரு அதீதச் செயலாக (Judicial over activism) பார்க்கப்படுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு நீதிபதி அந்த மாநில அரசின் செயல்பாடுகளைப் பற்றி அதிகமாக கேள்விகளை எழுப்பியதாகவும் அதனால் ஆட்சியாளருக்கு தர்ம சங்கடங்கள் அதிகரித்ததாகவும் சொல்லப்பட்டது. ஒரு நாள் காலை நடைப்பயிற்சிக்குச் சென்ற அந்த நீதிபதியின் மீது ஒரு ஷேர் ஆட்டோ மோதியதில் அவர் மரணம் அடைந்தார்.

நீதித்துறை அதிர்ந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கடும் கண்டனம் தெரிவித்தார். மாநில அரசு நால்வரைப் பிடித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தியது. நீதிமன்றம் விரைந்து வழக்கை விசாரித்து, உண்மையை அறிந்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அதன் பிறகு அந்த மாநில அரசின் செயல்பாடுகள் பற்றி யாரும் கேள்வி எழுப்பியதாக பத்திரிகைகளில் செய்தி வரவில்லை.

மேற்கண்டவை அனுபவமாக உள்ள நிலையில், மோடி அரசின் செயல்பாடுகளோ வித்தியாசமாக இருக்கின்றன.

அந்நிய நாடுகளில் இருந்து ஆயுதங்கள் வாங்குவது இந்தியாவுக்கு வழக்கம்தான். அப்படி வாங்கும்போது ஆளுங்கட்சி அன்பளிப்புகளைப் பெறுவதும் புதிதல்ல. அப்படி வாங்கிப் பழக்கப்பட்டவர்கள், பிரெஞ்சு நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கிய போது, மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளதாக மோடி அரசின் மீது குற்றம் சாட்டினர். ‘பாம்பறியும் பாம்பின் கால்’ என்று மக்களும் நம்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மக்கள் மன்றத்தில் மோடி அரசின் மீது வீசப்படும் சேறுகள், வாத்தின் மேற்புறம் போல, அதன் மேல் ஒட்டுவதில்லை. எனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றமும்,  ‘என்ன விலைக்கு வாங்கினாய் என்று எனக்கு சொல்லு’ என்று மோடி அரசுக்கு உத்தரவிட்டது. நீதித் துறையின் ஊழல் மிகுந்த நடவடிக்கைகளைத் தெரிந்த எல்லோரும் இதை கடுமையாக எதிர்த்தனர். தேசப் பாதுகாப்பு சம்பந்தமான ஆவணங்களை நீதிமன்றம் கேட்பது நீதிமன்றத்தின் அதீதச் செயல்பாடு என்றனர். ஆவணங்களைத் தர வேண்டியதில்லை என்று,  சில மூத்த பாஜக தலைவர்கள் உட்பட, பலரும் அரசுக்கு அறிவுரை கூறினர். ஆவணங்களைத் தர மறுத்தால் நீதிமன்றத்தால் அரசை ஒன்றும் செய்ய முடியாது என்றும் நீதிமன்றத்தின் வரம்பை வரையறுக்க வேண்டும் என்றும் கூறினர். இதெல்லாம் நியாயம் தான்.

ஆனால் பிரதமர் மோடியோ முற்றிலும் வேறொரு நோக்கில் இதை அணுகினார். நம் நாட்டு நீதிமன்றங்களை நாமே நம்பாவிட்டால் வேறு யார்தான் நம்புவார்கள்? என்று அவர் கேட்டார். நீதித் துறையின் மீது இந்த அரசுக்கு நம்பிக்கை இருக்கிறது  என்றார். உச்ச நீதிமன்றம் கேட்டபடியே ரபேல் விமானங்களை வாங்கிய விவரங்களை முத்திரையிட்ட உறையில் போட்டு சமர்ப்பித்தது மோடி அரசு.

இறுதியில் நீதிமன்றத் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு பேரிடியாக வந்தது. ஊழல் நடக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றங்களைப் பயன்படுத்தி மோடி அரசின் மீது சேறு அடிக்கும் வேலையும் முடியாமல் போனது. ஆனாலும் புரிந்து கொள்ளவில்லை காங்கிரஸ் கட்சி. அதன் தலைவர் ராகுல் காந்தி விரக்தியின் உச்சத்தில்  ‘மோடி’ என்ற பெயரையே அவதூறு செய்தார். பிறகு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். நீதிமன்ற தண்டனையின்படி அவரது நாடாளுமன்றப் பதவி பறிக்கப்பட்டது. அவர் இருந்த பங்களாவும் காலி செய்யும்படி உத்தரவிடப்பட்டது.

அதே காலகட்டத்தில் லட்சத் தீவுகளின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் மீதும் கொலை வழக்கில் அதே போன்றதொரு தீர்ப்பு வந்தது. தீர்ப்பு வந்த அடுத்த சில மணி நேரத்தில் அவர் உச்ச நீதிமன்றத்தில் அணுகி  தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்துவதை நிறுத்தும்படி செய்தார். அவரது நாடாளுமன்றப் பதவி பறிக்கப்படவில்லை. இதை ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சி மோடி அரசின் மீது மிகப் பெரிய அவதூறுப் பிரசாரத்தை மேற்கொண்டது.

ஆனால் நிதர்சனத்தைப் புரிந்துகொண்ட அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை அணுகினர். உச்ச நீதிமன்றமும்  தண்டனையை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டது. உத்தரவு கிடைத்ததும் அவரது நாடாளுமன்றப் பதவியும் வசித்த பங்களாவும் மீண்டும் கொடுக்கப்பட்டது.

அடுத்த சில வாரங்களில் லட்சத்தீவுகள் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கில் தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம். உடனே அவரது பதவி பறிக்கப்பட்டது. அந்த வரிசையில் தான் காங்கிரஸ் தலைவர் நின்று கொண்டிருக்கிறார்.

வழக்கத்திற்கு மாறாக ஒரு புதிய ஒளியில் நீதிமன்றத்தின் செயல்பாடுகளை மக்கள் பார்க்கத் தொடங்கி உள்ளனர். மக்கள் மட்டுமல்ல, நீதிமன்றங்களும் தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்ய வேண்டிய நிலையில் அதன் மீது புதிய ஒளி பாய்ச்சப்பட்டுள்ளது.

$$$

Leave a comment