-ஆசிரியர் குழு
சநாதனம் சர்ச்சையை ஒட்டி விஜயபாரதம் பிரசுரம் வெளியிட்டுள்ள அற்புதமான நூல் இது. இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறப்பு மிக்க 37 பதிவுகள், சநாதனத்தின் பன்முகத்தையும் அதன் ஒருங்கிணைந்த தன்மையையும் காட்டுகின்றன. தமிழ் கூறும் சநாதனம், சநாதனம் குறித்த சான்றோரின் அமுதமொழிகள் ஆகியவை ‘என்றும் வாழும் சநாதன தர்மம்’ நூலின் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன. நமது இணையதளத்தில் வெளியான கட்டுரைகள் அழகிய நூல் வடிவம் பெறுவது மிகவும் பெருமை அளிக்கிறது.

எந்த ஒரு தீமையிலும் நன்மை இருக்கிறது; அந்தத் தீமையால் கிடைக்கும் அனுபவம் வாழ்க்கையை நல்ல திசையில் திருப்பிச் செல்ல உதவுகிறது என்று கூறப்படுவதுண்டு. சநாதனம் குறித்த தேவையற்ற சர்ச்சையை திமுக கூட்டணிக் கட்சிகள் உருவாக்கியதும் நல்லதற்கே. தமிழக அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை மக்கள் அறிய இது ஓர் அற்புத வாய்ப்பாக அமைந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கியப் பிரிவான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) கடந்த 2023 செப். 2ஆம் தேதி, சென்னையில், காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான காமராஜர் அரங்கத்தில் நடத்திய ‘சநாதன ஒழிப்பு மாநாடு’ தான் அந்தச் சர்ச்சைக்கு அச்சாரமிட்டது.
அந்த அநாகரிக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது அறியாமையை வெளிப்படுத்தினார் திமுகவின் இளவரசராக முன்னிறுத்தப்பட்டு வரும் திரு. உதயநிதி ஸ்டாலின். சநாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல், சநாதனம் என்பது ஹிந்து தர்மம் தான் என்ற அடிப்படை அறிவும் இல்லாமல், அந்த மேடையில் “சநாதனத்தை ஒழிப்போம்” என்று முழங்கியதன் மூலம், நாடு முழுவதும் கண்டனங்கள் குவியவும் காரணமாகி இருக்கிறார்.
அதையடுத்து உதயநிதியின் ஆணவப் பேச்சுக்கு எதிராக தமிழக அறிவுலகம் கிளர்ந்தெழுந்து ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தது. குறிப்பாக சநாதனத்தின் சிறப்புகளை அனைவருக்கும் தெரியப்படுத்தக் கிடைத்த நல்வாய்ப்பையே உதயநிதியின் உளறல் உருவாக்கிக் கொடுத்தது.
அவற்றில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட 70-க்கு மேற்பட்ட பதிவுகளை ’பொருள் புதிது’ தளத்தில் தொடர்ந்து தொகுத்தோம். அப்போதுதான், பெருவாரியான தமிழக மக்கள் சநாதனம் விஷயத்தில் திமுக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக இருப்பது தெரிய வந்தது.
அந்த இணையத் தொடரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 37 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, இப்போது ‘என்றும் வாழும் சநாதன தர்மம்’ என்ற நூலாக வெளியாகி இருக்கிறது. தொகுப்பாசிரியர் திரு. சேக்கிழானின் அரிய முயற்சியில் வெளியாகியுள்ள இந்நூல், சமகால வரலாற்றுப் பதிவு எனில் மிகையில்லை.
இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், சநாதனத்தின் பன்முகத்தையும் அதன் ஒருங்கிணைந்த தன்மையையும் காட்டுகின்றன. நூலின் தொடக்கமே, “நான் ஒரு சநாதனி ஹிந்து!” என்ற மகாத்மா காந்தியின் கட்டுரையுடன் தொடங்குகிறது. “சநாதன தர்மமே நமக்குத் தேசியம்” என்ற மகரிஷி அரவிந்தரின் கட்டுரை, இந்த நூலின் அடித்தளமாக இலங்குகிறது.
சுவாமி விமூர்த்தானந்தர், சத்குரு ஜக்கி வாசுதேவ், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி; மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், எல்.முருகன்; பத்திரிகையாளர்களான எஸ்.எஸ்.மகாதேவன், எஸ்.குருமூர்த்தி, பத்மன், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், ரங்கராஜ் பாண்டே, கோதை ஜோதிலட்சுமி, குரு.சிவகுமார், வ.மு.முரளி; எழுத்தாளர்களான வித்யா சுப்பிரமணியம், பட்டுக்கோட்டை பிரபாகர், செ.அருட்செல்வப் பேரரசன், திருநின்றவூர் ரவிகுமார், காம்கேர் கே.புவனேஸ்வரி, ஆய்வாளர்களான பேராசிரியர் ப.கனகசபாபதி, ராம் மாதவ், ஜெயஸ்ரீ சாரநாதன்; கவிஞர்களான மரபின்மைந்தன் முத்தையா, பி.ஆர்.மகாதேவன், வ.ச.ஸ்ரீகாந்த்; சமூக ஊடகப் பதிவர்களான ஜடாயு, இளங்கோ பிச்சாண்டி, வானவில் ரவி, ஷோபனா ரவி, இந்துவன்; பாஜகவின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட பலரின் பதிவுகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
“சநாதன தர்மம் ஹிந்துக்களின் தினசரிக் கடமைகளின் தொகுப்பு” என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயின் கருத்து, சநாதனம் குறித்து என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா சொல்வதென்ன, தமிழக அரசின் பாடநூலில் ‘சநாதனம்’ குறித்து கூறப்பட்டிருப்பது என்ன என்பது போன்ற தகவல்களும் இந்நூலில் பொருத்தமுற இணைக்கப்பட்டுள்ளன.
தமிழ் கூறும் சநாதனம், சநாதனம் குறித்த சான்றோரின் அமுதமொழிகள் ஆகியவையும் ’என்றும் வாழும் சநாதனம்’ நூலின் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன. இந்நூலை சென்னையில் உள்ள விஜயபாரதம் பிரசுரம், மிகவும் நேர்த்தியாக வெளியிட்டிருக்கிறது. இந்நூல் வரும் விஜயதசமி நன்னாளில் (24.10.2023) முறைப்படி வெளியாக உள்ளது.
நமது இணையதளத்தில் வெளியான கட்டுரைகள் அழகிய நூல் வடிவம் பெறுவது மிகவும் பெருமை அளிக்கிறது. இந்நூலும் நமது தளமும் தமிழக மக்களின் மனசாட்சியாகத் திகழும் என்ற நம்பிக்கை மிகுகிறது.
***
நூல் குறித்த விவரங்கள்:
என்றும் வாழும் சநாதன தர்மம் தொகுப்பு ஆசிரியர்: சேக்கிழான் 128 பக்கங்கள், விலை: ரூ. 125. வெளியீடு: விஜயபாரதம் பிரசுரம், 31, எம்.வி.நாயுடு தெரு, பஞ்சவடி, சேத்துப்பட்டு, சென்னை- 600 031. தொடர்புக்கு: +91 89391 49466
$$$
One thought on “என்றும் வாழும் சநாதன தர்மம்: நூல் அறிமுகம்”