தமிழ் இலக்கியத்தில் செங்கோல்: பதிப்புரையும் அணிந்துரையும்

-ஆசிரியர் குழு

நமது தளத்தில் வெளியான  ‘தமிழ் இலக்கியத்தில் செங்கோல்’ தொடர் தொகுக்கப்பட்டு நூலாக வெளியாக உள்ளது. இதனை விஜயபாரதம் பிரசுரம் வெளியிடுகிறது. இந்நூலின் பதிப்புரை, அணிந்துரைகள் இங்கே... 

பதிப்புரை

உலகில் நாம் நல்லபடி வாழ சில முன்னுதாரணங்கள் தேவைப்படுகின்றன. அந்த முன்னுதாரணங்களைப் பின்பற்றி வாழும்போது, துயரம் குறைந்து, இனிமை மிகுந்து உலகம் சிறப்புறுகிறது. அந்த உதாரணங்களை இலக்கியம் தமது எழுத்துகளில் இறவாப்புகழுடன் பொதிந்து வைத்திருக்கிறது.

‘ஒரு வில், ஒரு சொல், ஒரு இல்’ என்று வாழ்ந்த ஸ்ரீராமனே நமது முன்மாதிரி. ஆராய்ச்சி மணி அடித்த பசுவிற்காக தனது மகனையே தேர்க்காலில் இட்டு நீதியை நிலைநாட்டிய மன்னன் மனுநீதிச் சோழன் நமக்கு முன்னோடி. அறம், பொருள், இன்பம் வாயிலாக வீடு அடைய உதவும் திருக்குறள் நமக்கு வழித்துணைவன்.

உலக நாடுகள் பலவற்றில் கற்கால நாகரிகத்துடன் மனிதத் திரள் வாழ்ந்த காலகட்டத்தில், பாரதம் பண்பாட்டில் உயர்ந்தோங்கி வளர்ந்திருந்தது. அதிலும் குறிப்பாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே அறத்துடன் கூடிய நல்லாட்சி நடத்திய மன்னர்களைக் கொண்டதாக தமிழ்நாடு விளங்கி இருக்கிறது. அதற்கான சான்றாவணங்களாக அக்காலத்தில் படைக்கப்பட்ட நூல்கள் விளங்குகின்றன.

மன்னர்களின் நல்லாட்சிக்கு, நடுநிலை பிறழாத செங்கோன்மைக்கு அடையாளமாக, அற்புதமான ஓர் அணிகலனாகப் படைக்கப்பட்டதே  ‘செங்கோல்’ என்னும் இனிய உருவகம். தமிழக மன்னர்கள் நாட்டு மக்களைக் காக்க, ஒருகரத்தில் வாளும் மறுகரத்தில் செங்கோலும் ஏந்தி இருந்தனர். மறத்தின் சின்னமான வாளும் அறத்தின் சின்னமான செங்கோலும் தான் மன்னரின் அடையாளங்கள்.

இவற்றில், நாட்டு மக்கள் நலன் விரும்பும் நல்லாட்சியை அளித்த நாயகர்களின் சின்னமாக விளங்கிய ‘செங்கோல்’ குறித்து தமிழ் இலக்கிய நூல்களில் பயின்று வரும் செய்திகளைத் தொகுத்து இனிய நூலாக வழங்கி இருக்கிறார் திரு. சேக்கிழான். அவருக்கு நமது பாராட்டுகள். 

இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய திரு. உ.வே. துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களுக்கும், நூல் தயாரிப்பில் உடன் நின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

நிகழும் சோபகிருது ஆண்டு, விஜயதசமி நன்னாளில் இந்நூலை வெளியிடுவதில் மிகவும் அகம் மகிழ்கிறோம். இந்நூலை தமிழ்கூறும் நல்லுலகம் ஆதரிப்பது, நமது பாரம்பரியச் சிறப்பை மேலும் உயர்த்த உறுதுணையாக இருக்கும்.

விஜயபாரதம் பிரசுரம்

சோபகிருது, புரட்டாசி ( 10.10.2023)

$$$

வாழ்த்துரை

உ.வே. துஷ்யந்த் ஸ்ரீதர்

வேத அறிஞர், எழுத்தாளர்

.

“செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார்”

-ஆண்டாளின் இந்த வரி  ‘நாச்சியார் திருமொழி’யில் அமைந்துள்ளது. இந்த வரியானது, திருவுடைய செல்வன், அதாவது ஸ்ரீ மஹாலட்சுமியின் மணாளன் என்று கூறப்படும் நம்பெருமாளின் செல்வச்செழிப்புக்கு எடுத்துக்காட்டு. அதே சமயத்தில் செங்கோல் என்பது நீதி தவறா அரசின் ஒரு எடுத்துக்காட்டும் கூட.

ஒரு நாடு, மஹாலக்ஷ்மியின் கடைக்கண் பார்வைக்கு  பாத்திரமாக இருக்க வேண்டும். அவளுடைய பாத்திரத்தால்தான், ஜகன்மாதாவின் அருளால்தான், நாடும் நாட்டு மக்களும் சுபீக்ஷம் பெறுவார்கள்.

சுபீக்ஷம் மட்டும் இருந்தால் போதுமா? அரசு எந்த ஒரு பாரபக்ஷமும் பாராமல்  அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நீதி வழங்க வேண்டும்; நீதி பாலிக்க வேண்டும் என்பது பெரியோர்களின் கூற்று.

ஆதலால்தான், செங்கோல் என்பது நம் கலாசாரத்தில் இருக்கக் கூடிய ஒரு முக்கியமான லக்ஷணமாக இருக்கிறது. இந்த செங்கோலுடைய பெருமையை உணர்ந்து, அண்மையில் பாரதப் பிரதமர் நாட்டின் நாடாளுமன்றத்தில் இதை நிறுவி, இதற்கு உரிய கௌரவ இடத்தைக் கொடுத்தது நம் எல்லோருக்கும் பெருமை.

இந்த ‘செங்கோல்’ என்பது, ஒருவிதத்தில் நம் தமிழ் இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் கூறப்பட்டுள்ளது. சங்க காலத்துப் பாடல்கள் தொடங்கி அண்மையில் வரை, அத்துணை தமிழ் ஆசிரியர்களும் பேரறிஞர்களும் இந்த வார்த்தையையும், செங்கோலின் பெருமைகளையும் அழுத்தம் திருத்தமாகக் கூறி உள்ளனர்.

அவற்றை இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் திரு. சேக்கிழான் அவர்கள் மிகவும் பாடுபட்டு, அரிய சான்றுகளைத் தொகுத்து, அழகான பூ மாலை போலத் தொடுத்து, வாசகர்களுக்கு ஒரு ஞான விருந்தாகப் படைத்துள்ளார்.

இந்தப் புத்தகம் மேன்மேலும் வெற்றி பெற வேண்டும்; தமிழ் ஆர்வமுள்ள  ஆத்திகப் பெருமக்களின் இல்லங்கள் தோறும் போய்ச் சேர வேண்டும்;  இளைஞர்களின்  மனதிலும் ஞானத்திலும் இந்தச் சான்றுகளும், இந்தச் சான்றுக்கு உவப்பாக இருக்கக்கூடிய கருத்தும் தங்க வேண்டும் என்பது  அடியேனுடைய பிரார்த்தனை.

சென்னை, 10.10.2023

$$$   

நூல் குறித்த விவரங்கள்:

தமிழ் இலக்கியத்தில் செங்கோல்
ஆசிரியர்: சேக்கிழான்
160 பக்கங்கள், விலை: ரூ. 150-

வெளியீடு:
விஜயபாரதம் பிரசுரம், 
12. எம்.வி.நாயுடு தெரு, 
பஞ்சவடி, சேத்துப்பட்டு, 
சென்னை- 600 031.

தொடர்புக்கு: +91 89391 49466

Leave a comment