-ஆசிரியர் குழு
நமது தளத்தில் ‘சநாதனம்’ குறித்து தொடராக (வாழும் சனாதனம்) வெளியான அறிஞர்கள் பலரது கட்டுரைகளில் தேர்வு செய்யப்பட்ட 37 கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. இதனை விஜயபாரதம் பிரசுரம் வெளியிடுகிறது. இந்நூலின் பதிப்புரையும், முன்னுரையும் இங்கே…

பதிப்புரை
யாகத்திலே தவ வேகத்திலே - தனி யோகத்திலே பல போகத்திலே, ஆகத்திலே தெய்வபக்தி கொண்டார்தம் அருளினிலே உயர் நாடு!
– என்று பாடுவார் மகாகவி பாரதியார்.
பாரத தேசத்தின் ஆதாரமாக விளங்குவது, இந்த மண்ணில் வாழும் மக்களின் வாழ்வியலை நெறிப்படுத்தி நல்வழிகாட்டும் அறச் சிந்தனைகளும் தர்ம சாஸ்திரங்களும் தான்.
அப்படிப்பட்ட அறவழியினை ஏற்றுக் கொண்டவர்கள்தான் சநாதனிகள். அவர்கள் சார்ந்த சமயமே பிற்காலத்தில் ‘ஹிந்து மதம்’ என்று வழக்கிலே வந்தது. ஹிந்து மதமே சநாதன தர்மம் என்பது ஒரு வகையில் சரி என்றாலும், சநாதன தர்மம் என்பது மதத்தைத் தாண்டிய விஷயமாகும்.
சநாதனம் என்பதற்கு ‘புராதனம் அல்லது காலத்தால் அழியாதது’ என்று பொருள். ஒருவர் தன் வாழ்வை ஒழுக்கமாகவும் நிறைவாகவும் அமைத்துக் கொள்ள உதவும் கோட்பாடுகளே ‘சநாதன தர்மம்’ எனலாம். இந்தக் கோட்பாடுகள், வழிகளே அன்றி விதிகள் அல்ல. அதாவது ஒருவர் எந்த மதத்தவர் ஆனாலும் (அல்லது மதமற்றவராக இருந்தாலும் கூட) அவர் சநாதன தர்மத்தைப் பின்பற்ற முடியும். இதுவே சநாதன தர்மத்தின் சிறப்பும் ஆகும்.
சமீபத்தில் சநாதன தர்மம் பற்றிய, தமிழகத்தில் சிலரது அர்த்தமற்ற சர்ச்சைப் பேச்சுக்களைத் தொடர்ந்து, அதன் உண்மைத் தன்மையை விளக்கும் பொருட்டு பல அறிஞர் பெருமக்கள், சநாதன தர்மத்தின் சிறப்பையும், அரிய பல தகவல்களையும் அச்சு ஊடகம், காட்சி ஊடகம், சமூகவலை ஊடகம் போன்ற பல தளங்களில் அருமையான கட்டுரைகளாக வடித்திருக்கின்றனர்.
அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளே இங்கு நூலாக வடிவம் பெற்றுள்ளன. இந்நூலினை வெளியிடுவதில் விஜயபாரதம் பிரசுரம் பேருவகை கொள்கிறது.
அன்றலர்ந்த வாசமுள்ள மலர்களை ஒவ்வொன்றாகக் கோர்த்து அழகிய மாலையாகத் தருவது போல, இக்கட்டுரைகளை ஒவ்வொன்றாக நேர்த்தியான முறையில் தொகுத்து நூலாக அளித்துள்ளார் திரு. சேக்கிழான். அவருக்கும், இக்கட்டுரைகளை எழுதிய அனைத்து அறிஞர் பெருமக்களுக்கும், நமது பிரசுரத்தின் மனமுவந்த நன்றிகளும் வாழ்த்துக்களும். மேலும் இந்நூல் உருவாக்கத்தில் பங்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல.
இந்நூலில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், இன்றைய மற்றும் இனி வரும் தலைமுறையினருக்கு சநாதன தர்மம் பற்றிய சரியான புரிதலைத் தரக்கூடிய மிகச் சிறந்த ஆவணமாக நிச்சயம் திகழும் என்று நம்புகிறோம்.
விஜயபாரதம் பிரசுரம்
சோபகிருது ஆண்டு, புரட்டாசி மாதம்.
06.10.2023
$$$
முன்னுரை
சென்னையில், கடந்த 2023 செப். 2ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வு ஒன்று தேசிய அளவில் கவனம் ஈர்த்து, தமிழகத்தில் பல்லாண்டு காலமாக நடத்தப்பட்டு வரும் முட்டாள்தனமான இனவெறுப்பு அராஜகப் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்திருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கியப் பிரிவான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) கடந்த 2023 செப். 2ஆம் தேதி, சென்னையில், காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான காமராஜர் அரங்கத்தில் நடத்திய ‘சநாதன ஒழிப்பு மாநாடு’ தான் அந்நிகழ்ச்சி.
அந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, திமுக கூட்டணியில் உள்ள பல கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் தான் சிறுபிள்ளைத்தனமாக உளறி, தனது ஞானசூனியத்தை வெளிப்படுத்தினார் திமுகவின் இளவரசராக முன்னிறுத்தப்பட்டு வரும் திரு. உதயநிதி ஸ்டாலின்.
சநாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல், சநாதனம் என்பது ஹிந்து தர்மம் தான் என்ற அடிப்படை அறிவும் இல்லாமல், அந்த மேடையில் “சநாதனத்தை ஒழிப்போம்” என்று முழங்கியதன் மூலம், நாடு முழுவதும் கண்டனங்கள் குவியக் காரணமாகி இருக்கிறார்.
அதையடுத்து உதயநிதியின் ஆணவப் பேச்சுக்கு எதிராக தமிழக அறிவுலகம் கிளர்ந்தெழுந்து ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தது. குறிப்பாக சநாதனத்தின் சிறப்புகளை அனைவருக்கும் தெரியப்படுத்தக் கிடைத்த நல்வாய்ப்பையே உதயநிதியின் உளறல் பேச்சு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.
அவற்றில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளை இங்கே தொகுத்து நூலாக்கி இருக்கிறோம். ஹிந்து சமய வெறுப்பு அரசியலை தொடர்ந்து முன்வைத்துவரும் திராவிட அரசியல் வியாதிகளுக்கு முதல்முறையாக பலமான பதிலடி கிடைத்திருக்கிறது. இந்த வரலாற்று நிகழ்வை எதிர்காலம் பேசும். அந்த வகையில் இந்த நூல் வரலாற்று ஆவணமாக இங்கே பதிவு செய்யப்படுகிறது.
-சேக்கிழான்
$$$
நூல் குறித்த விவரங்கள்:
என்றும் வாழும் சநாதன தர்மம் தொகுப்பு ஆசிரியர்: சேக்கிழான் 128 பக்கங்கள், விலை: ரூ. 125. வெளியீடு: விஜயபாரதம் பிரசுரம், 31, எம்.வி.நாயுடு தெரு, பஞ்சவடி, சேத்துப்பட்டு, சென்னை- 600 031. தொடர்புக்கு: +91 89391 49466
$$$