-வித்யா சுப்ரமணியம்
சனாதன தர்மத்தின் சிறப்புக் குறித்து பிரபல தமிழ் எழுத்தாளர் திருமதி. வித்யா சுப்பிரமணியம் எழுதிய கட்டுரை இது...

சனாதனம் என்பதன் பொருள் `என்றும் நிலைத்திருப்பது’, `என்றும் மாறாத தர்மம்’ என்பதாகும். தொன்மையான பண்பாடு என்றும் கூறலாம். இது நான்கு வேதங்களையும் அடிப்படையாகக் கொண்டது. மகாபாரதம் உள்ளிட்ட பல கிரந்தங்களிலும் சனாதனம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவதந்தி மஹாத்மானம் கிருஷ்ணம் தர்மம் சனாதனம்:
என்கிறது மகாபாரதம். கர்மயோகத்தைத் தெரிந்தவர்களும், கடமையைச் செய்ய வேண்டுமென்ற ஆர்வத்துடன் இருப்பவர்களும், அந்தக் கடமையைச் செய்வதன் மூலம் வரக் கூடிய ஞானத்தை உணர்ந்தவர்களும் இருக்கக் கூடிய இந்த தேசமும், இதன் பாரம்பரியமுமே சனாதனம். இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் இது கண்ணன் காட்டிய பாதை அல்லது கண்ணனே சநாதனம் எனலாம். சநாதன தர்மம், பல தர்மங்களைக் கடைபிடிக்குமாறு கூறுகிறது.
பிறருக்குக் கசப்பாக இருந்தாலும் உண்மையைப் பேசு; இனிமையான பொய்களைவிட உண்மை பேசுவதே தர்மம். ஏனெனில் சத்தியம் என்றும் மாறாது; மாற்றவும் முடியாது என்கிறது. இதற்கு உதாரணமாக வாழ்ந்தவன்தான் ஹரிச்சந்திரன். எத்தனை கஷ்டங்கள் வந்தபோதும் உண்மையை அவர் இறுகப் பற்றியிருந்தார்.
சனாதனம் வாழ்வியல் நெறிகளையும் போதிக்கிறது. அதில் சாமான்ய. வர்ணாஸ்ரம, குண. அபத், ஸ்ரௌத, ஸ்திரீ, வியாஸ்தி, ராஷ்ட்ர உள்ளிட்ட பத்து வகையான தர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதாவது ஒரு தனிமனிதன் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்களிலிருந்து ஒரு நாட்டை ஆள்பவர் கடைபிடிக்க வேண்டிய தர்மங்கள் வரை கூறுகிறது.
ஸ்ரௌத தர்மம் அக்னிஹோத்திரம் செய்வதை கடமை என்கிறது. அக்னிஹோத்திரம் என்பது சூரியோதயம், மற்றும் அஸ்தமன நேரத்தில் செய்யக் கூடியது. இது காற்றை சுத்தம் செய்து மழைவளத்தையும், பயிர் வளத்தையும் பெருக்கக் கூடியதொரு விஞ்ஞானம்தான். முற்காலத்தில் நித்தமும் இது செய்யப்பட்டிருக்கிறது. இப்போதும்கூட பலர் இந்த தர்மத்தை விடாது செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
மாதா, பிதா, ஆச்சாரியர்கள், அதிதிகளை தெய்வத்திற்கு நிகராகப் போற்று என்கிறது. தாய், தந்தையையும், ஆச்சார்யரையும் நாம் போற்றிக் கொண்டு தானே இருக்கிறோம்? அதேபோல வீட்டிற்கு வருபவர்களை ‘அதிதி தேவோ பவ’ என்று உபசரிப்பதும் நமது வழக்கங்களில் ஒன்றுதானே? தவிர தந்தையின் கடமைகள், மகனின் கடமைகள், மனைவியின் கடமைகள், பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், என ஒவ்வொருவருக்குமான கடமைகளையும் செவ்வனே செய்வதற்கு சனாதனம் வலியுறுத்துகிறது.
சுத்தம், சுகாதாரம் பேணுதலும் ஒரு தர்மம்தான். அக்காலங்களில், வெளியில் போய்விட்டு வருவோர் கை கால் கழுவாமல் வீட்டிற்குள் செல்ல மாட்டார்கள். அதேபோல சாவு வீட்டிற்குச் சென்றுவரும் போதும், கிரஹணத்திற்கு முன்னும் பின்னும் குளிப்பதன் பின்ன்ணியில் சுத்தம் தாண்டிய சில அறிவியல் உண்மைகளும் உள்ளதை அறிஞர்கள் பலரும் எடுத்துரைத்திருக்கிறார்கள். அதேபோல, நோயாளிகள், மற்றும் முதியோரிடம் சற்றுத் தள்ளியிருந்தே பேசுவார்கள். கை குலுக்கும் வழக்கங்கள் எல்லாம் அன்று கிடையாது. யாராயிருந்தாலும் இரு கரம் கூப்பி வணங்குவதுதான் வழக்கம். அதற்கும் ஒரு அறிவியல் காரணமிருந்தது.
இப்போது பேசுபொருளாகி இருக்கும் சனாதனத்தை எவ்விதக் கேள்வியுமின்றி இந்த உலகமே ஒருசேரக் கடைபிடித்ததையும் நினைவு கூர்வோம்.
மூன்றாண்டுகளுக்கு முன் திடீரென இந்த உலகமே ஒரு அசுரனுக்கு அஞ்சி வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தது. அந்த அசுரன் வெறியாட்டம் ஆடித் தீர்த்தான்; கோடிக் கணக்கானவர்களைக் கொன்று குவித்தான். அவன் பெயர் கொரோனா; கோவிட்19 என்றும் கூறப்பட்டான். அவனிடமிருந்து தப்பிக்க பல உபாயங்கள் மக்களுக்குச் சொல்லப்பட்டன. சுத்தமாயிரு. எதைத் தொட்டாலும் கை கழுவு. வெளியே சென்று திரும்பினால் கை, கால் கழுவி, பின்னர் நன்கு குளி. உன்னைச் சுற்றி சுத்தமாக வைத்திரு. மஞ்சளும் சாணமும் கலந்த கரைசலை வீட்டின் முன்பு தெளித்து வை. சமைக்கும் காய்கறிகளை உப்பும் மஞ்சளும் சேர்த்து நன்கு கழுவு. ஆரோக்கியமான உணவை சாப்பிடு, காய்ச்சி வடிகட்டிய நீரை அருந்து. உன் தொற்றை பிறருக்குப் பரப்பாதே. பிறரிடமிருந்து உனக்கும் தொற்று பரவாது பார்த்துக் கொள்.
மேற்கண்ட உபாயங்களெல்லாம் சனாதனத்திற்குப் புதியதா என்ன? தொன்றுதொட்டு இத்தேசத்தில் கடைப்பிடித்து வரும் நல்ல ஒழுக்கங்கள் தானே இவையெல்லாம்?
எக்காலத்திலும் இங்கு அம்மை நோய் பாதிப்பேற்பட்டால் யாரும் மருத்துவர்களிடம் செல்வதில்லை. வீட்டுவாசலில் வேப்பிலை செருகி வைப்பார்கள். வாசலில் வேப்பிலை செருகப்பட்ட வீட்டிற்கு யாரும் செல்ல மாட்டார்கள். அந்த வீட்டை எந்நேரமும் சுத்தமாக வைத்திருப்பது, சுத்தமான பருத்தித் துணியை விரித்து அதில் அம்மை நோய் கண்டவரைப் படுக்கவைத்து வேப்பிலையும் மஞ்சளும் அரைத்து அவரது உடலில் தடவி, வேப்பிலையால் வருடிக்கொடுத்து, சமையலில் கட்டுப்பாடுகள் மேற்கொண்டு, அம்மன் கோயிலில் வழிபட்டு தீர்த்தம் வாங்கித் தெளிப்பது, அம்மை நோய் இறங்கியதும் மஞ்சளும் வேப்பிலையும் கரைத்த சுடுநீரில் குளிக்க வைப்பது என எல்லாவற்றிற்கும் பின்னே ஒரு அறிவியல் காரணமுள்ளது. நம் முன்னோர்கள் நம்மைவிட அறிவானவர்கள்.
மருத்துவம், யோகம், அறிவியல் என அனைத்தையும் உள்ளடக்கியது தான் சனாதனம். பதஞ்சலி முனிவர் யோக சாஸ்திரத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார். சரகர், சுஷ்ருதர் மற்றும் போகர் போன்ற சித்தர்கள் பலரும் மருத்துவக் குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர்கள் எல்லோரும் சனாதன தர்மத்தை வளர்த்தவர்கள் தான். பலரும் இதனை சரிவரப் பின்பற்றாது கைவிட்ட நிலையில், இதனை தொடர்ந்து பின்பற்றியவர்கள் தீண்டாமை பார்ப்பதாக சாடப்பட்டனர். ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக இந்தப் பழக்கவழக்கங்களை எல்லோரையுமே மேற்கொள்ளவைத்து உலக மக்கள் அனைவரையுமே சனாதனிகளாக மாற்றிய பெருமை அந்த கொரோனாசுரனையே சேரும்.
அனைத்து உயிர்களிடமும் அன்பாயிரு; அஹிம்சையைக் கடைப்பிடி; உண்மையைப் பேசு; பெற்றோரையும் பெரியோரையும் குருவையும் மதித்து நட; விருந்தினரைப் போற்று; சுத்தமாயிரு; ஆரோக்கியமான உணவைச் சாப்பிடு; மது அருந்தாதே; யார் மனமும் வருந்துவது போலப் பேசாதே, ஒழுக்கமாயிரு, அளவுக்கு மீறி ஆசைப்படாதே – இப்படி பல அறங்களைப் போதிப்பது தான் சனாதன தர்மம். இவற்றை முழுமையாகக் கடைபிடித்து வாழ்ந்தவன் ஸ்ரீராமன். தந்தை சொல் மதித்து வனமேகினான்; பெரியவர்களை மதித்து நடந்தான். ஏகபத்தினி விரதனாய் ஒழுக்கமாக வாழ்ந்தான்; நாடாளும் ஆசையைத் துறந்தான்; அனைவரிடத்தும் அன்பாயிருந்தான்.
எது அனைவருக்கும் நல்லதோ, எது அனைவரையும் உயர்வான நிலைக்கு அழைத்துச் செல்கிறதோ அதுவே சனாதனம். இதற்கு மதம் கிடையாது. ஏனெனில் இது மனிதகுலத்திற்கான அறங்களை எடுத்துரைக்கிறது. அவரவரது இறை நம்பிக்கையோடு இவற்றை யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம். நாத்திகம் பேசுவோரும் சனாதன தர்மத்தைக் கடைபிடிக்கலாம். ஏனெனில் இதில் இறை நம்பிக்கையும் உள்ளதென்றாலும் இது மிக முக்கியமாக எடுத்துரைப்பது ஒரு மனிதன் வாழ்வில் என்னென்ன கடமைகளைச் செய்ய வேண்டுமென்பதுதான். ராமாயணத்தில் ஜாபாலி முனிவர் ராமனிடம், ‘தந்தை சொல்லைக் கேட்க வேண்டிய அவசியமில்லை, க்ஷத்திரிய தர்மப்படி மூத்த மகனே பட்டத்திற்குரியவன்’ என்று எதிர்க்கருத்து கூறினாலும், அவரும் எல்லோராலும் அவையில் மதிக்கப்பட்டார்.
சனாதனத்தில் சாதிப் பாகுபாடு உள்ளதாக ஒருசிலர் தவறான கருத்துகளைப் பரப்புகின்றனர். சனாதனத்தில் உள்ள வர்ணாஸ்ரம தர்மம் என்பது ஒருவர் செய்யும் தொழில் ரீதியாக அவர்களைப் பிரிப்பது தானே தவிர, இதனால் இத்தொழில் செய்வோர் உயர்ந்தவர், மற்றவர் தாழ்ந்தவர் என்று கூறுவதாக அர்த்தமல்ல. நான்கு வர்ணத்தாரையுமே உயர்வாகக் கருத வேண்டுமென்று தான் சனாதனம் வலியுறுத்துகிறது. தொழில் ரீதியாகப் பிரிக்கப்பட்டதைத் தவறாகப் புரிந்துகொண்டு, மனிதர்கள் தான் பிற்காலத்தில் இதை சாதிப் பாகுபாடாக மாற்றிவிட்டனர்.
சனாதன தர்மம் பெண்களை ஒடுக்கியது என்பதும் தவறான புரிதலே. வேதகாலத்தில் பெண்கள் ஆணுக்கு நிகராக கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கியிருந்தனர். மைத்ரேயி, கார்க்கி போன்றோரைப் பற்றி அறிந்திருந்தால் இந்தச் சந்தேகம் ஏற்பட்டிராது.
எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அந்நியருக்குப் பயந்த பெண்கள் தன் கணவர் இறந்துபோனால் தாங்கள் துன்புறுத்தப்படுவோமென்று அஞ்சி கணவரின் சிதையிலேயே தானும் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டனர். அவ்வாறு ஒருசிலர் செய்தது, பின்னர் எல்லோரும் செய்ய வேண்டுமென்பது போலாயிற்று. இந்த சதி எனப்படும் உடன்கட்டையேறும் வழக்கத்தையும் ராஜாராம் மோகன் ராய் போராடி நீக்கினார். இப்படி தானாக நுழைந்துவிட்ட குறைகளை நீக்குவதற்கும் சனாதன தர்மத்தில் இடமுண்டு. தவறுகளைச் சரி செய்வதுதானே தர்மம்? சதி தடை செய்யப்பட்ட பின்னர் விதவைகளுக்கு மொட்டையடித்து நார்மடி உடுக்கச் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. பிற்காலத்தில் நமது சான்றோர்களின் முயற்சியினால் அதுவும் நீங்கி, இன்று பெண்கள் முழு சுதந்திரத்துடன் இருக்கிறார்கள். அதேபோல பால்ய விவாக தடைச்சட்டமும் நம்மவர்களால் தான் கொண்டுவரப்பட்டது,
சனாதனம் என்பது ஹிந்து மதத்திற்கு மட்டும் உரியதா என்ற கேள்வியும் எழும். பரத கண்டத்தில் பௌத்தம், ஜைனம், சீக்கியம், இவையெல்லாம் தோன்றுவதற்கு முன் இங்கு வாழ்ந்த மக்கள் இன்ன மதத்தைத் சார்ந்தவர்களென்ற அடையாளங்கள் ஏதுமின்றி வேதங்களும் உபநிஷதங்களும் உபதேசித்த தர்மங்களைப் பின்பற்றி வாழ்ந்திருக்கிறார்கள். பின்னர், முகலாயர்களும் அவர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களும் இங்கே வந்து ஆளத் தொடங்கியபிறகு சிந்து நதிக்குத் தென்புறம் மேற்கூறிய சனாதன தர்மங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்களை பொதுவாக ஹிந்துக்களென்று அழைக்கத் தொடங்கினார்கள்.
ஹிந்து என்ற சொல்லைப் பிரித்தால் ஹிம்+து. அதாவது ஹிம்சையில் அல்லல்படுபவனது துன்பத்தை தனது துன்பமாகவே எண்ணி அதை நீக்க முற்படுபவரே ஹிந்துக்கள் என்பது பொருள். அஹிம்சையைக் கடைபிடி என்று சனாதனம் கூறுவதையும் இது உறுதி செய்கிறது. இதனால்தான் காய், கனி, இலை இவற்றைப் பறிக்கும் முன் அதனை வணங்கிவிட்டு அதன் அனுமதிக் கோரி பிரார்த்திக்கும் வழக்கமிருந்தது நம் முன்னோரிடம்.
இவை எல்லாவற்றையும் விட மிக உயர்ந்ததாக சனாதனம் சொல்வது உலக அமைதி. நமது ஆன்மீக நூல்கள் அனைத்துமே உலக அமைதியே பிரதானம் என்கின்றன. உலகம் என்பது மனிதர்கள் மட்டுமே வசிக்கும் இடமல்ல. இங்கே விலங்குகள், பறவைகள், புழு பூச்சிகள், தாவரங்கள், என எண்ணிலடங்கா ஜீவராசிகளும் வாழ்கின்றன. இதைத் தான் நம் மஹா உபநிஷதமும் பாகவதமும் ‘வசுதைவ குடும்பகம்’ என்று வர்ணிக்கிறது.
அயம் நிஜ: பரோ வேதி கணனால குசேதஸாம் உதார சரி தானாம்து வசுதைவ குடும்பகம்:
அதாவது ‘ஒரே பூமி, ஒரே குடும்பம்’ இதையே இன்னும் எளிமையாக கணியன் பூங்குன்றனார் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்கிறார். குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள், தனக்கு வேண்டியவர்; வேண்டாதவர், எனது, உனது என்று வேறுபாடுகள் காண்பார்கள். இத்தகைய குறுகிய எண்ணங்களைக் கடந்த சான்றோர், ‘இவ்வுலகமே ஒரு குடும்பம்’ என்ற உண்மையை ஏற்பார்கள். அதைத் தான் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் நமது பாரதத்தில் நடந்த ஜி20 மாநாட்டின் முக்கிய முழக்கமாகவைத்திருந்தார்.
இப்படி மதம் கடந்த நற்சிந்தனைகளையும், எல்லோராலும் எளிதில் பின்பற்றக் கூடிய தர்மங்களையும் கொண்ட, மிகவும் புராதனமான, சனாதன தர்மத்தை இன்றளவும் கடைபிடித்துவரும் ஒரே தேசம் கர்மபூமியாகிய நம் பாரத தேசம்.
- திருமதி வித்யா சுப்பிரமணியம், பிரபல தமிழ் எழுத்தாளர்.
$$$