நம்பிக்கை

-மகாகவி பாரதி

பக்தியாவது தெய்வத்தை நம்புதல்; குழந்தை தாயை நம்புவது போலவும், பத்தினி கணவனை நம்புவது போலவும், பார்த்த பொருளைக் கண் நம்புவது போலவும், தான் தன்னை நம்புவது போலவும் தெய்வத்தை நம்ப வேண்டும். இரவிலும் பகலிலும், இன்பத்திலும் துன்பத்திலும், தொழிலிலும் ஆட்டத்திலும், எப்போதும் இடைவிடாமல் நெஞ்சம் தெய்வ அருளைப்பற்றி நினைக்க வேண்டும். நோய் வந்தால், அதனைத் தீர்க்கும்படி தெய்வத்தைப் பணிய வேண்டும். 


மயிலாப்பூரில் ஸ்ரீ கலவல கண்ணன் செட்டியார் ஏற்படுத்திய புதிய ஸம்ஸ்க்ருத கலாசாலையின் க்ருஹப் பிரவேசத்தை ஒட்டி நீதி ப்ரவீண ஸ்ரீ சுப்பிரமணிய அய்யர் செய்த ஆசி வசனங்களிடையே, ராமானுஜாசார்யருடைய மகிமையைப் பற்றிச் சில வார்த்தைகள் சொன்னார். ஸ்ரீமான் நீதி மணி அய்யர் பிரம்ம வேதாந்தியாகையால் இவருக்கு துவைதம், விசிஷ்டாத்துவைதம், அத்வைதம், என்ற மூன்று கட்சியும் ஸம்மதம். ஸத்யம் ஒன்று; அதனை ஆராதனை செய்யும் வழிகள் பல; அத்வைத ஸ்தாபனம் செய்த சங்கராச்சார்யரே ஷண்மத ஸ்தாபனமும் செய்ததாக அவருடைய சரித்திரம் சொல்லுகிறது.

பக்தியின் பெருமையை உலகத்துக்கு விளங்கக்காட்டிய மஹான்களிலே ராமானுஜாசாரியார் ஒருவர்; பக்தியாவது தெய்வத்தை நம்புதல்; குழந்தை தாயை நம்புவது போலவும், பத்தினி கணவனை நம்புவது போலவும், பார்த்த பொருளைக் கண் நம்புவது போலவும், தான் தன்னை நம்புவது போலவும் தெய்வத்தை நம்ப வேண்டும். இரவிலும் பகலிலும், இன்பத்திலும் துன்பத்திலும், தொழிலிலும் ஆட்டத்திலும், எப்போதும் இடைவிடாமல் நெஞ்சம் தெய்வ அருளைப்பற்றி நினைக்க வேண்டும். நோய் வந்தால், அதனைத் தீர்க்கும்படி தெய்வத்தைப் பணிய வேண்டும்.

செல்வம் வேண்டுமானால், தெய்வத்தினிடம் கேட்க வேண்டும். கல்வி, அறிவு, புகழ், ஆயுள் முதலிய எல்லா மங்களங்களையும் தெய்வத்தினிடம் உண்மையுடன் கேட்டால் அது கொடுக்கும். தெய்வம் கொடுக்காவிட்டாலும் அதை நம்ப வேண்டும். கேட்டவுடனே கொடுப்பது தெய்வத்திற்கு வழக்கமில்லை. பக்தி பக்குவமடைந்த பிறகுதான் கேட்ட வரம் உடனே கிடைக்கும். அதுவரை தாமஸங்கள் உண்டாகும். இதுகர்ம விதி. ”அடுத்து முயன்றாலும் ஆகுநாளன்றி எடுத்தகருமங்கள் ஆகா”. எனவே,நாம் தெய்வத்தினிடம் கேட்ட பயன் கைகூடுவதற்கு எத்தனை காலமான போதிலும், அதைரியப்படாமல், தெய்வ பக்தியையும் அதனாலுண்டாகும் ஊக்கத்தையும் முயற்சியையும் துணையாகக் கொண்டு நடக்க வேண்டும். விதியின் முடிவுகளை தெய்வபக்தி வெல்லும்.

இந்த உலகம் முழுமைக்கும் ஈசனே தலைவன். அவனும் பக்தர்களுக்கு வசப்பட்டவன். பக்தன் எது கேட்டாலும் கைகூடும். நம்பு; கேள். ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. பயனுக்கு அவசரப்படாதே. தெய்வம் நிச்சயமாக வரம் கொடுக்கும்.

தெய்வம் பிரஹ்லாதனை ஹிரண்யனிடமிருந்து காத்தது. முதலை வாயிலிருந்து யானையை விடுவித்தது. பாஞ்சாலியின் மானத்தைக் காத்தது. தெய்வம் விக்கிரமாதித்யனுக்கும், காளிதாஸனுக்கும், சிவாஜி ராஜாவுக்கும், நிகரில்லாத வெற்றியும் தீராத புகழும் கொடுத்தது. இவ்விதமான தெய்வ பக்தியை ராமாநுஜர் மனிதருடைய இஹபர வாழ்வுக்கு முதல் ஸ்தானமாகச் சொன்னார். ஆழ்வார்களுடைய பாட்டில் விடுதலை யொளி நிற்பது கண்டு, அவற்றை வேதம் போல் கருத வேண்டுமென்று போதனை செய்தார்.

ஆழ்வார்களுடைய குலம் நானாவிதம்; அப்படியிருந்தும் அவர்களைக் கோயிலில் வைத்துப் பூஜை செய்யலாமென்று ராமாநுஜர் நியமித்தார். முற்காலத்தில் பிராமணர் இதர ஜாதியாரை இழிவாக வைத்துக் கெடுத்தார்களென்றும், ஞானத்துக்குத் தகாதவரென்று சொல்லி அடிமைப்படுத்தினார்களென்றும் பொய்க்கதைகள் சொல்லி ஹிந்து தர்மத்தை அழிக்க விரும்புகிற கிறிஸ்துவப் பாதிரிகளும் அவ்விடத்து, சிஷ்யர்களும் ராமாநுஜாசாரியர் பிராமணர் என்பதை அறிய மாட்டார் போலும். சூத்திரராகிய திருக்கச்சிநம்பியை ராமாநுஜர் குருவாகக்கொண்டு அவருடைய உச்சிஷ்டத்தை உண்ணத் திருவுளங் கொண்டார். திருநாராயணபுரத்தில் பறையர் ஒருசமயம் கோயிலுக்குள் வரலாமென்றுஸ்ரீராமாநுஜர் நியமித்தருளிய முறை இன்றைக்கும் நடந்துவருகிறது.

இப்படிப்பட்ட மனுஷ்யர்களுடைய தர்மத்தை இக்காலத்தில் வளரும்படி செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் ஸ்ரீ கண்ணன் செட்டியார் ஏற்படுத்தியிருக்கும் கலாசாலையில், பிற மதங்களும் உண்மையென்ற சமரஸ ஞானத்தை ஊட்டத் தவறலாகாது. இந்த ஸமரஸ ஞானம் இல்லாவிட்டால் எந்தச் சித்தாந்தமும் நாளடைவில் பொய்யாகவும், குருட்டு நம்பிக்கையாகவும், வீண் அலங்காரமாகவும் முடிந்து ஜனங்களை மிருகங்களைப் போலாக்கிவிடும்.

வேத தர்மம் ஒன்று. அதில் ராமாநுஜர் தர்மம் ஒரு கிளை. பாஷ்ய விசாரணை நல்லது. உண்மையான பக்தியே அமிர்தம். எல்லா உயிர்களிடத்திலும் நாராயணன் விளங்குவது கண்டு, அந்த ஞானத்தாலே கலியை வென்று தர்ம ஸ்தாபனம் செய்வதற்குள்ள பயிற்சி மேற்படி கண்ணன் செட்டியார் கலாசாலையிலும், அதுபோன்று எல்லாப் பாடசாலைகளிலும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தால், தேசம் மறுபடி மேன்மையடையும். இது கைகூடும் வண்ணம் பராசக்தி அருள் செய்க.

ஆதாரம்:

பாரதியார் கட்டுரைகள் (பகுதி 19) 
பாரதி பிரசுராலாயம் வெளியீடு-1949

$$$

Leave a comment