நாடாளுமன்றத்தில் செங்கோல்

-சேக்கிழான்

விரைவில் வெளியாக உள்ள  ‘தமிழ் இலக்கியத்தில் செங்கோல்’ நூலில் இடம்பெறவுள்ள குறிப்பு இது...

செங்கோல் என்பது மன்னரின் நல்லாட்சியின், செங்கோன்மையின் சின்னம்.

தமிழக மன்னர்கள் ஆட்சிப் பொறுப்பேற்கும்போது அவர்களிடம் குலகுருவால் அளிக்கப்படுவதே செங்கோல்.

பாரதம் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றபோது, அந்த ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக, தமிழகத்தில் இருந்து முதல் பிரதமராகப் பொறுபேற்கவுள்ள ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டது.

அன்றைய காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜாஜியின் ஆலோசனைப்படி, இந்த செங்கோல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தமிழகத்தின் பாரம்பரிய சைவ மடாலயமான திருவாவடுதுறை ஆதீனத்தின் அதிபர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகளின் ஆணைப்படி இந்த செங்கோல் தயாரிக்கப்பட்டது.

வெள்ளியில் வடிவமைத்து, தங்கமுலாம் பூசப்பட்ட இந்தச் செங்கோலைத் தயாரித்தவர்கள், சென்னையைச் சேர்ந்த உம்மிடி பங்காரு ஜூவல்லரி நிறுவனத்தினர். அப்போது இதன் மதிப்பு ரூ. 15,000.

சுதந்திர தினத்திற்கு முந்தைய இரவு (1947, ஆக.14), திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் ஸ்ரீலஸ்ரீ குமாரசாமி தம்பிரான், இந்தச் செங்கோலை பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள நேருவிடம் வழங்கினார்.

இதன் உயரம் 5 அடி. நீதியின் அடையாளமான நந்தியம் பெருமான் உருவம் இந்தச் செங்கோலின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் பாரம்பரியச் சிறப்பு மிக்க இந்தச் செங்கோலை நிறுவ தற்போதைய பிரதமர் நரேந்திர மோதி முடிவெடுத்தார்.

அருங்காட்சியகத்தில் இருந்த இந்த செங்கோலை புனிதப்படுத்தி, தமிழகத் துறவியர்கள் பிரதமர் நரேந்திர மோதியிடம் வழங்கி ஆசீர்வதித்தனர்.

இந்த செங்கோலை புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மக்களவையில், 2023 மே 28ஆம் தேதி, சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் நிறுவினார் பிரதமர் நரேந்திர மோதி.

நேர்மை, நடுநிலைமை, நீதியின் சின்னமாக, தமிழர்களின் பாரம்பரியச் சின்னமான செங்கோல் நாட்டின் தலைமைப்பீடமான நாடாளுமன்றத்தில் வீற்றிருந்து வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. 

$$$

Leave a comment