தமிழ் இலக்கியத்தில் செங்கோல்- முன்னுரை

-சேக்கிழான்

இந்தத் தளத்தில் வெளியான  ‘தமிழ் இலக்கியத்தில் செங்கோல்’ தொடர் (21 அத்தியாயங்கள்) நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது; விரைவில் வெளியாக உள்ள இந்நூலின் முன்னுரைப் பகுதி இது...

தமிழன்னையின் செங்கோல்

தமிழ் மொழி முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழமையது; பின்னைப் புதுமைக்கும் பின்னைப் புதுமையது. உலகில் தோன்றிய மொழிகளில் பழமையும் உயிர்ப்பும் கொண்டு இலங்கி வரும் ஒரே மொழி தமிழ் மொழிதான்.

“முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் போர்த்துஅப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்குஅவர்க்கே பாங்கு ஆவோம்…”

       (திருவெம்பாவை- 9)

-என்று பாடுவார்  மாணிக்கவாசகப் பெருமான். இறைவனை மிகவும் பழமையானவன், அநாதியான சநாதனன் என்று போற்றும் அவர், அதேசமயம், நவீனத்தின் புத்திளமையாகவும் உருவகப்படுத்துகிறார். அதுபோன்றதே நம் செந்தமிழும்.

இந்த உலகில் தோன்றிய பல தொன்மையான மொழிகள் அழிந்துபோய்விட்டன. ஆனால், இன்றும் வாழும் மொழிகளாக தென்மொழியான தமிழும் வடமொழியான சமஸ்கிருதமும் பாரதத்தில் நிலைபெற்றிருக்கின்றன. இவ்விரு மொழிகளும் ஆதிசிவனின் வலக்கரத்தில் உள்ள உடுக்கையின் இருபுறமும் எழும் நாதங்களால் உருவானவை என்பதே நமது பாரம்பரிய நம்பிக்கை. அதிலும் தமிழ்மொழியை தாய்மொழியாகப் பெற்ற பெரும்பேறுக்கு உரியவர்கள் செந்தமிழ்நாட்டில் பிறந்த நாமே.

சுமார் 2500 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட நெடிய வரலாறும், வேறெந்த மொழியிலும் இல்லாத அளவிற்கு மாபெரும் இலக்கிய, இலக்கண நூற்தொகையும், இடையறாத படைப்புத் தொடர்ச்சியும், காலத்தை வென்று நிற்கும் மொழி வளமும் கொண்டிருப்பது தமிழின் தனிச் சிறப்பு.

உலகின் எந்தப் பாகத்திற்குச் சென்றாலும், நமது தாய்மொழியின் தொன்மையையும் சிறப்பையும் புகழ்ந்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோதி. அத்தகைய சிறப்புக்குரிய நமக்கு, நமது தாய்மொழியின் இலக்கியக் கருவூலங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

வாழ்வியலின் அறிவியக்கம் பல துறைகளாக, கண்டுபிடிப்புகளாக மலர்வது போல, மொழியின் அறிவியக்கம் இலக்கியமாக மலர்கிறது. அந்த வகையில், தமிழின் மிக நீண்ட, அறுபடாத அறிவியக்கத்துக்குச் சான்றாக விளங்குபவை நமது இலக்கிய நூல்களே.

காலவெள்ளத்தில் நாம் இழந்துவிட்ட பேரகத்தியம், முதுகுருகு, பெருங்குருகு, பெருநாரை, களரியாவிரை, பேரிசை போன்ற நூல்கள் தவிர்த்தும் கூட, தமிழ் மொழியில் உள்ள இலக்கிய வளம் வேறெந்த நாட்டிலும் இல்லை. சகோதர மொழியான சமஸ்கிருத மொழியில் மட்டுமே இதைவிட அதிகமான இலக்கிய வளம் உள்ளது. ஆனால் அம்மொழி இன்று, தமிழ் போல 8 கோடி மக்கள் பேசி மகிழும் பேசுமொழியாக இல்லை.

அகத்திய முனிவர் அடிகோலிய தமிழ், சங்கப் புலவர்கள், நீதிநெறி கூறிய சான்றோர்கள், காப்பியம் பாடிய பாவலர்கள், இலக்கணம் படைத்த அறிஞர்கள், சமயம் வளர்த்த நாயன்மார்கள், ஆழ்வார்கள், சிற்றிலக்கியம் படைத்த கவிஞர்கள் எனப் பலராலும் வளர்க்கப்பட்டு, இன்றுள்ள நவீனத் தமிழ் உரைநடை எழுத்தியக்கம் வரை நடை பயின்று வந்திருக்கிறது.

பாரத நாட்டை பாரத அன்னை என்று உருவகப்படுத்தி மகிழ்வது போலவே நமது தாய்மொழியாம் தமிழையும் தமிழன்னையாக உருவகப்படுத்தும் மரபு நம்மிடம் உண்டு. நமது தமிழன்னையை சர்வாபரண பூஷிதையாக வர்ணிக்கிறார் கவியோகி சுத்தானந்த பாரதியார். நமது தமிழன்னை அணிந்திருக்கும் ஆந்த ஆபரணங்கள் என்னவென்று தெரியுமா, அவை அனைத்தும் நமது பழம்பெரும் இலக்கிய வளங்கள். இதோ அந்தப் பாடல்:

காதொளிரும் குண்டலமும்
    கைக்கு வளையாபதியும் - கருணை மார்பின்
மீதொளிர் சிந்தாமணியும்
    மெல்லிடையில் மேகலையும் - சிலம்பார் இன்பப்
போதொளிர் பூந்தாமரையும்
    பொன்முடி சூளாமணியும் - பொலியச் சூடி
நீதியொளிர்  செங்கோலாய்
    திருக்குறளைத் தாங்கு தமிழ் - நீடு வாழ்க!

          -கவியோகி சுத்தானந்த பாரதி

இந்தப் பாடலில் அன்னையின் அழகிற்கு மெருகூட்டும் அணிகலன்களாக, செவியில் ஆடும் குண்டலம் (குண்டலகேசி), கரங்களில் குலுங்கும் வளையணி (வளையாபதி), மார்பில் மிளிரும் சிந்தாமணி ஆரம் (சீவக சிந்தாமணி), இடையை அலங்கரிக்கும் மேகலை அணி (மணிமேகலை), கழல்களில் ஒலிக்கும் சிலம்பணி (சிலப்பதிகாரம்), சிரசுக்கு ஒளிகூட்டும் மொன்முடியாம் சூளாமணி (சூளாமணி) என்று வரிசைப்படுத்திய கவியோகி, தமிழன்னையின் கம்பீரமான தோற்றத்திற்குச் சான்றாக அவள் செங்கோல் ஏந்தி நிற்கிறாள் என்கிறார். அந்த நீதியொளிர் செங்கோல் வேறெதுவும் அல்ல, திருக்குறள் என்கிறார் கவிஞர்.

நமது தமிழகத்தின் காவல் தெய்வமான மாமதுரை மீனாட்சி அம்மை செங்கோல் ஏந்தி தரிசனம் அளிப்பது போலவே, தமிழன்னையும் திருக்குறளை செங்கோலாகத் தரித்து மாநிலத்தை அறத்தின் வழியில் ஆட்சி செய்கிறாள். என்னே அழகிய உவமை!

ஆனால், இது வெறும் கவித்துவ உவமை மட்டுமன்று. நமது தாய்த்தமிழின் இலக்கியங்கள் அனைத்திலும் ஊடு பாவாய் நிறைந்திருக்கின்றன, நாட்டு மக்கள் நலம் பெற விழையும் நல்லாட்சிக்கான கருத்துருவாக்கங்கள். அவற்றில் தலையாயது ‘செங்கோல்’ என்ற உருவகம்.

நாட்டு மக்கள் நலம் பெற வேண்டுமாயின், நடுநிலைமை பேணும், நேர்மை மிகுந்த, அனைவரையும் சமமாகக் கருதக்கூடிய, மக்களை பகைவரிடமிருந்து காக்கும் திறன் பெற்ற, எளியவர்களின் துயர் துடைக்கக்கூடிய, தன்னலமற்ற நாயகன் ஒருவனது தலைமையில் நாடு இயங்கியாக வேண்டும். நாட்டின் ஆட்சித் தலைவனான அந்த நாயகனுக்கு என்றும் செங்கோன்மையை நினைவுறுத்தும் ஒரு அணிகலனே ‘செங்கோல்’- தமிழன்னையின் திருக்குறள் போல.

நமது மொழியின் தொன்மை போலவே, நாட்டு மக்களை ஓர் ஒழுங்கில் வாழ வைத்த நல்லாட்சியும் தொன்மை மிக்கது. பல சிற்றரசர்களும் பேரரசர்களும் இந்த மண்ணை ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் லட்சியக் கனவாகக் கொண்டிருந்தது, செங்கோல் ஏந்திய செங்கோன்மை ஆட்சியைத் தான். காலந்தோறும் படைக்கப்பட்ட பல்வேறு தமிழ் இலக்கியங்களில் பயின்று வரும் செங்கோல் குறித்த செய்திகள் கூறுவது இந்த உண்மையைத் தான்.

இது தொடர்பான ஓர் ஆய்வை தொடர்ந்து நிகழ்த்த ஒரு தேசிய நிகழ்வு வித்திட்டதும், தமிழன்னையின் அருள் தானோ?

நமது தாய்நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நாட்டு மக்களின் அதிகாரபீடமான நாடாளுமன்றத்திற்கு புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு, கடந்த 2023 மே 28ஆம் தேதியன்று திறக்கப்பட்டது. இந்த தொடக்க விழாவில், செங்கோன்மையின் அடையாளமான செங்கோலை சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோதி.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவிடம் நமது தமிழகத்தின் பாரம்பரிய சைவ மடமான திருவாவடுதுறை ஆதீனத்தின் துறவியால் நல்லாசியுடன் வழங்கப்பட்ட புனிதமான பொற் செங்கோலே அது. அதனை மீண்டும் நாட்டிற்கு நினைவூட்டி, அதனை வைக்க வேண்டிய இடத்தில் நிறுவி இருக்கிறார் இன்றைய பிரதமர் மோதி. அவருக்கு நமது வந்தனங்கள்.

இந்த நிகழ்வே, செங்கோல் குறித்து தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கும் பதிவுகள் அனைத்தையும் ஆராயத் தூண்டியது. அதன் விளைவே இந்த நூலாக மலர்ந்திருக்கிறது. தெய்வப்புலவர் திருவள்ளுவரில் தொடங்கும் நமது ஆய்வு மகாகவி பாரதியுடன் நிறைவடைகிறது. இந்த ஜீவநதியின் கரைகளில் சிறிதுநேரம் இலக்கியச் சுவையுடன் இளைப்பாறுங்கள்; உங்கள் கால்களை இந்த இலக்கியப் பெருக்கில் நனைத்து மகிழுங்கள்; இந்த வற்றாத அமுதநதியின் சிறு துளியை தீர்த்தமாக உங்கள் சிரசுகளில் தெளித்துக் கொள்ளுங்கள்!

(தொடர்கிறது)

$$$

Leave a comment