அகல் விளக்கு- 21

சான்றோர்கள் நூற்றுக்கணக்காகப் பிறந்த நாடு, உயர்ந்த நூல்கள் பற்பல தோன்றிய நாடு, கோயில்களும் அறநிலையங்களும் மலிந்த நாடு என்று பெருமை பேசிக் கொள்கிறோம். தொன்றுதொட்டே இந்த நாடு ஒன்றுதான் பாரமார்த்த நாடு என்றும், மற்ற நாடுகள் இன்று வரையில் உலகாயதப் போக்கிலேயே உழன்று வருகின்றன என்றும் மற்ற நாடுகளைக் குறை கூறிப் பெருமை கொள்கிறோம். ஆனால், படித்த இளைஞர்களும் பண்புள்ள அழகிகளும் பணத்துக்காக விலைபோகும் கொடுமை வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மலிந்துள்ளதாகக் கூற முடியாது. திருமணக் காலங்களில் குடும்பங்களில் நடக்கும் பேச்சைச் செவி கொடுத்துக் கேட்டால் இந்த நாட்டிற்கு ஆத்மீகத் தொடர்பு மிகுதி என்று சொல்வதற்கு வாய் கூசும்.