அகல் விளக்கு- 18

இயற்கை இங்குதான் தாயாக இருக்கிறாள்; மக்கள் இங்குதான் இயற்கையின் குழந்தைகளாக இருக்கின்றனர். குறைந்த அளவு ஆடை உடுத்துத் திரியும் உரிமையும் இங்கே உள்ள மக்களுக்கு உண்டு; திறந்த வெளியில் வானத்தைப் பார்த்தவாறு படுத்து உறங்கும் இன்பமும் இங்குள்ள மக்களுக்குத்தான் உண்டு. கைக்கும் உறை வேண்டா; காலுக்கும் உறை வேண்டா. வீசும் காற்றுக்கு அஞ்சி ஒளிய வேண்டா. வேண்டியபோதெல்லாம் காற்றில் திளைக்கலாம். விரும்பிய போதெல்லாம் நீரில் மூழ்கலாம். இவ்வாறு இயற்கையன்னை தன் மக்களுக்கு வேண்டியவை எல்லாம் அளித்துக் காத்துவரும் இந்த நாட்டில் மிக்க குளிர்ச்சி வேண்டும் என்று அழுகின்ற குழந்தைகளுக்காகத் தாய் தனி அன்போடு அழைத்து அளிக்கும் தட்ப இன்பம்போல் விளங்கியது அந்த நீலமலையின் குளிர்ச்சி மிக்க காற்று.....