-ஆர்.ராஜசேகரன், வைரவேல் சுப்பையா
சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-19) இன்றைய தார்மிகக் குரல்கள்: திருவாளர்கள் ஆர்.ராஜசேகரன், வைரவேல் சுப்பையா.

61. கண்டுகொள்ளாமல் புறக்கணிப்போம்!
-ஆர்.ராஜசேகரன்
சமூக ஊடகங்களுக்கு இன்று வெறும் வாய்க்குக் கிடைத்த அவல் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின் சனாதன ஒழிப்புப் பேச்சு. நன்றாகவே மென்று கொண்டிருக்கிறார்கள். இந்தக் கருத்தை மட்டும் உதயநிதி தெரிவிக்கவில்லை என்றால், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் நீட் ஒழிப்பு, குடும்ப பெண்கள் அனைவருக்கும் உதவித்தொகை போன்ற விஷயங்களைப் பற்றி அவர் முன்பு கேள்வி எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். அதைத் தவிர்க்கும் விதமாக அதைவிடத் தீவிரமான சர்ச்சைக்குரிய ஒரு விஷயத்தை கொளுத்திப் போட்டால் அது சிறிது நாட்களுக்கு தாக்குப் பிடிக்கும் என்று திட்டமிட்டு இந்த தேவையில்லாத ஒரு சர்ச்சையை உருவாக்கி இருக்கிறார் உதயநிதி. திராவிட மாடல் அரசியலை அப்பட்டமாகப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்.
சனாதனத்தில் எந்த ஒரு இடத்திலும் சாதீயப் பாகுபாடுகள் சொல்லப்படவில்லை. சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை அரசியல்வாதிகள் தங்கள் வசதிக்கு ஏற்ப அர்த்தம் கற்பித்துக் கூறி வருகின்றனர். ‘மனுஸ்மிருதி’ என்பதே சனாதனத்திலிருந்து வேறுபட்டது. அதை எழுதியதே ஒரு க்ஷத்திரியர். அதேபோல மஹாபாரதம் எழுதிய வேத வியாசர் ஒரு மீனவ குலத்தைச் சார்ந்தவர்.
வைணவர்கள் போற்றும் திருமங்கையாழ்வார் சோழ நாட்டில் திருவாலிதிருநகரிக்கு அருகே உள்ள திருக்குரையலூரில் கள்ளர் குலத்தில் தோன்றிய மகான். அவரது இயற்பெயர் கலியன். இவர் சோழர் படையில் படைத்தலைவனாக இருந்து, பின்னர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு திவ்யப்பிரபந்தத்தில் நிறைய பாசுரங்கள் இயற்றினார். இவர்களை எல்லாம் இறைவனுக்கு சமமான இடத்தில் வைத்து சனாதனிகள் கொண்டாடவில்லையா? இங்கே சாதி ஏற்றத்தாழ்வுகள் எங்கே காணப்படுகின்றன?
சனாதன தர்மம் என்பது ஆதி முதல் அந்தம் வரை நிலையான ஒரு தர்மம். ஆனால் அவற்றில் காலத்திற்கேற்ப நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வந்திருக்கின்றன. பிறப்பால் ஏற்றத் தாழ்வுகள் பற்றி சனாதனம் வலியுறுத்தவே இல்லை. ‘எங்கள் மூதாதையர்களை சனாதனம் என்ற பெயரில் பிராமணர்கள் படிக்கவிடவில்லை’ என்னும் வாதம் மிகவும் அபத்தமானது. அவர்களின் மூதாதையர்கள் படிக்காததற்கு சனாதனம் காரணம் அல்ல. பொதுவாகவே அந்தக் காலகட்டத்தில் படிக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. படிப்பதற்கான கொஞ்ச நஞ்ச வாய்ப்புகளை வேறு தொழில் தெரியாத பிராமணர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். மற்றவர்கள் உடல் உழைப்பு, வியாபாரம் இவற்றை மட்டும் நம்பி இருந்து விட்டார்கள்.
பிறர் வாய்ப்புகளைத் தடுக்கும் அளவுக்கெல்லாம் அதிகார மையம் ஒரு நாளும் பிராமணர்கள் கையில் இருந்ததில்லை. ஒரு காலகட்டத்தில் பார்க்கும் போது, படித்தவர்களில் பெரும்பாலோர் பிராமண சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று அறிய வந்தபோதுதான் சமூக சீர்திருத்தவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் ஒரு பெரிய சமூக அநீதி நிகழ்ந்து விட்டதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி அதில் அரசியல் ஆதாயம் தேடினர். சமூக நீதிக்கு உண்மையாகப் பாடுபடுபவர்களாக அவர்கள் இருந்திருந்தால், படிப்பதன் அவசியத்தை பிற சமூகத்தினரும் உணரும் வண்ணம் அவர்களை வழிநடத்த முன் வந்திருக்க வேண்டும்.
ஈ.வெ.ரா. முதற்கொண்டு பிற அரசியல்வாதிகள் அனைவரும் போலியான அந்த சமூக அநீதிக் கருத்தை விடாமல் திரும்பத் திரும்ப மக்களிடையே கொண்டுசேர்த்து இன்று வரை பிராமணர்கள் மேல் ஒரு வெறுப்பை உருவாக்கி வைத்துள்ளனர். அதைத் தவிர அவர்கள் உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. ஒரு காமராஜர் வந்துதான் உண்மையாகவே படிப்பறிவில்லாத சமூகம் படிப்பதற்கான வழிகளை ஆராய்ந்து கல்வியினை சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்க வழிவகை செய்தார்.
ராஜாராம் மோகன் ராய் காலத்திலிருந்தே சமுதாய சீர்திருத்தங்கள் ஆரம்பித்து பிந்தைய காலங்களில் சமுதாய சீர்திருத்தங்களை நிறைய பேர் முன்னெடுத்து நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த நல்ல மாற்றங்களுக்கு ஈ.வெ.ரா. ஒருவருக்கு மட்டும் ‘காபிரைட்’ கொடுத்து திராவிடக் கட்சியினர் அவரை ஒரு சமூக நீதிக் காவலராக மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வந்துள்ளனர். அப்படியானால் சனாதனம் சமூக மாற்றங்கள் தேவைப்படும் ஒரு விஷயமாகத்தானே இருந்திருக்கிறது என்ற வாதத்தை முன்வைக்க கூடும். எந்த ஒரு விஷயமுமே மாற்றத்துக்கு உரியதுதான். சட்டங்கள் கூட இயற்றப்படும் போது ‘’It is subject to amendments as and when required” என்ற ஒரு உட்கூறு சேர்க்கப் பட்டிருக்கும்.
இட ஒதுக்கீடு முதன்முதலில் கொண்டு வந்தபோது பிராமணர்கள் தங்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் பாதிப்பு வரும் என்பதால் எதிர்த்திருக்கக் கூடும். இன்று இட ஒதுக்கீட்டு முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினால் அதனால் பாதிக்கப்படக் கூடியவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட முன்வர மாட்டார்களா? விவசாயக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்த எத்தனையோ பேர் அந்தக் காலத்தில் படிப்பைக் கூட கைவிட்டு விவசாயத் தொழிலை விடாமல் செய்து வந்து அத்தொழிலைக் காப்பாற்றி வந்துள்ளனர். அவர்களின் மூதாதையர் எவரும் படித்துவிட்டு பெரிய பதவிகளில் இருந்தவர்கள் இல்லை. இதை சமூக அநீதி என்று கூற முடியுமா? அதேபோல, அந்தக் காலத்திலேயே அம்பேத்கர், கக்கன் போன்ற பட்டியலின மக்கள் படித்து விட்டு பெரிய பதவிகளில் இருக்கவில்லையா?
அதனால் சமூக நீதிக்கு சனாதனத்தால் புதிதாக எந்த ஆபத்தும் வந்து விடவில்லை; ஏற்கனவே எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்கவும் இல்லை. சனாதனத்தை ஒழிப்பதற்கு நீட் தேர்வை ஒழிக்கும் முயற்சியில் வெற்றி கண்ட திருவாளர் உதயநிதி அதே போன்று மீண்டும் பெருமுயற்சி எடுத்து முடிந்தால் ஒழிக்க முற்படட்டும். இவரது பேச்சுக்கெல்லாம் ஒரு முக்கியத்துவம் கொடுத்து விவாதித்துக் கொண்டிருப்பதே நம் நேர விரயம். இதனால் இவரது பேச்சுக்கு ஒரு மகத்துவம் கிடைப்பதோடு, நாட்டில் நடக்கும் வேறு முக்கிய நிகழ்வுகளுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவமும் குறைந்து விடுகிறது. எனவே ‘ஜஸ்ட் லைக் தட்’ இதைப் புறக்கணித்து கடந்து போய்க்கொண்டே இருப்போம்.
- திரு. ஆர்.ராஜசேகரன், கோவையில் வசிக்கும் ஓய்வு பெற்ற அஞ்சல் அலுவலர்.
$$$
62. சத்தியம் பேசும் சனாதன தர்மம்
-வைரவேல் சுப்பையா
சனாதனம் என்பது நிலையானது அல்லது என்றும் அழிவில்லாதது அல்லது என்றும் மாறாதது என்று பொருள்படும்.
தர்மம் என்றால் என்ன?
ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நியதிகள் அல்லது நெறிகள் அல்லது சட்டங்கள் அல்லது அறம், அல்லது கடமைகள். இப்படி நிறைய பொருள்படும். தமிழில் ‘அறம்’ என்று சொல்லலாம்.
‘சனாதன தர்மம்’ என்பது என்றென்றும் அழிவற்ற வாழ்வியல் அறமாகும்.
இறைவனின் படைப்புகளில் உயரிய நிலையில் இருப்பது மனிதன். இந்த மனிதன் மட்டுமே ஆறறிவு கொண்டு மற்றவற்றில் இருந்து தனித்து நிற்கிறான். பிறப்பின் கடமைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் அவனுக்கு உள்ளது.
சனாதன தர்மம் மறுபிறப்பின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலானது. பிறப்பற்ற நிலையை அடைவதே (மோட்சம்) வாழ்வியல் லட்சியமாக அல்லது பிறப்பின் முடிவாக, இறைநிலை அடைவதான நம்பிக்கை கொண்டது சனாதன தர்மம்.
ஆத்மா மட்டுமே அழிவற்றது, உடல் அழியக் கூடியது. அதனால் தான் இந்துக்களிடம் மட்டுமே இறந்த பிறகு தகனம் செய்யும் வழக்கம் உள்ளது.
மறுபிறப்பு என்ற தத்துவத்திற்குள் வந்து விட்டால் அங்கே ‘கர்மா’ என்பது தென்படுகிறது. கர்மா என்பது வினைப்பயனாகும். அதாவது நமது முந்தைய செயல்பாடுகளுக்கான விளைவு அல்லது பயன் அல்லது பரிசு, முன்வினைப் பலன்.
வினை அல்லது செயல் என்று வந்துவிட்டால் நாம் என்ன செய்கிறோம், செய்தோம், செய்ய வேண்டும் என்று படிப்படியாக வரும்.
தூங்கி எழுந்து மீண்டும் தூங்கச் செல்லும் வரை என்ன செய்தோம்?
பிறந்ததில் இருந்து இறப்பு வரை என்ன செய்ய வேண்டும்?
இப்படி…
தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகள் என்னென்ன?
உண்மை, நேர்மை, தூய்மை, அன்பு, நல்லெண்ணம், கருணை, பொறுமை,பெருந்தன்மை, சுய கட்டுப்பாடு, பிற உயிர்களைத் துன்புறுத்தாமை, மன்னிப்பு, புனிதம், துறவு, தியாகம், புலனடக்கம், தொண்டு, நட்பு, தியானம் போன்றவை.
சனாதன தர்மம், செயல்களின் தன்மை நேர்மறையாக இருக்க வேண்டும் என்று மட்டுமே போதிக்கிறது. தர்மத்திலிருந்து விலகி நடக்கும் போது, அதற்கான கர்ம வினையும் நாம் எதிர்கொள்ள நேரிடும் என்றே குறிப்பிடுகிறது.
அதனால் தான் கர்ம வினை சேர்த்துகொண்டே இருக்காமல், இந்த உலக வாழ்வில் இருந்து விடுதலை பெற்று பிறவா நிலையை அடைய இறைவனை வேண்டி பல்லாண்டுகள் தவமிருந்து உலக வாழ்வினைத் துறந்த காலமும் இருந்தது.
இது கலியுகமென்பதால் உலக வாழ்வே நிலையானதென்ற நம்பிக்கையில் மக்கள் சிற்றின்பச் செயல்களில் நாட்டம் செலுத்துகின்றனர்.
சனாதன தர்மம் மனிதனின் வாழ்வியல் கடமைகளாகப் பின்பற்றச் சொல்வது என்ன?
1. மனிதன் தனக்குத் தானே செய்து கொள்ள வேண்டிய தர்மங்கள்.
2. கடவுளுக்குச் செய்ய வேண்டிய தர்மங்கள்.
3. நமது முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய தர்மங்கள்.
4. நமது சந்ததிகளுக்காகச் செய்ய வேண்டிய தர்மங்கள்.
5. சக மனிதர்களிடம் நாம் பேண வேண்டிய தர்மங்கள்.
6. பிற உயிர்களிடம் நாம் காட்ட வேண்டிய தர்மங்கள்.
7. சமூகத்திற்கு நாம் செய்ய வேண்டிய தர்மங்கள்.
8. செய் தொழில் தர்மம்.
9. மாற்று நம்பிக்கை உடையவர்களிடம் நாம் கடைப்பிடிக்க வேண்டிய தர்மம்.
வெவ்வேறு குணநலன்கள் கொண்ட மனிதர்களின் நம்பிக்கை மட்டும் ஒன்று போல இருப்பது இல்லை. ஒவ்வொருவரின் நம்பிக்கைக்கும் சுதந்திரம் உண்டு, அனுமதி உண்டு. ஆனால் அதற்கான கர்மாவும் அவர்களையே சாரும். ஆனால் சனாதன தர்மம் மாற்று நம்பிக்கை உடையவர்களையும் மென்மையாக அணுகுங்கள், இயல்பாக அணுகுங்கள் என்றே சொல்கிறது. என்ன ஒரு தீர்க்க தரிசனப் பார்வை!
யுகங்கள் மாறலாம். ஆனால் தர்மங்கள் எப்போதும் மாறாதது.
அதனால் தான் சனாதன தர்மத்தினை ‘நிலையான தர்மம்’ அல்லது ‘எப்போதும் மாறாத தர்மம்’ என்கிறோம்.
எத்தனையோ வாழ்வியல் அறங்களில் இறை வழிபாடும் ஒன்று என்றே சனாதனம் சொல்கிறது.
அதோடு சனாதன தர்மம் நம்பிக்கைகளின் அடிப்படையில் வாழச் சொல்வது கிடையாது; மாறாக தேடல்களின் அடிப்படையில் வாழ்க்கை பயணத்தை தொடரச் சொல்கிறது.
‘உன்னில் இறைவனைக் கண்டறி’ என்ற உயரிய தத்துவத்தை சனாதனம் போதிக்கிறது.
மேற்சொன்னவற்றில் எது தவறானது?
இதில் எந்த தர்மத்தை ஒழிக்க நினைக்கிறார்கள்?
வர்ணாசிரமத் தத்துவங்களை, சனாதன தர்மத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுடன் குழப்பிக்கொண்டு, மாற்று அர்த்தம் கற்பிப்பது தான் இவர்களது பிரச்னைகளின் முதல்படி.
வர்ணாசிரம தத்துவம் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது. அவை: வர்ணம், ஆசிரமம்.
1. மனிதனின் வாழ்வியல் நிலைகளே நான்கு ஆசிரமங்கள்:
அ. பிரம்மச்சரியம்: இளம் பருவம்; குருவின் வழிக்காட்டுதல்களின் படி பலவிதமான அறிவுகளைப் பெற்று, சுயமாக வாழ்வினை வாழக் கற்றுக் கொள்ளும் ஆசிரமம்.
ஆ. கிருகஸ்தம்: தனக்குத் தகுதியான பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வினை மேற்கொள்ளுதல். குழந்தை பெற்றுக்கொண்டு சந்த்தியை வளர்த்தல். தங்கள் பெற்றோர் மற்றும் அவர்களது வயது முதிர்ந்த தாய், தந்தையரைப் பேணுவதும் முக்கியமான விஷயம்.
இ. வானப்ரஸ்தம்: வாழ்வியல் கடமைகளை நிறைவு செய்த பிறகு, பிறப்பில்லாத நிலையான முக்தியடைய தவமிருக்க கானகம் செல்லும் நிலை.
ஈ. சந்யாசம்: உலக ஆசைகளைத் துறந்து, இல்வாழ்க்கையை நாடாமல் இறைவனைத் தேடி செல்லும் நிலை.
இதில் முதல் மூன்று நிலைகளுக்குச் செல்லாமலே, நான்காம் நிலைக்கு நேரடியாகச் செல்லவும் சனாதனம் அனுமதிக்கிறது.
2. மனிதன் கடைப்பிடிக்கும் தொழிலின் அடிப்படையிலானவையே நான்கு வர்ணங்கள்:
அ. பிராமணன்
ஆ. ஷத்ரியன்
இ. வைசியன்
ஈ. சூத்திரன்
நால்வகை வர்ணம் குறித்து சனாதனம் என்ன சொல்கிறது?
‘பிறப்பினால் ஒருவன் உயர்ந்த அல்லது தாழ்ந்த வர்ணத்தவனாக ஆவதில்லை’.
பிறக்கும் போது ஒவ்வொருவரும் ‘சூத்திரர்’களே; வளர்ந்த பிறகு அவர்களின் நடத்தையே, ஒருவரது வர்ணத்தை வகுக்கிறது.
வேதங்களைக் கற்றுத் தேர்ந்த, வேதம் வகுத்தபடி சிற்றின்பங்களை தியாகம் செய்து (ஆச்சாரமாக), இறைபணி செய்பவன் பிராமணன்.
மக்களையும், தேசத்தையும் காக்கும் பணியைக் கைக்கொண்ட பராக்கிரமசாலிகள் ஷத்திரியர்கள்.
விளைந்தவற்றை எடுத்து மற்ற இடங்களுக்குக் கொண்டு சென்று விநியோகித்து, அங்கே இருப்பவற்றைக் கொண்டு வந்து இங்கே தேவையானவர்களுக்கு பொறுப்புடன் கொடுப்பவன் வைசியன்
இந்த மூவகை வர்ணத்தாரின் சொல் கேட்டு, அவர்களுக்குப் பணி செய்பவன் சூத்திரன். கடை நிலையில் உள்ளவன். (அடிமை அல்ல) வேலைக்காரன்.
அப்புறம் ஏன், சூத்திரன் இறைவனின் பாதத்தில் இருந்து பிறந்தான் என்கிறது வேதம்?
அறிவார்ந்த மூளையும், பலம் மிகுந்த தோள்களும், வலிமையான தொடைகளையும் பெற்ற ஒருவனுக்கு, பாதங்கள் இல்லை என்றால் அவனது நிலை என்ன?
அவனால் எவ்வாறு இயங்க முடியும்?
இவ்வளவு தான் விஷயம்.
சூத்திரர்கள் தான் இந்த அகில உலகமே இயங்க காரணம்.
மூவகை வர்ணத்தாரும், நான்காம் வகை சூத்திரன் இல்லை என்றால் அவரவர் தர்மத்தை, கடமையைச் செய்ய முடியாது.
யாகங்களைச் செய்யும் பிராமணர்களே அதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் உருவாக்குகிறார்களா?
மக்களையும், மண்ணையும் காக்கும் ஷத்திரியர்களே தங்களது பாதுகாப்புக் கருவிகளை செய்து கொள்கிறார்களா?
விளைந்தவற்றை விற்று பொருள் ஈட்டும் வைசியனே, அனைதத்தையும் விளைய வைத்து, வண்டி செய்து, வேற்றிடம் சென்று விற்று வருகின்றானா?
பிராமணன், ஷத்திரியன், வைசியன் மூவரும் சூத்திரன் எனும் ‘கடைநிலை சேவையாளன்’ இல்லை என்றால் தத்தமது தர்மங்களை ஆற்றிட முடியாது.
சூத்ரதாரிகள் எவராக இருந்தாலும் சூத்திரங்களின் உண்மைத் தன்மையை செயல்பாட்டிற்குக் கொண்டு வரும் சூத்திரர்கள். சூத்திரர்கள் (அடிப்படையானவர்கள்) இன்றி இந்த உலகம் இயங்க முடியாது.
இதைத்தான் சனாதன தர்மம் சொல்கிறது.
இவ்வளவு அருமையான விஷயத்தை இவர்கள் திரித்துச் சொல்லி ஏன் வாதிடுகின்றனர்?
வேத காலத்தில் ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகின்றனர், எப்படி?
தன்னிடம் கல்வி கற்க வந்த சிறுவனிடம் அவனது கோத்திரம் என்ன என்று கேட்கிறார் குரு. அதற்கு சிறுவன் ‘எனக்கு தாயின் பெயர் மட்டுமே தெரியும், எனது குலத்தைப் பற்றித் தெரியாது’ என்கிறான்.
அவனது பதில் உண்மையானது, நேர்மையானது. அதனால் அவனை தனது சீடனாக ஏற்று கொள்கிறார் அந்த குரு.
இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி தோன்றும். “அப்படி என்றால் மகாபாரத கர்ணன் ஏன் பிறப்பால் புறக்கணிக்கப்பட்டான்?” என்று.
இங்கே தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ‘கால வேறுபாடு’. முந்தைய நிகழ்வு நடந்தது வேத காலத்தில்,
இரண்டாவது நிகழ்வு நடந்தது சில யுகங்களுக்குப் பிறகு.
இங்கே தான் கண்ணன் சொல்கிறான்,
“நால்வகை வர்ணத்தையும் நானே படைத்தேன்- குணங்களின் அடிப்படையில்; ஆனால் பிறப்பினால் ஒருவனது உரிமைகளை புறக்கணிக்கச் சொல்லவில்லை” என்று.
பிராமணனாகப் பிறந்த ஒருவன் தனது கடமைகளில் இருந்து தவறிவிட்டால், அவனது நிலை கீழிறக்கப்படுகிறது.
அதேவேளையில் ‘சூத்திரன்’ ஒருவன் தனது மேம்பட்ட எண்ணங்களால், அப்பழுக்கற்ற சிந்தனைகளால், நேர்மையான நடத்தையால் ‘பிராமணனாக’ உருவெடுக்கிறான்.
ஆம், ஒருவனின் நடத்தையே அவன் எந்த வர்ணத்தை சார்ந்தவன் என்பதை முடிவு செய்கிறது. ‘பிறப்பால் உயர்வு, தாழ்வு இல்லை’ – இதைத்தான் சனாதன தர்மம் சொல்கிறது.
ஆனால், யுகங்கள் மாற மாற, மக்கள் மனம் விசாலமாக தனது கண்களை விரித்து இந்த அண்டத்தைக் காண்பதற்கு பதிலாக, தனது சிந்தனைகளை சுருக்கிக் கொண்டு, தர்மங்களை மறந்து விலகிச் சென்று விட்டதால் ஏற்பட்டதே, இன்றைய குறுகிய சாதிய கண்ணோட்டம்.
இதை நமது ‘சனாதன தர்மம்’ போதிக்கவில்லை, இது சத்தியம்.
இறுதியாக,
ஒருவர் உயிரிழந்த பிறகு, அந்த ஆத்மா சாந்தி கொண்டு, இறைவன் காலடியில் நிம்மதியாக இளைப்பாறச் செய்ய வேண்டியதாக சில கடமைகளை வலியுறுத்தி சொல்லும் சனாதன தர்மம் – உயிருள்ள மனிதனை பிறப்பால் தாழ்த்திச் சொல்லுமா?’
கலியுகத்தில் வர்ணாசிரமமும், வேத யக்ஞங்களும் நடைமுறைகளும் வழக்கொழிந்துவிட்டன என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.
வர்ணாஸ்ரமச்சரவதி ப்ரவ்ருத்திர்ண கலௌ நஸணாம்|
ந சாம ருக் யஜுர் தர்ம விநிஷ்பாதன ஹைதுகி||
(விஷ்ணு புராணம் - 6.1.10)
கலியுகத்தில் வர்ணாசிரம தர்மம் மற்றும் நிறுவனங்களைக் கடைப்பிடிப்பது மேலோங்காது; ரிக், யஜுர் சாம வேதங்களால் விதிக்கப்பட்ட சடங்குகள் இருக்காது என்கிறது இந்த சுலோகம்.
இதுதானே இப்போது நடக்கிறது. நியமங்களின்படி வாழ்க்கையை வாழ்பவர்கள் எத்தனை பேர்?
எத்தனை பேருக்கு சனாதனத்தின் அடிப்படைத் தத்துவம் தெரிந்திருக்கும்?
சடங்குகள், சம்பிரதாயங்களை மறந்தாலும், அறிந்திருக்காவிட்டாலும் இறைவனை மட்டுமாவது எண்ணத்தில் வையுங்கள் என்று தானே சனாதன தர்மம் போதிக்கிறது?
யாரையும் எதையும் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தாத சனாதன தர்மம்…
தர்மத்தின் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வழிகாட்டுதல்களை வழங்கிடும் சனாதன தர்மம்…
வயதான பெரியோர், தாய், தந்தையருக்குக் கடமையாற்றிடச் சொல்லும் சனாதன தர்மம், எப்படி ஆண், பெண் பாகுபாடு பார்க்கச் சொல்லித் தூண்டும்?
தனி மனிதன் கற்று தேர்ந்து பொருளீட்டும் நிலையை அடைந்த பிறகே இல்லறத்தில் புக அனுமதி அளிக்கும் சனாதனம் எப்படி குழந்தைத் திருமணங்களை ஊக்குவிக்கும்?
யுகங்கள் மாற மாற மனிதனின் வாழ்வியல் நடைமுறைகள் மாறியதே தவிர, சனாதன தர்மம் ஒருபோதும் துர்போதனைகளைத் தந்ததில்லை.
சத்தியம் பேசும் சனாதன தர்மம் என்றும் அழிவற்றது.
- திரு. வைரவேல் சுப்பையா, முகநூல் எழுத்தாளர்.
- இது இவரது முகநூல் பதிவு.
$$$
63. தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் (செய்தி)

சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு எதிரான வழக்கு:
தமிழக அரசுக்கும் அமைச்சர் உதயநிதிக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
புது தில்லி, செப். 22: கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த அவதூறுக் கருத்துகளுக்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி தாக்கலான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அது தொடர்பாக அமைச்சர் உதயநிதியும், தமிழக அரசும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கடந்த செப். 2ஆம் தேதி, சென்னையில் தமுஎகச அமைப்பினர் நடத்திய ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, “சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும்” என்று பேசினார்.
இந்தப் பேச்சால் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டது. சனாதனம் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று மாநில அமைச்சர் ஒருவரே பேசியது, நாடு முழுவதிலும் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, அமைச்சர் உதயநிதி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி தமிழகமெங்கும் பல இடங்களில் காவல் துறையில் இந்துக்களால் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால், காவல் துறையோ, தமிழக அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இவ்விஷயத்தில் மக்களிடம் பாகுபாடு காட்டி வெறுப்புணர்வை வளர்க்கும் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
“இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியுள்ளனர். எனவே, உதயநிதி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சனாதன ஒழிப்பு மாநாட்டு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு கலந்துகொண்டதை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். மேலும், சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இந்த நிகழ்ச்சி நடத்தியதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்து கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உதயநிதியின் பேச்சு அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுதாரர் ஜெகன்நாதன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், பெலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செப். 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் ஜெகன்நாதன் தரப்பில் வழக்குரைஞர் ஜி.பாலாஜி, மூத்த வழக்குரைஞர் பி.வள்ளியப்பனுடன் மூத்த வழக்குரைஞர் தாமா சேஷாத்ரி நாயுடு ஆஜராகி வாதிட்டார். அவர் கூறியதாவது:
“தமிழக அமைச்சரின் கருத்துகள் வெறுப்புணர்வை ஏற்படுத்துவது போன்றது. இதுபோன்ற விவகாரங்களில் உச்சநீதிமன்றம் எஃப்.ஐ.ஆர். பதிவு உள்பட பல வழிகாட்டுதல்களைப் பிறப்பித்திருக்கிறது. மற்றொருவரின் நம்பிக்கைக்கு எதிராக தனிநபர்கள் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடும் இதுபோன்ற விவகாரங்களை இந்த நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தைப் பொருத்த வரை மாநில அமைச்சரே கருத்துக் கூறியுள்ளார். ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ அல்லது ஒரு குழுவினரின் நம்பிக்கைக்கோ எதிராகப் பேசினால் அதை நான் புரிந்துகொள்வேன். ஆனால், மாநில அரசே தனது இயந்திரத்தை ஒரு சமூகத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடும்போது அது கவலை அளிக்கிறது” என்று வாதிட்டார்.
அப்போது, நீதிபதிகள் அமர்வு, “நீதிமன்றத்திடம் நீங்கள் கோருவது என்ன?” என்று கேட்டது. அதற்கு அவர், “அமைச்சர் (உதயநிதி ஸ்டாலின்) அதுபோன்ற அறிக்கையை வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும், அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்தாமல் இருக்கச் செய்ய வேண்டும்” என்றார்.
இதையடுத்து, தமிழக அரசு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், “முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அணுகுவதன் மூலம் உச்சநீதிமன்றத்தை நீங்கள் காவல் நிலையமாக மாற்றுகிறீர்கள். நீங்கள் உயர் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்க வேண்டும்” என்று மனுதாரரிடம் கூறினர்.
அதற்கு மனுதாரர் தரப்பில், “எதிர்மனுதாரர் ஓர் அமைச்சராக இருப்பதால் நீதிமன்றத்தை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும், மனுதாரர் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக முதல் தகவலறிக்கை பதிவு செய்ய காவல் துறையில் புகார் அளித்தும் யாரும் வழக்குப் பதிவு செய்யவில்லை. மேலும், ஒரு குறிப்பிட்ட நம்பிக்கைக்கு எதிராகப் பேசுமாறு கல்லூரி மாணவர்களிடம் கேட்டுக்கொள்ளும் வகையில் சுற்றறிக்கையும் (திருவாரூர் அரசுக் கல்லூரியில் சனாதனத்தை எதிர்ப்பது குறித்து பேச்சுப் போட்டி நடத்த முயன்ற கல்லூரி முதல்வர்) அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சனாதன சர்ச்சைப் பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது தொடர்பாக தமிழக அரசும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.
$$$