வாழும் சனாதனம்!- 18

-வ.ச.ஸ்ரீகாந்த், குரு.சிவகுமார்

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-18) இன்றைய தார்மிகக் குரல்கள்: திருவாளர்கள் வ.ச.ஸ்ரீகாந்த், குரு.சிவகுமார்...

59. பதர்களை அழிப்பது சனாதனம்! (கவிதை)

வ.ச.ஸ்ரீகாந்த்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்-
அன்புடன் சொன்னது சனாதனம்;
தன்னை போலே பிறரையும் எண்ணும்
தாய்மனம் தந்தது சனாதனம். 1

ஆலயம் தொழுவது நன்றெனச் சொல்லி
ஆன்மிகம் வளர்த்தது சனாதனம்;
பாலுடன் சேர்த்தே பண்பையும் புகட்டி
பல்லுயிர் நேசிக்கும் சனாதனம். 2

தீமையும் நன்மையும் பிறர் தர வாரா-
தெளிவுறச் சொன்னது சனாதனம்;
ஆமையைப் போலே ஓட்டுக்குள் வாழ்ந்தால்
அறிந்திட முடியா சனாதனம். 3

எல்லா உயிரும் இறைவன் வடிவே-
என்றே சொன்னது சனாதனம்;
எல்லா இடமும் நிறைந்தவன் இறைவன்
என்பதும் அஃதே சனாதனம். 4

ஒன்றே உண்மை, உரைகள் பலப் பல-
உணர்ந்தே அறிவது சனாதனம்;
நன்றே நினைத்து நயம்பட உரைத்து,
நன்மைகள் செய்வது சனாதனம். 5

கேடு நினைப்பவன் கெடுவான் என்றே
கெடுதலைத் தடுப்பது சனாதனம்;
பாடுபட்டு உழைத்து பண்புடன் வாழ
பாதை வகுப்பது சனாதனம். 6

உண்மையை உரைத்தல் சனாதனம்;
உற்றாரைக் காத்தல் சனாதனம்;
பெண்மையைப் போற்றுதல் சனாதனம்;
பேதங்கள் அற்றது சனாதனம். 7

அறிவினைத் தேடல் சனாதனம்;
ஆசானை மதித்தல் சனாதனம்; (ஐம்)
பொறிகளைக் காத்து, நெறிகளைப் பேணி
பொறுப்புடன் வாழ்வது சனாதனம். 8

முன்னோரைப் போற்றுதல் சனாதனம்;
மூத்தோரை மதித்தல் சனாதனம்;
எந்நாளும் ஒழுக்கம், அறங்களைக் காத்து
எளியோர்க்கு உதவுதல் சனாதனம். 9

தேசமும் தெய்வமும் நிகரென எண்ணித்
தொழுவது என்றும் சனாதனம்;
மாசற்ற மனத்துடன், மன்னுயிர் வாழ
மகிழ்வது என்றும் சனாதனம். 10

மானுடம் காப்பது சனாதனம்
மற்ற மதங்களை மதிப்பது சனாதனம்;
ஈன மதியுடன் இனப்பகை எழுப்பும்
இழிசெயல் எதிர்ப்பது சனாதனம். 11

பகுத்தறிவென்று பல பொய் பேசி
பகைமையை வளர்த்திடும் பதர்களையே,
செகுத்து(உ)யிர் குடித்து சிரந்தனைத் துணித்து
செயமுறக் களிப்பதும் சனாதனம். 12

  • திரு. வ.ச.ஸ்ரீகாந்த் தணிக்கையாளர்; தாம்பரம் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகளுள் ஒருவர்.

$$$

60. அமைச்சர் உதயநிதிக்கு நன்றி!

-குரு.சிவகுமார்

மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களுக்கு நன்றி.

காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழு.

சூரிய அஸ்தமன நேரத்தில் தூங்காதே.

எழுந்ததும் காலைக்கடன் முடித்து, பல் துலக்கி, குளி.

வாசல் தெளித்துக் கோலம் போடு.

காலை எழுந்ததும் படிப்பு, பின்பு பாடல்களைப் பாடு, மாலையில் விளையாடு என்று பாரதி சொன்னாரே… அதையெல்லாம் பழகினோம். 

உணவருந்தும் முன் கை கழுவு… உண்ட பின்பும் பல் துலக்கு…  நகம் கடிக்காதே என  ‘ஆசாரக் கோவை’யில் ஔவை சொன்னது எல்லாம் வாழும் முறைதானே?

இதெல்லாம்   செய்தோம்; செய்யாததைச் செய்ய வைத்தார்கள். 

அறத்தை போதித்தார்கள். தவறும்போது தண்டித்து, வழிநடத்தினார்கள்.

‘நீறில்லா நெற்றி பாழ்’ எனச் சொல்லி சம்பிரதாயங்களை  சொல்லிக் கொடுத்தார்கள்.  

வீட்டில் சாமி கும்பிட்டோம். நினைத்தபோது கோயிலுக்குப் போனோம்; மொட்டை அடித்தோம்; காது குத்தினோம்; மரத்தை வணங்கினோம்; சூரியனை, நதியை ஏன், மிருகங்களையும் கும்பிட்டோம்.  விவசாய நிலத்தில் செருப்புப் போடாமல்தான் நடப்போம். இவை மட்டுமல்ல; இன்னும் நிறைய நாம் செய்து வருகிறோம். இது வழக்கம். இது பழகப் பழக நன்றாகவே இருந்தது புரிந்தது.

எல்லாவற்றையும் புரிந்துகொண்டா செய்தோம்?  இல்லை. பெரியவர்கள் வாழ்ந்துகாட்டினார்கள். அதைப் பார்த்துப் பார்த்து நாமும் காலங்காலமாகச் செய்து வருகிறோம்.

அவ்வப்போது இதில் தொய்வு ஏற்படும்போதெல்லாம் திடீரென்று மகான் ஒருவர் உதித்து வருவார். காலத்திற்கேற்ற மாதிரி சில மாற்றங்களைச் செய்வார். அதை சமுதாயம் ஏற்றுக் கொள்ளும்.  

‘அறம்செய்ய விரும்பு’ என்று ஔவை குறிப்பிட்டுச் சொன்னால், அறம் எனும் தர்மம் குறைந்து போய்விட்டது என்றே அர்த்தம். இதனையே திருவள்ளுவர் வந்து முப்பால் வழியே உபதேசம் செய்தார். 

ராமாயணமும், மகாபாரதமும் கதையை மட்டும் சொல்லவில்லை.  நீதி, நேர்மை, நியாயத்தையும் எடுத்துச் சொல்லின.  இன்றும் நிறைய இருக்கின்றன, பேசுவதற்கு.

உனக்கு கருப்பு கலர் சட்டைதான் பிடித்திருக்கிறதா…? ஓ.கே.

உன் நண்பனுக்கு சிவப்புதான் பிடிக்குமா…? ஓ.கே.

எனக்கு நீலம்தான் பிடிக்கும். என் நண்பனுக்கு பச்சைதான் இஷ்டம் எனச் சொன்னாலும் எல்லாம் ஓ.கே தான். ஆனால் வண்ணங்கள் மாறினாலும் எண்ணங்கள் வேறுவேறு என்றாலும், அணிந்து கொள்வது சட்டைதான்; சனாதனம்தான்.

இங்கே கருத்து, கடவுள், கட்சி, கொள்கை, திராவிடம், தேசியம் எல்லாவற்றிலும்  சுதந்திரம் உண்டு.

ஆனால் இதைப் பற்றிக் கேட்டால் எங்களுக்கு, பெரும்பான்மையான மக்களுக்குத் தெரியாது. விளக்கம் கேட்டால் சொல்லத் தெரியாது. 

தெரிந்துகொள்ள  வேண்டாமா – என்று கேட்டால்,  ‘தெரிஞ்சுக்கணும், ஆனால் நேரமில்லைங்க’ என்பார்கள். 

உனக்கு மதம் இல்லையா – என்று கேட்டால்,  ‘நான் எங்க  சாமி கும்பிடுவேன். நாகூர் தர்கா போவேன். வேளாங்கண்ணி மாதாவைப் பார்க்கப் போவேன்’  என்பார்கள். 

உங்கள் மத நூல்களைப் படித்திருகிறீர்களா – என்று கேட்டால் பெரும்பான்மையினரில் சிலர்,  ‘இல்லைங்க.. இதெல்லாம் பழக்கமில்லைங்க.. செய்யற தொழில்தாங்க தெய்வம். நேர்மையா இருக்கறதுதான் படிச்சதுங்க. மத நூல்கள் ஒன்னா, ரெண்டா… ஏகப்பட்டது இருக்குதுங்க’ என்பார்கள். 

இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.  ஏனென்றால் நமக்கு பழைய காலத்துப் பொருள் என்றால் பெருமை. 

காசு, சிலை, பண்டங்கள், பாரம்பரியம், கலாச்சாரம்,  மொழி எல்லாமே பழமையானது என்றால்  பெருமைதான் அல்லவா? அதேபோல சனாதனம் மிகவும் பழையது. சனாதனத்துக்குப் பெயர் இல்லை.  இதற்கு மற்றவர்கள் வைத்த பெயர்தான்  ‘வேத’மதம், ‘ஹிந்து’ மதம்.

இதனுடைய aஅரம்ப வருஷத்தை யாராலும் கணக்கிட முடியவில்லை. அப்போது பெயரும் தேவைப்படவில்லை.

ராமசாமி என்று ஒருவர் வாழ்ந்தார்; அவரது காலத்தில் அவர் பேச்சை எல்லோரும் கேட்டார்கள்.  அவர் மிகவும் நல்லவர்; வீர்ர். ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என வாழ்ந்தவர். அப்புறம் நிறைய ராமசாமிகள்  வந்ததும், ஒழுக்கமாக வாழ்ந்த ராமசாமியைப் பார்த்து எவரும் தவறாகப் பேசிவிடக் கூடாது அல்லவா? அதனால் அவரை ‘ அவதார புருஷர் ராமபிரான்’  என்று  மக்கள் அழைத்தனர். அதேபோலத் தான் சனாதன தர்மத்திற்கு  ’ஹிந்து மதம்’ என்று பெயர் வந்தது.

இன்று நிறைய அறிஞர்கள், ஞானிகள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள்  சனாதனத்திற்கு ஆதரவாக நிறைய கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள். மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு தத்துவங்கள், உதாரணங்கள், ஆதாரங்கள்! இவற்றை பாரத தேசம் எங்கும்  எழுதியும் பேசியும் வருகிறார்கள்.  அத்தனையையும் தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்தது அமைச்சர் உதயநிதியாகிய உங்களால்தான் அல்லவா! 

எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இவ்வளவு பேரும் சொல்கிற கருத்துகளை எல்லாம் நம் முன்னோர் எவ்வளவு எளிமையாக நடைமுறையில்   வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்!

நீங்கள் சனாதனத்திற்கு எதிராகப் பேசியதும், டெங்கு, காலரா போன்று சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என யாரோ சொல்லிக் கொடுத்ததை உரைத்ததும் நல்லது தான். அதனால் தானே, சாம்பலில் மறைந்த கனல் போல, புதைந்திருந்த  சனாதனத்தின் பொக்கிஷங்கள் வையகத்திற்குக்  கிடைத்தன!

வாழ்வியல் கருத்துகளை அறியாமலே  அதன்படி சிறப்பாக வாழ்ந்துவரும் பாரத மக்களுக்கு, அர்த்தமுள்ள வாழ்க்கையை உணர்ந்து, தெரிந்து, புரிந்து வாழ வாய்ப்பளித்த, புதிய உதயத்திற்கு  வழி அமைத்துக் கொடுத்த, உதயநிதி அவர்களுக்கு நன்றி.

  • திரு. குரு.சிவகுமார், ஜோதிட வல்லுநர்;  ‘விஜயபாரதம்’ வார இதழின் முன்னாள் ஆசிரியர்.

(விரைவில் நிறைவுறுகிறது)

$$$

Leave a comment