-ராம் மாதவ்

57. தவறான புரிதலில் சனாதனத்தை அழிக்கத் துடிக்கிறார்கள்!
.
—
ஜாதி ஏற்றத்தாழ்வை மறுப்பது தேவையானது. ஆனால் அதைப் பயன்படுத்தி சனாதன தர்மத்தை அவமதிப்பது அறியாமை.
—
சனாதன தர்மத்தை எதிர்க்கும், அழிக்க முயற்சி செய்யும், அவமதிக்கும் செயல்களைச் செய்வதும், அவ்வாறு செய்ய சிந்திப்பதும் ஹிந்து அல்லது சனாதன போபியா (போபியா என்றால் வெறுக்கும்/ அருவறுக்கும் செயல்) என்று ஹிந்து அமெரிக்கன் பவுண்டேஷன் வரையறை செய்துள்ளது. இந்த முறையற்ற செயல் உலக அளவில் தலைதூக்கி வருகிறது.
பாரதத்தின் பொது வாழ்வில் ஹிந்து சிந்தனைகளின் செல்வாக்கு அதிகரித்து வருவதால் அதன் எதிர்ப்பாளர்கள் ‘உலக ஹிந்து எதிர்ப்பு மாநாடு- 2021’ போன்ற ஹிந்து போபியா தாக்குதல்களை அதிகரித்து வருகின்றனர். இந்தத் தாக்குதல் பல்வேறு வடிவங்களில் தொடர்கிறது.
இது இப்போது பாரதத்திலும் அரங்கேறி வருகிறது. தமிழ்நாட்டில் திமுக தலைவர்கள் சனாதன தர்மத்தையும் ஹிந்துயிசத்தையும் மலேரியா, பிளேக், டெங்குவுடன் ஒப்பிட்டு சனாதனத்தை ‘ஒழிக்க வேண்டும்’ என்று பேசி வருவது ஹிந்து போபியாவின் (ஹிந்து வெறுப்பு) அவலமான வெளிப்பாடுதான்.
சனாதன தர்மம் பற்றி சரியான அறிவு இன்மையும், அதைப் பற்றி அவர்களது தலைவர்களின் தவறான விளக்கங்களினால் எழுந்த குருட்டுத்தனமான வெறுப்புமே இந்த ஹிந்து போபியாவுக்கு காரணம். பல ஆயிரம் ஆண்டுகளாகத் திரண்டு வந்த சனாதனம் என்ற அறிவுச் செல்வத்தை, தத்துவ ஞானத்தை, அன்னி பெஸன்ட் போன்ற வெளிநாட்டினர்களும் கூட “மிகச் சரியான, மிகவும் அறிவியல் பூர்வமான, தத்துவார்த்தமான, ஆன்மிகமானது” என்று விவரித்துள்ளதை, ஹிந்து வெறுப்பாளர்கள் குறுகிய, கொடுமையான, மனிதத் தன்மையற்ற சமூக அமைப்பு என்று முத்திரை குத்துகின்றனர்.
பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகள் திட்டமிட்டே ஹிந்து சமூக அமைப்பை தவறாகச் சித்தரித்தனர். பிரிட்டிஷ் கல்வியாளரான தாமஸ் பாபிங்டன் மெக்காலே, சனாதன தர்மமானது ‘நம் (ஆங்கில) இனத்தின் அறிவு, தார்மிக ஆரோக்கியத்திற்கு ஒவ்வாததும் மிகவும் கேடு விளைவிப்பதுமானது’ என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
அதே மெக்காலே மனநிலையின் தொடர்ச்சியாக வரும் திராவிடச் செயல்பாட்டாளர்கள் சனாதன தர்மத்தை இன்றுள்ள ஜாதி முறைமையுடன் ஒப்பிட்டுத் தாழ்த்துவதுடன், உலகில் நூறு கோடிக்கும் மேற்பட்டோர் பின்பற்றும் மூன்றாவது பெரிய மதத்தையும் அவர்களது நாகரிகம், பண்பாடு, வாழ்வியல் அமைப்பையும் தகர்த்தொழிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
சனாதன சமுதாயத்தில் மிகவும் பெருமையுடன் கருதப்படும் இடத்தில் உள்ள பல மகான்களையும் ஞானிகளையும் தென்னிந்தியா, குறிப்பாக தமிழகம், ஈந்துள்ளது. வேதகால அகத்திய முனிவர் தொடங்கி இடைக்காலத்தில் ராமானுஜர், ஔவையார், அண்மையில் ரமண மகரிஷி வரை, சனாதன பாரம்பரியத்தில் திராவிட நிலப்பரப்பில் தோன்றிய எண்ணற்ற மகான்களையும் ஞானிகளையும் ஒட்டுமொத்த நாடே போற்றி வணங்குகிறது.
சாதிய முறைமையைப் பற்றி விமர்சனங்களை முன்வைப்பது எந்த வகையிலும் ஹிந்துயிஸத்தைத் தாக்குவதாகாது. ஆனால் அதைப் பயன்படுத்தி தர்மத்தின் அடிப்படையிலான ஒட்டுமொத்த முறையே தீமையானது என்று சித்தரிப்பது அறியாமையே ஆகும். சனாதன மரபில் உள்ள சடங்காச்சார முறை, ஜாதிய படிநிலை என்பது காலந்தோறும் விமர்சனத்திற்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகி வருகிறது. சனாதன தர்மத்தின் உள்ள சடங்கு முறையை ஆரம்பத்தில் சார்வாகரும் புத்தரும் எதிர்த்தனர். இவை சீர்திருத்த இயக்கமாக பின்னர் பல நூற்றாண்டுகள் தொடர்ந்தது. ஜாதி முறைமையானது வரலாற்று காலம் தொட்டு தொடர்ந்து விமர்சனம் செய்யப்பட்டும் அதன் படிநிலை, ஏற்றத்தாழ்வு, தீண்டாமை போன்ற தீமைகளை களைய சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
கிரேக்க தத்துவவியலாளர் பிளாட்டோ எழுதியுள்ள ‘சாக்ரடீஸ் உரையாடல்’ என்ற நூலில் வரும் ஏதென்ஸ் தீர்க்கதரிசியான யூத்திப்ரோ ஆஃப் ப்ரோஸ்பால்டா என்ற கதாபாத்திரம் ‘யார் பக்திமான்?” என்பது குறித்து சாக்ரடீஸ் உடன் வாதம் செய்யும். கடவுளர்களுக்கு ஏற்புடையதே பக்தி, ஏற்றுக் கொள்ளாதது பக்திக்கு மாறானது என்று யூத்திப்ரோ வரையறுப்பார். கடவுளர்கள் சில செயல்களை பக்தி என ஏற்றுக்கொள்வார்கள்; சிலதை ஏற்க மாட்டார்களே, என்று சாக்ரடீஸ் வாதிடுவார். இதைக் கேட்ட பின் யூத்திப்ரோ தன் வாதத்தை திருத்திக் கொண்டு, எல்லா கடவுளரும் ஏற்றுக் கொள்ளக்கூடியது எதுவோ அதுவே பக்தி, அதற்கு மாறாக எல்லா கடவுளரும் வெறுக்க கூடியது எதுவோ அது பக்தியின்மை, என்று வாதிடுவார். இதைக் கேட்ட பின் சாக்ரடீஸ் மிக முக்கியமான கேள்வியை எழுப்புவார்: ‘பக்திமான் என்பதால் கடவுளர்களால் நேசிக்கப்படுகிறானா அல்லது கடவுளர்களால் நேசிக்கப்படுவதால் அவன் பக்திமானாகிறானா?’
இது ‘யூத்திப்ரோ-வின் தடுமாற்றம்’ என்று அழைக்கப்படுகிறது. பல சனாதனிகள் சாதி முறை குறித்து யூத்திப்ரோவின் தடுமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏனெனில் வர்ணாசிரம முறையை நான்தான் உருவாக்கினேன் என்று அர்ஜுனனிடம் பகவான் கிருஷ்ணர் கூறுவதாக பகவத்கீதையில் வருகிறது. இந்த தெய்வீகத் தொடக்கத்தினால் அவர்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள்.
ஆனால் இந்த முறைமை இந்தியாவுக்கு மட்டுமே ஆனதல்ல. இடைக்கால ஐரோப்பாவில் அரச குடியினர், பாதிரிகள், பிரபுக்கள், வெளிநாட்டினர், அடிமைகள் என இறுகிய சமூக படிநிலை அமைப்பு இருந்தது. பண்டைய ஈரானில் அதர்வா (பூஜாரி), ரதிஷ்டா (போர் வீரர்கள்), வஸ்திரயா ஸ்சுவான்த் (குடும்பத் தலைவர்), ஹுய்தி (உடலுழைப்புத் தொழிலாளிகள்) என்று சமுதாயம் வகுப்பு வாரியாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
சனாதன மரபில் பண்டைய காலத்திலேயே பிறப்பின் அடிப்படையிலான பிரிவினை எப்பொழுதும் ஏற்கப்படவில்லை. படிநிலையும் வகுக்கப் படவில்லை. மாதவாச்சாரியார் எழுதியுள்ள ‘சங்கர திக்விஜயம்’, அறிவே சமூக்க் கட்டமைப்பிற்கு அடித்தளமாக இருந்ததென்கிறது. ‘பிறப்பில் எல்லோரும் சூத்திரர்களே. தனது செயல்கள் மூலமாகவே மனிதர்கள் துவிஜர் – இரு பிறப்பாளர்கள்- ஆகிறார்கள். வேதத்தைக் கற்பதன் மூலம் ஒருவர் விப்ரா – ஆகிறார். கடவுளைப் பற்றிய ஞானத்தைப் பெறுவதன் மூலம் பிராமணர் ஆகிறார்’ என்று அந்நூல் கூறுகிறது.
மகாபாரதத்தில் வன பர்வத்தில், ‘எவரிடத்தில் உண்மை, பெருந்தன்மை, மன்னிக்கும் குணம், கொடை தன்மை, அன்பு, கொடும் செயல்களில் இருந்து விலகி இருப்பது, நற்சிந்தனை உள்லதோ, எவர் நற்செயல்களைச் செய்பவராக இருக்கிறாரோ அவரே பிராமணர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சூத்திரனுக்குப் பிறந்ததாலேயே ஒருவன் சூத்திரன் ஆவதில்லை. அதுபோலவே பிராமணனுக்குப் பிறந்ததாலேயே ஒருவன் பிராமணன் ஆவதும் இல்லை’ என்று அது உறுதியாகத் தெரிவிக்கிறது. சில வர்ணத்தினர் மற்றவர்களை விட உயர்வானவர்கள் என்பதையும் வனப்பர்வம் உறுதியாக நிராகரிக்கிறது.
பிறப்பின் அடிப்படையிலான ஜாதி முறைமை வர்ணாசிரம முறைமைக்கு புறம்பானது. அம்பேத்கர் மட்டுமல்ல இந்துக்களின் நாயகராகக் கருதப்படும் வீரசாவர்க்கரும் ஜாதி முறைமையை தீவிரமாக மறுக்கிறார். ‘ஹிந்துஸ்தானத்தில் அன்னியர் ஆட்சிக்கு எதிராக நான் எப்படி கிளர்ந்தெழுகிறேனோ அது போலவே ஹிந்துஸ்தானத்தில் ஜாதி முறைமையை, தீண்டாமையை எதிர்க்கிறேன்’ என்று அவர் 1920இல் அந்தமான் சிறையில் இருந்தபோது எழுதியுள்ளார்.
சீர்திருத்தவாதியான ஆர்எஸ்எஸ் மூன்றாவது தலைவர் பாளாசாஹேப் தேவரஸ், ‘மனுஸ்மிருதியில் உள்ள பல விஷயங்கள் இன்று காலவதியாகி விட்டன’ என்று உறுதிப்படக் கூறியுள்ளார். ‘நவீன காலத்தில் அதன் ஒவ்வொரு வார்த்தையையும் அப்படியே ஏற்றுக் கொள்வது அறிவுடைமை அல்ல’ என்றும் அவர் அறிவித்துள்ளார். தன்னை சனாதனி ஹிந்து என்று கூறிக்கொண்ட காந்திஜியும் ஜாதியை ‘அரக்கன்’ என்று கூறியுள்ளார். ‘வர்ணாசிரமத்தின் இந்த கேலிக்கூத்தான சித்தரிப்பு இந்தியாவையும் ஹிந்துயிசத்தையும் தாழ்த்துகிறது’ என்று அவர் வருத்தப்பட்டுள்ளார்.
ஜாதி முறைமை நீங்க வேண்டும். அதேசமயம், சனாதனத்தை அவமதிக்கும், முடிந்தால் சனாதன தர்மத்தையே அழிக்கத் துடிக்கும் திராவிட சிந்தனை கொண்டவர்களின் சனாதன வெறுப்பும் நீக்கப்பட வேண்டும். “ஹிந்துஸிசம் இல்லையென்றால் இந்தியாவுக்கு எதிர்காலமே இல்லை” என்ற அன்னி பெஸன்டின் எச்சரிக்கை எப்பொழுதும் நினைவில் இருக்க வேண்டும்.
- திரு. ராம் மாதவ், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர்; ’இந்தியா ஃபவுண்டேஷன்’ அமைப்பின் தலைவர். இந்தக் கட்டுரை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் இவர் எழுதிய ‘Targeting Sanatan Dharma, deliberately misreading Hinduism’ என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.
- தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
- நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (16.09.2023).
(தொடர்ந்து ஒலிக்கும் தார்மிகக் குரல்கள்!)
$$$