வாழும் சனாதனம்!- 11

எஸ்.எஸ்.மகாதேவன், அ.பொ.இருங்கோவேள், ராஜசங்கர் விஸ்வநாதன்

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-9) இன்றைய தார்மிகக் குரல்கள்: திவாளர்கள் எஸ்.எஸ்.மகாதேவன், அ.பொ.இருங்கோவேள், ராஜசங்கர் விஸ்வநாதன்...

45. சனாதனம் ஒழிப்போரே, சந்திரயான் 4 ரெடி!

-எஸ்.எஸ்.மகாதேவன்

  •  “நெற்பயிர் மேல் பகுதி (நெல்) வீட்டுக்கு. நடுப்பகுதி (வைக்கோல்) மாட்டுக்கு. அடிப்பகுதி (வேர்) காட்டுக்கு!” – வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சொன்ன மூதாதையர் கருத்து இது. மனிதனுக்கும் இயற்கைக்கும் எப்படிப்பட்ட உறவு இருப்பது நல்லது என்று கூறும் சனாதனம் இதுதான்.
  • ஆராய்ச்சியாளர் தான் கண்டுபிடிக்கும் பொருளுக்கு தனக்கு இஷ்டமான பெயரைச் சூட்டுவது பழக்கம்; இரு முறை சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர் கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு; இவரது மாணவர் ஒருவர் உயிரியல் ஆராய்ச்சியாளரானார். அவர், தான் கண்டுபிடித்த நுண்ணுயிர் ஒன்றிற்கு தனது ஆசான் சுந்தரவடிவேலுவின் பெயரை சூட்டினார்.இந்த குருபக்திதான் சனாதனம்.
  • இருட்டில் வயல்வரப்பில் நடக்கும்போது சத்தம் அதிகமாகக் கேட்கும் வகையில் கிராமத்து செருப்பு தைப்பவர் செருப்பு தைத்துக் கொடுப்பார். காலடி சத்தம் கேட்டு பாம்பும் விலகும், தவளையும் விலகும் (இரண்டும் பயிர்த் தொழிலுக்கு அவசியம்). வரப்பில் நடக்கும் விவசாயிக்கும் பாதுகாப்பு. இப்படி ஒரு தொழில்நுட்பம் பற்றி மத்திய தோல் ஆராய்ச்சி கழக இயக்குநர் திருவாளர் டாக்டர் நாயுடம்மா பல ஆண்டுகளுக்கு முன் இளம் ஆராய்ச்சியாளர்களிடம் எடுத்துக் கூறி, குறிப்பாக, செருப்பு தைப்பவரின் நல்ல மனதையும் சுட்டிக்காட்டினார். செய்யும் தொழில் வாயிலாக இப்படி ஊருக்கு சேவை செய்வதுதான் சனாதனம் கூறும் வாழ்க்கைமுறை.
  • எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ண வேண்டும் என்று பாடிய வடலூர் வள்ளலார்  ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று அதை தன் வாழ்க்கையில் நடந்து காட்டினார். இவ்வாறு சொல், செயல், சிந்தனை ஒன்றாக இருப்பது சனாதனம் கூறும் உயர்ந்தோர் பண்பு.
  • கணவனை இழந்த பெண் மொட்டையடித்துக்கொண்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று சனாதனத்தை உலகிற்குத் தந்த வேதம் சொல்கிறதா, இல்லை. மாறாக, “எழுந்திரு பெண்ணே, உன் கரம் பிடித்த கணவனின் மனைவி என்ற ஸ்தானத்தை இதுவரை அனுபவித்தாய், இனிமேலும் இந்த உலகில் உனது வாழ்க்கையை வாழ்” என்றுதான் ரிக் வேதம் (10.18.8) சொல்கிறது.
  • ‘கடவுளை மற, மனிதனை நினை’ என்றார் ஈவெ.ரா. “படமாடுங் கோயிலில் உறையும் இறைவனுக்கு ஒன்றை அளித்தால், அது நடமாடுங் கோயிலான மனிதர்க்கு, ஏழை எளியோருக்கு சென்று சேராது. நடமாடுங் கோயிலான மனிதனுக்கு அளித்தால், அது படமாடுங் கோயில் இறைவனைச் சென்றடையும்” என்று சொன்னார் திருமந்திரம் தந்த  திருமூலர், இறை மறுப்பைப் போதிக்காமல் மனிதநேயம் போதித்தாரே, அது சனாதனம். காரணம் இது ஆன்மிக மண்.
  •  “சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே!” என்று கவிஞர் பாரதிதாசன் குமுறினாரே, அந்தக் குமுறல் தான் சனாதனம்.  “தீண்டாமை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் ஒழிய வேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் தேவரஸ் பிரகடனம் செய்தாரே, அதன் பின்னணியாக அமைந்துள்ள ஆன்மநேய ஒருமைப்பாடு தான் சனாதனம்.
  • தென்கொரியாவை விழுங்க வட கொரியா தேதி குறித்துக் கொண்டிருக்கிற வேளையில், உக்ரைனை வளைத்து வாரிப் போட்டுக்கொள்ள ரஷியா ஆளில்லா விமானங்களில் குண்டு வைத்து அனுப்பிக் கொண்டிருக்கிற காலகட்டத்தில்,எந்த நாட்டை வெட்டிச் சாய்க்க யாருக்கு அரிவாள் தேவைப்படும் என்று நோட்டமிடும் நேட்டோ பெரியண்ணன்களின் பேய்க்கூத்து நடக்கும் நேரத்தில் ஊரை அடித்து உலையில் போடும் உத்தியை வைத்து நாடு பிடிக்க சீனா அலையும் சூழலில், சண்டை போடாதே என்று எதிர்மறையாக கூறாமல் “உலகமே ஒரு குடும்பம்” (வசுதைவ குடும்பகம்) என்று பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவந்த அருள்வாக்கை உலகின் சிகரமான நிகழ்ச்சிகளில் உரக்க ஒலிக்கிறதே பாரதம், இதுதான் சனாதனம்; வாழும் சனாதனம். (சர்வதேச தடுப்பூசிக் காவியத்தை பாரதம் அரங்கேற்றியதை நம்மஊர் முசுடுகள் மறைத்தாலும் பயன் பெற்ற 100 நாடுகள் பாரத புகழ் பாடித் திரிவது நிஜம்).
  • ஐந்து கடமைகளை சனாதனம் வகுத்துத் தந்திருக்கிறது. தேவ யக்ஞம், ரிஷி யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், பித்ரு யக்ஞம், பூத யக்ஞம் – இந்த வடமொழிச் சொற்களுக்கு  ‘இறைவனுக்குச் செய்வது, துறவிகளின் சொற்களைக் கேட்பது, பசியால் வாடி வருபவருக்குப் பிடி உணவு தருவது, இறந்தவர்களுக்குச் செய்யும் நீத்தார் கடன், விலங்குகளை மதித்து பாதுகாப்பளிப்பது’ என தமிழில் பொருள் கொள்ளலாம். திருவள்ளுவப் பெருமானும், ‘தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை’ என்று இல்லறத்தாருக்கு இந்த ஐந்தையும் பரிந்துரைக்கிறார்.
  • கோவலன் கொலையுண்டதால் தன்னைவிட்டுப் பிரிந்த துயரை கண்ணகி எடுத்துக் கூறவில்லை. மாறாக, “அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும் துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்  விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை” (சிலப்பதிகாரம், கொலைக்களக் காதை 71-73) என்று அறம் செய்வோர்க்கு உதவுதல், அந்தண மரபினரைப் போற்றுதல், துறவிகளை எதிர்கொண்டு அவர்களுக்கு வேண்டுவன செய்தல், விருந்தினரைப் பாதுகாத்தல் என்ற நான்கு அறங்களை நான் தனித்திருந்ததால் செய்ய இயலவில்லை என்று கூறுகிறாள். சனாதனம் அந்த தமிழ் மகள் வாழ்வில் அந்த அளவுக்கு ஆழ்ந்த தாக்கம் ஏற்படுத்தியிருந்தது.
  •  “நோயிலே படுப்பது என்னே, நோன்பிலே உயிர்ப்ப தென்னே” என்பது பாரதியார் கவிதை. நோன்பிருந்து நோயைத் தீர்த்துக் கொள்வது போல, நோன்பிருந்து நல்ல மகப்பேறு அடைவது சனாதனம்.  “ஆறிரண்டும் காவேரி, அதன் நடுவே சீரங்கம், சீரங்கமாடி திருப்பாற்கடலாடி, எட்டாத கோவிலுக்கு எட்டி விளக்கேற்றி, வெள்ளி முழுகி, வெகுநாள் தவமிருந்து, தைப்பூசமாடி தவம்பெற்று வந்தவனே” என்று தமிழ்ப் பெண் பாடும் தாலாட்டு அதே சனாதன வாழ்வியலை சித்தரிக்கிறது.
  • பெருநகரம் என்பது மானாம்பதியை அடுத்த குக்கிராமம் அதன் அருகில் ஒரு நெடுஞ்சாலை அதை அந்த ஊர்மக்கள் காசி – ராமேஸ்வரம் நெடுஞ்சாலை என்று போற்றுகிறார்கள். இத்தனைக்கும் காசியும் அருகில் இல்லை, ராமேஸ்வரமும் அருகில் இல்லை. இரண்டும் மக்கள் மனதில் கோயில் கொண்டிருக்கிறது.  ‘இமயம் முதல் குமரி வரை என் தேசம்’ என்ற உரிமை உணர்வு தருவது சனாதனம்.

வேத காலம், ராமாயண காலம், பகவத் கீதை காலம்,  தமிழ்ச் சங்க காலம் என்று எந்தக் காலத்திற்கும் ஏற்புடையதாக அமைந்த நிரந்தரமான சட்டம் சனாதனம். இதை பின்வருமாறு எளிய முறையில் சொல்லி புரிய வைக்கிறார் சுவாமி விவேகானந்தர்:

 “புவியீர்ப்பு விசை என்பது இயற்பியலில் ஒரு சட்டம். இதை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பே இந்த விசை இருந்தது, உலகமே இந்த விசை பற்றி மறந்து போனாலும் கூட புவியீர்ப்பு விசை இருந்துகொண்டே இருக்கும். அது போலத்தான் ரிஷிகள் கண்டுணர்ந்த வேதம் வகுக்கும் சனாதனம் கூட மக்களை நல்வழிப்படுத்த நிரந்தரமாக உலகில் இருந்து வருகிறது.”

நன்றி விவேகானந்தர் அவர்களே, சனாதனத்தை ஒழிக்கப் புறப்படுகிறவன் முதற்காரியமாக சனாதனமாக (அன்றும் இன்றும் என்றும்) இருந்து வருகிற நம் புவியீர்ப்பு விசையை ஒரு கை பார்க்கட்டுமே! தேவைப்பட்டால் சந்திரயான் 4 தந்து உதவுவோம்!! நிலவில் போய் நின்றுகொண்டு அங்கே ‘புவி’யீர்ப்பு விசையை ஒழித்து விட்டேன் பார்’ என்று அவன் ஆசை தீர கொக்கரித்துக் கொண்டிருக்கட்டும்.

என்ன, நான் சொல்றது?

  • திரு. எஸ்.எஸ்.மகாதேவன், மூத்த பத்திரிகையாளர்.

$$$

46. உடன்கட்டை ஏறுதல் இப்போது இருக்கிறதா?

-அ.போ.இருங்கோவேள்

சனாதன தர்மத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் கிடையாது.

ராமாயணத்தில் தசரதன் மறைந்த பிறகு கோசலை, கைகேயி, சுமந்திரை உடன் கட்டை ஏறவில்லை. மகாபாரதத்தில் பாண்டுவின் மனைவி குந்தியும் உடன்கட்டை ஏறவில்லை. அபிமன்யு இறந்த பின் உத்தரை உடன்கட்டை ஏறவில்லை.

அதேசமயம், சுந்தரசோழனின் மனைவி, ராஜராஜ சோழனின் தாய் உடன்கட்டை ஏறியதாக சரித்திர, புதினங்களை எழுதியவர்களும் சொல்கிறார்கள். ஆனால் செம்பியன் மாதேவி உடன் கட்டை ஏறவில்லை.

எப்பொழுது வந்தது சதி?

மதுரை எம்.பி. எழுதிய ‘காவல் கோட்டம்’ சரித்திரப் புதினத்தில், மாலிக்காபூர் எனும் இஸ்லாமியன் தமிழக மகளிரை பிறந்த மேனியோடு, பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்த குதிரையில் ஏற்றிக்கொண்டு சென்றதாக எழுதியுள்ளார்.

மொகலாயர்கள் படையெடுத்து வந்து அரசனைக் கொன்று அவன் மனைவி, மகள்களை பாலியல் அடிமைகளாக்கினார்கள். அப்போது ஏற்பட்டதே ‘ஜோஹர்’ என்ற இந்த சதிச் சடங்கு.

அதில்  உலக மஹா அழகி பத்மாவதி தேவியின் கணவனை (சித்தூர் மன்னன்) அலாவுதீன் கில்ஜி  கோழைத்தனமாகக் கொன்றான்.  பிறகு ராணி பத்மினிதேவியை அடைய அரண்மனை வரும்போது, தீமூட்டி  தீயில் குதித்து இறந்தாள்.

அது தொடர்ந்தது. 

அந்த தற்கொலைகள் சனாதனி ராஜாராம் மோகன்ராய் முயற்சியால் பிறகு தடைசெய்யபட்டது.

இதற்கும் சனாதனத்திற்கும் என்ன சம்பந்தம்?

வரலாற்றைப் படியுங்கப்பா.

  • திரு. அ.போ.இருங்கோவேள், மருத்துவ சமூவியலாளர். இது இவரது முகநூல் பதிவு.
  • “உடன்கட்டை ஏறுதல் போன்ற சனாதனத்தின் தீமைகளைத் தான் திமுக எதிர்க்கிறது” என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் திரு. சேகர்பாபு கூறியிருப்பது நினைவில் வருகிறதா?  

$$$

47. மேற்கத்திய ‘நாய் விசில்’ அரசியல் தந்திரம்.

-ராஜசங்கர் விஸ்வநாதன்

நாய் விசில் அல்லது டாக் விசில் என ஒன்று மேற்கத்திய உலகில் உண்டு.

இது அதிக சத்தம் எழுப்பும்; ஆனால் மனிதர்களால் கேட்க முடியாது; நாய்களுக்கு மட்டும் கேட்கும்.

இதை வைத்து நாய்களுக்குப் பயிற்சி கொடுத்து வைத்திருப்பார்கள். இந்த விசில் சத்தம் கேட்டால் ஓடி வருவது, சொல்வதைச் செய்வது போன்றவற்றுக்குப் பழக்குவார்கள்.

அரசியலிலேயும் இதே போல்  ‘நாய் விசில்’ வார்த்தைகள் உண்டு;  நாய் விசில் அரசியல் உண்டு.

சனாதனத்தை ஒழிப்போம் என்பது இந்த நாய் விசில் அரசியல் தான்.

சனாதனம் என்பது என்ன?

இந்து மதம் தான். இது எல்லோருக்கும் தெரியும்.

இந்து மத ஒழிப்பு என சொன்னால் உடனே பிரச்சினை ஆகும் என்பதால், சனாதனம் என சொல்லுகிறார்களே, இது தான் நாய் விசில் அரசியல்.

அது புரிய வேண்டிய மர்மமான ஆட்களுக்குப் புரியும்.

அமெரிக்காவிலே இனவெறியர்களும் நிறவெறியர்களும் இந்த நாய்விசில் வார்த்தைகளை கறுப்பினத்தவருக்கு எதிராகப் பயன்படுத்துவார்கள்.

மாநில உரிமை என அமெரிக்காவிலே பேசினால், மாநிலங்களிலே யாருக்கு என்ன உரிமை இருக்கிறது என முடிவு செய்யலாம் என்று பொருள்.  ‘கறுப்பினத்தவருக்கு ஓட்டுப்போடும் உரிமை இருக்கிறதா என்பதை மாநிலங்களே  முடிவு செய்யும்’ என்பது தான் மறைந்திருக்கும் அர்த்தம்.

பல வார்த்தைகள் நமக்கு புரியாததாக இருக்கும்; ஆனால் இனவெறியாக இருக்கும்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பேருந்துகள் (forced busing) என சொல்லுவார்கள். அதென்ன ஆக்கிரமிப்புப் பேருந்து?

வெள்ளைய நிறத்தவரும் கறுப்பு நிறத்தவரும் ஒன்றாக ஒரே உரிமையுடன் அமர்ந்து பயணிக்கும் பேருந்து வசதியைத்தான் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பேருந்துகள் என சொல்லுவார்கள். ஏனெனில், அரசே சமத்துவத்தை நிலைநாட்டுவதால்.

இங்கேயும் அதேதான் செய்யப்படுகிறது, இல்லையா?

நீட் என்பது மாநில உரிமைக்கு எதிரானது என்பார்கள்.

என்ன மாநில உரிமை? தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவப் படிப்பை விற்பதா?

மாநிலங்களுக்கு தனியான அதிகாரம் வேண்டும் என்கிறார்கள். எதற்கு?

இதேதான் இந்த சனாதன விஷயத்திலும்.

கவனியுங்கள்…

மற்ற இடங்களிலே நிறவெறியர்களும் இனவெறியர்களும் மதவெறியர்களும் பயன்படுத்தும் அதே முறையை இங்கே பயன்படுத்துகிறார்கள் என்றால், என்ன பொருள்?

ஏனெனில் நேரடியாக மோதி, பாஜகவையோ இந்துத்வாவையோ ஜெயிக்க முடியாது.

சனாதனம் என்பது ஆதியும் அந்தமுமில்லா ஒன்று எனவும் தெரியும்.

எனவே என்ன செய்வது?

இப்படியாக  ‘கோட் வேர்டு’களிலே பேசுவது. புரிய வேண்டியவர்களுக்கு புரியும் அல்லவா?

நீதிமன்றம் போனாலும் நான் அதைச் சொல்லவில்லை; இதைச் சொன்னேன் என உருட்டிவிடலாம்.

எப்படி அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இனவெறிய நிறவெறியர்கள், மதவெறியர்கள் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே இங்கே செய்கிறார்கள்.

இதிலே இன்னொன்றையும் யோசிக்க வேண்டும்.

இவ்வளவு வன்மத்தோடு இருக்கும் கட்சிகள், ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்டவர்களுக்கு நீதி தருமா? வாக்குகளை வாங்க இப்படிச் செய்யும் ஆட்கள் வேறு என்னவெல்லாம் செய்யும்?

பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை எடுத்து வேறு இடத்திலே செலவிடும்;  கேட்டால் மக்களுக்குதானே போகிறது என சொல்லும்.

அதுவும் இதே  ‘கோர்ட் வேர்ட்’ அரசியல் தான்.

இங்கே நடக்கும் அரசியல் என்பதே இப்படியான நாடக அரசியல் தான்.

வெளிப்படையாகப் பேச தைரியம் இல்லாத ஆட்கள் இப்படிச் செய்கிறார்கள்.

இதை நாம் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்; மக்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

  • திரு. ராஜசங்கர் விஸ்வநாதன், சமூக ஊடக எழுத்தாளர்.
  • இது இவரது முகநூல் பதிவு.

(தொடர்ந்து ஒலிக்கும் தார்மிகக் குரல்கள்!)

$$$

Leave a comment