வாழும் சனாதனம்!- 10

வித்யா சுப்பிரமணியம், பட்டுக்கோட்டை பிரபாகர், இரா.சத்தியப்பிரியன், கிருஷ்ண.முத்துசாமி, சி.எஸ்.பாலாஜி, ஜெ.ஜெகன்

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-9) இன்றைய தார்மிகக் குரல்கள்:  வித்யா சுப்பிரமணியம், பட்டுக்கோட்டை பிரபாகர், இரா.சத்தியப்பிரியன், கிருஷ்ண.முத்துசாமி, சி.எஸ்.பாலாஜி, ஜெ.ஜெகன்.

39. லட்சம் நரசிம்மங்களின் கர்ஜனை

-வித்யா சுப்பிரமணியம்

எங்கே நான் சொல்வதைச் சொல், திராவிட மாடலாய நமஹ.

சநாதனாய நமஹ.

உன்னைக் கொல்லுவேன்…உடனே சொல், திராவிட மாடலாய நமஹ.

சநாதனாய நமஹ…

யாரங்கே? இவனுக்கு திராவிட மாடலாய என்று சொல்லிக் கொடுங்கள்….

சநாதனாய நமஹ….

அதென்ன சநாதனம்? என்னைவிட உயர்ந்ததா அது?

ஆம். உயர்ந்ததே. நான் பின்பற்றுவது. 

எதற்கு அதைப் பின்பற்றுகிறாய்? நீ மட்டுமல்ல, உன்னைப் போன்றோர் அனைவருமே என்னைத் தான் பின்பற்ற வேண்டும். இல்லாவிடில் துன்பப்படுவீர்கள்.  மரியாதையாகச் சொல், திராவிட மாடலாய நமஹ.

சநாதனாய நமஹ.

நான் அதனை வேரோடு அழித்துவிட்டு உன்னிடம் வருகிறேன். 

உன்னால் முடியாது.  

என்னால் முடியாதா? ஹா ஹா ஹா… நான் இப்போதே அதை அழித்தாக வேண்டும்.

சரி அழித்துக்கொள்…

நிச்சயம் அழிப்பேன். அதற்குதான் அது எங்கிருக்கிறதென்று தேடுகிறேன்… அது மட்டும் எங்கேயுள்ளதென தெரிந்துவிட்டால்….. 

அதொன்றும் அத்தனை சிரமமில்லை. அது தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும். 

எந்தத் தூண்? எந்தத் தூண்?  இதிலா?  இதிலா..?

எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். 

இதோ இப்போதே இந்தத் தூணை இரண்டாகப் பிளந்து அந்த சன்ன்ன்னாதனத்தை…..

அவன் தூணைப் பிளக்கிறான். உள்ளிருந்து பல லட்சம் நரசிம்மங்களின் கர்ஜனை கேட்கிறது.  அவை அவனைக் காலால் மாறி மாறி மிதிக்க… அவன் கண்ணில் தூசி பறக்கிறது. தேவையாடா உனக்கிது என சனாதனம் சிரிக்கிறது.

  • திருமதி வித்யா சுப்பிரமணியம் பிரபல எழுத்தாளர்.
  • இது இவரது முகநூல் பதிவு.

$$$

40. உண்மை சுடுகிறதே!

-பட்டுக்கோட்டை பிரபாகர்

சனாதனம் பற்றி எல்லோரும் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். சரி. ஏன் பார்வையற்ற நால்வர் யானையைத் தொட்டுணர்ந்த கதையாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி அந்த வார்த்தைக்கு பொழிப்புரை சொல்கிறார்கள்?

ஒரு வார்த்தைக்கு ஒரு அர்த்தம்தானே இருக்க முடியும்? 

சமநீதிக்கு எதிராக, மனித அடிப்படை உரிமைகளுக்கு எதிராக, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக நிகழும் செயல்கள் யாவும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் நோக்கம் என்றால், அது சரிதானே? இதை யார்தான் மறுக்க முடியும்?

இதையெல்லாம் ஒரே ஒரு மதம் மட்டும்தான், ஒரே ஒரு ஜாதி மட்டும்தான் செய்கிறதா என்று மனசாட்சியைத் தொட்டு கேட்டுப் பார்த்தால்… உண்மை சுடுகிறதே!

ஆதிக்கம் ஒழிப்பு மாநாடு என்று பெயர் வைத்திருந்தால் சர்வ தேசத்திற்கும் பொருத்தமாக இருக்குமோ?

  • திரு. பட்டுக்கோட்டை பிரபாகர், பிரபல தமிழ் எழுத்தாளர்.
  • இது இவரது முகநூல் பதிவு.

$$$

41. எவ்வித ஒட்டும் உறவும் இல்லை

-இரா.சத்தியப்பிரியன்

முக்கிய முழுமுதல் காரணியாக விளங்கிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம்தான் சனாதன ஒழிப்பு மாநாட்டை முன்னின்று நடத்தியது. குறிப்பாக ஆடி மாதம் முடிந்து இந்துக்களின் பண்டிகைகள் தொடங்குவதற்கு முன்னால் திட்டமிட்டு நடத்தியுள்ளனர். அவர்களைக் கேள்வி கேட்க யாரும் வரவில்லை. இந்த மாநாட்டுக்கு என்று ஒரு முகநூல் பக்கத்தை வேறு தொடங்கி அது சீந்துவாரின்றிக் கிடக்கிறது.

இதுவரையில் என் நட்பு வட்டத்தில் தெரிந்தவர்கள் பூர்வோத்திர பந்தம் என்ற ரீதியில் தமுஎகசவினரில் சிலர் முகநூலில் எனது நண்பர்களாக உள்ளனர்.  ‘அவர்களோடு இனி எவ்வித ஒட்டும் உறவும் இல்லை’ என அறிவித்துக் கொள்கிறேன். மிஞ்சி மிஞ்சிப் போனால் எனது எழுத்தை நிராகரிப்பார்கள்; கவலையில்லை.

எதுவுமே தெரியாமல் கள்ள மௌனம் காக்கும் அத்தகைய நண்பர்களை நேருக்கு நேர் சந்திப்பதாக இல்லை.

  • திரு. இரா.சத்தியப்பிரியன் சேலத்தில் வசிக்கும் எழுத்தாளர்.
  • இது இவரது முகநூல் பதிவு.

$$$

42. சனாதனத்தின் பெருமை

-கிருஷ்ண.முத்துசாமி

ஒருமுறை உண்மையான ஹிந்துவாக இருந்து பார். மேன்மைகளின் மேட்டில் நீ இருப்பது புரியும்.

ஒரே ஒருமுறை உண்மையான ஹிந்துவாக இருந்து பார், உன் மனம் பேரமைதியில் இருப்பது தெரியும்; நீ ஒரு மாபெரும் வாழ்வியல் முறையில் பங்கெடுத்துக் கொண்டிருப்பது புரியும்.

ஒரே ஒருமுறை ஸ்ரீரங்கம் கோவிலை இஸ்லாமியப் படைகளிடம் இருந்து  பாதுகாக்க எத்தனை ஹிந்துக்கள் பலியாகினர் என்று கேட்டுப் பார். தலை சீவிக் கொல்லப்பட்ட 12,000 ஹிந்துக்கள் யார் ,யார் என்று  கேட்டு ப்பார். கொல்லப்பட்டவர்களில் எத்தனை ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்று கேட்டுப்பார். எங்கள் தியாகத்தின் மகிமை புரிந்தாலும் புரியும். கடைசியில் கொடிய இஸ்லாமிய படையின் தலைவனைக் கொன்ற வெள்ளையம்மா என்ன ஜாதி என்று கேட்டுப் பார். அன்றைய ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்த கதை  புரியும்.

நம்மாழ்வார் என்ன ஜாதி என்று கேட்டுப் பார்; அவர் பிராமணர் அல்லர் என்று புரிந்தாலும் புரியும். அவருக்கு ஏன் முதல் மரியாதை என்று கேட்டுப்பார்ல் ஹிந்து மதத்தின் சமத்துவம் புரியும்.

எல்லோரும் தலைமீது வைத்துக் கொண்டாடும் கம்பர் என்ன ஜாதி என்று கேட்டுப் பார்; அவரும் பிராமணர் அல்லர் என்பது புரிந்தாலும் புரியும். பிராமணர் அல்லாத கம்பர் எப்படி  ‘கல்வியிற் பெரியர்’ என்று பெயர் பெற்றார் என்று கேட்டுப் பார், கல்வி அந்தக் காலத்தில் எல்லோருக்கும் கிடைத்தது என்று புரியும்; யாரும் யார் காதிலும் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவில்லை என்ற உண்மையும் புரியும்.

அப்படியே  அந்த  ‘கல்வியிற் பெரியர்’ கம்பரே வியந்து நின்ற வேத வியாசர் என்ன ஜாதி என்று கேட்டுப் பார். அவரும் பிராமணர் அல்லர் என்ற உண்மை புரிந்தாலும் புரியும். வேத வியாசரையும் கம்பரையும்  ஏன் பிராமணர்கள் ஆராதிக்கிறார்கள் என்று கேட்டுப் பார், ஏதாவது புரிந்தாலும் புரியும்.

வானசாஸ்திரத்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே துல்லியமாக ஹிந்து ரிஷிகள் கண்டறிந்தது எப்படி, இனி வரும் எந்த ஆண்டிலும் மூன்று கிரகணங்களின் சுற்றுப்பாதையைக் கண்டறியும் திறன், அதன்மூலம் சந்திர கிரகணம், சூரிய கிரகணம் நிகழும் நாள், நேரத்தை  துல்லியமாக எப்படி ஹிந்து பஞ்சாங்கம் கணக்கிடுகிறது என்று உன்னையே கேட்டுப் பார், எங்கள் ஹிந்து மதத்தின் அறிவியல் வீச்சு புரிந்தாலும் புரியலாம். அப்படியே கலீலியோவை மேற்கத்தியப் பாதிரிமார்கள் எதற்காக விஷம் கொடுத்துக் கொன்றார்கள் என்று கேட்டுப் பார்; பூமி உருண்டை என்ற உண்மையைச் சொன்னதற்காக அறிவிலிகள் செய்த அராஜகம் புரியும்.

பிராமணர்கள் நித்தமும் வழிபடும் கிருஷ்ணனும் ராமனும் என்ன குலத்தில் பிறந்தார்கள் என்று கேட்டுப் பார். ‘யாதவ கிருஷ்ணா, யதுகுல  கிருஷ்ணா’ என்று நித்தமும் ஆராதிக்கப்படும் கிருஷ்ணன் பிறந்தது ஆயர்குலம் என்ற உண்மை புரிந்தாலும் புரியும்.  பிராமணர்கள்  ஆயர் குலத்தில் பிறந்தவனை உயிரினும் மேலாக மெச்சுகிறார்களே, ஏன் என்று படித்த யாரிடமாவது கேட்டுப் பார்; ஹிந்து மதம் போதிக்கும் சமத்துவம் புரியும்.

உ.வே.சாமிநாதய்யர் தன் வாழ்க்கையை அர்ப்பணித்து மீட்டெடுத்தது என்னவென்று அறிவுடையோர் யாரிடமாவது கேட்டுப்பார். அவர் மீட்டெடுத்த இலக்கியத்தில் எத்தனை பிராமண எழுத்தாளர்கள் இருந்தனர் என்று கேட்டுப்பார். அந்த பிராமணர், ஜாதி வித்தியாசம் பார்க்காமல், செய்த தியாகத்தின் பெருமை புரிந்தாலும் புரியும்.

தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறிந்துவிட்டு கலைகள் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள். ஒரு இசைஞானி எப்படி உருவாகினார் என்ற உண்மை புரிந்தாலும் புரியும்.

இப்படி எதுவும் செய்யாமல், யாரோ ஒரு அயோக்கியன் எழுதியதை படித்துவிட்டு, ஹிந்து என்ற போர்வையில் கள்ளத்தனம் செய்து கொண்டிருந்தால் உன் தாய் கூட உனக்கு வேசியாய்த் தெரிவாள், உன்தந்தை உன் கண்களுக்கு தெருப்பொறுக்கியாகத்தான் தெரிவான். உன் கள்ளத்தனத்தின் பரிசு அதுதான்.

ஒரே ஒருமுறை உண்மையான ஹிந்துவாக இருந்து பார்,  உன்னுடைய பிறப்பின் மேன்மை புரியும். இருக்க முடியவில்லையென்றால், அந்த ஞானபூமியில் இருக்க முடியவில்லையென்றால் விட்டு விலகு. ஹிந்துவாக வேஷம் கட்டிக்கொண்டு ஏதோ ஒன்றாக இருப்பது உன் பிறப்புக்கு அசிங்கம்.

“மானமொன் றிலாது மாற்றலர் தொழும்பராய்

ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்?”

  • திரு. கிருஷ்ண. முத்துசாமி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில நிர்வாகிகளுள் ஒருவர்.
  • இது இவரது முகநூல் பதிவு.

$$$

43. அரைவேக்காடுகளின் உளறல்

-சி.எஸ்.பாலாஜி

சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்று வேதாந்தக் கருத்துக்களை எடுத்துரைத்தார்.   

அதாவது, 1893 செப்டம்பர் 11இல்   சர்வ சமயப் பேரவையில் ‘Sisters and Brothers of America’  என்று தன் உரையைத் தொடங்கினாரே, அதுதான் சனாதனத்தின் அடிப்படை.   

அனைவரையும் சமமாக பாவித்து, அனைத்து மதங்களையும் ஏற்றுக் கொள்வதே அது.   

கிறிஸ்தவம் என்றால் பைபிள், இஸ்லாம் என்றால் குரான் என்ற நிலையில், சனாதனத்தின் அடிப்படை வேதங்கள், உபநிஷத்துகள்தான். 

கீதை அதில் ஒரு பகுதியே.  அதில் கூறப்படாத கருத்துகளே இல்லை என அதற்கு உரை எழுதியோர் கூறுகிறார்கள்.  

இந்த உரை எழுதுவது கூட  சனாதனத்தில் மட்டுமே உண்டு!  

வேறு மதங்களில் வாய்ப்பே இல்லை. அதுபோல கேள்வி கேட்பதையும் சனாதனம் அனுமதிக்கிறது.  

ஆஸ்திகம், நாஸ்திகம், நடுநிலை என அனைத்தையும் அரவணைக்கும் ஒரே மதமும் இந்து என்கிற சனாதனமே.  

அதனால்தான் இங்கே திராவிடம் என்ற பெயரில் இந்துக்களைக் கொச்சைப்படுத்தும் அவலங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

அதுபோல, குறிப்பிட்ட நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இங்கில்லை.  

எல்லா சுதந்திரங்களையும் சனாதன இந்து தர்மம் அனுமதிக்கிறது.  இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.  

அரைவேக்காடுகள் எதையோ உளற, அதற்கு முக்கியத்துவம் தருவதற்குப் பதில், நம்மை நாமே ஆராய்ந்தால் ஏன் இப்படி சம்பந்தமில்லாமல் பேசுகின்றனர் என்பது புரியும்.

  • திரு. சி.எஸ்.பாலாஜி, பத்திரிகையாளர்.
  • இது இவரது முகநூல் பதிவு.

$$$

44. இரு கருத்துப் படங்கள்

-ஜெ.ஜெகன்

  • கார்டூனிஸ்ட் திரு. ஜெ.ஜெகன் தனது முகநூல் பக்கத்தில் வரைந்துள்ள இரு கருத்துப்படங்கள் இவை….

(தொடர்ந்து ஒலிக்கும் தார்மிகக் குரல்கள்!)

$$$

Leave a comment