-பத்மன், கோதை ஜோதிலட்சுமி, செங்கோட்டை ஸ்ரீராம், பி.ஆர்.மகாதேவன்
அண்மையில் பாரத மண்ணின் வேரான சனாதன தர்மம் தமிழகத்தில் சில தற்குறிகளால் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு, இழிவு செய்யப்பட்டதை எதிர்த்து நாடே கொந்தளித்திருக்கிறது. இத்தருணத்தில் சனாதனம் என்னும் வாழையடி வாழையின் சிறப்புகளைப் பதிவு செய்வது நமது கடமை; சனாதனம் குறித்த தார்மிக குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன... இது ஐந்தாவது பதிவு...

17. சனாதனத்தில் சமத்துவம்
-பத்மன்
வளர்ச்சி அடைந்த மரம் எதுவும் வேரை விலக்குவதில்லை. ஏனெனில் வேரறுந்தால் எவ்வளவு வளர்ந்த மரமும் வீழ்ந்துபடும். மரத்தில் கிளைகளும், கிளைகளில் கொம்புகளும், கொம்புகளில் தளிர் இலைகளும், இலைக் காம்புகளில் பூக்களும் புதிது புதிதாய் முளைக்கும். அந்தப் புதுமைகள் அனைத்தையும் தாங்கிப் பிடிப்பது, அவற்றின் ஜீவாதாரமாய் இருப்பது பழைமையான வேர்கள். ஆகையால் மரத்தின் புதுமைகள் எதுவும் பழைய வேர்களை வெறுப்பதில்லை; பத்தாம்பசலி என்று பரிகாசம் செய்வதில்லை.
ஆனால், மனிதர்களில் ஹிந்துக்களிடம் மாத்திரம் ஓர் வினோத குணம் உண்டு. பழைமை என்றால் பரிகாசத்துக்குரியது, அது பிற்போக்குத்தனமானது என்று ஓர் எண்ணம். நேற்று முளைத்த நாட்டைச் சேர்ந்தவர்கள்கூட, தங்களது பாரம்பரியப் பெருமை என்று எதையாவது முன்னிறுத்த முனைகிறார்கள். ஆனால், பல்லாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் வாய்ந்த, உலகின் மிக மூத்த நாகரிகம், பண்பாட்டைச் சேர்ந்த நாம், நமது வேர்களை வெறுக்கிறோம். காலனியாதிக்க அடிமைப் புத்தியும், அவர்களது கால்களை வருடி வளர்ந்த பாசாங்குப் பகுத்தறிவும், எதையும் வர்க்க பேதமாகப் பார்க்கும் வக்கரித்த கம்யூனிஸமும் வழங்கிய தீய பரிசு இது. இந்திய விடுதலைக்குப் பிறகும் இத்தகு எண்ணவோட்டத்தில் இருந்து நாம் இன்னமும் சுதந்திரம் பெறாததால், சுயபுத்தி தடுமாறி நமது பாரம்பரியப் பெருமையை உதாசீனப்படுத்துகிறோம்.
இதற்கு ஓர் உதாரணம், ‘சனாதனம்’ என்ற சொல்லுக்கு, உடனிருந்தே கொல்லும் இந்த வியாதிகளால் உருவாக்கித் தரப்பட்டுள்ள தவறான அர்த்தம். சனாதனம் என்றால் பகுத்தறிவு இல்லாதது, வேறுபாடுகளைக் கற்பிப்பது, அடிமைத்தனத்தை உபதேசிப்பது, மனிதர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவது, மற்றவர்களோடு முரண்படச் செய்வது, சாதிகளை உருவாக்கியது, சமத்துவம் இல்லாதது என்பதெல்லாம் இந்தப் புதிய ‘அகராதி’களின் பொல்லாங்குத்தனமான பொருள்கொள்ளல்கள்.
உண்மையில் சனாதனம் என்பது என்ன?
அது நமது பாரம்பரியத்தின் ஆணிவேர் மட்டுமல்ல, மானுடத்தின் மிக ஆழமான அஸ்திவாரமும்கூட. ‘ஆதனம்’ என்றால் எப்போதும் நிலைத்திருப்பது, பன்னெடுங்காலமாக நீடிப்பது, தோன்றிய காலம் தெரியாத பழம்பெருமை வாய்ந்தது என்று பொருள். அதற்கு முன்னொட்டாக இருக்கும் சன்(சம்) என்பது நன்மை என்ற பொருளுடையது. சம்ஸ்கிருதி (நற்பண்பு), சம்ஸ்காரம் (நல்லொழுக்கம்), சங்கரம் (நற்செய்கை) என நன்மை என்ற பொருள் கொண்ட முன்னொட்டுகள் இருப்பதை நோக்குக. அந்தவகையில் சனாதனம் என்பதற்கு வெறுமனே தொன்றுதொட்டு இருக்கக்கூடிய விஷயம் என்று பொருள் அல்ல, தொன்றுதொட்டு நிலைத்திருக்கும் நல்ல தன்மை என்பதே சரியான பொருள்.
நமது வேதங்களும், உபநிஷதங்களும் சனாதனமானவை. அவற்றில் இருந்து கிளைத்தவை தான் இதிகாச- புராணங்களும், தத்துவங்களும். இவற்றை ஆதாரமாகக் கொண்டிருப்பதுதான் ஹிந்து மதம் என்ற பொதுப் பெயரால் வழங்கப்படுகின்ற நமது சனாதன தர்மம்.
தர்மம் என்றால் அறம் என்று பொருள். தர்மம், அறம் என்பதற்கு பிச்சை போடுவது, தானம் கொடுப்பது என்பதாக இப்போது பொருள் சுருங்கிப் போயிருக்கிறது. திருவள்ளுவரின் அறத்துப்பால் என்ன பிச்சையிடும் கலை அல்லது தானம் செய்யும் முறையையா போதிக்கிறது? தர்மம், அறம் என்பதற்கு நாம் வாழுகின்ற வழிமுறைகளை வரையறுப்பது, வாழ்க்கைக்கான நெறிமுறைகள் என்று பொருள். ஆகையால்தான் நமது சனாதன தர்மம் என்பது வெறும் வழிபாட்டு மதமாக இல்லாமல், நம்மை வழிப்படுத்தும் வாழ்க்கை முறையாக இருக்கிறது.
சராசரி ஹிந்துக்களின் வாழ்க்கை முறைக்கு, சனாதனமாக விளங்கக்கூடிய வேதங்களும், உபநிஷதங்களும்தான் ஆணிவேர். இந்த ஆணிவேரில் குடிகொண்டுள்ள அதி உன்னத சமத்துவ, மனிதநேய மற்றும் அனைத்து உயிரினங்களையும் இயற்கையையும் உள்ளடக்கிய ஆன்மநேயத் தத்துவங்களை நாம் புரிந்துகொண்டு பின்பற்ற வேண்டும். ‘கடவுளை மற, மனிதனை நினை’ என்கிறார்கள் பகுத்தறிவுவாதிகள். மனிதர்கள் அனைவரும் சமம் என்றும், மதம் ஒரு போதை (அபின்) என்றும் சொல்கிறார்கள் கம்யூனிஸவாதிகள். அதேநேரத்தில், மனிதனை மனிதன் உண்மையிலேயே நினைத்துப் பார்க்க வேண்டுமானால் அனைத்து மானுடர்களும் கடவுளின் அங்கம் என்பதை முதலில் அவன் உணர வேண்டும் என்றும், அனைவருள்ளும் நம்மை இணைக்கும் தன்மையாகிய ஆண்டவன் இருப்பதை அறிந்துகொண்டால்தான் அனைவரும் சரிசமம் என்பது உறுதிப்படும் என்றும் நமது சனாதன தர்மமாகிய ஹிந்து மதம் போதிக்கிறது. இது மூடநம்பிக்கையா? போதையா? இல்லையே! இதுவன்றோ மானுடத்தையும் சமத்துவத்தையும் முழுமையாய் நிறுவுகின்றது!
“ஈஸா வாஸ்யமிதம் ஸர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்” என்கிறது யஜுர் வேதம் (40.1). உலகில் உள்ள அனைத்திலும் ஆண்டவனே உறைகிறார், அவரே அகில உலகமாகவும் பரவி நிற்கிறார் என்பதே இதன் பொருள்.
இதையே, “ஸர்வம் கல்விதம் ப்ரஹ்மம்” என்கிறது சாந்தோக்ய உபநிஷதம் (3.14). ஆனவை அனைத்தும் அந்த பிரும்மமே (ஆண்டவனே) என்பது இதன் பொருள். இவ்வாறாக அனைத்திலும் இருக்கும் ஆண்டவனைப் பாராமல், நான், நீ, அவன், அவள், அது என்று தனித்துப் பார்த்து பேதம் செய்வதால்தானே சமூகத்தில் பல சச்சரவுகளும், கொடுமைகளும் ஏற்படுகின்றன?
மனிதர்களில் மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களிலும், அனைத்துப் பொருள்களிலும் அந்த ஆண்டவனாகிய தன்மை வீற்றிருக்கிறது என்கிறது நமது சனாதன தர்மம். இயற்கையோடு ஒன்றி வாழ் என்றும், இயற்கையை மாசுபடுத்தாதே என்றும், பிற உயிரினங்களையும் மதியுங்கள் என்றும் மேலைநாடுகளில் மெல்லிய சப்தம் தற்போது எழுகிறது. இதனை பன்னெடுங்காலம் முன்பே நமக்கு உரத்த குரலில் நமது முன்னோர்கள் உபதேசித்திருக்கிறார்கள். அதனால்தான் நாம் மண்ணையும், மரத்தையும், ஆறு, குளங்களையும், பசுக்களையும் கடவுள் என்று கருதி அவற்றை புனிதமாக மதித்துக் காப்பாற்றும் மரபைப் பெற்றோம். ஆனால், இடைக்காலத்தில் அந்த மரபை மறந்து, வெறுமனே சடங்கு சம்பிரதாயங்களாக மரத்தையும், ஆற்றையும் புனிதம் என்று கூறி வழிபாடு மட்டுமே நடத்தி, ஆண்டவனின் இருப்பிடங்களான அவற்றின் புனிதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற பாரம்பரியப் பண்பைத் துறந்துவிட்டோம். அதனாலன்றோ இன்று விருட்சங்கள் வீழ்ந்துபட்டு, கங்கை போன்ற நதிகளும் கழிவுநீரோடைகளாக மாறிவருகின்றன! கால்நடைகள் அன்போடு பேணப்படுவது கழிந்துபோய், வெறும் கசாப்புக்கடைப் பொருட்களாக மாறிவிட்டன. மானுடருக்குள்ளும் மேல், கீழ் என்ற பாகுபாடுகள் புகுந்து நாமும் மக்கிப்போனோம்.
“ஏகோ தேவ: சர்வபூதேஷு கூட: ஸர்வவ்யாபீ ஸர்வபூத அந்தராத்மா” என்கிறது ஸ்வேதாஸ்வதர உபநிஷதம் (6.11). ஏகோ தேவ என்றால் ஒற்றைக் கடவுள். இருப்பது ஒரு கடவுள்தான், அவரைப் பல விதங்களில், பல பெயர்களில், பல வடிவங்களில் நாம் வணங்குகிறோம் என்பதே நமது சனாதன தர்மம் உலகுக்கு அளித்துள்ள அறிவுரை. வெளிநாட்டு மதங்களைப்போல, என் கடவுள்தான் வல்லவர் அவரை நீ வணங்காவிட்டால் அழிக்கப்படுவாய் என்ற அச்சுறுத்தலோ, இல்லையேல் என் கடவுளை ஏற்காவிட்டால் நீ நரகத்துக்குப் போவாய் என்ற மிரட்டலோ இதில் இல்லை. இருப்பது ஒரே கடவுள் என்பதே நமது சனாதனம். அதுவும் அவர் எப்படி இருக்கிறார்? எல்லா பொருள்களுக்குள்ளும் அவர் உறைகிறார் (ஸர்வபூதேஷுகூட), எங்கும் நிறைந்திருக்கிறார் (ஸர்வவியாபீ), எல்லா உயிரினங்களுக்குள்ளும் ஆத்மாவாக அவரே திகழ்கிறார் (ஸர்வபூத அந்தராத்மா). மனிதர்களுக்கு இடையே மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுடனும், அனைத்து வஸ்துகளுடனும் மனிதருக்குள்ள சமத்துவத் தன்மையை அன்றோ நமது சனாதனம் பகர்கின்றது!
ஸங்கச்சத்வம் ஸம்வதத்வம் ஸம்யோ மனாம்ஸி ஜானதாம்
தேவா பாகம் யதா பூர்வே ஸஜ்ஞானானா உபாஸதே
ஸமானி வா ஆஹூதி: ஸமானா ஹ்ருதயானி வ:
ஸமான மஸ்து வோ மனோ யதா வ: ஸுஸஹாஸதி
(ஸம்மனன சூக்தம், ரிக் வேதம் 10.191. 2, 4)
இதன் பொருள்: “எல்லா மனிதர்களும் இணக்கமாகச் செயல்படட்டும். எல்லோரும் அன்பாக உரையாடட்டும். ஒருவரையொருவர் மனப்பூர்வமாக நன்கு புரிந்துகொள்வோம். நமது முன்னோர்கள் எவ்விதம் நல்லறிவோடு தங்களுக்குக் கிடைத்த செல்வங்கள் அனைத்தையும் பகிர்ந்துகொண்டு வாழ்வதைக் கடைப்பிடித்தார்களோ நாமும் அதனைப் பின்பற்றுவோம். நமது நோக்கங்கள் ஒத்தவையாக அமையட்டும். அனைவரின் உள்ளங்களிலும் ஒத்த உணர்வுகள் ஓங்கட்டும். மனத்தால் நாம் ஒன்றிணைவோமாகுக. அதேபோல் நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவிகரமாக வாழ்ந்து இறைவனைச் சேர்வோமாகுக!”
இதே கருத்தை அதர்வண வேதமும் (3.27) அழகுற இவ்வாறு சொல்கிறது.
யோ(அ)ஸ்மான் த்வேஷ்டி யம் வயம் த்விஷ்மஸ்தம் யோ ஜம்பே தத்ம:
“ஏ பகவானே, என்னிடம் எவரேனும் விரோதம் கொண்டிருந்தாலும், நான் யாரிடத்திலாவது விரோதம் கொண்டிருந்தாலும் அந்த விரோதத்தை ஒழித்து, எவரும் என்னைப் பகைக்காமலும், நானும் எவரிடமும் பகை கொள்ளாமலும் இருக்கச் செய்வீராகுக!” என்பதே இந்தப் பிரார்த்தனை.
மனிதர்களிடம் மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களிடமும் நாம் நண்பர்களாக வாழ வேண்டும் என்ற கருத்தை யஜுர் வேதம் (36.19) சிறப்புறச் சொல்கிறது.
மித்ரஸ்யமா சக்ஷுஷா ஸர்வாணி பூதானி ஸமீக்ஷந்தாம் மித்ரஸ்யஅஹம் சக்ஷுஸா ஸர்வாணி பூதானி ஸமீக்ஷே
இதன் பொருள்: எல்லா உயிரினங்களும் என்னை நண்பராகக் கருதட்டும். அதேபோல நானும் எல்லா உயிரினங்களையும் எனது நண்பர்களாகக் கருதுவேனாகுக.
“வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் உயிர்களுக்கெல்லாம்” என்றார் மகாகவி பாரதியார். பசிப்பிணியைப் போக்குதல், பிறருக்கு உதவுதல் ஆகியவற்றை நமது வேதங்கள் மிகவும் பாங்குடன் எடுத்துரைக்கின்றன. “ப்ருணீயாதின்னாதமானாய த்வ்யாந்த்ராதீயாம் ஸமனு பச்யேத பந்தாம்” என்கிறது ரிக் வேதம் (10.17.5). தானமளிப்பவனுக்கு மிகுதியாகப் புண்ணியம் கிடைப்பதால், உன்னிடம் வந்து உணவு கோருபவனுக்கு அதனை அளிக்கத் தவறாதே என்று உரைக்கிறது இந்த ஸ்லோகம்.
இதற்கு ஒரு படி மேலே போய், நூறு கைகளால் பொருளைச் சேர்த்து, ஆயிரம் கைகளால் அதைப் பிறருக்கு அளி என்று போதிக்கிறது அதர்வண வேதம். “சதஹஸ்த சமாரஹர ஸஹஸ்ரஹஸ்த சங்கிர” என்பதே அந்த ஸ்லோகம் (3.24.5). பொருளைச் சேர்ப்பதற்கான உழைப்பைவிட அவற்றைப் பிறருக்குத் தானமளிப்பதற்கான உணர்வு மிகவும் அதிகமாக இருக்க வேண்டும் என்பதை இது அழகாக எடுத்துரைக்கிறது.
இதற்கும் மேலே சென்று, பிறருக்கு அளித்தது போக எஞ்சியதை நீ உண்ணு என்று உபதேசிக்கிறது யஜுர் வேதம் (40.1). “த்யக்தேன புஞ்ஜீதா” என்பதே அந்த ஸ்லோகம். சுயநலத்தை அடக்கிக் கொண்டு, பிறர் நலத்தைப் பேணும் உன்னத தியாக மனப்பான்மையைக் கூறுகிறது இந்த ஸ்லோகம். இதைத்தான் தமிழிலே ‘தனக்கு மிஞ்சினால் தானம்’ என்று உரைத்தனர் நம் முன்னோர். ஆனால், பிறருக்குக் கொடுத்தது போக மிஞ்சியதை தனக்கு வைத்துக்கொள்வதே உண்மையான தானம் என்ற உட்கருத்து மழுங்கி, தனக்கு வேண்டியதை வைத்துக்கொண்டு மிஞ்சியிருப்பதை தானம் செய்யலாம் என்பதாக தவறான அர்த்தம் பின்னர் புகுந்துகொண்டது.
இதைப்போலத் தான் இடைக்காலத்தில் புகுந்த தவறான பொருள்கொள்ளல்கள் நமது சமுதாயத்தை வீழச் செய்துள்ளன. யாதுமாகி நிற்கும் பரம்பொருளை ஓர் ஒற்றை மனிதனாக உருவகித்து, புருஷன் என்று அழைத்தனர் நம் முன்னோர். புருஷன் எனப்படும் இந்த ஆதி ஆற்றல்தான், படைப்புகளாக தன்னை விரித்துக்கொண்டுள்ளது என்பதை ரிக் வேதத்தின் புருஷ சூக்தம் மிகுந்த கவித்துமாக எடுத்துரைக்கிறது. அதன் 12-ஆவது ஸ்லோகம், ‘மனிதர்கள் யாவரும் சரிநிகர், எல்லோரும் ஓர் நிறை’ என்பதை அற்புதமாக விண்டுரைக்கிறது. ஆனால், இவ்விதம் ஒற்றுமையை உணர்த்துகின்ற இந்த ஸ்லோகத்தைத்தான், பாகுபாட்டுக்கான இலக்கணம் என்றுகூறி வசைபாடுகிறார்கள் பகல்வேஷ பகுத்தறிவுவாதிகள்.
பிராஹ்மணோ(அ)ஸ்ய முகமாஸீத் பாஹ ராஜன்யஹ க்ருதஹ / ஊரூதஸ்ய யத்வைஸ்யஹ பத்ப்யாம் சூத்ரோ ஆஜாயத /
என்பதே அந்த ஸ்லோகம். “பிரும்மமாகிய அந்தப் புருஷனின் வாயில் இருந்து (சம்ஸ்கிருதத்தில் முகம் என்பதற்கு வாய் என்று பொருள்) பிராமணர்களும், தோள்களில் இருந்து ராஜ்யங்களை நடத்துகின்ற க்ஷத்திரியர்களும், தொடைப் பகுதிகளில் இருந்து வியாபாரம், தொழில் செய்கின்ற வைசியர்களும், பாதங்களில் இருந்து சூத்திரர்களும் தோன்றினார்கள்” என்பது இதன் பொருள். இந்த நான்கு வர்ணத்தாருமே (வர்ணம் என்பது இங்கே வகைப்பாட்டைக் குறிக்கிறது) ஒரே பிரும்மத்தின், அதாவது ஒற்றை இறையின் உறுப்புகள்தான். இதில் மேல், கீழ் ஏதுமில்லை. பிறகு ஏன் இந்த வகைப்பாடு? இதன் உட்பொருள் என்ன?
வேதம் அல்லது அக்காலக் கல்வி, சொல்வதைக் கேட்டுத்தான் (ஸ்ருதி) வளர்க்கப்பட்டது. ஆகையால் வேதங்களை ஓதுகின்றவர்களுக்கு வாய் முக்கியம். வேதத்துக்குத் தமிழில் எழுதாக்கிளவி (எழுதப்படாத சொல்) என்றொரு பெயர் உண்டு. எனவே, சொல்லுக்கு (ஸ்ருதிக்கு) முக்கியத்துவம் கொடுக்கும் பிராமணர்கள், புருஷனின் வாயில் இருந்து தோன்றியதாக வர்ணிக்கப்படுகிறார்கள். அடுத்ததாக, அரசாங்கத்தை நடத்துபவர்களுக்கு தோள் வலிமை, பராக்கிரமம் அவசியம். வீரம் என்றதுமே நாம் தோள் தட்டுகிறோம் அல்லவா? ஆகையால் க்ஷத்திரியர்கள், புருஷனின் தோள்களில் இருந்து தோன்றியதாக உருவகப்படுத்தப்படுகிறார்கள்.
இதேபோல, எந்தவொரு சமூகத்துக்கும் அதன் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் உற்பத்தி அவசியம். உற்பத்தியே சமூகத்தைத் தாங்கிப் பிடிக்கும் பொருளாதாரத் தூணாக விளங்குகிறது. மனிதனுடைய தொடைப் பகுதி தூண்களைப்போல உள்ளது. மேலும் அந்தத் தொடையின் அருகில்தான் வயிறு மற்றும் உற்பத்தி உறுப்பு ஆகியன அமைந்துள்ளன. ஆகையால் உழவு மற்றும் தொழில் செய்தல், வியாபாரம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபடும் வைசியர்கள், புருஷனின் தொடைகளில் இருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறார்கள். மீதி இருப்பவர்கள் சூத்திரர்கள். இதற்கான பொருளை நாம் சரியாக அறிந்துகொள்ள வேண்டும்.
சூத்திரம் என்றால் அடிப்படை, அஸ்திவாரம் என்று பொருள். கணக்குகளுக்கான அடிப்படை ‘சூத்திரம்’ எனப்படுகிறது. பல்வேறு சாஸ்திரங்களுக்கான அடிப்படையும் சூத்திரங்கள் என்று போற்றப்படுகின்றன. அப்படியிருக்க, வருணத்தில் மட்டும் சூத்திர என்பது எப்படி மட்டமாகிவிட முடியும்? சூத்திர என்பது எந்தவொரு சமூகத்துக்கும் அடிப்படை அவசியம் என்ற பொருளைக் கொண்டது. எந்தவித சிறப்புத் திறமையும் இல்லாத பொதுவானவர்கள் சூத்திரர்கள் எனப்பட்டனர். உடலைத் தாங்கி நிற்பதோடு, அதன் இயக்கத்துக்கும் உதவுபவை இரண்டு பாதங்கள். அந்தப் பாதங்கள் இல்லாவிட்டால் எந்த மனிதனும் படுத்த படுக்கை ஆகிவிட வேண்டியதுதான். அதேபோல்தான் சமூகத்தைத் தாங்கிப் பிடிக்கின்ற, அதனுடைய இயக்கத்துக்குக் காரணமாக அமைகின்ற பிரிவினரே சூத்திரர்கள்.
இங்கே, மேலும் ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். தற்காலத்தில் ஜாதியின் அடிப்படையில் பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்பதற்கு அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. இது பொய்யானது. ஜாதி முறையும், அதன் பாற்பட்ட ஏற்றத்தாழ்வுகளும் நமது சமூகத்தைப் பீடித்த பிற்காலப் பீடைகள். ஆனால், வருணம் என்பது ஒரு மனிதனின் அடிப்படை குணம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றைப் பொருத்து அமைகின்ற வகைப்பாடு. இதைத் தான் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், “சாதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாஹசஹ” என்கிறார். “குணம், செயல் ஆகியவற்றின் அடிப்படையில் நான்கு வர்ணம் என்ற வகைப்பாட்டை நானே படைத்தேன் அதாவது நால்வகை வர்ணமாக நானே வெளிப்பட்டேன்” என்கிறார் கிருஷ்ணர்.
முற்காலத்தில் இவ்வாறாகத்தான் பாரதத்தில் மனிதர்கள், குறிப்பிட்ட வர்ணத்தவர்களாக வகைப்படுத்தப்பட்டார்கள். இதில் வாரிசுரிமை ஏதும் இருக்கவில்லை. ஆனால், காலம் போகப்போக, அரசியல்வாதிகளின் பிள்ளைகள் அரசியல்வாதிகளாகவும், மருத்துவர்களின் பிள்ளைகள் மருத்துவர்களாகவும், நடிகர்களின் பிள்ளைகள் நடிகர்களாகவும் தற்காலத்தில் எளிதில் ஆகிவிடுவதைப்போல ஒரு காலகட்டத்தில் ஆகத் தொடங்கினார்கள். பின்னர், ஜாதீய அடிப்படையில் இன்னாரின் மகன்தான் இன்னார் என்ற சாபக்கேடு நுழைந்தது. அதன் உச்சகட்டமாக, பஞ்சமர் (நான்கு வர்ணத்தைத் தாண்டிய கலப்பு வர்ணத்தவர்) என்ற பிரிவினையும், தீண்டாமைக் கொடுமையும் புகுந்துகொண்டு விட்டன.
பிரும்மத்தின் அடிப்படையை உணர்ந்துகொண்டு எவ்வித ஏற்றதாழ்வும், மனக்கிலேசமும் அடையாமால், மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களையும் சமமாக பாவிப்பவன் எவனோ, இன்ப- துன்பம் எது வந்தபோதிலும் மனம் இளகிவிடாமல் நிலைமனதினனாக இருப்பவன் எவனோ அவனே பிராமணன். அந்த நிலையை மனிதர் அனைவரும் எய்துதல் வேண்டும் என்பதே மானுட லட்சியம் என நமது சனாதன தர்மம் காட்டுகிறது. இதனை தனது பல்வேறு கட்டுரைகளிலும், ஞானரதம் என்ற நெடுங்கதையிலும் விளக்கமாக எடுத்துரைக்கிறார் மகாகவி பாரதியார்.
அடுத்ததாக, பெண்ணடிமைத்தனத்தை சனாதன தர்மம் போதிப்பதாக ஒரு குற்றச்சாட்டு. ஆனால், நமது சனாதன தர்மம் பெண்களை ஆண்களின் போக வஸ்துகளாகப் பார்க்கவில்லை, போற்றுதலுக்கு உரியவர்களாகப் பார்க்கிறது. “யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா” (எங்கு பெண்கள் போற்றப்படுகிறார்களோ அங்குதான் தெய்வங்கள் மகிழ்வடைகின்றன) என்கிறது மனு ஸ்மிருதி (3.56). பெண்ணை ஆற்றலின் உறைவிடமாக, சக்தி என்னும் இறைவியாக வணங்கச் சொல்லிக் கொடுக்கிறது நம் சனாதன தர்மம். உங்கள் போற்றுதல் யாருக்கு வேண்டும், சாதாரண மனுஷியாக சமஉரிமை கொடுத்தீர்களா? என்று சீறுகிறார்கள் மாதர் சங்கப் புரட்சிப் பெண்கள்.
அவர்களுக்கான விளக்கம் இதோ: சகதர்மினியாக (இல்லறத் துணைவியாக), அர்த்தாங்கினியாக (ஆணின் சரிபாதியாக), கிருஹராணியாக (இல்லத்தரசியாக) பெண்களை வேதங்கள் வர்ணிக்கின்றன. இவற்றின் உட்பொருளை மாதர் சங்கப் பெண்ணரசிகள் ஒரு கணம் யோசித்துப் பார்க்க வேண்டும். வேத காலத்தில் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள். ரிக் வேதத்தின் 126-ஆவது ஸ்லோகத்தை ரோமஷா என்ற பெண் ரிஷியும், 179-ஆவது ஸ்லோகத்தை லோபமுத்ரா என்ற ரிஷிபத்தினியும் (அகத்தியரின் மனைவி) எழுதியுள்ளனர். யாக்ஞவல்க்ய ரிஷி துறவறம் பூணுவதற்கு முடிவெடுத்தபோது அவரது மனைவி மைத்ரேயி ஆத்மஞானம் குறித்து அவருடன் விவாதித்து, தானும் துறவறம் பூண்டார்.
கார்க்கி, விஸ்வவரா, சாஷ்வதி, கோஷா, அபலா, அதிதி உள்ளிட்ட பெண் தத்துவ அறிஞர்கள் வேத காலத்தில் இருந்துள்ளனர். அனைத்தும் பிரும்மமே என்ற தத்துவத்தில் ஆழ்ந்து அகன்ற அறிவு கொண்டு வாதிடும் இவர்களை ‘பிரும்மவாதினிகள்’ என்று வேதம் விளிக்கிறது. ஸ்ரீராமரின் தந்தை தசரதனுக்கு அவரது மனைவி கைகேயியும், ஸ்ரீகிருஷ்ணருக்கு அவரது மனைவி சத்யபாமாவும் போரில் உறுதுணையாக, சாரதிகளாக இருந்துள்ளனர். துர்காவும் காளியும் போர்த் தெய்வங்கள். ”திருமணமாகி புகுந்த வீடு வரும் பெண், அந்த இல்லத்தின் அரசியாக உள்ளே நுழைகிறார்” என்கிறது அதர்வண வேதம் (14.1.43-44).
பெண்கள் தனக்குப் பிடித்தவனை கணவனாகக் கரம்பிடிக்கும் வழக்கம் இருந்ததை, இதிகாச, புராணங்களில் கூறப்படும் சுயம்வரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இடைக்காலத்துப் பாவமான பால்ய விவாகம் அக்காலத்தில் இருந்ததில்லை. கணவனை இழந்த கைம்பெண்கள், மொட்டையடித்துக்கொண்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று வேதம் சொல்லவில்லை. மாறாக, “எழுந்திரு பெண்ணே, உன் கரம் பிடித்த கணவனின் மனைவி என்ற ஸ்தானத்தை இதுவரை அனுபவித்தாய், இனிமேலும் இந்த வாழ்வுலகில் உனது வாழ்க்கையை வாழ்” என்பதை “உதீர்ஷ்வ நார்யபி ஜீவலோகம் கதாஸுமேதமுப சேஷ ஏஹி” என்று தைரியமூட்டுகிறது ரிக் வேதம் (10.18.8).
கணவனை இழந்த பெண்கள் மட்டுமல்ல, கணவனைப் பல ஆண்டுகள் பிரிந்திருக்கும் பெண்கள்கூட மறுமணம் செய்துகொள்ளலாம் என்பதை நள மகராஜன் காணாமல் போன பின்னர், தமயந்திக்கு அவரது தகப்பனார் மறுமண ஏற்பாடுகள் செய்ததைக் கூறும் மகாபாரதத்தின் நள- தமயந்தி உபகதை (கிளைக்கதை) மூலம் அறியலாம். வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற விந்தை வழக்கம் பிற்காலத்தில் வந்தது. அதிலும், பெண்களைக் குறிவைத்து வேட்டையாடும் அன்னியப் படையெடுப்புகள் என்ற ஆறாத் துயரங்களுக்குப் பின்னர் ஏற்பட்டது.
ஆக, ஆணும் பெண்ணும் சமம், மனிதர்கள் அனைவரும் சமம், மனிதர்களோடு அனைத்து உயிரினங்களும் சமம் என்ற உன்னத சமத்துவத்தைத் தான் நமது சனாதன தர்மம் போதிக்கிறது. இந்த உயர் நிலையில் இருந்து இடைக்காலத்தில் பிறழ்ந்ததால்தான் சாதி ஏற்றத்தாழ்வுகள், பெண்ணடிமைத்தனம் ஆகிய மூடப்பழக்கங்கள் புகுந்தன.
சனாதனம் குறித்த தவறான புரிந்துகொள்ளல்கள் அதனை எதிர்ப்பவர்களிடம் மட்டுமே இல்லை, அதனை ஏற்பவர்களிடமும் உள்ளது. சனாதன தர்மத்தைப் பின்பற்றுவது என்றால், அதன் உட்பொருளை, உள்ளார்ந்த வீரியத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அந்த சத்திய, சமத்துவத்தை மீண்டும் நிலைநிறுத்துவது என்றே பொருள். முதலில் நமக்குள்ளேயும், பின்னர் நம்மை எதிர்ப்பவர்கள் மத்தியிலும் சனாதனத்தின் மேன்மையை நாம் நிலைநாட்டுவோமாகுக! அனைவரும் ஒத்த கருத்துடன், உணர்வுடன் அதனை எப்போதும் பின்பற்றுவோமாகுக!
- திரு. பத்மன், தமிழின் மூத்த பத்திரிகையாளர்; எழுத்தாளர்.
$$$
18. தமிழ் கூறும் சனாதன தர்மம்
-கோதை ஜோதிலட்சுமி
சனாதன தர்மம் (ஹிந்து தர்மம்) என்னும் சொல் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தத் தேசத்தில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதே நேரத்தில் சமீபகாலமாக மிகப் பெரும் சர்ச்சைக்குரிய சொல்லாகவும் இந்தச் சொல் இருக்கிறது. சனாதன தர்மம் என்பது நிலையான தத்துவ ஞானம்
அல்லது நம்பிக்கை.
மனிதனால் உருவாக்கப்பட்டவற்றைக் கடந்து தனிமனித விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு எப்போதும் நிலைத்திருக்கும் வாழ்வியல் கோட்பாடுகளைக் குறிக்கும் சொல் என்றும் கொள்ளலாம்.
தர்மம் என்ற சொல் கடமை, பொறுப்பு இரண்டின் கூட்டுச் சேர்க்கை அல்லது இரண்டும் இணையும் இடம்.
சனாதனம், மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஐந்து கடமைகளை வகுத்துத் தந்திருக்கிறது. தேவ யக்ஞம், ரிஷி யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், பித்ரு யக்ஞம், பூத யக்ஞம்- இந்த வடமொழிச் சொற்களுக்கு தமிழில், “இறைவனுக்குச் செய்வது, துறவிகளின் சொற்களைக் கேட்பது, பசியால் வாடி வருபவருக்குப் பிடி உணவு தருவது, இறந்தவர்களுக்குச் செய்யும் நீத்தார் கடன், விலங்குகளை மதித்து அவற்றைப் போஷித்துப் பாதுகாப்பளிப்பது’ எனப் பொருள் கொள்ளலாம்.
இந்த ஐந்து கடமைகளையும் எளிதாக திருமூலர்,
யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் இன்னுரை தானே
என்கிறார்.
வள்ளுவப் பேராசான் தமது குறளில் இந்த ஐந்து கடமைகளுக்கும் தனித் தனியே மிக விரிவாக அதிகாரங்களை இயற்றித் தந்திருக்கிறார்.
திருவள்ளுவர் யாருக்குச் சொந்தம் என்பதைவிட, அவர் கூறிய அறம் பின்பற்றப்படுவதில்தான் மதிப்பு இருக்கிறது. திருவள்ளுவர் சனாதனம் குறிப்பிடும் இந்த ஐவகைக் கடமைகளையும் தனித் தனி அதிகாரங்களாக வகுத்து நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.
தமிழர் வாழ்வியல் என்பது சனாதனத்தை அடியொற்றியது என்பதற்கு மிகச் சிறந்த சான்றுகளாக இவை விளங்குகின்றன. திருக்குறள் உலகப் பொதுமறையாக ஒருபுறம் இருக்க, திருக்குறள் குறித்து திருவள்ளுவமாலை தந்த சங்கப் புலவர்கள் என்ன சொல்கிறார்கள்?
செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் – மொழிந்த பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே… அதற்குரிய ரந்தணரே யாராயி னேனை இதற்குரிய ரல்லாதாரில்
என்கிறார் வெள்ளிவீதியார்.
எவராலும் செய்யப்படாதது என்பதால் வேதம் – செய்யா மொழி. பொய்யாமொழி என்பது திருக்குறள்.
இரண்டுமே ஒரே பொருள் குறித்துத்தான் பேசுகின்றன. ஒரே ஒரு வேறுபாடுதான், அது செய்யா மொழியாகிய வேதம் அந்தணர்களால் மட்டுமே ஓதப்படுகிறது. ஆனால், திருக்குறள் எனும் பொய்யாமொழி உலக மாந்தர் அனைவராலும் ஓதப்படுகிறது.
திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், புறநானூறு போன்ற இன்ன பிற பழந்தமிழ் நூல்கள் இங்கே இருந்த வாழ்வியல் முறை குறித்துத் தெளிவான கருத்துகளை முன்வைக்கின்றன. தமிழ் தேசியம் பேசுவோர் இந்த நூல்களை எதிர்மறையாக விமர்சிக்கிறார்கள். அந்நாளில் இந்நூல்களை ஆக்கியோர் சமயம் சார்ந்து எழுதினார்கள் என்பதைக் காட்டிலும் தாம் நம்பிய வாழ்வியல் முறையைச் செயல்படுத்தி வந்த அறத்தை வலியுறுத்த நூல்களை இயற்றினார்கள்.
அதிவீரராம பாண்டியர், ஒளவையார் என்று பலரும் இயற்றித் தந்திருக்கும் நூல்கள் அவர்கள் பின்பற்றிய வாழ்வியல் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இதனால், இந்தத் தேசம் முழுவதும் ஒரே விதமான அறம் பின்பற்றப்படுகிறது என்று கொள்வதுதான் அறிவுடைமை.
இந்த உயரிய அறத்துக்கு அல்லது தர்மத்துக்கு நாமும் உரிமையாளர்கள் என்று கொண்டு அதன் மேன்மைகளைப் புரிந்து கொள்ளலாம்.
சனாதன தர்மத்தைப் பொருத்தவரை அது தீபத்தின் ஒளி போன்றது. தீபத்தின் சுடர் இந்தத் திசையில்தான் பிரகாசிக்க வேண்டும், இன்னாருக்குத் தான் தனது ஒளியை வழங்க வேண்டும் என்று எந்தப் பாகுபாடும் இல்லை. எண்திசைகளிலும் எல்லாவற்றையும் வெளிச்சமிட்டுக் காட்டும் ஒளியைப் போன்றதே இந்த தர்மமும்.
இதனை நமக்கு எடுத்துரைக்க வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இன்னும் அந்தந்தப் பிராந்தியத்தில் மகான்கள் அருளிச் செய்த பாசுரங்கள், வழிகாட்டும் நூல்கள் அமைந்துள்ளன. தமிழில் திருக்குறள், சமய இலக்கியங்கள் என்று போற்றப்படும் தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திவ்யப் பிரபந்தம் முதலான நூல்கள் இந்தத் தர்மத்தை நாம் புரிந்து கொள்வதற்கு வழிகாட்டுகின்றன.
தனி மனித உணர்வுகளை நியாயங்களை மதித்து நடத்தல், தனி மனித ஒழுக்கம் முதலானவை இந்த தர்மத்தின் தனிச் சிறப்பு. இதை அறம், பொருள், இன்பம் எனும் மூன்று பிரிவுகளிலும் திருக்குறள் வலியுறுத்துகிறது.
சீதை தன் கணவரைப் பின்பற்றுவதே தனது தர்மம் என்று கணவர் சொல்லுக்கேற்ப நெருப்பில் இறங்குகிறார். சீதையைப் பூஜிக்கிறார்கள். பக்த மீரா தன் கணவரைத் துறந்து இறைவனை அடைவதே தன் நோக்கம் எனத் துறவு மேற்கொள்கிறார். மீராவும் இந்த மண்ணில் பூஜிக்கத் தகுந்தவராக இருக்கிறார். இருவரும் கொண்டாடப்படுகிறார்கள்.
ஆத்திகவாதத்தை ஏற்பதைப் போலவே நாத்திகவாதத்தையும் சனாதன தர்மம் ஏற்கிறது. இறை நம்பிக்கையற்றவர்களும் ரிஷிகளாக வாழ்ந்ததை இதிகாசங்கள் சொல்கின்றன. ஜாபாலி என்ற ரிஷி சடங்குகளை, இறைவன் குறித்த கருத்துகளை மறுக்கிறார். அவரும் மரியாதையோடு நடத்தப்பட்டிருக்கிறார்.
இயற்கையின் அத்தனை வடிவங்களும் இறைவனாக வழிபடப்படுகின்றன. எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை தெய்வங்களும் சாத்தியம் எனும் நிலை சனாதன தர்மத்தில் சாத்தியமாகியிருக்கிறது. அதாவது, தனி மனித விருப்பமும் சுதந்திரமும் அடிப்படைகளாக அமையப் பெற்றுள்ளன.
“ஏகம் சத் விப்ரா பஹுதா வதன்தி’- அதாவது, உண்மை ஒன்றே; அதை அறிஞர்கள் பல பெயர்களில் அழைக்கிறார்கள் – என்கிறது ரிக் வேதம்.
இதையே நம்மாழ்வார் திருவாய்மொழியில்-
உளன் எனில் உளன் அவன் உருவம்
இவ்வுருவுகள் அலன் எனில் அலன்
என்கிறார்.
இல்லறம், துறவறம் இரண்டுமே மேன்மையானவையாகப் போற்றப்படுகின்றன. இல்லறத்துக்கு நிகரான தர்மம் இல்லை என்று திருக்குறளும் ஆணித்தரமாகச் சொல்கிறது. அதேபோல துறவறம் கொண்டவரைப் பேண வேண்டும். துறவறத்தார் எல்லா சபைகளிலும் போற்றப்பட வேண்டியவர் என்றும் கூறுகிறது.
எல்லாமும் இறைவன் கருணை என்று சரணாகதி அடைந்து விடும் எளிய பக்தி மார்க்கத்தையும் ஏற்கிறது. செய்யும் தொழிலே தெய்வம் எனும் கர்ம யோகத்தையும் வலியுறுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக உலகம் என்பது என்ன? நான் யார்? என்ற மிக நுட்பமான ஞான ஆராய்ச்சியையும் ஞான யோகம் என்று போற்றுகிறது.
“இன்றைய செயல்களால் நாளைய விதியை நீயே நிர்மாணித்துக் கொள்கிறாய்’ என்கிறார் சுவாமி விவேகானந்தர். அதாவது, உனது செயலுக்கான விளைவை நீயே அனுபவிக்கிறாய் என்பதே நம்பிக்கை. உன் செயல்கள் நன்மை பயப்பனவாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்தக் கோட்பாடு.
அன்பை போதிக்கும் அதேவேளையில் அறத்தை நிலைநிறுத்த நம்பும் நியாயத்தைக் காக்கப் போரிடவும் தயங்காதே. விருப்பு, வெறுப்பற்று அறம் காக்கச் செய்யப்படும் செயல்களின் பலாபலன்கள் செய்தவனைப் பாதிப்பதில்லை என்றும் அழுத்திச் சொல்கிறது.
சனாதனம் என்றவுடன் வர்ணம் என்ற ஒற்றைச் சொல்லால் அதனைப் புறக்கணிக்கின்றனர். ‘வர்ணம்’ என்பது பிரிவு என்று அகராதிகள் பொருள் சொல்கின்றன. நால்வகை வர்ணம் என்பது பிறப்பால் வருவது அல்ல.
ஒருவர் தன் முயற்சியால், செயலால் தன்னை எங்கே நிலைநிறுத்திக் கொள்கிறார் என்பதற்கேற்ப மாறுபட்டுக் கொண்டே இருக்கும். அஸ்வத்தாமன் தன் தீய பழக்கங்களால், செயல்களால் தாழ்ந்தவன் ஆகிறான், விசுவாமித்திரர் அரச குலத்தில் பிறந்தவர். அவர் பிராமணனாகத் தன்னை மாற்றிக் கொள்கிறார்.
வர்ணக் கலப்பில் பிறந்த எத்தனையோ பேர் மகான்களாக வணங்கப்படுகிறார்கள். வியாசரும், நீதி நூல் தந்த விதுரரும் வர்ணக் கலப்பில் பிறந்தவர்கள்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
என்கிறார் திருவள்ளுவர்.
இதையே, சாந்தோக்கிய உபநிஷதம் ‘வர்ணம் என்பது குணங்களால் ஏற்படுவதே தவிர பிறப்பால் ஏற்படுவது அல்ல’ என்று தெளிவாய் எடுத்துரைக்கிறது.
சத்திய கர்மா பற்றிய கதையில், “பூமியில் எங்கு எப்படிப் பிறந்தான் என்பதைவிட, என்ன செயலாற்றி எதை அடைய விரும்பி நீ எதுவாக நினைக்கிறாய் என்பதே முக்கியம். அதிலேயே உன் வர்ணம் அடையாளப் படுத்தப்படுகிறது’ என்கிறார் ரிஷி கெளதமர்.
திருவள்ளுவரும் ஒளவைப் பாட்டியும் எடுத்தியம்பும் வாழ்வியல் நெறிமுறைகளைத் தான் சனாதன தர்மமும் சொல்கிறது. ஆக்கச் சிந்தனை கொண்ட பார்வையோடும் புரிந்து கொள்ளும் ஆவலோடும் உற்று நோக்கினால், சனாதன தர்மம் சொல்வதும் நமது பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டுவதும் ஒரே வாழ்வியல் முறை தான் என்பதைத் தெளிவாக உணர முடியும். மிகச் சிறந்த நாகரிகத்துக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் அதனுள் அடங்கி இருப்பதைக் காண முடியும்.
- திருமதி கோதை ஜோதிலட்சுமி, ஊடகவியலாளர்.
- நன்றி: தினமணி நாளிதழில் (21.12.2019) இவர் எழுதிய கட்டுரை இது.
$$$
19. அடியேனும் ஒரு சனாதனி!
-செங்கோட்டை ஸ்ரீராம்
சனாதனன் என்பது, மஹாவிஷ்ணுவின் ஒரு திருநாமம்!
ஸனாத் ஸனாதனதம: கபில: கபிரவ்யய: | ஸ்வஸ்தித: ஸ்வஸ்திக்ருத்-ஸ்வஸ்தி: ஸ்வஸ்திபுக் ஸ்வஸ்திதக்ஷிண: || 96 ||
898 வது திருநாமம் -சநாதந தம – மிகப் பழமையானவன்.
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் பீஷ்மரிடம் யுதிஷ்டிரன் கேட்கிறான், நாங்கள் யாரை பரமாத்மாவாக எண்ணி வழிபடுவது என்று – கிம் ஏகம் தைவதம் லோகே.. எந்த ஒருவரை தெய்வமாக – கிம் வாப் ஏகம் பராயணம் – எந்த ஒன்றை பாராயணம் செய்வது?
அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மர் பதில் சொல்கிறார்… ஜகத் ப்ரபும் தேவதேவம் அனந்தம் புருஷோத்தமம் – என்று அருகில் நின்ற கண்ணனையே காட்டுகிறார்..!
இப்படித் தொடங்கும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் 96ஆவது ச்லோகத்தில் சநாதனம் என்ற பெயரும் வருகிறது. இதன் பொருளாக அறியப்படுவது – மிகப் பழைமையானவன் என்பது.
சநாதனம் என்றால்… அனாதி காலமாய் நிலவி வருவது. மனிதன் தோன்றியதில் இருந்து, எந்த தர்மத்தைக் கடைப்பிடித்து வருகிறானோ அது.. அதனால் தான் ‘என்றும் உளது’ என்று கூறினார்கள். என்றும் என்றால், எதிர்காலத்தில் என்பது மட்டுமல்ல, கடந்த காலத்தில் இருந்தது, நிகழ் காலத்தில் இருப்பது எதிர் காலத்திலும் இருக்கும் என்று பொருள்…
இதையே நம் ஆழ்வார் – நம்ம ஆழ்வார் – ‘ஆண்டு ஊழி ஊழி தோறும் அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே’ (2-5-4) என்றும், ‘ வைகல் தோறும் என் அமுதாய வானேறே’ (2-6-1) என்றும் திருவாய் மொழிந்தார்.
மிகத் தொன்மையானவராயினும் அப்போது தான் புதிதாகக் கிடைத்தவர் போல் அனுபவிக்கத் தக்கவர் என்று இந்த சநாதன – நாமத்துக்கு விளக்கம் தந்தார் ஸ்ரீ பராசர பட்டர்.
எல்லோருக்கும் காரணம். ஆகையால் பிரமன் முதலியோருக்கும் பழைமையாக இருப்பவர் என்றார் ஸ்ரீ ஆதி சங்கரர் தமது விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யத்தில்.
சர்வம் விஷ்ணு மயம் ஜகத் – உலகம் விஷ்ணுமயமானது. விஷ்ணு – நீக்கமற நிறைந்திருப்பவன்…
சஹஸ்ரநாமத்தில் வருவது.. அனாதி னிதனம் விஷ்ணும் ஸர்வலோக மஹேஸ்வரம்| என்பது.
அனாதி நிதனம் – அன ஆதி நிதன: தொடக்கமோ முடிவோ இல்லாதது… சனாதன – என்றும் உளது…
ஸ்ரீமத் பாகவதம் ச்லோகம் – 1.8.28
மன்யே த்வாம் காலம் ஈசானம் அனாதி-நிதனம் விபும் | ஸமம் சரந்தம் ஸர்வத்ர பூதானாம் யன் மித: கலி: ||
பொருள்:
மன்யே—நான் கருதுகிறேன்;
த்வாம்—பகவானாகிய தாங்கள்;
காலம்—நித்தியமான காலம்;
ஈசானம்—பரம புருஷர்;
அனாதி-நிதனம்—துவக்கமோ, முடிவோ இல்லாதவர்;
விபும்—எங்கும் பரவியிருப்பவர்;
ஸமம்—சமமான கருணை கொண்டவர்;
சரந்தம்—விநியோகிப்பதில்;
ஸர்வத்ர—எல்லா இடங்களிலும்;
பூதானாம்—ஜீவராசிகளின்;
யத் மித:—சம்பந்தத்தினால்;
கலி:—சண்டை சச்சரவுகள்.
“எம்பெருமானே, தங்களை நான் நித்திய காலமாகவும், பரம ஆளுநராகவும், துவக்கமோ முடிவோ, இல்லாதவராகவும், எங்கும் பரவியிருப்பவராகவும் கருதுகிறேன். உங்களுடைய கருணையை விநியோகிப்பதில் நீங்கள் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்கிறீர்கள். ஜீவராசிகளுக்கு இடையிலுள்ள சண்டை சச்சரவுகளுக்கு சமூகத் தொடர்புகளே காரணம்.”
புருஷ சூக்தம், உலகத்தின் உற்பத்தி, காரணம், இயக்குபவன், என அனைத்தும் போதிக்கிறது. அவனை யார் எப்படிக் கண்டு கொள்கிறார்கள் என்றும் சொல்கிறது. அதுவே சனாதனம். இதை மதம் என்று நாம் சொல்வதில்லை. தர்மம் என்கிறோம். சநாதன தர்மம் – நம் தர்மம்; நம் பாரதிய தர்மம். இதை யார் யார் எப்படிக் கடைப்பிடிக்கிறார்களோ அப்படியப்படி இது வடிவம் பெறும்.
- திரு. செங்கோட்டை ஸ்ரீராம், பத்திரிகையாளர்; ‘தினசரி’ மின்னிதழின் ஆசிரியர்.
- இது இவரது முகநூல் பதிவு.
$$$
20. எதிரி வெளியில் இல்லை!
-பி.ஆர்.மகாதேவன்
சனாதன தர்மம் – ஆதி அந்தம் காண முடியாத தர்மம். இது யாராலும் தோற்றுவிக்கப்படவில்லை; யாராலும் அழிக்கப்படவும் முடியாதது.
மனிதர்களின் அடிப்படை இயல்புகளான சுயநலம், குழு மனப்பான்மை, புலன் இன்ப விழைவு, காதல், காமம், வீரம், வன்முறை ஆகியவற்றை தனி நபர் அளவிலும் சமூக அளவிலும் நெறிப்படுத்தும் தர்மம்.
சனாதன தர்மத்துக்குப் பின்னால் தோன்றிய பல கலாசாரங்கள் அழிந்துவிட்ட நிலையிலும், இன்றும் நீடித்து, இனியும் நீடித்து இருக்கப்போகும் தர்மம்.
அது மனித இயல்புக்கு ஏற்ப சமூகத்தை நான்கு வர்ணங்களாக வகைப்படுத்தியது. மனித வாழ்க்கையை நான்கு ஆஸ்ரமங்களாக வகுத்தது.
வர்ணங்களுக்கும் ஆஸ்ரமங்களுக்கும் விதிமுறைகளை வகுத்தது.
நால் வர்ண அமைப்பே ஜாதிகளுக்கு அடிப்படை என்றும் சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு அந்த வர்ணாஸ்ரமத்தை முன்வைத்த சனாதன தர்மமே காரணம் என்று சொல்லப்படுகிறது.
பிராமணர் (3 %), க்ஷத்ரியர் (10 %), வைஸ்யர் (10 %) ஆகிய மூவர்ணத்தினரின் கடந்த காலம் யாரையும் குறை சொல்ல வாய்ப்பு இல்லாதது. இவர்கள் இந்து சமூகத்தில் சுமார் 23 % மக்கள் ஆதிக்க நிலையில் இருந்தவர்கள்; அதாவது ஆதிக்க ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்.
நாலாம் வர்ணத்தினர் (77 %). இவர்களே ஒடுக்கப்பட்டவர்களாகச் சொல்லப்படுகிறது.
இவர்களில் நில உடமையாளர்களாகவும் (25 %) தொழில் வல்லுநர்களாகவும் (25 %) சுமார் 50 % பேர் கெளரவமான வாழ்க்கையை வாழ்ந்தவர்களே. இவர்களை இடைநிலை ஜாதியினர் என்று சொல்லலாம்.
நாலாம் வர்ணத்தினரில் பசு மாமிசம் சாப்பிட்டு, நில உடமை இல்லாத 17 % பேர் கடைநிலை ஜாதிகளாக இருந்திருக்கிறார்கள். இன்றைய வார்த்தையில் பட்டியல் இனத்தினர் என்று இவர்களைச் சொல்லலாம். நில உடமை இல்லாததால் பசு மாமிசம் (குறைவான அளவில்) சாப்பிட்டார்களா… கலக உணர்வுடன் பசு மாமிசம் சாப்பிட்டதால் நில உடமை கிடைக்கவில்லையா என்பது வேறு விஷயம். நில உடமை சமுதாயத்துக்கு அச்சாணியான பசுவைப் போற்றாததால் அந்த சமுதாயத்தின் கடைநிலையில் இவர்கள் இருக்க நேர்ந்தது.
மலைவாசிகள், கானகவாசிகள், கடல் வாசிகள் ஆகியோர் (10 %) இந்த வயலும் வயல் சார்ந்த, குலத் தொழில் பின்பற்றப்பட்ட, மன்னராட்சி வாழ்க்கையில் இருந்து முற்றிலும் விலகி இருந்தவர்கள். அவர்களுக்குள்ளும் குலத்தொழில் மரபு, மன்னராட்சி, விவசாயம் எல்லாம் உண்டு. என்றாலும் இவர்கள் சமதள அரசுகளில் இருந்து விலகி இருந்தவர்கள்.
ஆக இந்து சமூகத்தில் சுமார் 23 % உயர் ஜாதியினர்.
50 % இடைநிலை ஜாதியினர்.
17 % கடைநிலை ஜாதியினர்.
10 % சமதள நில உடமை சமுதாய அமைப்புக்கு வெளியில் இருப்பவர்கள்.
தமிழகத்தில் உருவான திராவிட இயக்கம் 3 % பிராமணர்களை ஆதிக்க ஜாதியாகவும், பிராமணரல்லாத 97 % பேரை ஒடுக்கப்பட்டவர்களாகவும் சொல்லி உருவான இயக்கம்.
அதாவது 10 % க்ஷத்ரியர்கள், 10 % வைசியர்கள், 50 % இடைநிலை ஜாதியினர் இவர்கள் அனைவருமே ஒடுக்கப்பட்டவர்கள் என்று ஒரு பச்சைப் பொய்யை அடிப்படையாக வைத்து ஆரம்பித்த இயக்கம்.
இது எப்படி என்றால், ஒரு மன்னர் தானும் அடிமை என்று சொல்லிக் கொண்டு ரேஷன் கடையில் நிற்பதைப் போன்றது. ஒரு செல்வந்தர் தானும் ஏழை என்று தட்டேந்தி பிச்சை எடுப்பதைப் போன்றது. ஒரு நில உடமையாளரும் தொழில் வல்லுநரும், தாங்களும் கூலிக்காரர்கள் என்று துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ‘கும்பிடறேன் சாமியோய்’ என்று குனிந்து நிற்பதைப் போன்றது.
சனாதன தர்மம் உண்மையில் இந்த 3+20+50 சதவிகிதத்தினருடைய பங்களிப்பையும் ஆதரவையும் அங்கீகாரத்தையும் பெற்று உருவாகி நிலை பெற்ற வாழ்க்கை முறை. தான் ஆதிக்கம் செலுத்திய எஞ்சிய 17 % பேருக்கும் நல்வாழ்க்கைக்கு வழிவகுத்துத் தந்த தர்மம். சமதள நில உடமைச் சமுதாயத்தைச் சேராத 10 % பேருக்கும் முழு சுதந்தரமும் உரிமையும் தந்து வாழ வழிவகுத்த தர்மம்.
அம்பேத்கர் நில உடமைச் சமுதாயத்தின் ஆதிக்க ஜாதி (23 %) மற்றும் இடைநிலை ஜாதி (50 %) என 73 % பேரை ‘ஜாதி இந்துக்கள்’ என்று சொல்லி 17 % பேரை பட்டியலினத்தினரின் எதிரியாக அவர்களைக் கட்டமைத்து ஒரு அரசியலை முன்வைத்தார்.
அதாவது 67 % நாலாம் வர்ணத்தினரை 50 % சூத்திரர்கள் + 17 % பட்டியலினத்தினர் என்று பிரித்துக் கொண்டார்.
ஈ.வெ.ரா இன்னொரு படி மேலே போய் 3 % பிராமணர்களை ஒரு பிரிவாகவும் எஞ்சிய 97 % பேரை பிராமணரல்லாதவர் (சூத்திரர்கள்) என்று புதிய அடையாளத்தைக் கொடுத்து வெறுப்பு இயக்கத்தை ஆரம்பித்தார்.
3 % பிராமணர்களால் 97 % பேர் ஒடுக்கப்பட்டார்கள் என்ற அரசியல் கற்பனைக் கோட்பாடு இத்தனை காலமும் செல்லுபடியாக ஒரே காரணம், ஒட்டுமொத்த இந்து சமூகமும் துரதிஷ்டவசமாக அதை எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொண்டு விட்டதுதான்.
இதில் கூடுதல் வேதனையான ஒரு விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் உருவான பிராமண வெறுப்பு முழுவதையும் அனுபவிக்க நேர்ந்தது கோயில் குடிகளே. பிராமணர்களில் பலர் நவீன மோஸ்தருக்கு மாறிக் கொண்டுவிட்டனர். ஈ.வெ.ரா. இயக்கம் எய்த அராஜக அம்புகள் முழுவதும் கவசம் கூட இல்லாத இந்த அப்பாவிகளையே தைத்துவிட்டிருக்கின்றன. பிற பிராமணர்கள் இவர்களைக் கூடுதல் அக்கறையுடன் பாதுகாத்திருக்க வேண்டும்.
பாரதியார், வைத்தியநாத ஐயர், ராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற அத்தனை பேரும் கிறிஸ்தவ நீதிக்கட்சி சொன்னதையெல்லாம் உண்மை என்றே நம்பினார்கள்.
அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சமூகத்தில் எந்தத் துறையைச் சேர்ந்த பிரபலமாக இருந்தாலும் இந்த திராவிடக் கருத்தியலைப் பெருமளவுக்கு ஏற்றுக் கொண்டவர்களே.
அதற்கு ஒரு முக்கிய காரணம், பிரிட்டிஷார் தமது ஆட்சியில், திறமையின் அடிப்படையில் தந்த வேலை வாய்ப்பில் சுமார் 60-70 % ஐ பிராமணர்களே பெற்றுவிட்டிருந்தனர் (ஓரளவுக்கு இலங்கையில் தமிழர்களைப் போல் என்று சொல்லலாம்).
இந்தக் காலகட்டத்திலும் அரசு வேலை அல்லாத நில உடமை, தொழில் உடமை ஆகியவற்றில் பிற வைஸ்ய, இடைநிலை ஜாதியினரே உச்சத்தில் இருந்தபோதிலும், அரசு வேலையில் குறைவாக இருக்கிறோம் என்ற அரை உண்மையை முன்வைத்து ஓர் இயக்கத்தைக் கட்டி எழுப்புவிட்டனர்.
அதாவது அரசு வேலையில் ஐம்பது ரூபாய் சம்பளம் வாங்கும் பிராமணரைவிட ஐநூறு ஏக்கர் இருக்கும் நில உடமை இடைநிலை ஜாதிப் பண்ணையார்கள் ஒடுக்கப்பட்டதாகச் சொல்லிக் கொண்டு, அதை அனைவரையும் நம்பவும் வைத்துவிட்டார்கள்.
‘நாங்கள் தலித்துகள் அல்ல’ என்று சூடு சொரணையுடன் குரல் கொடுக்கும் தேவேந்திர குலத்தினரைப் போல் இந்த 70 சதவிகிதத்தினரும் ‘நாங்கள் ஒடுக்கப்பட்டவர்கள் அல்ல’ என்று அப்போது நெஞ்சை நிமிர்த்திச் சொல்லியிருக்க வேண்டும்.
எல்லா ஜாதியினருமே மன்னர் பரம்பரை என்று சொல்லிக் கொள்வதுண்டு. ஆனால், நாங்கள் பிராமணரால் ஒடுக்கப்பட்டவர்கள் அல்ல; பிராமணர்கள் எங்களை(யும்) ஒடுக்கவில்லை என்றும் உரத்த குரலில் சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் திராவிட இயக்கம் வெற்றி பெற்றிருக்கவே முடியாது.
ஒரு சமூகம் ஆட்டு மந்தைபோல கசாப்புக்கடைக்காரனின் முன்னால் சென்று கழுத்தைக் காட்டிக் கொண்டு நின்றால் அவன் வெட்டத்தான் செய்வான். அவனைக் குறை சொல்லி என்ன பிரயோஜனம்?
பிரிட்டிஷாரின் வருகைக்கு முன் அனைத்து ஜாதியினரும் கல்வி பெற்றிருக்கிறார்கள். நாலாம் வர்ணத்தினரே அதில் அதிகம். அதோடு பிரிட்டிஷார் காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த சமஸ்தான மன்னர்கள், ஜமீந்தார்களில் 72% பேர் இன்று சூத்திரர் என்று வகைப்படுத்தப் பட்டிருப்பவர்கள்தான்.
இந்த உண்மைகளை இன்று எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் கேட்க யாரும் தயாராக இல்லை. பிரிட்டிஷார் எழுதிய ஆவணங்களின் அடிப்படையில்தான் இது சொல்லப்படுகிறது என்றாலும் நம்பத் தயாராக இல்லை.
இப்போதும் ஈ.வெ.ரா.வின் அடிச்சுவடில்தான் எல்லாரும் அணிவகுத்து நிற்கும் நிலையில் சனாதன தர்மம் பற்றி விதவிதமான விளக்கங்கள் கொடுப்பதைத் தாண்டி நாம் எதுவும் செய்யப்போவதில்லை.
அந்நிய மதத்தினர் சொன்ன அளவுக்கு ஜாதி இந்துக்கள் கெட்டவர்கள் அல்ல என்பது தலித்தியர்களுக்குப் புரிய வேண்டும்.
அதே அந்நிய மதத்தினர் சொன்ன அளவுக்கு பிராமணர்கள் மோசமானவர்கள் அல்ல என்பது பிராமணரல்லாதவர்களுக்குப் புரிய வேண்டும்.
உலக சமூக அமைப்புகளை ஒப்பிடும்போதும் நம் ஜாதி அமைப்பு அவ்வளவு மோசமானது இல்லை என்ற புரிதல் நம் அனைவருக்கும் வர வேண்டும்.
அது வராதவரையில் சனாதனத்துக்கு எதிரி வெளியில் இல்லை.
- திரு. பி.ஆர்.மகாதேவன், மொழிபெயர்ப்பாளர்; எழுத்தாளர்.
- இது இவரது முகநூல் பதிவு.
(தொடர்ந்து ஒலிக்கும் தார்மிகக் குரல்கள்!)
$$$