-எல்.முருகன், வ.மு.முரளி, காம்கேர் கே.புவனேஸ்வரி, தர்மபூபதி ஆறுமுகம், ராமகிருஷ்ணன் சிவசங்கரன்
அண்மையில் பாரத மண்ணின் வேரான சனாதன தர்மம் தமிழகத்தில் சில தற்குறிகளால் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு, இழிவு செய்யப்பட்டதை எதிர்த்து நாடே கொந்தளித்திருக்கிறது. இத்தருணத்தில் சனாதனம் என்னும் வாழையடி வாழையின் சிறப்புகளைப் பதிவு செய்வது நமது கடமை; சனாதனம் குறித்த தார்மிக குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன... இது பகுதி-4...

12. சமூகநீதியின் ‘கேன்சர்’ தி.மு.க!
-எல்.முருகன்
‘திட்டங்கள் ஏதுமில்லா ஊதாரிகள்’ என்று, திமுகவினரை அன்று பெரியார் ஈ.வெ.ராமசாமி சொன்னதை இன்று ஊர்ஜிதப்படுத்தி வருகிறார்கள் அவரது வாரிசுகள்.
மத்திய அரசு எத்தனையோ மக்கள் நலத் திட்டங்கள் வழங்கியுள்ள போதும் அதை சரியாக எடுத்துச் செல்லாமல், தனது ஆட்சியின் மீதிருக்கும் அதிருப்தியை மடைமாற்ற எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல, இந்து மக்களின் நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் ‘சனாதனத்தை’ கையில் எடுத்திருக்கிறது தி.மு.க.
தாத்தா, மகன், பேரன் என்று இன்றளவும் அரசியலில், குடும்ப ஆதிக்கத்தை செலுத்தும் இவர்கள்தான் சனாதனத்தின் எதிரிகள்.
அண்ணாதுரை உருவாக்கிய கட்சியை, எத்தனையோ சிறந்த தலைவர்கள் இருந்தும் அவர்களுக்கு வழிவிடாமல் ஒரே குடும்பம் அபகரித்திருப்பதும், சனாதனத்துக்கு எதிரானது. இன்னும் சொல்லப் போனால் திராவிடம் என்கிற வார்த்தையை வழங்கியதே சனாதனம் தான்.
சனாதனம் என்றால் இந்துமதம், தர்மம் என்று பொருள்படுகிறது. சனாதன ஒழிப்பு மாநாடு என்றால் இந்துமத ஒழிப்பு மாநாடு என்றுதான் பொருள்.
அப்படி இருக்க, கிறிஸ்தவ மத ஒழிப்பு மாநாடு அல்லது இஸ்லாம் மத ஒழிப்பு மாநாடு என ஒரு மாநாட்டை உதயநிதியோ அல்லது போலி மார்க்சிஸ்ட் கட்சியால் கற்பனையில் கூட நடத்த இயலுமா?
உதயநிதியின் பேச்சு இந்து மதத்தின் மீதான வன்மம் நிறைந்த தாக்குதல் என்பதற்கு சாட்சி, நாடே கொதித்திருப்பது தான்.
ஏதோ சினிமாவில் பேசும் வசனம் போல, தனது அரசியல் அறியாமையால் மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு மாற்று மதத்தினரின் வாக்குகளைப் பெற, சமூகத்தின் அமைதியைக் கெடுத்து சாதி, மத வேற்றுமைகளை உண்டாக்கியுள்ள உதயநிதியின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதனால் தான், தீவிர பாஜக எதிர்ப்பாளர்களான மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் ஆகியோர் கூட உதயநிதியின் பேச்சைக் கண்டித்து ‘அரசியலில் பொடிப்பையன்’ என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
கீழ்வெண்மணி ஆரம்பித்து நாங்குநேரி வரை நாறிக் கொண்டிருக்கிறது திராவிட மாடலின் சனாதன ஒழிப்பு. நூற்றாண்டை நெருங்கும் திமுக-வில் ஏன் இதுவரை ஒரு பெண் தலைவர், தலித் தலைவர் கூட தலைமை வகிக்கவில்லை? ஆணாதிக்கத்தின் ஆணிவேராக ஊடுருவி இருக்கும் திமுக சனாதனம் குறித்து பேசுவது நகைச்சுவையாக இல்லையா?
மாவட்டச் செயலாளர்கள் முதல் மாநில அமைச்சர்கள் வரை பொறுப்பு வகிக்க திமுக-வில் தலித்துகளுக்கு என்ன பஞ்சமா? இல்லையே!
சாதிய ஆதிக்கத்தின் மொத்த உருவமாக நிமிர்ந்து நிற்கிறதே திமுக! இவர்கள் தான் நமக்கு சமூக நீதி குறித்து வகுப்பெடுக்கிறார்கள்!
வெறும் ஏட்டளவிலும், சொல்லளவிலும் சனாதன ஒழிப்பு, சமூக நீதி என்று மூச்சுக்கு முன்னூறு முறை வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கும் தி.மு.க., சமூகநீதியின் கேன்சராக இருந்துகொண்டு மக்கள் நலனைக் கெடுத்து, சுய அரசியல் ஆதாயத்தைத் தேடுகிறது. தொடர்ந்து, மதத்தை வைத்து அரசியல் நாடகமாடி, ஒன்றாக இருக்கும் மக்களைப் பிளவுபடுத்துகிறது; குளிர்காய்கிறது!
இனியும் திமுகவின் போலி அரசியல் முகமூடியை நம்ப நாட்டு மக்கள் தயாராக இல்லை. இதற்கெல்லாம் தக்க பதிலடி கொடுக்க ஆயத்தமாகவே இருக்கிறார்கள் மக்கள்.
.
- திரு. எல்.முருகன், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, மீன்வளத் துறை, பால்வளத் துறை அமைச்சர்.
$$$
13. ஆப்பசைத்த குரங்கு
-வ.மு.முரளி
‘கவர் பிளந்த மரத்துளையில் கால் வைத்துக் கொண்டு ஆப்பசைத்த குரங்கதனைப் போல’ அகப்பட்டுக்கொண்டு தத்தளிக்கிறார் திமுகவின் இளவரசர் திரு. உதயநிதி ஸ்டாலின். கூடியிருந்த முட்டாள்களின் கரவொலியைப் பெறுவதற்காக, ‘சனாதனத்தை ஒழிப்போம்’ என்று உளறிவிட்டு, இப்போது, “நான் இந்து மதத்தை ஒழிப்பதாகச் சொல்லவில்லை” என்று பம்முகிறார்.
சனாதனம் என்றால் அவரது பார்வையில் இந்து மதத்தின் பிற்போக்குக் கருத்துகள். அதாவது பிராமணர்களை உயர்த்தி மற்றவர்களைத் தாழ்த்தும் வர்ணாசிரம தர்மம். ஆனால், நாடு உழுவதும் சனாதனம் என்றால் எவ்வாறு கருதுகிறார்கள் என்ற சிந்தனை கொஞ்சமேனும் வேண்டாமா? சனாதனம் என்றால் உண்மையில் என்ன என்று கூறவோ, அதன் திரிபுகளை உதயநிதிக்கு விளக்கிச் சொல்லவோ திமுகவில் பகுத்தறிவுள்ள ஒரு அறிவாளி கூடவா இல்லை?
உதயநிதியின் பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் கிளம்பியவுடன், மரப்பிளவில் வால் சிக்கிக்கொண்ட குரங்கு போல கதறிக் கொண்டிருக்கின்றனர் திமுக ஆதரவாளர்கள். திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணித் தலைவர்களே உதயநிதியின் பேச்சை ரசிக்கவில்லை. அவர்களுக்குத் தெரியும், இதன் பின்விளைவுகள் தேசிய அளவில் என்னவாகும் என்று. ஆனால், தமிழகத்தில் உள்ள முட்டாள்கள், இன்னமும் உதயநிதி தவறாக ஒன்றும் பேசிவிடவில்லை என்று சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். விநாசகாலே விபரீத புத்தி!
கலைஞர் என்ற அடைமொழியும் மு.கருணாநிதியும் ஒன்று தான் என்பது திமுகவின் உடன்பிறப்புகள் அனைவருக்கும் தெரியும். இது வட மாநிலங்களில் உள்ளவர்களுக்குத் தெரியாது. அதுபோல, சனாதனம் என்பதும் ஹிந்து மதம் என்பதும் ஒரே பொருளைக் குறிக்கும் இரு சொற்கள் என்பது திமுகவினருக்குத் தெரியாது. இப்போது தெரிந்துவிட்டதல்லவா? எனவே கம்யூனிஸ்ட்களின் மேடையில் ஏறி அறியாமல் பேசிய பேச்சின் அனர்த்தத்தை உணர வேண்டும்; அதற்காக உதயநிதி தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
தவறை உணர்பவனே மனிதன். அப்போது தான் அதைத் திருத்திக் கொள்ளவும், அனுபவ பாடம் மூலம் முன்னேறவும் முடியும்.
இந்த சர்ச்சையின் உச்சமாக, தில்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி திங்கரா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கோபால்கிருஷ்ணா, மூத்த எழுத்தாளர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், சினிமா கலைஞர்கள், பாடகர்கள் என்று 262 பிரபலங்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடந்த செப். 6ஆம் தேதி எழுதியுள்ளனர். இவர்களில் 14 பேர் நீதிபதிகள், 130 பேர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் (20 பேர் தூதர்களாக இருந்தவர்கள்), 118 பேர் பாதுகாப்புப் படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.
“தமிழக அமைச்சர் உதயநிதி பேசிய பேச்சு சம்பந்தமாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கருத்துகள் மறுக்க முடியாத வகையில் இந்தியாவின் ஒரு பெரிய மக்கள்தொகைக்கு எதிரான வெறுப்புப் பேச்சாக உள்ளது. பாரதத்தை ஒரு மதச்சார்பற்ற தேசமாகக் கருதும் இந்திய அரசியலமைப்பை இந்த வெறுப்புப் பேச்சு தாக்குகிறது….
“வெறுப்புப் பேச்சால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது அரசு, போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யலாம். மாநில அரசு உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. அதோடு தமிழகத்தை ஆட்சி செய்வோர் அவரது பேச்சை நியாயப்படுத்தி வருகின்றனர். எனவே உச்சநீதிமன்றமே தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து இதனை விசாரிக்க வேண்டும்”
-என்று அவர்கள் இக்கடிதத்தில் கோரியுள்ளனர். இதன்மீது தலைமை நீதிபதி எடுக்கப்போகும் முடிவை நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது!
இதுபோன்ற சூழல்கள் இதற்கு முன்னர் ஏற்பட்டதில்லை. இதுகாலம் வரை, அறிவுஜீவிகள், முற்போக்குவாதிகள் என்ற பெயரில் கம்யூனிஸ்ட்களால் தூண்டப்பட்ட சிலர் தான் பாஜக உள்ளிட்ட வலதுசாரிகளுக்கு எதிராக, இவ்வாறு ஒன்றாகத் திரண்டு தலைமை நீதிபதியிடம் மனு அளிப்பது வழக்கமாக இருந்து வந்தது. இப்போது தேசத்தின் மனநிலை மாற்றம் காரணமாக, இந்தக் காட்சியும் மாறி இருக்கிறது.
இதற்குப் பின்னரும் உதயநிதி, “ஆமாம் நான் பேசியது சரிதான். பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை” என்று பேசிக்கொண்டிருக்கிறார். இவர் பேசவில்லை, இவரது ‘ஜீன்’ பேசுகிறது.
இவரது பாட்டனார் திரு. மு.கருணாநிதி பேசாத பேச்சா? “தில்லை நடராஜரையும் சீரங்கநாதரையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ?” என்று மேடையில் பேசியவர் கருணாநிதி. ”ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்டம் ஏனுனக்கு தியாராசா?” என்று மேடையில் பாடியவர் அவர்.
”இந்து என்றால் திருடன் என்று பொருள்” என்று சொல்லிவிட்டு, அவ்வாறு வெளிநாட்டினர் யாரோ எழுதிய அகராதியில் இருப்பதாக அழிச்சாட்டியம் செய்தவரும் அவர்தான். தனது கட்சி எம்எல்ஏ ஒருவர் (கள்ளக்குறிச்சி ஆதிசங்கர்) நெற்றியில் வைத்திருந்த குங்குமத் திலகத்தைப் பார்த்து நெற்றியில் என்ன ரத்தம் வழிகிறதா என்று கேலி பேசியவரும் அவரே. ‘இந்துமதம் என்று ஒன்றே கிடையாது; இலங்கைக்கு பாலம் கட்டியதாக கூறப்படும் ராமன் எந்த என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தான்?” என்றெல்லாம் பகடி செய்தவரும் தான் அவர்.
ஆனால் அந்தக் காலம் வேறு. இன்று போலவே அன்றும் ஊடகங்களில் பெரும்பாலானவை திராவிட அடிவருடிகளாக இருந்தன. மக்களின் எதிர்ப்பு அப்போது பெரும் வினையாற்றவில்லை. ஆனால் இன்று அப்படியல்ல. உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்குப் பதிலடியாக சன் டிவியைப் புறக்கணிப்போம் என்ற பிரசாரம் சமூக ஊடகங்களில் அதி தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. பல மாநிலங்களில் சன் டிடிஹெச் தட்டுகளை உடைக்கும் காட்சிகளும் பதிவாகி இருக்கின்றன. இது உண்மையான ஜனநாயகம் மிகுந்த சமூக ஊடகங்களின் காலம்.
இன்றைய இளைஞர்கள், தொழில்நுட்பத்தின் உதவியுடன் திமுகவின் முகத்திரைகளைக் கிழித்து தோரணமாகத் தொங்க விடுகிறார்கள். எனவே முன்பு போல எதையாவது உளறிவிட்டு, ‘அப்படி நான் சொல்லவில்லை; நான் சொன்னதன் அர்த்தம் வேறு’ என்றெல்லாம் ஜகா வாங்க முடியாது. கிறிஸ்தவர்களின் விழாவில் பங்கேற்று “எனது மனைவி கிறிஸ்தவர். எனவே நானும் கிறிஸ்தவர்” என்று உதயநிதி அளித்த வாக்குமூலம் இணையத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த பகிரங்க ஊடக உலகில் எதையும் மறைக்கவோ, மறக்கச் செய்யவோ முடியாது.
இத்தனைக்குப் பிறகும், உதயநிதிக்கு வக்காலத்து வாங்குகிறார் அவரது தந்தையும் மாநில முதல்வருமான திரு. மு.க.ஸ்டாலின். தான் மாநில மக்கள் அனைவருக்குமான முதல்வர் என்பதை அவர் உணர்ந்திருக்கிறாரா என்றே தெரியவில்லை.
தமிழகத்தில் சுமார் 25 சதவிகிதம் வாழும் கிறிஸ்தவர்கள், கிறிப்டோ கிறிஸ்தவர்கள் (அரசு சலுகைக்காக ஹிந்துப் பெயரில் ஒளிந்திருக்கும் கிறிஸ்தவர்கள்), இஸ்லாமியர்கள் ஆகிய சிறுபான்மையினரின் ஆதரவு மட்டும் இருந்தால் போதும் தேர்தலில் வென்று விடலாம் என்ற தெளிவான அரசியல் கணக்குடன் தான் மு.க.ஸ்டாலின் இயங்கி வருகிறார். இந்த மைனாரிட்டி 25 சதவிகிதத்துடன் கட்சி சார்பு ஓட்டுகள், ஜாதிரீதியாகப் பிளவுபடும் ஓட்டுகள், பாஜக எதிர்ப்பு ஓட்டுகள், கூட்டணி வலுவால் கிடைக்கும் ஓட்டுகளின் கூடுதல் துணை கொண்டு எளிதாக வென்று விடலாம் என்ற கணக்கின் அடிப்படையில் தான், திமுக முரண்டு பிடிக்கிறது. உதயநிதியின் இந்த அநாகரிகப் பேச்சை ஆதரித்தும், சனாதனத்தைக் கேவலப்படுத்தியும் சமூக ஊடகங்களில் எழுதுவோரில் பெரும்பகுதியினர் மைனாரிட்டி சமுதாயத்தினராக இருப்பதைக் காணும்போது, திமுகவின் தேர்தல் கணக்கு புரிகிறது.
ஆனால், காலம் மாறிவிட்டது என்பதை திரு. ஸ்டாலின் இன்னமும் உணரவில்லை. அவரது கால்களுக்குக் கீழே திராவிட நிலம் நழுவிக் கொண்டிருக்கிறது. அவரது தலைக்கு மேலே, அவரும் அவரது குடும்பத்தினரும் செய்த பாவங்களின் சுமை கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது.
’இந்தியா’ கூட்டணியின் அடுத்த கூட்டம் பிற மாநிலங்களில் நடக்கும்போது அதில் கலந்துகொள்ள மு.க.ஸ்டாலின் செல்கையில் இந்த வேறுபாட்டை உணர்வார். ”உதயநிதியின் சனாதன ஒழிப்புப் பேச்சுக்கு எதிராக பாஜக அமைச்சர்கள் தீவிரமாக பதிலடி கொடுக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி வேறு தனியே உத்தரவிட்டிருக்கிறார். இதில் இருந்தே இந்த சர்ச்சையின் அரசியல் தீவிரம் புலப்படுகிறது. உதயநிதி மீது நாடு முழுவதும் பல இடங்களில் வழக்குகள் பதிவாவது தனிக் கதை.
இதே தமிழகத்தின் சேலத்தில் 1968இல் ஸ்ரீராமர் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்தினர் தி.க. குண்டர்கள். விநாயகர் சிலைகளை நடு ரோட்டில் உடைத்து, அரசு ஆதரவுடன் தங்கள் பகுத்தறிவை அவர்கள் வெளிப்படுத்தி மார்தட்டியபோது பக்திமான்களான ஹிந்துக்கள் செய்வதறியாது மனம் புழுங்கினர்.
ராமாயணத்துக்கு எதிராக ’கீமாயணம்’ எழுதிப் படித்து மகிந்தார்கள் சில கிறுக்கர்கள். திமுக நிறுவனரான சி.என்.அண்ணாதுரையே, ‘கம்பரசம்’ என்ற பெயரில் ஆபாச நூல் எழுதினார். இவர்களது குலகுருவான (பெரியார் என்று திராவிட பக்தர்களால் அழைக்கப்படும்) திரு. ஈ.வெ.ராமசாமி நாயக்கர், வாழ்நாள் முழுவதும் ஹிந்து மதத்தையும் இந்திய நாட்டையும் பிராமணர்களையும் துவேஷித்தே வாழ்ந்து மறைந்தார்.
அவரது அடியொற்றி, ராமாயணத்துக்கு மாற்றாக புலவர் குழந்தை என்ற பிராமண வெறுப்பாளர் எழுதிய ‘ராவண காவியம்’ நூலை பள்ளிப் பாடமாக ஆக்கி மகிழ்ந்தார்கள் திமுகவினர்.
“ஆபாசத்தில் சிறந்தது மகாபாரதமா, ராமாயணமா?” என்று திகவினர் திமுக அரசின் ஒத்துழைப்புடன் 1989-90களில் தமிழகம் முழுவதும் பட்டிமன்றம் நடத்தினர்.
ஆவணி அவிட்ட நன்னாளில் பன்றிக்குப் பூணூல் அணிவிப்பது, தெருவில் செல்லும் பிராமணர்களின் குடுமியை அறுப்பது, பூணூலை அறுப்பது என்று, கடவுள் மறுப்பாளர்கள் என்ற பெயரில் தி.க. குண்டர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சமா, நஞ்சமா? இவை அனைத்தும், இந்தியா கூட்டணியில் இருக்கும் திமுகவின் கூட்டாளிகளுக்குத் தெரியப்படுத்தப்படுத்தப்பட்டாலே போதும், திமுகவின் தேசிய அரசியல் அபிலாஷைகள் முடங்கிப்போகும்.
ஆனால், நிலைமையின் தீவிரத்தை உணராமல், இன்னமும் இனவெறுப்பு அடிப்படையில் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும், உதயநிதியின் தவறை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் திமுகவினரைக் காண்கையில், பரிதாபமாக இருக்கிறது. ஆப்பசைத்த குரங்குகளால் வேறென்ன செய்ய முடியும்?
இத்தனை பிரச்னைக்கும் காரணமான, சனாதன ஒழிப்பு மாநாட்டை நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை, இலக்கியப் பிரிவாகிய தமுகஎச அமைப்பினர், ஓரக்கண்களால் நடப்பது அனைத்தையும் வேடிக்கை பார்க்கின்றனர். அவர்களுக்கென்ன, அடி வாங்குவது திமுகவின் இளவரசர் தானே?
வர்க்கபேதத்தின் அடிப்படையில், சமூகப் பொருளாதாரப் பார்வையுடன் அரசியல் நடத்த வேண்டிய இடதுசாரிகளின் வீழ்ச்சி, திமுகவின் வீழ்ச்சியை விட மோசமானது. பிராமணர்களிலும் அடுத்த வேளை சோற்றுக்கு ஏங்கும் பரம ஏழைகள் உண்டு; தலித்துகளிலும் செல்வந்தர்கள் உண்டு என்ற சிந்தனை இருந்திருந்தால், கம்யூனிஸ்ட்கள் தடம் புரண்டிருக்க மாட்டார்கள்.
இதே தமிழகத்தில் திராவிட இயக்கத்தினரின் இனவெறுப்பு அரசியலுக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த திரு. பி.ராமமூர்த்தி மேடைதோறும் முழங்கினார். அவரது ‘ஆரிய மாயையா, திராவிட மாயையா? (விடுதலைப் போரில் திராவிட இயக்கம்)’ நூல் அக்காலத்தில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திய நூல்.
அதேபோல, திராவிட இயக்கத்தினர் கம்ப ராமாயணத்தையும் மக்களின் பக்தியையும் கேவலப்படுத்தியது கண்டு பொறுக்க முடியாமல், ஊர் ஊராகச் சென்று கம்பன் கழக மேடைகளில் முழங்கினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவரான திரு. ப.ஜீவானந்தம். திராவிட இயக்கத்தினரால் மறைக்கப்பட்ட மகாகவி பாரதியின் புகழைப் பரப்பியதிலும் ஜீவா முன்னின்றார்.
அத்தகைய அறிஞர்கள் தலைமை தாங்கிய தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று தி.க. அளவுக்குத் தரம் தாழ்ந்துபோய், ஒரு (ஹிந்து) மதத்தையும், ஒரு குறிப்பிட்ட (பிராமணர்) ஜாதியையும் ஒழிப்பதாகக் கூறி, சனாதன ஒழிப்பு மாநாடு நடத்திக் கொண்டிருப்பது காலத்தின் கோலம்.
சனாதன ஒழிப்பு என்றால் ஹிந்து மத ஒழிப்பல்ல என்று, அவர்களும் இப்போது வியாக்கியானம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். (இவர்களின் தமுகஎச மேடையிலேயே சனாதன ஒழிப்பு என்பது இந்து மத ஒழிப்பு தான்” என்று நேர்மையாக விளக்கம் அளித்திருக்கிறார் தி.க. தலைவர் திரு. கி.வீரமணி. அவருக்கு நன்றி).
இத்தருணத்தில் ஒரே ஒரு வேண்டுகோள்: இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தங்கள் தலைவர்களான சீதாராம் யெச்சூரி, து.ராஜா ஆகியோரிடம் வலியுறுத்தி, “சனாதனத்தை ஒழிப்போம்” என்ற தீர்மானத்தை
‘இந்தியா’ கூட்டணியின் அடுத்த கூட்டத்தில் நிறைவேற்ற தமிழக கம்யூனிஸ்ட்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அதன் பிறகு அவர்களின் விளக்கத்தை ஏற்கலாம்.
ஒரு சதவீதம் கூட வாக்குவங்கி இல்லாத இந்த கம்யூனிஸ்ட்களை நம்பி, அவர்கள் கொடுத்த மேடையில் நின்றுகொண்டு, தனக்கு விரிக்கப்பட்ட வலையை அறியாமல் உளறிக் கொட்டிவிட்டு, இப்போது பின்வாங்கவும் இயலாமல் தவிக்கிறார் திருவாளர் உதயநிதி.
இனிமேலேனும், இதுபோன்ற சமூகத்தைப் பிளவுபடுத்தும் நிகழ்வுகளைத் தவிர்த்து, இத்தகிய நிகழ்வுகளுக்கு அரசு தடை விதித்து, நல்லாட்சிக்கான முயற்சிகளில் திரு. உதயநிதி ஸ்டாலின் கவனம் கொடுக்க வேண்டும். அதற்கான நல்ல புத்தியை உதயநிதியின் அன்னையார் வணங்கும் அதே ஹிந்து தெய்வங்கள் தான் அருள வேண்டும்.
- திரு. வ.மு.முரளி பத்திரிகையாளர்.
- இது இவரது முகநூல் பதிவு.
$$$
14. சனாதன தர்மம் இதுதான்!
-காம்கேர் கே. புவனேஸ்வரி
சனாதனம் என்றால் நித்தியம், எல்லா காலங்களிலும் நிரந்தரம் என்று பொருள்.
நெருப்புக்கு சுடும் தன்மை, ஐஸ் கட்டிக்கு குளிர்ச்சித் தன்மை இதெல்லாம் எப்போதும் இருக்கக் கூடிய தன்மைகள். நேற்று நெருப்பைத் தொட்டேன்- சுட்டது, இன்று சுடவில்லை; நாளை எப்படியோ தெரியாது என்ற கதையெல்லாம் கிடையாது. நெருப்பைத் தொட்டாலோ அல்லது அது நம் மீது பட்டாலோ, நேற்று இன்று நாளை என்ற காலக்கெடுவெல்லாம் இல்லாமல், என்றும், எல்லாக் காலங்களிலும் நெருப்பின் இயல்பு சுடுவது. போலவே சனாதனம் என்றால் நித்தியம், நிரந்தரம் என்று பொருள் கொள்ளலாம்.
தர்மம் என்றால் அறம். அறம் என்றால் அன்பு, கருணை, பிற உயிருக்கு தீங்கு நினைக்காமை, செடி கொடி தாவரங்கள் வாடாமல் தண்ணீர் விட்டு வளர்த்தல், மற்றவர் மனதைக் காயப்படுத்தாமை, பெற்றோரை மதித்தல், உற்றார் உறவினருடன் ஒற்றுமையாக இருப்பது, திருமணமானவர் என்றால் கணவன் / மனைவியுடன் கருத்து ஒருமித்து ஒருவரை ஒருவர் மதித்து நடந்துகொள்ளுதல், இறை நம்பிக்கை, இயற்கையை மதித்தல், பிறர் நம்பிக்கையை கேலி செய்யாமல் இருப்பது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆக, சனாதனம் என்பது நித்திய தர்மம்; வாழ்வியல் நெறிமுறை.
ஒருவர் தர்ம சிந்தனை குறித்து மேடையில் முழங்கினால், அதே சிந்தனையுடன் வாழ வேண்டும். அதுவே சனாதன தர்மம்.
ஜாதி, மத, இன பேதங்களைக் கடந்தது இந்த தர்மம். இந்து மதத்தில் நித்திய தர்மத்துக்கு ‘சனாதன தர்மம்’ என்று பெயர். மற்ற மதங்களிலும் இந்த தர்மம் இருக்கிறது. ஆனால் அதற்கு வேறு பெயர் இருக்கலாம். ஆனால் எல்லா மதங்களும் போதிக்கும் தர்ம சிந்தனையின் அடிப்படையில் மாற்றம் கிடையாது. அன்பும் அறனும் தான் தர்ம சிந்தனையின் அடிப்படை.
உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். சனாதனம் என்றால் என்ன என்று புரிந்துவிடும்.
எனக்குத் தெரிந்த ஒரு கல்லூரிப் பேராசிரியர். இரு கண் பார்வைத் திறன் இழந்தவர். கல்லூரி முதல்வராகி, மிக சமீபத்தில் ஓய்வு பெற்றவர்.
இவர் ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரின் கொள்கைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
அடிப்படையில் அசைவம் உண்பவர். ஆனால் வள்ளாலாரின் கொள்கையில் முனைவர் பட்டம் பெற்றபோதே ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள நாம், உயிரைக் கொன்று உண்ணும் பழக்கத்தை விடாமல் இருக்கிறோமே’ என்ற குற்ற உணர்வுக்கு ஆளானார்.
சில காலங்களுக்குப் பிறகு, ஒரு நிகழ்ச்சியில் ‘வள்ளலார் விருது’ ஒன்றை இவருக்கு வழங்கிய போது குற்ற உணர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார். கைகளில் இருந்த விருது அவர் மனசாட்சியை குத்திக் குதற அன்றைக்கு ‘இனி அசைவம் உண்ணக் கூடாது’ என முடிவு செய்தார். இதெல்லாம் நடந்து 30 வருடங்கள் ஆகி விட்டன. இன்று வரை அவர் அசைவம் சாப்பிடுவதில்லை.
இவர் சனாதன தர்மத்தை பின்பற்றுகிறார் என்று சொல்லலாம்.
சைவம் சாப்பிடுவதுதான் சனாதன தர்மம் என யாரும் தயவு செய்து புரிந்துகொள்ள வேண்டாம். வள்ளலார் விருது பெற்ற ஒருவர், வள்ளலாரின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என முடிவெடுத்து அசைவம் துறந்தார். இதுதான் இங்கு பேசுபொருள்.
இதுபோல நாம் ஒரு தர்மத்தைப் பேசுகிறோம், வலியுறுத்துகிறோம் என்றால் அதை நாம் நம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும்; அதை நம் வாழ்க்கை முறையாக்கி கொள்ள வேண்டும் என்பதுதான் சனாதன தர்மம்.
இப்படித்தான் நான் வாழ்ந்து வருகிறேன், இதுவே என் வாழ்வியல் நெறிமுறை என்பதால் நான் பின்பற்றுவது சனாதன தர்மம் என்று உணர்கிறேன். பெருமிதம் கொள்கின்றேன்.
- செல்வி காம்கேர் கே. புவனேஸ்வரி, காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி.
- இது இவரது முகநூல் பதிவு.
$$$
15. விநாச காலே விபரீத புத்தி!
-தர்மபூபதி ஆறுமுகம்
சனாதனத்தை ஒழிப்பேன் என்று திருவாலர் உதயநிதி சொல்லி இருப்பது பிராமணர்களைத் தானே என்று நாம் நினைத்துக் கொண்டால், அது மாபெரும் தவறு. அவர் குறி வைப்பது ஹிந்து மதத்தை மட்டும் தான்! அதை யாரெல்லாம் காக்க முற்படுகிறார்களோ அவர்கள் எல்லாம் அந்தக் கூட்டத்தின் குறி!
அதனால் தான் ஹிந்து மதத்தை காக்க முற்படும் அனைவரையும் எதிர்க்கிறார்கள்- அவன் எந்த சாதியாக இருந்தாலும் சரி, எந்த அமைப்பாக இருந்தாலும் சரி!
அவர்கள் இதற்கு முகமாக குறிப்பிடுவது பிராமணர்களை. காரணம் அவர்கள் இருப்பதால்தான் ஹிந்து மதம் தன் பெருமையை ஓரளவிற்கு நிலைநாட்டிக் கொண்டுள்ளது. பிராமணர்கள் ஹிந்து கலாச்சாரத்தைப் பேணிக் காக்கின்றனர். கமலஹாசன் போன்றோர் விதிவிலக்கு!
இதற்கு அடுத்தபடியாகச் சொல்வதென்றால் திமுகவின் இளவரசரே தானும் தன் மனைவியும் கிறிஸ்தவர் என்று வாக்குமூலம் வேறு கொடுத்து விட்டார். இவர்களை யார் ஆட்டிப் படைப்பார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை.
தெரியாமல் கைதட்டலுக்காக வார்த்தையை விட்டுவிட்டு, தற்போது மீசையில் மண் ஒட்டவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். தினமும் இதற்கு உதயநிதி விளக்கம் கொடுத்து வருகிறார். தற்போது தமிழக முதல்வரும் தன் மகனைக் காப்பாற்ற முயலுகிறார்.
சனாதன தர்மம் தான் ஹிந்து மதம் என்று பெயர் வைக்கப்படுவதற்கு முன்னர் இருந்த பெயர் என்பது ரகசியமா என்ன!
நுணலும் தன் வாயால் கெடும்!
வீரமணி சகவாசத்தால் நேர்ந்த வினை!
தன் வினை தன்னைச் சுடும்!
பாரதம் முழுவதும் திமுகவை உண்டு இல்லையென்று பார்த்துக் கொண்டு உள்ளனர். அனேகமாக நாடு முழுவதும் இது தேர்தல்வரை எதிரொலிக்கும்!
அதைத்தான் பிரதமரின் பேச்சும் அமித்ஷா பேச்சும் வெளிப்படுத்துகிறது!
எப்படியோ புள்ளி வைத்த இந்தியா கூட்டணிக்கு திமுகவால் சமாதி எழுப்பப்பட்டு விட்டது என்றே தோன்றுகிறது.
இந்தக் கூட்டத்திற்கு உண்மையிலேயே தெம்பும் திராணியும் இருந்தால் தேர்தலின்போது ஹிந்து மதத்தை ஒழிப்போம் என்று பிரசாரம் செய்வார்களா?
ஒருவருக்கு நேரம் சரியில்லை என்றால் அதாவது கேடுகாலம் வருகிறதென்றால், அவர்களை அறியாமல் புத்தி விபரீதமாகச் செயல்படுமாம்!
அதைத்தான் திமுகவின் இளவரசர் செய்துள்ளார்!
திமுகவிடம் அந்தப் பதட்டம் தெரிகிறது.
விநாச காலே விபரீத புத்தி!
- திரு. தர்மபூபதி ஆறுமுகம், விஸ்வகர்மா நல அமைப்பின் தலைவர்; பொள்ளாச்சியில் வசிக்கிறார்.
- இது இவரது முகநூல் பதிவு.
$$$
16. திராவிடத்துக்கு சவால்!
-ராமகிருஷ்ணன் சிவசங்கரன்
எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவை ‘சுப்ரபாதம்’ பாடவைத்து, நாம் வணங்கும் கடவுளை துயில் எழுப்ப வைத்தது சனாதனம்.
ராஜரத்தினம் பிள்ளையை ‘நாதஸ்வரச் சக்கரவர்த்தி’ என கோபுரத்தில் அமர வைத்தது சனாதனம்.
கே.ஜே.யேஸுதாஸ் பாடிய பாடலுடன், சபரிமலை கோயிலில் நடை சார்த்த வைத்திருப்பது சனாதனம்.
சனாதனிகள் பூஜை செய்து வழிபடும் 63 நாயன்மார்களில் வெறும் 11 பேர் மட்டுமே அந்தணர்கள்!
சங்கராச்சாரியார் கூட, கோயில் கருவறைக்குள் நுழைய முடியாது!
இதெல்லாமே சனாதனம்!
இங்கு தர்ம நியாயங்களின் அடிப்படையில் மட்டுமே வாழ்க்கை!
ஆனால், ஜாதி அடிப்படையில் துவேஷத்தைப் பரப்பி, சில ஜாதிகளை என்றுமே முன்னேற விடாமல் செய்து, அடிமைகளாக வைத்து, அவர்கள் முதுகில் ஏறி, பதவியில் அமர்ந்து மேலும் மேலும் ஜாதிப் பிரிவினையை அதிகரிக்கச் செய்வது மட்டுமே திராவிடக் கொள்கை!
இங்கே, அறுதிப் பெரும்பான்மையுடன், ஃபாஸிஸ ஆட்சி நடத்தி வருகிறார்களே, அவ்வளவு அக்கறை இருந்தால், “ஜாதி அடிப்படையில் எந்தப் பிரிவினையோ தனிச் சலுகையோ இனி கிடையாது! அனைவரும் தமிழகத்தில் சமம்! இனி ஜாதி விவரங்கள் கூட கேட்கப்பட மாட்டாது!” என ஆணை பிறப்பிக்கச் சொல்லுங்கள், பார்ப்போம்!
.
- திரு. ராமகிருஷ்ணன் சிவசங்கரன், வெளிநாட்டில் பணியாற்றும் பொறியாளர்.
- இது இவரது முகநூல் பதிவு.
(தொடர்ந்து ஒலிக்கும் தார்மிகக் குரல்கள்!)
$$$
One thought on “வாழும் சனாதனம்!- 4”