பிராமண வெறுப்பை உமிழும் திருந்தாத திராவிடம்!

-சேக்கிழான், ஜடாயு, ச.சண்முகநாதன்

தினமலர் (ஈரோடு, சேலம்) நாளிதழில் வெளியான தவறான, கண்டிக்கத்தக்க செய்தி ஒன்றிற்காக, தமிழகத்தின் பூர்வகுடிகளான பிராமண மக்களை நாக்கூசாமல் வசை பாடுகிறது ஒரு கும்பல். பிரிட்டீஷாரால் திணிக்கப்பட்ட ஆரிய- திராவிடக் கோட்பாட்டை இன்னமும் பற்றிக்கொண்டு அரசியல் நடத்துவோரின் எளிய இலக்குகளாக பிராமணர்கள் தாக்கப்படுவதை நம்மால் கண்டும் காணாமல் இருக்க இயலாது. 

சமூக ஊடகத்தில் வெளியான தினமலர் (சென்னை) ஆசிரியரின் மறுப்பு அறிவிப்பு.

1. முடைநாற்றம் வீசும் தமிழகம்

-சேக்கிழான்

தினமலர் நாளிதழின் ஈரோடு, சேலம் பதிப்புகளில் 31.08.2023 அன்று முதல் பக்கத்தில் வெளியான செய்தி ஒன்று, தமிழகத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருப்பதுடன், இங்கு நீண்டகாலமாக கடைப்பிடிக்கப்படும் பிராமண வெறுப்பையும் ஊதிப் பெரிதாக்கி இருக்கிறது. உச்சகட்டமாக, தினமலரை ‘தினமனு’ என்று குறிப்பிட்டு கண்டித்திருக்கிறார் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின். அதாவது, எப்போதோ வழக்கொழிந்துவிட்ட மனுஸ்மிருதியே தினமலரின் இந்த தவறான தலைப்புச் செய்திக்குக் காரணம் என்கிறார் முதல்வர். கூடவே சநாதனத்தையும் சாடுகிறார். இவர் ‘சநாதனம்’ என்று எதனை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்பது புரியவில்லை. இவரது அடியொற்றி, தமிழகம் முழுவதும் அன்று ஒருநாள் முழுவதும் பிராமணர்கள் கரித்துக் கொட்டப்பட்டார்கள்.  

அதற்கு ஒரே காரணம், தினமலர் நாளிதழின் உரிமையாளர் ஒரு பிராமணர் என்பது. இதுபோன்ற முட்டாள்தனம் வேறெதுவும் கிடையாது. தினமலர் (ஈரோடு, சேலம் பதிப்புகள்) வெளியிட்ட முட்டாள்தனமான செய்தியை விடக் கொடியது இந்த ஜாதிரீதியான பார்வை.

தள்ளாடும் வயதிலும் ஊர் ஊராகச் சென்று தேடித் தேடி பழந்தமிழ் இலக்கியங்களைக் கண்டறிந்து அச்சேற்றிய தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர், தமிழக வரலாற்றை எழுதிய நீலகண்ட சாஸ்திரி, அற்புதமான உரையாசிரியர் ராகவையங்கார், தேசிய எழுச்சிக்கு வித்திட்ட தமிழ் இதழியலின் பிதாமகர் ஜி.சுப்பிரமணிய ஐயர், தமிழின் இளமைப்பொலிவுக்கு வித்திட்ட மகாகவி பாரதி, தீண்டாமைக்கு எதிராக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்துவைத்த மதுரை வைத்தியநாத ஐயர், சுதந்திரத்துக்காக உழைத்த வ.வே.சு.ஐயர், சுப்பிரமணிய சிவா, தீரர் சத்தியமூர்த்தி, ராஜாஜி, தனது சொத்துகள் அனைத்தையும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எழுதிவைத்த கோபிசெட்டிபாளையம் லட்சுமண ஐயர்,… இப்படி எத்தனையோ நல்லுள்ளங்கள் பிராமண சமூகத்தில் பிறந்து, இம்மாநில மக்களின் நலனுக்காக, உயர்வுக்காக உழைத்திருக்கிறார்கள். அவர்களை இந்த திராவிட இயக்கம் என்றாவது பாராட்டி இருக்கிறதா?

ஆனால், அந்தச் சமுதாயத்தைச் சார்ந்தவர் (திரு. இரா.சத்தியமூர்த்தி) நடத்திவரும் தினமலர் நாளிதழில் ஒரு தவறான தலைப்பிலான செய்தி வெளியானவுடன் ஒட்டுமொத்த பிராமண சமுதாயத்தையும், தமிழக முதல்வர் தொடங்கி, திமுகவின் கடைசிப்புள்ளி வரை வசை பாடுகின்றனரே? இதுவல்லவா, இனஒழிப்புவாதம்? இது தானே பாசிஸம்?

தினமலர் வெளியிட்ட செய்தியில் உண்மை இல்லாமல் இல்லை. அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் அற்புதமான திட்டமே. மத்திய அரசு உத்தேசித்துள்ள தேசிய கல்விக் கொள்கையிலும் கூட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனை நாட்டிலேயே முதல்முறையாக தமிழக அரசு நடைமுறைப்படுத்துவது நமக்குப் பெருமையே. இதனை மனமாரப் பாராட்டுகிறோம். அதேசமயம், இதுவரை காலைவேளையில் உண்ணாமல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் தற்போது தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தால் வயிறு நிறைவதால் எழும் சுகாதாரப் பிரச்னையைப் புறந்தள்ள முடியாது. ‘அரசுப் பள்ளிகளில் கக்கூஸ்கள் நிரம்பி வழிகின்றன’ என்று இதனை கொச்சையாக செய்தியாக்கியது தான் தினமலரின் வக்கிரம். ஆனால், அதன் பின்னால் உள்ள உண்மை, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக உள்ளவர்களுக்குத் தான் தெரியும். இந்த நிதர்சனத்தை உணர்ந்து அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகளை மேம்படுத்துவது அரசின் உடனடிக் கடமை.

தினமலர் நாளிதழின் செய்தித் தலைப்பும், செய்தியில் தொனிக்கும் பகடியும் வக்கிரமானவை. அதற்காக அந்தப் பத்திரிகை கண்டிக்கப்பட வேண்டியதே. இந்தச் செய்தியை தினமலர் (பிற பதிப்புகள்) நிர்வாகமே கண்டித்து வருத்தம் தெரிவித்து விளம்பரமும் வெளியிட்டுவிட்டது. இந்தச் செய்தியின் பின்புலத்தில் தினமலர் குடும்பத்தில் நிலவும் சொத்துச் சச்சரவும் காரணமாக இருக்கிறது. அது தனிக்கதை.

ஆனால், அந்தப் பத்திரிகையின் தவறான செய்தியை சாக்காக வைத்து, ‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில்  ஆண்டி’ என்பது போல தமிழக அந்தணர்களை வசைபாடுவது எந்த வகையில் பகுத்தறிவு? இதுதான் முற்போக்கா? இடதுசாரிகளும் இந்த விஷயத்தில் திராவிடக் கும்பலுடன் இணைந்து ஜாதி துவேஷத்துடன் கெக்கலி கொட்டுவதைக் காண, திருவாளர்கள் பி.ராமமூர்த்தியும் ஜீவானந்தமும் இல்லாது போய்விட்டார்களே!

தமிழகத்தில் மட்டுமே சில முட்டாள்கள் பிராமண வெறுப்பை மூலதனமாக்கி, அறிவாளிகளாகத் திரிகிறார்கள். பிரிட்டிஷார் விதைத்த ஜாதி துவேஷ நஞ்சை இன்னமும் மனதில் சுமந்துகொண்டு, அப்பாவி அந்தணர்களை அடி மேல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதோ வழக்கொழிந்துபோன மனுஸ்மிருதியை இன்னமும் விடாது பிடித்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள். ஆனால், இதே திராவிட தலைவர்கள் (இவர்களில் பெரும்பாலோர் ஆதிக்க ஜாதியினரே) தாழ்த்தப்பட்ட மக்களை எப்படி நடத்துகிறார்கள் என்று பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. தீண்டாமையையும் ஆதிக்க மனப்பான்மையையும் கடைப்பிடித்துக்கொண்டே, அதற்கு பிராமணர்களையே காரணமாகக் காட்டி திசை திருப்புவதிலும் இவர்களை விட்டால் ஆளில்லை.

வேங்கைவயலில் தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர்த் தொட்டியில் மனித மலத்தைக் கலந்தவர்களைத் தண்டிக்க இன்னமும் துப்பில்லை. நான்குனேரியில் தலித் சிறுவனை வெட்டிய மாணவர்கள் சார்ந்த ஆதிக்க ஜாதியினரையும், அவர்கள் சார்ந்த தங்கள் கட்சிக்காரரையும்  கண்டிக்க திமுக தயாராக இல்லை. திருக்குறளை ‘தங்கத் தட்டில் வைத்த மலம்’ என்று வர்ணித்த திராவிட இயக்க மூலவர் ஈ.வெ.ராமசாமி நாயக்கரைப் போற்றிப் பாடும் திராவிடக் கும்பலுக்கு இயன்றதெல்லாம், அபவாதத்துக்கு அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி பிராமணர்களின் குடுமியையும் பூணூலையும் அறுப்பது தான்.

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் மும்முரத்தில் இருக்கும் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலினிடம் காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தியேகூட ஒரு கௌல் பிராமணர் தான் (அவரே சொன்னது!) என்பதை யாராவது நினைவுபடுத்தினால் நல்லது.

‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்று கூறும் தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியம்:

வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான

(தொல்- பொருள்- மரபியல் 94)

அத்தகைய உயர் தமிழகம் தற்போது உயர்ந்த உள்ளங்கள் நலிந்து குறைமதியாளர்களால் சூழப்பட்டிருப்பதைக் காணும்போது, ஒரு தமிழனாக மிகவும் வெட்கப்படுகிறேன்; வேதனைப்படுகிறேன்.

பண்புடையார் பட்டுண்டு உலகம் அஃதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மண்.

(திருக்குறள்: 996)

-என்ற திருக்குறளைத் தான் இங்கு நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது.

$$$

சர்ச்சையை உருவாக்கிய வக்கிரமான செய்தி இதுவே- தினமலர் (ஈரோடு) 31.08.2023

2. அறச்சீற்றப் போலிகள்

-ஜடாயு

இன்றைய தமிழ் நாளிதழ்களில் ஒருங்கிணைந்த இந்திய தேசியம், இந்துப் பண்பாட்டு உணர்வு, மக்கள் நலன் ஆகியவற்றை பெரிதும் பிரதிபலிக்கும் பத்திரிகை என்றால் அது ‘தினமலர்’ தான்.  அதுவும் கடந்த சில வருடங்களில்  நரேந்திர மோதிஜியின் தலைமையிலான மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும்  எதிராக மாபெரும் வன்மத்துடனும் வெறியுடனும் தமிழ்ச் சூழலில் பரப்பப்படும் பொய் அவதூறுகளுக்கும், வெறுப்புணர்வுகளுக்கும் பதிலடியாக உண்மைகளை உரத்துச் சொல்லும் செய்தி ஊடகமாக தினமலர் உள்ளது. அந்த வகையில் தினமலருக்கு எனது முழு ஆதரவும் எப்போதும் உண்டு.  

மற்றபடி, தினமலர் இதழின் சேலம், ஈரோடு பதிப்பில் வந்த அந்த சமீபத்திய தலைப்புச் செய்தி அருவருப்பானது, கண்டனத்திற்குரியது என்பதில் ஐயமில்லை.  மற்ற தினமலர் பதிப்புகளின் ஆசிரியரான கி.ராமசுப்பு தொடங்கி தமிழ்நாட்டில் இதை ஏற்கனவே கண்டித்து விட்ட  45, 445 பேர்களுடன் நானும் எனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.  

தினமலர் பத்திரிகையை சாக்காக்கி இந்தத் தருணத்தில் தமிழ் சமூக ஊடகங்களில் கொட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மலினமான பிராமண வெறுப்பு வெளிப்பாடு அந்தத் தலைப்புச் செய்தியை விட பலமடங்கு கீழ்த்தரமானது, பண்பாடற்றது, கணடனத்திற்குரியது.  ஆனால் முன்னதைக் கண்டிக்கும் போலி  ‘அறச்சீற்ற’ கும்பல்கள் பின்னதில் ஊறித் திளைத்து ஆட்டம் போடுவது தான் வினோதம். 

ஒரு நாளிதழின் ரிப்போர்ட்டரும் ஆசிரியரும் செய்த தவறுக்குப் பதிலடியாக, தமிழ்நாட்டின் முதல்வர் தொடங்கி, திமுக கட்சியின் பல தலைவர்கள் உட்பட பொறுப்புள்ள பதவிகளில்  உள்ள பலர், அந்த நாளிதழின் நிறுவனரது சாதியைக் காரணமாக்கி, அந்த சாதியின் மீதான வெறுப்பு பிரசாரத்தை நேரடியாகவும், பூடகமாகவும் எந்தத் தயக்கமுமின்றி அள்ளி வீசுகிறார்கள்.  இங்கு யாருக்கும் வெட்கமில்லை. 

மற்றபடி,  ‘கக்கூஸ்’ என்று இடதுசாரிகள் ஒரு குறும்படம் எடுத்தபோது அது ஆட்சேபத்திற்குரிய சொல்லாகவில்லை.  ஹிந்து தெய்வங்களை மலத்துடன் தொடர்புபடுத்தி  ‘கவிதை’ எழுதியபோது அது ஆட்சேபகரமாகவில்லை.  ‘பார்ப்பான் மலம் அள்ளுவானா?’ என்று சாதிய வசை பலமுறை உதிர்க்கப்பட்டபோது அது கண்டனத்திற்குரியதாகவில்லை.   ‘பீக்காடு’ என்று ஒரு எழுத்தாளர் (‘கெட்டவார்த்தை பேசுவோம்’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் இவர்) கட்டுரையாகக் கழிந்தபோது அதில் நாற்றம் வரவில்லை. 

ஆனால் ஒரு செய்திப் பத்திரிகை, அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டிருக்கிற,  முடைநாற்றமெடுக்கக் கூடிய பிரச்சினையை அப்படி அப்பட்டமாக தலைப்புச் செய்தியாகப் போட்டவுடன் அப்படியே அறச்சீற்றம் கொப்புளித்து விட்டது.  இதை எப்படி எடுத்துக் கொள்வது என்பதை உங்களது சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

$$$

தினமலர் (ஈரோடு) நிர்வாகம் செப்.1-இல் அளித்துள்ள விளக்கம்.

3. திராவிட மாடலின் நியாயம்

-ச.சண்முகநாதன்

ஒரு நாளிதழில் வந்த செய்தியை வைத்து ஒரு இனத்தை, ஒரு மதத்தைப்  பழிப்பது என்ன நியாயம் என்று தெரியவில்லை. சிந்தித்துப் பார்த்தால் திராவிட மாடலில் எல்லா பாதகங்களும் நியாயமே, எல்லா குற்றங்களும் தர்மமே. 

ஒட்டுமொத்த திமுக தலைமைக் குடும்பமும் பிராமண சமூகத்தின் மீது சேற்றை வாரி இறைக்கிறது. ஒரு பிராமணன் அல்லாத நபராக இதைப்  பார்க்க சகிக்கவில்லை. 70 வருடமாக, வளர்ந்து விட்ட ஒரு சமூகத்தில் எல்லோரும் முன்னேறிக் கொண்டிருக்கும் பொழுது, இப்படி ஒரு சமூகத்தின் மீது வன்மம் வைத்து நாளொரு மேனியும் வசை பாடுவது கீழ்நிலை மானிடருக்கு மட்டுமே சாத்தியம். 

துரதிர்ஷ்டவசமாக  ஒரு முதல்வரின் குடும்பம் இந்தக் கீழான மன நிலையில் இருந்தே அரசாட்சி செய்கிறது. முட்டுச்சந்தில் நின்றுகொண்டு வசை பாடும் மனநிலையில் சட்டசபை இயங்குவது அநியாயம்.  

இவர்கள்  ‘சமூகநீதி’ என்று நீலிக்கண்ணீர் வடிக்கும்பொழுது எரிச்சலாக வருகிறது. வேங்கைவயல் சமாச்சாரத்தை தின்று செரித்து ஏப்பம் விட்டுக்கொண்டு தினமலரின் செய்தியை பிராமண சாதியுடன் சம்பந்தப்படுத்தி கேவலப்படுத்துவது, இவர்களின் சிந்தனை வேங்கைவயல் நீருக்கு சமம் என்றுணர்த்துகிறது.

வள்ளுவன் தனியாகப் புகழ்ந்து பாடிய இருசாரார், உழவனும் அந்தணனும் மட்டுமே. 

உழவுக்குக் கொடுக்கும் மரியாதையை அந்தணனுக்கும் கொடுத்து உயர்த்தி வைத்துப் பாடியிருக்கிறான் வள்ளுவன்.  

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

(திருக்குறள்- 1033)
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் 
பிறவாழி நீத்தல் அரிது.

(திருக்குறள்- 8)

பிறப்பு எனும் ஆழியை விட்டுவிடலாம். திராவிடத்தால் வேங்கை வயல் எனும் நீர்தொட்டியைக் கூட தாண்ட முடியாது. 

இது ஏதோ திராவிடத்துக்கும் பிராமணருக்கும் நடக்கும் சர்ச்சை என்று தாண்டிச் செல்ல இயலவில்லை.  பிராமண சமூகத்தின் மீது திராவிடம் கொண்ட வெறுப்பு பிற சமூகத்தினரிடம் ஒரு எரிச்சலை உண்டாக்குகிறது. 

திராவிடத்திடம்  இருக்கும் ஒரே சரக்கு  ‘பிராமண வெறுப்பு’. அதை மூலதனமாக வைத்து மத மாற்றம் நடந்துவருவதை ஹிந்துக்களும் உணர்ந்தே வந்திருக்கின்றனர். 

எந்தவொரு பிராமணனும் திராவிடத்தை நம்பி இல்லை. 

எந்தவொரு பிராமணனையும் திராவிடம் வாழவைக்கப் போவதும் இல்லை.

ஆனால் பிராமணன் இல்லாமல் திராவிடம் இல்லை. 

பிராமணனை எதிர்த்துப் பேசவில்லையென்றால் திராவிடம் மரித்துப்போகும். 

திராவிடம் என்பது, முதுகெலும்பில்லாத ஒட்டுண்ணி. 

அது உண்டு கொழுப்பது பிராமண ரத்தம்.

தினமலரை சாக்காக வைத்து திமுக எழுப்பிய பிராமண வெறுப்பு பிரசாரத்தைப் பார்க்கும் பொழுது  ‘Go get  a life of your own’ என்று கத்த வேண்டும் போல இருக்கிறது. 

நன்றாக வளர்ந்து வரும் சமுதாயத்தில் பெரிதாக வளர்த்து வரும் புற்றுநோய்க் கட்டி திராவிடம். The sooner we get rid of it, the better for us. 

$$$

Leave a comment