பொது சிவில் சட்டம் திணிக்கப்பட்டால் ஆபத்து நேரிடும்!

-நீதிபதி கே.கண்ணன் (ஓய்வு)

(நேர்காணல்: பால.மோகன்தாஸ்)

பொது சிவில் சட்டத்தை சிறுபான்மையினர் ஏற்பதற்கான சூழல் வரும்போதுதான் கொண்டு வர வேண்டும் என்றும், மாறாகத் திணிக்கப்படுமானால் அது ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கூறுகிறார் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.கண்ணன்.  ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு (நேர்காணல்: பால.மோகன்தாஸ்) அவர் அளித்த நேர்காணலின் (இரு பகுதிகள்) தொகுப்பு இது….

அரசியல் சாசன சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் பகுதியில் பிரிவு 44-இல் பொது சிவில் சட்டம் நாட்டில் இயற்றப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் பொதுவான சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒரு நிலை வர வேண்டும்; அதற்கு வேண்டிய சட்டங்கள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

நீதிபதி (ஓய்வு) கே.கண்ணன்

நாடு சுதந்திரம் அடைந்த அன்றைய காலகட்டத்தில் நமது அரசியல் தலைவர்களால் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர முடியவில்லை. ஏனென்றால்,  “நாட்டில் பல்வேறு சிவில் சட்டங்கள் இருக்கின்றன. ஹிந்துக்களுக்குத் தனியாக, முஸ்லிம்களுக்குத் தனியாக, கிறிஸ்தவர்களுக்குத் தனியாக சட்டங்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒரே அளவில் எல்லோருக்கும் ஒன்றுபோல் இருக்கக்கூடிய வகையில் சட்டங்களைக் கொண்டு வர வேண்டும். அது மிகவும் முக்கியம்” என்று அன்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதன் அடிப்படையில்தான் சட்டப்பிரிவு 44 கொண்டு வரப்பட்டது.

இதன் மூலமாக நமக்குத் தெரிய வேண்டிய விஷயம் என்னவென்றால், ஹிந்துக்களுக்கு, முஸ்லிம்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு என்று தனித்தனி சட்டங்கள்தான் அன்றைய தேதியில் அமலில் இருந்தன என்பதை அவர்கள் அங்கீகரித்தார்கள் என்பதுதான். உடனடியாக, எல்லோருக்கும் ஒரே மாதிரி சட்டம் இருக்க வேண்டும் என்று அந்தத் தேதியில் முடிவு செய்யவில்லை. அந்தச் சமயத்தில், முடிவு செய்திருக்கவும் முடியாது. ஏனென்றால், பெரிய கலவரம் ஏற்பட்டிருக்கும். முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் எனும் தனி நாடே போகும் ஒரு நேரத்தில், இங்கு இருந்தவர்கள் எல்லாம் ஹிந்துக்கள்தானே என்று நினைப்பது சரியல்ல.

முஸ்லிம்களுக்காக தனி நாடு கேட்டுக்கொண்டு போனவர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இங்கு இருந்தவர்கள் எல்லாருமே இந்தியர்கள்தான். அவர்களில் முஸ்லிம்கள் இருந்தார்கள்; கிறிஸ்தவர்கள் இருந்தார்கள்;  ஹிந்துக்கள் இருந்தார்கள். எனவேதான், ஒவ்வொரு மதத்தவர்களுக்கும் தனித்தனி சட்டங்கள் இருப்பதை ஒரே சட்டமாக, எதிர்காலத்தில் அதற்குத் தகுந்த சூழ்நிலை இருக்கும்போது கொண்டு வர வேண்டும் என்ற வகையில் மட்டும் பொது சிவில் சட்டம் குறித்து சொல்லி இருக்கிறார்கள்.

இந்த 2023-இல் அதற்கான சூழ்நிலை வந்துவிட்டதா என்று கேட்டால், துளிகூட வரவில்லை என்பதுதான் எனது கவலை. 1947-இல் பாகிஸ்தான் என்று ஒரு பெரிய பகுதியை இழந்து நின்ற காலம் அது. பெரும் அளவில் அதிருப்தி இருந்தது. மதத்தைச் சொல்லி தனியாக ஒரு நாட்டைப் பிரித்துக் கொண்டு போகும்போது, மீதம் இருந்த நாடு என்பது அகண்ட பாரதம் என்பதில் குறைந்த இடமாகவே இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சூழலில் கொண்டு வரப்படக்கூடிய ஒரு சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்றால், அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்; அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரே நிலை, ஒரே மதிப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்படும்படியானதாக இருக்க வேண்டும். ஆனால், 1947-இல் அத்தகைய நிலை இருந்ததா என்றால் இல்லை. பெருமளவில் பாதிப்புதான் இருந்தது. ஆனால், நமக்கு இந்தியத் தன்மையை கொண்டு வர வேண்டும்; நாம் மத ரீதியாக வேறுபட்டாலும் நாமெல்லோரும் இந்தியர் என்ற ஒரு பெரிய எண்ணம் வர வேண்டும்; அந்த ஓர் அடையாளம் இருக்க வேண்டும் என்று அப்போது நினைத்தார்கள். அதற்காகத்தான் சட்டப்பிரிவு 44-ஐக் கொண்டு வந்தார்கள்.

ஆனால், தற்போதைய 2023-இல் அதற்கான சூழல் வந்துவிட்டதா என்றால், அப்படி வந்துவிட்டதாக நான் கருதவில்லை. ஏனென்றால், சிறுபான்மையினரின் பார்வை இதில் மிகவும் முக்கியம். அவர்களின் பார்வை எப்படி இருக்கிறது என்று பார்க்காமல், பெரும்பான்மையினருக்கு பொது சிவில் சட்டம்தான் சரி என்று தோன்றுகிறது; எனவே, அதுதான் சரி என்று நினைப்பது மிகவும் ஆபத்தான போக்கு.

அதுவும் தற்போதைய ஆட்சியில், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை. சிறுபான்மையினருக்கு சரிசமமாக பாவனை செய்யப்படவில்லை. அரசாங்கத்தின் நியதிகள், அவர்கள் கொண்டு வரக்கூடிய சட்டங்கள் எல்லாமே சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பதுபோல ஒரு வலுவான எண்ணம் சிறுபான்மையினர் மத்தியில் இருக்கிறது. எந்த ஒரு இடத்திலும் யாருக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால், வலு இல்லாதவர்களுக்குத்தான் பாதுகாப்பு வேண்டும். வலுவாக இருப்பவர்களின் பாதுகாப்புக் குறித்து பேச வேண்டிய அவசியமே இல்லை. எந்தச் சமுதாயத்திலும் சிறுபான்மையினர் பாதுகாப்பு என்று இருக்குமே தவிர, பெரும்பான்மையினர் பாதுகாப்பு என்று ஒரு சட்டம் இருக்காது.

‘நாட்டில் நல்ல நிலையில் இருக்கிறோம். அரசு எங்களையும் பெரும்பான்மையினரைப் போலப் பார்க்கிறது. எங்களின் கோட்பாடுகள்படி, வழிபாட்டு முறைப்படி, தனிப்பட்ட வாழ்க்கை முறையை பின்பற்றுவதற்கு, மத ரீதியாக அமைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது’ என்ற ஒரு நம்பிக்கை வந்த காலமாக இருந்தால், பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற முடியும். இந்த அரசு அதுபோல செய்யவே இல்லை. சிறுபான்மையினர் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்; சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் எனது கணிப்பு.

நாடு சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டு காலத்தில், சிறுபான்மையினரை வெறும் சிறுபான்மையினராக மட்டுமே பார்க்கும் ஓர் அரசியல் இங்கு உள்ளது. அவர்களின் வாக்குகள் மீது மட்டுமே குறி உள்ளது. அவர்களின் வாக்குகளைப் பெற ஏதாவது சலுகை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணக் கூடியதாக நமது அரசியல் இருந்திருக்கிறது. அரசியல் செய்வதற்கு சிறுபான்மையினர் அவசியம் என்று பார்த்தோமே ஒழிய, அவர்களை நாட்டின் மைய நீரோட்டத்துக்குக் கொண்டு வர நாம் தயாராக இருக்கிறோமா என்று பார்த்தால் எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை. இந்திய அடையாளத்தை வலுப்படுத்தாமல் சாதி, மத, மொழி வாரியாக மக்களை தனித்தனியாகப் பார்த்து, அவரவர்களின் ஓட்டுக்களை வாங்க முடியுமா என்று பார்ப்பதாகத்தான் அரசியல் இருக்கிறது. இதில் அனைத்துக் கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. இப்படித்தான், நாட்டில் ஒருமித்த சட்டத்தைக் கொண்டு வர முடியாத நிலை உருவாக காரணமாக இருந்துவிட்டோம்.

அதேநேரத்தில், எனக்கு ஓர் அடிப்படைக் கேள்வி இருக்கிறது. தனிச்சட்டங்கள் தனித்தனியாக இருப்பதால், அரசை நடத்துவது எளிதாக இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருக்கிறார். தனிச்சட்டம் என்றால் என்ன என்று நாம் பார்க்க வேண்டும். நாம் எல்லோரும் இந்தியர்கள், இந்தியர் என்பதுதான் நமது அடையாளம், இங்கு எந்த மதமும் இருக்கக் கூடாது என்று சொல்ல முடியுமா என்றால் முடியாது. சில விஷயங்கள் மிகவும் தனிப்பட்டவை. மத ரீதியாக நான் வேறுபடுகிறேன் என்றால், எந்த விஷயத்தில் வேறுபடுகிறேன்? வழிபாட்டு முறையில், குடும்ப அளவில் மதத்தைக் கட்டிக் காக்க வேண்டும் என்று நினைப்பதில் நான் வேறுபடுகிறேன். குடும்பம் என்றால், நான், எனது மனைவி. மனைவி எப்படி வருகிறாள்? திருமணம் மூலமாக வருகிறாள். இது மிகவும் தனிப்பட்ட விஷயம். நான் எப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும்? அதற்கான சடங்குகள் எப்படி இருக்க வேண்டும்? என்பதெல்லாம் மிகவும் தனிப்பட்டவை. இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.

திருமணம் நடந்தால் இயல்பாக நடக்கக் கூடியது குழந்தைப் பிறப்பு. குழந்தையை போஷாக்காக பார்த்துக்கொள்ள வேண்டும், குழந்தைக்கு நல்ல பாதுகாவலராக இருக்க  வேண்டும். அந்த வகையில், பாதுகாப்பு மற்றும் ஜீவனாம்சம் இரண்டும் மிகவும் தனிப்பட்டவை. எனது குடும்பத்தை நான் எப்படிப் பார்த்துக்கொள்கிறேன் என்பது மிகவும் தனிப்பட்ட ஒன்று. இதையடுத்து வருவது சொத்து. என் சொத்து யாருக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மிகவும் வலுவான ஒரு எண்ணம். திருமணம் ஆகி 2, 3 வருடங்கள் ஆகிவிட்டால் பார்ப்பவர்கள் எல்லாம், என்ன இன்னும் குழந்தை உண்டாகவில்லையா என்று கேட்பார்கள். வயதானவர்களாக இருந்து அவர்களுக்கு குழந்தை இல்லாவிட்டால், அவர்களுக்கு என்ன பிள்ளையா குட்டியா இருக்கு என்று கேட்பார்கள்.

எனவே, குடும்பம் என்ற பிணைப்பு மகிவும் முக்கியம். இல்லாவிட்டால் சொத்துக்களை விட்டுவிட்டு சாமியாராகப் போய்விடலாமே? அந்தப் பிணைப்பின் காரணமாகத்தான், நான் என் மகனுக்கு என்ன கொடுக்கப் போகிறேன், என் மகளுக்கு என்ன கொடுக்கப் போகிறேன் என்ற எண்ணம் ஏற்படுகிறது. உலகம் முழுவதையும் நான் எனது குடும்பமாக நினைக்க முடியாதா என்றால், அது பெரிய தத்துவம். நாம் அதற்குள் செல்ல வேண்டாம். சாதாரண அடிப்படை அளவில் நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம் என்ற அடிப்படையில் பார்த்தால், வாரிசு உரிமை என்பது மிகவும் தனிப்பட்ட விஷயம். தனிச்சட்டம் இவற்றைப் பற்றியதுதான்.

இத்தனையையும் நீக்கிவிட்டு இவை எதுவுமே இருக்கக் கூடாது என்று சொன்னால், அதன் பிறகு எதற்கு இத்தனை பெரிய மதம். ஹிந்து என்று ஏன் சொல்ல வேண்டும்? இஸ்லாம் என்று ஏன் சொல்ல வேண்டும்? கிறிஸ்தவம் என்று ஏன் சொல்ல வேண்டும்? அவசியம் இல்லையே! மதம் என்பது வாழ்க்கையில் சில கோட்பாடுகளை அனுசரிப்பது. அந்தக் கோட்பாடுகளை அனுசரிக்க எனக்கு எது மிகவும் தனிப்பட்டதாக உள்ளதோ, அதற்கு நான் எனக்கு என்று ஒரு வழிமுறை வைத்துக்கொள்ளவில்லை என்றால், மதம் என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை; அந்த அடையாளமே தேவை இல்லாமல் போய்விடும்.

நான் எப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும்? யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும்? எந்த மத வழக்கப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும்? என்னுடைய குழந்தைக்கு எப்படி எனது சொத்து போய்ச் சேர வேண்டும்? எப்படி நான் அவர்களை பாதுகாக்க வேண்டும்? என இவை அத்தனையும் வித்தியாசமாக இருப்பதால்தான் அதற்கு தனிச் சட்டமே வேண்டியதாக இருக்கிறது.

1937இல் ஷரியத் என்று ஒரு சட்டம் வரும்போது அதற்குக் காரணம் என்னவாக இருந்தது என்பதைப் பார்க்க வேண்டும். இந்த நாட்டில் இஸ்லாம் என்று தனியாக ஒரு மதம் இருக்கிறது. ஹிந்து என்று தனியாக ஒரு மதம் இருக்கிறது. கிறிஸ்தவம் என்று தனியாக ஒரு மதம் இருக்கிறது. பிரிட்டிஷ் அரசு இந்த நாட்டை ஆள்கிறது. அப்போது அவர்கள்,  ‘திருமணம், வாரிசு, சொத்துரிமை ஆகியவற்றில் இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களுக்காக நாங்கள் சட்டம் இயற்றுகிறோம் (அது இங்கிலாந்தில் உள்ள சட்டம்). இஸ்லாமியர்களுக்கு மௌல்விகள் என்ன சொல்கிறார்களே அதன்படி அவர்களுக்கான சட்டம் இருக்கட்டும்.  ஹிந்துக்களுக்கு சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பண்டிட்டுகள் சொல்லட்டும்’ என்று கூறினார்கள். பண்டிட்டுகள், மௌல்விகள், பாதிரியார்கள் ஆகியோர் அப்போதைய அரசுக்கு உதவும்படி சட்டம் கொண்டு வரப்பட்டது. அவர்கள் தனி மதம் எனும்போது தனிச் சட்டம் இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. இதன்மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, பிரிட்டிஷ் ஆட்சியின் மூலமாகத்தான் தனிச்சட்டங்கள் நமக்கு வந்தன; நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே இந்த தனிச்சட்டங்கள் இருந்தன என்பதைத்தான்.

நமது நாட்டில் பல்வேறு மதங்கள் இருக்கலாம், வாழ்க்கை முறைகள் இருக்கலாம் என்பதை நாம் அங்கீகரிப்பது ஏற்றுக்கொள்வது என்பதே அந்தந்த மதங்களுக்கென்று தனிச்சட்டங்கள் இருப்பதை அங்கீகரிப்பதில், ஏற்றுக்கொள்வதில்தான் இருக்கிறது. எனவே, இவற்றைப் போக்கிவிட்டு நாம் எல்லோரும் ஒன்றாக இருக்கலாம் என்று சொல்வது சரியல்ல.

இதில், அரசு எங்கு வருகிறது? ஒரு குடும்பத்தில் சொத்து எவ்வாறு பிரித்துக்கொள்வது என்பது அந்தக் குடும்பம் தொடர்புடையது. இதற்கும் அரசுக்கும் என்ன தொடர்பு? இதில் வித்தியாசம் இருப்பதால் அரசை நடத்துவது சிரமமாக உள்ளது என்று பிரதமர் எப்படி சொல்கிறார்? எனவே, இது முற்றாகத் தவறு. தனிச் சட்டத்தை நீக்கிவிட்டால் நாம் அனைவரும் ஒன்றாகிவிடுவோம் என்ற எண்ணம் அபத்தமானது. தனிச் சட்டங்களால் நமது சமூகத்தில் முரண்பாடு வந்ததுபோலப் பேசுவது சரியல்ல. முரண்பாடு வந்ததற்குக் காரணம் வேறு.

தொழில் தொடர்பான, ஒப்பந்தம் தொடர்பான, பொருட்களை விற்பது, வாங்குவது தொடர்பான என பல்வேறு சட்டங்கள் இந்தியாவில் அனைத்து மதத்தவர்களுக்கும் ஒன்றாகத்தான் இருக்கின்றன. இதேபோல, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற பல்வேறு சட்டங்களும் ஒன்றாகத்தான் இருக்கின்றன. இதில் மதத்துக்கு என்று தனிச் சட்டம் கிடையாது. பொது நலன் கருதி எவையெல்லாம் ஒன்றாக இருக்க வேண்டுமோ அதற்கான சட்டங்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கின்றன. மிகவும் தனிப்பட்ட விஷயங்களுக்கென்றுதான் தனிச் சட்டங்கள் இருக்கின்றன.

இதில் எப்போது சமம் என்பதற்கான சட்டம் வரும் என்றால், எப்போது சிறுபான்மையினர் கேட்கிறார்களோ அப்போதுதான் வர வேண்டும். எப்போது அவர்களுக்கு பொது சிவில் சட்டத்தில் நம்பிக்கை ஏற்படுகிறதோ அப்போதுதான் அது கொண்டுவரப்பட வேண்டும்.  ‘எங்களுக்கென்று இனி தனி சட்டம் தேவையில்லை. ஓர் ஹிந்துவை உணர்வால் எனது சகோதாரனாக நினைக்கிறேன். சட்டம் எனக்கு தரக்கூடிய வலிமையை நீங்கள் எடுத்துக்கொள்ள முடியும் என்றால் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் நல்லது இருந்தால் அதை நான் எடுத்துக்கொள்கிறேன்’ என்று சிறுபான்மையினர் சொல்லக்கூடிய நிலை இருக்க வேண்டும். தற்போது அப்படி ஒரு நிலை இருக்கிறதா என்றால் இல்லவே இல்லை.

பெரும்பான்மையாக இருப்பவர்களுக்கு என்ன சட்டம் இருக்கிறதோ அதை சிறுபான்மையினர் மீது திணிக்கக்கூடிய வகையில்தான் பொது சிவில் சட்டம் இருக்கும் என்றும், பாகுபாடு இன்றி பார்க்கக்கூடிய நிலை இருக்காது என்றுமே எனக்குத் தோன்றுகிறது. பெரும்பான்மை சமூகம் நினைக்கும் விதமாக பொது சிவில் சட்டம் வருமானால் அது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். எப்போது நமது சமூகம் பெரும்பான்மை – சிறுபான்மை என்று பார்க்காமல், சட்டத்தின் நல்ல அம்சங்களைப் பார்க்கக்கூடிய பக்குவ நிலைக்கு வருகிறதோ அப்போதுதான் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். எது நல்லது என்பது இயல்பாக ஏற்பட வேண்டும். இது பெருமளவில் பேசப்பட வேண்டும்; விவாதிக்கப்பட வேண்டும். எந்தச் சட்டத்தில் வலு அதிகம் என்பது தெரிய வேண்டும். இஸ்லாமிய சட்டங்களில் இருக்கும் வலுவைப் புரிந்து கொண்டு ஏற்கக்கூடிய பக்குவம் நமக்கு இருக்க வேண்டும். ஆனால், அத்தகைய பக்குவமற்ற நிலைதான் தற்போது இருக்கிறது.

***

சொத்துரிமையும் பொது சிவில் சட்டமும்: 

பொது சிவில் சட்டம் குறித்து யோசிக்கும் முன், நமது வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்று பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்த சட்டங்கள் எப்படி இருந்தன என்றால், ஒரு குடும்பத்தில் அப்பாவின் சொத்துகள் பிள்ளைக்குத் தான் என்று இருந்தது. அந்தக் குடும்பத்தின் பெண்ணை, 14, 15 வயதிலேயே திருமணம் செய்து கொடுத்துவிடுவார்கள். அந்தப் பெண், வேறொரு வீட்டிற்குச் சென்று விடுகிறார். அப்பாவும் பிள்ளையும்தான் ஒன்றாக இருக்கிறார்கள். அதுபோன்ற ஒரு சமூகச் சூழலில் சட்டம் எப்படி இருந்தது என்றால், சமுதாய வாழ்க்கை முறை எப்படி இருந்ததோ அப்படித்தான் சட்டமும் இருந்தது. அதன் காரணமாகத்தான் அப்பாவின் சொத்து பிள்ளைக்கு என்று இருந்தது.

‘இதுபோன்ற சட்டத்தை மாற்ற வேண்டும். பெண்களுக்கு சம நீதி; சம உரிமை இருக்க வேண்டுமானால், அப்பாவின் சொத்து பிள்ளைக்கு மட்டும்தான் என்பது சரியல்ல. பெண்ணுக்கும் இருக்க வேண்டும். தற்போது முழு உரிமை இல்லாத சொத்தாகத்தான் நாம் பெண்ணுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறோம். அப்படித்தான் சட்டம் இருக்கிறது. எனவே, அதை மாற்ற வேண்டும்’ என்று நினைத்து 1956-இல் ஹிந்துக்களுக்கு இருந்த தனிச் சட்டத்தை நாம் மாற்றினோம். இதில், ஹிந்து திருமணச் சட்டம், ஹிந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம், ஹிந்து வாரிசு உரிமைச் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்தோம். இவை ஹிந்துக்கள் அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்; பெண்களுக்கு சம உரிமை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாம் சட்டத்தை இயற்றினோம்.

இதேபோல, நமது நாட்டில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு சட்டம் கொண்டு வர முடியுமா என்றால், அந்த சமயத்தில் அவர்களுக்குத் தனியாக சட்டம் இருந்தது. சொத்துக்களை எப்படிப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு அவர்களிடம் சட்டம் இருந்தது. தந்தையின் சொத்து எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும், அதில் யாருக்கு எத்தனை பாகம் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் சட்டமாக இருந்தது. அதேபோல, மகனின் சொத்தில் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பாகம் இருந்தது. ஆனால், ஹிந்துக்கள் விஷயத்தில் அப்படி அல்ல. இறந்து போன ஹிந்து மகனின் சொத்தில் அப்பாவுக்கு உரிமை இல்லை. அம்மாவுக்குத்தான் உரிமை. இஸ்லாத்தில் அப்பாவுக்கும் உரிமை, அம்மாவுக்கும் உரிமை.

ஷரியத்தில் உள்ள நல்ல அம்சங்களை ஏற்கும் மனநிலை முக்கியம்: 

பொது சிவில் சட்டத்துக்காக நாம் சட்டத் திருத்தம் கொண்டு வருவதாக இருந்தால், இஸ்லாத்தில் சொல்லப்பட்ட இந்த விஷயத்தை நாம் ஏற்றுக்கொள்ளலாமா என்பது குறித்து நாம் பரிசீலிக்க வேண்டும். அதாவது, ஷரியத் சட்டத்தில் வலுவாக உள்ளவற்றை நாம் எடுத்துக்கொள்ள முடியுமா என்று பார்க்கும் நிலை இருக்க வேண்டும். ஒவ்வொரு மதத்தவரும் எந்தச் சட்டத்தில் வலு இருக்கிறது என்பதை ஆரோக்கியமான முறையில் ஆராயக்கூடிய நிலை இருக்க வேண்டும். பெரும்பான்மை – சிறுபான்மை என்று பார்க்காமல் பண்பட்ட நிலையில் சட்டங்களைப் பார்க்க சமூகத்தால் எப்போது முடிகிறதோ அப்போதுதான் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

இந்துக்களுக்கான சட்டத்தில் 7 வயது வரை பெண்ணுக்கு அம்மாதான் பாதுகாவலர்; 7 வயதுக்குப் பிறகு அப்பாதான் பாதுகாவலர். இது ஓர் அபத்தமான சட்டம். ஏனெனில், அப்பாவும் அம்மாவும் பிரிந்துவிட்டால், குழந்தையை தனது கட்டுப்பாட்டுக்குள் அப்பா எடுத்துக்கொள்ளலாம். இந்தச் சட்டம் பிறகு மாற்றப்பட்டது. 7 வயதுக்குப் பிறகு அப்பாதான் பாதுகாவலர் என்று சட்டம் சொன்னாலும், பெண் குழந்தை அம்மாவிடம்தான் இருக்க வேண்டும் என்பதாக தீர்ப்பு அளிக்கப்பட்டு சட்டம் மாற்றப்பட்டது.

7 வயது வரைதான் அம்மா பாதுகாவலர் என்பதை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை. பருவமடையும் வரை அம்மாதான் பாதுகாவலர். ஏனெனில், பெண் குழந்தைகளுக்கு அந்தக் காலகட்டம் மிகவும் உணர்ச்சிபூர்வமானது. அதை அம்மா மூலம் புரிந்துகொள்வது என்பது மிகவும் அவசியம். எனவே, பாதுகாவலர் குறித்துப் பேசும்போது இஸ்லாத்தில் உள்ள வலு குறித்து பார்க்க வேண்டும். இதை ஆழமாகப் புரிந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் நமக்கு ஏற்பட வேண்டும். ஆனால், அந்த பக்குவமற்ற நிலைதான் தற்போது உள்ளது.

கோவா பொது சிவில் சட்டம் – ஒரு பார்வை: 

நமது நாட்டில் பொது சிவில் சட்டம் ஏதாவது ஒரு பகுதியில் அமல்படுத்தப்பட்டு, அது வழி வழியாக இருந்தது என்றால், அது கோவாதான். கோவாவை ஆட்சி செய்த போர்ச்சுக்கல், அப்போது பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணித்தது. இயலாமை காரணமாக அப்போது மக்கள் அதனை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், தற்போது நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். கோவாவில் போர்ச்சுக்கீசிய ஆட்சியாளர்கள் அறிவித்ததைப் போல, திடீர் என எல்லாவற்றையும் ஒன்றாக மாற்ற வேண்டும் என்று இந்திய அரசு சொல்லப் போகிறதா? அப்படிச் சொன்னால் அது ஜனநாயகமாக இருக்க முடியாது.

மற்றொறு முக்கிய விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். கோவாவில் பொது சட்டம் அமலில் இருப்பதால், அங்கு மத வித்தியாசம் இல்லாமல் மக்கள் சந்தோஷமாக, நாட்டின் பிற பகுதி மக்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்கிறார்கள் என்று ஓர் ஆய்வு முடிவை அரசால் கொண்டு வர முடியுமா? அப்படி கொண்டு வரட்டும். நான் ஒப்புக்கொள்கிறேன். அதுபோல ஒரு நிரூபணமும் இல்லை; நம்பிக்கையும் இல்லை. சட்டத்தைப் பொதுவாக்கினால்தான் ஒரு ஹிந்து, ஒரு முஸ்லிமை சகோதரனாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று யாராவது சொல்ல முடியுமா?

கோவாவின் வரலாறு காரணமாக அங்கு பொது சிவில் சட்டம் அமலில் இருக்கிறது. 400 வருட வரலாறு அது. அந்த 400 வருட வரலாற்றை ஒரே நாளில் மாற்றப் பார்ப்பது சரியல்ல. அதுவும் கோவா எனும் ஒரு சிறிய நிலப்பகுதியில் மட்டுமே பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதுபோல நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அப்போதைய பிரிட்டீஷ் ஆட்சியால் கொண்டு வந்திருக்க முடியுமா என்றால், நிச்சயம் கொண்டு வந்திருக்க முடியாது. கொண்டு வந்திருந்தால் பெரிய கலவரம் நிகழ்ந்திருக்கக் கூடும். அதனால்தான், அப்போது நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் கொண்டு வரவில்லை.

நீதிமன்றங்களும் பொது சிவில் சட்டமும்: 

அரசியல் சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைக் கொள்கையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதால், அதை அனுசரித்து நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது நீதிமன்றத்தின் பணியல்ல; அரசாங்கம்தான் செய்ய வேண்டும் என்று கூறியது.

பொது சிவில் சட்டம் கூடாது என்பதோ, அதை வலியுறுத்தும் சட்டப்பிரிவு 44-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பதோ வாதமல்ல. இட ஒதுக்கீடு 15 வருடங்களுக்கு மேல் இருக்கக் கூடாது, ஹிந்தி தேசிய மொழியாக இருக்க வேண்டும், 15 வருடங்களுக்குப் பிறகு அதுதான் அலுவலக மொழியாகவும் இருக்க வேண்டும் என்றெல்லாம் சட்டத்தில் சொல்லப்பட்டது. அவ்வாறு சொல்லப்பட்டதன் காரணம், அது அப்போதைய எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பின்படி சமூகம் மாறிவிட்டதா என்றால் மாறவில்லை.

அதுபோலத்தான் பொது சிவில் சட்டமும். அதேநேரத்தில் சட்ட ரீதியாக அநீதி எங்காவது ஒரு இடத்தில் இருந்தால், அப்போதெல்லாம் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அது உண்மைதான். அதேநேரத்தில், பொது சிவில் சட்டம் கொண்டு வராவிட்டால் சமுதாயத்தில் இணக்கம் ஏற்படாது என்று நீதிமன்றம் சொல்லி இருக்கிறதா? எங்கும் யாரும் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் அதைவிட முட்டாள்தனம் வேறு இல்லை. அத்தகைய அரசியல் புரிதல், சமூகப் புரிதல் இல்லாதவர்களை நாம் நீதிபதிகளாக உட்காரவைக்கவில்லை.

பொது சிவில் சட்டம் அரசியல் சாசனத்தில் இருக்கிறது. அதைக் கொண்டுவர வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கான தருணம் மிகவும் முக்கியம். தற்போதைய அரசு பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வந்தால் பிளவு இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும். தனிச் சட்டம்தான் சிறுபான்மையினருக்கு மிகச் சிறந்த பாதுகாப்பு. அவர்களின் பாதுகாப்புக்கு நாம் வேறு எதையும் செய்ய வேண்டாம். சில விஷயங்கள் நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அதன் முக்கியத்துவத்தை உணர வேண்டிய அவசியம் இருக்கிறது.

மக்கள் தொகை மாற்றமும் பொது சிவில் சட்டமும்: 

இஸ்லாத்தில் ஆண்கள் 4 பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம் என சட்டம் அனுமதிப்பதால் அந்த மதத்தவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கிறதே என்ற ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. நாட்டில் மதங்களின் சதவீதத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டால் அது மிகவும் ஆபத்து என்று சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதி சொல்கிறார். ஒரு காலத்தில் நானும் அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தேன். அந்த நம்பிக்கை தற்போது எனக்கு இல்லை. இந்தியாவில் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டால் நாட்டின் தன்மை மாறிவிடும் என்று கூறுவது தேவையற்ற ஒரு பயம். ஹிந்து மதத்தைப் பிடித்துக்கொள்வதன் மூலமாகத்தான் நாம் நமது நாட்டின் பெருமையையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றி இருக்கிறோம் என்று நினைப்பதில் இருந்து வரக்கூடிய தவறு அது.

மதரீதியாக மக்கள்தொகை மாறுவதால் நாட்டின் இயல்பு மாறிவிடும் என்று கூறுவதை நான் நம்பவில்லை. அதுபோன்ற ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்க வேண்டிய அவசியம் இல்லை. முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்க, முஸ்லிம் ஆண்கள் 4 மனைவி வைத்துக்கொள்வதுதான் காரணம் என்பது, அடிப்படையில் தவறான கருத்து. உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் இது குறித்த புள்ளிவிவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதன்படி, முஸ்லிம்களைவிட ஹிந்துக்கள்தான் ஒரு மனைவிக்கும் அதிகமாக மனைவிகளைக் கொண்டிருக்கிறார்கள். சட்டத்தில் இருப்பதால் ஒவ்வொரு இஸ்லாமியரும் 4 மனைவியை வைத்திருக்கிறார்களா என்றால் அப்படி இல்லை. ஒவ்வொருவரும் ஒரு மனைவியைத்தான் வைத்திருக்கிறார்கள். ஒருவர் 4 மனைவி வைத்துக்கொள்ளலாம் என்பது சமூகத்தில் அந்தக் காலத்தில் எப்போதோ ஏற்பட்டது.

ஓர் அரசு ஊழியர் இறந்துவிட்டால் பிரச்சினை எங்கு வருகிறது என்று காவல் துறைக்கோ, நீதிமன்றத்திற்கோ சென்று பார்த்தால், ஹிந்துக்கள் மத்தியில்தான் வருகிறது என்பது புரியும். இறந்த ஒருவருக்கு பலர் உரிமை கோருவதால்தான் இந்தப் பிரச்சினை. இதுதான் தற்போதைய உண்மையான நிலை. சிறுபான்மையினரின் மக்கள்தொகை அதிகமாகிறதா என்றால் அதுவும் ஆகவில்லை.

இந்தியாவில் ஹிந்துக்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் வகையில்தான் ஹிந்துஸ்தானம் என்பது இருக்க முடியும் என்பது முட்டாள்தனம். இந்தோனேஷியா சென்று பார்த்தால் தெரியும். அவ்வளவு இஸ்லாமியர்கள் இருக்கக்கூடிய அந்த நாட்டில் அவர்கள் பேசக்கூடிய ஹிந்து நாகரிகம், அவர்களுக்குத் தெரிந்த ராமாயணம், மகாபாரதம் இங்கு நமக்குத் தெரிவதில்லை. அவர்கள் அத்தனை பேரும் முஸ்லிமாகத் தான் இருக்கிறார்கள். ஆனாலும், மத ரீதியாக வேறாகப் போனாலும், கலாச்சார ரீதியாக ஹிந்து மதத்தின் வலுவை அவர்களால் பார்க்க முடிகிறது.

இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பும் பொது சிவில் சட்டமும்: 

பொது சிவில் சட்டம் இல்லாததால் இஸ்லாமியப் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. நான் கேட்கிறேன். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமை இல்லை என்றால் சம உரிமை வேண்டும் என்பதற்கான கோரிக்கை முஸ்லிம் பெண்களிடம் இருந்து வர வேண்டும். மாறாக, நான் உனக்கு உரிமை கிடைக்கச் செய்கிறேன் என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமானது. உன்னைவிட எனக்கு கெட்டிக்காரத்தனம் இருக்கிறது, உன்னால் உன்னை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை, நான் பாதுகாப்பு கிடைக்கச் செய்கிறேன் என்று சொல்வதைப் போன்றது இது. இதில் எந்த நியாயமும் இல்லை.

மாற்றம் தேவை என்றால் அதை அவர்கள் சொல்ல வேண்டும். நாட்டில் சட்டங்கள் மாறி இருக்கின்றன என்றால், அவர்கள் என்ன வழக்குப் போடாமல் இருந்தார்களா? தனக்கு ஜீவனாம்சம் வேண்டும் என்று வழக்குப் போட்டது ஷா பானு என்ற இஸ்லாமியப் பெண்மணிதான். வேறு யாரும் போடவில்லை. இஸ்லாத்தில் என்ன குறை இருக்கிறதோ அந்தக் குறையை நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி அதற்கு இருக்கிறது; பரிகாரம் கேட்பதற்கு அதில் வழி இருக்கிறது.

இஸ்லாமிய சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால், அது அவர்களின் தலைவர்கள் மூலமாகத்தான் ஏற்பட வேண்டும். அந்த மதத்துக்கு வெளியே இருப்பவர்கள் சொல்வதால் மாற்றம் வராது. அந்த மதத்தில் படித்தவர்கள், கெட்டிக்காரர்கள் குறைந்த எண்ணிக்கையில் இல்லை. அவர்கள் மூலமாகத்தான் மாற்றம் ஏற்பட வேண்டும். அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த வேறொருவர் முனைவது அபத்தம்.

அதனால்தான் ஈவெராவின் வாதத்தில்கூட ஒரு நியாயம் இருக்கிறது. கடவுள் இல்லை என்று சொல்கிறாயே, உன்னால் தேவாலயத்தின் முன் சொல்ல முடியுமா, மசூதியின் முன் சொல்ல முடியுமா என்றெல்லாம் நாம் கேள்வி கேட்டிருக்கிறோம். ஆனால், அவரின் கவலை எல்லாம், அவரது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது பற்றியதுதான். அதை அவர் வெளிப்படையாகச் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், அப்படித்தான் அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பழங்குடி மக்களும் பொது சிவில் சட்டமும்: 

பழங்குடி மக்களிடையே பல்வேறுவிதமான சட்டங்கள் இருந்தன. எனவே, இந்துக்களுக்கான சட்டம் எதுவும் பழங்குடி மக்களுக்குப் பொருந்தாது. கணவன் இருக்கும்போதே ஒரு பெண் வேறொரு ஆணோடு தொடர்பில் இருக்க முடியும். அதை மாற்ற ஒரு சட்டம் கொண்டு வந்து அவர்களை மேம்படுத்த வேண்டும் என்று சொன்னால் அதைவிட அபத்தம் வேறு கிடையாது. ஏனெனில், அவர்களின் வாழ்க்கை முறை அப்படித்தான் இருக்கிறது.

பழங்குடி மக்களுக்கும் பொது சிவில் சட்டம் பொருந்தும்படி சட்டம் கொண்டு வரும் துணிவு அரசுக்கு இருக்காது. அரசு அப்படி சொன்னால் பழங்குடி மக்கள் பழங்குடி மக்களாக இருக்க மாட்டார்கள். காடுகளில் வாழும் மக்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. அரசால் அங்கெல்லாம் செல்லவே முடியாது. அந்தக் காடுகளுக்கும் மேடுகளுக்கும் செல்ல முடியுமா? அவர்களை மாற்றினால்தான் நாடு செழிப்படையும் என்று சொன்னால் அதைவிட பொய் வேறு இருக்க முடியாது.

எத்தகைய புரிதல் தேவை?

சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லாத ஒரு சூழலில் அவர்கள் மீது ஒரு சட்டத்தைத் திணிப்பது கூடாது. அப்படி ஒரு சட்டத்தை திணிப்பதன் மூலம்தான் நாட்டில் இணக்கம் ஏற்படும் என்பதும் பெரும் பொய். அதை நாம் நம்பக் கூடாது. தற்போதைய ஆட்சியாளர்களின் எண்ணம் சரியில்லை. சிறுபான்மையினரை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதற்கு அவர்களிடம் திட்டமே இல்லை. அப்படிப்பட்ட ஒரு சூழலில், பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் சமுதாயம் சரியாகிவிடும் என்று கூறுவது உண்மையாக இருக்காது.

நமது நாட்டில் பொது சிவில் சட்டம் இல்லாததற்கு வரலாறுதான் காரணம். ஒரே நாட்டில் பல்வேறு விதமான சட்டங்கள் இருப்பது ஒன்றும் அபூர்வமான விஷயம் கிடையாது. பல்வேறு தனிச்சட்டங்கள் இருந்தாலும் ஒரே ஆட்சியைக் கொண்டு வர முடியும்,  நிர்வாகம் செய்ய முடியும் என்பது நமது நாட்டில் நிதர்சனமாக நடந்த விஷயம். நமது ராஜாக்கள் எல்லாம் அப்படித்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.

ஹிந்துத்துவம் என்பதைத் தாண்டி இந்தியத்துவம் என்பதாக நமது சிந்தனை இருக்க வேண்டும். நாம் மேம்பட வேண்டும். அரவணைத்துச் செல்லக்கூடிய தன்மையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அப்படித்தான் இருந்தோம். அதனால்தான் பார்சிகள் இங்கு வந்தார்கள். நாம் நமது மதத்துக்கு எந்த பெயரும் கொடுக்காமல் இருந்ததற்கு காரணமே, நமது வாழ்க்கை முறை வேறு விதமாக இருந்தது. நாம் அதை மறந்துவிடக் கூடாது.

  • குறிப்பு: தமிழகத்தைச் சார்ந்த நீதிபதி கே.கண்ணன், பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றியவர்.
  • நன்றி: இந்து தமிழ் திசை டிஜிட்டல் (ஆக. 3, 4, 2023)

$$$

Leave a comment