மதக் கோட்பாடுகளில் ‘பொது சிவில் சட்டம்’ தலையிடாது!

-பேரா. இரா.ஸ்ரீநிவாசன்

(நேர்காணல்: பால.மோகன்தாஸ்)

“மதக் கோட்பாடு என்பது வேறு; மத நடைமுறை என்பது வேறு. பொது சிவில் சட்டம் மதக் கோட்பாட்டில் தலையிடாது” என்கிறார் பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம.ஸ்ரீநிவாசன்.  ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அவர் அளித்த நேர்காணலின் (இரு பகுதிகள்) முழுத் தொகுப்பு இது… நேர்காணல்: திரு. பால.மோகன்தாஸ்

பொது சிவில் சட்டம் என்பது பாஜகவின் செயல்திட்டம் அல்ல. இது நமது அரசியல் சாசன முன்னோடிகள் பேசிய விஷயம். அரசியல் நிர்ணய சபையில் இது மிகப் பெரிய விவாதப் பொருளாக ஆகி இருக்கிறது. அரசியல் நிர்ணய சபை என்ன முடிவு எடுத்தது என்றால், நாடு சுதந்திரம் அடைந்ததும் உடனடியாக அதனை குடியரசு என அறிவிக்க வேண்டும் என்பதற்காக, விவாதம் நீண்டுகொண்டே சென்ற விஷயங்களை வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ் கொண்டு வந்தது. அப்படி வழிகாட்டும் நெறிமுறைகளின் கீழ் கொண்டு வரப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் பிரிவு 44-இல் உள்ள பொது சிவில் சட்டம். எனவே, அரசியல் நிர்ணய சபை முன்னோடிகளின் அங்கீகாரம் பெற்ற ஒரு விஷயம் இது. அரசியல் நிர்ணய சபையின் ஒப்புதல், அங்கீகாரம் இதற்கு உள்ளது.

இராம.ஸ்ரீநிவாசன்

நமது நாட்டின் நீதிமன்றங்களும் பொது சிவில் சட்டத்தை தொடர்ந்து வலியுறுத்தி இருக்கின்றன. உச்ச நீதிமன்றம் மட்டுமே இதுவரை 5 முறை பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. பல்வேறு உயர் நீதிமன்றங்களும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளன. சில நீதிமன்றங்கள், பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வராமல் இன்னும் ஏன் தாமதிக்கிறீர்கள் என்றும்கூட அரசை நோக்கி கேட்டிருக்கின்றன. ஏனெனில், தற்போதைய நிலையில், பல்வேறு சிவில் வழக்குகளில் நீதிமன்றத்திடம் தீர்வு இல்லை. எனவே, பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று நீதிமன்றங்கள் வலியுறுத்துகின்றன.

அரசியல் சாசன அங்கீகாரம், நீதிமன்ற அங்கீகாரம் உள்ள ஒரு விஷயம் இது. பொது சிவில் சட்டம் கட்டாயம் தேவை என எங்கள் கட்சி (பாஜக) கருதுகிறது. ஜனசங்கம் (பாஜகவின் முந்தைய வடிவம்) காலத்தில் இருந்தே இதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தேர்தல் அறிக்கைகளிலும், தீர்மானங்களிலும் இதை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். புதிதாக தூங்கி எழுந்து கனவு கண்டு நாங்கள் இதைக் கூறவில்லை. எங்கள் செயல்திட்டத்தில் இது எப்போதுமே இருக்கிறது.

பொது சிவில் சட்டம் என்பது மத வழிபாட்டில், மத சுதந்திரத்தில் தலையிடக்கூடிய விஷயம் என்று சிலர் பொய் பிரசாரம் செய்கிறார்கள். இது உண்மை அல்ல. பொது சிவில் சட்டம் என்பது திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்துரிமை, உயில் எழுதுவது, தத்துக் கொடுப்பது ஆகிய விஷயங்களில் பொதுவான சட்ட நடைமுறை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தக் கூடியது மட்டுமே. முஸ்லிமோ, கிறிஸ்தவரோ,  ஹிந்துவோ அவர்கள் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும், எந்த மத அடிப்படையில்; எந்த சடங்குகளின் அடிப்படையில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் எந்தத் தலையீடும் இருக்காது. எந்த ஒரு மதத்திலும் அதன் கோட்பாடுகளில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களில் பொது சிவில் சட்டம் தலையிடாது.

மதக் கோட்பாடு என்பதையும் மத நடைமுறை என்பதையும் இரண்டாகப் பிரிக்க வேண்டும். கோட்பாடுகளில் பொது சிவில் சட்டம் தலையிடாது. அதேநேரத்தில், மத நடைமுறை எனும் பழக்க வழக்கங்களில் இது மாறுதலை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு, இஸ்லாமியர்கள் பின்பற்றும் விவாகரத்து முறை என்பது மதக் கோட்பாட்டின் கீழ் வராது. உடனடி முத்தலாக் என்பது தங்கள் நடைமுறை என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். ஆனால், உடனடி முத்தாலாக்கை 17 முஸ்லிம் நாடுகள் தடை செய்துள்ளன. 18வது நாடாகத்தான் இந்தியா தடை செய்துள்ளது. ஏனெனில், இஸ்லாத்தில் அப்படி இல்லை. அதேபோல, முஸ்லிம் ஆண்கள் 4 திருமணம் செய்து கொள்ளலாம் என்பதும் அவர்களின் மதக் கோட்பாடு அல்ல. அவர்களின் வழக்கத்தில் வேண்டுமானால் அது இருந்திருக்கலாம். எனவே, இதில் தலையிடுவது என்பது மதத்தில் தலையிடுவதாக, மத சுதந்திரத்தில் தலையிடுவது என்பதாக ஆகாது.

ஹிந்துக்களில்கூட கடந்த காலங்களில் 12 வயதில், 13 வயதில் திருமணங்கள் நடந்தன. குழந்தைத் திருமணங்களைத் தடை செய்து பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18; ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21 என்று நாம் மாற்றினோம். ஹிந்துக்களில் பலதார திருமண முறை இருந்தது. அதை ஒருதார திருமண முறையாக அம்பேத்கர் மாற்றினார். ஹிந்துக்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஏனெனில், இதற்கும் மதத்திற்கும் தொடர்பு இல்லை. வழக்கத்தில் இருந்த ஒரு விஷயம்; அவ்வளவுதான். தீண்டாமை என்பதும் நடைமுறையில் இருந்தது. அதை தடை செய்து, மீறுபவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

சீக்கியர்களை எடுத்துக்கொண்டால், அவர்களின் குருவான குரு கோவிந்த் சிங், சீக்கியர்களுக்கு எவை எல்லாம் அடிப்படை என்பதைச் சொல்லி இருக்கிறார். தாடி வைத்திருக்க வேண்டும், தலையில் நீண்ட சிகை வைத்திருக்க வேண்டும், கத்தி வைத்திருக்க வேண்டும், வெள்ளியில் கங்கணம் அணிந்திருக்க வேண்டும், கவுபீணம் (கச்சை) அணிந்திருக்க வேண்டும் என அவர் கூறி இருக்கிறார். ஒரு ஆண் இந்த ஐந்தையும் பின்பற்றினால்தான் அவர் சீக்கியர் என அந்த மதத்தில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. அரசு அதில் தலையிட முடியாது. ஏனெனில், அது அவர்களின் அடிப்படை மதக் கோட்பாடு. ஆனால், ஒரு சீக்கியர் எத்தனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது பற்றி குரு கோவிந்த் சிங் எதையும் சொல்லவில்லை. எனவே, பலதார திருமண முறைக்கு அவர்கள் உரிமை கோர முடியாது. முஸ்லிம்களும் அப்படித்தான். பல முஸ்லிம் நாடுகள் பலதார திருண முறையைத் தடை செய்துள்ளன.

விவாகரத்து விஷயத்தில் இஸ்லாமியர்களுக்கு தனி நடைமுறை இருக்கிறது. விவாகரத்தில் பொதுவான நடைமுறை வர வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். இங்கு மதக் கோட்பாட்டையும், மத நடைமுறையையும் இரண்டாகப் பிரிக்க வேண்டும். இஸ்லாத்தில் ஒரு நடைமுறை இருக்கிறது என்று சொன்னால், அது இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று ஆகிவிடாது. காரணமே இல்லாமல் விவாகரத்து செய்யுங்கள் என்று நபிகள் நாயகம் சொல்லி இருக்கிறாரா? அது முஸ்லிம்களின் மதக் கோட்பாட்டில் வரக் கூடியதா? இல்லையல்லவா? அவர்கள் ஒரு வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். விவாகரத்து என்று வரும்போது அவர்களும் சரியான காரணம் சொல்ல வேண்டும் என்று சொல்லலாம் அல்லவா?

ஷா பானு வழக்கில் என்ன ஆனது? அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் (1985) தீர்ப்பளித்தது. அதற்காக, (அந்தத் தீர்ப்பை மாற்றுவதற்காக) அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி சட்டத்தையே மாற்றினார் இல்லையா? அப்படி இருக்க வேண்டாம் என்று நாங்கள் சொல்கிறோம். ஜீவனாம்சம் கொடுக்க வேண்டுமா, கூடாதா என்பதில் இஸ்லாத்தில் கடுமையான விதிகள் எதுவும் கிடையாது. அவர்கள் சில விஷயங்களை நடைமுறையில் வைத்திருக்கிறார்கள். அவற்றை காலத்திற்கு ஏற்றதுபோல மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஷரியத் சட்டம்தான் இஸ்லாமியர்களுக்கு இருக்க வேண்டும் என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆனால், ஷரியத் சட்டம் எப்போது வந்தது? 1937-இல்தான் ஷரியத் சட்டம் வந்தது. பிரிட்டிஷ் அரசுக்கும் ஜின்னாவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சட்டமாக அது கொண்டு வரப்பட்டது. ஆயிரம் வருடங்களாக இந்தியாவில் இஸ்லாம் இருக்கிறது. 1937க்கு முன் இந்தியாவில் முஸ்லிம்களுக்கான சட்டம் எது? 1937க்கு முன் எந்த சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் சொத்துரிமை, ஜீவனாம்சம், திருமணம், விவாகரத்து ஆகியவற்றை மேற்கொண்டார்கள். ஔரங்கசீப் ஆட்சிக் காலத்தில்கூட இந்தியாவில் ஷரியத் சட்டம் இல்லையே? ஜின்னாதான் அதைக் கொண்டு வந்தார்.

இது குறித்து அரசியல் சாசன சபையில் பேசிய அம்பேத்கர்,  ‘ஆயிரம் ஆண்டுகளாக ஒவ்வொரு பகுதியிலும் முஸ்லிம்கள் வாழக்கூடிய இடத்தில் உள்ளூர் வழக்கம், நடைமுறை என்ன இருந்ததோ அதைத்தான் முஸ்லிம்களும் பின்பற்றினார்கள். உதாரணத்திற்கு, கேரளாவில் மருமக்கள் தாயம் என்ற முறை இருந்தது. அதாவது, அம்மா சொத்து மகளுக்குச் செல்லும், பிறகு பேத்திக்குச் செல்லும். அதாவது தாய்வழி முறைப்படி சொத்து உரிமை மாறும். அங்கு வசித்த மாப்ளா முஸ்லிம்கள் அதே முறையைத்தான் பின்பற்றினார்கள். ஷரியத் என்பது இப்போது வந்ததுதானே?’ என்று கூறி இருக்கிறார்.

தத்தெடுப்பதை இஸ்லாம் தடை செய்திருக்கிறது. முகம்மது நபிகள் அதை தடை செய்திருக்கிறார். ஆனால், ஜின்னா அதை மாற்றி ஷரியத் சட்டப்படி தத்தெடுக்கலாம் என்று கொண்டு வந்தார். அதேபோல், இஸ்லாமிய சட்டத்தில் உயில் எழுதக் கூடாது என்று இருக்கிறது. உயில் எழுதலாம் என ஷரியத் சட்டத்தில் ஜின்னா கொண்டு வந்தார். இஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை எப்படி இருக்க வேண்டும் என்பதை முகம்மது அலி ஜின்னா மாற்றி இருக்கிறார்.

அதேபோல், சொத்து விவகாரத்தில் நிலச்சுவான்தாரர்களுக்கு சாதகமாக ஷரியத் சட்டத்தை ஜின்னா கொண்டு வந்தார். ஏனெனில், இன்றைய பாகிஸ்தானில் முஸ்லிம் லீகை ஆதரித்தவர்களில் பலர் மிகப் பெரிய நிலச்சுவான்தாரர்கள். அவர்களுக்கு சாதகம் செய்ய வேண்டும் என்பதற்காக இஸ்லாத்தில் இருப்பதுபோல இல்லாமல் சட்டத்தை ஜின்னா மாற்றினார். இஸ்லாத்தில் சொல்லப்படாத விஷயங்கள், இஸ்லாத்தில் மறுக்கப்பட்ட விஷயங்கள் பல ஷரியத் சட்டத்தில் இருக்கின்றன. இவை குறித்து நீதிமன்றங்களில், விவாத அரங்கங்களில் விவாதம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. முஸ்லிம்கள் தரப்பில் யாரும் இதை மறுக்கவில்லை.

140 கோடி மக்கள் வாழக்கூடிய ஒரு நாட்டில், ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு நடைமுறை என்று இருக்கும்போது நிறைய சட்டச்சிக்கல்கள் ஏற்படுகின்றன. வழக்குகளை நடத்துவதில் சிரமங்கள் இருக்கின்றன. மதம் சார்ந்த காரணங்களுக்காக சொத்து சம்பந்தப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவற்றுக்குத் தீர்வு காண வேண்டுமானால், பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

***

பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தால் பெண்களுக்கு அதிகப் பலன் கிடைக்கும். 1989-இல் கருணாநிதி முதல்வராக இருக்கும்போது பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் கொண்டு வந்தார். பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு என்றது அந்தச் சட்டம். தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் பெண்களுக்கு, கிறிஸ்தவப் பெண்களுக்கு அதன்படி சொத்து கிடைத்ததா என்றால் இல்லை. ஏனெனில், அவர்கள் இந்த சட்டத்தின் கீழ் வர மாட்டார்கள். அப்படி என்றால், அந்தச் சட்டத்தையே  ஹிந்துப் பெண்கள் சொத்துரிமைச் சட்டம் என்ற பெயரில் கருணாநிதி கொண்டு வந்திருக்க வேண்டும். பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் என்று கொண்டு வந்திருக்கக் கூடாது.

குறிப்பாக, பொது சிவில் சட்டத்தை முஸ்லிம் பெண்கள் மிகவும் வரவேற்பார்கள். பொது சிவில் சட்டம் வந்துவிட்டால், ஒரு முஸ்லிம் ஆண் 4 திருமணம் செய்து கொள்ள முடியாது அல்லவா? எந்த முஸ்லிம் பெண்ணும் தனது கணவன் இன்னும் 3 பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்பதை ஏற்க மாட்டார்கள். எனவே, இந்தச் சட்டம் வந்தால் முஸ்லிம் சகோதரி மகிழ்வார். நினைத்தவுடன் முத்தலாக் பண்ண முடியாது; விவாகரத்து நிகழ்ந்தால், ஹிந்துப் பெண்ணுக்கு என்ன ஜீவனாம்ச உரிமை உண்டோ அது முஸ்லிம் பெண்ணுக்கும் கிடைக்கும்; சொத்தில் பங்கு கிடைக்கும். எனவே, பெண்கள்தான் இதில் அதிகமான பலன்பெறக் கூடியவர்கள். எனவே அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு ஆதரிப்பார்கள்.

பொது சிவில் சட்டம் வந்தால், ஹிஇந்து கூட்டுக் குடும்பங்களுக்கு இருக்கும் வருமான வரிச்சலுகை பாதிக்கப்படும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஹிந்து கூட்டுக் குடும்ப முறை கணக்கின் கீழ் வருமான வரிச்சலுகை பெறக் கூடியவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருக்கும். கூட்டுக் குடும்ப முறை என்பது நாட்டில் மிக வேகமாக மாறி இருக்கிறது. சிலர் வருமான வரிச்சலுகைக்காக கூட்டுக் குடும்பக் கணக்கை வைத்திருக்கிறார்கள்.

நாடு ஒரு பொதுவான முறையை நோக்கிச் செல்லும்போது சிலருக்கு சிரமம் இருக்கும். நில உச்சவரம்புச் சட்டம் வந்தபோதுகூட, அதிக நிலம் வைத்திருந்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள். நான்கு வழிச் சாலையை உருவாக்கும்போது சாலையோரம் நிலம் வைத்திருப்பவர்களிடம் இருந்து அரசு நிலத்தை கையகப்படுத்தியதால், பலர் பாதிக்கப்பட்டார்கள். பொது நலன் கருதி இதை நாம் ஏற்கத்தான் வேண்டும். அதுமட்டுமல்ல, ஹிந்து கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லையே?

பொது சிவில் சட்டம் வந்தால் பழங்குடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற வாதம் இருக்கிறது. முதலில் பொது சிவில் சட்டம் குறித்த வரைவு மசோதா வெளிவரட்டும். தற்போது அந்த வரைவு மசோதாவை சட்ட ஆணையம் தயாரித்து வருகிறது. ஆனால், அது எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்று தெரியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அது அறிமுகப்படுத்தப்படலாம். அப்போது, அந்த வரைவு மசோதா பொது விவாதத்திற்கு விடப்படும். அப்போது எல்லோரும் கருத்துச் சொல்வார்கள். பழங்குடி மக்களும் தங்கள் கருத்தைச் சொல்வார்கள். அப்போது இதனைப் பார்த்துக்கொள்வோம். வரைவு மசோதா வருவதற்கு முன் ஏன் அதனை எதிர்க்க வேண்டும்?

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் விஷயம் என்பது மிக நீண்ட நடைமுறையைக் கொண்டது. தடாலடியாக செய்யக்கூடிய ஒன்று அல்ல. வரைவு மசோதா வந்த பிறகும்கூட அதில் மாற்றங்கள் ஏற்படலாம். ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் இந்தசட்டத்தைக் கொண்டு வர பாஜக விரும்புகிறது. பெரும்பான்மை – சிறுபான்மை அடிப்படையில் இது திணிக்கப்படாது. மக்கள் இதை இயல்பாக ஏற்றுக்கொள்வார்கள்.

பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடியே தொடங்கி வைத்திருப்பதால், நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டே அவர் இது குறித்துப் பேசிய இருப்பதாக சிலர் விமர்சிக்கிறார்கள். தேர்தலுக்காகத்தான் இதை செய்கிறார் என்றே வைத்துக்கொள்வோம்.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தினால், அமல்படுத்துபவர்களுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்றால், இந்தச் சட்டத்திற்கு மக்கள் ஆதரவு அதிகம் என்றுதானே அர்த்தம்? இதனால் இந்து – முஸ்லிம் இடையே பிளவு ஏற்படுமா என்றால், நிச்சயம் ஏற்படாது. ஆனால், காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் இது மக்களைப் பிளவுபடுத்தும் என்றுதான் பிரசாரம் செய்வார்கள். அவர்களுக்கு முஸ்லிம்களின் பிரதிநிதி என்றால், எல்லை காந்தி என்று சொல்லப்பட்ட கான் அப்துல் கபார் கானோ, இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்த அபுல் கலாம் ஆசாத்தோ, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமோ அல்ல. அவர்களைப் பொருத்த வரை முஸ்லிம்களின் பிரதிநிதி என்றால், சையத் அகம்மது கான், முகம்மது அலி ஜின்னா ஆகியோர்தான். காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்டுகளும் எப்போதும் பிரிவினைவாதிகளையும் அடிப்படைவாதிகளையுமே ஆதரிக்கிறார்கள்.

ஹிந்து – முஸ்லிம் பிரச்சினை எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைப்பதுதான் இதற்குக் காரணம். அயோத்தி ராமர் கோயில் விஷயத்திலும் அப்படித்தான் சொன்னார்கள். ஆனால், நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது எத்தனை இடத்தில் பிரச்சினை ஏற்பட்டது? ஒரு சின்ன ஆர்ப்பாட்டமாவது நடந்ததா? ஆனால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக ஆகியவை பூச்சாண்டி காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். எனவே, பொது சிவில் சட்டம் வந்தால் ஹிந்து- முஸ்லிம் வெறுப்பு ஏற்படாது. எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள்.

பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பவர்கள் முழுக்க முழுக்க மதவாதிகள். மத அடிப்படையில் சிந்திப்பவர்கள். அவர்களிடம் எந்தத் தர்க்கமும் கிடையாது. ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு சிவில் சட்டம் எந்த நாட்டில் இருக்கிறது என்று கேட்டால் அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. பொது சிவில் சட்டம் கூடாது எனும்போது, பொது கிரிமினல் சட்டம் இருக்கலாமா என்று கேட்டால், அதற்கும் அவர்களிடம் பதில் இல்லை. ஷரியத் சட்டம் 1937இல் தானே வந்தது, அதற்கு முன் ஆயிரம் ஆண்டுகளாக உள்ளூர் வழக்கத்தில் இருந்த சட்டத்திற்குத்தானே முஸ்லிம்களும் கட்டுப்பட்டார்கள் என்று கேட்டால் அதற்கும் பதில் கிடையாது.

இஸ்லாத்தில் இருக்கும் சட்டத்திலேயே மாற்றம் கொண்டு வந்துதானே ஜின்னா ஷரியத் சட்டத்தைக் கொண்டு வந்தார் என்று சொன்னால், அதற்கும் பதில் கிடையாது. எதற்கும் இவர்களிடம் பதில் கிடையாது. ஆனால், திரும்பத் திரும்ப பொது சிவில் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று சொல்ல வேண்டும்; பாஜகவை மத அடிப்படைவாதக் கட்சியாக சித்தரிக்க வேண்டும்; முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி என சித்தரிக்க வேண்டும்; அதன்மூலம் சிறுபான்மையினரின் வாக்கு வங்குவங்கியை தங்கள் பக்கம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தாண்டி, அவர்களிடம் நேர்மறை திட்டம் எதுவும் கிடையாது.

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டிய ஒன்று. இதை எதிர்ப்பதுதான் வகுப்பு வாதமே தவிர, கொண்டு வர வேண்டும் என்பது அல்ல. மதச்சார்பற்றவாதிகள் தங்களை கொஞ்சம் திருத்திக் கொள்ள வேண்டும். மதச்சார்பு என்றால் என்ன என்பதில் அவர்கள் தங்கள் கருத்தை திருத்திக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களுக்கு செயற்கையாக அச்சம் தூண்டப்பட்டிருக்கிறது. பாஜக வெறுப்பு அரசியலின் பரிமாணங்கள் இவை. உலகில் எந்த நாட்டில் ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு சிவில் சட்டம் இருக்கிறது? எதாவது ஒரு நாட்டை சொல்ல முடியுமா?

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், முஸ்லிம்களுக்கு என்று தனிச் சட்டம், கிறிஸ்தவர்களுக்கு என்று தனிச் சட்டம் இருக்கிறதா? உலக நாடுகளில் இருக்கக்கூடிய முஸ்லிம், கிறிஸ்தவர்கள்,  ஹிந்துக்கள் என எல்லோரும் அந்தந்த நாட்டின் சட்டத்தை ஏற்றுக்கொள்வார்கள், இந்தியாவில் மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? அப்படி என்ன இந்தியாவில் மட்டும் சூப்பர் முஸ்லிம், சூப்பர் கிறிஸ்தவன், சூப்பர் ஹிந்து என இருக்கிறார்களா? எந்த நாட்டில் தனிச் சட்டம் இருக்கிறது?

சிவில் சட்டத்தில் தனி சட்டம் வேண்டும் என்று கேட்பவர்கள் கிரிமினில் சட்டத்தில் தனி சட்டம் கேட்பார்களா? ஒரு கொலை அல்லது பாலியல் பலாத்காரம் நடந்தால் அவற்றுக்கு மத அடிப்படையில் தண்டனை  கொடுக்கலாமா? அதை அவர்கள் ஒப்புக்கொள்வார்களா? நமது மதச்சார்பற்றவாதிகள் அதை ஏற்பார்களா?

  • கட்டுரையாளர், பாரதீய ஜனதா கட்சியின் தமிழக பொதுச்செயலாளர்
  • நன்றி: இந்து தமிழ் திசை டிஜிட்டல் (ஆக. 10, 11, 2023)

$$$

Leave a comment