பாரதி போற்றும் தேசியக் கல்வி – பதிப்புரை

ஜெ.ஸ்ரீராம்

பொருள் புதிது தளத்தில் வந்த ‘பாரதி போற்றும் தேசியக் கல்வி’ தொடர் கட்டுரை தொகுக்கப்பட்டு, கோவையில் உள்ள சிவராம்ஜி சேவா அறக்கட்டளையால் நூலாக வெளியிடப்பட உள்ளது. இந்நூலுக்கு திரு. எஸ்.ஸ்ரீராம்ஜி அளித்துள்ள அணிந்துரை / பதிப்புரை இது...

உலகை வழிநடத்துவோம்!

திருச்சி,

15.08.2023

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளமாவது கல்வியே.  இன்று உலக அரங்கில் முன்னிலை வகிக்கும் நாடுகள் அனைத்தும் அந்த நிலைக்கு உயர்ந்ததற்கு நவீனக் கல்வியே காரணமாக இருந்துள்ளது. நமது நாட்டும் கல்வித் துறையில் சாதனை மைல் கற்களை எட்டி வருகிறது. ஆனால், நாம் அடைய வேண்டிய இலக்குகள் இன்னமும் தொலைதூரத்தில் உள்ளன.

”உண்மையான கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பது அல்ல.; அது மனதின் இயல்பான ஆற்றலை வளரச் செய்வது” என்று கூறுவார் சுவாமி விவேகானந்தர்.

“இந்தியாவின் சிறந்த, சாஸ்வதமான எல்லா விஷயங்களையும் கிராமப்புற, நகர்ப்புற குழந்தைகள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதாக அடிப்படைக் கல்வி இருக்க வேண்டும்” என்று மகாத்மா காந்தி சொல்வார்.

“அறிவார்ந்த மாணவர்களுக்கு கல்வி தரப்படுவது என்பது எவ்வளவு அவசியமோ, அதைப் போன்றே வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்கள் கல்வியறிவு பெற்றால் மட்டுமே நம் நாடு அறிவார்ந்த நிலைக்கு உயரும் என்பதை அரசு தன் கொள்கையாகக் கொள்ள வேண்டும்” என்று கூறுவார் அண்ணல் அம்பேத்கர்.

மேற்கண்ட கருத்துகளின் அடிப்படையில் பார்த்தால், நமது இன்றைய கல்விமுறையில் உள்ள போதாமை புலப்படும். இதனை நாம் மிக விரைவில் சரிசெய்தாக வேண்டும். நமது அடிப்படைக் கல்வியும் உயர்கல்வியும் மேலும் செம்மைப்படுத்தப்பட வேண்டும்.

இன்றைய நவீன தகவல் தொழில்நுட்ப உலகை ஆளும் இளைஞர் குழாமை உருவாக்குவதில் நமது கல்வி முறை வெற்றி பெற்றுவிட்டது என்பது உண்மையே. உலகத்தின் பெறு நிறுவனங்கள் பலவற்றை இந்திய இளைஞர்களின் தலைமைப்பண்பு வழிநடத்துவது நமக்குப் பெருமையே. ஆயினும், இது பணிக்குச் செல்லும் மனப்பான்மையையே அதிகரிக்கிறது.

மாறாக, நமது நாட்டிலேயே அமையும் தொழில், வர்த்தக நிறுவனங்கள் உலகிற்கு வழிகாட்டும் வகையில் நாம் உயர வேண்டும். வேலை பார்ப்பவர்களாக அல்லாமல், வேலை அளிப்பவர்களாக இந்திய இளைஞர்கள் மேம்பட வேண்டும். இந்த இலக்கு நம்மால் எட்டப்பட இயலாதது அல்ல.  

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் பாரதத்தில் தட்சசீலத்திலும், நாளந்தாவிலும், காஞ்சிபுரத்திலும் இருந்த பல்கலைச்சாலைகளில் பயில உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து மாணவர்கள் வந்து குவிந்தனர். இன்று நமது மாணவர்கள் தற்போது உயர்கல்வி பயில வெளிநாடுகளுக்குச் செல்வது போல, அக்காலத்தில் பாரதத்தில் படிப்பது பெருமையாகக் கருதப்பட்டது. மீண்டும் அந்த உச்ச நிலையை ஏற்படுத்துவதே தேசபக்தர்கள் விரும்பும் இனிய இலக்கு. நமது உயர்கல்வி நிறுவனங்கள் தரம் உயரும்போது, நம்மை நோக்கி உலகம் திரும்பும்.

உலக நாடுகள் அனைத்தும் லௌதீக வாழ்க்கையிலும், ஆதிக்க மனப்பான்மையிலும் கட்டுண்டு போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில், உலகை உய்விக்கக் கூடிய ‘வசுதைவ குடும்பகம்’ என்ற உயர் சிந்தனை கொண்ட நாடாக நாம் மிளிர்கிறோம். நமது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கோட்பாடு, வெற்று முழக்கமல்ல. நம்மைப் பொருத்த வரை, உலக மாந்தர்கள் அனைவரும் சகோதரர்களே. இந்த உலகை போட்டி, பொறாமைகளிலிருந்து காக்கும் அருமருந்து பாரதம் வலியுறுத்தும் சகோதரத்துவமே.

ஆனால், இக்கருத்தை உலகம் ஏற்க வேண்டுமானால், நாம் இன்னமும் சக்தி படைத்தவர்கள் ஆக வேண்டும். நாம் சக்தி படைத்தவர்களாவது, பிறரை அடக்கி ஆள்வதற்காக அல்ல; மாறாக, உலகை அன்பால் பிணைத்து, அறிவால் இணைத்து, அறத்தால் வழிநடத்தவே. அதற்கு நமது இளைஞர்களின் கல்வித்தகுதியும் தலைமைப்பண்பும் உயர்ந்தாக வேண்டும்.

அதற்காகவே, இந்நூலை வெளியிடுகிறோம். பாரதம் உயர வேண்டும்; அதற்கு நமது கல்விமுறையில் மாற்றம் வர வேண்டும் என்று நூறாண்டுகளுக்கு முன்னமே சிந்தித்துச் செயலாற்றிய, தமிழகத்தின் தவப்புதல்வர் மகாகவி பாரதியின் சிந்தனைகளை அடித்தளமாகக் கொண்டு இந்நூலை பத்திரிகையாளர் திரு.சேக்கிழான் எழுதி இருக்கிறார். அவருக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி. தேசியக் கல்வியால் மட்டுமே நமது நாட்டின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற மகாகவி பாரதியின் அற்புதமான கருத்துகளை இந்நூலில் கண்டு மகிழ்கிறோம்.

இந்நூலுக்கு அழகிய முகப்பு அட்டை ஓவியம் வரைந்து அளித்த கோவை ஓவியர் திரு. ஜீவானந்தம், நூலாக வடிவமைத்து அச்சிட்ட திரு. செந்தில்குமார் ஆகியோருக்கும் நன்றி.

கோவை, சிவராம்ஜி சேவா அறக்கட்டளையால், மகாகவி பாரதியின் பிறந்த நாளில் (2023 செப். 11) வெளியிடப்பட உள்ள இந்நூலை, கல்வித் துறையில் சாதனை படைக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் காணிக்கை ஆக்குகிறோம்.

  • குறிப்பு: திரு. ஜெ.ஸ்ரீராம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென்பாரத பிரசாரச் செயலாளர்,

$$$

One thought on “பாரதி போற்றும் தேசியக் கல்வி – பதிப்புரை

Leave a comment