பாரதி போற்றும் தேசியக் கல்வி- 8

-சேக்கிழான்

8. கற்றது ஒழுகு!

கல்வியை கசடறக் கற்றல் மட்டுமே போதாது; அது அரைக்கிணறு தண்டியதற்கு ஒப்பானதே. கற்க வேண்டிய நூல்களை ஐயத்திரிபறக் கற்றால் மட்டும் போதாது, அதன்படி ஒழுக வேண்டும். அவற்றில் கூறியிருப்பவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

 “உணவு உடல் மயமாவது போன்று நற்கருத்துக்கள் வாழ்க்கை மயமாக வேண்டும்.” என்பார் தெய்வீக பண்பாட்டுச் செல்வரும், சிறந்த கல்வியாளருமான சுவாமி சித்பவானந்தர்.

இதனையே, திருவள்ளுவரும்,  “நூல்களை ஓதியும், அவற்றின் பொருள் உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாத பேதை போல் வேறு பேதையில்லை” என்கிறார்.

ஓதிஉணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தானடங்காப்
பேதையில் பேதையார் இல்.

      (திருக்குறள் -834)

எனவே, கல்வி என்பது அறிவுப் பெருக்கமாக மட்டுமல்லாது, அதன் பயனாகவும் இருக்க வேண்டும். கோட்பாட்டு அறிவியல் பயன்பாட்டு அறிவியலாக மாறுகையில் தான், உலகம் பயனுறுகிறது. விண்ணியல் விதிகள் அனுபவமாகும்போது ராக்கெட் விண்ணைச் சாடிப் பாய்கிறது.

 நாம் கற்கும் கல்வி முதலில் நமக்கு உதவுவதாக இருக்க வேண்டும். நம்மை சொந்தக் காலில் நிற்கச் செய்வதாக, தன்னம்பிக்கை அளிப்பதாக இருக்க வேண்டும். நமது பூரணத்தன்மையை அது வெளிப்படுத்த வேண்டும்.

அடுத்ததாக, நாம் பயிலும் கல்வி, நமது குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும், நாட்டிற்கும், உலகிற்கும் பயனளிப்பதாக அமைய வேண்டும். இந்தப் பேரண்டத்தின் மீச்சிறு துகளே மனிதன் என்ற அடக்கமான எண்ணமே நம்மை வழிநடத்தும். அப்போது நீங்கள் உலகை வழிநடத்தத் தகுதி பெற்றவர் ஆகி விடுவீர்கள்!

 ‘புதிய ஆத்திசூடி’யில், கற்றது ஒழுகு (13) என்று கூறும் மகாகவி பாரதி, இறுதியில் கூறுவது வையத் தலைமை கொள் (109) என்பதாகும். இதுவே பாரதி இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் விழைவாகும்.

இதுவரையிலும் கூறியவற்றை வரிசைப்படுத்திச் சிந்தித்தால், நமக்கு ஒரு தெளிவான வடிவம் கிடைக்கும். அந்தத் தெளிவு நமது பாதையை செம்மையாக்கி உதவும்.

சரியான பாதையில் செல்பவர்கள், சரியான திசையைத் தேர்வு செய்பவர்கள், அதற்கேற்ப சரியான ஆற்றலைப் பயன்படுத்துபவர்கள், சரியான இலக்கை அடைவது திண்ணம்.

அதற்கு திருவள்ளுவரும், சுவாமி விவேகானந்தரும், மகாகவி பாரதியும் வழித்துணையாகட்டும்!

பாரத அன்னை வெல்க!

(நிறைவு)

$$$

One thought on “பாரதி போற்றும் தேசியக் கல்வி- 8

Leave a comment