சுதந்திர தினச் செய்தி

-சோ.தர்மன்

‘சூல்’ என்னும் புதினத்திற்காக சாஹித்ய அகாதெமி விருது (2019) பெற்றவர் கரிசல்நில எழுத்தாளர் திரு. சோ.தர்மன். அவரது முகநூல் பதிவு இங்கே சுதந்திர தினச் செய்தியாக மலர்ந்திருக்கிறது...

இன்று எழுபத்து ஏழாவது சுதந்திர தினம். பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியேற்றப்படும்; கோலாகலமாகக் கொண்டாடப்படும். அடுத்து ஜனவரி 26 குடியரசு தினமும் இதே மாதிரி அமர்க்களமாக்க் கொண்டாடப்படும்.

 நம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடி உயிர் நீத்தவர்கள் அவ்வாறு உயிர் நீத்தவர்களின் வாரிசுகள், அதேபோல யுத்தத்தில் பங்கு பெற்று தேசத்திற்காக உயிர் நீத்தவர்களின் வாரிசுகள் நம்முடனே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சட்டப்படியான உதவிகளைச் செய்து வருகின்றன. ஆனால் இவர்களின் தியாகம் வெளியுலகிற்குத் தெரிய வேண்டாமா? நாம் என்றைக்காவது அவர்களின் வசிப்பிடங்களுக்குச் சென்று ஒரு வாழ்த்து  அல்லது ஒரு நன்றி தெரிவித்திருக்கிறோமா? அப்படிப்பட்ட ஒருவரின் கதை இது.

 வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி அவர்கள் காந்தி மகான் கதையை 1965 முதல் 1967 பிப்ரவரி முடிய 16 மாதங்கள் ஜனாதிபதியின் விசேஷ அனுமதி பெற்று வானொலியில் வில்லிசை நிகழ்ச்சியாகப் பாடினார்கள். 58 வருடங்களுக்கு முன்னால் வேறெந்த ஊடகங்களும் கிடையாது – வானொலி தவிர.

 காந்தியின் வரலாற்றில் முக்கியமான ஒரு கட்டம் ஜாலியன் வாலாபாக் படுகொலை. சுற்றி வளைக்கப்பட்ட இடத்திற்குள் வைத்து ஜெனரல் டயர் என்பவன் துப்பாக்கிக் குண்டுகள் தீரும் வரை பொதுமக்களைச் சுட்டு படுகொலை செய்த இடம்.

 பஞ்சாயத்து போர்டு வானொலியில் இந்நிகழ்ச்சியை வாராவாரம் ஊரோடு உட்கார்ந்து மக்கள் கேட்பார்கள். வேந்தர் பிச்சைக்குட்டி  பிள்ளை தன்னுடைய கணீர்க் குரலால் உணர்ச்சி பொங்கப் பாடுகிறார்.

“சுட்டான் சுட்டான் சுட்டானே
கை சேரும் வரை சுட்டானே”

          என்று கண்ணிகள் தொடங்கி பின்னர் வசனம்.

“இந்தியா முழுவதும் பொங்கி எழுந்தது. வடக்கில் நேரு, படேல், சாவர்க்கர், தெற்கே விருதை காமராஜர், சென்னை தீரர் சத்தியமூர்த்தி, சேலத்தில் ராஜாஜி, செங்கல்பட்டில் பக்தவச்சலம், மதுரையில் வைத்யநாதய்யர், திருநெல்வேலி பாப்பாங்குளத்தில் சொக்கலிங்கம் பிள்ளை  எனப் பல தலைவர்கள் கண்டணக் கூட்டம் போட்டு ஊர்வலம் நடத்தி தடியடி பட்டு கைதாகி சிறை சென்றார்கள்….”

“சீறிப் பாய்ந்தார் தீரர் சத்திய மூர்த்தி
சேலத்திலே கூட்டினார் சக்கரவர்த்தி ராஜாஜி
செங்கல்பட்டில் எழுந்தாரே பக்தவச்சலமும்
மதுரையில் ஊர்வலம் வைத்தியநாதய்யர்
விருதுநகர் காமராஜர் வீறு கொண்டு எழுந்தார்
பாப்பாங்குளம் சொக்கலிங்கம்
பதறித் துடித்தெழுந்தார்”

  இது வானொலியில் ஒலிபரப்பாகி இரண்டு நாள் கழித்து பிச்சைக்குட்டி அவர்களுக்கு  ஒரு கடிதம் வருகிறது.

 “ஐயா எனது பெயர் சொக்கலிங்கம் பிள்ளை. ஊர் பாப்பாங்குளம். பஞ்சாப் படுகொலை நடந்ததும் நெல்லையில் ஊர்வலம் நடத்தி வசமாக அடிபட்டு சிறை சென்றவன் நான். விடுதலை பெற்று எனது கிராமத்தில் சீந்துவார் இல்லாமல் பழையதை நினைத்துக்கொண்டு ஒதுங்கி வாழ்கிறேன்.

  தாங்கள் வானொலியில் பாடிய பஞ்சாப் படுகொலை நிகழ்ச்சியை ஊரோடு உட்கார்ந்து கேட்டோம். அதில் என்னுடைய பெயரும் என் ஊரின் பெயரும் வந்தவுடன் நான் பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. இப்போது ஊரில் அனைவரும் என்னை மதிக்கிறார்கள். இளவட்டங்கள் என்னிடம் ஆசிர்வாதம் பெற வருகிறார்கள். நான் ஒரு புதிய பிறவி எடுத்தது மாதிரி உணர்கிறேன். அந்த ஒரு வரிப் பாட்டு நான் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டதை எண்ணி பெருமைப்பட வைத்து விட்டது. எனக்கு ஒரு ஆசை, உங்களை எப்படியாவது சந்தித்து நன்றி கூற வேண்டும்.”

 ஒரு மாதம் கழித்து அம்பாசமுத்திரத்தில் நிகழ்ச்சி. மங்களம் பாடி முடித்தவுடன் கார் சொக்கலிங்கம் பிள்ளையின் வீட்டின் முன் போய் நிற்கிறது. எதிர்பாராத சொக்கலிங்கம் பிள்ளையின் கழுத்தில் பெரிய ரோஜா மாலையைப் போட்டு, காலைத் தொட்டு வணங்கி விட்டு ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழங்கள், புத்தாடைகள் அவற்றோடு நூறு ரூபாய் பணம் வைத்துக் கொடுக்கிறார். தியாகி சொக்கலிங்கம் பிள்ளையோ பணத்தை மட்டும் வாங்க மறுக்கிறார். வேந்தர் சொல்கிறார்:

“இது என் சன்மானத்தில் என்னுடைய பங்கு. உழைத்துச் சம்பாதித்த பணம். ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியை கௌரவிப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை. மேலும் சரித்திர வரிகளில் மட்டுமே கண்ட உங்களை நேரில் சந்தித்தது நான் செய்த பாக்கியம்” என்று சொல்லி பணத்தையும் வாங்க சம்மதிக்க வைத்துவிட்டு வேந்தர் செல்கிறார்.

 இதுதான் கலையின் வலிமை என்பது. ஒரே வரிதான். சொக்கலிங்கம் பிள்ளையின் தியாகம் ஊரறிய உலகறியச் சென்று விட்டது.

சோ.தர்மன்

 குறிப்பு: நான் எழுதி விற்பனையாகிக் கொண்டிருக்கும் வில்லிசை ஆய்வு நூல் ‘வில்லிசை வேந்தர் பிச்சைக் குட்டி’ அடையாளம் பதிப்பகம் வெளியீடு.

 இந்த நூலைப் படித்து விட்டு சமீபத்தில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

 “ஐயா என்னுடைய பெயர் —-. நான் இந்த கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறேன். தாங்கள் எழுதியுள்ள வில்லிசை பற்றிய நூலைப் படித்தேன். அதில் குறிப்பிட்டுள்ள தியாகி சொக்கலிங்கம் பிள்ளையின் பேத்தி நான். என் தாத்தாவை நினைத்தும் தங்களை நினைத்தும் பெருமைப்படுகிறேன். எங்கள் வீட்டில் அனைவரும் சந்தோஷமடைந்தோம். குறிப்பாக என் அப்பா,  அம்மா அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. என்றைக்காவது நான் உங்களை எங்கள் குடும்பத்துடன் வந்து சந்திக்க வேண்டும். நிச்சயமாக நானே அவர்களின் வீட்டுக்குச் சென்று சொக்கலிங்கம் பிள்ளையின் போட்டோ முன்னால் நின்று ஆசீர்வாதம் வாங்கிவிட்டு வருவேன்.”

வாழ்க இந்தியா! வாழ்க தியாகிகளின் வீரம்!

$$$

Leave a comment