-ச.சண்முகநாதன்

26. இன்று போய், போர்க்கு நாளை வா!
ராமன் போரிடும் நேரம் இது.
கானகம் புகுந்து, சூர்ப்பணகையைச் சமாளித்து, சீதையைப் பிரிந்து, ஜடாயுவை இழந்து எங்கெங்கோ திரிந்து, கடல் கடந்து வந்து, போரைத் தவிர்க்க தூதுவிட்டு, இப்பொழுது லக்ஷ்மணன், அங்கதன், அனுமன் என்று எல்லோரும் நலிந்து போக, எத்தனையோ துன்பங்கள் கடந்து வந்த ராமன், நேருக்கு நேராக ராவணனுடன் போரிடப் போகிறான். முதன்முதலில் நேருக்கு நேராக.
“தேவர்களை வதைத்ததற்கும், தன்னிடம் இருந்து சீதையைப் பிரித்ததற்கும் ராவணன் பதில் சொல்லியே ஆக வேண்டும். மீட்பேன் சீதையை” என்று மனதில் உறுதி கொண்டு ராமன் களம் இறங்குகிறான்.
“வாங்கினென், சீதையை என்னும் வன்மையால், தீங்குறு பிரிவினால் தேய்ந்த தேய்வு அற வீங்கின, இராகவன் வீரத் தோள்களே”
எப்படி வருகிறான், ராமன்?
கால்களில் கழல் கட்டி, மார்பில் கவசம் இட்டு, முன்கையிலும் விரல்களிலும் உரை அணிந்து, அம்புகளைத் தாங்கும் அம்பறாத்துணியை தொழில் கட்டி, தும்பை மாலை சூடி, வில்லையேந்தி வந்து நிற்கிறான் ராமன்.
மண்ணுலகத்தாரும், விண்ணில் இருக்கும் தேவரும் மலர்கள் சொரிய ராமன் போர்க்களத்தில் வந்து நின்றான்.
“நாற் கடல் உலகமும், விசும்பும், நாள்மலர் தூர்க்க, வெஞ் சேனையும் தானும் தோன்றினான்”
கண்களில் தீப்பொறி தெறிக்க, ஊழிக்காலத்து ருத்திரனைப் போல வந்து நிற்கிறான் ராவணன் முன்.
ராமனின் தோற்றம் எப்படி இருந்ததாம்?
“ஊழியின் உருத்திரன் உருவுகொண்டு, தான், ஏழ் உயர் உலகமும் எரிக்கின்றான் என”
-இருந்ததாம். இருக்காதா பின்னே? உலகத்தலைமை கொண்ட ஒற்றைத்தலை ராமன் பத்துத்தலை ராவணனுடன் போரிட வேண்டும். மனதில் எவ்வளவு வீரம் இருக்க வேண்டும்!
ராமனும் ராவணனும் ஒருவருக்கொருவர் எதிர் எதிரே!
ராமன் தன் வில்லின் நாணில் ஒலி செய்கிறான். அந்த ஒலி கேட்டு இலங்கை அதிர்கிறது. நிலை தடுமாறுகிறது அரக்கர் படை. தீமையை மாய்க்க ஒரு முன்னோட்டம் இதுவென்று ராமன் சொல்லாமல் சொல்கிறான்.
முதல் அம்பை ராவணன் தான் தொடுக்கிறான். No first use எனும் உத்தியை முதன்முதலில் உபயோகம் செய்தது ராமன் தான்.
ராவணன் தொடுத்த அம்பைத் தன் வில்லில் இருந்து விடுத்த அம்பினால், தடுத்து அறுத்து எறிகிறான் ராமன்.
பின்னர், வில் வித்தையில் பேராற்றல் கொண்ட ராமன், தன் ஒரு அம்பினால் ராவணனின் வில் முறிந்து போகச் செய்கிறான். ஒரே ஒரு அம்புதான்! ராவணன் வில் முறிந்தது. ராவணன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஈரேழு உலகிலும் தனை வெல்ல யாரும் இல்லை என்ற இறுமாப்புக் கொண்டிருந்தவனை, ஒரே அம்பில் நிலைகுலையச் செய்கிறான் ராமன்.
ஒரே அம்பு! முதல்முறையாக ஒரு பெரும் வீரனுடன் மோதுகிறோம் என்று உணர்த்துகிறது ராவணனுக்கு. “தன் வில்லைக் குறி வைத்து நொறுக்குகிறான், தன் தேர்க் குதிரைகளை நிலைகுலையச் செய்கிறான். யாரடா இவன்?” என்று மனதால் ஒரு தாழ்வு நிலை பெறுகிறான். ராவணனின் மற்ற ஆயுதங்கள், அவனின் தேர் முதலிய எல்லாமே அற்றுப்போகச் செய்கிறான் புனிதன், வீரன், ராமன்.
ராமனின் வீரத்தால், எல்லாம் அற்றுப்போய், தலையில் இருக்கும் மகுடம் மட்டுமே மிஞ்சி இருக்கிறது ராவணனுக்கு. இப்படி ஒரு வீரத் தாக்குதலை அவன் எதிர்பார்க்கவில்லை. சீதாராமன் இப்பேர்ப்பட்ட வீரனாகத்தான் இருக்க வேண்டும் என்று கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும் ராவணன்; செய்யவில்லை. இப்பொழுது வெறும் மணிமுடி மட்டும் தரித்து வில்லாளன் ராமன் முன் நிற்கிறான்.
ராமனிடமோ, கம்பன் கவிதையைப் போல, எண்ணற்ற விற்கள் இருக்கிறது. ராவணன் நிராயுதபாணி. infinity vs zero இப்பொழுது.
ராமன் முடித்திருக்கலாம், ராவணனை அந்த ஒரு நொடியில்!
ஆனால் ராமன் ராவணனின் செருக்கை மட்டுமே, முதலில், அழிக்க நினைத்தான். இன்னுமொரு சந்தர்ப்பம், ராவணனுக்குக் கொடுக்க நினைக்கிறான் ராமன்.
அவன் மார்பில் கணை விடுத்திருந்தால் அங்கேயே அவன் கதை முடிந்திருக்கும். ஆனால் ராமன், வில்லை ஏற்றி ராவணனின் மார்புக்கு குறி வைக்காமல் அவன் மகுடத்தின் மீது குறி வைக்கிறான்.
“அவன் தலையில் மின்னும் பல் மணி மவுலிமேல் ஒரு கணை விட்டான்.”
அது ராவணனின் மகுடத்தைச் சாய்க்கிறது. தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்ற நினைப்பில் திரிந்த ராவணனின் மகுடம் ராமனால் வீழ்த்தப்பட்டது. மண்ணில் விழுகிறது ராவணனின் மகுடம், அவனுடைய செருக்குடன் சேர்ந்து.
இமைப்பொழுதில் எல்லாத்தையும் சாய்த்த ராமனின் கண்களை நேரிட்டுப் பார்க்க வெட்கப்பட்டு, கண்களைத் தாழ்த்தி, முகத்தில் ஒளி குன்றி, வெட்கத்தால் கால் விரலால் நிலத்தைக் கீறி (அட! இது ராவணன் ஆரம்பித்து வைத்ததா?) ஆலமரம் விழுதுகளை தொங்கப் போட்டுக்கொண்டு இருப்பதைப் போல நின்றான் மணி மகுடம் இழந்த ராவணன்.
“நிறம் கரிந்திட, நிலம் விரல் கிளைத்திட, நின்றான்- இறங்கு கண்ணினன், எல் அழி முகத்தினன், தலையன, வெறுங் கை நாற்றினன், விழுதுடை ஆல் அன்ன மெய்யன்”
(“இறங்கு கண்ணினன்” கண்கள் தாழ்த்தியதால்) என்ன ஒரு வார்த்தை விளையாட்டு! வில்லுக்கு ராமன், சொல்லுக்கு கம்பன்)
“இறங்கு கண்ணினன்” ராவணனிடம் ராமன் தீர்க்கமாக மெதுவாக நடந்து வந்து “சிறு தொழில் கீழோய்” (அந்தக்காலத்து expletives) “அவ்வளவுதானா உன் வீரம்? போ, உன் அரண்மனைக்குப்போய் இன்னும் ஏதாவது இருந்தால் எடுத்துக்கொண்டு வா. சண்டை போடலாம்” என்று அவன் செருக்கை இன்னும் சிதைக்கிறான்.
“உன் தலையை இன்னும் நீக்காமல் இருக்கிறேன். இன்னொரு சந்தர்ப்பம் தருகிறேன். சீதையை விடு. விபீஷணனை இலங்கையின் அரசனாக்கு. உன் உயிர் மிஞ்சும்” என்று, கண்கள் தாழ்ந்திருந்ததால், ராவணனின் நெற்றியைப் பார்த்துச் சொல்கிறான்.
“சிறையில் வைத்தவள் தன்னை விட்டு, உலகினில் தேவர் முறையில் வைத்து, நின் தம்பியை இராக்கதர் முதல் பேர் இறையில் வைத்து, அவற்கு ஏவல் செய்து இருத்தியேல்”
-உன் தலை மிஞ்சும், என்பது எச்சரிக்கை.
“இல்லை நான் சண்டைதான் போடுவேன் என்று பிடிவாதம் பிடித்தால், உன் உயிர் மிஞ்சாது” என்று அவன் தாடையை உயர்த்தி சொல்வது போல ராமன் வீரம் காட்டுகிறான்.
“ஆனால் ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள். உன் ஆயுதங்கள் எல்லாம் பூளைப்பூக்கள் போல பறந்து போனது நினைவிருக்கட்டும். போ. வீட்டுக்குப் போ. உனக்கு மனதில் இன்னும் உறுதி இருந்தால் நாளைக்கு வா. போரிடலாம்” என்று மிரட்டி அனுப்பி வைக்கிறான் ராமன்.
“ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு நாளை வா”
வீரம் என்பதற்கு இதைவிட ஒரு உதாரணம் இருக்குமா?
மனஉறுதிக்கு இதற்கு ஈடாக இன்னொரு நிகழ்ச்சி இருக்கிறதா?
ராவணன் makes that long slow walk back to his அரண்மனை.
$$$
27. தேரில் ஏறினான் ராமன்
“ராமன் தன் மகுடத்தை மட்டும் சாய்க்கவில்லை, தன் வீரத்தையும் பெருமையுயும் சாய்த்துவிட்டான்” என்று நொந்து போகிறான் ராவணன். பெருங்குரலெடுத்து வந்தவன் இப்பொழுது வெறுங்கையுடன் திரும்பிப் போகிறான்.
“தார் அணி மவுலி பத்தும்,
சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும், களத்தே போட்டு,
வெறுங் கையே மீண்டு போனான்”
நடந்து செல்லும்பொழுது பல சிந்தனைகள் அவன் மனதில் வந்து போகிறது. அதில் முக்கியமான ஒன்று “சீதை இதைக் கேட்டு சிரிப்பாள். ‘நான் பெரிய வீரன்’ என்று நான் வீர வசனம் பேசியதையெல்லாம் சொல்லிக் காட்டி சிரிப்பாளே! ‘ஆரென்று என் ராமனை நினைத்தாய்? அவன் சுண்டு விரல் போதாதா, உனை தவிடு பொடியாக்க?’ என்று கேள்வி கேட்டு கேலி செய்வாளே! என்ன செய்வது?”
“சானகி நகுவள்- என்றே நாணத்தால் சாம்புகின்றான்”
ராவணன் அரண்மனை திரும்பினான். ஆனால் திருந்தவில்லை. மேலும் படைகளையும் திரட்டி மீண்டும் போருக்கு போகத் துணிகிறான். கும்பகருணன் வந்து “சீதையை விட்டு விடு” என்று அறிவுரை சொல்கிறான்.
“தையலை விட்டு, அவன் சரணம் தாழ்ந்து, நின் ஐயறு தம்பியோடு அளவளாவுதல் உய் திறம்”
– ராவணன் கேட்கவில்லை. கும்பகருணன் போர்க்களம் செல்கிறான், வேறு வழியில்லாமல், ராவணனுக்காகப் போரிட.
போர்க்களத்தில் கும்பகருணனை, சகோதரன் விபீஷணன் சந்திக்கிறான். விபீஷணன் கும்பகருணன் முன் சென்று நிலத்தில் விழுந்து வணங்குகிறான். இருவரும் ஒருவருக்கொருவர் தழுவிக் கொள்கின்றனர். கும்பகருணன், விபீஷணன் ராமனை அடைந்ததில், பெருமையும் சந்தோஷமும் கொள்கிறான். நஞ்சை விடுத்து அமுதைத் தேர்ந்தெடுத்ததற்காக மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறான்.
விபீஷணன், கும்பகருணனையும் ராமனோடு சேர்ந்து விடு என்று வலியுறுத்துகிறான். “தீமை செய்பவர் உற்ற சொந்தமே ஆனாலும், தாய், தந்தை, உடன் பிறந்தோர் என்றாலும் அதை எதிர்க்க வேண்டியதுதான் அறம்” என்று ஒரு ‘கீதோபதேசம்’ செய்கிறான்.
“தீயவை செய்வர் ஆகின், சிறந்தவர், பிறந்த உற்றார், தாய் அவை, தந்தைமார் என்று உணர்வரோ, தருமம் பார்ப்பார்?”
“தர்மத்தின் பக்கம் வா” என்று விபீஷணன் கூற, கும்பகருணனோ “அண்ணன் ராவணன், மூவுலகையும் ஆண்டவன். நானும் உன் பக்கம் வந்துவிட்டால் அவன் உறவினர் யாரும் இல்லாமல் அனாதையாக இறக்க நேரிடும். அவனை அனாதையாக இறக்க விட மாட்டேன். என் உயிர் போகும் வரை, ராவணன் தீயவனே ஆனாலும், அவனுடனேயே இருப்பேன்” என்றான்.
வாயில் வார்த்தைகளும் கண்களில் கண்ணீரும் ஒரே நேரத்தில் வருகிறது கும்பகருணனுக்கு.
“உம்பரும் பிறரும் போற்ற, ஒருவன் மூவுலகை ஆண்டு, தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ, தமையன் மண்மேல்?”
இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை. முடிவது நன்றாக முடியட்டும் என்று பிரிகின்றனர். அதன் பின் நடந்த போரில் கும்பகருணன் மாண்டான்.
தம்பி இறந்தது தெரியாமல் அங்கே ராவணன் சீதையிடம் என் “காம வெந்நோய் துடைத்தியேல் தொழுது வாழ்வேன்” என்று மன்றாடிக் கொண்டிருக்கிறான்.
அதன்பின் இந்திரஜித்தும் போரிட்டு, அங்கிருந்து தப்பித்து ராவணனிடம் வந்து “ராமனின் சேனை மிகவும் பலம் வாய்ந்தது. உன் மேல் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள். நீ சீதையை விட்டுவிட்டால் அவர்களின் கோபம் தணியும். உன் தீமை பொறுப்பர்” என்று சொல்லி முடிக்கும் முன் ராவணன் கோபத்தோடு வெறுத்துப் பேசுகிறான். சரி, உனக்காக மீண்டும் போய்ப் போரிடுகிறேன் என்று களத்துக்குச் சென்று அங்கே லக்ஷ்மணன் கையால் மாண்டு போகிறான் இந்திரஜித்.
விஷயம் அறிந்த ராமன் “தம்பியுடையான் பகையஞ்சான்” என்ற சொல்லை நிரூபித்து விட்டாய் என்று லக்ஷ்மணனைப் பாராட்டி புகழுரைக்கிறான்.
ராவணனோ, தன் பேராசையினால், தான் ஈன்ற மகனையும் இழந்து நிற்கிறான் இப்பொழுது. இதற்குக் காரணம் தன் பேராசை என்ற எண்ணம் இல்லாமல், “இதற்கெல்லாம் சீதைதான் காரணம்” என்று சொல்லி சீதா தேவியை வாளால் வெட்டிச் சாய்க்க கிளம்புகிறான்.
“வன் தழைக் கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை, வாளால் கொன்று இழைத்திடுவென்' என்னா ஓடினன், அரக்கர் கோமான்”
மற்றவரெல்லாம், இது தகாது என்று தடுத்து நிறுத்தினர்.
“இனி எல்லா படை வீரர்களையும் அழைத்து இறுதிப்போர் செய்யும் நேரம் வந்துவிட்டது” என்று எண்ணி சேனைகளை எல்லாம் ராமனை நோக்கி அனுப்புகிறான். ராமனையும் லக்ஷ்மணனையும் தீர்த்துக் கட்டுங்கள் (“நீயிர் போய், ஒருங்கே ஆன மற்றவர் இருவரைக் கோறீர்”) என்று என்று ஆணையிட, படை ராமன் இருக்குமிடம் பறக்கிறது.
படை வருவதைப்பார்த்த லக்ஷ்மணன் “ராமா, இந்த உலகத்தில் உள்ள அரக்கர் என்று அழைக்கப்பட்டவர் எல்லாம் இதோ ஒரே பொறியில் வந்து மாட்டப் போகிறார்கள். அவர்களை வீழ்த்தும் நேரம் வந்துவிட்டது. தயாராகு” என்று சொல்ல, கவசம் அணிந்து, அம்புப் புட்டிலையும் தோளில் தாங்கிக்கொண்டு ராமன் இறுதிப்போருக்கு தயாராகிறான் ஸ்ரீ ராமன் .
“...கருணை அம் கடலே அன்ன எல் ஒளி மார்பில் வீரக் கவசம் இட்டு, இழையா வேதச் சொல் எனத் தொலையா வாளித் தூணியும் புறத்துத் தூக்கி”
இறுதிப்போர் தொடங்கியது, “பாவத்து அனைவரும் தோற்க, அண்ணல் வெற்றி வாகை சூட”.
(தொடர்கிறது)
$$$